Advertisement

                    இதயத்திலே ஒரு நினைவு – 13

“என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள்.

“நான் என்ன டி பண்ணேன்..?”

“நேத்தும் சீக்கிரம் கிளம்பிட்ட. இன்னிக்கு வரவேயில்ல…”

“எனக்கு முடியலை…”

“பொய் சொல்லாத டி…”

“நிஜம்மா…”

“வீட்ல தனியா இருக்க காலேஜ் வந்திருக்கலாம் தானே…”

“அதான் முடியலை சொன்னேனே…”

“ம்ம் என்னவோ போ.. ஜெகாண்ணா உன்னை கேட்டுச்சு..?” என்றதும் மைதிலிக்கு நெஞ்சம் திடுக்கென்றது.

இருந்தும் அதனை வெளிக்காட்டாது, “கிளாஸ்ல வேறென்ன நடந்தது…?” என்று கேட்க, ரேகா தோழியை சந்தேகமாய் பார்த்தாள்.

“சொல்லு டி…”

“கிளாஸ் வழக்கம் போலத்தான்.. சரி நீ சொல்லு நிஜம்மா உனக்கு முடியலையா?” என,

“சத்தியம் செய்யனுமா என்ன?” என்றாள் கடுப்பாய் மைதிலி.

“சரி அம்மா வர்ற வரைக்கும் என்னோட வந்து இருக்கியா?”

“இல்ல டி. அம்மா வந்திடுவாங்க…”  என்று மைதிலி மறுக்க, சிறிது நேரத்தில் ரேகாவும் கிளம்பிவிட்டாள்.

சரியாய் ரேகா அவள் வீட்டுக்குச் செல்கையில் ஜெகந்நாதன் பிடித்துக்கொண்டான். ரேகாவிற்குத் தெரியும் எப்படியும் ஜெகா வந்து பேசுவான் என்று. ரேகாவிடம் விபரம் கேட்டு அறிந்தவன், அடுத்து அழைத்தது மைதிலிக்குத்தான்.

‘போன் அவக்கிட்ட தான் இருக்குண்ணா…’ என்று ரேகா சொல்லவும் இன்று போனிலாவது பேசிடவேண்டும் என்று தான் நினைத்தான்.

மைதிலிக்கும் தெரியும் எப்படியும் ஜெகா ரேகாவிடம் பேசுவான் என்று. அதனால் அவனின் அழைப்பை எதிர்பார்த்தே இருந்தாள். ஒரு முடிவாய் இன்று பேசிவிடவேண்டும் என்று.

ஜெகாவின் அழைப்பு வந்ததுமே தைரியமாய் ஏற்று காதில் வைத்தவளை  அவனின் “மைத்தி…” என்ற தவிப்பானதொரு அழைப்பு, மொத்தமாய் வீழ்த்தியது.


 

 

ஜெகாவின் அணைப்பு, மைதிலி கிஞ்சித்தும் எதிர்பாராத ஒன்று. மைதிலி என்ன? ஜெகந்நாதனே அதனை எதிர்பார்க்கவில்லை.

மைதிலியை அப்படியொரு கோலத்தில் காண சகியாது அவளை அணைத்தானா, இல்லை தன்னை சமன் செய்துகொள்ள அந்த அணைப்பு அவனுக்கும் தேவையாய் இருந்ததுவா? அதெல்லாம் தெரியவில்லை, ஆனால் அணைத்தபின்னே, அது எத்தனை பெரிய தவறு என்று ஜெகாவிற்கு புரிந்தது.

பின்னே, இவளோடான இந்த அணைப்பு மட்டுமே இந்த ஜென்மத்திற்கும் போதுமாய் தோன்றினால் அவனும் தான் என்ன செய்வான்?

இல்லை இவளை மட்டும் தான் இப்படி அணைத்திட முடியும் உன்னால், என்று அவன் மனது சம்பட்டி கொண்டு அடித்தது போல் அவனிடம் உணர்த்தினால் வேறென்ன செய்வான் அவன்?

தன் விருப்பங்களை ஒதுக்கி வாழ முடியும் என்று எண்ணியிருந்தவனுக்கு, அவனது உணர்வுகளே பகையாளியாகிப் போக, ஜெகாவின் காதல் தலைத்தூக்கி  பார்ப்பது என்ன, சிம்மாசனம் இட்டே  அமர்ந்து விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, இனி எப்போதுமே மைதிலி தானடா உனக்கு என்று காதல் கட்டியம் கட்டி சொல்ல, அவனின் அணைப்பில் இருந்த மைதிலிக்கோ இன்னும் இன்னும் அழுகை கூடியது தான் மிச்சம்.

