Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 21 

வெற்றியும் விக்ரமும் கமிஷனரை சந்தித்து நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்கள். முதலில் அவருக்குக் கூடப் பெரிய இடம் இவர்கள்தான் எதுவும் செய்திருப்பார்களோ என எண்ணம். அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர், இப்போதுதான் புதிதாக மாற்றலில் இங்கே வந்திருக்கிறார். அதனால் அவருக்கு இவர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் ஆதாரத்தை எல்லாம் பார்த்த பிறகு திட்டமிட்டே வெற்றியை இதில் சிக்க வைத்திருப்பது புரிந்தது. 


“நீங்க முன்னாடியே வந்திருக்காலம். வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு யோசிக்கிறீங்க பார்த்தீங்களா… அதைத்தான் இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திகிறாங்க. பரவாயில்லை இப்பவும் ஒன்னும் தாமதம் இல்லை. நீங்களே ஆதாரத்தோட வந்திருக்கீங்க. சீக்கிரம் அவங்களைப் பிடிச்சிடலாம்.” என்றார். 

“நாளைக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு புகார் கொடுத்திடுங்க.” என்றவர், எந்த மாதிரி கொடுக்க வேண்டும் எனவும் விளக்கினார். 

விக்ரமும் வெற்றியும் எந்த வழியில் சென்றார்களோ, அந்த வழியிலேயே திரும்ப மில்லுக்கு வந்தனர். 

புகார் கொடுத்து விட்டாலும் போலீஸ் பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைக்கவில்லை. தாங்களே இறங்குவது என முடிவு செய்திருந்தனர். அதன்படி இருவரும் எதுவும் காட்டிகொள்ளாமல் வழக்கமாக மில்லில் இருந்து கிளம்புவது போலக் கிளம்பினர். 

வெற்றி தனது இருசக்கர வாகனத்தில் செல்ல, விக்ரம் தனது காரில் சில ஆட்களை ஏற்றிக் கொண்டு, அவன் வீடு நோக்கி சென்றான். அவர்கள் எதிர்பார்த்தபடி திலீபனின் ஆட்கள் வெற்றியைத்தான் பின் தொடர்ந்தனர். 

“அண்ணா, நாங்க அந்த வெற்றியை பின்தொடர்ந்து போறோம்.” 

“பின்னாடி போய் மட்டும் என்ன பண்றது. அவனால நமக்கு ஒரு பைசா பிரோஜனம் இல்லை. அவனை அப்படியே விடக் கூடாது. நல்லா அடிச்சாவது போட்டுட்டு வாங்க.” என்றான் திலீபன். 

பின்னால் இருந்தவன், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனிடம், “டேய், சீக்கிரம் போய் அவனைப் பிடி. அண்ணா அவனை அடிக்கச் சொல்றார்.” எனச் சொல்ல, அதைக் கேட்ட மற்றவன் வண்டியின் வேகத்தை அதிகரிக்க, அதே நேரம் முன்னால் சென்று கொண்டிருந்த வெற்றி வேகத்தைக் குறைத்து, இவர்களை மரிப்பது போல வண்டியை குறுக்காக நிறுத்தினான். 

வெற்றி வண்டியை நிறுத்துவிட்டு, அதில் சாய்ந்து நின்று தெனாவட்டாக இவர்களைப் பார்க்க, இதை எதிர்பார்க்காதவர்கள் சிறிது தயங்கினாலும், “அவனே வந்து நம்மகிட்ட மாட்டுறான் டா… அவன் ஒரு ஆள்தான். நாம ரெண்டு பேர், என்ன பண்றான் பார்க்கலாம்.” என அவர்கள் இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி வெற்றியை நோக்கி செல்ல, வெற்றி அலட்சியமாக ஒரு காலை மடக்கி வேட்டியை உயர்த்திக் கட்டியவன், முதலில் நெருங்கியவனை அதே அலட்சியத்தோடு ஒரு உதை விட்டான். 

