Advertisement

                இதயத்திலே ஒரு நினைவு – 15

ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது.

அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம் அவனுக்குத் தெரியும் மைதிலிக்கு தன்னை பிடிக்கும் என்று. எப்படியும் பேசி அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு நிரம்பவே இருந்தது.

ஆனால் மைதிலி தான் பேசும் சந்தர்ப்பத்தைக் கூட கொடுக்கவில்லையே.

ஒவ்வொரு முறையும் அவனே தானே முயன்று முயன்று முன்னே வருகிறான்.

அவளோ விருப்பம் இருந்தாலும், வேண்டாம் என்பதில் திண்ணமாய் இருக்க, இப்போதோ ஜெகாவிற்கு பொறுமை போய்விட்டது.

அவன் ஆசையாய் பேசுகையில், அவள் இப்படி பேசினால், அவனும் தான் என்ன செய்வான்?!

மைதிலி பேசாது அமைதியாகவே இருக்க, “இங்க பார் மைத்தி.. நான் உன்ன நேர்ல பார்த்து பேசணும். அவ்வளோதான்…” என்று ஜெகா உறுதியாய் சொல்ல,

“என்னால முடியாது…” என்றாள் அவளும் அதே உறுதியில்.

“ஏன் முடியாது?”

“எதுக்கு வரணும்?”

“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா? என்ன டி விளையாட்டு காட்டுறியா?” என்ற ஜெகாவின் குரலில் கோபம் கூடிக்கொண்டே போக,

“இப்போ நீங்கதான் பேசிட்டே இருக்கீங்க. நான் பேசவும் கூட எதுவுமில்லைன்னு சொல்றேன்…” எனும்போதே மைதிலியின் குரல் உடையத் தொடங்க, அதை மறைக்க வெகுவாய் முயன்றாள்.

ஜெகந்நாதனோ அதை சரியாய் கண்டுகொண்டான்…!

“இது ஒன்னு போதாதா மைத்தி…” என, மைதிலிக்கு தன்மீதே கோபமாய் வந்தது.

இந்த ஆசை கொண்ட மனதை என்ன சொல்லி அடக்குவது?!!


 

 

மைதிலிக்கு கொஞ்சம் பதற்றமாய் இருந்தது. ஜெகா, அவளோடு இருந்தவரைக்கும் இருந்த தைரியம், இப்போது அவன் கிளம்பியதும் கொஞ்சம் ஆட்டம் கண்டது நிஜம்.

அதிலும், அங்கே என்ன சூழலோ தெரியாது?!

ஒரே நேரத்தில், நந்தினியும் அவனின் அம்மாவும் அவனை அழைத்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் எதுவோ பெரிய பிரச்சனையாய்த்தான் இருந்திட வேண்டும்.

ஜெகந்நாதனை எண்ணி பாவமாய் இருந்தது அவளுக்கு.

காதலில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான போராட்டம்.

இவர்களதில், காதலிப்பதே போராட்டமாய் இருந்தது.

இப்போதோ மற்றொன்று..

ஜெகந்நாதன் கிளம்புகையில் கூட மைதிலியிடம் “எது நடந்தாலும், நீ பின் வாங்கிடாத மைத்தி…” என, அவனின் கண்களில் தான் எத்தனை இறைஞ்சல் இருந்தது.

“எது நடந்தாலும், நம்ம சேர்ந்தே கடந்து வரலாம்… சேர்ந்தே சந்திக்கலாம்.. இப்பவும் சொல்றேன் எது நடந்தாலும், என்கிட்ட நீங்க மறைக்காம இருக்கணும் அதுவே போதும்…” என்று மைதிலியும் சொல்ல, ஜெகா மெதுவாய் புன்னகைத்து “என்னது நான் உன்கிட்ட மறைப்பேனா?” என,

“நீங்க சிரிக்கிறதுலயே தெரியுது… மொத்த பழியும் தூக்கி உங்கமேல போட்டு, எல்லார்க்கிட்டயும் பேச்சு வாங்கனும்னு முடிவு பண்ணிருப்பீங்க இப்பவும்…” என்று மைதிலி சொல்ல,

“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை மைத்தி…” என்றான் ஜெகாவும்.

ஆனாலும் அவன் மனதில் எண்ணியது இதுதான்.

அதை மைதிலி சரியாய் ஊகித்து சொல்ல, ஜெகந்நாதனுக்கு கொஞ்சம் பெருமையாகவும் கூட இருந்தது அவளது பேச்சை கேட்கையில். 

