Advertisement

                     இதயத்திலே ஒரு நினைவு – 14

“மைத்தி…” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே.

என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?!

தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க…” என,

“என்ன மைத்தி என்னாச்சு உனக்கு?” என்றான் அக்கறையாக, சிறிது பதற்றமாக.

“எ.. எதுவுமில்லையே…”

“ப்ச்.. பின்ன எதுக்கு நீ காலேஜ் வரல?”

“அ… அது கொஞ்சம் முடியல…”

“என்னாச்சு?”  வேகமாய் ஜெகாவின் குரல் வந்து அவளது  செவியில் அமர,

“முடியலைன்னா முடியலை அவ்வளோதான்…” என்றவள் “எதுக்கு போன் பண்ணீங்க…?” என்றாள் கொஞ்சம் கறார் குரலில்.

அவளின் இந்த மாற்றங்கள் எல்லாம் அவன் உணராமல் இல்லை.

“நான் தேடினேன் உன்ன…”

இதை சொல்லும்போது தான் ஜெகாவின் குரலில் எத்தனை மென்மை, எத்தனை காதல், எத்தனை ஏமாற்றம்.

அது அத்தனையும் அப்படியே இம்மி பிசகாமல், மைதிலியின் மனதிற்கு உணர்த்த, கண்களை இறுக மூடித் திறந்தாள்.

“மைத்தி…”

“ம்ம்ம்…”

“பேசு மைத்தி…”

“என்ன பேசுறது?”

“எதுக்கு தேடினேன்னு கேட்க மாட்டியா நீ?”

“எதுக்கு தேடினீங்க..?” சற்று அலட்சியமாய் கேட்பதுபோல் கேட்க, ஜெகா சிரித்துக்கொண்டான்.

“எதுக்குன்னு உனக்குத் தெரியாம இருக்குமா?” சலுகையாய் ஜெகாவின் குரல் ஒலிக்க, அவனுக்கு இவள் அவனோடு பேசியதே, அவனின் காதலுக்கு சம்மதம் சொன்னதுபோல் இருந்தது.

அது இந்த மைதிலிக்கு புரியவில்லை..!

“எனக்குத் தெரியாது…” என்றாள் பட்டென்று.

“சரி விடு.. நான் உன்னை பார்க்கணும்…” என,

“எதுக்கு?” என்றாள் வேகமாய்.

“ம்ம் உங்கப்பா ட்ரான்ஸ்பர் பத்தி பேச..” என்றவன், “எல்லாம் புரிஞ்சும், என் மனசு தெரிஞ்சும் ஏன் மைத்தி நீ இப்படி பண்ற..?” என்றவனை காணவே அவள் உள்ளம் துடித்தது.

இருந்தும்… அது அவளால் இயலாது இல்லையா…

“எக்ஸாம் முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே நாங்க கிளம்பிடுவோம்…” என்றாள் ஒரு பெருமூச்சு விட்டு.

“அதான்… இனி நான் காலேஜ் எப்போவாது தான் வருவேன். ரிவியூ  டைம்ல தான் வருவேன்.. சோ காலேஜ்ல பார்க்க முடியாது. ஊருக்குள்ள இப்போ வெளிய எங்கயும் கூட அப்படி நம்ம பார்த்து பேசிக்க வேணாம்.. ஆனா இப்போ கண்டிப்பா நான் உன்னை நேர்ல பார்த்து பேசணும்…”

“நமக்குள்ள பேச என்ன இருக்கு?”

மைதிலி முயன்று, வெகுவாய் தன் மனதை கட்டுப்படுத்தித் தான் இந்த கேள்வியைக் கேட்டாள்.

ஆனால் ஜெகாவோ “மைத்தி…” என்று அதிர்ந்து அழைக்க,

“ஆமா… நமக்குள்ள ஒண்ணுமில்ல.. நேர்ல பேசவும், இனி போன்ல பேசவும் கூட… எதுவுமில்ல…” என,

“மைதிலி….!” என்று ஜெகந்நாதன் கத்தியே விட்டான்.

 


 

 

மைதிலி ஜெகந்நாதனிடம் ‘ம்ம்ச் சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்க..’ என்று சொன்னது, அப்போதும் கூட ஜெகாவிற்கு புரியவில்லை.

