Advertisement

           இதயத்திலே ஒரு நினைவு – 12

“மைத்தி காலேஜ் கிளம்பலையா நீ?” என்று இரண்டு முறைக்கும் மேலே கேட்டுவிட்டார் சுகுணா.

“ம்மா எனக்கு எப்படியோ இருக்குன்னு சொல்றேனே…” என்ற மைதிலிக்கு கல்லூரி செல்ல மனதில்லை.

“என் டி உடம்பு சரியில்லையான்னா அதுவும் இல்லைங்கற. நேத்தும் சீக்கிரம் வந்துட்ட. இப்போ போகவும் மாட்டேன்னு இருந்தா நான் என்ன செய்றது. உங்கப்பா வேற ஊர்ல இல்ல…”

“ம்ம்ம் இன்னிக்கு ஒருநாள் வீட்ல இருக்கேனே…”

“நானே லீவ் போடுன்னு சொன்னா கூட ஒடுவ.. இப்போ என்ன? காரணம் சொல்லிட்டு வீட்ல இரு…” கறாராய் சுகுணா சொல்ல,

“எனக்கு என்னவோ இன்னிக்கு போக பிடிக்கல…” என்றாள் சலிப்புடன் மைதிலி.

“என்னவோ ஆச்சு உனக்கு…?” என்றவருக்கு என்ன தோன்றியதோ வேகமாய் மகளிடம் வந்து “காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?” என்றார்.

தூக்கிவாரி போட்டது மைதிலிக்கு…!

பதில் சொல்லாது திகைத்துப் பார்க்க “சொல்லு டி. பசங்க எதுவும் பின்னாடி வர்றாங்களா.. அதான் பயந்து போய் வீட்ல இருக்கியா?” என, மைதிலிக்கு நிஜமாகவே பயம் வந்துவிட்டது எங்கே தன்னையும் மீறி உளரிவிடுவோமோ என்று.

“உண்மைய சொல்லு மைத்தி…”

“ம்ம்ச் ம்மா நீயா எதுக்கும்மா இப்படி நினைச்சுப் பேசுற..”

“இல்ல டி நடக்குறது எல்லாம் பார்த்தா பயமாதானே இருக்கு. பாரு உன் பெரியப்பா பொண்ணு அமைதியா இருப்பா. இப்போ திடீர்னு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னுருக்கா.. உங்க பெரியப்பா நெஞ்ச பிடிச்சிட்டு சாஞ்சுட்டார். உங்கப்பா அதுக்கு தானே அடிச்சு பிடிச்சு போயிருக்கார்…”

“நீயும் போயிருக்க வேண்டியதுதானே… நான் நிம்மதியா வீட்ல இருந்திருப்பேன்..”

“அடி… உன்னை காலேஜ் அனுப்பிட்டு நானும் கிளம்பனும்னு இருந்தேன்.. அர்த்த சாமத்துல போன் வருது. உன்னை விட்டுட்டு போக முடியுமா?”

“சரி நீ கிளம்பு நான் வீட்ல இருக்கேன்…” என்ற மகளை என்ன செய்வது என்று பார்த்தார்.

“ம்மா சொன்னா கேளும்மா எனக்கு நிஜம்மாவே உடம்பு டயர்டா இருக்கு… கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்.. நான் சூதானமா இருந்துப்பேன்..” என்று மைதிலி வாக்குறுதி கொடுக்க,

“நீ இருந்துப்ப, ஆனா உன்ன தனியா விட்டுப் போக எனக்குத்தானே பயமா இருக்கு…” என்றார் தாயாய் சுகுணா.

“அடடா உள்ள விட்டு வெளிய லாக் பண்ணிட்டு கூட போ…” என்று மைதிலி எரிச்சலாய் சொல்ல,

“ச்சி என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் பெரிம்மா கிட்ட அப்போவே சொன்னேன், கொஞ்சம் கவனமா இருங்கக்கான்னு கேட்டாங்களா. நீயும்தான் பொண்ணு வச்சிருக்கன்னு உடனே உன்னை சொன்னாங்க. எனக்கு உன்னைத் தெரியாதா மைத்தி… எனக்கு என் பொண்ணைப் பத்தி தெரியாதா? ” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் ஈட்டியாய் குத்தியது மைதிலிக்கு.