அவன் லேசாகக் காலை ஓங்கியது போலத்தான் இருந்தது. ஆனால் உதை வாங்கியவன் இரண்டடி தள்ளி சென்று விழுந்தான். உதைத்த உதையில் வயிறே கதி கலங்கியது. அவனால் எழுந்துகொள்ள முடியவில்லை. 
அடுத்தவனுக்குச் சிறிது பயம் வர, வேகமாக வண்டிக்கு திரும்பியவன் , வண்டியில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு வந்து, வெற்றியை அடிக்கக் கம்பியை ஓங்கினான். 

கையால் அந்தக் கம்பியை பற்றிக் கொண்ட வெற்றி, காலால் இவனுக்கும் ஒரு உதை விட, கம்பி வெற்றியின் கையில் இருக்க, அந்த ஆள் மட்டும் தள்ளி சென்று விழுந்தான். அவர்கள் இருவரும் எழுந்து ஓட நினைப்பதற்கு முன், பின்னால் காரில் வந்த விக்ரமும் ஆட்களும் இவர்களை நெருங்கி இருந்தனர். 

காரில் இருந்த ஆட்கள் வந்து இருவரையும் பிடித்துக்கொள்ள, வெற்றியை நோக்கி வந்த விக்ரம், அவனை வேகமாக ஆராய்ந்தவன், “உன்னை வண்டியை நிறுத்தாம போன்னு தானே சொன்னேன். உன்னை யாரு வண்டியை நிறுத்தி சண்டை போட சொன்னது. உனக்கு எதாவது ஆகியிருந்தா?” எனச் சத்தம் போட… 

“நீ வந்திடுவேன்னு தெரியும் விக்ரம். நீ வர்றவரை சும்மா ஒருகை பார்ப்போம்ன்னு பார்த்தேன்.” என்றான் வெற்றிச் சிரித்துக்கொண்டு. ஆனால் விக்ரம் அவனை முறைத்தான். 

“சரி அவனுங்களை முதல்ல பார்ப்போம்.” என்ற வெற்றி அவர்களின் அருகே செல்ல, அதற்குள் அவர்கள் வைத்திருந்த செல் மற்றும் கத்தி போன்ற பொருட்களை அவர்கள் ஆட்கள் எடுத்திருந்தனர். 

“போன்னை ஆஃப் பண்ணாதீங்க. சந்தேகம் வரும். சிம் கார்டு மட்டும் எடுத்திடுங்க. யாராவது போன் பண்ணாலும் தொடர்பு எல்லைக்கு வெளியேன்னு வரும்.” என்றான் விக்ரம். 

“யாரு உங்களை அனுப்பினது? அவன் எங்க இருக்கான்?” வெற்றி கேட்க, 

“எங்களை யாரும் அனுப்பலை. நாங்க வழிப்பறி பண்ண வந்தோம்.” என்றனர். 

“ஓ வழிப்பறி பண்ண வந்தவங்கதான், எங்க வீட்டையும், எங்களையும் வேவு பார்க்கிறீங்களா?” என்ற விக்ரம், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் செவி கிழியும்படி அறைந்தான். 

“இவனுங்க வழிக்கு வர மாட்டாங்க. நம்ம இடத்துக்குக் கொண்டு போய் அடிச்சு போட்டு, தண்ணி, சாப்பாடு எதுவும் கொடுக்காதீங்க. செத்தா நம்ம தோட்டத்திலேயே புதைச்சிடுங்க.” வெற்றி சொல்ல, இருவரின் கண்ணிலும் பயம் தெரிந்தது. 

“நாங்க சொல்லிடுறோம். எங்களைத் திலீபன் அண்ணன் அனுப்பினர். அவர் இப்ப ராஜ் டீலக்ஸ்ல இருக்கார்.” என்றனர். அவர்களையும் காரில் போட்டுக் கொண்டு வெற்றியும் விக்ரமும் அந்த லாட்ஜுக்கு சென்றனர். 

மற்றவர்களைக் காரில் இருக்கச் சொல்லிவிட்டு வெற்றியும், விக்ரமும் தான் திலீபனின் அறைக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் வெற்றி அடித்த அடியில் திலீபனின் தாடை கிழிந்து ரத்தம் சொட்ட, அவனை வெற்றியிடம் இருந்து காப்பாற்றிப் பிரித்து ஒரு சேரில் விக்ரம் உட்கார வைத்தான். அறையின் மூலையில் இன்னமும் அதிர்ச்சி விலகாமல் யாஷிகா நின்று கொண்டிருந்தாள். 

