Advertisement

 
இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 3 

“உங்க பிரண்டை நான் ஒன்னும் வேலை பண்ண விடாம பிடிச்சு வைக்கலை… ஒழுங்கா வேலை பண்றாரா இல்லையான்னு தான் பார்க்க வந்தேன்.” ஆதிரை சொல்ல, 


“ஓ… வேவு பார்க்க வந்தியா? பேசாம நீ நம்ம மில்லுக்கு வந்திடு… எனக்கும் வெற்றிக்கும் வேலையாவது குறையும்.” என்றான் விக்ரம். 

ஆதிரை வெற்றியை பார்க்க, “அடுத்த வருஷத்தில இருந்து அருணுக்கு முழு நேரம் ஸ்கூல் அப்போ வா…காலையில பத்து பத்தரைக்கு வந்தா, அருண் வர்றதுக்குள்ள போக சரியா இருக்கும்.” எனக் கணவன் சொன்னதற்கு, இல்லை நான் இப்பவே வருவேன் என்று என எந்த வாக்குவாதமும் செய்யாமல் கணவன் சொன்னதை அப்படியே ஏற்றாள். 

அவளின் அந்தக் குணம் விக்ரமிரக்கு பிடிக்கும். இப்போதே அவள் வருகிறேன் எனச் சொன்னாலும் வெற்றி மறுக்க மாட்டான். ஆனால் ஆதிரை தனது கணவனின் அன்பை தவறாக உபயோகிக்க மாட்டாள். 

தோட்டத்தில் இரண்டு பெரிய பானைகளில் பொங்கல் வைப்பார்கள். அதற்கு மண் அடுப்பு எல்லாம் அவர்களே தயார் செய்வார்கள். ஆதிரை அதைப் பற்றி வேலை ஆட்களுடன் பேச சென்றுவிட, நண்பர்கள் இருவரும் அங்கேயே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தனர். 

பொங்கல் முடிந்தால் தோட்டத்தில் வேலை ஒன்றும் இல்லை. மில்லுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறைதான். எங்காவது வெளியூர் சென்று வந்தால்.  மனதிற்கும் மாறுதலாகப் புத்துணர்ச்சியாக இருக்கும் என நினைத்த வெற்றி, “விக்ரம், பொங்கல் முடிஞ்சதும் ரெண்டு நாள் எங்காவது குடும்பத்தோட போவோமா?” என்றான். அப்போது ஆதிரையும் அங்கு வந்துவிட்டாள். 

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. போலாமே.” என்றான்.

“மூணாறு போகலாம், நீ பார்த்து எல்லா ஏற்பாடும் பண்ணிடு.” என வெற்றி ஆதிரையிடம் சொல்ல, அவள் அவனை முறைத்தாள்.

“எப்பவும் கடைசி நேரத்தில சொல்றதே வேலை… பொங்கல் நேரம் ரூம் கிடைக்க வேண்டாமா?” 

“இருக்கும் பாரு. நாம இங்க இருந்து கார்ல போக டைம் இல்லை. பொங்கல் அன்னைக்குப் பஸ்ல தேனீ வரை புக் பண்ணிடு. அங்க இருந்து ஜீப் எடுத்திட்டு போகலாம். திரும்ப வரவும் அதே போலப் புக் பண்ணிடு.” 

“உங்க அம்மா?” 

“அவங்களுக்கு அந்தக் குளிர் ஒத்துக்காது. அதோட அவங்களுக்கு நடக்கவும் முடியாது. வேற எங்காவது போகும்போது கூடிட்டு போவோம். இந்த தடவை அவங்க அக்கா வீட்டுக்கு வேணா போயிட்டு வரட்டும்.” 

“நீங்க உங்க அம்மாகிட்ட சொன்ன பிறகு டிக்கெட் போடவா…” 

“இல்லை நாம இப்பவே லேட். நீ புக் பண்ணிடு நான் சொல்லிக்கிறேன்.” 

விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றதும், உணவு இடைவேளையாக இருக்கும் என வெற்றி தன் அக்கா கிர்த்திகாவுக்கு அழைத்தான்.  அவன் அக்கா டீச்சராக இருக்கிறாள். இரட்டை குழந்தை அவர்களுக்கு. இரண்டுமே பையன்கள். 

“அக்கா…” 

“வெற்றி சொல்லு எப்படி இருக்க?” 

“நல்லா இருக்கேன். நீ அத்தான் பசங்க எல்லாம் சவுக்கியமா?” 

“நல்லா இருக்கோம். அப்புறம் ஆதிரை அருண் எல்லாம் எப்படி இருக்காங்க?” 