“சரி.. நீங்க பார்த்து போயிட்டு வாங்க…” என்று தனக்கும் தைரியம் வரவழைத்து, ஜெகந்நாதனையும் தைரியமாய் அனுப்பி வைத்தாள் மைதிலி.

துணிந்து தான் மைதிலி இப்போது இந்த முடிவிற்கு வந்திருந்தாள்.

காலத்திற்கும் அவளால் இந்த சுமையை மனதிலேயே தாங்கிட முடியும் என்று தோன்றவில்லை.

வேறொருவருடன் திருமணம்?!

இதை நினைக்கும் போதே, சாகும் எண்ணம் தான் அவளுக்கு வந்தது. மனதை கல்லாக்கிக்கொண்டு இன்னொரு வாழ்வு வாழும் யோசனை எல்லாம் அவள் செய்திட கூட விரும்பவில்லை.

சாகும் அளவு போவதற்கு, ஒருமுறை பிடித்தவனுடன் வாழ, முயன்று தான் பார்த்துவிடுவது என்று தான் அவள் மனது அடித்துக்கூறியது.

அதிலும் ஜெகா வந்து பேச பேச, அவளது இம்முடிவு உறுதியாகிப்போனது. இப்போது ஜெகந்நாதன் கிளம்பிச் செல்லவும், மீண்டும் லேசாய் மனது கவலையுற,

‘நோ நோ மைத்தி… இனி தான் நீ தைரியமா இருக்கணும். உன்னோட தைரியம் தான் ஜெகாவுக்கும் தைரியம் கொடுக்கும்…’ என்று அவளின் அறிவு அறிவுரை சொல்ல, அதனையே கெட்டியாய் பிடித்துக்கொண்டாள்.

அங்கே ஜெகாவோ, மதுரை நோக்கி வேகமாய் சென்றுகொண்டு இருக்க, செல்வியும் நந்தினியும் மாறி மாறி அழைத்துக்கொண்டு இருந்தனர். பைக்கை விட்டுவிட்டு காரில் தான் சென்றுகொண்டு இருந்தான்.

வருகிறேன் என்று சொல்லியும் கூட இருவரும் சும்மா இருப்பதாய் காணோம்.

“ம்ம்ச் நான்தான் வர்றேன் சொன்னேன்ல…” என்று நந்தினியிடம் ஜெகா கத்தியே விட்டான்.

என்னவென்று சொல்லாமல், பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தால், மனிதனுக்கு கடுப்பாகும் தானே.

அதைக்காட்டிலும் செல்வி..

“ஜெகா… சீக்கிரம் வாயேன்..” என்று நூறு முறைக்கும் மேலே சொல்லியிருப்பார்.

“ம்மா… ஒன்னு என்னன்னு சொல்லுங்க. இல்லை கால் பண்ணாதீங்க.. இல்லையோ நான் வரவேயில்லை…” என்று கடிந்து பேச, அதன் பின்னே தான் செல்வியும் அமைதியாய் இருக்க, முதலில் ஜெகந்நாதன் சென்றது பெரியவர்கள் இருந்த இடத்திற்குத் தான்.

திருமண ஆடைகள் எல்லாம் எடுத்து முடித்துவிட்டு, மதிய உணவு உண்பதற்கு என்று ஹோட்டலில் இருந்தார்கள்.

காரை நிறுத்தியவன், வேகமாய் உள்ளே செல்ல செல்வியும் ரத்னாவும் சற்றே பதற்றத்தோடு இவனை எதிர்கொள்ள

“என்னாச்சு?” என்றான் அவனும் அதே பதற்றம் குறையாது.

“ந.. நந்தினியை காணோம் டா…” என்று செல்வி சொல்ல,

“எங்களோடவே தான் இருந்தா ஜெகா… ஆனா இப்போ காணோம்…” என்று ரத்னாவும் சொல்ல,

“அப்பா, மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க எல்லாம் எங்க?” என்றான் ஜெகந்நாதன் கொஞ்சம் நிதானமாகவே.

“அவங்க எல்லாம் நந்தினியை தேடி போயிருக்காங்க. இங்க நாங்க கொஞ்ச பேர் மட்டும் தான் இருக்கோம்..” என்ற ரத்னா, “மேல நாலு ரூம் போட்டிருக்கோம். நிரஞ்சனி மேல இருக்கா.. நந்தினி அம்மா ஒரே அழுகை…” என,

“சரி மேல போய் பேசிப்போம்…” என்றவன் முன்னே நடக்க, பெண்கள் இருவரும் அவனோடு வந்தனர்.

