Advertisement

         இதயத்திலே ஒரு நினைவு – 18

மதுரை திருமலை நாயக்கர் மஹால்…

அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது.  அதையும் தாண்டி காதலர்கள் வேறு ஆங்காங்கே அமர்ந்திருக்க, ஜெகா வாசுவோடு வந்திருக்க, மைதிலி ரேகாவோடு வந்திருந்தாள்.

ரேகாவைப் பார்த்ததுமே ஜெகா லேசாய் முறைக்க,

“இல்லண்ணா அது மைதிலி தனியா எப்படி வருவா?” என்று ரேகா இழுக்க,

“ஏன் அவ வந்தா என்ன?” என்றாள் மைதிலி.

“தெரிஞ்சவங்க பார்த்தா தேவையில்லாத பிரச்சனை…” என்றான் ஜெகந்நாதன்.

“என்ன பிரச்சனை?!” என்ற மைதிலியின் முக பாவனை அப்படியே மாறிவிட்டது.

“உங்க தங்கச்சி வந்தா பிரச்சனை.. இதேது அடுத்தவங்க பொண்ணு வர்றதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்படித்தான?” என,

‘அச்சோ இதை இவ இப்படி புரிஞ்சுக்கிட்டாளா?!’ என்று பார்த்தவன்

“நான் அப்படி சொல்லல…” என்று பேச வர, மைதிலி முகம் திருப்பிக்கொண்டாள்.

வாசு, ஜெகாவை முறைக்க “மைத்தி…” என்றான் ஜெகா.

மைதிலி அப்போதும் ஜெகாவை பார்த்தவள் “நீங்க சொல்ல வந்தது என்னன்னு யோசிச்சு பேசுங்க…” என,

“இப்போ இந்த சண்டையை விட்டுட்டு வந்த வேலையை பாருங்க…” என்றாள் ரேகா.

மைதிலி முகத்தைத் தூக்கி வைத்திருக்க, ஜெகாவோ வாசுவைப் பார்க்க “சரி நீங்க பேசிட்டு வாங்க… நான் அங்குட்டு இருக்கேன்…” என்று வாசு நகர்ந்து செல்ல, வேறு வழியில்லாமல், ரேகாவும் அவனோடு செல்ல,

“இதுக்குத்தான் சொன்னேன்…” என்றான் ஜெகா.

“என்னது?!”

“இப்போ நம்ம லவ்வர்ஸ்… அவங்க அப்படி இல்லை.. ஆனா பார்க்கிறவங்களுக்கு அவங்களும் அப்படித்தான் தெரிவாங்க.. தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா ரேகாவுக்கு தானே கஷ்டம்…” என,

‘ஓ…!’ என்று மனதிற்குள் எண்ணியவள்

“நம்மள பார்த்தா கூட தான் கஷ்டம்…” என்று சொல்ல,

“அப்படி ஏதாவது ஒண்ணுன்னா, இப்போவே உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நிப்பேன்…” என்றான் ஜெகா.

அவனது இந்த உறுதியும், தெளிவயும் மைதிலிக்கு பிரமிப்பாய் இருந்தாலும், மனதிற்குள் ஒரு சிறு சாரலும் வீசியது நிஜம்.

இதெல்லாம் எனக்காக… என்று அவள் மனது சிந்திக்க, அவள் எண்ணி வந்திருந்த முடிவு மெல்ல ஆட்டம் காண,

‘நோ மைத்தி…’ என்று தன்னை தானே உலுக்கிக்கொண்டாள்.

அவளது பாவனைகளை பார்த்தபடி தான் நின்றிருந்தான் ஜெகந்நாதன். அவள் முக மாற்றம் அவனுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க விட “மைத்தி…” என்றான் காதலாய்.

விழிகளை மட்டும் அவன் மீது திருப்பியவள் அவன் பேசும் முன்னமே “உங்களுக்கு எப்படின்னு தெரியாது.. ஆனா எனக்கு இதெல்லாம் ஒத்து வராது…” என,

“ஏன்?!” என்றான் சட்டென்று இறுகிய குரலில்.

“ஒத்துவராதுன்னா வராது… பிரச்சனைன்னு ஒன்னு ஆச்சுன்னா உங்களுக்கு வேணும்னா என்னை உங்க வீட்ல கூட்டிட்டு போய் நிறுத்துற தைரியம் இருக்கலாம். ஆனா நான் பிரச்சனையே வேணாம்னு சொல்றேன்…” என,

“ஏன்?!” என்றான் அப்போதும்.