“ம்ம்.. நல்லா இருக்காங்க. அம்மாவை கேட்கலை?” 

“அம்மா தான் என்கிட்டே தினமும் பேசுறாங்களே?” 

“பொங்கலுக்கு நம்ம வீட்டுக்கு வரலாமே அக்கா?” 

“இல்லைடா உங்க அத்தான் ரொம்பப் பிஸி. பசங்களுக்கும் கிளாஸ் இருக்கு.” 

“அம்மாவை அங்க ரெண்டு நாள் அனுப்பவா?” 

“ஏன் கேட்டுட்டு இருக்க அனுப்பி வை.” 

“பொங்கல் முடிஞ்சு தோட்டத்தில வேலை இல்லை. ஆளுங்களும் வேலைக்கு வர மாட்டாங்க. அதுதான் எங்காவது சுத்தி பார்க்க போகலாம்னு நினைச்சேன். அம்மா இங்க தனியா இருக்க யோசிப்பாங்க.” 

“ஆமாம் நீங்களும் இந்த நேரம் போனாத்தான் உண்டு. நானே அம்மாவை பொங்கலுக்கு வாங்கன்னு கூப்பிடுறேன்.” 

“சரிக்கா.” 

“அம்மா கொஞ்ச நாள் எங்களோட இருக்கட்டுமே.” 

“இல்லைக்கா அது சரி வராது. வேணா ஒரு பத்து நாள் வச்சுக்கோ… நீயும் வேலைக்குப் போயிடுவ, அவங்களுக்கு அங்க போர் அடிக்கும். அதோட அம்மாவுக்கு இங்க இருக்க மாதிரி அங்க ப்ரீயா இருக்க முடியாது. இங்க யாராவது வீட்டுக்கு வந்திட்டு போயிட்டு இருப்பாங்க.” 

“ஆமாம் நீ சொல்றது சரிதான். அதுக்கு மேல அவங்களே இருக்க மாட்டாங்க.” என்றாள் கிர்த்திகா.

வெற்றி மேலும் சிறிது நேரம் தனது சகோதரியுடன் பேசிவிட்டு வைத்தான்.
பேருந்தில் இருந்து தங்கும் அறை வரை எல்லாமே அதிக விலையில் இருக்க, வேறுவழியில்லாமல் ஆதிரை முன்பதிவு செய்தாள். 

இரண்டு மணிக்கு மேல் கணவன் மனைவி இருவரும் ஒன்றாகவே வீடு திரும்பினர். அருணும் ஜோதியும் ஏற்கனவே உண்டு முடித்திருக்க, அதுவும் அருண் உறங்கியும் விட்டான். ஜோதி மட்டும் உட்கார்ந்து இருந்தார். 
சாப்பிட்டதும் படுக்க மாட்டார். இந்த வயதிலும் சுகர் பிரஷர் என ஒன்றும் இல்லை. தைராய்ட் மட்டும் இருக்கிறது. அதற்குக் காலையில் வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்வார். 

இருவரும் கைகழுவி விட்டு சாப்பிட அமர்ந்தனர். இரண்டு பொரியல் வைத்து சேனைக்கிழங்கு குழம்பு வைத்திருந்தார். ஆதிரைக்கு அவர் செய்வது மிகவும் பிடிக்கும். 

குழம்பு பொரியல் எல்லாவற்றிலும் உப்புக் கம்மியாக இருந்தது. “என்ன மா உப்பே இல்லை.” என வெற்றி சொல்ல, ஆதிரை ஒன்றும் சொல்லாமல், உப்பை போட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள். 

சில நேரம் நாமும் மாமியாரைப் போலக் குறை சொல்லலாமா எனத் தோன்றும், இந்த வயதில் அவர் செய்வதே பெரிது. அதோடு தானும் ஏன் அவரைப் போல இறங்கி போக வேண்டும் என்ற எண்ணத்தில் எதாவது குறை இருந்தாலும் சொல்ல மாட்டாள். ஆதிரை நன்றாகச் சாப்பிட வெற்றி சரியாக உண்ணவில்லை. 
“டேய் வெற்றி, உங்க அக்கா போன் பண்ண டா.. பொங்கலுக்கு என்னை அங்க கூப்பிடுறா.”
“நம்ம தோட்டத்தில பொங்கல் வச்சிட்டு வந்து சாயங்காலமா கிளம்புங்க.”
“ம்ம்.. சரி.” என்றவர் படுக்க சென்றுவிட, வெற்றியும் சென்று மகனுடன் படுத்து விட, ஆதிரை பூஜை சாமான் எல்லாம் எடுத்து விளக்கி வைத்தாள். 

