Advertisement

இதயக் கூட்டில் அவள் 


அத்தியாயம் 2 


நேரம் நள்ளிரவையும் தாண்டி இருந்தது. சற்று முன் நிகழ்ந்த நீண்ட கூடலில் கலைத்துப் போயிருந்தாலும், கணவனும் மனைவியும் உடனே உறக்கத்திற்குச் செல்லவில்லை. 

வெற்றி கட்டிலில் உட்கார்ந்து இருக்க, குளியல் அறைக்குள் இருந்து வந்த மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் இருந்த சிவப்புத் தடங்களைப் பார்த்தவன், அதை மெதுவாக வருடி வலிக்குதா டி என்றான். ஆதிரை இல்லை எனத் தலையசைக்க, “சாரி ஆதி என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை. உன்னை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போலத்தான் இருந்தது.” என்ற கணவனின் பேச்சில் ஆதிரைக்குச் சிரிப்பு வர… “அது என்னைக்கோ ஒருநாள் இப்படிப் பாய்ஞ்சா அப்படித்தான் இருக்கும்.” என்றாlள் கேலியாக. 

“ஏன் என்னைச் சொல்றவ, நீ மட்டும் என்ன பண்ற? நீயும் தானே இழுத்து போர்த்திட்டு தூங்கிற.” 

“மார்கழி மாசம்ன்னு நான் காலையில நாலு மணிக்கு எழுந்துகிறேன். நீங்க நைட் பதினோரு மணிக்கு வந்து, அதுக்கு அப்புறம் சாப்பிட்டுப் படுக்கத்தான் நேரம் சரியா இருக்கு. இன்னைக்குதான் நீங்க சீக்கிரம் வந்தீங்க.” 

“ம்ம்… காலையில இருந்து இதே நினைப்புதான். நீ சொன்னதுதான் கண்ணுகுள்ளேயே இருந்தது. அதுதான் சீக்கிரம் வந்திட்டேன்.”

“அப்ப இன்னைக்கு நீங்க வேலையே பார்க்கலை?” 

“அது ஒரு பக்கம் நடந்தது. விக்ரம் கூடக் கேட்டான் என்னடா இப்பத்தான் உனக்குப் புதுசா கல்யாணம் ஆகி இருக்கான்னு.” 

“ஐயோ ஏன் என் மனத்தையும் இப்படி சேர்த்து வாங்கிறீங்க.” 

“நம்ம விக்ரம் தானே விடு.” 

“சரி தூங்கலாம், நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்.” என்றவள் கட்டிலில் படுத்துக்கொள்ள, வெற்றியும் படுத்துக் கொண்டான். 

“சின்னதா இருக்கும்போது நாங்க பசங்க எல்லாம் சேர்ந்து, மார்கழி மாசம் தினமும் காலையில கோவிலுக்குப் போவோம்.” 

“சின்ன வயசில அவ்வளவு பக்கதியா? அப்ப ஏன் இப்ப எல்லாம் கோவிலுக்கு வர்றது இல்லை.” 

“நாங்க எதுக்குப் போனோம் கேளு. கோவில்ல தர்ற சர்க்கரை பொங்கல் சுண்டல் எல்லாம் வாங்கதான். ஒரு கோவிலுக்கு இல்லை. நிறையக் கோவிலுக்குப் போய்ப் பொங்கல், சுண்டல் எல்லாம் வாங்கிட்டு வந்து, அதையே சாப்பிட்டு ஸ்கூல்லுக்குப் போவோம்.” 

விழிகள் மூடி இருந்தாலும், வெற்றியின் இதழ் சிரித்துக் கொண்டு இருக்க. கணவன் சொன்னதைக் கேட்டு மனைவிக்கும் சிரிப்புதான். 

“நீங்க பார்க்கதான் ஆள் அமைதி. ஆனா செம வாலு நீங்க.” 

“கொஞ்சம் பெரிய பையனா ஆனதும் போறது இல்லை. திரும்பக் காலேஜ் சேர்ந்ததும் போனோம்.” 

