Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 20 

காலை பதினோரு மணிக்குச் சென்றவர்கள், திரும்பும் போது மாலையாகி இருந்தது. விக்ரமை வீட்டில் இறக்கிவிட்டு வெற்றி நிற்காமல் கிளம்பி விட்டான். 


விக்ரம் வீட்டிற்குள் வந்தவன், கீழே இருந்த பெற்றோரிடம் நின்றபடியே பேசிவிட்டு மாடிக்கு விரைந்தான்.  

வனிதா மகளை வீட்டுப் பாடம் செய்ய வைத்துக் கொண்டிருந்தாள். 

தந்தையைப் பார்த்ததும், “பாருங்கப்பா, அம்மா என்னை வெளியே விளையாட கூட விடலை… வீட்டுக்குள்ளையே பிடிச்சு வச்சிருக்காங்க.” என மகள் அவனிடம் புகார் வாசிக்க, 

“நான்தான் அம்மாகிட்ட சுஜியை எங்கையும் விடாதேன்னு சொன்னேன்.” என்றதும், 

“நீங்க தான் சொன்னீங்களா…” என்றவள், சரிதான் என்பது போல இருக்க… 

“அப்பா சொன்னா மட்டும் கேட்பீங்களா? அம்மா சொல்றதும் நல்லதுக்குதான் இருக்கும். அம்மா சொன்னா கேட்கணும்.” என்றான் விக்ரம் மகளுக்குப் புரியும்படி. 

நாம் சரியாக மனைவியை மதிக்காததால்தான் மகளும் இப்படி இருகிறாளோ என நினைத்தவன், “அம்மாவை எதிர்த்து பேசக் கூடாது. அம்மா என்ன சொல்றாங்களோ, அதன்படி செய்.” என்றான் சற்று அழுத்தமாகவே. 

கணவன் தனக்காக அல்லவா பேசுகிறான் என்பதில் வனிதாவுக்குப் பெருமிதமே, “உங்களுக்கு டீ வைக்கடுமாங்க.” எனக் கேட்டவளிடம், “மதியம் சாப்பிடலை பசிக்குது. தோசை மாவு இருந்தா தோசை ஊத்து.” என்றான். 

“மாவு இல்லைங்க. மதியம் நீங்க வருவீங்கன்னு சமைச்சு தான் வச்சிருந்தேன். இருங்க சூடு பண்ணி எடுத்திட்டு வரேன்.” என வனிதா செல்ல, விக்ரம் கை கால் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான். 

கணவனுக்குச் சூடு செய்த உணவு வகைகளைப் பரிமாறியவள், “எதுக்குங்க வீட்லயே இருக்கச் சொன்னீங்க.” என விசாரிக்க, 

இன்னும் வனிதாவுக்குப் பக்குவம் இல்லையென விக்ரமிற்குத் தெரியும். அவளால் ரகசியம் காக்க முடியாது. அதனால் விஷயத்தைச் சொல்லாமல், அதே நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, “நம்ம ஊர்ல நகை பணத்துக்காகப் பொம்பளைகளை, குழந்தைகளைக் கடத்துற கும்பல் ஒன்னு சுத்திறதா, எனக்குத் தெரிஞ்ச போலீஸ்காரர் சொன்னார். அதுதான் கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையா இருக்கணும்.” 

“எனக்குத் தெரியாம நீயோ சுஜியோ இந்த வீட்டை விட்டு காலை வெளியே வைக்கக் கூடாது. நான் சொல்றவரை அப்படித்தான் இருக்கணும்.” என்றான். 

“ம்ம்.. சரிங்க.” 

விக்ரம் சாப்பிட்டு முடித்ததும், படுக்கை அறைக்குச் சென்றவன், மகளை அந்த அறையில் வந்து எழுத சொன்னாவன், “வனிதா நீயும் வா…” என அழைத்தான். 

