Advertisement

                                                இதயத்திலே ஒரு நினைவு – 16

மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் அவனோ நேரில் தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ரேகாவிடம் பேசினாலோ “இங்கபாரு நீ முடிவா இருந்தா நேராவே சொல்லிடு…” என்றாள்.

நேராய் பார்த்து அவனிடம் எப்படி நீ எனக்கு வேண்டாம் என்று சொல்ல முடியும்.. அதுவும் மைதிலியால்?!

ஜெகாவோ அடிக்காடி போன் செய்துகொண்டே இருந்தான்.

பேசாமல் இருக்கலாம் என்றாலும் முடியவில்லை. ‘நீ போனை எடுக்கலன்னா நான் நேரா உங்க வீட்டுக்குத் தான் வருவேன்…’ என்று ஜெகா மெசேஜ் அனுப்ப, வேகமாய் அதனை அழித்துவிட்டாள் மைதிலி.

 போனை ஆப் செய்து வைத்துவிடலாம் என்றாலோ, அப்பா அம்மா கேள்வி கேட்பர்.

யாருக்கு என்ன பதில் சொல்வது?!

நிச்சயம் இந்த காதல் எல்லாம் வீட்டினில் தெரிந்தால், அதுவும் ஏற்கனவே இப்படியொரு பிரச்சனை நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் தெரிந்தால் அவ்வளவு தான். அப்பா என்ன செய்வார் என்றே தெரியாது.

அதற்குமேல் அம்மா..  

இதெல்லாம் நினைத்தாலே மைதிலிக்கு மனம் பேதலித்தது.

என்ன செய்வது?!

ஆனாலும் ஏதேனும் செய்து எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வந்திட வேண்டும் என்ற முடிவில் இருந்தவளுக்கு எப்படி தைரியம் வந்ததோ, ஜெகாவை நேரில் சந்தித்து பேசிடலாம் என்பதை செயல்படுத்தத் தொடங்கிவிட்டாள்.

எப்படி?!

ஜெகாவிற்கே மைதிலி அழைத்து “நாம நேர்ல பேசலாம்…” என,

நேரில் என்றால் எப்படியும் அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நிறையவே இருக்க ஜெகந்நாதன் மிக மிக சந்தோசமாய் சரி என்றான்…

 —————-

 

மைதிலி பேச பேச, குமரனுக்கும் சரி சுகுணாவிற்கும் சரி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மகள் மனதில் இத்தனை இருக்குமா என்பதைத் தாண்டி, இத்தனையை சங்கதிகளை, இத்தனை ஆண்டுகளாய் மனதினில் மறைத்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறாளா என்பதே பெரிதாய் இருந்தது.

எப்படி முடிந்தது?!

தங்களைப் பார்த்து பேசுகையில், சிரிக்கையில் ஒன்று கூட வெளிப்படுத்தாது எப்படி மைதிலியால் இயல்பாய் இருப்பது போல் இருந்திட முடிந்தது?

சுகுணாவிற்கு மனது கனத்துப் போனது தன் மகளை எண்ணி.

“எப்படி மைத்தி இப்படி எல்லாத்தையும் மறைக்கத் தோனுச்சு?” என்று தாள முடியாது கேட்டேவிட்டார்.

“ம்மா ப்ளீஸ்….” என,

“மைத்தி…” என்ற குமரன் “இப்போ நாங்க என்ன செய்யணும்?” என்று கேட்க,

“அப்பா…!” என்றாள் வியந்து பார்த்து.

“சொல்லும்மா என்ன செய்யணும்? நீ நேத்து அழும் போதே நான் கொஞ்சம் நினைச்சேன்… அதேபோல நீ இங்க பிடிவாதமா வரும்போதும் மனசுல ஏதோ தோணிச்சு… நீயே எதுவும் சொல்லுவியோன்னு தான் இங்க நாங்க வந்ததே…” என,

“ஓ…! இப்போ மக சைட் சாஞ்சாச்சு… நான் மட்டும் தனி…” என்று சுகுணா முறைக்க,

“என்ன சுகி நீ…” என்றவர் “அவ முதல்ல மனசு விட்டு எல்லாம் பேசட்டும்…” என்றார் மனைவியை அமைதியாய் இரு என்று சொல்லி.

