Advertisement

   இதயத்திலே ஒரு நினைவு  – 2

“டி மைத்தி… என்ன சொல்லு நம்ம மீனாட்சி அழகே அழகு டி…”

“சும்மாவா… மகாராணியாச்சே…”

“அடியே சாமி டி…”

“எல்லா சாமியும் மகாராணியா இருக்கா என்ன?!”

“அதுசரி உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது… வா சுத்தி வருவோம்…”

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று பார்வையை சுழல விட்டவளின் விழிகள் ஓரிடத்தில் நிற்க “ஏய் எரும சீனியர்க்கிட்ட நம்ம இங்க வர்றோம்னு சொன்னியா?” என்றாள் கோபமாய் கேட்பதுபோல.

“ஜெகாண்ணாவா வந்திருக்காங்களா.. இங்கயா?!” தெரியாததுபோல ரேகா சுற்றிப் பார்க்க,

“அங்க பாரு…” என்று மைதிலி கை காட்ட, ஜெகா அவன் நண்பர்களோடு பேசியபடி வந்துகொண்டு இருந்தான்.

இவர்கள் இருவரையும் பார்த்தும் பார்க்காதது போல ஒரு பாவனை. அதுவே மைதிலிக்கு ஒரு எரிச்சல் கொடுத்தது எனலாம்.

“அட ஆமா மைத்தி… எப்படியும் ஜெகாண்ணா கார்ல வந்திருக்கும். திரும்பிப் போறப்போ கூட போயிருவோம்…” என்றவள், “ண்ணா ஜெகாண்ணா…” என்றழைக்க,

“ஐயோ…!!” என்று மைதிலி தலையில் கைவைத்துக்கொண்டாள்.

ஜெகாவின் பார்வை மைதிலியை தொட்டு பின் ரேகாவிடம் வந்து “தனியா வா வந்திருக்கீங்க…” என்ற ஒரு கண்டனப் பார்வை பார்க்க,

‘தெரியாதது போலவே கேட்பாங்க…’ என்ற செய்தியை மைதிலியின் கண்கள் சொல்லியது.

“லீவ் தானே ண்ணா. அதான் நாங்களா வந்தோம். சரி போறப்போ எங்கள கூட்டிட்டு போங்க…” என்றாள் உரிமையாய் ரேகா.

ரேகா, ஜெகா எல்லாம் பங்காளி பிள்ளைகள். சொந்தம் என்ற உரிமை எப்போதுமே ரேகாவின் பேச்சில் இருக்க, ஜெகாவின் உரிமைப் பார்வையோ எப்போதுமே மைதிலி மீதிருக்கும். அது அவள் இங்கே கல்லூரி சேர்ந்து சில நாட்களில் ஆரம்பம் ஆன ஒன்று.

“பிரண்ட்ஸ் ஓட வந்திருக்கேன்…”

“போறப்போ நீங்க மட்டும் தான் போவீங்கன்னு தெரியும். எப்படியும் பெரியம்மா சாமான் வாங்க லிஸ்ட் கொடுத்திருக்கும்…”

“ம்ம். அங்க இங்க சுத்தாம இதே இடத்துல அரைமணி நேரத்துல வந்து நில்லுங்க…” என்றவன் நகர்ந்துவிட, அவனின் நடையை தொடர்ந்தது மைதிலியின் பார்வை.

“கெரகம்… நீயும் பேசமாட்ட.. அந்தண்ணாவும் பேசாது… பாக்குறதுல மட்டும் பஞ்சமில்ல…” 

“ம்ம்ச் போடி….”

                       *************

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. ரேகாவும், மைதிலியும் மீனாட்சி அம்மன் கோவில் வந்திருந்தனர். கல்லூரி முடிந்ததும் மைதிலி குளித்து முடித்து நேராய் ரேகாவின் வீடு வந்திட, அங்கிருந்து இருவரும் கிளம்பினர். உடன் ரேகாவின் இரு பிள்ளைகள் வேறு.

“அத்தை…” என்று இருவருமே மைதிலியிடம் ஒட்டிக்கொள்ள, கால் டாக்சி தான் மைதிலி ஏற்பாடு செய்தாள்.

