Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 19 

திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டல் அறையின் கட்டிலில், கால் ஆட்டிக் கொண்டு யாஷிகா படுத்திருக்க…. திலீபன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் 


பிரெஞ்சு ப்ரைஸ் தின்று கொண்டே காதில் ஹெட் போன்னில் பாட்டுக் கேட்டபடி படுத்து கிடந்தவள், இன்னும் திலீபனை கவனிக்கவில்லை. 

அவள் காதில் இருந்து ஹெட்போன்னை கழட்டி எறிந்தவன், “உன்னை என்ன பண்ண சொன்னா, நீ என்ன பண்ணிட்டு இருக்க. அன்னைக்கு எதோ பெரிய சாவல் விட்ட, அவனைக் கவுத்து காட்றேன்னு.” 

“உனக்குத் தெரியுமா நான் எதுவும் பண்ணலைன்னு.” யாஷிக்காவும் கோபத்தைக் காட்ட… 

“உருப்படியா எதுவும் பண்ணியிருக்க மாட்ட… அதோட இப்படித் தின்னு பெருத்த உன்னையெல்லாம் எவன் பார்ப்பான்.” எனத் திலீபன் தனது தோற்றத்தை குறித்துச் சொன்னதும், யஷிகாவுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வர, 

“நான் வெற்றியை நேர்ல பார்க்கணும்னு சொல்லியிருக்கேன். இல்லைனா அந்த வீடியோவை ஷோசியல் மீடியாவுல விட்டுடுவேன் சொல்லி மிரட்டி இருக்கேன்.” 

“நீ அந்த வீடியோவை எதுவும் அனுப்பிடலையே…”
திலீபன் கேட்டதும் திறுதிறுவென விழித்த யாஷிகா, “நான் அனுப்பிட்டேனே.” என்றாள். 

“ஐயோ, நான் உன்னை அனுப்பாதேன்னு தானே சொன்னேன். சும்மா மிரட்டி அவனை வெளியில சந்திக்க ஏற்பாடு பண்ணிட்டு, எனக்குத் தகவல் சொல்லுன்னு தானே சொன்னேன்.” 

“அவங்க யாரும் பயப்படவே இல்லை. அதோட வெற்றியோட பொண்டாட்டி நம்பாம பேசினா, அதுதான் வீடியோ அனுப்பி வச்சேன்.” 

“அந்த வீடியோவில் ஒன்னும் இல்லைன்னு சொல்லித்தானே அனுப்பாத சொன்னேன். அவங்களுக்கு என்ன நடந்தது? அந்த வீடியோவில் என்ன இருந்ததுன்னே தெரியாது. இப்ப அந்த வீடியோவை பார்த்து ஒன்னும் இல்லைன்னு புரிஞ்சிருக்கும்.” 

“நீ ஏன் டென்ஷன் ஆகிற? அது என்னோட ப்ராப்லம்.” 

“அன்னைக்கு வெற்றிக்கு போதை மருந்து கலந்து கொடுத்தது வெளிய தெரிய வந்தா, எல்லோரும் சேர்ந்து தான் உள்ளே போகணும்.” 

“உன்னை யாரு அப்படிப் பண்ண சொன்னா?” என்றாள் யாஷிகா அப்பாவியாக. யாஷிகாவுக்குத் திலீபனை பற்றி நிறையத் தெரியாது. அவனால் தான் எந்த அளவுக்குப் பயன்படுத்த பட்டிருக்கோம் என்றும் அறியாதவள். 

யாஷிகா வட நாட்டைச் சேர்ந்த பெண். அங்கே ஒரு கிராமத்தில் அவள் பெற்றோர் இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள். பன்னிரெண்டாவது வரை படித்திருந்தவள், சென்னையில் அவள் தோழி வேலைப் பார்ப்பதால், தானும் அவளோடு சேர்ந்து இருக்கப்போகிறேன் எனச் சென்னைக்கு வந்துவிட்டாள். 