“என்ன டா இன்னைக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு.” என்றபடி வனிதா சென்றாள். உட்காரு என மனைவியையும் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டவன், அப்படியே அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். 

“அப்பா, ரொம்ப நாள் ஆச்சுப்பா வெளியப் போய். நாளைக்குப் போகலாமா.” சுஜி கேட்டதும், “ஒருவாரம் பொருத்து போகலாம்.” என்றான் விக்ரம். 

“அருண், அஷ்வினி பாப்பா எல்லாம் சேர்ந்து போகலாம்.” என்ற மகளிடம், 

“அஷ்வினி பாப்பா இப்ப சின்னக் குழந்தை இல்லையா… அதனால அவங்க வர மாட்டாங்க. நாம மட்டும் போவோம்.” என்றதற்கு, 

“எப்பவும் அவங்களோட சேர்ந்து போயிட்டு, இப்ப நாம மட்டும் போனா நல்லா இருக்குமா… கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சேர்ந்து போவோம்.” என வனிதா சொன்னதும், அவள் மடியில் படுத்திருந்த விக்ரம் நிமிர்ந்து அவளைப் பார்க்க, அதற்குள் சுஜி, “சரி, நாம அவங்களோடவே போவோம். நான் போய் டிவி பார்கிறேன்.” என ஹாலுக்கு ஓடிவிட்டாள். 

“ஆதிரை அக்கா நம்மோட இனி எங்கையும் வரமாட்டாங்களோ…” என வனிதா கலக்கம் கொள்ள, 

“இதை நீ பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். இப்பவாவது புரியுதா உனக்கு.” என்றான். 

“ம்ம்…” 

“ஆதிரை என்னோட சரளமா பேசுவாளா தெரியாது. ஆனா உன்கிட்ட நல்லாத்தான் இருக்கா…. என்கிட்டே எப்படி இருந்தாலும், உன்கிட்ட நல்லா இருந்தா அதுவே போதும்.” 

“நான் அக்காகிட்ட பேசுறேன். நாம எப்பவும் போலச் சேர்ந்தே போவோம்.” வனிதா சொன்னதற்கு, “அது உன் பாடு உன் அக்கா பாடு.” என்றான் விக்ரம். 

வெற்றி வீட்டிற்குச் சென்றவன், அங்கே காவலில் இருந்தவர்களை இருங்க பத்து நிமிஷத்துல வரேன் எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவன், வாசல் கதவு திறந்தே இருப்பதைப் பார்த்து, “யாரு அது கதவை திறந்து போட்டது.” எனக் கத்தினான். 

“நான்தான் டா விளக்கு ஏத்துறேன்னு கதவை திறந்து வச்சேன்.” என்றார் ஜோதி. 

“ஆமாம் இப்ப இருக்கிற காலத்தில நீங்க இன்னும் இதெல்லாம் பாருங்க. எவனாவது வீட்டுக்குள்ள வரட்டும்.” 

“நம்ம வீட்டுக்குள்ள அப்படி யாரு வருவா?” 

“நீங்க இன்னும் அந்தக் காலத்திலேயே இருங்க மா… நாட்டில என்னென்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா இல்லையா…டிவியில நியூஸ்ல அப்புறம் பேப்பர் எல்லாம் உட்கார்ந்து மணிக்கணக்கா படிக்கிறீங்க. அப்பவும் இப்படித்தான் இருக்கீங்க.” என்றான் கோபமாக. 

மகன் சொல்வதை ஜோதி பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்ன சொன்னாலும் அவர் செய்வதைத்தான் செய்வார் என ஆதிரைக்குத் தெரியும். அவரோடு பேசுவதே வீண். இவங்ககிட்ட எதுக்கு இந்த மனுஷன் உயிரைக் கொடுக்கிறார் என நினைத்தபடி, கணவனுக்குச் சிற்றுண்டி எடுத்துக் கொண்டு வந்தாள். 