ஜெகந்நாதனை பார்த்ததும், நந்தினியின் அம்மா பெருங்குரல் எடுத்து அழ “என்ன நடந்தது..?” என்றான் அவரிடம் நேரடியாக.

“எங்களோட தான் மாப்பிள்ள இருந்தா. ஹோட்டலுக்கு வந்தோம்… திடீர்னு போன் வந்தது. கேட்டதுக்கு, நீங்க இங்கதான் பக்கத்துல இருக்கீங்கன்னும், அவளை கூப்பிடுறீங்கன்னும் சொன்னா.. சரின்னு தான் அனுப்பி வச்சோம்.. இப்போ வரைக்கும் வரல… போன் போட்டால என்னை தேடாதீங்கன்னு சொல்றா…” என்றவர் மீண்டும் அழ,

ஏனோ ஜெகாவிற்கு அந்த நேரத்தில் நந்தினியை காண்பித்துக் கொடுக்கும் எண்ணம் வரவில்லை.

எப்படியோ ஒன்று, ஏதோ ஒரு வகையில் அவள் தனக்கு நன்மையே செய்திருக்கிறாள் என்று பட,

“அப்பா ஏன் இதை எனக்கு சொல்லல…” என்றான் செல்வியிடம்.

“நந்தினி கிடைச்சிட்டா கூட்டிட்டு வந்திடலாம்னு தான்…” என்று ரத்னா இழுக்க, இதில் வேறெதுவோ இருப்பது போல் இருந்தது ஜெகாவிற்கு.

“என்கிட்டே எதுவும் மறைக்கிறீங்களா?” என்று ஜெகா பொதுவாய் அனைவரையும் பார்த்துக் கேட்க,

“மாப்பிள்ளை….” என்று ஜெகாவின் காலில் விழுந்துவிட்டார் நந்தினியின் அம்மா.

“ஐயோ என்னதிது?!!!” என்று ஜெகா பதறி விலகி நிற்க,

“எது எப்படி இருந்தாலும் சரி, என்ன நடந்தாலும் சரி.. என் பொண்ண கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. நந்தினி இப்போ வரவுமே, உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க…” என்று நந்தினியின் அம்மா அழுகையோடு கெஞ்சலில் இறங்க,

‘என்னம்மா இதெல்லாம்…’ என்று செல்வியைப் பார்த்தான் ஜெகாந்நாதன்.

“நந்தினியோட அப்பா, அப்பா கால்ல விழுந்துட்டார் ஜெகா.. அவருக்கும் வேற வழி தெரியலை. சரி முதல்ல நந்தினி கிடைக்கட்டும் பிறகு மத்தது பார்த்துப்போம்னு…” என்று செல்வி சொல்லும் போதே,

“அண்ணா நீ எனக்காக எல்லாம் பார்க்காதண்ணா…” என்ற நிரஞ்சனியின் குரல் அனைவரையும் திடுக்கிடத் தான் வைத்தது.

ரத்னாவிற்கு எங்கே ஜெகா வேண்டாம் என்று சொல்லி, அதனால் மகளின் திருமணம் பாதிக்குமோ என்ற பயம் இருக்கவே செய்தது. செல்விக்கோ இதையே சாக்காய் வைத்து நந்தினியை வேண்டாம் என்று சொல்லிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும், எங்கே நிரஞ்சனிக்கு இதனால் பாதிப்பு வருமோ என்று யோசனையாய் இருக்க, அனைவருமே இங்கே ஒருவித சூழ்நிலை கைதிகள் தான்.

நிரஞ்சனியின் பேச்சு, நந்தினியின் அம்மாவை மேலும் கலங்க வைக்க, ஜெகாவோ “நீங்க யாரும் டென்சன் பண்ணிக்க வேணாம். முதல்ல நந்தினி வரட்டும். பிறகு மத்தது எல்லாம் முடிவு பண்ணலாம்…” என்றவன்

“நான் கிளம்புறேன்…” என, செல்வி அவனை கேள்வியாய் பார்த்தார்.

“ம்மா… தைரியமா இருங்க…” என்றவன், அறையை விட்டு வெளிய வர, ஒரு பெரும் ஆசுவாசம் அவனுள்.