தான், அவளை தவறவிட்டுவிட்டோம் என்றே சொல்கிறாள் என்று புரிந்துகொண்டவன்,

“ஆமா டி ஆமா, இப்போ நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ…” என்றவன்,

“இங்க பார், முடிவா கேக்குறேன்…” என்று சொல்லிக்கொண்டே அவள் முகம் பார்க்க, மைதிலியோ, மெல்லமாய் புன்னகை செய்து அவன் முகம் பார்த்து நின்று இருந்தாள்.

அவன் வரும்போது, அவள் முகத்தில் இருந்த சோகம் இப்போதில்லை. அவள் கண்கள் கலங்கி இருக்கவில்லை. மாறாக, முகத்தில் ஒரு தெளிவும், இதழில் சிறு புன்னகையும் குடிகொண்டு இருக்க,

“என்ன?” என்றான் கண்கள் சுறுக்கி.

“நான் சம்மதம்னு சொன்னா என்ன செய்வீங்க?” இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு மைதிலி கேட்க,

“ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்துவேன்…” என்றவன் “இல்ல இல்ல… முதல்ல கொஞ்ச நாலாவது காதலிக்கணும்…” என, மைதிலி சத்தமாய் சிரித்துவிட்டாள்.

“ஏய் என்ன கிண்டல் பண்றியா நீ?!” என்றவன் அவளின் அருகே நெருங்க,

“பின்ன… நான் என்ன சொல்றேன்னு கூட புரியல.. எதுக்கு சிரிக்கிறேன்னு கூட புரியல.. இதுல வருசக் கணக்கா லவ்…” என்று சொல்ல வந்தவள், “இல்ல இல்ல… இனிமே தானே லவ் பண்ணனும்…” என,

கொஞ்சமே கொஞ்சம் ஜெகாவிற்கு அப்போது தான் விளங்குவதாய் இருந்தது.

“ஏய் மைத்தி என்ன சொல்ற நீ?” என்றவன் ஆர்வமாகவும், ஆவலாகவும், கொஞ்சம் ஆசையாகவும், இன்னும் அவளின் பக்கம் வர, மைதிலி பின்னே எல்லாம் நகரவில்லை.

“சொல்லு மைத்தி, உனக்கு சம்மதமா?” என்றவன் அவளின் விழிகள் பார்த்து கேட்க,

“ம்ம்…” என்றவள் சம்மதமாய் இமைகள் மூடித் திறக்க, அடுத்த நொடி, அவளின் இதழ்களை மூடியிருந்தான் ஜெகா, தன் இதழ்களால்.

இது மைதிலி எதிர்பார்த்தே இருந்த ஒன்று தான்.

அவனின் தோள் பகுதி சட்டையை இறுக பற்றித் தான் மைதிலியும் நின்றிருந்தாள். விலகும் எண்ணம் அவளுக்கு இல்லை.

இத்தனை வருட போராட்டம், இன்று ஒரு முடிவிற்கு வந்தது..

இருவருக்குமே ஒரு ஆசுவாசம்..

இருவருக்குமே இந்த நெருக்கம் இப்போது மிக அவசியமாய் தேவைப்பட்டது.

‘ஹப்பாடி…’ என்றதொரு உணர்வு…

உடலும் மனதும் மிகவும் தொய்ந்து போனது போல் இருந்தது.

தங்களை தாங்களே தேற்றி நிறுத்திக்கொள்ள, இப்போது மற்றவரின் அருகாமை தேவையாய் இருக்க, இந்த முத்தம், இருவருக்கும் சத்தமாய் தெம்பளித்தது நிஜம்..

மற்றவர்களோடு சண்டையிட்டு, போராடி ஜெயிப்பது வேறு. தனக்குள் தானே போராடி, உணர்வுகளை அடக்கி, நமக்குள்ளே சண்டையிட்டு, இதெல்லாம் எத்தனை கொடுமை இல்லையா?!

அதனை எல்லாம் கடந்து வந்துவிட்ட, களிப்பு இருவருக்கும் இப்போது.