பின்னே எத்துனை நம்பிக்கை தன் மகள் மீது.

“ம்மா…!” என்று பார்க்க,

“என்ன டி…” என்று வாஞ்சையாய் அவள் முகம் தடவியவர்,  “சரி நீ உள்ள பூட்டிக்கோ. இந்தா போன் வச்சிக்கோ. எதுன்னாலும் அப்பாக்கு கூப்பிடு. எப்படியும் நான் மாட்டுமாவது நைட் வந்துட பாக்குறேன். அங்க சூழ்நிலை எப்படி இருக்கோ. இல்லைன்னா உன்னையும் கூட்டிட்டு போயிடுவேன்…” என,

“நான் இருந்துப்பேன் ம்மா…” என்றாள் திடமாய்.

“சரி சூதானம்…” என்று பத்து முறைக்கும் மேலே கிளம்புவதற்குள் சொல்லிவிட்டு சென்றார் சுகுணா.

‘என் பொண்ணு பத்தி எனக்குத் தெரியாதா…’ சுகுணாவின் இந்த வார்த்தைகள் மைதிலிக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.


 

 

மைதிலிக்குத் தெரியும் அன்று திருமணப் புடவையும், தாலியும் எடுக்கப் போகிறார்கள் என்று. கமலா வேறு கிளம்புவதற்கு முன், மைதிலியை அழைத்து சொல்லிவிட்டே செல்ல, சரி சரி என்று தலையை ஆட்டி வைத்திருந்தாள்.

‘சரியான அழுத்தம் இந்த பொண்ணு…’ என்று கமலா மனதினுள் வசைபாடித்தான் கிளம்பினார்.

வீட்டிலோ யாருமில்லா தனிமை..!

கல்லூரிக்கு கிளம்பலாம் என்றாலும் என்னவோ ஒரு அதுவும் அவளால் முடியவில்லை. ஆனாலும் அன்று எடுக்கவேண்டியது ஒரு முக்கியமான பகுதி. முயன்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டே மைதிலி கல்லூரிக்குச் சென்றாள். அவள் இருந்த மனநிலையில் பாடத்தினை ஒழுங்காய் எடுப்போம் என்ற நம்பிக்கை அவளுக்கே இல்லை.

வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்றும் தோன்ற, தனியே இருக்க அவளுக்கு எப்படியோ இருக்க, கல்லூரி வந்து சேர, அங்கேயோ கல்லூரியின் முன்னால் தலைவரின் மரண செய்தி வந்து, அன்றைய தினமும், மறுநாளும் விடுமுறை என, அடுத்து வார கடைசி வேறு வருவதால், மொத்தமாய் நான்கு நாட்கள் விடுமுறை.

‘எப்படியாவது இந்த லீவ்ல அப்பா அம்மாவ பேசி அனுப்பிட்டு நம்மளும் கிளம்பிடனும்…’ என்று தனக்கு தானே ஒரு திட்டம் போட்டுக்கொண்டாள்.

கல்லூரியில் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு, வீட்டிற்குக் கிளம்புகையில் ரேகாவிற்கு அழைத்தாள்.

“என்ன டி இப்போவாது என் நியாபகம் இருக்கா உனக்கு?” என்று ரேகா கடிய,

“ம்ம்ச்… எங்க இருக்க நீ?” என்றாள் மைதிலி.

“ம்ம் வீட்லத்தான். ஆமா இந்நேரம் போன் பண்ணிருக்க? கிளாஸ் இல்லையா மைத்தி…?”

“லீவ் டி…” என்று விபரம் சொன்னவள் “நீ ப்ரீயா இருக்கியா?” என,

“வீட்லத்தானே டி இருக்கேன்.. ப்ரீதான் நீ வர்றியா?” என்றாள் அவளும் .

“வேற கெஸ்ட் எல்லாம் வரலையா?”

“கெஸ்ட்டா..?” என்றவள் “ஓ! இல்லை இங்க யார் வரப்போறா? நீ வா…” என, அடுத்து சிறிது நேரத்தில் மைதிலி ரேகா வீட்டினில் இருக்க, வீடே அமைதியாய் தான் இருந்தது.