“வேண்டாம்னா வேணாம்…”

“சோ இதுதான் உன்னோட முடிவா?!”

இதனை ஜெகா கேட்கையில், அவனது குரலில், பார்வையில், உடல் மொழியில் என்ன இருந்தது என்றே மைதிலிக்கு அப்போது விளங்கவில்லை.

“ஆமா…!” என்று திடமாய் சொல்லிட நினைத்தவளின் குரல் மெல்ல பிசிறு தட்டியது..


 

 

ரமேஷிற்கு கோபம் இருந்ததுதான். ஆரம்பத்திலேயே ஜெகந்நாதன் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லியிருந்தால், இத்தனை தூரம் இந்த பிரச்சனைகள், கசப்புகள் நடந்திருக்காது தான்.

அவன், அவனின் தங்கைக்காகப் பார்க்க, இப்போது ரமேஷ் நிரஞ்சனி திருமணம் நடந்தாலுமே, நந்தினி குடும்பத்தோடு ஏற்பட்ட கசப்பு என்பது யாராலும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

காலம் முழுமைக்கும் அது அப்படியே நிலைத்து நிற்கும் தானே.

ஆனால் அதற்காக, நிரஞ்சனியோடு தன் திருமணம் கேள்வி குறி ஆகுவதை அவனால் ஏற்க முடியவில்லை.

நந்தினியின் அப்பா, எப்படியும் இதனை சாக்காய் வைத்து, ஜெகாவை வழிக்கு கொண்டு வர நினைக்க, ரமேஷ் முந்திக்கொண்டான்.

“எனக்கும் நிரஞ்சனிக்கும் நடக்கப்போற கல்யாணம் எதனை முன்னிட்டும், யாரை முன்னிட்டும் நிக்காது.. நிக்கவும் கூடாது.. அப்பா இது என்னோட முடிவு…” என, ரமேஷின் அப்பாவிற்கும் இதில் மாற்று கருத்து இல்லைதான்.

பின்னே இப்படி பட்ட குடும்பத்தில் தன் மகனுக்கு பெண் எடுப்பது அவருக்கு பெருமையும், மதிப்பும் கூடும் விஷயம் தானே.

நந்தினி செய்த சங்கதி அவருக்கு பிடிக்கவில்லைதான். இருந்தும் இதில் நந்தினியின் அப்பாவின் பிடிவாதம் தானே எல்லாம் செய்ய வைத்தது.

“ண்ணா… என்னண்ணா பேசாம இருக்க. ரமேஷ் இப்படி சொல்றான். கடைசியல என் பொண்ணுதான் அம்போன்னு நிக்கனுமா?” என்று நந்தினியின் அப்பா பேச,

“சித்தப்பா… யோசிச்சு பேசுங்க…” என்றான் ரமேஷ்.

“என்னடா.. என்ன யோசிச்சு பேச சொல்ற?” என்று அவரும் எகிற,

“எனக்கும் நிரஞ்சனிக்கும் தானே முதல்ல இந்த கல்யாண பேச்சு ஆரம்பம் ஆச்சு…?” என்று கேட்க,

“ஆமா…” என்றார்.

“ஆனா நடுவில அவங்க வீட்ல கொஞ்சம் இழப்புக்கள், நிரஞ்சனிக்கும் கால்ல அடி… எல்லாம் சரியாகுற நேரத்துல நீங்களா தான் நந்தினி, ஜெகா கல்யாணம் நடக்கனும்னு பேசியிருக்கீங்க.. அப்படித்தானே…”

“இதுல என்ன தப்பிருக்கு, கல்யாண வயசுல பொண்ணு மாப்பிள்ளை இருக்குறப்போ சம்பந்தம் பேசுறதுல என்ன தப்பு…”

“தப்பில்ல.. ஆனா அவங்க கல்யாணம் உறுதியானா தான், எங்க கல்யாணம் நடக்கும்னு சொல்ற மாதிரி பேசியிருக்கீங்க.. எனக்கு இப்போதான் எல்லாம் புரியுது…” என்றவன் தன் அப்பாவிடம்

“என்னோட முடிவு இதுதான் ப்பா… இல்லை நீங்க யாரும் சம்மதிக்கல அப்படின்னாலும், எங்க கல்யாணம் நடக்கும்.. என் மனைவியா நிரஞ்சனியை வச்சு வாழ்ற தகுதி, வசதி எனக்கு இருக்கு…” என்று சொல்லிவிட, ஜெகாவிற்கு ரமேஷ் மீது பெருமதிப்பு தோன்றிவிட்டது.

