Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 6 

பிப்ரவரி பத்தாம் தேதி ஆதிரையின் பிறந்தநாள். அதை அடிக்கடி கணவனுக்கு நினைவு படுத்திக் கொண்டும் இருந்தாள். ஆனால் வெற்றி அலட்டிக்கொள்ளாமல் யாருக்கோ பிறந்தநாள் என்பது போல இருந்தான். 


முன்தினத்தில் இருந்தே கணவன் கேக் வாங்கி வருவானா, புடவையா அல்லது சுடிதாரா என ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே இருந்தாள். ஆனால் பிறந்தநாள் அன்று காலை வரை கணவன் ஒன்றுமே கொடுக்கவில்லை என்றதும் கடுப்பாகி விட்டாள். 

அருண் அவனே செய்த வாழ்த்து அட்டையை கொண்டு வந்து கொடுக்க… மகன் தனக்காகச் செய்தது என்ற பூரிப்பும் பெருமையுமாக அதை வாங்கிக் கொண்டு, மகனை ஆசையுடன் அனைத்து முத்தமிட்டாள். 

“பாருங்க உங்க பையனை… அவன்கிட்ட இருந்து கத்துக்கோங்க.” 

“ஏன் டி நான் கொடுத்து வாங்கிற நிலையிலா நீ இருக்க… தோட்டத்தில இருந்து வர்ற பால் கணக்கு, பூ கணக்கு எல்லாமே நீதான் பார்த்துப் பணம் வாங்கிற.” 

“அதோட நான் வாங்கிறதை விட உனக்குப் பிடிச்சதா நீ வாங்கினாத்தான் நல்லா இருக்கும். என்ன வேணுமோ வாங்கிக்க வேண்டியது தான…” 

“என்னோட பிறந்தநாளுக்கு நானே வாங்கிப்பேனா… ரொம்ப நல்லா இருக்கு.” என்றவள், பேசிக்கொண்டே மகனை பள்ளிக்கு கிளப்பி இருந்தாள். 

மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டுக் குளிக்கச் செல்வதற்காக உடை எடுத்தவள், இருந்த புது புடவையில் ஒன்றை கையில் எடுத்தபடி, “எல்லாம் நம்ம நேரம். இவங்க பிறந்தநாளுக்கும் நாமதான் செய்யணும். நம்ம பிறந்தநாளுக்கும் நாமே செஞ்சுக்கணும்.” எனப் புலம்பியபடி குளிக்கச் செல்ல… வெற்றி அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். 

ஜோதி உறவினர் வீட்டு திருமணதிற்குக் காலையில் சென்று இருக்க… ஆதிரை குளித்துவிட்டு வர, வெற்றி ஹாலில் உட்கார்ந்து கைப்பேசியில் இளையராஜா பாடல் கேட்டுக் கொண்டிருந்தான். 

ஆதிரை வருவதைப் பார்த்தவன், அவளை இழுத்து அருகில் உட்கார வைத்து, “வர்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ…” என அவன் பாட ஆரம்பிக்க… ஆதிரையும் அவனோடு இணைத்து கொண்டாள். ஒரு பாடலில் ஆரம்பித்து அடுத்து அடுத்து எனக் கச்சேரி களைகட்ட… 

“என்ன காலையிலேயே புருஷனும் பொண்டாட்டியும் பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கீங்க போல…” என்றபடி விக்ரம் உள்ளே வர… சோபாவில் வெற்றிக்கு அருகில் நெருக்கமாக உட்கார்ந்து இருந்த ஆதிரை பதறி எழுந்தவள், விக்ரமை வரவேற்றாள். 

விக்ரமை பார்த்ததும்தான் இன்று தாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே போக வேண்டிய வேலை வெற்றிக்கு நினைவு வர… “ஆதி, சீக்கிரம் எங்களுக்கு டிபன் எடுத்து வை… நாங்க வெளியப் போகணும்.” என்றவன், உடை மாற்ற அறைக்குள் சென்றான். 

“ஒன்னும் அவசரம் இல்லை… நேரம் இருக்கு.” என்ற விக்ரம் டீவியைப் போட்டு நியூஸ் சேனல் வைத்துகொண்டு பார்க்க ஆரம்பித்தான். 

