Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 7 

விக்ரம் காலையில் கிளம்பிக்கொண்டிருக்க, அந்த நேரம் வனிதா அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். 


“என்னங்க ஆதிரை அக்கா மில்லுக்கா வரப்போறாங்க.” 

“ம்ம்.. ஆமாம்.” 

“நானும் வீட்ல சும்மாத்தானே இருக்கேன். நானும் வரட்டுமா…” 

“ஆதிரை அங்க பொழுது போக்க வரலை…. கணக்கு வழக்கு பார்க்க வர்றா… நீ அங்க வந்து என்ன பண்ணுவ? முதல்ல உனக்கு என்ன தெரியும்?” 

“ம்ம்… சொல்லிக் கொடுத்தா நானும் தெரிஞ்சிக்கிறேன்.” 

“எங்க வேலையைக் குறைக்கத்தான் ஆதிரை வர்றதே. உனக்கு உட்கார்ந்து சொல்லிக் கொடுத்திட்டு இருக்க எல்லம் எங்களுக்கு நேரம் இல்லை.” 

“முதல்ல வீட்டை பாரு… வீட்ல இருக்கிற வேலையே ஒழுங்கா பண்றது இல்லை… இதுல மில்லுக்கு வந்து நீ வேலை பார்த்திட்டாலும்.” என்றவன், “டிபன் ரெடியா?” எனக் கேட்க, 

“இருங்க சட்னி அரைக்கிறேன்.” 

“இனிமே சட்னி அரைச்சுத் தோசை ஊத்தவா… ஆமாம் சுஜி என்ன சாப்பிட்டா?” 

“அவளுக்குச் சக்கரை தொட்டுக் கொடுத்தேன்.” 

“அஞ்சு வயசு பிள்ளைக்கு.. இன்னும் சக்கரையைத் தொட்டு ஊட்டிட்டு இருக்க. இதே சாதம்ன்னா பாலு தயிர் வச்சு கொடுக்கிற… அப்புறம் குழந்தை எப்படிச் சத்து பிடிக்கும்ன்னு அம்மா என்னைக் கத்துறாங்க.” 

“மூணாறு வந்த போது அருணைப் பார்த்த இல்ல… அவன் எல்லாமே சாப்பிடுறான். ஆதிரை எப்படிக் குழந்தையை வளர்க்கிறா, நீ எப்படி வளர்க்கிற?” 

“இதே உனக்குத் தெரியலை… இதுல மில்லுக்கு வந்து மட்டும் கிழிச்சிடுவ. முதல்ல குழந்தையைப் பாரு.” என்ற விக்ரம் உணவு உண்ணாமலே வெளியே சென்றுவிட, வனிதா முறைத்தபடி உட்கார்ந்து இருந்தாள். 

எதுக்கு எடுத்தாலும் ஆதிரை தான். இதுல இன்னும் மில்லுக்கு வந்திட்டா… என்னை எல்லாம் மதிக்கவே மாட்டார் என நினைத்த வனிதா, குளித்துவிட்டு ஆதிரையின் வீட்டுக்கு கிளம்பி சென்றாள். 

வனிதா காலை பத்து மணி போல வந்தாள். ஆதிரை அவளை வரவேற்றுப் பேசிக்கொண்டே அவள் வேலைகளைப் பார்த்தாள். ஜோதிக்கு வனிதாவை அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் அவர் அறையில் சென்று முடங்கிக்கொண்டார். 

கீழே வேலைகளை முடித்துவிட்டு ஆதிரை மாடிக்கு செல்ல, வனிதாவும் அவளோடு சென்றாள். 

மாடியில் தான் வாஷாங் மெஷின் இருக்கும். ஆதிரை துணிகளை அதில் போட்டுவிட்டு, வனிதாவுடன் பேசிக்கொண்டே அறையை ஒதுங்க வைத்தாள். 

“நான் எங்க வீட்ல சொன்னதைக் கேட்டிருக்கணும். நமக்கு மீறிய இடத்தில் கல்யாணம் பண்றது தப்புன்னு நான் இப்ப நினைக்கிறேன்.” 