காதல் கை கூடாது என்று தெரிந்த பின்னா, இப்படியொரு அணைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்?!

ஏற்கவும் முடியாது, விலகவும் முடியாது, தவிப்பாய் இருந்தது அவளுக்கு.

ஏற்றுக்கொள் என்று ஆசை அறிவுறுத்த, இந்த அணைப்பிற்கு சொந்தக்காரி நீ அல்ல பெண்ணே என்று அறிவு எச்சரிக்க, அப்போதுதான் மைதிலிக்கு சட்டென்று தோன்றியது ‘இவன் என்ன செய்கிறான் இங்கே?’ என்று.

திருமண சேலை அல்லவா எடுக்க சென்றிருக்க வேண்டும்…

விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளின் பார்வை கேட்ட கேள்வி அவனுக்கு புரிந்ததுவோ என்னவோ

“நான் போகல…” என்றான் தலையை ஆட்டி.

“ஏன்?!” என்று கேட்டவளின் இதழ்கள் நடுங்க,

“போகலை…” என்றவனின் பதிலும் சரி, அணைப்பும் சரி இன்னும் இறுகியது.

“ஏன்?!” என்று மீண்டும் கேட்டவளின் குரல் இப்போது தெளிவுற,

“மனசில்லை…” என்றவன் “திரும்பவும் ஏன் அப்படின்னு கேட்காத.. என்கிட்டே பதில் இல்லை…” என்று முந்திக்கொண்டான்.

ஆனால் அப்போதும் மைதிலி “ஏன்?” என்றே கேட்க, ஜெகா கண்கள் இடுக்கிப் பார்த்தாலும், அவனும் சரி அவளும் சரி விலகவே நினைக்கவில்லை.

இந்த அணைப்பு, இப்படியானதொரு அணைப்பு, எத்தனை முறை இருவரும் கனவிலும் கற்பனையிலும் கண்டு ரசித்திருப்பர்.

கிட்டாதா? என்று ஏங்கியிருந்தது எத்தனை முறை?

நடக்காது என்று தன்னை தானே சமாதனம் செய்ய முயன்று தோற்று வருந்தியது எத்தனை முறை?         

காதல், நம்மிடம் நம்மையே தோற்கடித்து விடும்..

“மைத்தி…” என்றவனின் அணைப்பு அவளுள் தான் புதையவா, இல்லை தன்னுள் அவளை நிறப்பவா என்பதுபோல் மேலும் மேலும் இறுக,

“ஷ்…!” என்று அவனிடம் மெல்ல விலகப் பார்த்தவளை, காதலாய் பார்த்தான் ஜெகந்நாதன்.

“நீங்க போயிருக்கனும்…” என்றவளுக்கு இப்போது அவனிடம் இருந்து விலகும் நிலை.

இதற்குமேல் அவனின் அருகாமையை தாங்க முடியவில்லை.

உணர்வுகள் அவளுக்கும் உண்டு தானே..!

“ஏன் மைத்தி?!”

“போயிருக்கனும் தான்…” என்றவள் தள்ளி நிற்க,

“என்னால முடியலை மைத்தி…” என்றவன் அப்போதும் அவளருகே வர,

“முடியனும்…” என்றாள் உறுதியாய்.

“இனி என்னால முடியாது…” என்றவன் அவளின் கரம் பற்றி அவன் பக்கம் திருப்ப, மைதிலியோ அவன் முகம் பார்க்காது தவிர்த்தாள்.

“என்னைப் பாரு மைத்தி…” என்றவனின் குரல் அத்துனை மென்மையாய் இருந்தது.

“இது தப்பு…” என்றவளின் குரல் திடமாகவே இருக்க,

“சரி பண்ணிடலாம்…” என்றவன் “நீ முதல்ல என்னைப் பாரு…” என்றான் உறுதியாகவே.

மைதிலி நிமிர்ந்து பார்த்தவள் ‘என்ன?’ என்பதுபோல் கண்களை விரிக்க,

“இப்படி பார்த்து பார்த்துத்தான் தான் டி, என்னை நீ இப்படி நிக்க வச்சிருக்க.. சரியான கிராதகி நீ…” என்றவனின் சொற்கள் கடிவது போல் இருந்தாலும், அதில் அத்துனை காதல் வழிய, மைதிலியின் மனம் மெதுவாய் தடுமாறத் தொடங்கியது.

