Advertisement

இதயத்திலே ஒரு நினைவு – 19

தான் உறுதியாய் பேசிட வேண்டும் என்று நினைத்தாலும், அது மைதிலியால் முடியாமல் போவது போலிருக்க, வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள். 

அவள் படும்பாடு புரியாமல் இல்லை அவனுக்கு.

“நீ ஏன் இவ்வளோ கஷ்டப்படுற மைத்தி… உனக்குள்ள ஏன் இவ்வளோ போராட்டம்.. உனக்கு என்னை பிடிக்கலன்னா கூட பரவாயில்லை.. ஆனா பிடிச்சிருந்தும் ஏன் இவ்வளோ பிடிவாதம்…?” என்று ஜெகா பொறுக்காது தான் கேட்டான்.

“பிடிக்கிறது எல்லாம் நமக்கு வேணும்னு நினைக்கக் கூடாது இல்லையா?!”

“தப்புன்னு யார் சொன்னா?”

“யாரும் சொல்ல வேணாம். நம்ம மனசுக்கு தெரியாதா?”

“மனசு.. பொல்லாத மனசு… நீதான் மைத்தி இப்படி இருக்க.. ஊர் உலகத்துல உன் நம்மள போல வயசுல இருக்கவங்க லவ் பண்ணாமயா இருக்காங்க…?” ஜெகந்நாதன் பொறுமையை விடுத்திருந்தான்.

“அவங்க எல்லாரும் கடைசியில கல்யாணம் பண்ணிக்கிறாங்கன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா?” என்று மைதிலி கேட்க,

“அப்.. அப்போ உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை…” என்றான் ஜெகா சிவந்துகொண்டு இருக்கும் விழிகளோடு.

“ம்ம்ஹூம். என்மேல நம்பிக்கை இல்லை…” என்றவள் அவனை நேர்கொண்டு தான் பார்த்தாள்.

“எனக்கு உங்களை பிடிக்கும். ரொம்பவே… என் அப்பா அம்மாவ எவ்வளோ புடிக்குமோ அவ்வளோ புடிக்கும். ஆனாலும் எனக்கு இப்போதைக்கு மனசுல தைரியம் இல்லை.. அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திடுச்சு. எக்ஸாம் முடிச்சு கிளம்பிடுவோம்..” என்றவள், அவளின் பெரியப்பா பெண் செய்த செயலையும் அதற்கு அவர்கள் குடும்பத்தில் நடந்த எதிர்வினையும், அவளின் அப்பா அம்மா பேச்சுக்கள் என்று எல்லாம் சொல்ல, ஜெகா மௌனமாய் கேட்டுக்கொண்டு இருந்தான்.

அவள் மறுத்தபின்னே, அவள் கூறும் காரணங்கள் எல்லாம் எதுவும் அவன் மனது ஏற்கத் தயாராய் இல்லை.

தான் பேச பேச அவன் பதிலே சொல்லாது இருப்பதைப் பார்த்து “என்னாச்சு?” என,

“ம்ம் ஒண்ணுமில்ல… நீ பேசு…” என்று ஜெகா சொல்ல,

“நான் என்ன கதையா சொல்றேன்…” என்றாள் கண்களை இடுக்கி அவனது விழிகளை நேர்கொண்டு பார்த்து.

அவள் அப்படிப் பார்ப்பது அவனுக்குப் பிடித்திருக்க “நீ இப்படி பார்த்தன்னு வை.. நீ சொல்றது எதுவும் எனக்கு ஏறாது…” என்று ஜெகா சொல்ல, மைதிலி பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“அப்போ இதெல்லாம் தான் உன் காரணமா?” என,

“இதுவும் தான்…” என்றவள் “எனக்கு என் பேரன்ட்ஸ் கிட்ட எதையும் மறைக்கவும் முடியாது. இப்போ போய் நான் ஒருத்தர லவ் பண்றேன்னு சொல்லிட்டு நிக்கவும் முடியாது.. அவங்க வேண்டாம்னு சொன்னா அதை என்னால இப்போ மீறவும் முடியாது. அப்போ நான் உங்களை ஏமாத்தினது போல வரும்..

