Advertisement

பதினோரு மணிக்கு உள்ளே சென்று ஒரு அடுப்பில் உலை வைத்தால்… மறு அடுப்பில் குழம்பிற்குப் பாத்திரத்தை வைத்துவிட்டுத்தான், காயே நறுக்க ஆரம்பிப்பாள். சமையல் மேடையில் நின்று கொண்டே காய் நறுக்கி, ஒரு மணி நேரத்திற்குள் சமையல் முடித்து வெளியே வந்துவிடுவாள். 

இவ இப்படிச் செய்யுறா, அப்படிச் செய்யுறா என்ற ஜோதியின் எந்தப் பேச்சும் எடுபடவில்லை. ஆதிரையின் சமையல் ஜோதி சமையலை விட ருசியாக இருக்க, அண்ணாமலையும் வெற்றியும் ஆதிரையின் சமையலைப் புகழ, ஜோதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் எதாவது குறை கண்டுபிடித்துத் திருப்தி பட்டுக்கொண்டார். 

அம்மா என்ற மரியாதைக்காக, அவரே ஆள் பார்த்து வைக்கட்டும் என வெற்றி இருந்தான். ஆனால் அவர் வைப்பதாகத் தெரியவில்லை. ஆதிரை குழந்தை உண்டானதும், வெற்றிப் பிடிவாதமாக வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்து விட…அப்போதிருந்தே இப்படித்தான் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். 

இன்றும் அதையே சொல்லிக்காட்ட, ஆதிரைக்கு முன்பு நடந்ததெல்லாம் நினைவு வந்து, மனதே சரியில்லை. வீட்டை சுத்தபடுத்தும் பணி முடிந்ததும், புடவையை மாற்றியவள், “நான் வெளிய போயிட்டு வரேன்.” என அவளது வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். 

இந்த நேரத்திற்குச் சமையல் பண்ணாம எங்கப் போறா? என ஜோதி நினைத்தார். 

நண்பகலில் மனைவி வந்து தோட்டத்தில் நின்றதும், வெற்றிக்கு முதலில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. வேலை எதுவும் இல்லாத நாட்களில், நினைத்தால் ஆதிரை வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிடுவாள். ஆனால் இன்று அவள் முகம் சரியில்லை எனப் பார்த்ததும் புரிந்தது. 

மனைவியை வரவேற்றவன் அவளுக்கு இளநீர் வரவழைத்துக் கொடுத்தான். பண்ணை ஆட்கள் ஆதிரையைப் பார்த்துவிட்டு வந்து நலம் விசாரிக்க, வயதில் மூத்த பெண்மணி ஒருவர், “ஆதி மா இந்தத் தடவை சர்க்கரை பொங்கல் மட்டும் இல்லை. நல்ல சாப்பாடும் வேணும்.” என்றார். 

“இருக்கே… உங்க அய்யா சொல்லலையா?” என்று அவள் புன்னகைக்க… 

“சரி மா ரொம்பச் சந்தோசம்.” என்றார். 

“வா நாம தோட்டத்தைப் பார்ப்போம்.” என ஆட்கள் இல்லாத பக்கம் அவளை அழைத்துச் சென்றவன், என்ன விஷயம் என்று கேட்க, ஆதிரை மனதின் அழுத்தம் தாங்காது வெடித்தாள். 

“இப்பவும் உங்க அம்மாவுக்கு அதே புலம்பல், நாங்க அப்படி வேலைப் பார்த்தோம், இப்படி வேலைப் பார்த்தோம்ன்னு திரும்ப ஆரம்பிச்சாச்சு.” 

“விட்டா என்னை வேலைக்காரியா ஆக்கி உட்கார வச்சிருப்பாங்க. அது முடியலைன்னு உங்க அம்மாவுக்கு வருத்தம் போல…” 

“இப்ப என்ன உங்க அம்மாவுக்கு நான் அவங்களை மாதிரி மாடு கண்ணு மேய்க்கலைன்னு கவலையா… நீங்களும் வேணா ரெண்டு மாடு வாங்கி வீட்ல விடுங்க. உங்க அம்மாவுக்கு அப்பவாவது நிம்மதியா இருக்கா பார்ப்போம். உங்க அம்மாவுக்கே சாப்பாடு போடுறேன். மாட்டுக்கு தண்ணி காட்ட மாட்டேனா…” 

“ஆதி ரொம்பப் பேசுற நீ… அவங்க அந்தக் காலத்தில இருந்ததைச் சொல்றாங்க. நீ ஏன் அதைத் தப்பா எடுக்கிற?” 

“ஆமாம் நான் வேலைப் பண்ணாம சும்மா உட்கார்ந்திட்டு தான் இருக்கேன்.”  

“நீ வேலைப் பண்ணலைன்னு யாருடி சொன்னா… அவங்க அப்ப ரொம்ப வேலை பண்ணாங்கன்னு சொல்றாங்க.” 

“நானும் தான் பார்த்திருக்கேனே உங்க அம்மா வேலை பண்ற அழகை. சமையல் பண்ண மூன்னு மணி நேரம் ஆகும். அப்ப இவங்க மத்த வேலை எப்படிப் பார்த்திருப்பாங்க தெரியாதா?” 