வெளியே அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்தாள். பெற்றோர் அனுப்பும் பணம் அத்தியாவசிய தேவைக்குத் தான் சரியாக வந்தது. ஆடம்பரமாக வாழ முடியவில்லை. 

அறை தோழியாக இருந்த பெண்ணின் தவறான போதனையால், சில ஆண்களுக்கு இரவு நேரத்தில் கம்பனி கொடுக்க ஆரம்பித்தாள். அதில் வரும் வருமானம் தான் செய்வது தவறு என்ற எண்ணத்தை எல்லாம் மலுங்கடித்திருந்தது. 

படிப்பை முடித்திருந்தாலும் பரிட்சையில் தேர்வாகவில்லை. ஊரில் இருக்கும் பெற்றோரிடம் பரிட்சையில் தேறி விட்டதாகவும், பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும் ஏமாற்றிவிட்டு சென்னையிலேயே இருந்து கொண்டாள். 

வேலைக்காக அலைந்து திரிந்த சமயத்தில்தான் திலீபனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது யாஷிகா மிகவும் பண நெருக்கடியில் இருந்தாள்.
 அவள்தான் வேலைக்குச் செல்கிறாளே என்று வீட்டில் இருந்தும் பணம் அனுப்பவில்லை. திலீபன் அவளுக்கு நல்ல உணவு உறைவிடம் கொடுத்துப் பார்த்துக்கொண்டான். 

யாஷிகா அவனிடம் தனது கடந்த காலத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள, இவளை எளிதாகத் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என எண்ணிக் கொண்டான். அதோடு அவளை இன்னும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டான். 

வார இறுதியில் பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்பவன், அப்படி ஒருநாள் அழைத்துச் சென்றபோது, “அங்க இருக்காரு பார்த்தியா ஒருத்தர். அவர் பெரிய பணக்காரர். கம்பனிக்கு ஆள் தேடுறார். நீ மட்டும் ஒரு நாள் கம்பெனி கொடுத்தா, நம்மோட ஒரு மாச செலவுக்குக் கவலை இல்லை.” என மெல்ல தூண்டில் போட, யாஷிகாவுக்கும் வேறு வழியில்லை. வேலை செய்து சம்பாதிக்க எல்லாம் அவள் உடல் வளையாது. ஆனாலும் தன்னை வேறு விதமாக முத்திரை குத்தி விடுவார்களோ எனப் பயம் இருந்தது. 

அவளது தயக்கத்தை உணர்ந்த திலீபன், “தினமும் எல்லாம் உன்னை இதைச் செய்யுன்னு சொல்ல மாட்டேன். இது போலப் பெரிய ஆளுங்களுக்குக் கம்பனி கொடுக்க மட்டும்தான்.” என்றான். பொன் முட்டையிடும் வாத்தை உடனே அறுக்க அவன் விரும்பவில்லை. 

திலீபன் சொன்னது போல, பெரிய ஆட்களுக்கு அதுவும் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கம்பனி கொடுக்க வந்தது. மிச்ச நாட்கள் எல்லாம் சொகுசு வாழ்க்கை தான். வேறு எந்த வேலையும் இல்லை. ஆனால் யாஷிகாவுக்குத் தெரியாதது. திலீபன் சிலவற்றை வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை. அதை வைத்து மிரட்டி திலீபன் தனியாகப் பணம் சம்பாதித்து வந்தான் என்பது அவளுக்குத் தெரியாது. 

வெற்றியின் விஷயத்தில் மட்டுமே, திலீபன் போட்ட திட்டம் எல்லாம் தவறாகி போனது. 

“டேய் மச்சான் நம்ம பிராட்ன்ஸ்லையே வெற்றியும் விக்ரமும் தான் பெரிய ஆளுங்க. இன்னைக்கு நம்ம செலவை அவங்க தலையில கட்டிடலாம்.” என நண்பன் ஒருவன் சொல்ல, 

“தெரியும் டா… நீங்க இப்படித்தான் எதாவது பண்ணுவீங்கன்னு. சரி நாங்களே பணத்தைக் கட்டுறோம்.” என்றான் வெற்றி. 

