Advertisement

        இதயத்திலே ஒரு நினைவு – 17

“நீயும் என்னோட வா டி ரேகா…” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க,

“நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்…” என,

“நான் வந்தா ஜெகாண்ணா திட்டும்…” என்றாள் ரேகா.

“வரலன்னா நான் பேசவே மாட்டேன்…” என்று மைதிலி பிடிவாதம் செய்ய,

“எப்படியோ என்னை மாட்டிவிட போற நீ…” என்ற ரேகா அவளோடு வருவதாய் ஒத்துக்கொண்டாள்

எல்லாம் வேறெங்கே, மதுரை திருமலை நாயக்கர் மகால் செல்லத்தான்.

ஆம்! அங்கேதான் ஜெகாவும் மைதிலியும் சந்திப்பதாய் முடிவாகி இருந்தது.

குமரனும் சுகுணாவும் அன்றைய தினம் இரவே வந்திருக்க, அன்றைய தின இரவெல்லாம் மைதிலிக்கு உறக்கமே இல்லை. பெற்றவர்களும் உறங்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தனர்.

குமரன் தன் அண்ணன் மற்றும் அண்ணன் மகளை எண்ணி  நிறைய நிறைய வருந்தி பேச, சுகுணாவோ “நான் ஆரம்பத்துலயே சொன்னேன் யார் கேட்டா… உங்க அண்ணி கடைசியில நீயும் ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கன்னு சொன்னாங்க. இப்போ என் பொண்ணா லவ் பண்ணிட்டு வந்து நிக்கிறா…” என்று பேச,

 அதெல்லாம் மைத்தி அப்படியே மனதில் வாங்கிக்கொண்டு இருந்தாள்.

‘நம்ம லவ் பண்ணா அப்போ அம்மா அப்பாவும் எவ்வளோ பேருக்கு பதில் சொல்ல வேண்டி வரும்?’ என்று தோன்ற, ஜெகாவை எத்தனை பிடித்திருந்தாலும், அத்தனைக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லும் எண்ணமும் திடம் பெற்றது.

ஆனால் அப்பாவும் அம்மாவும் இப்படியொரு மனநிலையில் இருக்கையில், திருமலை நாயக்கர் மஹால் செல்ல வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள். ஆனாலும் நாளை எப்படியாவது சென்றே ஆகவேண்டும் என்று மைதிலி யோசிக்க, வேறு வழியே இல்லை விடிந்ததுமே

“ம்மா ரேகா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்…” என்று நின்றாள்.

“எதுக்கு?”

“அதும்மா… நேத்து காலேஜ் போகலைல.. அதான் என்ன நடத்தினாங்கன்னு கேட்க…” என,

“அதை போன்லயே கேளு…” என்றார் சுகுணா.

“ம்மா…”

“ம்ம்ச்… இருக்குற டென்சன் போதாதுன்னு நீ வேற ஏன் டி…”

“போயிட்டு உடனே வர்றேனே மா…”

“சரி.. போனோமா வந்தோமான்னு இருக்கணும்…” என்ற சுகுணாவின் குரல் கண்டிப்புக்கு மாற, இதோ ரேகா வீட்டிற்கு வந்து அவளை வர சம்மதிக்க வைத்துவிட்டு

“சரி நீ வந்து எங்கம்மாக்கிட்ட கேளு.. எங்க சித்தி பொண்ணுங்க எல்லாம் வந்திருக்காங்க.. எல்லாரும் நாங்க மஹால் போறோம். மைதிலியை கூட அனுப்புங்கன்னு…” என, ரேகா திருட்டு முழி முழித்தாள்.

“என்ன டி முழிக்கிற?!”

“என்ன டி இப்படி வாய் கூசாம பொய் சொல்ல சொல்ற?”

“ம்ம்ச் எனக்கு வேற வழி தெரியலை டி. ப்ளீஸ்.. எனக்கு இந்த டென்சன் எல்லாம் தாங்கவே முடியலை ரேகா… உன் அண்ணன் அதுக்கு மேல.. போன்ல அவ்வளோ சொல்றேன், நேர்ல பார்த்துத் தான் பேசணும்னு பிடிவாதம் செய்றாங்க…” என,

“ஹ்ம்ம் லவ்வரோட வெளிய போகத்தான் எல்லாம் வீட்ல பொய் சொல்லிட்டு போவாங்க.. நீ வேணாம்னு சொல்றதுக்கே பொய் சொல்லிட்டு போகணும்னு நிக்கிற…”

“என் நிலைமை அப்படி…”

“உனக்குத்தான் புடிச்சிருக்கே டி.. பின்ன என்ன? ஜெகாண்ணாக்கிட்ட எல்லாம் எடுத்து பேசினா கண்டிப்பா புரிஞ்சுக்கும். ஒரு பிரச்சனைன்னு வந்தா கூட அது தைரியமா எல்லாம் பார்க்கும்…” என்று ரேகா சொல்ல,

“அவங்க பார்ப்பாங்க.. ஆனா எங்க குடும்பத்துல இப்போதான் ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கு. அதுவே இன்னும் எத்தனை வருசத்துக்கு கஷ்டம் கொடுக்குமோ தெரியலை. இதுல நானும் லவ் பண்றேன்னு போய் நின்னா அவ்வளோதான்..