“நீ இப்ப நாலு பேருக்கும் சமைக்கிறதும், அவங்க அப்ப சமைச்சதும் ஒண்ணா டி…” 

“அப்ப மட்டும் இல்லை. அதுக்கப்புறமும் அப்படித்தான். எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதீங்க. உங்க அம்மாவோட சேர்த்து இந்த வீட்ல நாலு மருமகள். எல்லோரும் ஆளுக்கு ஒருநாள் சமைக்கணும். மத்த வீட்டு வேலையும் அப்படித்தான்.” 

“உங்க அம்மா நான் மாசமா இருக்கும் போதே… நீ வேலை பண்ணாதன்னு சொன்னது இல்லை. என்கிட்டையே அப்படி இருந்தவங்க, மத்தவங்ககிட்ட எப்படி இருந்திருப்பாங்கன்னு தெரியாது பாருங்க.” 

“அதுதான் உனக்கு இப்பவரை குத்துது இல்லை.” 

“ஆமாம் அதுக்கு என்ன? மருமகள் மட்டும் மகளைப் போல இருக்கனும்ன்னு எதிர்ப்பார்கிறாங்க இல்ல… ஆனா அவங்க என்கிட்டே அம்மாவை போலவா நடந்துகிடாங்க. அவங்க மாமியாரா தான இருந்தாங்க. அப்ப நானும் மருமகளா தான இருப்பேன்.” 

“அப்ப அவங்க எப்படியோ நீயும் அப்படித்தான். பிறகு உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” 

“போதும் இது ஒன்னு சொல்லி எப்பவும் என் வாயை அடைக்கிறது தான் உங்க வேலை.” 

இப்போது எதாவது சொன்னால் மேலும் பிரச்சனை அதிகமாகும். கோபம் அதிகமானால் ஆதிரை, “சரிதான் போடா…” எனச் சொல்லிவிட்டு சென்று விடக் கூடியவள். அதனால் வெற்றி அமைதிகாத்தான். 

வெற்றியே சொல்வான், “உன்கிட்டதான் டி சொர்கம் நரகம் ரெண்டையும் பார்கிறேன்.” என்று. 

“சரி நீ இன்னைக்கு என்னோடவே இரு.” என்றவன், தள்ளி சென்று தன் அம்மாவை அழைத்து, “ஆதிரை இங்கே இருக்கா… நீங்களே சமையல் பண்ணிடுங்க மா… அருண் வருவான் பார்த்துக்கோங்க.” எனச் சொல்லிவிட்டு வைத்தான். 

ஆதிரை அங்கே நடக்கும் வேலைகளை மேர்ப்பார்வையிட வெற்றி அவன் வேலையைப் பார்க்க சென்றான். 

ஜோதி ஒரு நான்கு ஐந்து முறை மகனுக்கு அழைத்து இது எங்கே இருக்கு, அது எங்கே இருக்கு எனக் கேட்டு விட்டார். அவனும் ஆதிரையை கேட்டு சொன்னான்.

தேவையில்லாம பேசினாங்க இல்லையா, நல்ல படட்டும் என நினைத்த ஆதிரை, தனியாக் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து விட்டாள். 

ஆரம்பத்தில் மாமியார் என்று வெகு மரியாதையாக, நல்ல விதமாகவே அவள் நடந்து கொண்டாள். ஆனால் ஜோதிதான் தேவையில்லாமல் அவளிடம் தனது அதிகாரத்தைக் காட்டினார். 

அவள் நன்றாகவே செய்தாலும் குறை கண்டுபிடித்தார். ஒருமுறை பூண்டை தெரியாமல் குப்பையில் போட்டுவிட்டதற்கு, பெரிய பிரச்சனை ஆக்கினார். 
“இப்படித்தான் கீழ தங்கம் கிடந்தாலும் பெருக்கி தள்ளிடுவியா?” என அவர் கேட்க, 

அதுவரை பொருத்துத் பொருத்து போனவள், அன்று மிகவும் கோபம் வந்து, “தங்கத்தைத் தரையில போடுற அளவுக்கு எனக்கு அறிவில்லாம இல்லை. இந்த வீட்ல அப்படித்தான் போடுவீங்களா… இனிமே பார்த்து பெருக்கிறேன்.” என நன்றாகத் திருப்பிக் கொடுத்து விட்டாள். 
“என்ன நான் இதுக் கூட சொல்லக் கூடாதா?” என்றார் ஜோதி அப்பாவியாக. 

ஆதிரை எல்லாவற்றையும் வெற்றியிடம் சொல்லிவிடுவாள். வெற்றி மனைவி சொன்ன உடனே அம்மாவை சென்று கேட்டுவிட மாட்டான். ஆனால் என்றாவது அவன் முன்னிலையில் அவர் ஆதிரையைத் தேவையில்லாமல் பேசுவது போலத் தெரிந்தால்… அன்று கண்டிப்பாக கேட்பான்.  