அவன் வழியில் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான் எனத் தெரியும். மாலை நேரம் சாதமும் உண்ண மாட்டான். அதனால் அவனுக்காக சிற்றுண்டி செய்து எடுத்து வந்தாள். “நீங்க முதல்ல சாப்பிடுங்க.” என்றுவிட்டு, அவனுக்கு டீ போட உள்ளே சென்றாள். 

“ஆமாம் எதுக்கு அந்தத் தியாகுவும், மாடசாமியும் வெளியவே இருக்கானுங்க? எதாவது கேட்டா, அண்ணன் இருக்கச் சொன்னார் சொல்றாங்க.” 

“நான் சொல்றது மட்டும் காதுல வாங்காதீங்க. ஆனா நீங்க மட்டும் நல்லா கேள்வி கேளுங்க. அவங்களை நான்தான் இருக்க சொன்னேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க.” எனத் தன் தாயை கடிந்துவிட்டு அறைக்குள் சென்ற வெற்றி, முகம் கைகால் கழுவிட்டு வந்து சாப்பிட்டான். இருந்த நிலையில் உணவை பற்றி நினைக்கவே தோன்றவில்லை. எப்போது வீட்டுக்கு போவோம் என்றிருந்ததால்…. வழியில் நிறுத்தி டீ கூடக் குடிக்கவில்லை. 

ஜோதி அவர் அறைக்குச் சென்றுவிட, “ஏங்க இவ்வளவு டென்ஷன் ஆனீங்க” என ஆதிரை கேட்டாள். 

முதலில் இருந்து எல்லாம் சொன்னவன், “அந்தப் பெண்ணோட இருந்தவனைப் பார்க்க ரெண்டு பேர் வந்து திருட்டுத்தனமா போதை மாத்திரை கொடுத்திட்டு போறாங்க. பார்க்கவே பொறுக்கி பசங்க மாதிரி இருக்காங்க.” 

“அதைப் பார்த்ததும் தான் எங்களுக்கு ஆடிப் போச்சு. அன்னைக்கு எதோ கலந்து கொடுத்ததுனாலதான் எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை. இவ்வளவு தூரம் செய்யத் துணிஞ்சவங்க. வேற என்னலாமோ பண்ணலாம். அதுதான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னோம்.” 

“அவன் ஆளு அங்க ஹோட்டல்ல இருக்கலாம். நாங்க வந்திட்டுப் போனது தெரிஞ்சு, அவன் வேற எதுவும் பண்ண முயற்சிக்கலாம்.” 

கணவன் சொன்னதைக் கேட்ட ஆதிரை கலங்கிப் போனாள். அந்த மாத்திரையால் கணவனுக்குத் தீங்கு எதுவும் வந்திருந்தாள். 

மனைவியின் கலக்கத்தைப் பார்த்த வெற்றி, “நல்லவேளை விக்ரம் வந்தான். இல்லைனா வேற மாதிரி ஆகி இருக்கும் இல்ல…” எனச் சொன்னதற்கு. 

“எனக்கு அதெல்லாம் பத்தி ஒன்னும் இல்லை வெற்றி. உங்க மனசரிஞ்சு செய்யாத செயலுக்கு நீங்க எப்படிப் பொறுப்பாவீங்க? அந்த மாத்திரையினால உங்களுக்கு எதாவது ஆகி இருந்தா. உங்களுக்குத் தலைவலி வேற இருந்தது இல்ல…. எனக்கு அதுதான் கவலை. எதுக்கும் டாக்டரை பார்த்திடுவோமா?” 

மனைவி தன் உடல்நலனை நினைத்தே கலங்குகிறாள் எனப் புரிந்ததும், வெற்றிக்கு இன்னுமே மனைவியை நினைத்துப் பெருமிதம். 

“அது ஒருநாள் லேசா இருந்தது. அதுக்கு அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. அந்த மாத்திரை எல்லாம் தொடர்ந்து எடுத்தா தான் பயப்படணும்.” 