அவங்களுக்குத் தெரியாம நம்ம லவ் பண்ணனும் அப்படின்னா, சத்தியமா அது என்னால முடியாது. என்னால சின்னதா கூட ஒரு பொய் சொல்ல முடியாது.. இப்போ கிளம்பி வர்றதுக்கே அம்மாக்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தது எனக்கு அவ்வளோ கஷ்டமா இருந்தது. யார் வேணா எப்படிவேணா இருக்கலாம். ஆனா நான் இப்படித்தான் இருப்பேன். என்னை இப்படித்தான் வளர்த்திருக்காங்க.. இதெல்லாம் உங்களோட பார்வைல தப்புன்னா அப்போ நான் தப்பாவே இருந்துட்டு போறேன்…” என்றாள் மைதிலி உறுதியாக.

“இது உனக்கும் சேர்த்து தானே கஷ்டமா இருக்கும்?”

“இருக்கட்டும் ஆனா நான் உண்மையா இருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கும்…”

“மண்ணாங்கட்டி திருப்தி…” என்றவன் அருகே இருந்த, அந்த பழைய பெரிய தூணை ஓங்கிக் கையால் குத்த, அவன் கரம் தான் வலி எடுத்தது.


 

பகலும் போனது, பொழுது சாய்ந்தது… இரவும் வந்தது…

இப்படித்தான் ஆனது ஜெகந்நாதன் வீட்டினில். பேசி பேசி அனைவரும் அசதியானது தான் மிச்சம். எந்தவொரு முடிவுக்கும் யாரும் வருவதாய் காணோம்.

திருமணம் வேண்டாம் என்பதில் ஜெகந்நாதன் உறுதியாய் நின்றுவிட்டான். நந்தினியோ, தன்னுடைய லட்சியம் நிறைவேற, திருமணம் தான் செய்ய வேண்டுமெனில் அதற்கும் தயார் என்று சொல்ல, முடிவிற்கு வருகிறது என்று எண்ணிய விஷயம் முடியாது இழுபறி ஆனது.

ரமேஷ், நிரஞ்சனி திருமணம் எவ்வித தடையும் இல்லாது நடக்கும் என்றாலும், அனைவருமே ஒன்றுக்குள் ஒன்று எனும் பட்சத்தில் யாருக்கும் எதிர்காலத்தில் எவ்வித பாதிப்பும், கசப்பும் வராதுபடி ஒரு முடிவிற்கு வருவது என்பது அத்துனை சாத்தியம் இல்லையே.

ரமேஷ் கூட நந்தினியிடம் பேசிப் பார்த்தான்.

‘உன்னை நான் படிக்க வைக்கிறேன்… நீ என்னோட சென்னைக்கு வா..’ என்று சொல்லிப்பார்த்தான்.

ஆனால் ஒரு நிலைக்கு மேலே நந்தினியை அவளின் அப்பா வாய் திறக்கவே விடவில்லை.

ஜெகந்நாதன் திருமணத்திற்கு சரி என்று சொன்னால், நீ இப்போதே கூட படிக்கப் போ என்பதிலேயே தான் அவர் நிற்க, நந்தினி வேறு வழியே இல்லாது ஜெகந்நாதனைப் பார்த்தாள்.

அவளாலும் தான் வேறு என்ன செய்ய முடியும்?

இப்படியெல்லாம் ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்பதனால் தான் அவள் சொல்லாமல் கிளம்பியது..