அதையும் தாண்டி, நீ சொல்றியே பிரச்சனைன்னு வந்தா ஜெகாண்ணா பார்த்துக்கும்னு, அது அவங்களுக்குமே எவ்வளோ கஷ்டம். அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க.. இதெல்லாம் யோசிக்கணும் ரேகா. லவ் வரும் தான் இந்த வயசுல. ஆனா அதுக்காக எல்லாம் லவ் பண்ணிட்டு இருக்க முடியுமா?” என, மைதிலியின் இந்த பேச்சு பாதி புரிந்தும் புரியாதது போல இருந்தது ரேகாவிற்கு.

 


 

 

ஜெகந்நாதனின் இல்லம், அவன் பக்கத்து சொந்தங்களாலும், நந்தினி மற்றும் ரமேஷ் வீட்டு ஆட்களாலும் நிறம்பி இருந்தது. நந்தினியும் கூட அங்கேதான் இருந்தாள்.

 “என் பேரன இப்படி நிக்க வச்சிட்டீங்க…” என்று கமலா, செல்வியை வசைபாடியபடி அமர்ந்திருந்தார்.

ரத்னாவிற்கோ எப்படியேனும் மகளின் திருமணம் நல்லபடியாய் நடந்திட வேண்டும் என்று இருக்க, அவரால் ஒரு நிலையில் இருந்திட முடியவில்லை.

ஜெகந்நாதனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவருக்கு நன்குத் தெரியும். இருந்தும் நிரஞ்சனியை காரணம் காட்டி அவன் சம்மதித்து நின்றது சந்தோசமே. சொல்லப்போனால் நந்தினி, ஜெகந்நாதன் திருமணம் உறுதியான பின்னே தான் ரமேஷ் நிரஞ்சனி திருமணம் உறுதியானது.

அப்படித்தான் பேசினர் ரமேஷ் வீட்டினர். அதாவது அப்படி பேச வைத்திருந்தார் நந்தினியின் அப்பா.

அவருக்கு மகளை எங்கோ கட்டி கொடுப்பதை விட, இதோ இங்கே சொந்தத்தில், ஆள் அம்பு நிறைய இருக்கும் குடும்பத்தில், அதுவும் பார்க்க கண்ணுக்கு லட்சணமாய், கம்பீரமாய், வசதியாய் இருக்கும் ஜெகாவிற்கு கொடுப்பது என்பது மிகவும் திருப்தியாய் இருந்தது. ரமேஷின் அப்பாவும், நந்தினியின் அப்பாவும் உடன் பிறந்தவர்கள் ஆகிற்றே, எப்படியோ இந்த திருமணம் நடந்தால், அந்தத் திருமணம் என்கிற வகையில் பேச்சினை விட, நிரஞ்சனியை முன்னிட்டே ஜெகா சம்மதம் சொன்னதும் அனைவருக்கும் தெரியும்.

இருந்தும் திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால், யாரால் என்ன செய்ய முடியும். வாழ்வும் நல்லபடியாய் இருக்கும் என்றே இத்தனை தூரம் இதனை கொண்டு வந்தது. நந்தினி படிக்கவேண்டும் என்று சொன்னதற்குக் கூட, அதை இதை சொல்லி மிரட்டி வாய் மூட வைத்துவிட்டார்.  

ஆனால் இப்போதோ நந்தினி அனைத்தையும் மீறி, ஊரை விட்டே போகக் கிளம்புவாள் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆம்! நந்தினி ஊரை விட்டுத்தான் கிளம்பிட எண்ணி இருந்தாள்.

சென்னையில் படிப்பதற்கு இடம் கிடைக்கவுமே, அவளது எண்ணம் இதுவாகத்தான் இருந்தது. ஜெகாவிடம் மட்டும் சொல்லிட வேண்டும் என்பது அவளது உறுதி. அவளைப் பொறுத்தமட்டில் அவனை நோகடிப்பது எவ்விதத்திலும் சரியானதாய் இல்லை என்று அவனிடம் சொல்ல எண்ணி, இப்படி மாட்டிக்கொண்டாள்.