‘வேணாம் மைத்தி…’ என்று அவளின் புத்தி எட்டிப் பார்க்க,

“மைத்தி… உனக்கான வாய்ப்பு எப்பவுமே கிடைக்காது. கிடைக்கும் போது விட்டுட்டு பின்னே நீ தான் கஷ்டப்படனும். துணிஞ்சு ஒரு முடிவு எடு…” என்று அவளின் மனது எடுத்துரைக்க, குறைந்தபட்சம் அவன் மீதிருக்கும் உன் காதலை மட்டுமாவது உணர்த்தி விடு என்று அவளது உள்ளம் பெருங்குரல் எடுத்து சொல்ல, மைதிலி மௌனமாய் நின்றாள்.

“பேசு மைத்தி…” என்று ஜெகந்நாதன் ஊக்க,

“என்ன சொல்றது? எனக்கு உங்களை போல எல்லாம் பேச வராது…” என்றவளின் பார்வையோ சுற்றிலும் பார்த்தது.

யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் இவர்கள் நிற்பதை. சுற்றிலும் தெரிந்தவர்கள் கூட. பார்த்தால், நிச்சயம் பிரச்சனை தானே.

“மைத்தி… தப்பா நினைக்காத.. உள்ள போய் பேசலாமா?” என்றான் ஜெகந்நாதனும்.

“ம்ம்…” என்றவள் முன்னே நடக்க, ஜெகாவோ ஒரு பெருமூச்சு விட்டே அவளோடு பின் செல்ல,

“பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க, காபி போடட்டுமா?” என்றாள் மைதிலி.

“நீ தான் கூப்பிடவே இல்லை. கூப்பிட்டிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்..” எனும்போதே, மைதிலி கிண்டலாய் பார்க்க,

“இப்போ அதெல்லாம் பார்த்திட்டு இருந்தா முடியாது அதனால தான் நானே வந்துட்டேன்…” என,

“அதெப்படி நான் பார்த்தா சரியா புரிஞ்சு பதில் சொல்றீங்க?” என்றாள் வேகமாய்.

“அது நீ என்னோட வாழ்ந்து பாரு அப்போ புரியும்…” என்று ஜெகாவும் பதில் சொல்ல, அவளுக்கு என்ன ஆசை இல்லையா என்ன?

“இப்படி சொல்லாதீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு…” என்றாள் வெளிப்படையாகவே.

“ஏன்?”

“ம்ம்ச்.. நிறைய நிறைய ஆசைகள்.. கற்பனைகள் எல்லாம் இருக்கே.. ஆனா அதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சும், உங்கக்கிட்ட இருந்து இப்படி வார்த்தைகள் எல்லாம் கேட்க, வலிக்குது.. நிஜம்மா…” என்று சொன்னவளின் குரலில் அப்படியொரு வலி..

அதுவே சொல்லாமல் சொல்லியது அவளின் காதலை…

“ஏன் நடக்காது மைத்தி. நம்ம முயற்சி பண்ணா கண்டிப்பா நடக்கும்…”

“இல்ல.. உங்களுக்கு அது இன்னமும் சிரமம். நான் இங்க வந்திருக்கவே கூடாது. அப்படியேன்னாலும் அட்லீஸ்ட் உங்களோட முதல்லயே பேசியோ இல்லை ரேகாக்கிட்டயாவது உண்மையை சொல்லி உங்களைப் பத்தி கேட்டிருக்கணும்..”

“நீ வந்துட்டியே மைத்தி.. அதுவே போதும்… தப்பு என்மேல தானே.. நான்தான் சொன்னதுபோல நடந்துக்கல…”

“ம்ம்…” என்று புன்னகைத்தவள் “எனக்கு கல்யாணம் ஆகிருக்கலாம்னு நினைச்சு இருப்பீங்க…” என்றாள்.

“அப்படியும்தான்…” என்றவன் “எங்க மறுபடியும் நீ என்னை வேணாம் சொல்லிட்டா என்ன பண்றது.. அப்படியும் நினைச்சேன்…” என,

“இப்போ கூட எனக்கு ஆசைதான் நீங்க எனக்கு வேணும், எனக்கு மட்டும்தான் வேணும்னு சொல்றதுக்கு.. ஆனா அது முடியாதில்லையா?” என்றவளின் குரல் நடுங்கத் தொடங்க,

“ஷ்..! நீ அழக் கூடாது மைத்தி…” என்றவன் “நீ என்ன சொல்றது, நீ எனக்கு வேணும்… நான் முடிவு பண்ணிட்டேன்…” என்று தீர்க்கமாய் சொல்ல,

“இல்ல.. இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தித் தான் நான் என்னோட காதல்ல ஜெயிக்கனும்னு இல்லை.. அது தப்பு…” என,

“ஏய் போதும் நிறுத்து டி..” என்று ஜெகா கத்தி விட்டான்.