இருந்தும், நந்தினி பாதுகாப்பாய் இருந்திட வேண்டும் என்ற எண்ணம் நிரம்பவே இருந்தது.

ஹோட்டலில் இருந்து காருக்கு வந்தவன் முதலில் நந்தினிக்கு அழைத்து என்கேவென்று கேட்க, “மாமா நீங்க எங்க இருக்கீங்க?” என்றாள் அவள்.

அவளின் குரலும், பேசும் மிக நிதானமாய் இருக்க, முன்பிருந்த பதற்றம் இல்லாதிருக்க, சரி அவள் சரியான இடத்தில் இருக்கிறாள் என்று ஜெகந்நாதனுக்கு புரிந்துபோனது.

ஜெகந்நாதன் விபரம் சொல்ல “மாமா ப்ளீஸ் எந்த காரணம் கொண்டும் நான் பேசினது யாருக்கும் தெரிய வேணாம்…” என்றவள் அவள் இருக்கும் இடத்தினை சொல்ல, ஜெகாவும் அங்கே விரைந்தான்.

ஜெகந்நாதன், நந்தினியை காணச் செல்லும் அதே நேரத்தில், மைதிலிக்கு அழைத்தும் பேச, அவன் பேசிய பிறகு தான் மைதிலிக்கு நிம்மதியானது.

“நீ தைரியமா இரு மைத்தி…” என,

“எனக்கொண்ணும் இல்லை.. நீங்க பார்த்து பண்ணுங்க எதுவும்…” என்றாள் அவனுக்கு தைரியம் சொல்லும் விதமாய்.

“எனக்கும் ஒன்னும் இல்லை… நீ உங்க அப்பா அம்மா வந்ததும் முதல்ல எல்லாத்தையும் சொல்லிடு…”

“இப்போவேவா…?!” என்றவளுக்கு சற்று வியப்பும் கூட.

“ஆமா.. ஏனா இங்க எப்படி சூழ்நிலை மாறும் தெரியாது.. ஒருவேளை நேரா நான் உங்க வீட்டுக்கு வந்தே பேசும் நிலை வரலாம்…” என,

“அப்பா அம்மா வரட்டும் நான் பேசுறேன்…” என்றாள் மைதிலியும்.

துணிந்த பிறகு யோசனைகள் எதற்கு. 

அவள் எந்த நேரத்தில் அப்படி சொல்லி முடித்தாளோ, மைதிலி ஜெகாவோடு பேசிவிட்டு வைத்த, அடுத்த கால் மணி நேரத்தில் மைதிலியின் அப்பாவும் அம்மாவும் வந்துவிட்டனர்.

முதல் நாள் மகள் அழுதது, அவர்களை வரவழைத்து இருந்தது.

அன்றைய தினம் மாலை வேளையில் தான் வருவர் என்று மைதிலி நினைத்திருக்க, இப்படி திடீரென்று வந்து நிற்பார்கள் என்று நினைக்கவில்லை.

கொஞ்சம் அதிர்ந்து தான் அவர்களைப் பார்த்தாள்.

“என்ன மைத்தி அப்படி பாக்குற?” என்று சுகுணா கேட்க,

“வர்றோம்னு சொல்லவேயில்லை ம்மா…” என்றவள் அப்பாவைப் பார்க்க, குமரனோ மகளிடம் அமர்ந்து “டல்லா இருக்க மைத்தி நீ?” என்றார் கேள்வியாய்.

“இல்லப்பா நல்லாத்தான் இருக்கேன்…”

“நல்லா இருக்கிறவ நேத்து ஏன் அப்படி அழனும்…” என்று சுகுணா ஆரம்பித்துவிட்டார்.

மைதிலிக்கும் தெரியும் எப்படியும் இந்த கேள்வி வரும் என்று.

“அதும்மா…” என,

“மைத்தி உண்மையை சொல்லு எதுக்காக நீ இங்க வந்த?” என்று நேரடியாய் குமரன் மகளிடம் கேட்டுவிட்டார்.

“ப்பா…!” என்று மைதிலி அதிர்ந்து பார்க்க,

“சொல்லு மைத்தி…” என்று சுகுணாவும் கேட்க,

“ம்மா நான் ஒருத்தரை விரும்புறேன்.. அவர் இங்கத்தான் இருக்கார்…” என்று மைதிலியும் சொல்லிட, சிறிது நேரம் வரைக்கும் அங்கே பேரமைதி.                

  

   

  

     

              

 

        

          

Advertisement