Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 5

விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும் கோபப்பட்டாள். மனைவியின் எரிச்சல் எதனால் என விக்ரம் அறியாதவன் அல்ல…அவள் மனதில் இருக்கும் ஆசைகள் புரியாமலும் இல்லை. 


நேத்து ஏன் சண்டை போட்டோம் என இப்போது தோன்றியது. இதே மனநிலையில் ஊர் திரும்பினால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்றும் தெரியும். வனிதா இதையே மனதில் வைத்துத் தன்னை வதைப்பாள் என நினைத்தான். 

“சுஜி நீ முதல்ல ரெடி ஆகு. அருணோட விளையாடலாம்.” என விக்ரம் சொல்ல.. வனிதா மகளைக் கிளப்பினாள். 

விக்ரம் அவளை அழைத்துக் கொண்டு சென்று வெற்றியின் அறையில் விட்டுவிட்டு வந்தான். இரவு சீக்கிரமே உண்டதால் ஆதிரை பசிக்கிறது என்றதால்… அவர்கள் உணவு அருந்த கிளம்பிக் கொண்டு இருந்தனர். 

“நீங்க போய்ச் சாப்பிடுங்க. நாங்க இனிதான் கிளம்பனும்.” எனச் சொல்லி மகளை மட்டும் அவர்களிடம் விட்டுவிட்டு விக்ரம் அறைக்குத் திரும்பினான். 

விக்ரம் வந்த போது, வனிதா குளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள். கதவை தாழிட்ட விக்ரம் சென்று அவளை அணைக்க, அவன் கைகளைத் தட்டி விட்டாள். 

“இங்க பாரு வெளியூரு வந்தது சண்டை போடுறதுக்கா? ஜாலியா இருக்கத்தான். இன்னைக்கு இருக்க ஒருநாளாவது நல்லா அனுபவிப்போம்.” என்றவன், மனைவியின் இதழில் முத்தமிட்டு ஊடலை முடித்துக் கூடலுக்கு அச்சாரமிட்டான். 

காலை உணவு பஃப்பே முறையில் விதவிதமான உணவு வகைகள் இருக்க, அவரவருக்குத் தேவையானது எடுத்து நிதானமாக உண்டனர். அவர்கள் ஹோட்டலின் உள்ளேயே பெண்களுக்கான அழகு நிலையம் இருக்க, குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி வெற்றி ஆதிரையை அனுப்பி வைத்தான். 

பத்தரைக்கு  மணிக்குதான் விக்ரமும் வனிதாவும் உணவு உண்ண சென்றனர். ஆதிரை வந்ததும், வெற்றி சென்று மசாஜ் செய்து கொண்டு வந்தான். மதியம் வரை ஹோட்டலில் ஓய்வாக இருந்தவர்கள், மதிய உணவையும் முடித்துக் கொண்டு, அறையைக் காலி செய்துவிட்டு, ஜீப்பில் இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு, அப்படியே இரவு பேருந்தை பிடிக்கத் தேனிக்கு சென்றனர். 

மகள் வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்த ஜோதி, “நீ என்ன குழம்பு பண்ணி இருக்க. ஆதி இந்தக் குழம்பு நல்லா பண்ணுவா… அவ சமைக்கிறது உங்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.”  என்றார்.

“உங்க மருமகள் உசத்தி தான் போதுமா… இதை அவகிட்ட சொல்லி இருக்கீங்களா?” 

“இப்ப நான் சொன்னதுக்கு நீ கோவிச்சியா? சாதாரணமா எடுத்துக்கிற. இதே உன் தம்பி பொண்டாட்டியா இருந்தா உடனே முகத்தைத் தூக்கி வச்சிப்பா.” 

“நீங்க எனக்கு அம்மா, அதே அவளுக்கு மாமியார். எனக்குமே எங்க மாமியார் இப்படிக் குறை சொன்னா கோபம் வரும்தான். அதோட அவ நல்லாத்தானே சமைக்கிறா.” 

“நீ உன் தம்பி பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டியே.” 

“அப்படியில்லை மா… எனக்கிருக்கிறது ஒரு தம்பி. அவனையும் பகைச்சிக்கச் சொல்றீங்களா? அதுவும் ஆதிரை பட்டு பட்டுன்னு பேசுவாளே தவிர மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா.” 

“முன்ன எல்லாம் என்கிட்டே நல்லா பேசுவா, இப்ப பேச கூட மாட்டேங்கிறா.” 