“இவங்களை நாம சும்மா விடக் கூடாது வெற்றி. உங்களுக்கு எவ்வளவு மனஉளைச்சல் கொடுத்தாங்க. அவங்களை நாம விடக் கூடாது.” என்றாள் ஆதிரை ஆத்திரமாக. 

“நானும் விக்ரமும் கமிஷனர் பார்த்து பேச டைம் கேட்டு இருக்கோம். நம்மகிட்ட இருக்கிற ஆதாரத்தை எல்லாம் கொண்டு போய்க் கொடுத்து. அவர்கிட்ட காட்டி என்ன செய்றதுன்னு கேட்போம். நாம எதுனாலும் சட்டப்படியே போவோம்.” 

“ம்ம்…இனி ஒருத்தருக்கு அவங்களால இப்படியொரு விஷயம் நடக்கவே கூடாது.” 

“சட்டம் கடுமையாகாத வரை இந்த மாதிரி ஆட்களை எல்லாம் நாம எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியும் தெரியலை.” 

“இது நம்ம நாட்டோட சாபக்கேடு. குழந்தையைக் கற்பழிச்சு கொன்னு எரிச்சவனுக்குக் கூட ஜாமீன் கொடுப்பாங்க. அப்பவே தூக்கிலப் போட்டாதானே அடுத்தவனுக்கு அப்படிச் செய்யும் தைரியம் வராது. தப்பு செஞ்சவன் தைரியமா வெளியே சுத்துறதைப் பார்த்து, இங்கே இன்னும் சில ஜென்மங்கள் பச்சை குழந்தையில இருந்து பாட்டி வரை தங்கள் வக்கிரத்தைக் காட்டுறாங்க. இவங்களை எல்லாம் நிக்க வச்சு சுடணும்.” என்ற ஆதிரைக்கு ஆத்திரத்தில் உடலே நடுங்கியது. 

“சரி நீ டென்ஷன் ஆகாத, பார்த்துக்கலாம்.” என்றான் வெற்றி. 

வெற்றி வெளியே இருந்த தன் ஆட்களைப் பார்க்க செல்ல, “அண்ணே, நம்ம தெரு பக்கமே ரெண்டு பசங்க சுத்தி சுத்தி வந்தாங்க. நாங்க மறைவா வீட்டுக்கு பின்னாடி போய் நின்னுட்டு பார்த்தோம். நம்ம வீட்டை தான் பார்த்திட்டு இருந்தாங்க. நாங்க முன்னாடி வந்து நின்னதும் போயிட்டாங்க.” என்றனர். 

வெற்றி விக்ரமை அழைத்துச் சொல்ல, “நானும் இப்பத்தான் இங்க இருக்கிறவரை விசாரிச்சேன். இங்கேயும் ரெண்டு பேர் சுத்திட்டு இருந்திருக்கானுங்க.” 

“நாம எதுக்கும் இருக்கட்டும்னு தானே ஆள் போட்டோம். ஆனா நாம எச்சரிக்கையா இல்லாம இருந்திருந்தா.. நினைக்கவே பயமா இருக்கு டா…. அவன் முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.” 

“ஆமாம் வெற்றி, நீ சொல்றது சரிதான். நான் இப்ப அங்க வரேன்.” 

விக்ரம் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் வனிதாவிடம், “நான் நைட் வர லேட் ஆகலாம். வீட்டு காவலுக்கு ஆள் இருக்கு. அதனால பயம் இல்லாம தூங்கு. எதுனாலும் எனக்குப் போன் பண்ணு. நான் எடுக்கலைனா வெற்றிக்கோ ஆதிரைக்கோ பண்ணு.” எனச் சொல்லிவிட்டே கிளம்பினான். 