நிரஞ்சனிக்கோ கண்களில் நீர் கோர்த்துவிட, தன்னருகே நின்று பேசிக்கொண்டு இருந்த ரமேஷின் கரங்களை இறுக பற்றிக்கொண்டாள்.

அவனோ ஆறுதலாய், அவளை லேசாய் தட்டிக்கொடுக்க, அதன்பின்னே தான் ரத்னாவின் மனது கொஞ்சம் சமாதானம் அடைந்தது.

இருந்தும் ஜெகா மீது அவருக்கு வருத்தமே.

மகனது வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தாலும், ரமேஷின் அப்பாவிற்கு தன் தம்பியின் நடத்தை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதே நேரம் இத்துனை பேர் இருக்கும் இடத்தில் மரியாதை குறைவாய் எதுவும் நடந்திட கூடாது என்று எண்ணியவர், பாண்டியனிடம்

“சம்பந்தி, ரமேஷ் நிரஞ்சனி கல்யாணம் குறிச்ச நாள்ல, குறிச்ச நேரத்துல நல்லபடியா நடக்கும். நந்தினி எங்க வீட்டு பொண்ணுதான்.. அவளோட விஷயம் நாங்க எங்க வீட்ல போய் பேசி முடிவு பண்ணிக்கிறோம்…” என்று கரம் குவித்து கிளம்ப எத்தனிக்க, நந்தினியின் அப்பாவோ ஏக கோபத்தில் நின்றிருக்க,  ஜெகந்நாதனுக்கு ஒருப்பக்கம் நந்தினியைப் பார்க்க பாவமாய் இருந்தது.

எப்படியும் வீட்டிற்குப் போனது அவளுக்கு நிறைய வசைகளும், அடிகளும் உண்டு.

அது நிச்சயமே..!

‘இந்த பெண்ணுக்கு எப்படியும் உதவிட வேண்டும்…’ என்று நினைக்கையில் நந்தினியே “நான் வர மாட்டேன்…” என்றாள் தைரியமாய்.

அவளின் அம்மாவோ “ஏன் டி மானத்த வாங்குற?” என்று அவளின் முதுகில் ஒன்று வைக்க,

“நான் வர முடியாதும்மா.. உங்களோட வந்தா என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்…” என்றவள்,

ஜெகந்நாதனைப் பார்த்து “நான் தான் பயந்துட்டு எதையும் சொல்ல முடியாத நிலைல இருந்தேன்.. நீங்களாவது என்கிட்டே சொல்லியிருக்கலாமே மாமா…” என்றாள் கண்ணீரோடு.

“அப்போ எதையும் சொல்ற நிலைல இல்லை…” என்றவன் “உனக்கு என்ன ஹெல்ப்னாலும் செய்ய நான் கடமை பட்டிருக்கேன் நந்தினி…” என,

“அப்.. அப்போ என்னை இவங்களோட அனுப்பாதீங்க. என்னை சென்னைக்கு அனுப்புங்க…” என்றாள் பிடிவாதமாய்.

“ஓ..! சென்னைக்கு போயிட்டா, எங்களுக்கு அங்க வந்து உன்னை கூட்டிட்டு வர வழி தெரியாதா என்ன?” என்று அவளின் அப்பா எகிற,

“இங்க பாருங்க…” என்று அவரை தடுத்து நிறுத்தியவன்

“நந்தினி மேஜர்.. கட்டாயக் கல்யாணம் செய்யப் பாக்குறாங்கன்னு உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும். அவளை கொடுக்கலன்னாலும், நான் கொடுப்பேன். அந்த பொண்ணு மேல சின்னதா ஒரு கீறல் விழுந்தா கூட நீங்க எல்லாம் உள்ள போகணும்…” என்று ஜெகா பேச,

“மச்சான்…” என்று அழைத்து நிறுத்தினான் ரமேஷ்.

