Advertisement

இதயக் கூட்டில் அவள் 

இறுதி அத்தியாயம் 

வெற்றி கைகால் கழுவி உடை மாற்றி வந்தவன், கட்டிலில் உறங்கும் பிள்ளைகளை ஒருமுறை பார்த்து விட்டு, கீழே மெத்தையில் மனைவியுடன் படுத்துக் கொண்டான். 


உறக்கமில்லாமல் இருந்தாலும் இருவருமே களைப்பாக உணரவில்லை. எதோ பெரிய இடரை கடந்து வந்தது போல  உணர்ந்ததால்… அருகருகே நெருங்கிப் படுத்து பேசிக் கொண்டு இருந்தனர். 

“விக்ரம் சொல்றது சரிதான். உங்களுக்கு மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா? இப்படித் தனியா நின்னு அவங்களை அடிச்சிருக்கீங்களே, அவங்க உங்களை எதாவது பண்ணி இருந்தா?” 

“உனக்கு நான் ஹீரோ தானே டி.” என்றவன், “ரெண்டு பேரை அடிக்க என்னால முடியாதா என்ன? விக்ரம் பின்னாடி வர்றது தெரிஞ்சு, அவங்க தப்பிச்சு போயிட்டா, அதனாலதான்.” 

“நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் நீங்கதான் வெற்றி எங்களுக்கு முக்கியம்.” 

“நான் ஜாக்கிரதையா தான் இருந்தேன். எனக்காக இல்லைனாலும் உனக்காக இருப்பேன்.”

கணவனின் பதிலில் திருப்திக்கொண்டு, ஆதிரை இன்னும் அவனை நெருங்கிப் படுத்து அனைத்துக் கொண்டவள், 


“உங்க ப்ரண்ட் என்னவோ நான் உங்களைச் சுதந்திரமா இருக்க விடாத மாதிரி சொல்றார். நீங்களும் அப்படி நினைக்கிறீங்களா?” எனக் கேட்டே விட, வெற்றி மனைவியின் இதழில் முத்தமிட்டவன், “நானே தானே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன். என்னை நீ புரிஞ்சு வச்சுகிறது எனக்குப் பெருமை தானே தவிர, அதுல குறை சொல்ல என்ன இருக்கு?” என்றவன், மீண்டும் அவளை முத்தமிட்டான். 

“ஆமாம் நீங்கதான் எல்லாத்தையும் என்கிட்டே ஒப்பிக்கிறீங்களே… உங்க ஹாஸ்டல் கதையை எத்தனை தடவை சொல்லி, என் காதுல ரத்தம் வர வச்சிருப்பீங்க.” 

“இன்னைக்கும் எங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு வராது. என் ஹாஸ்டல்ல எப்படிச் சாப்பாடு போடுவாங்க தெரியுமாதான் சொல்வீங்க. நீங்க இப்படி எல்லாத்தையும் உளறிட்டு பழி என் மேலையா?” ஆதிரை அப்பாவியாகக் கேட்க, 

“எங்க அம்மாவை வம்பு இழுக்கலைனா உன்னால இருக்க முடியாதே…” என வெற்றி அதிரையின் காதை பிடித்தான். 

“உண்மையைத் தானே சொன்னேன். அது மட்டுமா சொன்னீங்க. உங்க அம்மா உங்களுக்குப் பொண்ணு பார்த்த கதையும். அதுக்கு நீங்க ஓகே சொன்ன கதையும் கூடச் சொன்னீங்க.” எனச் சாதாரணமாகச் சொன்னாலும், இன்னும் அதை அவளாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வெற்றிக்கு தெரியும். 

ஜோதி தனது தங்கையின் உறவில் ஒரு வரனை பற்றி அண்ணாமலையிடம் கேளாமல் வெற்றியிடம் வந்து சொல்ல, அம்மாவுக்குத் தெரிந்த இடம். நல்ல இடமாக இருக்கும் என வெற்றியும் “நீங்க பார்த்தா சரிதான்.” எனச் சொல்லியிருந்தான். ஆனால் அண்ணாமலைக்குத் தெரியாது என வெற்றிக்குத் தெரியாது. 