கணவன் சரியாக உண்ணவில்லை எனத் தெரியும். அதோடு அவன் இந்த நேரம் வீட்டில் இருப்பது அரிது என்பதால்… மாலை சிற்றுண்டிக்கு கேசரியும் பஜ்ஜியும் செய்தாள். வாழைக்காய் மற்றும் மகனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு என இரண்டிலும் செய்தாள். 

ஆதிரை சூட சூட பஜ்ஜி போட்டுக் கொண்டு வர, தாயும் மகனும் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டனர். 

“நீ பஜ்ஜி மாவுல பெருங்காயம் போட்டியா இல்லையா?” என ஜோதி கேட்க, ஆதிரை பதில் சொல்லாமல் இருக்க, 

“இல்லை பெருங்காய வாசனையே இல்லையேன்னு கேட்டேன். பெருங்காயம் போட்டாத்தான் நல்ல இருக்கும்.” ஜோதி அவர் சொல்ல வந்ததைச் சொல்லிவிட, வெற்றி மனைவியைப் பார்க்க, அவள் முகத்தில் இதை எதிர்ப்பார்த்த பாவனை மட்டுமே. 

“எல்லாம் இருக்கு மா.” என்றான் வெற்றி. 
 
“நம்ம தோட்டத்துக்குப் போனேன் டா…” என்றவள், மகனுக்குக் கேசரியும் பஜ்ஜியும் ஊட்டி விட… தாயிடம் கதை பேசியபடி மகன் உண்ண, வெற்றி உள்ளே வந்து மனைவியின் அருகே கட்டிலில் உட்கார்ந்தான். 

“இப்ப மம்மம் நல்லா இருக்கு. மதியம் ஏன் நல்லா இல்லை.” அருண் கேட்க, 

“உங்க அப்பா போலவே உனக்கு நாக்கு நீளம்.” என்றாள் ஆதிரை. 

“அடப்பாவி, எங்க அம்மா சமையல் உனக்குப் பிடிக்கலையா?” என வெற்றி சிரிக்க, மகனும் சேர்ந்து சிரித்தான். 

“கோபமா ஆதி.” என வெற்றி மனைவியின் முகம் பார்க்க, 

“எதுக்கு உங்க அம்மா சொன்னதுக்கா… அது எனக்குப் பழகி போச்சு. நான் இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனேன் அப்புறம் இந்த வீட்ல நான் இருக்கவே முடியாது.” என்றாள். 

வெற்றி சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “நேத்து நைட்டும் நீ தூங்க லேட் ஆச்சு. இன்னைக்குப் பகல்லையும் நீ ரெஸ்ட் எடுக்கலை. நான் இப்ப சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு. நைட் வெளிய ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட்டுகிறேன். நீ எனக்காகக் காத்திருக்காம, சீக்கிரம் சாப்பிட்டு அருணோட படுத்துக்கோ.” 

“சரி… ஆனா நீங்க சாப்பிடணும்.” 

“கண்டிப்பா…” என்றவன், மனைவி மகனிடம் விடைபெற்று மில்லுக்குச் சென்றான். கணவன் சொன்னபடியே ஆதிரை சீக்கிரமே படுத்து உறங்கிவிட்டாள். 

அன்று போகி என்பதால்… வீட்டின் முன்பே சாஸ்திரத்துக்குச் சில விறகுகளைப் போட்டு கொளுத்திவிட்டு குளித்தனர். மறுநாள் பொங்கல் என்பதால் நிறைய வேலைகள் இருக்க… ஆதிரை காலில் சக்கரம் கட்டியது போலச் சுற்றிக் கொண்டு இருந்தாள். 

“பூஜை சாமான் எல்லாம் நான் விளக்க மாட்டேனா? ஏன் நான் பண்ணினா என்ன?” என ஜோதி முனங்கிக் கொண்டு இருந்தார். 

சில நேரம் அவர் செய்வார் என இருந்தால் செய்ய மாட்டார். ஆதிரை சொன்னால் செய்வார்தான். ஆனால் ஒரு வேலை செய்துவிட்டு நூறு கேள்வி கேட்பார். அதற்குப் பயந்து கொண்டுதான் ஆதிரை அவளாக வேலை சொல்ல மாட்டாள். 

அன்று மதியம் போல விக்ரமின் மனைவி வனிதாவுடன் பேசுவோம் என ஆதிரை அவளைக் கைப்பேசியில் அழைத்தாள். 

“ஹாய் ஆதிரை அக்கா எப்படி இருக்கீங்க?” 

“நான் நல்லா இருக்கேன் வனிதா. நீ எப்படி இருக்க?” 

