Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 8 

தெய்வாவும், மூர்த்தியும் முன்பாவது எதாவது ஒன்னிரண்டு வார்த்தைகள் வனிதாவிடம் பேசுவார்கள். இப்போது சுத்தமாகப் பேசுவது இல்லை. அவளைப் பார்ப்பதையே தவிர்த்து ஒதுங்கி போனார்கள். 


வனிதாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. இப்படி எதாவது அதிரடியாகச் செய்தால் தான் இவர்களை மிரட்டி வைக்க முடியும் எனத் திமிராகவே இருந்தாள். 

மதிய உணவுக்கு வந்த மகனிடம், “ஆதிரை மில்லுக்கு வர்றதா சொன்னியே, வந்திட்டு தான இருக்கு.” என மூர்த்திக் கேட்க, 

“இல்லைப்பா… ஆதிரை வர மாட்டான்னு வெற்றி சொல்லிட்டான். அதுதான் வேற ஆள் பார்க்கிறோம்.” என விக்ரம் சொல்ல… வனிதா முகத்தில் வெற்றி களிப்பு. அதைக் கவனித்த விக்ரம் அவளை முறைக்க, வனிதா மிதப்பாகவே இருந்தாள். 
தான் எதோ சாதித்தது போல நினைத்து சுற்றிக்கொண்டு இருந்தாள். தனக்கு தானே குழி வெட்டிக்கொள்கிறோம் என அப்போது அவளுக்கு தெரியவில்லை.

ஆதிரை சரியாக உண்ண முடியாமல் சோர்ந்து சோர்ந்து படுக்க… அவளுக்கு உடல்நலத்தில் பிரச்சனையோ எனப் பயந்து மருத்துவமனை சென்றால்… அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் சொல்ல… எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் கணவனும் மனைவியும் திகைத்துதான் போனார்கள். 

இன்னொரு வாரிசு வரப்போகிறது என்றதும், குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

ஆதிரையை மில்லுக்குப் போகலையா எனக் கேட்டுக் கொண்டிருந்த ஜோதியே, “இனிமே வெளிய எங்கேயும் அலையாம வீட்ல இருக்கட்டும்.” என்றார். 

ஆதிரைக்கு முதல் கர்ப்பத்தில் எந்த உடல் உபாதைகளும் இருக்கவில்லை. அவளுக்கே அப்போது தான் கர்ப்பமாக இருக்கிறோமா எனச் சந்தேகமாக இருக்கும். அதற்கும் சேர்த்து இந்தத் தடவை படுத்தி எடுத்தது. மசக்கையில் மிகவும் துவண்டு போனாள். 
“என்னை ரொம்ப படுத்தி வைக்கிற… வெளிய வா உனக்கு இருக்கு.” என வயிற்ருள் இருக்கும் குழந்தையை ஆதிரை மிரட்டினால், “அருண் என்னைப்போல சமத்து. உள்ளே உன்னைப்போல ஒரு ரவுடி பேபி இருக்கு போல…அதுதான்.” என்பான் வெற்றி.

அறுபது நாட்கள் முடிந்ததும், வீட்டிலேயே இருப்பது ஒருமாதிரி இருக்கு என ஆதிரை சொல்ல… கணவனும் மனைவியும் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரலாம் எனக் கிளம்பினர். 

அன்று பார்த்து வனிதா சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். வெற்றியும் ஆதிரையும் ஜோடியாக வருவதைப் பார்த்தவள், புன்னகையுடன் அவர்களை நெருங்க… ஆதிரை பார்வையாலையே அவளைத் தள்ளி வைத்தாள் என்றால்… வெற்றிக்கோ மனதில் இருந்த மகிழ்ச்சி குறைய, இவள் இப்போது பார்த்தா வர வேண்டும் என நினைத்தவன், ஆதிரையின் கையை அழுத்தத்துடன் பற்றியபடி, ஒரு சிறு தலையசைப்புடன் வனிதாவை கடந்து சென்றுவிட்டான். 

வனிதாவிற்குத் தான் முகத்தில் அறைந்தது போல ஆகிவிட்டது. இதற்கு முன்பு இப்படித் தனியாகப் பார்த்தால், “எப்படி இருக்க? எதுல வந்த? எப்படிப் போகபோற?” இப்படி எதாவது வெற்றி அக்கறையாக விசாரிப்பான். ஆதிரையுமே நன்றாகப் பேசுவாள், அவளை வீட்டிற்கு அழைப்பாள். ஆனால் இன்று யாரோ போல அவர்கள் நடந்து கொண்டதும், மனதிற்கு வருத்தமாக இருந்தது. 