ஜெகந்நாதன் அப்படியே அமர்ந்துவிட, கமலா ஆச்சியோ “இதென்ன இப்படி நியாயமே இல்லாம எல்லாம் பேசிட்டு இருக்கீங்க…” என்று ஒரு சத்தம் போட்டவர்,

பாண்டியனிடம் “மாப்பிள்ள, சபைல இத்தனை பேரு பேசுறப்போ நான் பேசக் கூடாதுன்னு அமைதியா இருந்தேன். ஆனா என் பேரன் கலங்கி நிக்கிறப்போ என்னால இதுக்கு மேல அமைதியா இருக்க முடியாது. உங்க எல்லாரையும் விட எனக்கு வயசும் அனுபவமும் ஜாஸ்தி.

இவ்வளோ தூரம் வந்தப்புறம், இந்த கல்யாணம் நடந்தாலும் அவங்க வாழ்க்கை நல்லா இருக்காது. அதுதான் நிஜம். இதுக்கு மேலயும் நீங்க எல்லாம் இந்த கல்யாணத்த நடத்துறது பத்தி யோசிச்சா, அப்போ நானும் என் முடிவ சொல்றேன் கேட்டுக்கோங்க. அடுத்து வர்ற முஹூர்த்தத்துல என் பேரனுக்கும் அவன் விரும்புற பொண்ணுக்கும் நானே முன்ன நின்னு கல்யாணம் செஞ்சு வைப்பேன். இதை யாராலும் தடுக்கவோ, இல்லை வேற எதுவும் செய்யவோ முடியாது…” என்று தீர்க்கமாய் அடித்துப் பேச, ஜெகந்நாதன் கூட திகைத்துப் பார்த்தான் தன் ஆச்சியின் தெளிவையும் தைரியத்தையும் எண்ணி.

செல்வி அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர், அவரின் அம்மா பேசவும் அவருக்கு ஒரு புது தைரியம் வர,

“ஜெகா என் மகன். அவன் கல்யாண விஷயத்துல முடிவு பண்றதுக்கு எனக்கும் உரிமை இருக்கு. இவ்வளோ நேரம் நானும் பொறுமையா போனது நல்லதா ஒரு முடிவு வரும்னு தான். ஆனா அது நீங்க யாரும் எடுக்கிறது போல தெரியலை. விருப்பமில்லாம நந்தினிய என் மருமகளா கொண்டு வர்றதுல எனக்கு சம்மதம் இல்லை. அதே போல என் மகன் எங்களுக்காக விருப்பமில்லாத ஒரு வாழ்க்கை வாழணும்னு நான் நினைக்கல.. எனக்கு என் பையன் சந்தோசம் ரொம்பவே முக்கியம். அதுனால யாரும் இங்க கட்டாயப் படுத்தி எல்லாம் பேச வேணாம்…” என்றவர் பாண்டியனை ஒரு பார்வை பார்க்க,

பெண்கள் எல்லாம் பேசத் தொடங்குவர் என்று அவரும் நினைக்கவில்லை. நந்தினியின் அப்பாவும் நினைக்கவில்லை.

நந்தினியோ மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, கமலா ஆச்சியோ “ஏம்மா பொண்ணு… படிக்கணும்னு தானே கிளம்பிப் போகப் பார்த்த, இப்போ என் பேரனுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல சொல்றியே, அது நியாயமா?

ஒருவேளை என் பேரனுக்கு உன்மேல இஷ்டம் இருந்து, நீ கிளம்பி போயிருந்தா அப்போ அசிங்கம் யாருக்கு?  கவலை யாருக்கு? காலத்துக்கும் அந்த பேச்சு அப்படியே நிக்கும் தானே..” என்று கேட்க, பதில் சொல்லாமல் தலை குனிந்துகொண்டாள்.

நந்தினியின் அப்பாவையும் அவர் சும்மா விடவில்லை.

“பெரிய மனுஷ தோரணை இருந்தா பத்தாது சாமி.. அதுக்கு ஏத்தாப்போல நடந்துக்கணும். பிள்ளைங்க விருப்பம் என்னன்னு பெத்தவங்க தெரிஞ்சிக்கிறதும், அதை புரிஞ்சு நல்லது செஞ்சு குடுக்கிறதும் கௌரவ குறைச்சல் இல்லை. அதுக்கு மாறா இப்படி இத்தனை பேர் முன்னாடி நம்ம பசங்கள குற்றவாளி மாதிரி நிக்கவச்சு பேசுறோம் பாருங்க அது தான் அசிங்கம்..