இதையெல்லாம் திலீபன் குறித்துக் கொண்டான். அதோடு யாஷிகாவும் வெற்றியை குறிவைக்க, அவனையே தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்துவது என முடிவு செய்து, அதன்படி திட்டம் தீட்ட, விக்ரமின் வரவினால் திட்டம் பாழானது. ஆனால் வெற்றியை விடவும் மனமில்லை. பணத்தை எப்படியும் கறந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திலீபன், யாஷிகாவை தூண்டிவிட்டான், அவன் வேறு ஒரு இடத்தில் பணம் வாங்க ஹைதராபாத் சென்றிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் தான் யாஷிகா சொதப்பி வைத்திருந்தாள். 

திலீபன் குளித்துவிட்டு வர, போன் அடித்தது, எடுத்துக் கொண்டு பால்கனியில் சென்று பேசினான். 

“ஹலோ… சொல்லு மணி.” 

“சார், நீங்க அன்னைக்கு எதுவும் பிரச்சனை வராது சொன்னீங்க. அதனாலதான் நீங்க சொன்னபடி பண்ணேன். ஆனா அந்த ரெண்டு பேரும் இன்னைக்கு ரெசார்ட் வந்திருந்தாங்க. அதோட மனேஜர் பார்த்து எதோ பேசினாங்க.” 

“உன்னை எதுவும் விசாரிச்சாங்களா?” 

“இல்லை… ஆனா மனேஜர் என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் வேலை செய்யுற மாதிரி அப்படியே பின்னாடி பக்கமா வெளிய வந்திட்டேன்.” 

“நல்லது பண்ண. யார் கண்ணுலேயும் மாட்டிக்காம வெளியூர் எங்காவது போயிடு.” 

“சார் நீங்க கொடுத்த ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு என் வேலையும் போய், நான் ஜெயிலுக்கும் போகப்போறேனா சார்.” 

“ஆமாம் நீ பெரிய கவர்னர் வேலைப் பார்த்த… அது போகுதுன்னு வருத்தப்பட, நீ யார் கண்ணுலேயும் படமா இரு. நான் உனக்கு வேற இடத்தில வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.” 

“சரி சார்.” 

போன்னை வைத்த திலீபன் தலையைப் பிடித்துக் கொண்டான். யாஷிகாவிடம் அந்த வீடியோவை தந்தது தவறு எனப் புரிந்தது. 

எப்போதுமே எதிலும் கண்டுகொள்ளதவள், வெற்றி விஷயத்தில் மட்டும் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். 

கடற்கரையில் விளையாடி விட்டு வந்த நண்பர்கள் கூட்டம் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பு ஒருமுறை நல்ல நீரில் குளித்துவிட்டு நீரில் இறங்கினர். 

பெரிய நீச்சல் குளம். கவர்ச்சியான உடையில் யாஷிகாவும் நீந்திக் கொண்டு இருந்தாள். எல்லாம் ஆண்களாக இருக்கிறார்கள் என அவள் விலகிப்போகவும் இல்லை. அவள் அழகைக் காட்டியபடி விதவிதமாக நீந்திக் கொண்டிருந்தாள்.

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சில ஆண்களும் விடுவதில்லை. நண்பர்கள் சிலர் ஆர்வமாக என்றால்,  சிலர் கேலியாகவும் பார்த்தனர். என்னது இந்தக் கண்றாவி என விக்ரம் கூட முறைத்தபடி ஒரு பார்வைப் பார்த்தான். ஆனால் பார்க்காமல் இருந்தது வெற்றி மட்டுமே. 


யாஷிகா நீந்துவது போல, யார் தன்னை எப்படிப் பார்கிறார்கள் எனக் கவனித்துக்கொண்டு இருந்தாள். ஆர்வமாகப் பார்த்தவர்களைத் தன் அழகில் கர்வம் கொண்டு மிதப்பாகவும். கேலியாகப் பார்த்தவர்களை அலட்சியமாகவும் பார்த்தாள்.  முறைத்து பார்த்த விக்ரமை கண்டுகொள்ளாமல் இருந்தவள், தன்னை இதுவரை பார்க்காத வெற்றியை மட்டுமே, அவன் தன்னை எப்படிப் பார்ப்பான் என்ற ஆர்வத்தில் விடாது கவனித்துக் கொண்டு இருந்தாள். 