மைதிலி இருவரையும் மாறி மாறி பார்க்க, “சொல்லு மைத்தி.. நாங்க இப்போ என்ன செய்யணும். உன் மனசுல என்ன இருக்கோ சொல்லு. இனியும் நீ எல்லாத்தையும் உனக்குள்ளயே அடைச்சு வைக்கனும்னு இல்லை…” என்று குமரன் பேச, அப்பாவின் பேச்சு மகளுக்கு ஒரு அசாத்திய தைரியத்தைக் கொடுத்தது.

நிஜம்தானே… பெற்றோர்கள் கொடுக்கும் தைரியம் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஒரு பெரும் துணிவு கொடுக்கும் தானே.

மைதிலி அன்றிலிருந்து இன்று வரைக்கும் நடந்த அனைத்தையும் சொல்ல, இத்தனை நடந்திருக்கிறதா என்று இருந்தாலும், ஒருவகையில் ஜெகந்நாதன் மீது குமரன், சுகுணா இருவருக்குமே ஒருவித மதிப்பு தோன்றியது.

மைதிலி வந்ததுமே அவன் தடுமாறவில்லை..

அவனின் குடும்பத்திற்காகத்தான் அவன் நின்றான்..

என்ன இறுதியில் காதல் ஜெயித்துவிட்டது.. அதுதான் நிஜம்..!

“அப்போ இந்த கமலாம்மா கூட எங்கக்கிட்ட சொல்லல…” என்று சுகுணா சொல்ல,

“ம்மா பாட்டிக்குத் தெரியும்னே எனக்கு இப்போ தான் தெரியும்…” என்றவள் “அவங்க என்ன செய்வாங்க…?” என்றாள்.

“என்னவோ போ…” என்றவர் “ஆமா அந்த தம்பி வீட்ல சம்மதிக்கலைன்னா என்ன செய்வ நீ?” என,

“ம்மா ப்ளீஸ்…” என்றாள் மைதிலி.

“இல்ல மைத்தி நம்ம எல்லாத்துக்கும் தயாராத்தானே இருக்கணும்…” என்று குமரன் சொல்ல,

“அப்… அப்போ உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?!” என்றாள் அப்பா அம்மா முகத்தை மாறி மாறி பார்த்து.

“நீ இவ்வளோ வருசமா மனசுல வச்சுக்கிட்டே புழுங்கிட்டு இருந்ததுக்காகவாது, உன்னோட உணர்வுகளுக்கு நாங்க மதிப்பு கொடுக்கணும் தானே…” என்றார் குமரன் மனைவியையும் ஒரு பார்வை பார்த்து.

“ப்பா…!” என்றவளுக்கு குரல் மீண்டும் உடைய,

“போதும் சும்மா சும்மா அழாத.. சகிக்கல…” என்ற சுகுணா, “நல்லவேளை காலேஜ் படிக்கிறப்போ இதெல்லாம் எங்களுக்கு தெரியலை.. இல்லன்னா எப்பவோ உனக்கு மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருப்போம். நாங்க தாத்தா பாட்டி கூட ஆகிருப்போம்…” என,

“ம்மா…” என்றாள் முறைத்து மைதிலி.

“முறைக்காத.. நியாயமா பார்த்தா நாங்க கோபப்படனும்.. ஆனா இப்படி பேசிட்டு இருக்கோம்னு சந்தோசப்படு…” என்றவர் “ஆனாலும் நீங்க இப்படி உடனே பச்சை கொடி பறக்க விட்டிருக்கக் கூடாது…” என்று கணவரையும் சாட,

“நம்ம பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. அதே போல அந்த பக்கமும் எல்லாம் சுமுகமா முடியனும். அப்படி இருந்தா தானே கல்யாணம் நல்லபடியா நடக்கும். இல்லன்னா மைத்தி நம்ம என்ன சொல்றோமோ அதை கேட்கணும்…” என்று குமரன் அவர் முடிவை சொல்ல, மைதிலிக்கு நன்கு புரிந்தது ,ஜெகா அவனின் பிரச்சனைகளை நல்லபடியாய் முடித்தால் மட்டுமே அவர்களின் திருமணம் என்று.

‘எல்லாம் நல்லதாய் நடந்திட வேண்டும்…’ என்று இறைவனை வேண்ட, சரியாய் ஜெகந்நாதன் அழைத்துவிட்டான் அலைபேசியில்.