“என்ன டி இவ்வளோ அமைதியா இருக்கு?”

“பசங்க ஸ்கூல் போயாச்சு.. அவரும் கிளம்பிட்டாரு.. நான் மட்டும் தானே இருக்கேன்…” என,

“தனியா இருக்க சங்கடமா இல்லையா உனக்கு?” என்றாள் மைதிலி.

“இதுல என்ன சங்கடம்?” என்றவள் பேசிக்கொண்டே அவளுக்கு ஜூஸ் கலக்கிக் கொடுக்க, மைதிலியோ “அப்.. அப்புறம்?” என்றாள் கொஞ்சம் தயங்கி.

“என்ன அப்புறம்?!”

“இல்ல அது…”

“ம்ம்ம் நீ என்ன கேட்க வர்றன்னு தெரியுது…” என்றவள் “நீ கொஞ்சம் நம்பிக்கை கொடுத்திருந்தா ஜெகாண்ணா எப்படியும் ஏதாவது பண்ணிருக்கும். நீயும் பேசவே மாட்டேங்கிற மைதிலி…”

“எல்லாம் தெரிஞ்ச அப்புறம் என்ன பேச ரேகா? அது சுயநலமா ஆகிடாதா?”

“என்னவோ போ.. நீங்க ரெண்டு பேருமே பண்றது சரியில்லை…”

“ஹ்ம்ம்… பேசணும்னு வந்தேன்… ஆனா என்ன பேசன்னு எனக்கும் தெரியலை டி ரேகா.. நாலு நாள் லீவ் இருக்கு.. அப்பா அம்மா வரவும் எப்படியும் பேசி அவங்களை அனுப்பிட்டு, நானும் அடுத்த வாரம் கிளம்பிடலாம்னு இருக்கேன்….” என, ரேகாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.

“என்ன டி நீ…” என்று மைதிலியின் கரத்தினை பற்றிக்கொண்டாள் ரேகா.

“ம்ம்ம் வேறென்ன செய்ய சொல்ற ரேகா?” என்று கேட்டவளின் குரலில் அப்படியொரு ஏமாற்றமும், வேதனையும் வெளிப்பட,

“ஒருதடவ முயற்சி பண்ணிப் பார்க்கக் கூடாதா டி?” என்றாள் ரேகாவும்.

“என்ன முயற்சி பண்ண சொல்ற? யார்கிட்ட இருந்து ஆரம்பிக்க சொல்ற? உன் அண்ணனுக்கு இருக்குற டென்சன் எல்லாம் போதாதுன்னு இப்போ நானும் வந்து ஏற்கனவே நோகடிச்சுட்டேன். வராம போயிருந்தா கூட ஏதோ ஒரு அமைதியா அவ்வளோ ஏன் காலபோக்குல சந்தோசமா கூட  வாழ்ந்துட்டு இருந்திருப்பார்..” 

“ஆனா நீதான் வந்துட்டியே மைத்தி…”

“அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.. போனவ போனவளாவே இருந்திருக்கணும் ரேகா. இப்போ பார்.. எல்லாருக்கும் என்னால குழப்பம். எங்கப்பா அம்மாவை வேற நான் ரொம்ப நேத்து டென்சன் பண்ணிட்டேன்…” என்று முதல் நாள் நடந்தவைகளை சொல்லியவள்,

“என்னாலத்தானே ஆரம்பத்துல இருந்தே எப்பவும் குழப்பம். எனக்கு தைரியமாவோ தெளிவாவோ முடிவு எடுக்கத் தெரியலை போல ரேகா. என்னோட விருப்பம் தான் முக்கியம்னு என்னால துணிஞ்சு நிக்க முடியலை..” என்றவள்

“சரி விடு… நடக்கிற கல்யாணமாவது நல்லபடியா நடக்கட்டும். அந்த நேரத்துல நான் இங்க இருக்கவே கூடாது. அது எல்லாத்தையும் விட பெரிய தப்பு…” என,

“என்ன டி இப்படியெல்லாம் பேசுற?” என்றாள் ரேகா.

