இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 9
ஆனந்தி முதலில் வனிதாவிற்காக வருவது போலத் தெரிந்தாலும், பிறகு தன்னை உயர்த்திக் காட்ட தோழியையே மட்டம் தட்ட முனைந்தாள். அதுவும் விக்ரம் மற்றும் வீட்டினரின் முன்பு.
“என்ன இவ்வளவு நேரம் ஆச்சு, நீ இன்னும் சமைக்கலையா? என்னதான் அப்படிப் பண்ணுவியோ? சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவியா?”
“இது பண்ண இவ்வளவு நேரமா?”
“என்கிட்டே எல்லாம் இந்த மாதிரி வீட்டைக் கொடுத்தா எப்படி வச்சிருப்பேன் தெரியுமா? நீயும் வச்சிருக்கியே.”
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல…. தோழியின் எண்ணம் வனிதாவுக்குப் புரிய ஆரம்பித்தது. தீட்டியவனையே பதம் பார்க்கும் கத்தி போல ஆனந்தியும் இருந்தாள்.
வனிதா ஆனந்தியை தனியாகக் கூப்பிட்டு முதலில் பேசி பார்த்தாள்.
“நீ செய்றது சரியில்லை ஆனந்தி. நீ வேலைக்குத்தான வந்த, வந்த வேலையை மட்டும் பாரு.”
“நான் என் வேலையை மட்டும் தான் பார்க்கிறேன்.”
“என் புருஷனை கவனிக்கிறது, பிள்ளையைக் கவனிக்கிறது என் மாமனார் மாமியாருக்கு ஐஸ் வைக்கிறது எல்லாம் தான் உன் வேலையா?”
“உன் புருஷனே எதுவும் சொல்லலை பிறகு நீ ஏன் சொல்ற?”
“அவர் என்ன சொல்லணும். அதுதான் நான் சொல்றேன் இல்லை… ஒழுங்கா ஒதுங்கி போயிடு.”
“உன்னைத்தான் இங்க யாருக்கும் பிடிக்கலை இல்லை. நீ வேணா ஒதுங்கி போயிடு.”
ஆனந்தி சொன்னதைக் கேட்டு வனிதா அதிர்ந்து போனாள்.
“அடிப்பாவி என் வீட்டுக்குள்ள வந்து என்னையே விரட்ட பார்க்கிறியா?”
“சரி நீயும் இருந்திட்டு போ.. நானும் இருந்திட்டு போறேன்.”
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு. விளக்காமாறு பிஞ்சிடும்.”
“புருஷனையும் பிள்ளையும் ஒழுங்கா கவனிக்கத் துப்பு இல்லை. என்னைச் சொல்ல வந்திட்டா.”
“இரு அவர்கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டு தூக்கிறேன்.”
“வேண்டாம் வனிதா, அப்புறம் நீ காலேஜ் படிக்கும் போது சுத்தினியே சுரேஷ் அவனைப் பத்தி விக்ரம்கிட்ட சொல்லிடுவேன். அப்புறம் அவரே உன்னை விரட்டிடுவார். எப்படி வசதி?” என்றதும், வனிதா அரண்டு போனாள்.
கல்லூரி படிக்கும்போது சுரேஷ் என்பவனைக் காதலித்தது என்னவோ உண்மை. ஆனால் தவறு ஏதும் செய்யவில்லை. ஆனால் விக்ரம் அதை நம்ப வேண்டும் அல்லவா?
முதலில் மிரட்டிய வனிதா பின்பு தன் வாழ்க்கைக்காகக் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ் ஆனந்தி……அவர்கிட்ட எதுவும் சொல்லிடாத.”
“அவர்கிட்ட நான் எதுவும் சொல்லக் கூடாதுன்னா… நீ என் விஷயத்தில தலையிடாத.”
“அது எப்படி விட முடியும்? உனக்குக் கல்யாணம் ஆகாத யாரும் கிடைக்கலையா… என் புருஷன் தான் கிடைச்சாரா?”