“இவர் என்னைக் கொஞ்சமும் மதிக்கிறது இல்லை. இவளுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுத்ததே பெரிசுன்னு போல இருக்கார்.” 

“ஏன் வனிதா அப்படி நினைக்கிற? சிலர் அன்பை வெளிப்படையா காட்டுவாங்க. சிலருக்கு காட்ட தெரியாது. அதுக்காக அன்பில்லைன்னு அர்த்தமா என்ன?” 

“என் வீட்டுக்காரர் என்னைத் தவிர எல்லார்கிட்டயும் அன்பாத்தான் இருக்கார். ஏனோ என்னைக் கண்டா தான் ஆக மாட்டேங்குது. வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருந்திருப்பாரோ என்னவோ?” 

“நீயா தேவையில்லாதது எல்லாம் கற்பனை பண்ணிக்கிற. அவரோட குணமே அப்படின்னா, அவர் யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்.” 

“ஏன் என்னோட மாமனாரையே எடுத்துக்கோ… என் அத்தைகிட்ட கேட்டு செய்யற வழக்கம் எல்லாம் அவருக்கு இல்லை. அவர் முடிவு பண்ணா போதும்னு நினைப்பார்.” 

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், உங்க ஜாதகம் முதல்ல வந்தது இவருக்குத்தான். உங்களை விட்டு என்னைக் கல்யாணம் பண்ணிட்டாருன்னு இப்பவும் என் மாமனார் மாமியாருக்கு வருத்தம்தான்.” 

“எனக்கு இப்ப நீ சொல்லித்தான் இந்த விஷயமே தெரியும். ஆனா என்னை முதல்ல பெண் பார்க்க வந்தது என் வீட்டுகாரர் தான். அந்த இடமே எனக்கு முடிவாகிடுச்சு.” 

“அதுதான் என் வீட்டுகாரருக்கு வந்த ஜாதகத்தைதான், அவர் இங்க கொடுத்திருக்கார் போல… 

ஆதிரைக்கு இந்தப் பேச்சு ரசிக்கவில்லை. அதனால் வேறு பேச்சுக்கு மாறினாள். 

“சமையல் பண்ணிட்டியா?” 

“இல்லை… போய்ச் சாதம் வைக்கணும். அவர் வந்தா குழம்பு வைக்கணும். இல்லைனா எனக்கும் சுஜிக்கும் தயிர் இருக்கு அதே போதும்.” என்றவள், விக்ரமை அழைத்துக் கேட்க, அவன் வரவில்லை இங்கேயே பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லி விட்டான். இவளும் நல்லது என வைத்து விட்டாள். 

கணவர் உணவருந்த வரவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவாளா? “வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க. அல்லது கொடுத்து விடுகிறேன்.” என்றல்லவா சொல்ல வேண்டும். வேலை மிச்சம் நல்லது என இருந்து விடுகிறாள். இவள் அக்கறை காட்டினால் தானே அவரும் அக்கறை காட்டுவார் என நினைத்த ஆதிரை, அதைச் சொல்லவும் செய்தாள். 

“நான் சமைச்சாலும் பிடிக்காது. என் மாமியார் கொடுக்கிற குழம்பைத்தான் ஊத்திட்டு சாப்பிடுவார்.” 

“நீ அவருக்குப் பிடிச்ச மாதிரி சமைக்க வேண்டியது தான.” 

“நானும் செஞ்சுதான் பார்கிறேன். சாப்பாடு இல்லைகா அவருக்கு நான்தான் பிரச்சனை. என்னைக் கண்டா ஆகலை….நான் என்ன செஞ்சாலும் குறைதான் கண்டு பிடிக்கிறார். ஆனா உங்களை எப்பவும் பெருமையாதான் பேசுவார்.” 

“அவர் மட்டும் இல்லை. என் மாமனார் மாமியாரும் உங்களைத்தான் பெருமை பேசுவாங்க. நான்தான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்த மாதிரி பேசுறாங்க. இல்லைனா மகன் வாழ்க்கை நல்லா இருக்குமாம். இவரும் என்னைத்தான் குறை சொல்றார்.” 