ஆதிரை பூரிக்கு மாவு பிசைந்து உருளை மசால் செய்து வைத்திருந்தாள். அதோடு கேசரியும் இருக்க… அடுப்பில் எண்ணெய் காய வைத்து பூரி சுட ஆரம்பித்தாள். அப்போது திருமணதிற்குச் சென்றிருந்த ஜோதியும் வந்துவிட்டவர், விக்ரமை நலம் விசாரித்தார். 

வெள்ளை வேட்டி சட்டையில் வெற்றி பளிச்சென்று இறங்கி வர… ஆதிரை இருவருக்கும் உணவை பரிமாறினாள். முதலில் கேசரி வைத்தவள், அவர்கள் இருவரும் அதை உண்டு முடிப்பதற்குள் பூரியோடு வந்தாள். 

“என்ன விஷேசம் கேசரி எல்லாம் பண்ணி இருக்க?” 

“ம்ம்… நான் சொல்ல மாட்டேன். காலையில இருந்து நான்தான் சொல்லிட்டு இருக்கேன்.” ஆதிரை சொல்ல, 

“அப்படி என்னது டா?” என விக்ரம் ஆர்வமாக. 

“இன்னைக்கு ஆதிரைக்குப் பிறந்த நாள்.” என்றான் வெற்றி. 

“ஓ… பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.” 

“தேங்க்ஸ். ஆனா உங்க பிரண்ட்டுக்கு என்னோட பிறந்தநாள் நியாபகமே இல்லை.” 

“உன்னோட பிறந்த நாளை அவன் மறக்கிறதாவது. இது நம்பும்படி இல்லையே…” 

“ஆமாம் நான் எங்க மறக்கிறது. அது தான் ரெண்டு நாள் முன்னாடி இருந்து இப்பவரை எனக்குப் பிறந்தநாள்ன்னு இவ பத்து தடவைக்கு மேலேயே சொல்லிட்டாளே…” என வெற்றி சிரிக்க… 

“பேசாதீங்க… என் பிறந்தநாளுக்கு நீங்க ஒண்ணுமே கொடுக்கலை…” என்றாள் அதிரை கோபமாக. 

“என்னடி என்னையே கொடுத்திட்டேன் இதுக்கு மேல என்ன வேணும்? புடவையா? நகையா? என்ன வேணும் சொல்லு.” வெற்றி கேட்க, விக்ரம் சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான். 

“ஆமாம் என்னையே கேளுங்க. பொண்டாட்டி பிறந்த நாளுக்குச் சர்ப்ரைஸ் கொடுப்போம்ன்னு எல்லாம் இல்லை… சின்னதா ஒரு பரிசு கொடுத்திருந்தா கூடச் சந்தோஷமா இருந்திருக்கும்.” 

“அருண் சின்னப் பையன் அவன் வயசுக்கு… ஒரு வாழ்த்து அட்டை செஞ்சு கொடுத்தான். நீங்கதான் ஒண்ணுமே கொடுக்கலை. ஒரு பூ கூட வாங்கிக் கொடுக்கலை.” என ஆதிரையும் விடுவதாக இல்லை. 

“அவன் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்குத்தானே ஆதி.” என்றான் விக்ரம். 

“நீங்க ஒன்னும் உங்க ப்ரண்டுக்குச் சப்போர்ட் பண்ண வேண்டாம்.” 

“ஒரு புடவை எடுத்தாவது கொடுத்திருக்கலாம்.” என்றார் ஜோதி மகன் நிஜமாகவே மருமகளுக்கு எதுவும் வாங்கவில்லை என நினைத்து. 

“சரி அடுத்தப் பிறந்த நாளுக்கு வாங்குவோம்.” என்ற வெற்றி, “ஆதி நான் போன் பண்ணதும் கார் எடுத்திட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்திடு… ஒரு சாட்சி கையெழுத்து வேணும்.” என்றான். 

விக்ரம் முன்னே செல்ல, வெற்றி அவன் பின்னே செல்ல… கணவனோடு இணைத்து நடந்த ஆதிரை “எதுவுமே தான் வாங்கித்தரலை… இன்னைக்கு என்னோட இருக்கக் கூடக் கூடாதா” என்றாள் குறையாக. 