தனது விருப்பம் என்று சொன்னால், கணவர் கேட்கமாட்டார் என நினைத்த ஜோதி, மகனின் விருப்பம், அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அதனால் அந்த இடத்தில் செய்யலாம் என்பது போலக் கணவரிடம் சொல்லி விட, அண்ணாமலை மகனை அழைத்துக் கண்டித்தார். 

“நீயே பொண்ணு பார்த்துகிற அளவுக்குப் பெரிய ஆள் ஆகிட்டியா?” எனக் கேட்க, வெற்றிப் புரியாமல் விழிக்க, அதன்பிறகே அண்ணாமலைக்கு இது மனைவியின் வேலை எனப் புரிந்தது. அவர் ஜோதியை வைத்து வாங்க, 
“தெரிஞ்ச இடம்னு அம்மா நினைக்கிறாங்களோ என்னவோ?” என வெற்றி அம்மா திட்டு வாங்குவது தாங்காமல் சொல்ல, 

“அது ஒரு தறுதலையான குடும்பம். உங்க அம்மாவுக்கு என்ன தெரியும்? உங்க அம்மாவை பொறுத்தவரை நல்லா சிரிச்சு பேசிட்டா அவங்க நல்லவங்க.” என்றவர், “பொண்ணு பார்க்கிற வேலை எல்லாம் நான் பார்த்துகிறேன். நீ ஒன்றும் பார்க்க வேண்டாம்.” என்றார் ஜோதியிடம். 

“அம்மா, அப்பா வேண்டாம்ன்னு சொன்னா அதுல எதாவது காரணம் இருக்கும் மா.” என மகனும் அப்பாவின் கட்சிக்கு சென்றுவிட, ஜோதி டெபாசிட் இழந்து நின்ற வேட்பாளர் போல ஆனார். ஆனால் தான் சொன்ன பெண்ணை மகனுக்குச் செய்யவில்லை என்ற கோபத்தில் சில நாட்கள் இருக்கவும் செய்தார். 

வெற்றி திருமணம் ஆன புதிதில் இதை ஆதிரையிடமும் சொல்லியிருந்தான். அதை அவ்வபோது ஆதிரை சொல்லிக் காட்டுவது உண்டு. 

மனைவியின் மனத்தாங்கல் தெரிந்தவன், “நான் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கேன், ஆனா பேசினது கூட இல்லை. நீயேன்டி நான் எதோ அந்தப் பெண்ணை லவ் பண்ணது போல… உன்னை வருத்திகிற?” என்றான். 

“அறிவுக்குப் புரிஞ்சாலும் மனசுக்கு புரிய மாட்டேங்குதே… நீங்க ஒருவேளை அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா…” 

“அதெப்படி பண்ணுவேன்? ஆதிரை வந்து என்னை ஆளனும்ன்னு தானே இருக்கு.” 

“பாருங்க பாருங்க, நீங்களே நான் ஆளுறேன்னு தான் சொல்றீங்க. அப்ப நான் உங்களைக் கட்டுப்படுத்துறேனா…” 

தன் மேல் பாதிப் படுத்திருந்த மனைவியின் முகம் நிமிர்த்திப் பார்த்தவன், “ஹே பொண்டாட்டி நல்லா கேட்டுக்கோ…. என்னை நீ ஆண்டாலும், அதிகாரம் பண்ணாலும், ஏன் கட்டுப்படுத்தினாலும், எல்லாமே எனக்குப் பிடிக்கும் அவ்வளவு தான்.” 

“ஏன்?” 

“ஏன்னா… நீ என்னை ஆண்டாளும், அதிகாரம் பண்ணினாலும், அதுக்கூட அழகாத்தான் இருக்கும். அதுவும் நீ மத்தவங்க முன்னாடி என் மரியாதை குறையிற மாதிரி நடந்துக்கவே மாட்ட.” 