ஜெகாவின் அழைப்பு என்றதுமே அப்பா அம்மா இருவரையும் மைதிலி பார்க்க, “என்ன பாக்குற.. எடுத்து பேசு…” என்று சுகுணா அப்போதும் அரட்டினார்.

“சுகி… நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்…” என்று குமரன் எழுந்து செல்ல, “எனக்குமே குளிக்கணும்…” என்று சுகுணாவும் எழுந்து சென்றுவிட்டார்.

அதன்பின்னர் தான் மைதிலி அலைபேசியை எடுத்து பேச “என்ன மைத்தி போன் எடுக்க இவ்வளோ நேரம்…” என்று ஜெகா கேட்க,

“அப்பா அம்மா வந்துட்டாங்க…” என்றவள் “அங்க என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?” என்றாள்.

“ம்ம்ம் பிரச்சனை அப்படின்னு நினைச்சா பிரச்சனை தான். அதையே நமக்கு சாதகமா எப்படி மாத்தணும்னு யோசிச்சா பிரச்சனை இல்லை…” என்றவன் “அங்க?” என,

“இங்க எதுவும் பிரச்சனை இல்லை… இப்போதான் வந்தாங்க…” என்றவள் இப்போதைக்கு அவனிடம் எதையும் சொல்லி மேலும் டென்சன் செய்ய வேண்டாம் என்று நினைத்தாள்.

“அப்படியா?!” என்றவனின் பேச்சு யோசனையில் இருப்பது போலிருக்க,

“நீங்க சொல்லுங்க என்னாச்சு?” என்றாள் மீண்டும்.

ஜெகா நடந்ததை சொல்லி “நந்தினியைப் பார்க்க போயிட்டு இருக்கேன்…” என,

“ம்ம்ம்…” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“லூசு…” என்றவன் மெதுவாய் சிரிக்க,

“சிரிச்சது போதும்.. நல்லபடியா எல்லாம் முடியனும்…” என்றவள் “நீங்க கொஞ்சம் பார்த்து எதுவும் பேசுங்க…” என,

“இனி யோசிச்சு பேசுறதுக்கு எல்லாம் நேரமில்லை.. தேவையும் இல்லை.. எல்லாருக்கும் அவங்கவங்க சுயநலம் இருக்கும்போது நானும் அப்படி யோசிக்கிறதுல தப்பில்லன்னு தோணுது..” என்றவன் “நீ ரிலாக்ஸா இரு…” என்று வைத்துவிட்டான்.

அதற்குள் நந்தினி சொன்ன இடமும் வந்திட, மீண்டும் நந்தினிக்கு அழைத்து பேச “மாமா ரைட்ல ஒரு மாடி வீடு இருக்கு… மேல வாங்க…” என்றாள்.

“ம்ம்ச்…” என்றவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

இருந்தும் இப்போதைக்கு நந்தினியின் இந்த செயல் மட்டுமே அவனுக்கு பெரும் ஆறுதல் கொடுத்திருக்கிறது.

நந்தினி சொன்னதுபோல ஜெகாவும் அங்கே அந்த வீட்டிற்குச் செல்ல, அங்கே வீட்டில் யாரும் குடியிருப்பதற்கான அடையாளம் இல்லை. வீடு காலியாகவே இருக்க, “நந்தினி…” என்று குரல் கொடுத்தான்.

“மாமா….” என்று வந்தவளுக்கு பின்னே, அவள் வயதில் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் வர, குழப்பமாய் பார்த்தான் ஜெகா.

“மாமா முதல்ல என்னை மன்னிச்சிடுங்க மாமா…” என்று நந்தினி கரம் குவித்தவள், வேகமாய் அவன் காலைப் பிடிக்க வர,

“ஏய் ஏய் நில்லு…” என்று விலகி நின்றவன் “குடும்பத்துக்கே இதுதான் பழக்கமா…” என்று முறைக்க,

“மாமா…” என்றாள் அதிர்ந்து.

“ஷ்…! முதல்ல என்ன விசயம்னு சொல்லு நந்தினி…” என்றவன் “இவங்கல்லாம் யாரு..? இங்க ஏன் இருக்க?” என,

“இவங்கல்லாம் என் பிரண்ட்ஸ் மாமா…” என்றவள் “இது இவளோட வீடுதான்…” என்றும் ஒருத்தியை காட்டி சொல்ல

“ம்ம் அப்புறம்…” என்றான் மேலே சொல் எனும்விதமாய்.