என்ன என்பதுபோல் ஜெகந்நாதன் பார்க்க “நந்தினிக்கு நான் பொறுப்பு… அவ கண்டிப்பா படிக்கப் போவா. இவங்க சம்மதிக்கலைன்னா, நான் படிக்க வைக்கிறேன்…” என்றவன்

“சித்தப்பா, உங்களோட பிடிவாதம் யாருக்குமே நல்லதில்ல. நந்தினி நீ என்னை நம்பி கிளம்பி வரலாம்…” என, ரமேஷைப் பற்றி நந்தினிக்கு நன்குத் தெரியும் என்பதால் அவள் முகத்தில் இருந்த கலவரம் மாறி, ஒரு அமைதி வர, அதனைக் கண்ட பின்னே தான் ஜெகந்நாதன் அமைதியானான்.    

ஆனால் யார் என்ன சொன்னாலும் நான் மசியமாட்டேன் என்பதுபோல் நந்தியின் அப்பா நின்றார்.

“என்ன ரமேஷ்… உன் கல்யாணம் நல்லபடியா நடந்தா போதும்.. நந்தினி வாழ்க்கை எப்படியோ போகட்டும்னு நினைக்கிற.. ஊர் கூட்டி நிச்சயம் பண்ணி, பத்திரிக்கை அடிச்சு இவ்வளோ தூரம் வந்தபிறகு கல்யாணம் நின்னா அவளுக்கு நாளை நல்ல வாழ்க்கை அமையும்னு யார் கண்டா?! அதுக்கு யார் பொறுப்பு ஏத்துப்பீங்க..?” என்று சத்தம் போட,

பாண்டியனோ “இங்க பாருங்க, நந்தினி ஒன்னும் தப்பான காரியம் பண்ணல. படிக்கணும்னு ஆசைப்படுது.. படிக்கட்டுமே.. படிச்சு முடிச்சா, என் மகனை விட நல்ல வரனே வரும் பாருங்க…” என்று சமாதானமாய் பேச,

“ஆனா என் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணது உங்க மகனைத்தானே… சரி நீங்க சொல்றபடியே என் பொண்ணை படிக்க வைக்கிறேன். ஆனா நீங்க நிச்சயம் பண்ணது போல இந்த கல்யாணம் நடக்கட்டுமே. அதை ஏன் வேணாம் சொல்றீங்க.. கல்யாணம் முடியட்டும், நந்தினி படிக்க போகட்டும். அப்படி இல்லையோ நந்தினி படிச்சிட்டு வர்ற வரைக்கும் நாங்க காத்திருக்கோம்னு உறுதி குடுங்க. எதுவுமே இல்லாம இப்போ உங்க மகனுக்கு வேற ஒரு பொண்ணு ரெடியா இருக்குன்னதும் எங்க பொண்ண கலட்டி விட பார்த்தா நியாயமா ?” என்று பேச, அங்கே யாராலும் பதில் பேச முடியவில்லை.

ஒரு தந்தையாய், அவரின் பேச்சு நியாயமாகவே பட்டது..

ஜெகா கூட நொடி பொழுது தயங்கியே நின்றான். அவர் சொல்வதும் சரிதானே. நந்தினி இப்போதைக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றுதானே சொல்கிறாள். திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லையே. என்ன செய்து இவர்களை சமாதானம் செய்து அனுப்பவது என்று யோசிக்க,

நந்தினி நேராய் ஜெகந்நாதனிடம் வந்தவள் “ப்ளீஸ் மாமா… நீங்க நிரஞ்சனிக்காக இந்த கல்யாணத்துக்கு சரின்னு நின்னீங்க தானே… இப்போ எனக்காக நீங்க சரின்னு சொல்லுங்க ப்ளீஸ். இல்லன்ன எங்கப்பா என்னை படிக்க அனுப்ப மாட்டார். நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்…” என்று அவன் முன்னே கண்ணீரோடு கரம் குவித்து நிற்க, ஜெகந்நாதனுக்கு அவன் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

எப்படியோ ஓரளவு பிரச்சனை முடிந்தது என்று இருந்த வேளையில், நந்தினி இப்படிக் கேட்க, அவள் இப்படி கேட்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவளின் அப்பாவே கூட..!

ஜெகந்நாதன் அதிர்ந்து பார்க்க, நந்தினியோ “நான் கடைசி நேரத்துல இப்படி பண்ணது தப்புதான். நான் முன்னாடியே உங்கக்கிட்ட சொல்லிருக்கணும். இப்போ வந்த தைரியம்  அப்போ வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா என்ன செய்ய?