வனிதா கேட்டதற்கு அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஆனந்தி சென்றுவிட, தன் வாழ்க்கை தன் கையை விட்டு போய் விடுமோ என வனிதாவுக்கு அச்சமாக இருந்தது.
ஆனந்தி தன் வாழ்க்கையைப் பரித்துக்கொள்வாளோ என்ற பயம் மற்றும் பதட்டத்தில், விக்ரமிடம் எதையும் தெளிவாகச் சொல்லாமல், சொல்லவும் முடியாமல், ஆனந்தியை வேலையை விட்டு நிறுத்தும்படி சண்டையிட்டாள்.
“ஏய் நீ வேலையில சேருன்னா சேர்க்கணும், நீ வேண்டாம்னு சொன்னா நிறுத்தணுமா? அவளை ஏன் நிறுத்தணும்? அதுக்குக் காரணம் சொல்லு. வேலையை அவ ஒழுங்காதான பார்க்கிறா?”
“அவ வேலையை மட்டுமா பார்க்கிறா? என் வேலையையும் பார்க்கனும்ன்னு நினைக்கிறா?”
“உன் வேலையை நீ ஒழுங்கா பார்த்திருந்தா அவ ஏன் பார்க்கணும்னு நினைக்கப் போறா.” எனச் சொல்லிவிட்டு விக்ரம் சென்றுவிட… வனிதாவுக்கு அவன் எதைச் சொல்கிறான் எனப் புரியவில்லை. விக்ரமும் ஆனந்தியின் செயலுக்கு உடந்தையா எனச் சந்தேகம் எழுந்தது.
இதை யாரிடம் போய்ச் சொல்வது? மாமனார் மாமியாருக்கு இவளிடம் மரியாதையும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. இவள் சொன்னாள் நம்பவும் மாட்டார்கள். இவளைத்தான் குறை சொல்வார்கள்.
அவள் பிறந்த வீட்டை பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கென்று அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்றே பார்ப்பார்கள்.
என்ன செய்வது? எதைச் செய்து தன் வாழ்க்கையைக் காப்பாற்றுவது எனப் புரியவில்லை. யோசித்தபடியே மதியம் வரை படுத்தே கிடந்தாள். குளிக்கவில்லை, சாப்பிடவில்லை, வீட்டில் ஒரு வேலையும் பார்க்கவில்லை.
விழிகளை மூடி படுத்திருந்தவளுக்கு, இருட்டில் சிறு வெளிச்சம் போல ஆதிரையின் முகம் நினைவுக்கு வர… சட்டென்று எழுந்தவளுக்கு என்ன செய்யவேண்டும் எனப் புலப்பட்டது. தன் வாழ்க்கையின் மீது சிறு நம்பிக்கையும் ஏற்பட்டது.
உடனே ஆதிரையைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் இருந்த வேலைகள் மற்றும் மகள் பள்ளியில் இருந்து வருவாள் என்பது நினைவுக்கு வர… மடமடவென்று வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
வனிதா குளித்துவிட்டு சமைத்துக் கொண்டிருந்த போது, சுஜி பள்ளியில் இருந்து வந்துவிட்டாள்.
ஆனந்தி மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்வது வழக்கம். சென்றுவிட்டுத் திரும்பும்போது அன்றும் இங்கே வந்தவள், சுஜி உனக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு வறுவல் கொண்டு வந்திருக்கேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தட்டில் உணவுடன் வந்த வனிதா, “சுஜி இங்க வா…” என்றவள், மகளுக்குத் தான் கொண்டு வந்த உணவை ஊட்ட ஆரம்பிக்க..
“சுஜி இந்தா இதையும் எடுத்துக்கோ.” என ஆனந்தி சொல்ல..
“வேண்டாம் ஆன்டி. அம்மாவும் உருளைக்கிழங்கு வச்சிருக்காங்க. எனக்கு அம்மா பண்ணதுதான் பிடிக்கும்.” என்றாள் சுஜி.