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டவள் “சரி நான் வீட்டுக்கு போறேன்…” என்று கிளம்ப,

“ஏய் நீயா அங்க போய் என்ன செய்ய போற? இரேன் இங்க…” என்று நிறுத்தினாள்.

“இல்ல டி கொஞ்ச நேரமாவது தனியா இருக்கணும் போல இருக்கு. தனியா இருக்க பயந்து தான் இங்க வந்தேன். ஆனா இப்ப என்னவோ பேச பேச, பழசு எல்லாம் ரொம்ப மனசு போட்டு அழுத்துது…” என்றவளின் விழிகளில் நீர் படலம்.

“நீ தனியா எல்லாம் ஒன்னும் இருக்க வேணாம்…”

“ஹா ஹா… கவலைப்படாத.. செத்து போற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை. நான் எங்கப்பா அம்மாக்கு ஒரே பொண்ணு. என்னோட பொறுப்புகள் என்னன்னு எனக்குத் தெரியும்…” என்ற மைதிலி பிடிவாதமாய் கிளம்பியும்விட்டாள்.

‘இவளை என்ன சொல்லியும் மாற்ற முடியவில்லை…’ என்று மலைப்பாய் இருந்தது ரேகாவிற்கு.

அங்கேயோ அனைவரும், மதுரையின் புகழ்பெற்ற ஜவுளி கடைக்கு சென்று இருக்க, ஜெகந்நாதன் அங்கே இல்லை.

“மாப்பிள்ளை எங்க?!” என்று நந்தினியின் அப்பா கேட்டுக்கொண்டே இருந்தார்.

அவர் சும்மா இருந்தாலும் நந்தினியின் அம்மா “என்னங்க நந்தினி பாருங்க சோர்ந்து போயிட்டா… மாப்பிள்ளைக்கு போன் போட்டு நீங்களே பேசுங்க…” என்று நொச்சி எடுத்துவிட்டார்.

நிரஞ்சனியோ “என்ன சித்தி அண்ணன் இப்படி பண்ணுது…” என்று செல்வியிடம் கேட்க, ரத்னாவும் கையை பிசைந்து கொண்டு நின்றார்.

பின்னே நிரந்ஜனிக்கு பார்த்த மாப்பிள்ளை ரமேஷும் அவளிடம் அப்போதிருந்து “மச்சான் எங்க?” என்று கேட்டுக்கொண்டு தானே இருந்தான்.

நால்வரும் ஒன்றாய் செல்வோம் என்று கேட்க, ஜெகா அதனை நாசூக்காய் மறுத்திருந்தான்.

“தவிர்க்கவே முடியாத ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க எல்லாம் முன்னாடி போங்க. நான் வந்திடுவேன். பெரியவங்கக்கிட்ட சொன்னா அது இதுன்னு பேச்சு வரும் மச்சான்.. நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்..”  என்று ரமேஷை கொஞ்சம் ஏற்றி வைத்து பேச,  அவனும் அதனை நம்பி வந்துவிட்டான்.

ஆனால் ஏறக்குறைய புடவை இரண்டு மணப் பெண்களுக்கும் எடுத்தாகிவிட்டது, அடுத்து மாப்பிள்ளைகளுக்கு எடுக்கவேண்டும். இன்னும் ஜெகந்நாதன் அங்கே வரவில்லை.

பாண்டியனோ மகனுக்கு அழைத்து பேச “ப்பா… நான் வர லேட்டாகும்…” என்றுவிட்டான்.

அவனுக்கு கடைசி வரைக்கும் போகும் எண்ணமில்லை…!

அதற்கான துணிவும் இல்லை…!

செல்வி மீண்டும் அழைக்க “ம்மா ப்ளீஸ்.. என்னையும் புரிஞ்சுக்கோங்க…” என,

“சமாளிக்க முடியலைடா…” என்றார் அவரும்.

“நான் அங்க வந்தா கண்டிப்பா என்னால எதையும் முழு மனசா பார்க்கக் கூட முடியாது. அது இன்னமும் பிரச்சனையை கொண்டு வரும்..” என்றவன் “சரி நந்தினி அப்பாக்கிட்ட போன் கொடுங்க…” என,

“என்ன மாப்பிள்ளை நீங்க நல்ல நேரம் எல்லாம் ஓடிருச்சு இன்னும் நீங்க வரலை…” என்று ராகம் பாடினார் அவர்.