“மா… மாமா உங்களுக்கே தெரியும்தானே நான் டென்த், ட்வெல்த்ல  மாவட்டத்துல முதல் ரேன்க் வந்தேன்னு…” என்று நந்தினி ஆரம்பிக்க,

“ஆமா…” என்றான் இப்போது இது எதற்கு என்று கேட்கும் விதமாய்.

“காலேஜ்ல கூட நான் தானே மாமா யுனிவர்சிட்டி பார்ஸ்ட்…” என, ஜெகா அமைதியாகவே அவளைப் பார்த்தான்.

 “ப்ளீஸ் மாமா.. நான் மேற்கொண்டு படிக்கணும்.. எங்க வீட்ல எவ்வளவோ சொன்னேன் யாருமே கேட்கல… உங்கக்கிட்ட இதெல்லாம் முன்னமே சொல்லனும்னு நினைச்சேன் ஆனா எங்கம்மா என்னை உங்களோட பேசவே விடல….” என,

“சரி இப்போ நான் என்ன செய்யணும்?” என்றான் ஜெகா.

“ப்ளீஸ்… இப்போ இந்த கல்யாணம் வேணாம் மாமா… ப்ளீஸ்…” என்றவளுக்கு கண்களில் நீர் அப்படி வழிந்தது.

“இதெல்லாம் இப்போ சொல்ற நீ…” என,

“எனக்கு வேற வழியே தெரியலை மாமா…”

“இப்போ கல்யாணத்த நிறுத்தி  அடுத்து நீ என்ன செய்ய போற…” என,

“எ.. எனக்கு சென்னைல பெரிய காலேஜ்ல பிஜி பண்ண மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு…” என்றவள் அதன் விபரங்களையும் அவனிடம் காட்ட,

“என் பிரண்ட்ஸ் தான் எல்லா ஏற்பாடும் பண்ணாங்க…” என்றும் சொல்ல, ‘பரவாயில்லையே…’ என்று தோன்றியது அவனுக்கு.

ஆம்! நந்தினி சொல்வது நிஜமே.. நந்தினி அழகி மட்டுமல்ல.. படிப்பாளியும் கூட. நன்றாய் படிப்பாள் என்பதை விட மிக நன்றாய் படிப்பாள். மேற்கொண்டு படித்திடவே அவளுக்கு ஆசை. ஆனால் வீட்டிலோ வேறு முடிவு எடுத்திட, இத்தனை நாட்கள் தவியாய் தவித்துப் போனாள்.

இதுதான் விதியோ என்று இருந்த நேரத்தில், அவளின் நட்புக்கள் சரியாய் கை கொடுத்து உதவிட இதோ அவளுக்கு மேற்படிப்பு படிக்க இடமும் கிடைத்துவிட்டது.

அதன்பின்னர் தான் அவள் ஒரு முயற்சி எடுத்துவிடுவோம் என்று துணிந்து இப்படியொரு செயலில் இறங்கிவிட்டாள்.  

 

இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் மேற்கொண்டு அவளின் நட்புக்களிடம் விபரங்கள் கேட்க, அனைத்திற்கும் அவர்கள் தெளிவாகவே விடையளிக்க,

“ப்ளீஸ் மாமா… இந்த கல்யாணம் வேணாம்… நான் படிக்கணும்.. எனக்கு இப்போதைய எண்ணமெல்லாம் படிப்பு மேல மட்டும் தான்… அப்படியே பிடிவாதமா கல்யாணம் நடந்தாலும் கூட என்னால உங்களோட சந்தோசமா வாழ முடியாது…” என,

“நீ எப்படி சந்தோசமா வாழாம போறன்னு நாங்களும் பாக்குறோம்…” என்றபடி வந்து நின்றார் நந்தினியின் அப்பா.

ஜெகந்நாதனுக்கே அதிர்ச்சியாகிப் போனது..

நந்தினி பயந்து போய் பார்க்க, நந்தினியின் அப்பாவோடு அவர்கள் உறவினர்களும், உடன் ஜெகாவின் அப்பாவும், அவன் பக்கத்து ஆட்கள் சிலரும் நிற்க, அங்கே க்ஷணத்தில் சூழல் மாறிப்போனது.          

            

 

            

 

Advertisement