மைதிலியின் முகத்தை இறுக பற்றியவன், மீண்டும் அவளின் விழிகளைப் பார்த்து “நிஜமா?!” என,

“நிஜம்ம்ம்மா…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“தேங்க்ஸ்… தேங்க்ஸ்… தேங்க்ஸ் மைத்தி…” என்றவன், அவளை இறுக கட்டிக்கொள்ள,

“நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்…” என்றாள் மென்மையாய்.

“நீங்க என்ன செய்வீங்க.. நான் தானே ஆரம்பத்துல இருந்து எல்லா குழப்பமும் பண்ணது…” என்றவள் நிமிர்ந்து அவனின் கண்களைப் பார்க்க,

“விடு… போனது எல்லாம் போகட்டும்.. இப்போவாது நீ சரி சொன்னியே…” என்றவன் “மைத்தி என்ன நடந்தாலும் நீ இதுல இருந்து பின்வாங்கிட மாட்ட தானே…” என்றான் கொஞ்சம் அவசரமாய்.

அவளுக்கும் புரிந்தே இருந்தது. இனிதான் இவர்கள் நிஜமான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும் என்று.

“கண்டிப்பா… முடிவு எடுக்கத்தான் நான் நிறைய யோசிப்பேன்…” என்றவள், “ஆனா இது ரொம்ப சென்ஸ்டீவ்…” என,

“சில விஷயங்கள் யோசிச்சு பண்ண முடியாது. டக்குனு பண்ணிடனும்…” என,

“உங்கள மாதிரி நான் அவ்வளோ தைரியம் எல்லாம் கிடையாதுப்பா…” என்றவள் “என்ன பண்ண போறோம்…” என்றாள் அவன் முகம் பார்த்து.

“ஆச்சிக்கு, அம்மாக்கு எல்லாம் தெரியும்…” என்றான் சாதாரணமாய் சொல்வது போல்.

ஆனால் மைதிலி தான் இதனை கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாள்.

“என்ன சொல்றீங்க நீங்க?!” என்றவளுக்கு அப்போதும் நம்ப முடியவில்லை.

“ஆமா. ஆச்சிக்கு நீ இங்க வரும்போதே தெரியும். ரேகா சொல்லிட்டா.. அம்மாக்கு நானே நேத்து சொல்லிட்டேன்…” என்றவன் நடந்தவைகளை சொல்ல,

‘அம்மாடியோ…’ என்று வாயில் கை வைத்துக்கொண்டாள்.

“என்ன மைத்தி…?!” என்றவன் கொஞ்சம் ரசிப்போடு பார்க்க,

“அம்மா, திட்டி, சண்டை போட்டு இங்க வந்து என்னோட சண்டை போட்டிருந்தா என்னாகியிருக்கும்…?”

“அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.. அப்படியே சண்டைன்னாலும், என்கிட்டே மட்டும் தான் அதெல்லாம்… நமக்கு கல்யாணம் ஆனா கூட அப்படித்தான். அவங்க குணமே அப்படித்தான்…” என,

“ஓ..!” என்றவள் “ஆனாலும் இப்போ எல்லாரும் போயிருக்காங்களே…” என்றாள் வருத்தமாய்.

“அம்மா நிச்சயமா அப்பாக்கிட்ட சொல்லிருப்பாங்க.. அப்பா முடிவு பண்ணது பண்ணதுதான்னு சொல்லிருப்பார். இருந்தும் என்கிட்ட நேரடியா கேட்க ஒரு தயக்கம்… நான் பிடிவாதமா முடியாது சொல்லிட்டா என்ன செய்றதுன்னு…”

“எல்லாருக்கும் சங்கடம்…” என்று வருந்தியவள், “என்னால தானே எல்லாம்..” என,

“ம்ம்ச் இல்லை… நந்தினியை எனக்கு பேசும்போதே, நான் கொஞ்சம் டைம் கேட்டிருக்கணும்… உன்னை அப்போவாது வந்து பார்த்திருக்கணும்.. உடனே சரின்னு சொன்னது என்னோட தப்புதானே…” என்றான் அவனும்.