தொட்டதிற்கு எல்லாம் குறை சொன்னால் என நினைத்த கிர்த்திகா, தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. சொன்னாலும் பயன் இருக்காது எனத் தெரியும். 

ஆதிரை திருமணம் ஆகி வந்த புதிதில் எல்லோரோடும் நன்றாகக் கலகலப்பாகப் பேசுவாள். ஜோதியிடமுமே நன்றாகப் பேசுவாள். ஆனால் அவள் விளையாட்டுக்கு பேசுவதைக்கூட ஜோதி இப்படிப் பேசாதே, அப்படிப் பேசாதே என அறிவுரை வழங்குவார். 

அவர் முன்பு அவள் மகனை கூடச் செல்லமாக ரவுடி என்றோ போக்கிரி என்றோ சொல்லி விட முடியாது. “நீ அப்படிக் கூப்பிட்டா, அவன் அப்படியே ஆகிடுவான். நல்ல வார்த்தை சொல்லு.” என்பார். மனம் வெறுத்துப் போய் ஆதிரை அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டாள். 

“நாங்க அந்தக் காலத்தில எங்காவது போய் இருக்கோமா… ஒன்னு கோவிலுக்குப் போவோம், இல்லைனா சொந்தத்தில் விசேஷத்துக்குப் போவோம். அதுவும் உங்க அப்பா எங்கையும் வர மாட்டார். நான் தனியாத்தான் போகணும். ஆனா உன் தம்பியை பாரு, பொண்டாட்டியை கூடிட்டு நல்லா ஊர் ஊரா சுத்துறான்.” என ஜோதி தன் புலம்பலை தொடங்க… 

ஒருவேளை தான் அனுபவிக்காததை மருமகள்கள் அனுபவிக்கும்போது மாமியார்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் போல என நினைத்த கிர்த்திகா. தானும் பின்னாளில் இப்படித்தான் ஆகி விடுவோமோ என அச்சம் கொண்டாள். அவளுக்கு வேறு இரண்டுமே மகன்கள்.

மறுநாள் காலை ஏழு மணிக்குதான் வீடு வந்து சேர்ந்தனர். ஆதிரை விறுவிறுவென அருணை பள்ளிக்கு கிளப்ப… வெற்றி அவளுக்கு உதவினான். 

எட்டு மணிக்கு வந்த பள்ளி வாகனத்தில் அவனை ஏற்றியும் விட்டனர். 

இன்று தோட்டத்தில் அப்படி ஒன்றும் பெரிதான வேலைகள் இல்லை. தோட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மில்லுக்குத்தான் செல்ல வேண்டும். மில்லுக்கு மெதுவாகச் சென்றால் போதும் என்பதால்… வெற்றி நிதானமாகக் கிளம்ப, அன்று கோவிலில் விசேஷ பூஜை என்று ஆதிரை கோவிலுக்குச் சென்றாள். 

வீட்டிற்கு வந்ததும் விக்ரமின் மகள் சுஜி உறங்கி விட, வனிதாவும் பஸ்சில் வந்தது அலுப்பாக இருக்கிறது எனப் படுத்து விட்டாள். விக்ரம் மட்டும் ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருக்க, அவன் அம்மா தெய்வா கோவிலில் இருந்து வந்தவர், “உன் பொண்ணு ஸ்கூல்லுக்குப் போயிட்டாளா?” எனக் கேட்டார். 

“இல்லை ஊர்ல இருந்து வந்தது அலுப்பா இருக்குன்னு தூங்கிறா.” என்றான். 

“உங்களோடத்தானே வெற்றி குடும்பமும் வந்தது. அவங்க பையன் ஸ்கூலுக்குப் போயிட்டான். உன் பொண்ணுக்கு போக முடியலையா?” 

“சின்னக் கிளாஸ் தானேமா படிக்கிறா, ஒருநாள் போகலைனா ஒன்னும் இல்லை.” 

“அந்தப் பையன் மட்டும் சின்னப் பையன் இல்லையா… அம்மா பொறுப்பா இருந்தா, பிள்ளைகளும் பொறுப்பா இருக்கும். இங்க எங்க? அம்மாகாரியே படுத்து ஒன்பது மணி வரை தூங்கினா… பொண்ணும் அவளை மாதிரிதான் இருக்கும்.” 

“மகனையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஆதிரை கோவிலுக்கு வந்திருந்தா…ஏன் மா இன்னைக்குத்தானே ஊர்ல இருந்து வந்தேன்னு கேட்டா…” 

“அத்தை இல்லை… அவங்க இருந்தா அவங்க வந்திருப்பாங்க. பூஜைக்கு வீட்ல இருந்து யாராரவது வரணும் இல்லை. அதுதான் நான் வந்தேன்ன்னு சொல்றா.” 

“பொண்ணுன்னா இப்படிப் பொறுப்பா இருக்கணும். நம்ம வீட்லயும் இருக்காளே…” 

“நீ ஏன் இதெல்லாம் இவன்கிட்ட சொல்ற… இவனுக்கு நல்ல புத்தி இருந்திருந்தா, நம்ம வீட்டுக்கு வர வேண்டிய மகாலட்சுமிய.. அவன் ப்ரண்ட்டுக்கு கட்டி வச்சிருப்பானா…ஒழுங்கா வீட்ல சொன்னதைக் கேட்டிருந்தா, நம்ம வீடும் லட்சுமி கடாட்சமா இருந்திருக்கும்.” என விக்ரமின் அப்பா மூர்த்திப் பிடித்துக்கொள்ள, 

“அப்பா, எனக்குக் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும், நீங்க இந்தப் பேச்சை விட மாட்டீங்களா பா… ஆதிரை வெற்றியோட பொண்டாட்டி. வெற்றிக்கோ ஆதிரைக்கோ இந்த விஷயம் தெரியாது. வெற்றி எப்பவும் இந்தப் பேச்சை எல்லாம் விரும்பமாட்டான். இனியொரு முறை இந்த விஷயத்தைப் பேசாதீங்க.” எனச் சொல்லிவிட்டு விக்ரம் மாடியில் தங்கள் அறைக்குச் சென்றான். 

வனிதா சிறிது நேரத்திற்கு முன்பே எழுந்து வந்திருந்தாள். மாமியார் பேசியதை எல்லாம் படியில் நின்று கேட்டவள், கணவன் வருவது தெரிந்து திரும்ப உள்ளே போய் ஒன்றும் தெரியாதது போலப் படுத்துக் கொண்டாள். 

அறைக்கு வந்த விக்ரம் மனைவி இன்னும் உறங்குவதைப் பார்த்து கடுப்பானவன், “ஏய் வனிதா, சுஜி சின்னப் பொண்ணு தூங்கினா பரவாயில்லை. நீயும் சேர்ந்து தூங்கிட்டு இருக்க… சீக்கிரம் எழுந்து டிபன் ரெடி பண்ணு. நான் வெளிய போகணும்.” என்றவன், துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். 

இன்று அப்படியே டிபன் வேலையை மாமியார் தலையில் கட்டிவிடலாம் என நினைத்தாள். ஆனால் முடியாது போலவே என மனதிற்குள் சலித்தவள், எழுந்து பிரிட்ஜில் மாவு இருந்ததால். சட்னி மட்டும் அரைத்து வைத்தாள். 

மேலே இவர்கள் தனிக்குடித்தனம் தான். ஆனால் முக்கால்வாசி நாட்கள் தெய்வா தரும் குழம்பு பொரியலை வைத்தே வனிதா பொழுதை ஓட்டிவிடுவாள். விக்ரம் பாதி நாட்கள் வெளியேதான் சாப்பிடுவான்.

விக்ரம் குளித்துவிட்டு வந்ததும், அவனுக்குத் தோசை ஊற்றி வைத்தவள், அவன் வெளியே சென்றதும் எழுந்த மகளைக் குளிக்க வைத்துவிட்டு, ஊரில் இருந்து கொண்டு வந்த அழுக்குத் துணிகளில் கையில் துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு சென்று, துவைத்து முடித்துப் பிறகு அவள் குளித்துவிட்டு வர பத்தரை மணியாகி இருந்தது.


கீழே விளையாடிக்கொண்டிருந்த சுஜியிடம் சாப்பிட்டியா எனத் தெய்வா கேட்க, அவள் இல்லையென்று சொல்ல, “பத்தரை மணி ஆகுது இன்னும் உனக்கு டிபன் கொடுக்காம உங்க அம்மா என்ன பண்றா?” 