“நானும் சில பேரை பார்த்திருக்கேன். புருஷனை அவங்க கட்டுப்பாட்டில் வச்சிக்கிட்டு, அவரோட விருப்பத்தை மதிக்கவே மாட்டாங்க. ஆனா நீ அப்படியில்லை. நீ எதாவது சொன்னாலும் அது என்னோட நல்லதுக்குத்தான் இருக்கும்.” 

“நான் என்ன மாதிரி யோசிப்பேன், என்ன பண்ணுவேன் எல்லாமே என்னை விட உனக்கு அத்துப்படி. நீ மட்டும் ஒரு நொடி நான் தப்பு பண்ணியிருப்பேன்னு யோசிச்சிருந்தாலும், நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. ஏன் நம்ம வாழ்க்கையே நரகமா போயிருக்கும்.” 

கணவன் சொன்னதை ஆழமாகக் கவனித்த ஆதிரை, “நான் இப்படி இருக்கேனா அதுக்குக் காரணம் நீங்கதான் வெற்றி. நான் நானா இருக்க நீங்க விட்டுருக்கீங்க. கல்யாணம் பண்ண பிறகு எத்தனை பொண்ணுங்க இப்படி இருக்க முடியுமுன்னு தெரியலை. ஏன் சில வீட்ல கல்யாணத்துக்கு முன்னாடியே அப்படி இருக்க முடியாது.” என்றாள். 

“நீ எப்படி நீயா இருக்கியோ, அப்படி நானும் நானாத்தான் இருக்கேன். உனக்காக நான் என்னைச் சில விஷயத்துல மாத்திக்கிட்டாலும், அதை நான் விரும்பி தான் செய்றேன். அதனால நீ மத்தவங்களை நினைச்சு யோசிக்காத.” 

“நீ தெளிவா தைரியமா எல்லாமே பார்த்துக்கிறதுனாலதான், நான் வீட்டை பற்றிக் கவலைப்படாம இருக்கேன். அம்மா மேல உனக்கு வருத்தம் இருந்தாலும், அவங்களுக்குச் செய்ய வேண்டியதை நீ பார்த்து செய்வ, எனக்கு அதுவும் தெரியும்.” 

கணவனின் புரிதலான பேச்சில் தெளிந்தவளாக, ஆதிரை நித்திரைக் கொள்ள, அவளின் நெற்றியில் முத்தமிட்ட வெற்றியும் மெல்ல உறங்கிப் போனான். 

மதியம் வெற்றியும் விக்ரமும் கமிஷனரை சென்று பார்த்து வந்தனர். வெளியே காட்டிகொள்ளவில்லை என்றாலும், தங்கள் குடும்பத்தைக் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர். 

இவர்கள் எதிர்பார்த்தது போலத் திலீபன் ஒரு வாரத்தில் வெளியே வந்தாலும், அதன் பிறகு ஆளைக் காணவில்லை. இவர்கள் கமிஷனர் மூலம் விசாரிக்க, திலீபன் செய்த செயலில் கோபம் கொண்ட ரெட்டி, ஆந்திராவில் இருக்கும் அவன் கல் குவாரியில் திலீபனை வேலைக்கு வைத்து வாட்டுவதாகத் தெரிந்து கொண்டனர். இனி அவனிடம் இருந்து திலீபன் தப்பிக்க முடியாது. 

ஐந்து மாதங்கள் சென்று…. 

சக்தியின் திருமணத்தில் வெற்றியும் ஆதிரையும் வரவேற்பில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். விருந்தினரகளை வரவேற்பதும், அவர்கள் அந்தப் பக்கம் நகர்ந்ததும், கணவனும் மனைவியும் பேசி சிரிப்பதுமாக இருந்தனர். 


“நான் நல்லா இருக்கேனா, இந்தப் புடவை எனக்கு நல்லா இருக்கா…” 

“சூப்பரா இருக்கு… இன்னும் எத்தனை தடவை கேட்ப?” என வெற்றி புன்னகைக்க, அவனே நிறைய முறை சொல்லிவிட்டாலும், ஆதிரை திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்து கொண்டாள். 