அவர்கள் இருவரும் அறைக்குள் நுழைந்தது தான் தெரியும். என்ன நடக்கிறது என உணர கூட விடாமல், விக்ரமும் வெற்றியும் திலீபனை அடி புரட்டி எடுத்திருந்தனர். அதிலும் வெற்றி அடித்த அடி ஒவ்வொன்றும் இடி போல இருந்தது. வெற்றியை பற்றி யாஷிகா இப்படி யோசித்ததே இல்லை. பார்க்க அவ்வளவு அமைதியாகத் தெரிந்தான். 

“யாரு டா நீ… எதோ பணத்துக்காக இந்தப் பொண்ணு மிரட்டுதுன்னு மதிக்காம இருந்தா… நீ பின்னாடி இருந்து பெரிய வேலை பண்ற.” வெற்றி கேட்டதற்கு, 

“நான் எதுவும் பண்ணலை?” என்றன் திலீபன். 

“எனக்குப் போதை மாத்திரை கலந்து கொடுத்தது. எங்க வீட்டை உன் ஆளுங்க சுத்தி வந்தது. இன்னைக்கு என்னை அடிக்க ஆள் அனுப்பினது வரை, எங்களுக்கு எல்லாமே தெரியும். நீயே உண்மையைச் சொன்னா உயிரோட இருப்ப.”
“எங்களைப் பத்தி தெரியாது உனக்கு. நாங்க நல்லவங்களுக்குத்தான் நல்லவங்க. கெட்டவங்களுக்கு ரொம்ப கெட்டவங்க. வெட்டி புதைச்சிட்டு போயிட்டே இருப்போம்.”

திலீபனுக்கு வேறு வழியில்லாமல் அன்று நடந்த அனைத்தையும் சொல்லி உண்மையை ஒத்துக் கொண்டான். விக்ரம் அதைத் தனது செல்லில் பதிந்து கொண்டான். அதே போல யாஷிகாவையும் பேச வைத்து விக்ரம் பதிவு செய்து கொண்டான். 

இரவு ஒருமணிக்கு மேல் ஆகியும் கணவன் வரவில்லை என ஆதிரையும் உறங்காமல் இருந்தவள், இப்படியும் அப்படியுமாக ஹாலில் நடைபயின்று கொண்டிருந்தாள். 

சிறிது நேரத்திற்கு முன்பு வெற்றியை அழைத்து, ஏன் இன்னும் வரவில்லை என அவள் கேட்டிருக்க, 

“நீ படுத்துக்கோ… வர கொஞ்சம் லேட் ஆகும்.” என்றிருந்தான். 

எப்போதும் போல வேலையினால் வந்த தாமதம் என்றால் கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவன் கமிஷனரை பார்க்க சென்றது தெரியும். அந்த வேலை முடிந்தும், ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்தாள். 

அவளுக்குக் கணவனைப் பற்றி நன்றாகத் தெரியும் அல்லவா… உடனே வெற்றியை அழைத்தவள், “எங்க இருக்கீங்க வெற்றி? எதுனாலும் சட்டப்படி பண்ணலாம்னு நீங்க தானே சொன்னீங்க. இன்னும் ஏன் வீட்டுக்கு வரலை?” ஆதிரை கேட்க, மனைவி தன்னைக் கண்டு கொண்டது வெற்றிக்கு ஆச்சர்யமே இல்லை. அவள்தான் அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்திருக்கிறாளே. 

“முடிஞ்சது இன்னும் கொஞ்ச நேரம் தான் வந்திடுறோம்.” என்றான். 

“என்ன முடிஞ்சது? என்ன செஞ்சீங்க அவனை.” என்றாள் ஆதிரை பதட்டமாக. 

“ஹே… வந்து சொல்றேன். இப்ப போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்திடுறேன்.” என்றதும்தான் ஆதிரைக்கு நிம்மதி ஆனது. 

வெற்றி திலீபனின் செல்லை ஆராய…. அதில் நிறைய வீடியோ வைத்திருந்தான். அவனும் யாஷிகாவும் இருந்த வீடியோவை அழித்தவன், மற்ற வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்த்தவன் அதிர்ந்தான். 