“ஏ… பஸ்ல போனா ஆகாதா…” என்று ரேகா சொல்ல,

“இதுன்னா நம்ம பேசிட்டே போகலாம்…”

“அதுசரி…”

இதோ மைதிலி இங்கே வந்தும் ஒருவாரம் ஆகிப்போனது. இதுவரைக்கும் ரேகா ஜெகந்நாதனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மைதிலியும் எத்தனையோ விதத்தில் கேட்டுப் பார்த்துவிட, ரேகா எதுவும் பேசினாள் இல்லை.

“சும்மா நொச்சிக்கிட்டே இருக்காத…” என்று சில நேரம் அமட்டிவிடுவாள்.

இன்று எப்படியும் விசயத்தை  வாங்கிவிட வேண்டும் என்றுதான் ரேகாவை அழைத்துக்கொண்டு கோவில் கிளம்பியதே.

கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. எல்லாம்வல்ல மதுரை நாயகியின் தரிசனம் பார்க்க, நீண்ட நெடிய வரிசை நிற்க, “நாளைக்குத்தான் வீடு போவோம் போல…” என்றாள் ரேகா.

“முன்னாடி போய் நின்னு சாமி கும்பிட்டாத்தான் கும்பிட்டதா அர்த்தமில்லை. கோவில் குள்ள ஒரு ஓரத்துல அமைதியா கண் மூடி உட்கார்ந்து வேண்டி கும்பிட்டாலும் நல்லதுதான்…”

“அஹா..!! அதுக்கெதுக்கு வந்தது இங்க? வீட்ல இருந்தே கும்பிட்டா கூட சாமிக்கு தெரியாதா என்ன…”

“ம்ம்ச் போடி…” என்றவள், “வா சுத்தி வருவோம்…” என,

“தரிசனமே பண்ணாம சுத்தி வரலாம் சொல்றவ நீயாதான் இருப்ப…” என்றபடி ஆளுக்கொரு பிள்ளையை பிடித்துக்கொண்டு பிரகாரம் சுற்றி வர, மைதிலியின் நடையும், பார்வையையும், ஏன் அவளின் மூச்சும் கூட ஒருநொடி அப்படியே நின்றுபோனது.

ஜெகா… ஜெகந்நாதன் இவர்களுக்கு நேராய் வந்து கொண்டு இருந்தான்.

ஹப்பா பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆனது. அவனின் எண்ணை கூட மைதிலி பிடிவாதமாய் வாங்க மறுத்திருந்தாளே. எங்கே இவனை பிடித்துவிடுமோ என்ற பயமே அவளை ஆட்சி புரிந்த காலம் அல்லவா அது? பிடித்திருக்கிறது என்று தெரிந்தபின்னே காத தூரம் ஓடிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லவா இருந்தாள்.

தன்னைக் கண்டான என்று காண்பதற்குள் ஜெகாவின் பார்வை சட்டென்று மாறிப்போனது. அவனோடு ஒரு  இளம்வயது பெண்ணும் வந்துகொண்டு இருக்க, அவளோடு பேசியபடி நடந்து வந்துகொண்டு இருந்தான்.

மைதிலியின் பார்வை ஜெகாவை தொட்டு பின் அப்பெண்ணைப் பார்க்க, ரேகாவோ “ஜெகாண்ணா… அண்ணி…” என்று அழைத்தேவிட்டாள்.

‘அண்ணியா…!’ என்று அதிர்ந்தவளுக்கு மனதில் அப்படியொரு வலி எழுந்தது நிஜம்

இதைக் கேட்கவா நான் இங்கு வந்தேன்? இந்தக் காட்சியைக் காணவா நான் ஆவல் கொண்டேன். என்று அவளது மனம் என்னை.  எவ்வித அஸ்திவாரமும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு, அதனை முன்னிட்டு எழுந்த வலி, இதற்கு என்ன மதிப்பிருக்கப் போகிறது. எதுவுமில்லைதானே.

க்ஷணத்தில் தன் பாவனையை மாற்றிய மைதிலி சாதாரணமாய் பார்ப்பதுபோல் பார்த்து நிற்க ஜெகாவும் சரி அவனோடு வந்தவளும் சரி ரேகாவைப் பார்த்து புன்னகை பூத்து வர, ஜெகாவின் பார்வை மைதிலியை கண்டு சற்றே நிலைபெற்று பின் இயல்பு வண்ணம் பூசிக்கொண்டது.  

இன்னும் கூட அவன் பார்வை கொடுக்கும் தடுமாற்றம் போகவேயில்லை.