“முதல்ல டிபன் வேலையை முடிச்சிட்டு மத்தது பண்ணுன்னா, காது கொடுத்து கேட்கிறேதே இல்லை. குழந்தையை இவ்வளவு நேரமாவா வெறும் வயித்தோட வச்சிருக்கிறது.” எனத் தேவா புலம்ப, அப்போதுதான் வனிதாவும் மகளுக்குத் தோசையோடு கீழே இறங்கி வந்தாள். 

அவள் தோசையை ஊட்ட தெய்வா மதிய சமையல் செய்யச் சென்றார். 
வனிதா தோசையை மகளுக்கு ஊட்டிவிட்டு பிறகு அவள் உண்ணும் போது பதினோரு மணி ஆகி இருந்தது. 

அதன் பிறகு வாஷிங் மெஷின் போட்டு விட்டு வந்து கணவனை அழைத்தாள். 

“என்னங்க மதியம் சாப்பிட வருவீங்களா?” 

“இல்லை வர மாட்டேன்.” 

“சரி…வச்சிடுறேன்.” என வைத்துவிட்டாள். 

தனக்கும் மகளுக்கும் சாதம் மட்டும் வைத்தவள், தயிர் வைத்துச் சமாளித்துக்கொள்ளலாம் என இருந்தாள். அதற்குள் தேவா சுஜியிடம் பருப்பு உருண்டை குழம்பு கொடுத்து விட, மற்ற நாளாக இருந்தால் வாங்கி வைத்திருப்பாள். ஆனால் இன்று காலையில் மாமியார் பேசியதில், கோபத்தில் இருந்தவள், “அப்பா சாப்பிட வரலையாம். அம்மா சமைச்சிட்டாங்கலாம்னு சொல்லி திருப்பிக் கொடுத்திடு.” என மகளை அனுப்பி வைத்தாள். 

சுஜி சென்று தன் அம்மா சொன்னதை அப்படியே பாட்டியிடம் சொல்லி குழம்பை திருப்பிக் கொடுக்க, மருமகளைப் பற்றி மாமியாருக்கு நன்றாகத் தெரியும். அவள் சமைக்கும் லட்சணம் பற்றி அவர் அறியாதது ஒன்றும் இல்லை. காலையில் தான் பேசியதற்கே வனிதா கோபத்தில் இப்படிச் செய்கிறாள் என நினைத்தவர், உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும் என நினைத்தவர், குழம்பை வாங்கி வைத்துக் கொண்டார். 

வனிதாவால் தனது கோபத்தை நேரடியாக மாமியாரிடம் காண்பிக்க முடியாது. அந்த வீட்டில் அவள் கோபத்திற்கு மட்டும் இல்லை அவளுக்குமே மதிப்பு இல்லை. இந்த வீட்டுக்கு வரும்போது தான் பெரிய வீட்டுக்கு மருமகளாகப் போகிறோம் என எண்ணெற்ற கனவுகள் இருந்தது. மருமகளாக மட்டும் தான் ஆக முடிந்தது. வேறு எந்தக் கனவுகளும் பலிக்கவில்லை. 

விக்ரமும் வனிதாவும் காதலித்து மணந்தவர்கள். வனிதாவும் இதே ஊர்தான். ஒரு திருமணத்தில் அவளும் விக்ரமும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மலர்ந்த காதல். 

இருவரும் அதன்பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். விக்ரம் வீட்டினருக்குத் தெரியாது. ஆனால் வனிதா வீட்டினருக்கு இவர்கள் காதல் தெரியும். வனிதாவின் வீடு வசதி இல்லாத சாதாரணக் குடும்பம். இரு குடும்பத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரம். ஆனால் அதைப்பற்றி எல்லாம் வனிதா வீட்டினர் கவலைப்படவே இல்லை. 

பெரிய இடம் விட்டு விடக்கூடாது என்பதே எண்ணமாக இருக்க, அவர்களே விக்ரம் வனிதாவை தங்கள் வீட்டில் சந்தித்துப் பழக அனுமதித்தனர். திருமணதிற்கு முன்பே விக்ரமை மாப்பிள்ளை என்றுதான் அழைப்பார்கள். 
வனிதாவின் பெற்றோர் இருக்கும் நேரம் என்று இல்லை, விக்ரம் விரும்பும் நேரம் வனிதாவின் வீட்டிற்குச் சென்று வந்தான். அது ஒரு கட்டத்தில் எல்லை மீறிய பழக்கமாக மாறியது. அப்போது பார்த்து ஆதிரையின் ஜாதகம் வர… அதை வைத்து விக்ரமின் தந்தை பொருத்தம் பார்க்க, ஜாதகமும் பொருந்தி இருக்க… இதற்கு மேல் மறைக்க முடியாது என விக்ரம் தங்கள் காதலை வீட்டில் சொல்லிவிட்டான். 