“நல்லா இருக்கேன். பொங்கல் வேலை எல்லாம் எப்படிப் போகுது?” 

“அது எப்பவும் போலத்தான். நாளைக்கு நீங்களும் தோட்டத்திற்கு வந்திடுங்க.” 

“சரிக்கா…” 

“அப்புறம் மூணாறு போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கோ.” 

“மூணாறு போறோமா எப்போ?” 

“உன் வீட்டுக்காரர் சொல்லலை…” 

“இல்லையே… அவர் என்னைக்குச் சொல்லி இருக்கார், இன்னைக்குச் சொல்ல. இவகிட்ட எல்லாம் சொல்லனுமான்னு அலட்சியம், வேற என்ன?” என வனிதா பொரிய தொடங்க…. 

“அது எப்படிச் சொல்லாம இருப்பாங்க? இனிதான் சொல்வாரா இருக்கும். நேத்து அவங்க பேசும்போது நானும் தோட்டத்தில இருந்தேன். அதுதான் எனக்குத் தெரியும். நான் சுடிதார்தான் எடுத்துக்கிறேன். அதோட ரொம்பக் குளிரா வேற இருக்கும் மறக்காம ஸ்வெட்டர் எடுத்து வச்சுக்கோ. அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன் வச்சிடுறேன்.” 

தான் ஆர்வக்கோளாறில் சொன்னது கணவன் மனைவிக்கு இடையே எதுவும் பிரச்சனையை உருவாக்கி விடுமோ என ஆதிரைக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது. அவள் பயம் உண்மையானது. 

“மூணார் போறோம்னு எனக்கு ஆதிரை சொல்லித்தான் தெரியும்.” என வனிதா சொன்னதற்கு, “யார் சொன்னா என்ன? உனக்கு இப்ப தெரிஞ்சிடுச்சு இல்ல…” என்றான் விக்ரம். 

“என்கிட்டே வர விருப்பமா, போகலாம்ன்னு எல்லாம் கேட்கலை.. எல்லாம் முடிவு பண்ணிட்டு தகவல் மட்டும் சொல்றீங்க. ஆதிரை முடிவு பண்ணா போதும். நான் முடிவு பண்ண வேண்டாம்.” 

“மூணார் போகலாம்னு சொன்னது, நானோ ஆதிரையோ இல்லை. வெற்றிதான் போகலாம்னு சொன்னான். அப்போ ஆதிரை அங்க இருந்ததுனால அவளுக்குத் தெரியும். நான் வேலையில உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன் இதுதான் விஷயம்.” 

“நான் நம்பிட்டேன்.” என வனிதா முறைத்தபடி சொல்ல.. 

“நீ நம்பு நம்பாம போ… எனக்கு ஒன்னும் இல்லை.” என்றான் விக்ரம் அலட்சியமாக. 

“வெற்றி அண்ணன் எப்படி இருக்காங்க, ஆனா நீங்க எப்படி இருக்கீங்க? பொண்டாட்டியை மதிச்சு ஒன்னும் கேட்கிறது இல்லை.” 

“கத்து டி நல்லா கத்து. வெற்றி நேத்துதான் ஆதிரைகிட்டையும் சொன்னான். அவன் சொன்ன கடைசி நேரத்திலேயும் ஆதிரை எல்லா ஏற்பாடும் பண்ணினா. ஆனா நீ ஒரு வேலைக்கும் ஆக மாட்ட. ஆனா நல்லா சண்டை மட்டும் போடு. எல்லாம் என் நேரம்.” எனச் சொல்லிவிட்டு விக்ரம் வெளியே சென்றுவிட்டான். கணவனிடம் கத்தினாலும் ஊருக்கு செல்ல தேவையானது பார்த்து வனிதா எடுத்து வைத்தாள். 

மறுநாள் அதிகாலை வீட்டின் முன்பு சின்னப் பானை வைத்து ஆதிரை பொங்கல் வைத்தாள். பிறகு காலை உணவு உண்டுவிட்டு அவர்கள் தோட்டத்திற்குச் சென்றனர். 

பத்து மணி போல ஆதிரையின் குடும்பத்தினர் காரில் நேராகத் தோட்டத்திற்கு வந்துவிட்டனர். ஆதிரையின் அப்பா அம்மா சகோதரன் மற்றும் பாட்டி என எல்லோரும் வந்திருந்தனர். அதோடு அங்கு வேலை செய்யும் அனைவரும் வந்துவிட, மண் திண்டு அமைத்து பசுஞ்சானியால் மொழுகி கோலமிட்ட அடுப்பில் இரண்டு பெரிய பானைகளில் பொங்கல் வைத்தனர். அங்கிருந்த பெண்கள் ஆதிரைக்கு உதவ, பொங்கல் பொங்கியதும், அங்கிருந்த வயதான பெண்கள் சேர்ந்து குலவையிட, ஆண்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சந்தோஷ குரல் எழுப்பினர். 