“என்ன வீட்டு காவலுக்கு ஆள் எல்லாம் வச்சிருக்க.” என மூர்த்திக் கேட்க, 

“வீட்ல பணம் வச்சிருக்கேன். அதுக்குதான். நீங்களும் தெரியாத யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். செய்வது பெரும் தொழில் என்பதால்… எப்போதுமே வீட்டில் பணம் இருக்கும். பணம் அதிகம் இருக்கும்போது, இதுபோல எச்சரிக்கையாக இருப்பது உண்டு என்பதால்… மேற்கொண்டு கேள்வி எழவில்லை. 

ஆதிரை கேட்ட தகவல்களை சக்தி அனுப்பி வைத்திருந்தான். அதில் ஒரு எண்ணில் இருந்து மட்டுமே நிறைய முறை அழைப்பு வந்திருந்தது. அதே போல யாஷிகா தான் வெற்றிக்கு அழைத்திருந்தாள்.. வெற்றி ஒருமுறை கூட யாஷிகாவுக்கு அழைக்கவில்லை. 

வெற்றி தான் தன்னை அழைத்தான் மிரட்டினான் என யாஷிகா எந்தக் கதையும் விட முடியாது. அதையெல்லாம் ஆதாரமாக எடுத்து வைத்துக் கொண்டனர். 

அவர்கள் திட்டபடி விக்ரம் நேராக மில்லுக்குச் சென்றுவிட, வெற்றியும் வீட்டு காவலுக்கு ஆள் வைத்தி விட்டு மில்லுக்குச் சென்றான். அவர்களுக்குத் தெரியும் தங்களை நோட்டம் விட ஆள் வைத்திருப்பார்கள் என்று. 

விக்ரமும் வெற்றியும் அவர்கள் மில்லில் வேலை செய்யும் சிலரை அழைத்தவர்கள். மாடிக்கு போய் நம்ம மில்லை ஒட்டி யாரும் சந்தேகப்படும் படி இருக்காங்களா பார்த்திட்டு வாங்க என அனுப்பி வைத்தனர். 

திரும்பி வந்தவர்கள், “ஆமாம் தூரத்தில் ரெண்டு பேர் மோட்டார் சைக்கிள்ல நம்ம மில்லையே பார்த்தபடி நிற்கிறாங்க.” என்றனர். 

அவர்களிடம் சில விஷயங்களைச் சொல்லி அனுப்பியவர்கள், அவர்கள் சென்றதும், வெற்றியும் விக்ரமும் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு கமிஷனரை பார்க்க வேறு வழியாகக் கிளம்பினர். 

அவர்கள் அரிசி மில் என்பது மிகப் பெரிய ஒன்று. கிழக்கில் இருக்கும் வாசல் மட்டுமே அனைவரும் அறிந்தது. ஆனால் பின்னால் இருக்கும் குடோனில் இருந்து மேற்கு பக்கமாக இன்னொரு வாசல் உண்டு. அது வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. சின்னக் கதவு தான் இருக்கும். அதன் வழியாகச் சென்றால்… வீடுகள் இருக்கும் சின்னச் சாலைகள் வரும். 

அந்த வழியாக வந்த இருவரும், அங்கே தெரிந்தவரின் வண்டியில் கமிஷனரை பார்க்க சென்றனர். இது தெரியாமல் முன்வாசலில் இருவர் காவல் இருந்தனர். 

“அவங்க மில்லுல தான் அண்ணே இருக்காங்க.” என்றதும், திலீபன் குழம்பி விட்டான். இவர்களுக்கு இன்னும் முழு விஷயமும் தெரியாதோ என நினைத்தவன், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். 

குழந்தைகளைக் கடத்தலாம் என்ற திட்டமும் நிறைவேறவில்லை. இங்கே இருந்தால் மாட்டிக் கொள்வமோ என அச்சமும் இருந்தது. 

“யாஷிகா, எல்லாம் எடுத்து வை… நாம நைட்டே இங்க இருந்து கிளம்பனும்.” திலீபன் சொல்ல, யாஷிகா ஏமாற்றமாக உணர்ந்தாள்.

Advertisement