“வேலை இருக்கு டி.” எனச் சொல்லிவிட்டு வெற்றிச் சென்றுவிட்டான்.
பதினோரு மணிக்கு மேல் அவனிடம் இருந்து போன் வர… ஆதிரை காரை எடுத்துக் கொண்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றாள். 

அங்கே சென்று பார்த்த பிறகு தான் வெற்றி அவள் பெயரில் ஒரு வீடு வாங்கி இருப்பது ஆதிரைக்குத் தெரிந்தது. அந்த வீட்டில் இருந்து வாடகையே மாதம் ஐம்பதாயிரம் வந்தது. 

மற்றவர் முன்னிலையில் ஒன்றும் பேசாமல் கணவன் கையெழுத்துப் போட சொன்ன இடத்தில் போட்டு விட்டு வெளியே வந்தவளிடம், “பிறந்தநாள் பரிசு நல்லா இருக்கா?” என வெற்றி கேட்க, விக்ரம் சிரிக்க, ஆதிரை மட்டும் முறைத்தாள். 

“இதுவா பரிசு இதை வச்சு நான் என்ன பண்றது?” என்றாலே பார்க்கலாம். , 

“விளங்குச்சு போ…” என விக்ரம் சொல்ல… “அதுல வர்ற வாடகையே ஐம்பதாயிரம் டி… நீ என்ன வேணா வாங்கலாமே…” என்றான் வெற்றி. 

“எனக்கெத்துக்கு வீடும் பணமும். இது போய் பிறந்தநாள் பரிசா?” என்றவள் காரை எடுத்துக் கொண்டு சென்றே விட… நண்பர்கள் இருவரும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

“ஹப்பா சாமி… இதுக்குத்தான் டா நான் எல்லாம் பரிசே கொடுக்கிறது இல்லை.” என்ற விக்ரம், “வரியா போகலாம்.” என்றதும், விக்ரமின் வண்டியில் வெற்றி ஏறிக் கொண்டான். 

வழியில் ஒரு கடையில் நிறுத்து வெற்றி ஆதிரைக்குச் சுடிதார் வாங்கியவன், ஒரு பிறந்தநாள் கேக்கும் வாங்கிக்கொள்ள, விக்ரம் அவனை வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான். 

விக்ரம் வேறு வேலை எல்லாம் முடித்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்கு மேல்தான் மதிய உணவுக்கு வந்தான். “ஒரு ரெண்டு மணிக்காவது வந்து சாப்பிடக்கூடாது.” எனத் தெய்வா சொல்ல… 

“காலையில வெற்றி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க கேசரி, பூரின்னு நிறையச் சாப்பிட்டேன். இப்ப வரை பசிக்கலை..” என்ற விக்ரம், அங்கே நின்ற வனிதாவிடம், “கொஞ்சம் மோர் சாதம் மட்டும் எடுத்திட்டு வா.” என்றான். 

வனிதா மோர் சாதமும் ஊறுகாயும் கொண்டு வந்து வைக்க, தெய்வா ஒரு கிண்ணத்தில் குழம்பு எடுத்து வந்து வைத்தார். விக்ரம் தன் தந்தையுடன் பேசியபடி உணவருந்தினான். அப்போது வெற்றி அவனைக் கைப்பேசியில் அழைத்தவன், “விக்ரம் நான் இன்னைக்கு மில்லுக்கு வரலை… நீயே பார்த்துக்கோ. சாயங்காலம் ஆதியோட வெளியப் போறேன்.” என்றான். 

“சரி… இப்பவாவது உன் பொண்டாட்டிக்குச் சந்தோஷமா…மத்தியானம் அவ ஒரு பார்வை பார்த்தாளே, என்னால அதை மறக்கவே முடியாது.”
விக்ரம் சொன்னதற்குச் சிரித்த வெற்றி, “என்னாலையும் தான். சின்னப் பட்ஜெட்ல முடிச்சிருக்கலாம் போல…” என்றான். 

“சரி நாளைக்குப் பார்ப்போம்.” என விக்ரம் போன்னை வைத்தான். 

“யாரு வெற்றியா என்ன சொன்னான்?” என முர்த்தி ஆர்வமாக… 

“இன்னைக்கு அதிரைக்குப் பிறந்தநாள். அதுதான் மில்லுக்கு வர மாட்டேன்னு சொல்ல போன் பண்ணான்.” 