ஆறுவருடங்களுக்கு முன்னர் எப்படியோ, இப்போதும் அப்படியே..!

“எப்படிண்ணி இருக்கீங்க? என்னண்ணா இந்த பக்கம்…?” என்று ரேகா சகஜமாய் பேச, மைதிலிக்கோ அங்கே நிற்கக் கூட முடியவில்லை.

இப்படி என்று தெரிந்திருந்தால், மைதிலி இன்று கோவிலுக்குக் கூட கிளம்பி இருக்க மாட்டாளே.

‘தாயே மீனாட்சி…’ என்று வேதனை தாளாது மைதிலியின் கண்கள் தானாகவே மூட,

‘ம்ம்ஹம்…’ என்ற மெல்லிய செருமல் சத்தம்.

அது அவனது தான்..!

இமைகள் திறந்தவளின் பார்வை கிஞ்சித்தும் அவன் பக்கம் போகவில்லை. ரேகாவோ மும்முரமாய் அவனோடு நின்றிருந்த பெண்ணோடு பேசியபடி இருக்க,

“அண்ணி, இவ என்னோட பிரன்ட். காலேஜ் இங்கதான் படிச்சா…” என்று அறிமுகம் செய்ய,

“அப்போ மாமாக்கும் தெரியும்தானே…” என்ற நந்தினி “என்ன மாமா?” என்று ஜெகாவைப் பார்க்க,

“ம்ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

மைதிலியோ வேண்டா வெறுப்பாய் நந்தினியைப் பார்த்து புன்னகைப் பூக்க, “இங்கயே மறுபடியும் வந்துட்டீங்களா?” என,

“நாங்க படிச்சா காலேஜ்லயே ஜாயின் பண்ணிட்டேன்…” என்றாள்.

“நல்லதுதான்…” என்றவள் “நீங்க பேசிக்கவேயில்லை மாமா…” என்று ஜெகாவைப் பார்த்துக் கேட்க,

“பேசுறதை கேட்டுட்டுத் தானே இருக்கேன்…” என்றான் கொஞ்சம் அழுத்தி.

அவனது வார்த்தைகள் அவனது கடுப்பினை சொல்லாமல் சொல்லியது.

“நீங்க எப்போ அண்ணி வந்தீங்க?” என்று ரேகா நந்தினியிடம் கேட்க,

“மதியம் தான் வந்தேன்.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறயா அதான் மாமாவோட கோவிலுக்கு வருவோம்னு வந்தாச்சு…” என்று சொல்லி சிரித்தவள், அழகாவே இருந்தாள்.

மைதிலிக்கு உள்ளும் புறமும் குபுகுபுவென எரிந்தது.

ஜெகந்நாதனின் முகமோ அதற்கும் மேல, எள்ளும் கொள்ளுமாய் வெடிக்க, ‘அழகாத்தானே இருக்கா, நல்ல டைப்பாவும் தெரியுது.. பின்ன என்ன கடுப்பு…’ என்று எண்ணியது வேறு யாராய் இருக்கும் மைதிலியே தான்.

“கிளம்பலாம் ரேகா..” என்று மைதிலி சொல்ல,

“எப்படி வந்தீங்க?” என்றான் ஜெகந்நாதன்.

“கால் டாக்சிண்ணா…”

“நாங்க கார்ல தான் வந்தோம்.. கிளம்புறதா இருந்தா எல்லாம் போலாம்…” என,

மைதிலியோ “ரேகா நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்?!” என்றாள்.

நந்தினி இவர்களின் சம்பாசனையைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குமே கடைகளுக்குப் போகவேண்டி இருந்தது. ஜெகாவிடம் கிளம்பும் போதே சொன்னாள். அவனோ நீ அம்மாவோட போயிக்கோ என்று ஒரேடியாய் மறுத்திருந்தான். இப்போது மைதிலியும் இப்படிச் சொல்ல, கண்டிப்பாய் ஜெகா வீட்டுக்குக் கிளம்புவான் என்று பார்க்க,

அவனோ “அதுனால என்ன ரேகா, இதோ நந்தினி கூட ஷாப்பிங் போகணும் சொன்னா…” என்றவன், நந்தினியைப் பார்க்க, அவளுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியே.