பலகாரங்கள் மீதமானால் மகன் சரியாக உண்ண வில்லையா எனக் கேட்க மாட்டார். நீ அவனுக்கு ஒழுங்காக எடுத்து வைக்கவில்லையா என்றுதான் ஆதிரையைக் கேட்பார். கணவன் உண்ணக்கூடாது என யாரவது நினைப்பார்களா? 
அவள் வீட்டில் அவளை யாருமே இப்படி பேசியது இல்லை. ஆதிரை அனாவசியமாக பேசினால் தாங்கிக் கொள்பவளும் இல்லை. அந்தக் கோபத்தில் ஒருமுறை வழக்கத்தை விட வெற்றிக்கு பலகாரத்தை தட்டில் அள்ளி வைத்துவிட்டாள்.
“என்ன இது?” என வெற்றி அவளை முறைக்க, 
“நீங்க நல்லா சாப்பிடுங்க. இல்லைனா உங்க அம்மா நான் உங்களுக்கு சரியா வைக்கலைன்னு சொல்வாங்க. எனக்கு எதுக்கு வம்பு? நான் வச்சிட்டேன், நீங்க சாப்பிடுங்க சாப்பிடாம போங்க.” என்றாள் கோபமாக. 
ஜோதி இப்படி அவள் நேரடியாக மகனிடம் சொல்வாள் என எதிர்பார்க்கவில்லை. மற்ற நேரம் போல வெற்றி அன்று விடவும் இல்லை. 
“எனக்குத் தெரியும மா எவ்வளவு சாப்பிடணும்னு. இது நம்ம வீடு தானே, எனக்கு வேணுமுன்னா நான் கேட்டு வாங்கிச் சாப்பிட போறேன். அதுக்காக நீங்க எப்படி அவளை இப்படிக் கேட்பீங்க.? அப்படி எல்லாம் பேசாதீங்க.” என சொல்லிவிட்டான். அதுவும் அண்ணாமலையை வைத்துக் கொண்டே அவன் கேட்டு விட… ஜோதிக்கு வருத்தம்தான். ஆனால் ஒருவருடைய குணத்தை அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. அவர் அப்படியேதான் இருந்தார்.
 
ஆதிரை சொல்லித்தான் வெற்றி இருக்கும் பூர்வீக வீட்டை நவீனமாக மாற்றினான். பிறகு அவன் விக்ரமோடு சேர்ந்து மில் தொடங்கப்போவதாகச் சொல்ல, இடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் தொழில் தொடங்க பணம் வேண்டுமல்லவா… அதிரை தனது நகைகளை முழுமனதுடன் கொடுத்தாள். அதை அவள் தன் வீட்டினரிடம் கூடச் சொல்லவில்லை.  தொழிலும் நன்றாக நடக்க, குடும்பமும் செழித்தது. 

பேரன் பிறந்தது, மகன் வீட்டை கட்டி, அரிசி ஆலை தொடங்கியது என அண்ணாமலைக்கு எல்லாமே சந்தோஷமாக இருந்தது. மருமகளே லக்ஷ்மியாக வந்ததாக அவர் நம்பினார். அதனால் குடும்பத்தின் அதிகாரம் மனைவி கையில் இருந்து மருமகள் கைக்குப் போனதை பற்றி அவர் பெரிதாகவே நினைக்கவில்லை. சில வருடங்கள் உடல்நலமில்லாமல் இருந்தவர், ஒருநாள் மறைந்தும் போனார். 

வெற்றி முன்பாவது எதாவது சொல்வான். தந்தை இறந்ததில் இருந்து அம்மாவை ஒன்றுமே சொல்ல மாட்டான். அதனால் ஆதிரை ஜோதியிடமே நேரடியாகச் சொல்லிவிடுவாள். 

ஜோதி தேவையில்லாதது பேசினால் காதே கேட்காதது போல ஆதிரை சென்றுவிடுவாள். அவளுக்கே சில நேரம் தோன்றும், நாம் ரொம்ப மரியாதை குறைவாக நடந்து கொள்கிறோமோ என்று. ஆனால் தன்னை இந்த நிலைக்குத் தள்ளியதும் மாமியார்தான் என நினைத்துக் கொள்வாள். அது உண்மையும் கூடத்தான். 

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையா, நாம ஏன் இவங்களுக்குப் போய் இவ்வளவு யோசிக்கிறோம்? என நினைத்தவள், மனதில் இருந்த கசப்பை ஒதுக்கிவிட்டு, வரும் பொங்கலுக்கு என்ன வேலை இருக்கிறது என யோசிக்க ஆரம்பித்தாள். அதைப் பற்றி அவள் வெற்றியிடமும் பேச, அவனும் மனைவியோடு இணைந்து திட்டமிட ஆரம்பித்தான். 

விக்ரம் அந்தப்பக்கம் வந்தவன், இவர்கள் தோட்டத்திற்கும் வர, அங்கே ஆதிரையைப் பார்த்து விட்டு, “ஹே, நீ இங்க என்ன பண்ற? நீ என்ன வெற்றியை வேலையே பார்க்க விட மாட்டியா?” என்றான். அதைக் கேட்டு கணவன் மனைவி இருவரும் மலர்ந்து சிரித்தனர்.

Advertisement