விக்ரமும் வனிதாவும் அப்போது வர, அவர்களைத் தங்களுடனே ஆதிரை நிறுத்திக் கொண்டாள். 

வனிதா விக்ரமிடம் “கல்யாணம் முடிஞ்சதும், எனக்குச் சென்னையைச் சுத்தி காட்டிட்டு தான் ஊருக்கு கூடிட்டு போகணும்.” என்றாள். 

“நாம போயிட்டு இன்னொரு தடவை வருவோம்.” என விக்ரம் சமாளிக்க, 

“அந்த இன்னொரு தடவை வர… எத்தனை வருஷம் ஆகும்னு எனக்குத் தெரியும். அதனால இந்தத் தடவையே போகணும்.” என வனிதா சொன்னதற்கு, 
“நீ ஆதிரையோட சேர்ந்து ரொம்பப் பேசுற.” என்ற விக்ரம், “என்ன உன்னோட ட்ரைனிங்கா.” என ஆதிரையைப் பார்த்துக் கேட்க, “ஆமாம் இப்ப அதுக்கு என்னங்கிறீங்க? வந்திருக்கும் போதே ஊர் சுத்தி பார்த்திட்டு போறதுக்கு என்ன? இதுக்கு இன்னொரு தடவை நீங்க கிளம்பி வருவீங்களா…கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிட்டு கிளம்புங்க, நைட் வந்து எங்க வீட்ல தங்கிட்டு, நாளைக்கு விருந்து முடிஞ்சு கிளம்பலாம்.” என்றாள் ஆதிரை. 

“அக்கா சொல்றது போலப் பண்ணலாம். என்னை நீங்க ஷாப்பிங் எல்லாம் கூடிட்டு போகணும்.” 

“நீ என்னையே மிரட்டுற அளவு தேறிட்ட…. சரி கூடிட்டு போறேன்.” என்ற விக்ரமை, வெற்றி கேலியாகப் பார்க்க, 

“எல்லாம் உன் பொண்டாட்டியால..” என விக்ரம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல… 

“தைரியம் இருந்தா அதைச் சத்தமா சொல்லேன்.” என வெற்றி சிரிக்க, விக்ரம் அவனை முறைத்தான். 

முஹுர்த்த நேரம் நெருங்க, மாப்பிள்ளை ஊர்வலம் முடிந்து, திருமணப் புடவையுடன் ஆதிரையும் வனிதாவும் மணமகள் அறைக்குச் செல்ல, “அண்ணி என்னோட மேக்கப் நல்லா இருக்கா?” என மேனகா அவளைக் கேட்க,
 சம்ப்ரதாயதிற்கு இல்லாமல், நிஜமாகவே ஆதிரை அவளை ஆராய்ந்து, “இன்னும் கொஞ்சம் போடலாம்.” என்றாள். 

அவள் அம்மாவும் அக்காவும் அதைச் சொன்ன போது நம்பாமல் இருந்தவள், ஆதிரை சொன்னால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில், இன்னும் கொஞ்சம் போட்டுக் கொண்டாள். 

திருமணத்திற்குப் புடவை எடுக்கப் போன போதே மேனகா கவனித்திருந்தாள். மஞ்சுளா சொன்னது போல, ஆதிரை போலி அதிகாரம் எல்லாம் செய்யவில்லை. “நீ இப்ப விட்டேனா, எப்பவும் அவ அதிகாரமா போயிடும்.” என்றெல்லாம் மஞ்சுளா பயம் காட்டியிருந்தார். அதில் மேனகா கொஞ்சம் குழம்பியே இருந்தாள். 

திருமணத்திற்கு எடுக்க மேனகாவே வந்திருப்பதால், அவள் விருப்பத்திற்கு எடுக்கட்டும் என ஆதிரை, தன் அம்மாவிற்கு உறவினர்களுக்கு என்றுதான் புடவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மேனகாவே அவளிடம் இந்தப் புடவை நல்லா இருக்கா என்றபோது, “நல்லா இருக்கே… வரவேற்புக்கு இப்படிப் பளிச்சுன்னு இருந்தா தான் நல்லா இருக்கும். நீ எதுக்கும் சக்தியை கேட்டிக்கோ.” என்றாள். 