அவன் காதலிப்பது அவன் அப்பாவுக்கும் தெரியும். அதனால்தான் அவர் வேகமாக வரன் பார்க்க ஆரம்பித்தார். மகன் எதோ வயது கோளாறில் சுற்றிக் கொண்டு இருக்கிறான். திருமணம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என அவர் நினைக்க, மகன் மீழ முடியாது இடத்தில் சிக்கி விட்டான் என அவருக்கு அப்போது தெரியவில்லை. 

விக்ரமின் தந்தை மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டுவிட வேண்டும் என நினைத்தார். ஆனால் வனிதா வீட்டினர் வந்து வீட்டிற்குள் அமர்ந்து நியாயம் பேசினர். விக்ரம் அவர்கள் வீட்டிற்கு வந்து சென்றதை எல்லாம் பிட்டு பிட்டு வைத்தனர். நல்லவர்களாக இருந்தால்… முதலிலேயே அல்லவா சொல்வார்கள். 

இவர்களே இருவரையும் பழகவிட்டு இப்போது வந்து நியாயம் கேட்பது மூர்த்திக்கு அருவருப்பாக இருந்தது. மகனை சிக்க வைக்க நடந்த சதி எனப் புரிந்து கொண்டார். 

விக்ரம் உண்மையாகவே வனிதாவை காதலித்தான். அவனே வீட்டில் சொல்லி திருமணம் செய்வதாகத்தான் இருந்தான். ஆனால் இப்படி வனிதா வீட்டினர் வந்து சட்டமாக அமர்ந்து பேசியது, அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அப்போதுதான் அவர்களின் நோக்கம் அவனுக்குமே புரிந்தது. 

அவன் நினைத்து இருந்தால், அந்த நேரமே கூட வனிதாவை விட்டு விலகி இருக்க முடியும். ஆனால் நடந்த அனைத்திற்கும் தானும் பொறுப்பு என்று உணர்ந்தவன், வனிதாவை திருமணம் செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் வனிதா வீட்டினரை அன்றோடு வெறுத்து விட்டான். 

விக்ரமின் காதல் வெற்றிக்கு தெரிய வரும்போதே, நம்ம குடும்பத்துக்கு இந்தக் காதல் எல்லாம் ஒத்து வராது வேண்டாம் என எச்சரித்து இருந்தான். ஆனால் அப்போது நண்பனின் பேச்சை விக்ரம் கேட்கவில்லை. அவன் எல்லை மீறிப் பழகியது எல்லாம் வெற்றிக்குத் தெரியாது. அப்போது மில்லும் இல்லை. எப்போதோ ஒருமுறை தான் நண்பர்கள் சந்திப்பது. 

இப்படி நல்ல வரனை விடுகிறோமே என மூர்த்தி வருந்த, விக்ரமே ஆதிரையை வெற்றிக்குப் பார்க்கலாம் எனச் சொல்லி எல்லா ஏற்பாடும் செய்தான்.

ஆதிரையின் ஜாதகம் முதலில் விக்ரமிற்குப் பார்த்தது என்பது விக்ரம் வீட்டினர் மற்றும் ஆதிரையின் தந்தைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. 

முதலில் வெற்றி ஆதிரை திருமணம் நடந்து முடிய, அடுத்துதான் விக்ரமின் திருமணம் நடந்தது. 

தான் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கக் மாட்டேன் என மூர்த்தி உறுதியாகச் சொல்லிவிட, விக்ரமே தன்னுடைய திருமணத்தை எளிமையாகச் செய்து கொண்டான். வெற்றியும் ஆதிரையும் உடன் இருந்தனர். 

“அவன் அவங்க அப்பா பேச்சை மீறி கல்யாணம் பண்றான். நீ அதற்குப் போகக் கூடாது.” என்றார் வெற்றியின் தந்தை அண்ணாமலை. அதுவரை வெற்றி அவரின் பேச்சை மீறியதே இல்லை. 

“சொந்தக்காரன் அப்படி இருக்கலாம் பா… ஆனா அவன் என் நண்பன். என்னால அப்படி அவனை விட முடியாது.” என வெற்றி உறுதியாகச் சொல்லிவிட்டான். 