ஆனால் நந்தினிக்கு தெரியவில்லை, அவளின் அப்பா அத்துனை சீக்கிரம் அவளை விடுவிப்பாரா என்று.

ஜெகா பாண்டியன் அருகில் அமர்ந்திருக்க, பொறுத்தது போதும் என்று கமலா தான் “ஆரம்பத்துலயே ஒரு சம்பந்தம் பேசுறப்போ அதை வச்சு இன்னொரு சம்பந்தம் பேசக்கூடாதுன்னு சொன்னேன். யார் கேட்டா என் பேச்சை.. இப்போ பாருங்க…” என்று ஆரம்பிக்க,

“ஆச்சி…” என்றான் ஜெகா.

“நீ சும்மா இரு.. நான் நந்தினி மேல தப்பு சொல்லல. பெரியவங்க எல்லாத்தையும் யோசிக்கணும். அந்த பொண்ணு படிக்கணும்னு சொல்லிருக்கு, படிக்க வச்சிருக்க வேண்டியதுதானே. இப்போ பாரு மீறி நடந்திருச்சு. இது யாருக்கு அசிங்கம். ரெண்டு குடும்பத்துக்கும் தானே…” என,

“இந்த கல்யாணம் நடக்கும்…” என்றார் நந்தினியின் அப்பா.

அடுத்த நொடி நந்தினி திகைத்துப் போய் ஜெகாவைப் பார்க்க, அவனோ “நந்தினிக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாளே…”  என,

“அவளை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு மாப்பிள்ள.. நாளன்னைக்கு ஒரு முஹூர்த்தம் வருது. அன்னிக்கே கல்யாணம் வைக்கிறோம்.. என்ன சம்பந்தி..?” என்று பாண்டியனைப் பார்க்க,

அவரோ என்ன சொல்வது என்பதுபோல் மகன் முகம் பார்த்தார்.

நிரஞ்சனி, ரமேஷ் இதனை எல்லாம் கொஞ்சம் கலவரமாய்த் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். எங்கே தங்களின் திருமணத்திற்கும் சேர்த்து வில்லங்கம் வந்திடுமோ என்று அவர்களின் பயம்.

நிரஞ்சனிக்கு, நந்தினி தன் அண்ணனுக்கு வேண்டாம் என்று தோன்ற ரமேஷிடம் மெல்ல கேட்டாள் “இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியுமா?” என்று.

“நானே உன்னை நிச்சயம் பண்ணத்தான் சென்னைல இருந்து வந்தேன்.. இங்க நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது நிரு…” என்றவன்

“நீ டென்சன் ஆகாத. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்…” என்று உறுதி சொல்ல, நிரஞ்சனிக்கு அப்போதும் தைரியம் வரவில்லை.

அம்மாவின் முகத்தைப் பார்க்க, அவரோ கலங்கிப் போய் நின்றிருந்தார்.

“என்ன சம்பந்தி மாப்பிள்ள என்ன சொல்லப் போறார்.. நீங்க சொல்லுங்க உங்க முடிவை…” என்று ரமேஷின் அப்பாவும் சேர்ந்து பேச,

“நான் படிக்கணும்.. எனக்கு இந்த கல்யாணம் வேணாம்…” என்று அனைவரையும் விட சத்தமாய் பேசினாள் நந்தினி.

அவளும்தான் எத்தனை நேரம் மௌனமாய் இருப்பது?!

“ஏய் வாய மூடு…” என்று அவளின் அம்மா அதட்ட,

“இங்க பாரு.. நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு அதைவிட்டு அது இதுன்னு சொல்லிட்டு இருந்த…” என்று நந்தினியின் அப்பா மிரட்டுவது போல் பேச,

“எங்க வீட்ல வச்சு இப்படியெல்லாம் பேச வேணாம்…” என்றான் ஜெகந்நாதன்.

பாண்டியனும் “இங்க பாருங்க.. கட்டாய கல்யாணம் எல்லாம் ஒத்து வராது.. அந்த பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படுது படிக்கட்டுமே…” என்றார்.

“சரி சம்பந்தி… நீங்க சொல்ற மாதிரியே அவ படிக்கட்டும்.. ஆனா அவ படிப்பு முடிச்சு வர்ற வரைக்கும் நீங்க உங்க பையனுக்கு வேற பொண்ணு பார்க்காம இருப்பீங்களா? சொல்லுங்க? பண்ண நிச்சயம் பண்ணதாவே இருக்கட்டும்.. நாங்க காத்திருக்கோம்னு உறுதி சொல்வீங்களா?” என்று நந்தியின் அப்பா கேட்க,

‘என்ன இந்தாளு இப்படி பேசுறான்…’ என்று தான் பார்த்தனர் அனைவரும்..