வெற்றியும் அன்று வந்திருந்தான். ஆதிரை தனக்கு எடுத்த புடவையை வெற்றியிடம் காட்டி நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டவள், கணவனுக்குக் கோட் சூட் என வரவேற்பிற்கு வாங்க, “ஏய் நான் இதை ஒருநாள் போடுவேனா, அதுக்குப் போய் எதுக்கு டி கோட் எடுக்கிற?” என வெற்றி சொன்னதற்கு… 

“என் தம்பி கல்யாணத்துல வீட்டு மாப்பிள்ளையா நீங்க ஜம்முன்னு இருக்க வேண்டாமா…. அதெல்லாம் கண்டிப்பா எடுக்கணும்.” என்றவள், திருமணத்திற்குப் பட்டு வேஷ்ட்டி சட்டை எடுத்தாள். 

“இவ அடங்க மாட்டா…” என வெற்றியும் விட்டுவிட்டான். ஆதிரையின் அதிகாரம் எல்லாம் கணவனிடம் தான். அவள் மேனகா எடுப்பதில் எல்லாம் தலையிடவில்லை. எப்போதுமே நம் எல்லை தெரிந்து நடந்து கொண்டால், குடும்பத்திற்குள் வீண் பிரச்சனை வராது. 

நாம் நம் வீட்டை தான் ஆளவும், அதிகாரமும் செய்யலாம், அடுத்த வீட்டில் நமது அதிகாரத்தைக் காட்டினால்… வீணாக நம் மரியாதை தான் குறையும். ஆதிரைக்கு அது நன்றாகவே தெரியும். ஆதிரையின் இந்தக் குணம், மேனகாவை அவளோடு இன்னும் ஒட்டிக்கொள்ளச் செய்தது. 

சக்தி மேனகா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆதிரை மகளாகச் சகோதரியாகத் தனது பங்கை நிறைவாகச் செய்தாள். தங்கள் பக்க உறவினர்களுக்கு வெற்றி ஒரு தனி வாகனம் ஏற்பாடு செய்திருக்க.. திருமணம் முடிந்ததும் உண்டு விட்டு உறவினர்கள் கிளம்ப, அதில் விக்ரமின் பெற்றோரும் கிளம்பி சென்றனர். 

ஆதிரை மனோஜை கண்டுகொள்ளவே இல்லை. வெற்றி எதுவும் காட்டிக்கொள்ளாமல் அவனோடு பேசினான். அதோடு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த மணமக்களோடு மனோஜும் வந்திருக்க, வெற்றி அவனோடு பேசிக்கொண்டு இருந்தான். அதிரை மற்றவர்களுக்குத் தெரியாமல் கணவனை முறைத்தாள். 

பால் பழம் அருந்திவிட்டு, மணமக்கள் மறு வீட்டிற்குக் கிளம்ப, மாலையில் விக்ரமும் வனிதாவும் சுஜியோடு அருணையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றனர். அப்படியே ஷாப்பிங் போய் விட்டு, இரவும் உணவும் வெளியேவே முடித்துக் கொண்டு வந்துவிடுவதாகச் சொல்லிக் கிளம்பினர். 

இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்து விடும்படி. மங்கை சொல்ல…. வனிதாவுக்கு ஹோட்டலில் சாப்பிடுவது பிடிக்கும் என்பதால்… “அவங்க வெளியே சாப்பிட்டு வரட்டும் விடுங்க மா.” என்றாள் ஆதிரை. கணவனோடு வெளியே செல்லும் குஷியில், வனிதா கிளம்பி சென்றாள். 

அவர்களின் இன்னொரு வீட்டில் உறவினர்களைத் தங்க வைத்திருந்ததால்…. வீட்டில் கொஞ்சம் பேர்களே இருந்தனர். ஆதிரை புடவை மாற்ற அவளின் அறைக்குச் செல்ல, அதைக் கவனித்த வெற்றியும் பின்னே சென்றான். 