நான் இப்படி கேட்கிறது சுயநலமா கூட இருக்கலாம். ஆனா எனக்கும் வேற வழி தெரியலை. நீங்க ஒருத்தர் சரின்னு சொன்னா, கண்டிப்பா எல்லாரும் அமைதியாகிடுவாங்க…” என்று பேச, அனைவருக்குமே ஒரு மாதிரி சங்கட்டமாய் ஆகிப்போனது.

ஜெகந்நாதனோ “நந்தினி யோசிச்சுத்தான் பேசுறியா?” என,

“நான் தான் சொல்லிட்டேனே மாமா எனக்கு வேற வழி தெரியலைன்னு…” என்று அவளும் பேச,

“சரி உன்னை கல்யாணம் பண்ணிட்டு நான் உன்னை படிக்க அனுப்பலன்னா, அப்போவும் நீ இப்படித்தான் கிளம்பிப்போகப் பார்ப்பியா?” என்று ஜெகா கேட்க, நந்தினி இதனை இப்படியொரு கோணத்தில் சிந்திக்கவில்லை.

அப்படியும் இருக்கிறது தானே.

இப்போது நந்தினி திகைத்துப் பார்க்க, “சொல்லு நந்தினி…” என்று ஜெகா பேச,

கமலா ஆச்சியோ “அப்படி கேளு டா பேராண்டி.. என்ன பேச்சு எல்லாரும். என் பேரன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டது போலத்தான் நின்னான். இன்னிக்கு இப்படியொரு பிரச்சனைன்னு ஆகவும் தான் அவனும் வாய் திறந்தான். உங்க பொண்ணும் படிப்புக்குத்தான் கேட்டு நிக்குது.. மனசுல விருப்பமில்லாம இருக்குற ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைக்கனும்னு பிடிவாதம் செஞ்சா அதைவிட பெரிய பாவம் வேற இல்லை…” என்று பேச, அங்கே யாராலுமே சட்டென்று ஒரு முடிவிற்கு வரவே முடியவில்லை.

இதெல்லாம் இங்கே இப்படியிருக்க, அங்கே மைதிலியோ நிலையில்லாது தவித்துக்கொண்டு இருந்தாள்.

சுகுணாவோ “என்ன டி இப்படி இருக்க? அந்த தம்பிக்கு போன் போட்டு பேசு என்னாச்சுன்னு கேளு?” என்று நச்சரிக்க,

“ம்மா ஏம்மா படுத்துற நீ.. அங்க அவர் நிலைமை என்னவோ…” என,

“ஓ..! அப்போ எங்க நிலைமை எல்லாம் உனக்கு பெரிசில்ல அப்படித்தானே. பொண்ணு ஒருத்தன விரும்புறா, அவனுக்கோ வேற ஒருத்தி கூட நிச்சயம் ஆகி இன்னிக்கு கல்யாண சேலை தாலி எல்லாம் எடுக்கப் போயிருக்காங்கன்னு கேட்கிறப்போ எங்களுக்கு குளுகுளுன்னு இருக்குமோ…” என்று பேச,

“ம்மா ப்ளீஸ் ம்மா…” என்றாள் மைதிலி.

“ம்ம் நல்லவ மாதிரியே இருந்து இப்படி வந்து உக்காந்து இருக்கியே டி…” என்ற சுகுணாவிற்கு ஆற்றாமையாய் இருந்தது.

ஒருவேளை அங்கே ஜெகந்நாதனுக்கு நந்தினியோடு தான் திருமணம் என்ற முடிவு வந்துவிட்டால், இங்கே தன் மகள் தவிக்கும் தவிப்பை அவரால் காண முடியாதே. அவளது இத்தனை வருட காத்திருப்பிற்கு, தேடி வந்த தேடலுக்கு எந்த பிரயோஜனமும் இல்லையே.

அதுவே கோபமாய் மாற, இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்க, மைதிலியோ மனதிற்குள்ளேயே ‘எல்லாம் நல்லபடியா நடத்திக்குடு தாயே…’ என்று அந்த பச்சை புடவைக்காரி மீனாட்சியை வேண்டிக்கொண்டு இருந்தாள்.              

                

 

 

                          

                 

Advertisement