விக்ரம் ஒரு நிமிஷம் வெளியே வா… எனச் சொல்லிவிட்டு வெற்றி வெளியே செல்ல, யாஷிகாவின் கைப்பேசியை ஆராய்ந்து கொண்டிருந்த விக்ரம், வெற்றியின் வீடியோவை அழித்துவிட்டு, அதில் வேறு எதுவும் இல்லாததால் யாஷிகாவிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றான். 

இருவரும் திலீபன் தப்பி விடாத படி அறைக்கு வெளியே நின்றிருந்தனர். இந்த வீடியோவை பாரேன் என வெற்றி கொடுக்க, அந்த வீடியோவில் யாஷிகாவுடன் படுக்கையில் இருந்தது, ஒரு பெரிய புள்ளி. இவர்களுக்கு அந்த வீடியோவில் இருப்பவனை நன்றாகத் தெரியும். 

“இவன் அந்த ரெட்டி தானே… ஆந்திரால இப்போ எம்.எல்.ஏ எலக்க்ஷனுக்கு நிற்கிறான் இல்ல…” விக்ரம் சொல்ல… 

“இப்ப மட்டும் இந்த வீடியோ வெளியே வந்தா அவன் என்ன ஆவான்.” என்றான் வெற்றி ஆர்வமாக. 

“டேய், நீ என்ன டா பண்ணப் போற?” என விக்ரம் அவனைச் சந்தேகமாகப் பார்க்க, 

“அப்புறம் சொல்றேன். முதல்ல இவங்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூடிட்டு போவோம்.” என வெற்றி உள்ளே செல்ல, 

“என்னை விட்டுடுங்க நான் தெரியாம பண்ணிட்டேன்.” என்றாள் யாஷிகா. வெற்றி அவளோடு பேச கூட விரும்பாமல் முகத்தைத் திருப்ப, விக்ரம் தான் பேசினான். 

“என்னது தெரியாம பண்ணிட்டியா… இதுதான் நீ தெரியாம பண்ற விஷயமா?” என்ற விக்ரம், வெற்றியின் கையில் இருந்த செல்லில் இருந்த வீடியோவை காட்ட, அதைப் பார்த்த யாஷிகாவுக்கு மிகுந்த அதிர்ச்சி. திலீபன் இப்படி எல்லாம் படம் எடுத்து வைத்திருப்பான் என அவளுக்குமே தெரியாது. ஆனால் அதைச் சொன்னால் யார் நம்புவார்கள். 

“ஏன் டா இப்படிப் பண்ண?” என யாஷிகா திலீபனைப் பார்த்துக் கேட்க, 

“அந்த வீடியோ இருந்தா… என்னைக்கா இருந்தாலும், அதைக் காட்டி பணம் வாங்கலாம். அதுக்காகத்தான் அப்படிப் பண்ணேன்.” என்றான் திலீபன். 

“உழைக்கத் துப்பில்லாம பொம்பளையை வச்சு பொழைக்கிற. உனக்கு வெட்கமா இல்லை.” என்றான் வெற்றிக் காட்டமாக. 

“வா போலீஸ் ஸ்டேஷனுக்கு.” என வெற்றிச் சொன்னதும், திலீபனுடன் யாஷிகாவும் கிளம்ப, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லுடா விக்ரம்.” என்றான் வெற்றி. 

யாஷிகா திகைத்துப் பார்க்க, “இந்தப் பொண்ணு வெறும் கருவி தான். எல்லாத்துக்கும் இவன்தான் காரணம். போலீஸ் வேணா அவங்களுக்குத் தேவைனா அரெஸ்ட் பண்ணி விசாரிக்கட்டும். எனக்கு இப்படியொரு பெண்ணோட என்னைச் சேர்த்துப் பேசுறது கூட வேண்டாம்.” 