அவள் பேசியது சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயமா? இவள் போதைக்கு ஆதிரையை ஊறுகாய் ஆக்கினால் சும்மாவா விடுவார்கள். 

வனிதா இன்னொன்றும் செய்தாள். சொந்த செலவில் சூனியம் வைத்தது போல… தனது தோழி ஆனந்தியை விக்ரமிடம் வேலைக்குச் சிபாரிசு செய்தாள். 

ஆனந்தி டிகிரி முடித்துக் கம்ப்யூட்டர் கோர்ஸும் முடித்துச் சின்ன நிறுவனங்களில் வேலைப் பார்த்து கொண்ட்டிருந்தாள். பள்ளியில் இருந்து இருவரும் தோழிகள், வீடும் அருகருகே தான். 

விக்ரமும் இந்த ஒன்றிலாவது மனைவி சொல்வதைக் கேட்டுதான் பார்ப்போமே என ஆனந்தியை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். 

விக்ரம் வேலைக்குச் சேர்த்த பெண்ணை வெற்றிக்கு பிடிக்கவே இல்லை. அவள் எதோ தன்னை ஆர்வமாகப் பார்ப்பது போலவே அவனுக்குத் தோன்றியது. அது எரிச்சலை தர, வேற ஆள் பார்ப்போமே என்றால் விக்ரம் கேட்கவில்லை. 

“என்னவோ பண்ணு நீயே மில்லை பார்த்துக்கோ… நான் முடிஞ்ச போது வரேன். இந்த மாதிரி நேரத்தில ஆதிரை சீக்கிரம் சாப்பிடிட்டு தூங்கினா நல்லது. நான் வீட்டுக்கு போறவரை அவ தூங்க மாட்டா.” 

“நீ ஆதிரையைப் பாரு. நான் மில்லை பார்த்துகிறேன்.” 

வெற்றிக்கும் பகலில் அவர்கள் தோட்டத்தில் வேலை இருக்க… நடுநடுவே வந்து மனைவியைப் பார்த்துக் கொண்டான். மில்லிலும் தனியாக ஆள் போட்டு விட்டதால், வெற்றி வீட்டில் இருந்தே கணினியில் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்து விடுவான். 

விக்ரமின் கார் ஓட்டுனர் வனிதாவிற்கு உளவு சொல்பவன். விக்ரம் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்றெல்லாம் அவளிடம் சொல்லிவிடுவான். 

“அண்ணன் இப்ப மில்லுள்ள தான் அதிகம் இருக்காரு. வெற்றி அண்ணன் முன்ன மாதிரி மில்லுக்கு வர்றது இல்லை.” என அவன் சொல்ல… 

கணவன் மில்லில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என வனிதா நினைத்துக் கொண்டிருந்தாள். கணக்கு பார்க்க வந்தவள், தன் கணவனைக் கணக்கு பண்ணுகிறாள் எனத் தெரிய வரும்போது என்ன ஆவாளோ. 

ஆதிரை கருவுற்று இருப்பதால், புகுந்த வீடு, பிறந்த வீடு என இரு வீட்டாரும் அவளைச் சீராட்டினர். கிர்த்திகா குடும்பத்துடன் வந்து தம்பி மனைவியைப் பார்த்துவிட்டு சென்றாள். 

ஆதிரையின் பாட்டி வந்து துணைக்கு இருக்க… ஜோதியும் அவருமே பேசிக்கொண்டு சமைத்தனர். அப்போதும் ஜோதி ஆதிரையை விடவில்லை. வேலை செஞ்சாத்தான் சுகப் பிரசவம் ஆகும் என அவளையும் வேலை வாங்கி விடுவார். 

ஆதிரையின் பெற்றோரும் மகளை அடிக்கடி பார்க்க வந்தனர். அருணுக்கு விடுமுறை என்றால் ஆதிரை சென்னைக்கு அம்மா வீட்டிற்குச் சென்று விடுவாள். 

ஐந்து மாத முடிவில் ஆதிரைக்கு மசக்கை எல்லாம் குறைந்து, அவளே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளின் பாட்டியும் சென்னைக்குச் சென்று விட்டார். 

வனிதாவின் தோழி எப்படி இருப்பாள்? அவள் வனிதாவையே மிஞ்சும் அளவில் இருந்தாள். இதில் வனிதா வேறு தனக்கும் விக்ரமிற்கும் இடையே நடக்கும் அனைத்து விஷயங்களையும், இப்போது நடந்த ஆதிரை விஷயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவளிடம் உளறி இருந்தாள். 