“இன்னும் வேற எதோ சொன்னானே?” 

“அது அவன் ஆதிரை பேர்ல வீடு வாங்கி இருக்கான்.” என்றவன், வீட்டை பற்றி மேலும் விவரம் சொல்ல… வனிதாவும் கேட்டுக் கொண்டு இருந்தவள், உணவு அருந்தியதும் அறைக்கு வந்த கணவனைப் பிடித்துக் கொண்டாள். 

“வெற்றி ஆதிரை பேர்ல சொத்து வாங்கி இருக்கார். நீங்க இதுவரை என் பேர்ல ஒரு குண்டுமணி இடமாவது வாங்கி இருக்கீங்களா?” 

“என் பேர்ல இருந்தா என்ன? இல்லை உன் பேர்ல இருந்தா என்ன? நான் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்கும் நம்ம பொண்ணுக்கும் தானே.” 

“இதை ஒன்னு சொல்லி எப்பவும் ஏமாத்துங்க.” 

“உனக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்தது இல்லை. நீ போட்டிருக்க நகை எல்லாம் உங்க அப்பா வீட்ல இருந்து கொண்டு வந்ததா?” 

“எங்க வீட்டு நிலைமை தெரிஞ்சு தானே காதலிச்சிசீங்க. எனக்கு அறிவு இருந்திருக்கணும். நான் ஒழுங்கா எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளையைக் கட்டி இருந்தா, இந்தப் பேச்சு எல்லாம் கேட்க வேண்டியது வருமா?” 

“ஏன் கட்டியிருக்க வேண்டியது தானே?” 

“உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? உங்களோட பழகிட்டு வேற ஒருத்தனை எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்?” 

“ஓ… அந்த அறிவு இருந்தா சரிதான்.” 

“எப்பவும் நகை வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லிக் காட்ட வேண்டியது. நகை எல்லாம் உங்க அப்பா பொறுப்புல இருக்கு. நான் அவர்கிட்ட இருந்து வாங்கிக்கணும், திரும்ப அவர்கிட்ட தான் கொடுக்கணும்.” 

“ஏற்கனவே நீ தொலைச்ச நகை போதாது. அதனால பத்திரமா இருக்கட்டும்னு அப்பா பொறுப்புள இருக்கு. நீ கேட்டு அவர் இல்லைன்னு சொன்னாரா?” 

மேலே பேசினால் தனது குட்டு வெளிப்படும் என அஞ்சி கோபமாக இருப்பது போல சென்று படுத்துக் கொண்டாள். 

ஒருமுறை பணம் கேட்ட அவள் தம்பிக்குப் பணம் இல்லையென்று தனது நெக்லஸ் ஒன்றை கொடுத்திருந்தாள். சின்ன நெக்லஸ் தானே தெரியாது என அவள் நினைத்திருக்க. தெய்வா அதை நியாபகம் வைத்து கேட்டார். 

அப்போது தான் அந்த நகை நினைவு வந்தது போலத் தேடியவள், காணோம் என்று சொல்ல… அது முதல் விக்ரம் நகையைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டான். அவளுக்குத் தேவையான போதுக் கொடுத்துவிட்டு, பிறகு வாங்கி வைத்துக்கொள்வர். 

தவறை அவள் மீது வைத்துக் கொண்டு, “ச்ச இந்த வீட்ல நம்மை அடிமை மாதிரி வச்சிருக்காங்க.” என வேறு நினைத்தாள். 

இந்த வீட்டில் உரிமையாக அவள் செய்வது வீட்டு வேலைகள் மட்டும் தான். இவன் மகளுக்காகத் தன்னை வைத்திருக்கிறானோ என்று கூடச் சில நேரம் நினைப்பாள். 

மகன் வீடு வாங்கி இருக்கிறான் எனத் தெரிந்ததும், ஒருபுறம் மகன் வீடு வாங்கி இருப்பது மகிழ்ச்சி என்றால், மறுபுறம் அதை மருமகள் பேரில் அல்லவா வாங்கி இருக்கிறான் என்பதுதான் கொஞ்சம் இடித்தது. ஆனால் தான் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என ஜோதி அமைதியாக இருந்தார். 
கணவரும் தன் பேரில் சொத்து வாங்கி இருக்கிறார் என்பது எல்லாம் அப்போது நினைவு இல்லை. இதை விடப் பெரிய மதிப்புள்ள சொத்தை, அவள் தந்தை ஆதிரைக்குக் கொடுத்திருக்கிறார். அவளுக்குச் சொத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லை. 