“நீ இப்ப என்ன சொல்ல வர வனிதா?” ஆதிரை வனிதாவை ஆழ்ந்து பார்த்து கேட்க, 

“இல்லைக்கா அவருக்கும் உங்களைப் பிடிக்கும்.” என வனிதா சொல்ல… ஆதிரைக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. 

“இங்கப்பாரு நீ என்ன நினைச்சு இப்படி எல்லாம் பேசுற தெரியலை. என் வீட்டுகாரருக்கு என்னைப் பிடிச்சா போதும், வேற யாருக்கும் என்னைப் பிடிக்கனும்ன்னு அவசியம் இல்லை.. அது எனக்குத் தேவையும் இல்லை.” 

“உனக்கும் விக்ரமுக்கும் நடுவுல என்னைக் கொண்டு வராத.” 

“விக்ரம் வெற்றி இருக்கும்போது தான் வருவார். அப்ப பேசி இருக்கேனே தவிர… நான் அவரோட தனிப்பட்டுப் பேசினதே இல்லை. 
அவர்கிட்டன்னு இல்லை நான் யார்கிட்டயும் ஒரு எல்லையில தான் நிற்பேன்.” 

“அப்படி எனக்கு எதாவது அவங்ககிட்ட சொல்லணும்னாலும், நான் வெற்றிகிட்ட தான் சொல்வேன்.” 

ஆதிரையின் கோபத்தைப் பார்த்து வனிதா வெலவெலத்துப் போனாள். 
“நான் உங்களைத் தப்பு சொல்லலை அக்கா. எங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி சொல்றேன்.” 

“என்கிட்டே சொல்லாத, எனக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கு என் வீட்டு வேலையைப் பார்க்கவே நேரம் இல்லை. இதுல அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு எல்லாம் எனக்கு அக்கறை இல்லை.” 

இப்படி நேரடியாகப் பேசி இருக்கக் கூடாதோ என வனிதா நினைத்தாலும், விக்ரமின் காதிற்கு வராது என்ற தைரியத்தில், 
“உங்கிட்ட தான் நான் மனசு விட்டு பேச முடியும்.” என்றவள், “நான் வரேன் அக்கா.” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

பள்ளி வாகனத்தில் வந்த மகனை அழைத்து வந்த ஆதிரை ஜோதியிடம், “இவனுக்குச் சாப்பாடு கொடுங்க. எனக்குத் தலை வலிக்குது.” என மாடி அறைக்குச் சென்றுவிட்டாள். 

இரண்டு மணி போல வீட்டுக்கு வந்த மகனிடம், “உன் பொண்டாட்டி முகமே சரியில்லை. அருணுக்கு கூடச் சாப்பாடு அவ கொடுக்கலை. அந்த வனிதா பொண்ணு வந்துச்சு, என்ன சொல்லுச்சி தெரியலை. அந்தப் பெண் எல்லாம் எதுக்கு வீடுவரை வருது. உன் ப்ரண்டுக்குக் கல்யாணம் பண்ண வேற ஆளே கிடைக்கலை போலிருக்கு.” என்றவர், அருணை அழைத்துக் கொண்டு அவர் அறைக்குள் சென்றுவிட, வெற்றி மனைவியைத் தேடி சென்றான். ஆதிரையின் முகம் கலங்கித்தான் தெரிந்தது. 

“என்ன ஆச்சு? வனிதா என்ன சொன்னா?” எனக் கேட்டதும், ஆதிரை கணவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். எதையும் அவனிடம் மறைத்து அவளுக்குப் பழக்கமே இல்லை. 

“என்கிட்டே இப்படிப் பேச அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். அவ புருஷனுக்கு என்னைப் பிடிக்கும்னு சொல்றா. உடனே நான் பல்லைக்காட்டுவேன்னு நினைச்சா போலிருக்கு. எவனுக்கும் என்னைப் பிடிக்க வேண்டாம்.” 