முதலில் ஆனந்திக்கு வெற்றியின் மீதே கண். அவன் மடிவான என்றுதான் பார்த்தாள். இவளின் ஆர்வமான பார்வைகளைக் கவனித்தவன், மில்லுக்கு வருவதையே குறைத்துக்கொள்ள… ஆதரவு தந்த தோழியையே பதம் பார்க்க துணிந்தாள். 

எதை எவரிடம் சொல்ல வேண்டும் சொல்லக் கூடாது என்று இருக்கிறது.  கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு இல்லை என்பது ஆனந்திக்கு புரிந்தது. தனது தோழி தவறவிட்டதைத் தான் பிடிக்க முயன்றாள். 

பளிச்சென்று உடை அணிந்து வருபவள், வேலையிலும் குறை கண்டுபிடிக்க முடியாத அளவு கெட்டிக்காரியாக இருந்தாள். எள் என்பதற்குள் எண்ணையாக நின்றாள். 

சில நாட்கள் சென்றதும், தானே செய்தது எனச் சொல்லி வீட்டில் இருந்து உணவு வகைகளைக் கொண்டு வந்து விக்ரமிற்குக் கொடுத்தாள். 

சில நாட்களில் வீட்டிற்கே வர ஆரம்பித்தாள். உரிமையாக விக்ரமின் பெற்றோரோடு பேசினாள். சுஜிக்குப் பிடித்தது சமைத்துக் கொண்டு வந்து அவளைச் சீராட்டினாள். தோழி தனக்காகச் செய்கிறாள் என வனிதா நினைத்துக் கொண்டாள். 

ஆதிரைக்கு ஏழாம் மாதம் தொடக்கத்தில் அனைவரையும் அழைத்து வளையல் போட்டனர். விக்ரமின் வீட்டிற்கும் அழைப்பு வந்திருந்தது. விக்ரம் அதன்பிறகு இன்னும் ஆதிரையைப் பார்க்கவே இல்லை. அவன் பெற்றோர் மட்டும் ஒருநாள் சென்று ஆதிரையைப் பார்த்து விட்டு வந்திருந்தனர். 

திருமணப் புடவையில் பிரத்யேகமான அலங்காரத்தில் அதிரை ஜொலிக்க, வெற்றிக்கோ பார்வையை மனைவியை விட்டு வேறு எங்கும் திருப்ப முடியவில்லை. 

எல்லோரும் வளையல் அடுக்கி இருக்க… கடைசியாக வெற்றி மனைவிக்கு வளையல் போட வந்தான். சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு, அவன் கண்ணாடி வளையல்களைக் கையில் எடுக்க… சுற்றி இருந்த உறவு கூட்டம், “இது செல்லாது செல்லாது.” எனக் குரல் எழுப்ப…வெற்றி சிரித்துக் கொண்டே மனைவிக்குக் கண்ணாடி வளையல்கள் அணிவித்தவன், அடுத்து தான் வாங்கி இருந்த மரகத வளையலை அணிவிக்க… 

“அது தானே பார்த்தோம். உன் பொண்டாடிக்கு நீ வெறும் கண்ணாடி வளையல் போடுறவனா?” என்றாள் கிர்த்திக்கா. 

அந்த நேரம்தான் விக்ரமும் வனிதாவும் உள்ளே நுழைந்தனர். விக்ரமிற்கு வளைகாப்பிற்குச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். விக்ரமும் வெற்றியும் எவ்வளவு நெருக்கம் என அனைவரும் அறிந்ததே… செல்லவில்லை என்றால் அதே எல்லோரின் கண்களுக்கும் வித்தியாசமாகத் தெரியும். இருவருக்கும் நடுவே என்னவோ என மற்றவர்களை யோசிக்கவும் வைக்கும். எதற்கு அதற்கு இடம் தர வேண்டும் என விக்ரம் நினைக்க… அதையே வெற்றியும் நினைத்தான். 

“நாமே யாருக்கும் ஊகிக்க இடம் கொடுக்க வேண்டாம். விக்ரம் வந்தா நீ வாங்கன்னு மட்டும் கேட்டுடு.” என வெற்றி சொல்லி இருந்தான். 

வளைகாப்பு அன்று முதலில் தனது பெற்றோரை அனுப்பி வைத்த விக்ரம். விழா முடியும் நேரத்திற்குத்தான் வனிதாவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். 

என்ன விக்ரம் முதல் ஆளா நீ இருக்க வேண்டாமா என்ற உறவுகளிடம், கொஞ்சம் வேலையில மாட்டிகிட்டேன் என்றவன், மற்ற ஆண்களோடு பேசுவது போல ஒதுங்கியே நின்று கொண்டான். ஆதிரைக்கு வளை அடுக்கி முடித்து திரிஷ்ட்டி கழித்துக் கொண்டு இருந்தனர். 