வெற்றி சொல்வது விக்ரமிற்கும் சரி என்றே பட்டது. யாஷிகா நிஜமாகவே இதை எதிர்பார்க்கவில்லை. வெற்றியும் விக்ரமும் கிளம்ப, “ப்ளீஸ் ஒரு நிமிஷம். என்கிட்டே பேச கூட உங்களுக்குப் பிடிக்கலை. எனக்கு அது தெரியும். இருந்தாலும், இதை மட்டும் சொல்லிடுறேன். நான் உங்களுக்குப் பண்ணது ரொம்பத் தப்பு. என்னால உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்குச் சாரி. நான் உங்க மனைவிகிட்டயும் மன்னிப்புக் கேட்டேன்னு சொல்லிடுங்க.” 

“உன் மன்னிப்பு தேவையில்லை. என் பொண்டாட்டி நீ சொன்ன எதையும் நம்பலை…” என்றான் வெற்றி அலட்சியமாக. 

“இதுல எனக்கு ஆச்சர்யமே இல்லை. அன்னைக்கு ஹோட்டல்ல நீங்க நிதானமா இல்லாத போதும், உங்க மனைவியைப் பத்தி நான் பேசினதுனாலதான், நீங்க நின்னு என்கிட்டே பேசினீங்க. எனக்கே புரிஞ்ச விஷயம், உங்க மனைவிக்குத் தெரியாதா.” யாஷிகா சொன்னதும், மனைவியைப் பற்றிய நினைவில் வெற்றியின் இறுக்கம் தளர்ந்தது. 

அதோடு இவளிடம் நாம அப்படி என்ன சிரித்துப் பேசினோம் என்ற உறுத்தல் வெற்றிக்கு இருந்து கொண்டே இருந்தது. அந்த உறுத்தல் இப்போது மறைய… ஹப்பா என்ற ஒரு நிம்மதி உணர்வு. அதற்கு மேல் அங்கே நிற்காமல் திலீபனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். 

அவர்கள் சென்றதும் ஹோட்டல் பொறுப்பாளர் வந்து, அப்போதே யாஷிகாவை அறையைக் காலி செய்ய வைத்து வெளியே துரத்தினான். அவள் அங்கே இருந்தால், மேலும் எதாவது பிரச்சனை வந்துவிடுமோ எனப் பயந்தே அவ்வாறு செய்தான். 

திலீபனையும் அவன் ஆட்களையும் போலீசில் ஒப்படைத்து, காவலர்களிடம் முறைப்படி புகார் எழுதி கொடுத்து விட்டு, இருவரும் வீடு வந்து சேர்ந்த போது, விடியற்காலை மூன்று மணி. கூட இருந்த ஆட்களுக்கு யாஷிகாவை அழைத்து வராததால்… அந்த விஷயமே தெரியாமல் போனது. பணத்திற்காக நடந்த விஷயம் என்றே நினைத்திருந்தனர். புகரும் அப்படித்தான் கொடுத்திருந்தனர்.

வீட்டிற்கு வெளியே இருந்தபடி, வெற்றி ஆதிரையைக் கைப்பேசியில் அழைத்தான். 

“நாங்க வெளியே தான் இருக்கோம். ஒரு எட்டு பேருக்கு டீ போட்டுக் கொண்டு வா.” என்றான். கணவன் வந்துவிட்டான் என்ற நிம்மதியில் ஆதிரையும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். 

வெற்றி விக்ரமோடு அங்கிருந்தவர்களுக்கும் டீ கொடுக்க, டீ குடித்ததும் மற்ற ஆட்கள் கிளம்பி விட, விக்ரம் மட்டும் இருந்தான். 

“என்ன ஆனது?” என ஆதிரை கேட்க, வெற்றி மேலோட்டமாகச் சொல்ல, 

“ஆதி, இவன் என்ன பண்ணான் தெரியுமா? மனசுல இவனுக்குப் பெரிய ஹீரோன்னு நினைப்பு.” என வெற்றி ஜாடை காட்டியதையும் மீறி, விக்ரம் வெற்றி அவர்களை அடித்ததைச் சொல்லிவிட. ஆதிரை உங்களுக்கு அப்புறம் இருக்கு என்பதைப் போலக் கணவனை முறைத்துப் பார்த்தாள். 

“இன்னொரு விஷயம் தெரியுமா? இவன் அந்த யாஷிகாவை விட்டுட்டான். அது ஏன்னு நீயே கேளு. எனக்கு எதோ சரியாப் படலை.” என விக்ரம் மேலும் போட்டுக் கொடுக்க, வெற்றி நண்பனை முறைக்க, அதனைப் பார்த்து ஆதிரை சிரித்து விட்டாள். 