அப்போதுதான் விக்ரமும் வனிதாவும் தங்கள் மகள் சுஜியுடன் வந்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் சூரியனுக்குப் படைத்தவர்கள், அங்கிருந்த மாடுகளுக்கும் பூஜை செய்து பொங்கலும், பழங்களும் கொடுத்தனர். பூஜை நல்ல படியாக முடிய… ஆதிரையின் வீட்டினர் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்ல… அவர்களோடு அருணும் ஜோதியும் சென்றனர். 

ஜோதி வம்பு வளர்ப்பது எல்லாம் ஆதிரையிடம்தான், அவள் பெற்றோரிடம் நன்றாகவே நடந்து கொள்வார். 

வடை பாயசத்தோடு மதிய விருந்து அங்கேயே ஆள் வைத்து சமைத்து பரிமாறினர். வந்தவர்கள் எல்லோரும் வயிறார உண்டனர். சிலர் வீட்டிற்கும் எடுத்து சென்றனர். அது தவிர அனைவருக்கும் புது உடை, கரும்பு என எல்லோருக்கும் கொடுத்து அனுப்பினர். 

வெற்றி தம்பதியினர் விக்ரம் தம்பதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர, அங்கே அவர்களுக்கான உணவும் தயாராக இருந்தது. தோட்டத்தில் சமைத்த உணவுதான். கோவிலில் இருந்து எல்லோரும் வந்ததும் ஆதிரையும் வனிதாவும் உணவு பரிமாறிவிட்டு, பிறகு அவர்கள் உண்ணும் போது மூன்று மணி ஆகிவிட்டது. உண்டு முடித்ததும் விக்ரம் வனிதாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். அதன் பிறகே ஆதிரைக்கு அவள் வீட்டினருடன் பேசக் கூட நேரம் இருந்தது. 

ஆதிரையின் அம்மா மகளுக்கு வாங்கி வந்த புடவை நகை எனக் கொடுக்க, ஆதிரை அவர்கள் எல்லோருக்கும் எடுத்து வைத்திருந்த உடைகளைக் கொடுத்தாள். 

ஐந்து மணிப் போல ஆதிரையின் வீட்டினர் விடைபெற்றுக் கிளம்ப, அவர்கள் தோட்டத்தில் விளைந்த கரும்பு, கடலை என அனைத்து பொருட்களையும் வெற்றி ஆட்களைக் கொண்டு அவர்கள் காரில் ஏற்றினான். 

ஆதிரையின் பெற்றோர் மகள் வீட்டுக்கு வருவது இந்த ஒருநாள் தான். மற்றபடி ஆதிரை தான் அவர்கள் வீட்டிற்குச் செல்வாள். ஆதிரையின் தந்தையும் சொந்த தொழில் செய்வதால், அதோடு சேர்ந்து ஊர் வேலையும் பார்ப்பதால் அவருக்கு நேரம் இருக்காது. 

அவர்கள் சென்றதும் ஜோதியும் மகள் வீட்டிற்குக் கிளம்பினார். ஆதிரை நாத்தனார் குடும்பத்திற்கு எடுத்த உடைகளைக் கொண்டு வந்து கொடுக்க, ஜோதி மகளுக்கு எடுத்த புடவையை ஆராய்ந்தார். எப்போதுமே பட்டுப்புடவைதான் எடுப்பது. 

வெற்றி அக்காவுக்குப் பொங்கல் சீரை காரில் ஏற்ற, “எங்கையோ சுத்த போறீங்களே பார்த்து போயிட்டு வாங்க.” எனச் சொல்லிவிட்டு ஜோதி சென்றார். தன்னை அழைக்கவில்லை என முதலில் கோபம்தான். ஆனால் போகும் ஊர் மிகவும் குளிரும், உங்களுக்குத் தாங்காது என மகன் சொன்னதால்… சரி போகட்டும் என விட்டுவிட்டார். 

நாளை கணவன் மற்றும் மகனுடன் கழிக்கப் போகும் இனிய பொழுதை எண்ணி, மகிழ்ச்சியில் வேலைகளை ஆதிரை சீக்கிரமாக முடித்தாள். 
கணவன் என்ன திட்டத்தோடு வருகிறான் என தெரியும் போது இருக்கிறது கச்சேரி.

Advertisement