மைதிலியோ ‘என்னை கடுப்பேத்தவே எல்லாம் செய்யனும்..’ என்று முணுமுணுத்தவள்,

“இல்ல.. எனக்கு கொஞ்சம் எப்படியோ வருது. ஷாப்பிங் இன்னொரு நாள் போகலாம். இப்போ வீட்டுக்கு போலாம்…” என்று மைதிலி பொதுவாய் சொன்னவள், இப்போதென்ன செய்வாய் என்று ஜெகந்நாதனைப் பார்த்தாள்.

மைதிலி சட்டென்று பின்வாங்குவாள் என்று ஜெகா எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, அவன் கண்களில் நொடியில் ஒரு கோப ரேகை வந்து போக, ரேகாவோ ‘இவங்களுக்குள்ள எப்பவும் நானே தான் மாட்டிட்டு முழிக்கிறேன்…’ என்று எண்ணியவள்

“சரி அப்போ நாங்க கிளம்புறோம்…” என்று சொல்ல,

“நம்ம எப்படி மாமா?” என்றாள் நந்தினி.

அவளது கேள்வியும், பார்வையும் அவள் உள்ளத்து ஆவலையும் ஆசையையும் சொல்ல, ஜெகாவோ “என்ன வாங்கணுமோ வாங்கிக்கோ…” என்றான் எரிச்சலை அடக்கி.

அவ்வளவுதான்…

மைதிலியும் ரேகாவும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கிளம்ப, ஜெகாவும் நந்தினியும் அவர்கள் வழி பார்த்து கிளம்பினர்.

காரில் ஏறி அமர்ந்ததுமே  மைதிலி “யாரது?” என்று ரேகாவிடம் கேட்க,

“யாரு டி…” என்றாள் தெரியாத்தனமாய்.

“ஏய்…”

“சரி சரி… நந்தினி அண்ணியா??” என,

“ம்ம்ச் என்னைக் கடுப்பேத்தாத…”

“ஜெகாண்ணா கட்டிக்கப் போறவங்க டி…” என்று ரேகா நோகாமல் சொல்ல,

“என்னது?!” என்று மைதிலி அதிர்ந்தே போனாள்.

இப்படியும் இருக்குமோ என்று மனம் லேசாய் சொல்லியது தான். இருந்தும் இதுதான் நிஜம் என்று தெரியவும் ஆடித்தான் போனது.

அன்று என் பின்னாடி அப்படி சுற்றினானே.. காணும் நேரமெல்லாம் காதல் சொன்னானே.. இப்.. இப்போதெனில் யாரோ ஒருத்தியோடு கோவிலில்.. என்று அதற்குமேல் நினைக்கவே அவளுக்கு  முடியவில்லை.

“எதுக்கு இவ்வளோ அதிர்ச்சி ஆகுற. போன மாசம் தான் தட்டு மாத்தினாங்க.. இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணம். நந்தினி அண்ணி வேற யாரும் இல்ல…” எனும்போதே, ரேகாவின் மூத்த மகன் “ம்மா…” என்றழைத்து எதுவோ பேச,

மேற்கொண்டு எதையும் மைதிலிக்கு கேட்கும் எண்ணம் இல்லை.

போதும்… என்று நொடியில் தோன்றிவிட்டது.

பேசி முடித்தாகிவிட்டது.. இரண்டே மாதத்தில் திருமணமாம்…

இவனுக்கு ஒருமுறை கூட என் நியாபகம் வரவேயில்லையா?!

நான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியே விட்டுவிடுனா?!

அப்படியெனில் இவனது காதல் என்ன ஆனது?!

அவ்வளவுதானா?!

ஜெகா மீது அடுக்கடுக்காய் இப்படி மைதிலி குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டே போக, அடுத்து ரேகா பேசிய எதுவும் அவளது கவனத்தில் இல்லை.

என்னவோ கத்தி அழவேண்டும் போலிருக்க, மிக சிரமப்பட்டே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்தாள்.

ஒருவேளை ஜெகந்நாதனிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தால் கூட இந்த வலி கண்டிராதோ?!

இனிமேல் தான் திருமணம் என்கையில், கைக்கு எட்டியது சொந்தமாகவில்லையே என்ற ஏமாற்றம் அவளுக்குள் நிறையவே தோன்றியது.

இதுநாள் வரைக்கும் மைதிலி அனுபவித்திராத ஓர் உணர்வு.

இப்படித்தான் அன்று அவனுக்கும் இருந்ததுவோ என்னவோ?!

   

                     

                 

 

    

Advertisement