ஆதிரையைப் பற்றி வெற்றிக்கு நன்றாகத் தெரியும். ஆதிரையைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை கூட யாரும் பேசிவிட முடியாது. அதற்கு அவள் இடமே கொடுக்க மாட்டாள். 

அக்கம்பக்கம் தோழிகளின் வீட்டிற்குச் சென்றால் கூட, அவர்கள் கணவன்மார்கள் இல்லாத நேரம்தான் செல்வாள். அதே போல வெற்றி வீட்டில் இருக்கும் நேரத்தில், தோழிகள் என யாரையும் வீட்டிற்கு அழைக்கவும் மாட்டாள். அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது. 

“நான் உங்க மில்லுக்கும் வரலை எங்கேயும் வரலை. அதையும் அவ புருஷன் என்னைப் பார்க்க வரான்னு சொல்லுவா. எனக்கு அதெல்லாம் தேவையில்லை.” 

“ஹே அவ தான் லூசு மாதிரி பேசினா… நீயும் அதுக்காக மில்லுக்கு வர மாட்டேன்னு சொல்வியா?” 

“அவருக்கு உங்களைப் பிடிக்கும்னு சொல்றா? அதை அவ எதார்த்தமா சொல்லலை… வேணுமுன்னே சொல்றா.” 

“இன்னைக்கு என்கிட்டே சொன்னவ, நாளைக்கு வெளிய நாலு பேருகிட்ட சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்.” 

“நாலு பேர் என்னை நம்பினாலும் ரெண்டு பேர் அப்படியான்னு தான் பார்ப்பாங்க. எனக்கு அதெல்லாம் பிடிக்காது.” 

“நான் சிவமணியோட பொண்ணு, அண்ணாமளையோட மருமகள். வெற்றியோட மனைவி, என்னை ஒருத்தர் வேற மாதிரி பார்த்தா அதை என்னால தாங்கவே முடியாது. யாரு என்ன பேசினா என்னன்னு எல்லாம் என்னால இருக்க முடியாது.” 

ஆதிரையின் வார்த்தை சூடாக வந்தாலும், அவள் கண்கள் என்னவோ கலங்கித்தான் போனது. அவ்வளவு சுலபத்தில் அழும் பெண்ணும் இல்லை அவள். எங்கே வீண் பழி வந்துவிடுமோ என்ற அச்சமே காரணம். 

“உன்னை அப்படி யாரும் பேச நான் விடுவேனா ஆதி. நீ எதைபத்தியும் கவலைப்படாத. நான் பார்த்துகிறேன். நான் இருக்கேன் நம்பு.” என்ற கணவனின் பேச்சு தந்த தைரியத்தில் ஆதிரையும் கொஞ்சம் தெளிந்தாள். 

கணவனுக்கு உணவு பரிமாறிவிட்டு அவளும் உணவு அருந்த, ஜோதி அதைப் பார்த்த பின்தான் நிம்மதியாகப் படுத்தார். 

தான் இந்த வேலைகளை எல்லாம் செய்தோம் மருமகளும் அதெல்லாம் செய்ய வேண்டும், அதுதான் ஜோதியின் எண்ணமே தவிர, அவர் கெட்டவர் எல்லாம் இல்லை. ஆதிரையைக் கலங்கிப்போய் எல்லாம் அவரால பார்க்கவே முடியாது. வனிதா பேசியது மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தால்… அவளை உண்டு இல்லையென ஆக்கியிருப்பார். 

வெற்றி உணவருந்தியதும் வெளியே கிளம்பி விட்டான். கணவன் எதற்குச் செல்கிறான் என அதிரைக்குத் தெரியும். விக்ரம் எங்கே இருக்கிறான் எனக் கேட்டு வெற்றி அங்கேயே சென்றான். விக்ரமை தனியே அழைத்துச் சென்று பேசினான். 

“ஆதி மில்லுக்கு வரலைன்னு சொல்லிட்டா.” 

“எல்லா ஏற்பாடும் பண்ணின பிறகு, ஏன் இப்படிச் சொன்னா? நாம அவளைக் கேட்டு தான செஞ்சோம்.” 
“வநிதாதான் எதோ சொல்லி இருக்கும் போல…”
“என்ன சொன்னா?”