“நீங்க நிரஞ்சனிக்காக பார்த்திருப்பீங்க…” என்று அவனை ஆறுதல் செய்ய,

“எது எப்படி இருந்தாலும் இதுக்கு மேல இதை யார்க்கிட்டயும் சொல்லாம இருக்க முடியாது…” என்றவன், சாட்சி காரன் காலில் விழுவதற்கு பதில், சண்டைக் காரன் காலில் விழலாம் என்று எண்ணி நந்தினிக்கே அழைத்தான்.

எப்படியானாலும் சரி, சண்டை சச்சரவுகள் வந்தாலும் சரி, நந்தினியிடம் இதனை சொல்லியே ஆகிட வேண்டும் என்று அவளுக்கு அழைக்கப் போக, நம்பர் பிசி என்றே வந்தது.

மைதிலி விலகி நிற்கப் பார்க்க, ஜெகாவோ அவளை முறைத்தவன் “இத்தனை வருசமா லவ் பண்ணதுக்கு இப்போ தான் டி இவ்வளோ பக்கமா நிக்கிறேன். இப்படியே நில்லு கொஞ்சம்…” என்றவன் திரும்ப நந்தினிக்கு அழைக்க, அப்போதும் நம்பர் பிசி, என்றே வர,

“ம்ம்ச் ச்சே…” என்றான் எரிச்சலாய்.

“என்னாச்சு?” என்றவள், மெதுவாய் அவன் முகம் வருட,

“முதல் நாளே இப்படி எல்லாம் செய்யாத மைத்தி.. பின்ன நான் நாளைக்கே கல்யாணம் செய்யணும் சொல்வேன்…” என்றவனை மைதிலி செல்லமாய் முறைக்க, சரியாய் நந்தினியே திரும்ப அழைத்தாள் ஜெகந்நாதனுக்கு.

“ஹலோ..” என்று ஜெகா சொல்லும் முன்னமே,

“மாமா… எங்க இருக்கீங்க நீங்க?” என்ற கேள்வி வேகமாய் வந்து விழுந்தது.

“எதுக்கு?” என்று கேட்டவன் நெற்றியை சுறுக்க,

“சொல்லுங்க மாமா… எங்க இருக்கீங்க நீங்க… நான் உங்களை உடனே பார்க்கணும்…” என்றாள் நந்தினி.

எப்போதும் இவள் இத்தனை வேகமாய், இத்தனை கோர்வையாய் பேசியது இல்லை. அதிலும் அவளின் குரலில் தெரிந்த பதற்றம், ஜெகாவிற்கு எதுவும் அங்கே பிரச்சனையோ என்று நினைக்க வைக்க,

“உன் அப்பாக்கிட்ட சொன்னேனே…” என்றான் யோசித்தபடி

அதற்குள் செல்வியின் எண்ணில் இருந்து வேறு அழைப்பு வர, ‘என்ன ஒரே நேரத்துல அம்மாவும் நந்தினியும் கால் பண்றாங்க…’ என்று எண்ணியவனுக்கு,

‘சரி ஏதோ பிரச்னை தான் போல…’ என்று முடிவு செய்துகொண்டவன்,

“ஒரு நிமிஷம் நந்தினி…” என்று அவளின் அழைப்பை ஹோல்ட் செய்தவன், செல்வியின் அழைப்பை ஏற்று,

“ம்மா…” என,

“எங்க ஜெகா இருக்க நீ?” என்றார் அவரும்.

“எதுக்கும்மா?”

“எங்க இருந்தாலும் சரி உடனே கிளம்பி நீ இங்க வா…” என்றவரின் குரலில் அப்படியொரு கண்டிப்பு ‘நீ இங்கே வந்து தான் ஆகிட வேண்டும்…’ என்று.

“ம்மா…!”

“சொல்றேன்ல வா ஜெகா…” என்ற செல்வியின் குரல், மைதிலிக்கும் கேட்க,

‘போயிட்டு வாங்க…’ என்றாள் மெல்ல சைகை செய்து.  

“ம்ம் சரிம்மா…” என்றவன், அடுத்து நந்தியினியோடு பேசினான்.

அவளோ ‘நான் உங்களை பார்க்கணும்…’ என்று திரும்ப திரும்ப சொல்ல, “வர்றேன்…” என்றவன் போனை வைக்க, மைதிலியோ அவனை சற்று வேதனையாய் பார்த்திருந்தாள்.

         

                                                       

 

Advertisement