“ஏங்க விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணி வச்சு என்னங்க செய்யப் போறீங்க?” என்று ஜெகாவின் உறவில் ஒருவர் கேட்க,

“எல்லாரும் விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு விதி இல்லையே.. கல்யாணத்துக்கு அப்புறம் கூட விருப்பம் வரும்…” என்றவர்

“சொல்லுங்க மாப்பிள்ள உங்க பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு உறுதி சொல்லுங்க. நான் நந்தினியை கட்டாயம் செய்யல. அவளுக்கு எப்போ விருப்பமோ அப்போ கல்யாணம் வச்சுக்கலாம்…” என, ஜெகா தன் அப்பாவை முறைத்தான்.

அவரோ “அதெல்லாம் தோது வராது…” என,

“அப்போ குறிச்ச முஹூர்த்ததுல கல்யாணம் நடக்கணும்…” என்று அவரும் பேச,

“அதெப்படி உங்க பொண்ணுதான் கிளம்பிப் போக ரெடியா நிக்குதே…” என்றார் கமலா.

“நான் கால உடைச்சு உக்கார வைக்கிறேன்…” என்று நந்தினியின் அப்பா பேச,

“போதும்…” என்று எழுந்து நின்றுவிட்டான் ஜெகா.

அவனின் தொனியும், அவன் எழுந்து நின்ற தோரணையும் அனைவரையுமே வாய் மூடச் செய்ய,

“நந்தினி அவளோட முடிவை, அவளோட விருப்பத்தை சொல்லிட்டா. அதை நம்ம எல்லாருமே மதிக்கணும். அதே நேரம் நானும் என்னோட முடிவை, என்னோட விருப்பத்தை சொல்லிடுறேன். நான் ஒரு பொண்ண விரும்புறேன்… எனக்காக அவ இங்க என்னைத் தேடி வந்திருக்கா… அவளோட இத்தனை வருசக் காத்திருப்புக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லித்தான் ஆகணும்…” என்று சொல்ல,

அங்கே அப்படியொரு அதிர்ச்சி, அமைதி எல்லாம்..

செல்வியும் சரி, பாண்டியனும் மகன் பட்டென்று இதனை சபையில் போட்டு உடைப்பான் என்று நினைக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

நந்தினி பிரச்சனைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டுத்தான் மகன் தன் காதலை வெளியில் தெரியப்படுத்துவான்  என்று நினைத்திருக்க, ஜெகாவோ அனைத்தையும் சொல்லிவிட்டான்.

“என்ன மாப்பிள்ள புது புது கதையா சொல்றீங்க…” என்று நந்தினியின் அப்பாவும் எழுந்து நிற்க,

“புது கதை எல்லாம் இல்லை…” என்றவன் ஓரளவு நடந்ததைச் சொல்ல, நந்தினிக்கோ அப்பாடி என்றதொரு நிம்மதி தோன்றியது.

ரத்னாவோ இதனைக் கேட்டு ஆடிப்போய்விட்டார். என்ன இதெல்லாம் என்று செல்வியைக் காண “எனக்கே நேத்து நைட் தான் க்கா தெரியும்…” என்று செல்வி சொல்ல,

“கடைசில பாலா போறது என் பொண்ணு வாழ்க்கைத் தான்…” என்று ரத்னா அழ,

“அக்கா அதெல்லாம் ஒன்னும் ஆகாது தைரியமா இருங்க…” என்று ஆறுதல் சொல்ல,

ஜெகாவோ “இதை எல்லாம் நான் இங்க சொல்லணும்னு எதுவும் இல்லை. ஆனா என்ன, இந்த கல்யாணம் நின்னா, அதுக்கு காரணம் நந்தினின்னு எல்லாரும் சொல்வாங்க. அதுல எனக்கு உடன்பாடு இல்லை. நந்தினி இன்னிக்கு இப்படி செய்யாம இருந்திருந்தா கூட நான் இன்னிக்கு எல்லார்க்கிட்டயும் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு தான் இருந்தேன்..” என்று பேச பேச, அங்கே பேரமைதி.

ரமேஷ் நிரஞ்சனி முகத்தைப் பார்க்க “எனக்கு தெரியாது எதுவும்…” என்றாள் பாவமாய்.

“ஓஹோ…! அப்போ தப்பு எங்க பொண்ணு மேல மட்டுமில்ல…” என்ற நந்தினியின் அப்பா

“என்னண்ணா.. ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் முடிவு பண்ணோம். ஒன்னு இல்லைன்னு ஆகுது.. இன்னொண்ணு?!” என்று கேட்க கேட்க,

“அதுக்கு நான் பதில் சொல்றேன் சித்தப்பா…” என்றான் ரமேஷ்.                                           

Advertisement