“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பிரச்சனைனா அது உங்களுக்குள்ள அதுக்குக் காரணம் ஆதிங்கிற மாதிரி வனிதா பேசி இருக்கும் போல… அதோட உனக்கு ஆதிரையைப் பிடிக்கும்னு வேற சொல்லி இருக்கா…இதுக்கு என்ன அர்த்தம் விக்ரம்?” 

“உனக்கே தெரியும் ஆதிரையைப் பத்தி, இனி அவ மில்லுக்கு வரவே மாட்டா…” 

விக்ரம் அதிர்ச்சியில் இருக்கும் போதே, “ஆதிரை மில்லுக்கு வரா வரலை அது இல்லை இப்ப பிரச்சனை. ஆதிரைக்கு என்ன விருப்பமோ அதுதான். ஆனா வனிதா இன்னொரு தடவை இப்படிப் பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். உனக்குத் தெரியும் எனக்கு ஆதிரை எவ்வளவு முக்கியம். நான் அவளை எவ்வளவு விரும்புறேன் அதெல்லாம் உனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கு என்னால அவ முகத்தைப் பார்க்கவே முடியலை… அவ இவ்வளவு கலங்கிப் போய் நான் பார்த்ததே இல்லை.” 

“நீ வனிதாகிட்ட சொல்லி வை. என் பொண்டாட்டி பேர் கூட இனி அவ வாயில இருந்து வரக் கூடாது.” 

விக்ரமிற்கு வனிதாவின் மீது ஆயிரம் குறை இருந்தாலும், வெற்றி அவளைப் பற்றி நேரடியாகத் தன்னிடம் பேசும்போது வலிக்கவே செய்தது. 

“ஹே… வனிதாவுக்கு அவ்வளவு விவரம் இல்லை. அவ என்ன சொன்னாளோ, இவ என்ன புரிஞ்சிகிட்டாளோ தெரியலை. நான் சொல்லி வைக்கிறேன். இனி அவ எங்கையும், யார்கிட்டயும் இப்படிப் பேச மாட்டா அதுக்கு நான் பொறுப்பு.” 

“சரி பார்த்துக்கோ.” என்ற வெற்றி விடைபெற்று சென்று விட… விக்ரம் தான் நிலைகுலைந்து போனான். உடனே வீட்டிற்கும் சென்றான். 

மதிய உணவுக்கு வர மாட்டேன் என்ற கணவன் வந்து நின்றதும், வனிதா முதலில் திகைத்து போனாலும், ஓய்வு எடுக்க வந்திருப்பான் என நினைத்துக் கொண்டாள். 

கீழே பெற்றோர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு மாடிக்கு வந்த விக்ரம், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சுஜியிடம், “கீழ பாட்டி வீட்ல போய் விளையாடு, அப்பாவுக்குத் தலை வலிக்குது தூங்கப்போறேன்.” என அனுப்பி வைத்தான். 

மகளை எதற்குக் கீழே அனுப்புகிறான்? ஒருவேளை கணவன் ரொமான்ஸ் மூடில் இருக்கிறானோ என வனிதா ஆவலாக இருக்க, விக்ரம் கதவை மூடிவிட்டு வந்தான். 

“இன்னைக்கு வெற்றி வீட்டுக்கு போயிருந்தியா? ஆதிரைகிட்ட என்ன பேசின?” 

அவள் ஒன்று எதிர்பார்த்திருக்க, விக்ரம் வேறு கேட்க, அதுவும் அதிரையைப் பற்றிக் கேட்டதும், வனிதாவிற்கு வாய் நிற்கவில்லை. 

“அதுக்குள்ள உங்ககிட்ட சொல்லிட்டாங்களா… என்னவோ நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்னு உத்தமி மாதிரி சொன்னாங்க.” என வனிதா முடிக்கக் கூட இல்லை. விக்ரம் விட்ட அறையில் காது கொய் என்றது. 