நந்தினி நல்லா வாழ வேண்டிய பொண்ணு. படிச்சு பெரிய நிலைமைக்கு வந்தா அது உங்களுக்குத் தானே பெருமை.. அப்போ என் பேரன விட ஒசத்தியா ஒரு மாப்பிள்ளை வந்தா கசக்குமா உங்களுக்கு?” என அவராலும் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

கமலா ஆச்சி பேச பேச, அங்கே யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பாண்டியனே அமைதியாகிப் போனார். ரத்னாவோ எப்படியாவது நிரஞ்சனி திருமணம் நல்லபடியாய் நடந்தால் போதும் என்று எண்ணி அவரும் அமைதியாய் இருக்க,

ரமேஷோ அப்போதும் பேசினான் “நந்தினி நீ படிக்க நான் பொறுப்பு.. இதுக்குமேல உனக்கு என்ன வேணும்?!” என,

அவளோ அப்போதும் பயந்து போய் அவளின் அப்பா முகம் பார்க்க “நீயா உன் தலைல மண் அள்ளி போட்டுக்கிட்ட.. இதுக்குமேல என்ன செய்ய? உன்னை  நல்ல குடும்பத்துல நல்ல இடத்துல கட்டி குடுக்கனும்னு நினைச்சேன்…” என்றவர் அதற்குமேல் பேசாமல் விட,

பாண்டியன் “எல்லாமே நல்லதாவே நடக்கும். நீங்க நல்லாதா நினைங்க… உங்க பொண்ணு படிச்சு பெரிய நிலைக்கு வருவா…” என்று அவரை சமாதானம் செய்வது போல் தைரியம் சொல்ல, ஓரளவு அங்கே சற்று சுமுகம் ஆனது.

ஜெகந்நாதன் பேசவே இல்லை யாரோடும். தான் ஒன்று நினைக்க, விதி என்னென்னவோ நடந்தேறிவிட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லாது இருந்திட வேண்டும் அதுவே அவனின் விருப்பம்.

ஓரளவு அனைவரும் ஒரு தெளிவுக்கு வர, எல்லாருமே ஜெகாவின் முகம் தான் பார்த்தனர். இவன் என்ன சொல்லப் போகிறான் என்று.

அவனோ  “சில கசப்புகள வாழ்க்கைல மாத்தவோ, மறக்கவோ முடியாது. ஆனா அதை கசப்புன்னு நினைச்சா தான். நமக்கு ஒரு பாடம்னு நினைச்சா அதோட பிம்பம் வேற மாதிரி இருக்கும். எந்த காரணத்துக்காகவும் உங்க பொண்ண இப்படி எல்லார் முன்னாடியும் இப்படி நிக்க வச்சுடாதீங்க..” என்று நந்தினியின் அப்பாவிடம் சொல்ல, அவரும் தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டார். 

அப்படியே ஒவ்வொருவராய் பேசியபடி எழுந்து கிளம்ப, ரமேஷின் அப்பாவோ “நான் போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு எல்லாம் கொஞ்சம் அமைதியாகவும் போன் பண்றேன். அடுத்து கல்யாண வேலை நிறைய இருக்கு இல்லையா…” என்றுவிட்டு போக, ரமேஷும் நிரஞ்னிக்கு தைரியம் சொல்லியே கிளம்பினான்.

ஜெகாவிற்கு உடம்பே தொய்ந்து போனது போல இருந்தது. அப்படியே சோபாவில் பொத்தென்று விழுந்து அமர, ரத்னா யாரோடும் பேசவில்லை அவரின் அறைக்குச் செல்ல, நிரஞ்சனி அமர்ந்திருந்தவளையும் “வா…” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

செல்வி அவர்களையே பார்க்க “செல்வி… உன் பையன் வாழ்க்கையும் உனக்கு முக்கியம்…” என்று கமலா பேச,

“இல்லைன்னு சொல்லலையே ம்மா…” என்றார் அவரும்.