தெய்வா ஆனந்தியிடம் பேசுவாரே தவிர…அவள் கொண்டு வருவதை எல்லாம் தொடவே மாட்டார். வனிதா ஆனந்தியிடம் பேசவேயில்லை. அதனால் ஆனந்தி தான் கொண்டு வந்ததைத் திருப்பி எடுத்துக் கொண்டு சென்றாள்.
இன்று வனிதாவின் பார்வை ஆனந்திக்குக் குழப்பத்தைத் தர… என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே சென்றாள்.
ஆதிரை என்னும் சுறாவளி தன்னைத் தூக்கி சுழற்றி அடித்து விடும். ஒரு நொடியில் தான் காணாமல் போகப் போகிறோம் என அவளுக்கு அப்போது தெரியவில்லை.
மகள் உணவு உண்டதும், வனிதா ஆதிரையைப் பார்க்க சென்றாள்.
மனைவிக்காக வெற்றி சீக்கிரமே மதிய உணவுக்கு வந்திருந்தான். இருவரும் உண்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருக்கும்போது தான் வனிதா வந்தாள்.
இவள் எதற்கு வருகிறாள் என்றுதான் வெற்றிக்கு இருந்தது. ஆனால் வனிதாவின் முகத்தைப் பார்த்து எதோ சரியில்லை என உணர்ந்தவன், அவர்கள் இருவரும் பேசட்டும் என வெளியே சென்றுவிட்டான்.
ஆதிரையிடம் வனிதா எல்லாவறையும் தன்னை ஆனந்தி மிரட்டுவது உட்பட அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
“நான் உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் அக்கா. நீங்க மட்டும் எதுவும் செய்யலைனா எனக்குச் சாகிறது தவிர வேற வழி இல்லை.”
“விக்ரம் என்ன சொல்றார்?”
“அவருக்கு அவ எண்ணம் தெரியுமா தெரியாதா எனக்கு ஒன்னும் புரியலைக்கா. வேலையை விட்டு நிறுத்தட சொன்னா முடியாது சொல்லிட்டார்.”
“சரி வா…” என்றவள், வனிதாவுடன் மில்லுக்கு உடனே கிளம்பி சென்றாள்.
வெற்றி வெளியே ஹாலில் இருந்தான். “என்னங்க வாங்க மில்லு வரை போயிட்டு வந்திடுவோம்.” என்றதும், வெற்றி எதற்கு என்பது போலப் பார்க்க…
“வாங்க சொல்றேன்.” என ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள். விக்ரமோடு எதோ பஞ்சாயத்து என வெற்றிக்குப் புரிந்துதான் இருந்தது.
மில்லின் அலுவல் அறையில் விக்ரம் இருக்க… ஆனந்தியும் அவனோடு எதோ பேசி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
முதலில் வெற்றி வர… “வா டா நல்லவனே இன்னைக்குத்தான் உனக்கு மில்லை எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சுதா?” என விக்ரம் சொல்லும் போதே, ஆதிரையும் வனிதாவும் உள்ளே வர… விக்ரம் அவர்களைக் கேள்வியாகப் பார்த்தான்.
“வாங்க முதலாளியம்மா…” என அவன் ஆதிரையை வரவேற்க…
“முதலாளின்னு உங்க ப்ரண்ட் வாய்தான் சொல்லுது…” என ஆதிரை வெற்றியிடம் சொல்லும் போதே, விக்ரம் அவன் இருக்கையில் இருந்து எழுந்து இருந்தான். ஆதிரை சென்று அதில் உட்கார்ந்து கொண்டவள், எதிர் இருக்கையை வனிதாவிற்குக் காட்டினாள்.Advertisements
நண்பனின் அருகே சென்று நின்று கொண்ட விக்ரம், ஆனந்தியைப் பார்த்து போ என்றான். வனிதா இருக்கத் தான் போவதா என ஆனந்திக்கு இருந்தாலும், மறுத்து சொல்ல முடியாமல் வெளியே சென்றாள்.
Advertisements