மைத்தி அதிர்ந்து பார்க்க “இங்க பாரு… நீ சரின்னு சொன்னாலும் இல்லன்னாலும், உனக்கும் எனக்கும் தான் கல்யாணம். சொல்லப்போனா நீயும் நானும் இன்னும் காதலிக்கவே இல்லை தெரிஞ்சுக்கோ. மனசுல மட்டுமே நினைச்சு நினைச்சு, என்ன டி பிரயோஜனும்.. இதோ இப்படி நிக்கிறது தான் மிச்சம்..

உன்னோட பேசி பழகினது கூட இல்லை. சொல்லப்போனா உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எல்லாம் அவ்வளவா எனக்குத் தெரியாது. உன்னை பிடிக்கும் அவ்வளோதான். உன்னோட பேசணும், சண்டை போடணும், நீ என்னை திட்டனும்,  நான் உன்னை திட்டனும். உனக்காக அழனும், உன்னை அழ வைக்கணும். கிண்டல் பேசணும், சமாதானம் செய்யணும், கிஸ் குடுன்னு கெஞ்சனும், கொஞ்சனும், மிஞ்சனும் இப்படி எத்தனை எத்தனையோ மனசுக்குள்ள போட்டு போட்டு பூட்டி வச்சிருக்கேன்..

இதுல ஏதாவது ஒன்னு நடந்திருக்கா நமக்கு. சொல்லு.. எப்போ பார் வேணாம் வேணாம் வேணாம். ஒருதடவை நான் வேணும்னு நினைச்சா உன்னோட மகாராணி பதவி பறிபோயிடுமா என்ன? சொல்லு டி? எதுல நீ குறைஞ்சு போயிடுவ? காதலிக்கவே இல்லையாம், இதுல காதல்ல ஜெயிக்கிறது தோக்குறது பத்தி பேசுறா.. 

இதெல்லாம் நடந்திருந்தா கூட, ஆசை தீர உன்னை காதலிச்சேங்கிற திருப்தியாவது இருக்கும்.. நீ அந்த திருப்தி கூட எனக்கு கொடுக்கல.. கல் நெஞ்சக்காரி டி… கிராதகி…” என்று ஜெகந்நாதன் தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டித் தீர்க்க,

மைதிலியோ சிலையாய் நின்றுவிட்டாள்.

இதற்குமேல் அவளால் மறுத்திட முடியுமா?

நிஜமாய் முடியாது என்பது போலவே தோன்றியது.

அவன் சொல்லிய அனைத்தும் அவளுக்கும் பொருந்தும் தானே…!

“என்ன பாக்குற.. பதில் சொல்லு…?”

“இப்போ நீங்க சொன்னது எல்லாம், நானும் சொல்லலாம் தானே… எனக்கும் இதெல்லாம் தோணாதா என்ன?”

“தோணி என்ன பிரயோசனும்…?”

“இப்படி பேசாதீங்க.. எனக்கு பதில் பேச தெரியாது…”

“ஆமாமா.. தெரியாது.. நீ பாக்குற ஒரு பார்வையே போதும் டி.. பதில் சொல்ல தெரியாதாம்.. எல்லா ஈரவெங்காயமும் உனக்குத் தெரியும்.. ஆனாலும் இதோ என்னை பேச விட்டு ரசிச்சு நிப்ப..” என்று ஜெகா கடிய,   மைதிலியின் முகத்தில் ஒரு பெருமிதம்.

என்னை இத்தனை கண்டு வைத்திருக்கிறானா இவன் என்று…!

“பெரிய இவளாட்டம் சொல்ற, காதல்ல ஜெயிக்கணும்னு இல்லைன்னு… இத்தனை வருசம் லவ் பண்ணோம்னு யார்க்கிட்டயாவது உறுப்படியா சொல்லக் கூட முடியாது. அப்படி இருக்கு நம்ம கதை.. லவ் பண்ற பொண்ணுக்கு கிஸ் கொடுத்தா எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாது…” என்று அவனாக புலம்ப, மைதிலி சற்று தள்ளி நின்றவள், அவனருகே வந்து நிற்க,

“என்ன?” என்றான் கடுப்பாய்.

“என் பார்வைக்குத் தான் அர்த்தம் புரியுமே உங்களுக்கு…?” என, அந்தோ பரிதாபம் அந்த நேரம் பார்த்து மைதிலியின் பார்வைக்கு அர்த்தம் புரியாது போனது ஜெகாவிற்கு.

“ஏய் டென்சன் பண்ணாம சொல்லு என்ன?” என,

“ம்ம்ச் சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்க…” என்றாள் உதட்டை சுழித்து..

     

       

        

 

            

 

         

Advertisement