எதற்கு அந்த வயதில் என அதிரை யோசிக்க, வெற்றியே தொடந்தான். 
“பொண்ணுங்க எல்லாம் வருவாங்க இல்ல… அவங்களைப் பார்க்க. எங்களோட பொங்கல், சுண்டல் எல்லாம் அவங்களுக்குக் கொடுப்போம்.” 

கண்ணை மூடி இருந்தாலும், மனைவி இப்போது எப்படிக் கொதித்துப் போய் இருப்பாள் எனத் தெரியும் என்பதால்… வெற்றி லேசாகக் கண்திறந்து பார்க்க, அவன் எதிர்பார்த்தபடி ஆதிரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள். 

“ஹே சும்மா சொன்னேன் டி. நீ கோபப்பட்டா அழகா இருக்க ஆதி.” 

“இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்.” 

“நான் சாமி கும்பிடத்தான் போனேன். என் ப்ரண்ட்ஸ் தான் பொண்ணுங்களைப் பார்க்க வருவாங்க.” 

ஆதிரை இன்னும் அவனை நம்பாமல் பார்க்க, “உண்மை டி நம்பு.” என்றவன், 
“நாளைக்கு நானும் உன்னோட கோவிலுக்கு வரேன்.” என்றான். 

“நீங்க பார்த்த பொண்ணுங்க எல்லாம் இப்ப இல்லை.” அதிரை வேண்டுமென்றே சொல்ல, 

“நான் என் பொண்டாட்டிக்காகத் தான் வரேன்.” என்றவன் விளக்கை அணைக்க, 
மறுநாள் தான் வெற்றியோடு கோவிலுக்குச் செல்வதாகத் தனது தோழிகளுக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆதிரை உறங்கிவிட, அவளின் கைபேசியில் அலாரத்தை ஐந்து மணிக்கு மாற்றிவிட்டு வெற்றியும் உறங்கினான். 

திருமணம் ஆகி இந்த ஏழு வருடங்களில் தம்பதிகளின் அன்னியோன்யம் வளர்ந்து கொண்டே தான் சென்றிருக்கிறதே தவிரக் குறைய வில்லை. அது முன் இரவில் நடந்த கூடலால் மட்டுமா அல்லது பின் இரவு வரை நீடித்த இருவருக்குமான பேச்சிலா? 

வெறும் கூடல் மட்டும் ஒரு தம்பதிகளுக்கு இடையே அன்னியோனியத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் மனம் விட்டு பேசும்போதுதான், கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தன் துணையுடன் என்ன வேண்டுமாமனாலும் பேச முடியும் என்பதே… ஆரோக்கியமான உறவுக்கு அடையாளம். 

அலாரம் அடித்ததும் நாலு மணிதானே எனச் சிறிது நேரம் புரண்டு படுத்தவள், பிறகே நேரம் ஐந்து மணி தாண்டிவிட்டதைப் பார்த்து அலறி அடித்து எழுந்தாள். 

“உங்க வேலை தானே இது.” எனக் கணவனைக் கிள்ளியவள், வேகமாக உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் செல்ல, வெற்றியும் எழுந்து கொண்டான். 

மருமகள் வர நேரம் ஆனதும், ஜோதியே வாசலில் கோலம் போட்டு இருந்தார். 
காலையிலே வேலை செய்யும் பெண் வந்து வெளிவாயில் மற்றும் உள்வாயில் இரண்டு இடத்தையும் சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துவிட்டு, வெளி வாயிலில் மட்டும் கோலம் போட்டு விட்டு சென்று விடுவார். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் உள் வாயிலில் கோலம் போடுவார்கள். 