“நான் முன்னாடியே சொன்னேன். ஒரு கல்யாணத்துக்காக இன்னொரு கல்யாணம் முடிவு பண்ணாதீங்க.. அவனுக்கு இஷ்டமான்னு கேளுன்னு… நீ கேட்கவேயில்லை…” என்றவர்

“சரி நானும் கிளம்புறேன்…” என்று எழ,

“இருங்க அத்தை… இந்நேரம் எதுக்கு போறீங்க?” என்றார் பாண்டியன். அத்துனை நேரம் பேசாது இருந்தவர் இப்போது வாய் திறக்க,

“பின்ன அங்க அந்த பொண்ணு தனியா இருக்கும். தவிச்சிட்டு இருப்பா. அவ அப்பாம்மா வந்தாங்களோ என்னவோ தெரியாது…” என்றவர் “நான் போய் மைதிலி கிட்ட பேசினா தான் எனக்கு நிம்மதி…” என்று சொல்ல,

செல்வியோ “நானும் வர்றேனே…” என்றார்.

“நீ எதுக்கு?”

“ம்ம்ச் நானும் வந்து மைதிலிக்கிட்ட பேசுறேன் ம்மா.. பாவம் தானே அவளும்…” என,

ஜெகா ‘இதென்னடா அம்மா திடீர்னு மைதிலி மேல பாசம் பொழியுது…’ என்று பார்க்க,

பாண்டியனோ “நீ டா?” என்று மகனைக் கேட்டார்.

“இவங்க எல்லாம் போறப்போ நான் போய் என்ன பண்றது?” என்று அவன் சோர்வாய் தான் சொன்னான்.

ஆனால் அவன் சொன்ன விதம் மற்றவர்களுக்கு சிரிப்பைக் கொடுக்க, செல்வியோ கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டார்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்… அவ அப்பா அம்மா வந்துட்டாங்க…” என்றவன் மைதிலிக்குத் தான் அழைத்தான்.

அவள் அடுத்த நொடி எடுத்து “ஹலோ…” என, அவளின் அந்த ஒரு சொல்லே சொல்லியது, அவள் எத்துனை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று.

கண்களை இறுக மூடித் திறந்தவன் “ரெடியா இரு… எங்கம்மாவும் ஆச்சியும் உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்களாம்…” என்று சொல்ல,

“என்னது?!” என்றாள் முதலில் புரியாது.

“சொல்றது உனக்கு புரியலையா?”

“ஷ்..! விளையாடாதீங்க…” என்று அவள் பேசும்போதே, கமலா அவனிடம் இருந்து போனை பறித்தவர் “யம்மா அழுத்தக்காரி… நாங்க அங்க வர்றோம்…” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

ஜெகா முறைக்க “என்னடா? நீயும் சரியில்லை அவளும் சரியில்லை. என்னிக்கோ முடிஞ்சு இருந்திருக்க வேண்டிய விஷயம் இது. மைதிலிக்கும் இருக்கு… போய் பேசிக்கிறேன்…” என்றவர் பாண்டியனிடம் “அவ அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க போல…” என,

“அப்போ நீங்க போங்க அத்தை.. காலைல நாங்க வந்து பேசுறோம். அதுதானே முறை…” என,

“நல்லது…” என்று ஆச்சியும் கிளம்பிவிட்டார்.

“நான் கொண்டு வந்து விடணுமா?” என்று ஜெகா கேட்க,

“விட்டுட்டு வாசலோட திரும்பி வந்திடனும்…” என்று பாட்டியும் சொல்ல, ஜெகந்நாதனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

வெகு நாளைக்குப் பிறகு, சந்தோசமாய் சிரித்தான்.

 

   

   

     

 

   

   

 

 

Advertisement