“அதுங்க மாமா, ஒரு டெண்டர் விஷயம். வெளிய நிறைய பேருக்கு தெரியாது. அதுதான் உங்கக்கிட்டயும் முன்னமே சொல்லலை. சீக்கிரம் முடியும்னு நினைச்சு வந்தேன்.. நமக்கு சாதகமா வந்துட்டா கோடியில லாபம் வரும்… இன்னும் வந்த வேலை முடியலை…” என,

“அட அப்படிங்களா?! நீங்க பாருங்க…” என்றவரின் முகத்தில் அப்படியொரு ஜொலிப்பு.

ஜெகந்நாதனுக்கு அப்பாடி என்றதொரு உணர்வு..!

இந்த ஒரு விஷயத்தையே முழு மனதாய் செய்ய முடியாது என்று ஒதுங்கி நிற்பவன், எப்படி திருமண சாங்கியங்களை செய்வான், ஒருத்தியை மணந்து அவளோடு மனதொன்றி வாழ்வான்?!

சந்தேகமே…!

ஜெகந்நாதன் அவர்களின் தோட்டத்தில் சென்று அமர்ந்திருந்தான். சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கீரை வகைகள்  என்று சாகுபடி செய்திருந்தனர். பெரும்பாலும் பாண்டியன் தான் அங்கே செல்வார். இன்று ஏனோ இவன் சென்று அமர்ந்திருந்தான். அங்கிருந்தபடி தான் அலைபேசியில் பேசினான்.

பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கும் அங்கே. எப்போதும் வீட்டில் இருந்து ஆட்கள் போனால், அதனடியில் தான் இருக்கைகள் போட்டு அமர்ந்திருப்பர். இப்போதும் ஜெகந்நாதன் அப்படித்தான் வெறுமெனே அமர்ந்திருக்க, ரேகா அழைத்தாள்.

என்னவோ அவளுக்கு மைதிலி பேசிவிட்டு சென்றதும் மனதே ஆறவில்லை.

ஜெகாவிற்கு அழைத்து மைதிலி பேசியதை சொல்ல, “இப்போ எங்க மைத்தி?” என்றான் இவன்.

“வீட்டுக்குத் தான் அண்ணா போயிருக்கா. என்னவோ எனக்கு மனசே சரியில்லை அவ அப்படி பேசிட்டு போகவும். ரொம்ப வருத்தமா பேசினா…” என, அவ்வளோதான் அடுத்த நொடி எழுந்துவிட்டான்.

“நான் பார்த்துக்கிறேன்…” என்றவன் நேராய் தன் பைக்கை நிறுத்திய இடம், கமலாவின் வீடு.

யோசிக்கவே இல்லை..

மைத்தி தனிமையில் வருந்துகிறாளா?!!!

வேகமாய் மாடி ஏறியவன் பார்த்த காட்சி, வெயில் என்று கூட பாராது, மைதிலி அவன் வளர்க்கும் ரோஜா செடிகளோடு அமர்ந்திருந்ததைத் தான். அவள் கண்களில் கண்ணீர் வடியவில்லை. ஆனாலும் அதில் தெரிந்த வெறுமை இதுவரை அவன் எதிலும் கண்டும், கேட்டதுமில்லை என்பதுபோல் இருந்தது.

‘நான் இங்க வந்திருக்கவே கூடாது தானே… ம்ம் அவங்களாவது நிம்மதியா இருந்திருப்பாங்க… போனவே போனவளாவே இருந்திருக்கணும் தானே…’ என்று செடிகளோடு மெல்ல பேசிக்கொண்டு இருக்க,

“மைத்தி…!” என்ற அவனின் அழைப்பு திடுக்கிட்டு திரும்ப வைத்தது என்றால்,

“மைத்தி…” என்று மீண்டும் அழைத்தவன், அடுத்த நொடி அவளை நெருங்கி அணைத்திருக்க, அது மேலும் அவளை திடுக்கிடச் செய்தது.

     

         

       

 

                      

 

Advertisement