என்ன இந்நேரம் வரை மருமகளைக் காணவில்லை எனச் சாமி புத்தகத்தை வைத்துக் கொண்டு ஜோதி ஹாலில் அமர்ந்து இருக்க, வெற்றி பட்டு வேட்டி சட்டையிலும், ஆதிரை பட்டு புடவையிலும் பேசி சிரித்தபடி இறங்கி வந்தனர். கணவனுடன் செல்வதால்… நகைகளும் சற்றுப் பெரிதானதாக அணிந்திருந்தாள். 

ஆதிரை சென்று பூஜை கூடையில் கோவிலுக்குத் தேவையான பூவை எடுத்து வைத்தவள், தனது கூந்தலிலும் சூடிக்கொண்டாள். 

“அம்மா நாங்க கோவிலுக்குப் போய்ட்டு வரோம்.” என வெற்றி சொல்ல, 

“குடும்பத்தோட போறோம்ன்னு முன்னாடியே சொல்லி இருந்தா, நானும் அருணும் கூடக் கிளம்பி இருப்போமே.” என்றார் ஜோதி. 

“அது நான் திடிர்ன்னு தான் கிளம்பினேன். பரவாயில்லை நாமதான் கோவில்ல நம்ம பூஜை இருந்த அன்னைக்குப் போனோமே. பொங்கலுக்கு நம்ம  தோட்டத்துக்கு போவோம்.” என்றவன், 

“ஆதி ரெடியா போகலாமா?” என்றான். 

“நாங்க போய்ட்டு வரோம்.” எனச் சொல்லிவிட்டு ஆதிரை வெளியே செல்ல, வெற்றி அவளைப் பின் தொடர்ந்தான். இருவரும் வெற்றியின் பைக்கில் சென்றனர். 

ஜோதியின் முகம் வாடிவிட்டது. அவர் எப்போதும் அப்படித்தான். எங்கே சென்றாலும் அவரையும் அழைத்துச் செல்ல வேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார். 

இவர்கள் கோவிலில் இருந்து திரும்பி வந்தபோதும் அப்படித்தான் இருந்தார். அதை எல்லாம் கண்டுகொள்ள மற்றவர்களுக்கு நேரம் இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்ததால் வெற்றி மகனுடனே உண்டுவிட்டு வேலையைப் பார்க்க கிளம்பி சென்றான். 

இன்னும் இரண்டு நாளில் பொங்கல் என்பதால்… ஆதிரை பணிப்பெண்னை வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது அதே தெருவில் இருக்கும் ஜோதியின் தோழி சௌந்தரவடிவு வந்தார். ஜோதி அவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார். 

“என்ன பொங்கல் வேலை நடக்குது போல…” 

“ஆமாம். நம்ம காலம் போலவா என்ன? அப்ப எல்லா வேலையும் நாமே செய்வோம். வீட்டையும் பார்க்கணும், வீட்ல இருக்க மாடு கண்ணுக்கும் பார்க்கணும். காலையில எழுந்ததுல இருந்து உட்கார நேரம் இல்லாம வேலை இருக்கும்.” 

“ஆமாம் அதைச் சொல்லுங்க. இப்ப எல்லாத்துக்கும் ஆளை வச்சிடுகிறாங்க. அப்புறம் இந்தச் சீக்கு அந்தச் சீக்குன்னு சொல்ல வேண்டியது.” எனச் சௌந்தரவடிவும் சேர்ந்து ஜாடை பேச… ஆதிரைக்குக் கோபமாக வந்தது. 

ஆதிரை திருமணம் முடித்து வந்த போது விவசாயம் மட்டுமே பார்த்தனர். வீடும் பூர்வீக வீடு. அண்ணாமலை வரும் வருமானத்தைச் சொத்துக்களாக வாங்கி வைத்திருந்தார். பணம் இருந்தாலும் அவரும் அனுபவிக்க மாட்டார், மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார். ரொம்பச் சிக்கனமான மனிதர்.
ஜோதியும் வீட்டு வேலை செய்வதே தன் கடன் என இருப்பார். எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டார். ஆனால் ஆதிரை அப்படியில்லை அல்லவா… 

அவள் வந்த புதிதில் அவளையும் சேர்த்து தான் படுத்தி வைத்தனர். வீட்டில் பாத்திரம் தேய்க்க இருந்த பணிப்பெண்ணும் வேலையை விட்டு நின்றிருக்க… மருமகள் வந்துவிட்டாள் இனி வேறு ஆள் தேவையில்லை என ஜோதி ஆள் பார்க்காமல் இருந்தார். 

