இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 4
பதினோரு மணி பேருந்து என்பதால்… நிதானமாகக் கிளம்ப முடிந்தது. பிரயாணத்திற்குத் தோதாக ஆதிரை சுடிதார் அணிந்திருந்தாள். வீட்டை ஒதுங்க வைத்து, வீட்டு காவலுக்கு ஆள் வைத்து எனக் கிளம்பும் வரை வேலை சரியாக இருந்தது. வேலைக்கு நடுவே இரவு உணவையும் முடித்தனர்.
விக்ரம் குடும்பம் வீட்டில் இருந்து காரில் கிளம்பி வழியில் இவர்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் சென்றனர். பேருந்து கிளம்பும் நேரத்திற்கு வந்ததால்… இவர்கள் ஏறி அமரவும் பேருந்தை எடுக்கவும் சரியாக இருந்தது.
படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்து என்பதால்… வண்டி கிளம்பியதுமே ஆதிரை படுத்து உறங்கி விட்டாள். காலையில் இருந்து வேலை செய்த அலுப்பு.
சுற்றுலா செல்வதால் குஷியில் அருணும் சுஜியும் உறங்க மறுத்து, “நாங்க இப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்திட்டு வரப் போறோம்.” என்றனர்.
“இப்ப இருட்டில ஒன்னும் தெரியாது பேசாம படுங்க.” என இருவரையும் இழுத்து படுக்க வைப்பதே பெரும் பாடாக இருந்தது.
நடுவில் பேருந்து ஒரு இடத்தில் சில நிமிடங்கள் நிற்க, ஆதிரை உறக்கத்தில் இருந்து விழித்தவள், ஓய்வறைக்குச் செல்ல நினைத்தாள். அவள் எதிர் இருக்கையில் படுத்திருந்த வெற்றியைப் பார்க்க, அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அதற்குப் பின் இருக்கையில் இருந்த விக்ரம் பேருந்து நின்றதால் விழித்திருந்தான்.
ஆதிரை வனிதாவை அழைக்க, மகளோடு படுத்திருந்தவளோ அரைகுறை உறக்கத்தில், “நான் வரலைக்கா நீங்க போயிட்டு வாங்க.” என்றாள்.
“சரி அருணைப் பார்த்துக்கோ.” எனச் சொல்லிவிட்டு ஆதிரை செல்ல,
“நைட் நேரம் நீ துணைக்குப் போகக்கூடாது.” என வனிதாவை கடிந்து கொண்ட விக்ரம், அவன் எழுந்து சென்று பேருந்தின் வெளியே நின்று கொண்டான்.
ஆதிரை திரும்ப வந்து பேருந்தில் ஏறியதும், விக்ரம் ஓய்வறைக்குச் சென்று விட, வெற்றி விழித்து அருணைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வனிதா உறங்கி இருந்தாள்.
“இவளை நம்பி குழந்தையை விட்டுட்டு போனா… எப்படித் தூங்கிட்டு இருக்காப் பாரு.” என நினைத்த ஆதிரை, “பஸ் நிற்கும்போதே நீங்க பாத்ரூம் போயிட்டு வந்திடுங்க.” எனச் சொல்ல, வெற்றியும் எழுந்து சென்றான்.
சிறிது நேரம் சென்று வந்த வெற்றியின் கையில் மனைவிக்குப் பாதாம் பால் இருக்க, அதை அவளிடம் கொடுத்தவன், மீண்டும் கீழே இறங்கி சென்றான்.
வெற்றி விக்ரம் இருவரும் நின்று டீ குடித்துவிட்டு பேருந்து எடுக்கும் நேரம்தான் உள்ளே வந்தனர். ஆதிரை இன்னும் பால் குடித்துக் கொண்டிருக்க, விக்ரம் அவன் இருக்கையில் சென்று படுத்து விட, வெற்றி மனைவி குடித்து முடிக்கும் வரை உட்கார்ந்து இருந்தான்.
வனிதா அரைகுறை உறக்கத்தில் இருந்தவள், அடிக்கடி விழித்து என்ன நடக்கிறது எனப் பார்ப்பதும் உறங்குவதுமாக இருந்தாள். கணவன் தனக்கு எதுவும் வாங்கி வரவில்லை என நினைத்தாள்.
மகனும் தானும் இருந்த படுக்கையே பெரிதாக இருக்க, “நீங்களும் எங்களோட படுங்க.” என ஆதிரை சொல்ல, வெற்றியும் மனைவியின் அருகே சென்று படுத்துக்கொள்ள, மீண்டும் இருவரும் நன்றாக உறங்கி விட்டார்கள்.
ஐந்து மணி போல விக்ரமை எழுப்பிய வனிதா, “எனக்குப் பாத்ரூம் போகணும்.” என்றாள்.
“நிற்கும் போது போயிருக்கனும். நாம சொல்ற இடத்தில எல்லாம் அவன் நிறுத்த மாட்டான். அவன் ரோட்டு ஓரமா வேணா நிறுத்துவான். நீ அங்க போவியா இல்லையில்லை, பேசாம படு.” என்றவன், மீண்டும் படுத்து உறங்கி விட… வனிதா தூங்க முடியாமல் விழித்தே இருந்தாள். அப்போது செல்ல சோம்பேறி பட்டுக் கொண்டு செல்லவில்லை. ஆனால் கோபமோ விக்ரமின் மீதுதான்.Advertisements
சிறிது நேரம் சென்று விக்ரம் பார்த்த போது வனிதா உறங்காமல் இருக்க, வேறுவழியில்லாமல் எழுந்து சென்று அவன் ஓட்டுனரிடம் கேட்க, ஓட்டுனர் சரி சார் பார்க்கிறேன் என்றான். ஆனால் பேருந்தை நிறுத்தவே இல்லை.
Advertisements