ஆதிரை அன்று அணிந்திருந்தது அவர்களின் திருமணப்புடவை. தங்களின் திருமண நாளின் இனிய நினைவில் வெற்றி இருக்க, ஆதிரை மாறாகச் சண்டை போடும் மனநிலையில் இருந்தாள். 

அவன் அறைக்குள் வந்து கதவை சாற்றிய நொடி… “உங்களுக்கு என்ன அவனோட பேச்சு? அவனெல்லாம் ஒரு ஆளுன்னு பேசிட்டு இருக்கீங்க. அவனையெல்லாம் மதிக்கவே கூடாது.” என அவள் பொரிய… 

“விடு ஆதி, அவன் அப்படின்னா, நாமளும் அப்படி இருக்க முடியுமா… அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.” என்றான் வெற்றி. 

“ரொம்ப நல்லவனா இருக்காதீங்க. நம்மை இளிச்சவாயன்னு நினைச்சிடுவாங்க.” 

“ம்ம்… நான் மட்டும் தான் அப்படியிருகேனா… வனிதாவுக்காக நீயும்தான் விக்ரம்கிட்ட பரிந்து பேசுற. நீ மட்டும் என்னவாம்.” 

“வனிதாகிட்ட முகத்தைத் திருப்பவும் முடியலை… அதோட விக்ரமுக்காகவும் பார்க்கணும் இல்ல…” 

“அது போலத்தான் நானும். உங்க அப்பாவுக்காகவும் சக்திக்காகவும் பார்கிறேன்.” 

“இதுதான் நம்ம குணம். மத்தவங்களுக்காக நாம என் நம்மை மாத்திக்கணும் ஆதி. அவங்க எப்படியிருந்தாலும், நாம நாமாவே இருப்போம்.” 

கணவன் சொல்வதில் இருந்த உண்மை விளங்க… ஆதிரையின் முகமும் மலர்ந்தது. 

“இப்ப ஏன் மத்தவங்களைப் பத்தி பேச்சு. இந்தப் புடவையில நம்ம கல்யாணத்தின் போது இருந்த மாதிரியே இருக்க ஆதி.” என வெற்றிச் சரசமாகச் சொல்ல.. 

“பொய் சொல்றீங்க. இன்னைக்குத் தையலை பிரிச்சு விட்டு தான் ப்ளவுஸ் போட வந்தது. அப்படியே இருக்கேனாம்.” 

ஆதிரை சொன்னதைப் பார்த்து வெற்றிக்குச் சிரிப்பு வர, அதை அடிக்கியவன், “ஏன் டி ரெண்டு குழந்தை பெத்திருக்க… பிறகும் அப்படியேவா இருப்ப….அதோட அப்ப நீ ரொம்ப ஒல்லியா இருப்ப… ஆனா இப்பதான் இன்னும் கும்முன்னு அழகா இருக்க.” என்றான். 

“எல்லோரும் வெயிட் போட்டுட்ட சொன்னா, நீங்க வேற மாதிரி சொல்லுங்க.” என ஆதிரை கட்டிலில் உட்கார, அவள் அருகில் உட்கார்ந்த வெற்றி, “நீ எப்படி இருந்தாலும் எனக்கு நீ அழகு டி.” எனக் கொஞ்ச வர…. 

“அப்ப நான் நல்லா இல்லையா?” என ஆதிரை சண்டைக்குக் கிளம்ப…. 

“உன்னையெல்லாம் பேசவே விடக் கூடாது டி.” என்ற வெற்றி ஆதிரையை அருகில் இழுத்து, அவள் இதழை சிறை செய்தான். 

ஆதிரையின் குணத்திற்கு எப்போதும் கொஞ்சலாக இல்லையென்றாலும், கொஞ்சலும் மிஞ்சலுமாக அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில், நாமும் விடைபெறுவோம்.

Advertisement