மாலை கணவன் வாங்கிக் கொடுத்த சுடிதார் அணிந்து அதற்கு ஏற்றார் போல தன்னை அலங்கரித்து வந்த ஆதிரை, கேக்கை வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள். 

பிறகு மகனை அழைத்துக் கொண்டு மூவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.  

ஆதிரை இதைத்தான் எதிர்ப்பார்த்தாள். அவளுடைய நாளில் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும். அதோடு ஒரு சின்னக் கொண்டாட்டம் என இது போதும் அவளுக்கு. அவள் ஆசை நிறைவேறியதில், சந்தோஷமாக வீட்டில் வளைய வந்தாள். 

“இதெல்லாம் என்ன பீஸ்ன்னு தெரியலையே… நான்தான் மூவாயிரத்தில முடிக்க வேண்டியதை, தேவையில்லாம ஒரு கோடிக்கு இழுத்திட்டேன் போல…” என நினைத்த வெற்றி தனக்குள் சிரித்துக் கொண்டான். 

கணவன் சிரிப்பதைப் பார்த்த ஆதிரை என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்க, “உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றான். 

அதைக் கேட்டு ஆதிரை கணவனை முறைக்க, “என்ன முறைக்கிற? உன் பிறந்தநாளுக்கு எனக்கு எதாவது பரிசு உண்டா…” என வெற்றி வேறு ஒன்றிற்கு அடிபோட… 

“அதெல்லாம் எதுவும் இல்லை. பேசாம படுத்து தூங்குங்க.” என்றவள், திரும்பி நின்று அலமாரியில் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.  
தளிர் பச்சை நிற சுடிதாரும், அலசிய நீல கூந்தலில் மணந்த  மல்லிகையும், இன்று செய்திருந்த அதிகபடியான ஒப்பனையில் கண்ணில் வழிந்த மையும், மனைவியை இன்னும் அழகாக காட்ட, அதில் பித்தான வெற்றி, அவள் துணிகளை அடுக்கி முடித்தவுடன், அவளை அப்படியே இருகைகளால் தூக்கி இருந்தான். 

“என்னவோ அன்னைக்குத் தூக்க முடியாது சொன்னீங்க.” 

“உனக்குப் பிடிக்கும் இல்ல அதுதான்.” என்றவன், அவளைக் கட்டிலில் விட்டு, “தனக்கு என்ன பிடிக்கும்.” என அவன் அவள் காதில் கிசுகிசுக்க… 

“இதெல்லாம் ஆகிறது இல்லை…” என ஆதிரை எழுந்துகொள்ள முயல… வெற்றி அவளை விட்டால் அல்லவா… கணவனின் தீண்டலில் மனைவியும் மயங்கித்தான் போனாள். 

நாட்கள் வேகமாகச் செல்ல… ஆதிரைக்கு என்று மில்லில் கண்ணாடியால் ஆன தனி அறை தயாரகிக் கொண்டு இருந்தது. அங்கே பெண்களும் வேலைப் பார்ப்பார்கள். 

ஆதிரை மில்லின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டால்… வெற்றியும் விக்ரமும் தங்களின் மற்ற தொழிலில் கவனம் செலுத்தலாம் என நினைத்தனர். 

சும்மாவே ஆதிரை என்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இதில் அவள் மில்லின் பொறுப்பையும் ஏற்றால்… தான் செல்லாத காசாகப் போய் விடுவோமோ என்ற அச்சம் வனிதாவுக்கு இருக்க… என்ன செய்து அதைத் தடுப்பது என யோசிக்க ஆரம்பித்தாள். 

அவள் நினைத்த காரியம் நிறைவேறினாலும், அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது தான் தான் என அப்போது அவளுக்குத் தெரியவில்லை. 

சங்கு சுட்டாலும் வெண்மையே தரும். அது போலத்தான் ஆதிரையும் என வனிதாவுக்கும் புரியும் நாளும் வரும்.

Advertisement