“ஆதிரை என்கிட்டே பேசலை… வெற்றி வந்து உன் பொண்டாட்டி இப்படிப் பேசி இருக்கா… இனி அவ இப்படிப் பேசினா அவளுக்கு மரியாதை இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டு போறான்.” என்றவன், மீண்டும் இன்னொரு கன்னத்தில் அடிக்க, தான் பேசியதின் விளைவு இப்படி இருக்கும் என வனிதாவும் எதிர்பார்க்கவில்லை.
விக்ரம் வனிதாவை அடித்ததே இல்லை. ஆனால் இன்று அவன் கொடுத்த அறையில் வனிதாவின் கன்னம் சிவந்து போனது. 

“ஆதிரையைப் பார்க்கும்போது வெற்றி தான் டி எனக்கு நியாபகம் வருவான். அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பு தான் எனக்குத் தெரியும். ஒருநாளும் இந்தப் பெண்ணை நான் ஏன் கல்யாணம் செய்துக்கலைன்னு நான் நினைச்சதே இல்லை…” 

“அவ வெற்றிக்குன்னு பிறந்தவ அப்படித்தான் தோணும். ஆனா உன்னோட கேவலமான பேச்சால், நல்ல நட்பு சிதைஞ்சு போச்சு. இப்ப உனக்குச் சந்தோஷமா? இதைத்தான நீ எதிர்பார்த்த.” 

“நான் வேணும்னு சொல்லலை.” 

“ஏய் உன்னைப் பத்தி தெரியாது எனக்கு. நீயே அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வந்திட்டு, நாடகம் போடாத.” 

“அந்தப் பொண்ணு எப்ப என்கிட்டே பேசினாலும், உனக்குச் சப்போர்ட் பண்ணி தான்டி என்கிட்டே பேசும்.” 

“வெற்றி எனக்குப் பங்காளி. அதனால அண்ணன் தங்கச்சின்னு கூப்பிட்டது இல்லை. ஆனா அந்தப் பொண்ணு எனக்குத் தங்கச்சி மாதிரி, அதுகிட்ட போய் இப்படிப் பேசி இருக்கியே… நீயெல்லாம் மனுஷியா?” 

“நான் எங்க அப்பா அம்மா பேச்சை கேட்டிருக்கணும். அப்பவே சொன்னாங்களே இந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்னு. நான்தான் பணத்தைச் சொல்றாங்கன்னு தப்பா நினைச்சிட்டேன்.” 

“ச்ச சாக்கடை குணம் டி உனக்கு. நான் தெரியாம விழுந்துட்டேன்.” எனப் பலவாறு கத்திய விக்ரம், “ஆதிரைங்கிற பேரு கூட இனி உன் வாயில இருந்து வரக் கூடாதுன்னு வெற்றி சொல்லி இருக்கான். எவ்வளவு அசிங்கமாகிடுச்சு தெரியுமா எனக்கு.” 

“என் பொண்டாட்டியை என்கிட்டையே வந்து எச்சரிச்சிட்டு போறான்.” 

“இனி அவனை எப்படி டி நான் பார்ப்பேன்.” 

“இன்னைக்குப் பேசின மாதிரி இன்னொரு தடவை யார்கிட்டயாவது வாய்விட்டேன்னு வை… உன்னை வெட்டி நம்ம தோப்பிலேயே புதைச்சிட்டு, யார் கூடவோ ஓடிட்டேன்னு சொல்லிடுவேன்.” 

“உனக்கு என்னைப் பத்தி தெரியும். உயிரோட இருக்கணும்னா ஒழுங்கா இரு.” என விக்ரம் சொல்லிவிட்டு செல்ல…. அவன் சொல்லியதை செய்வான் என வனிதாவுக்குத் தெரியும். மகன் பேசியது கீழே விக்ரமின் பெற்றோருக்கும் கேட்டது.
அடிப்பாவி ! எதோ தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் பேசியதை, இந்தப் பெண் இப்படி ஆதிரையின் மீது திருப்பும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவர்கள் வனிதாவை மேலும் வெறுத்தார்கள்.

 

Advertisement