திருமணம் ஆகி வந்த புதிதில் ஆதிரையுமே அமைதியாக இருந்தாள். அவர்கள் வீட்டு பழக்க வழக்கம் அவளுக்குப் புரியவேண்டும் அல்லவா… 

ஜோதி அவள் வந்த அன்றிலிருந்தே இதைச் செய் அதைச் செய் என வேலை வாங்கிக் கொண்டே இருப்பார். ஒரு நிமிடம் அவளை உட்கார விடமாட்டார். ஆதிரைக்கு இப்படி வேலை செய்தெல்லாம் பழக்கமில்லை. 

மதிய சமையலுக்கு ஜோதி சமையல் அறைக்குச் சென்றால், சமையல் முடிக்க மூன்று மணி நேரம் ஆகும். அதற்குள் ஆதிரையையும் படுத்தி எடுத்துவிடுவார். 

வெங்காயம் நறுக்கு, அரிசியைக் களைந்து கொடு, புளியை கரைச்சி வை என எல்லாம் தயார் செய்து விட்டே அவர் அடுப்பை மூட்டுவார். அதுவும் முதலில் காய் பருப்புக் குக்கரில் தனித்தனியாக வேக வைத்து, கடைசியாகத் தாளிப்பார். இதற்கு நடுவில் வீட்டை பெருக்கு, பாத்திரம் கழுவு, துணியைக் காயப்போட்டு வா என்றும் வேலை வாங்குவார். வீட்டை மட்டுமே அத்தனை தடவை பெருக்க வைப்பார். 

அதிகபடியான வேலையில் ஆதிரை மெலிந்து கருத்து போனாள். அதைப் பார்த்த அவளின் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பொறுக்கவில்லை.
“பெரிய குடும்பன்னு அங்க போய்க் கொடுத்தியே… அதுக்காக இப்படியா இருப்பாங்க.” என அவர்கள் சிவமணியிடம் சண்டைக்குச் செல்ல… 

“அவங்க அந்தக் காலத்து ஆளுங்க. முன்ன பின்னதான் இருப்பாங்க. எல்லாம் ஆதிரை கையில் தான் இருக்கு.” எனச் சிவமணி முடித்துக் கொண்டார். 

ஐயோ நாம் வாழ்க்கை முழுக்க இந்தச் சமையல் அறையில்தான் இருக்கப்போகிறோமோ என் ஆதிரைக்குப் பயமே வந்துவிட்டது. அவள் அதை ஒருமுறை வெற்றியிடம் சொல்ல, “அம்மாவுக்கு அப்படியே செஞ்சு பழக்கமாகிடுச்சு. நீ உன் இஷ்டப்படி செய்.” என்றான். 

அதுவே ஆதிரைக்குப் போதுமானதாக இருக்க, “நீங்க நகருங்க, நான் சமைக்கிறேன்.” எனச் சமையல் பொறுப்பை அவள் எடுத்துக் கொண்டாள்.
மருமகள் சமைக்கிறேன் என்றது ஜோதிக்கு மகிழ்ச்சிதான். அவர் சந்தோஷமாகவே விட்டுக் கொடுத்தார். 

“நான் காய் நறுக்கிக் கொடுக்கிறேன்.” என அவர் சொல்ல, அதை அவர் எவ்வளவு நேரம் செய்வார் என ஆதிரைக்குத் தெரியும். நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என மனதிற்குள் நினைத்தவள், “நான் பண்ணிக்கிறேன் அத்தை.” என முடித்துக் கொண்டாள். 

Advertisement