பெரிய இடம் மகளோடு சேர்ந்து தாங்களும் அங்கே புகுந்து விடலாம் என்ற வனிதா வீட்டினரின் எண்ணம் பலிக்கவில்லை. அந்த எண்ணம் புரிந்துதான் மூர்த்தி மகனையே தள்ளி வைத்தார். விக்ரமும் அதைப் புரிந்து கொண்டான்.
திருமணம் முடித்துக் கூட விக்ரம் வேறு வீட்டில் தனிக்குடித்தனம் தான் இருந்தான். 

“இப்படி மகனை தள்ளி வைக்கக் கண்டோமா. உங்களுக்கு உரிமையானதை நீங்க கேட்டு வாங்குங்க. நமக்குத் தெரிந்த வக்கீல் கூட இருக்காரு.” என வனிதா வீட்டினர் விக்ரமை ஏற்றி விட, 

“உன் அப்பா அம்மா வீட்ல இருந்து, இனி இங்க யாரும் வரக் கூடாது. நீயும் அங்க போகக் கூடாது. அப்படி இருக்கிறதுன்னா இரு… இல்லைனா போயிட்டே இரு.” என விக்ரம் வனிதாவிடம் உறுதியாகச் சொல்லிவிட, வனிதா தனது பிறந்த வீட்டினரிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தாள். அவர்களைப் பார்த்தால் இவளும் அல்லவா சேர்ந்து போக வேண்டும்.  விக்ரம் இல்லாத நேரம் அவனுக்கு தெரியாமல் தான் அவள் வீட்டினர் வருவார்கள். இவளும் எப்போதோ ஒருமுறை கணவனுக்கு தெரியாமல் சென்று வருவாள். 

ஆதிரையும் வனிதாவும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான குடும்பத்திற்கு மருமகளாக வந்தனர். ஆனால் ஆதிரைக்கு இருக்கும் மரியாதை வனிதாவிற்கு இல்லை. 

விக்ரமிற்கே வனிதா மீது மரியாதை இல்லை. “நீ காரியம் சாதிக்க எந்த எல்லைக்கும் போவேன்னு எனக்குத் தெரியுமே.” என்பான் சில நேரம். 

அவனுக்குமே சில நேரம் தோன்றும், அவள் மறுத்து இருந்தால் தான் ஒன்றும் கட்டாயபடுத்தி இருக்க மாட்டோம். தன்னைச் சிக்க வைக்கவே அவளும் நினைத்திருப்பாளோ… என்ற எண்ணம் அவனுக்கும் உண்டு. 

ஒரு பெண் திருமணதிற்கு முன் உணர்ச்சிகளுக்கு இடம் அளித்தால், இழப்பது அவள் கர்ப்பை மட்டும் அல்ல… மரியாதையும் சேர்த்துதான். 

நாமும் தானே அந்த விஷயத்திற்கு உட்பட்டோம் என்பது எல்லாம் ஆணுக்கு வசதியாக மறந்து விடும். பெண்கள் செய்தது மட்டுமே அங்கே நிலைத்து நிற்கும். 

வனிதா வீட்டினர் கண்ட கனவு, இலவு காத்த கிளியின் கதை போல ஆனது. வனிதா அவள் வீட்டினருக்கு கொஞ்சம் பணம் கொடுப்பாள். அதற்கு மேல் எதுவும் முடியாது. 
இப்போது சில மாதங்களுக்கு முன்பு, மூர்த்திக்கும் உடல்நலமில்லாமல் இருக்க, விக்ரமை தங்கள் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். அதுவும் மாடியில் தனிக் குடித்தனம் தான்.

தான் செய்த தவறுக்கு விக்ரம் வனிதாவை மணந்து கொண்டான். அவர்கள் இருவரும் காதலித்தார்கள் என்று சொன்னால்… இப்போது அவர்களாலேயே நம்ப முடியாது. 

வனிதாவின் குடும்பம் எப்படி இருந்தாலும், வனிதா நினைத்திருந்தால், அவளது நடத்தையால்  நல்ல மதிப்பை பெற்றிருக்க முடியும். ஆனால் செய்யத் தெரியாமல் அல்லது எக்குதப்பாகச் செய்து, வனிதா மேலும் சிக்கலாக்கிக் கொண்டாள். இனியும் ஆக்கிக்கொள்வாள். 

Advertisement