“இவரு அவளை மதிச்சு பேசியே இருக்க மாட்டார். அதோட அவளை எல்லாம் ஒரு ஆளுண்ணே நினைச்சிருக்க மாட்டார். போகட்டும் விடுங்க, இத்தனை நாள் அவள் வாழ்ந்த வாழ்கையே அவளுக்குத் தண்டனைதான்.” ஆதிரை சொல்ல, கையிரண்டையும் உயர்த்திய விக்ரம், “உன்னைப் பத்தி தெரிஞ்சும் சொன்னது என் தப்பு தான். ஆனா இப்படி அவன் மனசை படிச்சேனா… ஒரு மனுஷனால எப்படிச் சுதந்திரமா இருக்க முடியும்.” என்றான் கடுப்பாக. 

“நல்லவேளை என் பொண்டாட்டி எல்லாம் இப்படி இல்லை.” என வேறு அவன் சேர்த்து சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு, வெற்றியும் ஆதிரையும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். 

“டேய், அப்ப ஒரு வீடியோ காண்பிச்சியே, அதை என்ன பண்ண?” 

“அவன் செல்லுல இருந்தே அந்த வீடியோவை ரெட்டிக்கு அனுப்பிட்டேன். கீழேயே பத்து லட்சம் பணம் வேணும் இல்லைனா சோஷியல் மீடியாவுல போட்டுடுவேன்னு திலீபன் மாதிரி போட்டிருக்கேன். இனி அந்த ரெட்டி பார்த்துப்பான்.” 

“என்ன நடக்கும்னு நினைக்கிற.” 

“எனக்கும் தெரியலை… ஆனா அந்தத் திலீபன் நாம அடிச்ச அடிக்கு எல்லாம் திருந்துவான்னு நினைக்கிறியா…. ஜெயிலுக்குப் போறோமேன்னு பயமும் இல்லை. எப்படியும் வெளிய வந்திடலாம்னு தைரியம். வெளிய வந்தா திரும்ப இதே மாதிரிதான் பண்ணுவான். ரெட்டி மாதிரி ஆளுங்க தான் இவனுக்குச் சரி.” 

“திலீபன் செல்லை என்ன பண்ண?” 

“நான் அனுப்பின மெசேஜ் மட்டும் அழிச்சிட்டு, செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கேன். நாளைக்குக் கமிஷனர்கிட்ட கொடுத்திடலாம். இங்க இருக்கப் போலீஸ்கிட்ட கொடுத்தா, அதை இவனுங்களே பார்த்திட்டு சுத்த வேற விடுவானுங்கன்னு தான் கொடுக்கலை.” 

“நல்லது பண்ண. நாம மதியமா போய்க் கமிஷனரை பார்ப்போம். சரி நான் இப்ப கிளம்புறேன்.” என விக்ரம் விடைபெற்று செல்ல, கணவனும் மனைவியும் வீட்டிற்குள் சென்றனர். 

யாஷிகா கையில் தனது பையுடன் தெருவில் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். இன்று பௌர்ணமி என்பதால்.. நிறையப் பேர் கிரிவளம் சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு இவளும் நடந்தாள். 

என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தன் மீதே வெறுப்பாக இருந்தது. வெற்றியுடன் என்னென்னவோ கற்பனை செய்தாள்…. ஆனால் நிஜத்தில் அவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை என்பது வலித்தது. ஒழுக்கமான வாழ்க்கை வாழுபவர்கள் தன்னை ஒரு மனுஷியாக கூட மதிக்க மாட்டார்கள் என புரிந்தது. அவள் பெற்றோரும் அப்படித்தான்.  அவர்கள் அந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால்… என்ன ஆகும் எனக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. 

தான் வாழ்ந்த வாழ்க்கை இப்போது அவளுக்கே அருவருப்பைத் தந்தது. இனி இப்படியொரு கேவலமான வாழ்க்கை வாழ வேண்டாம் என நினைத்தவள், பெற்றோரிடமே சென்று விடுவோம் என முடிவு எடுத்துக் கொண்டாள்.

Advertisement