ஆதிரை விக்ரமோடு தான் என்றும் பேச மாட்டேன் எனச் சொல்லி இருந்தாள். இத்தனை நாள் ஒதுங்கி இருந்த நண்பனும் ஏன் வந்திருக்கிறான் என வெற்றிக்கும் புரிந்தது. மனைவிக்கும் நண்பனுக்கும் இடையே அவன்தான் மாட்டிக் கொண்டு இருந்தான். 

மனைவியையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. நண்பனையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதெற்கெல்லாம் காரணமான வனிதா மீது கோபமாக வந்தது. 

ஆதிரை எவ்வளவு நன்றாகப் பேசுவாள், இப்போது அவள் பட்டும் படாமல் வா என மட்டும் வனிதாவை அழைத்து இருந்தாள். மற்ற உறவினர்களுடன் பேசும் சாக்கில் வனிதாவை தவிர்க்கவும் செய்தாள். வனிதாவிற்கு முகம் சுருங்கி விட்டது. 

வனிதா மட்டும் ஆதிரையிடம், எப்பவும் உங்களை ஒப்பிட்டு என்னைக் குறை சொல்றாங்க எனவோ அல்லது அவள் பிரச்சனை என்ன என்று ஒழுங்கான முறையில் சொல்லி இருந்தால்… வெற்றியும் ஆதிரையும் விக்ரமைதான் உண்டு இல்லை என ஆக்கி இருப்பார்கள். அதை விட்டு ஆதிரை மீது பொறாமையில் வனிதா பேசத்தெரியாமல் உளறி, நல்ல உறவை இழந்து நின்றாள். 

எல்லோரும் வனிதாவை சாப்பிட சொல்லியும், வனிதா சாப்பிட செல்லாமல் இருந்தாள். அவள் தான் சொல்லாமல் செல்லமாட்டாள் என ஆதிரைக்குத் தெரியும். நீ சாப்பிட்டா சாப்பிடு இல்லைனா போ என்றுதான் முதலில் இருந்தாள். 

விக்ரமும் பந்தி நடக்கும் இடத்தில் அனைவரையும் கவனித்துக் கொண்டு இருந்தான். இன்னும் அவனை ஆதிரை வா என்று கூட அழைக்கவில்லை. 

மனைவியைத் தனியே அழைத்துச் சென்ற வெற்றி, “ஆதிரை ப்ளீஸ் எனக்காக. நீ சொல்லாம அவங்க சாப்பிட மாட்டாங்க. நமக்காகத்தான் அவன் வந்திருக்கான் புரிஞ்சிக்கோ.” என்றதும், ஆதிரை மறுக்காமல் கணவனுடன் சென்றாள். 

இவர்கள் பந்தி நடக்கும் இடம் செல்ல, கணவன் என்ன செய்கிறான் எனப் பார்க்க வனிதாவும் வந்தாள். 

“வாங்க…” என ஆதிரை சொல்ல, 

“எப்படி இருக்கீங்க மேடம்?” என விக்ரம் கேட்க, 

பதிலுக்கு தலையை மட்டும் அசைத்த ஆதிரை, அருகில் நின்ற வனிதாவிடம், “உன் வீட்டுக்காரோட போய்ச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு.” எனச் சொல்ல…வனிதாவின் முகம் மலர்ந்தது. 

அப்போது அங்கே வந்த கிர்த்திகா, “நீதான் முதல்ல சாப்பிடணும். நீங்களும் அவங்களோட சேர்ந்து சாப்பிடுங்க. மற்ற எல்லோரும் சாப்பிட்டாச்சு.” எனச் சொல்ல… ஆதிரை உணவு உண்ணும் இடம் நோக்கி நடக்க, உடன் வெற்றியும் சென்றான். 

முதலில் ஆதிரை அடுத்து வெற்றி அவனுக்கு அடுத்து விக்ரம் அடுத்து வனிதா என உட்கார்ந்து உணவருந்த. அவர்கள் எப்போதும் போல இருப்பதாகவே மற்றவர்கள் நினைத்தனர். ஆனால் கண்ணுக்கு தெரியாத விரிசல் அங்கே இருந்தது. 

மற்றவர் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் மட்டும் விரிசல் இல்லையென்று ஆகி விடாது. கண்ணாடியில் விழுந்த விரிசலை கூட ஓட்ட வைத்து விடலாம். ஆனால் மனங்களுக்குள் விரிசல் விழுந்தால் ஓட்ட வைக்க முடியாது.

Advertisement