அந்தோ பரிதாபம் வெற்றி அவள் பக்கம் பார்வையைத் திருப்பவேயில்லை. நண்பர்களின் கேலியில் அந்தப் பக்கம் பெண் ஒருத்தி இருக்கிறாள் என உணர்ந்தவன், அதன்பிறகு மறந்தும் அந்தப் பக்கம் பார்க்கவில்லை. நீந்துவது போல ஆண்கள் இருந்த பக்கம் யாஷிகா சென்ற போதும், வெற்றி அவளைப் பார்க்கவேயில்லை. 

தான் பெரிய அழகி தன்னை எல்லோரும் பார்ப்பார்கள் என நம்பிக் கொண்டு இருந்தவள், தன்னை ஒருவன் பார்க்கவில்லை என்பதே அவளுக்கு ஒரு விதமான கௌரவக் குறைச்சலாகத் தோன்றியது. தன்னையும் ஒருவன் கண்டுகொள்ளாமல் இருப்பதா… விக்ரமை போலக் கோபமாகப் பார்த்தாலும், எதோ ஒரு விதத்தில் அவனைப் பாதிக்கிறோம் என இருந்தது. ஆனால் வெற்றியை அவள் பாதிக்கவில்லை என்பது பெரிய ஏமாற்றம் அளித்தது. அது எப்படி அவன் தன்னைப் பார்க்காமல் இருக்கலாம். 

நன்றாக இருட்டியும் விட, நண்பர்கள் நீச்சல் குளத்தில் இருந்தபடி அரட்டை அடிக்க, யாஷிகா ஒரு சாய்வு நாற்காலியில் படுத்து வெற்றியைத்தான் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள். யாஷிகா உட்கார்ந்து இருந்த இடத்தில் விளக்கும் இல்லாததால்…மற்றவர்கள் அவளைக் கவனிக்கவில்லை. 

அவள் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்த திலீபன், “நீயும் ரொம்ப நேரமா முயற்சி பண்ற? ஆனா உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்கலை போல…” எனக் கேலி செய்ய…. 

“கவனிக்காம இருந்திருக்கலாம்.” யாஷிகா சமாளிக்க, 

“எனக்கு அப்படித் தெரியலை…. உன்னைப் பார்க்கணும்ங்கிற அவசியம் அவனுக்கு இல்லாம இருந்திருக்கலாம். இல்லை உன்னை விட அழகான பெண்களை எல்லாம் பார்த்திருக்கலாம். அதனாலதான் உன்னைக் கண்டுக்க மாட்டேன்கிறானோ என்னவோ.” 

திலீபன் சொன்னது யாஷிக்காவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவள் முகத்தைத் திருப்ப…. “அவன் உன்னையே சுத்தி வர்ற மாதிரி நான் பண்ணட்டுமா?” எனத் திலீபன் கேட்க, முடியுமா என்பது போல யாஷிகா அவனைப் பார்க்க… 

“முடியும். இன்னைக்கு அவன் உன் ரூம்ல இருப்பான். இல்லை நீ அவன் ரூம்ல இருப்ப…” திலீபன் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, யாஷிகா முகம் மலர்ந்தாள். 

அறையில் நன்றாக உடை அணிந்து யாஷிகா அலங்காரம் செய்தவள், “என்ன பண்ண போறேன்னு சொல்லவே இல்லையே.” என்றாள். 

“அவன் உன்னோட இருக்கிற மாதிரி வீடியோ எடுத்திடலாம். பிறகு அவன் காலத்துக்கும் உனக்கு அடிமை.” திலீபன் சொல்ல… 

“முடியுமா?” என யாஷிகா நம்பிக்கை இல்லாமல் கேட்க, 

“பாரு என்ன நடக்குதுன்னு.” என்றான் திலீபன் நம்பிக்கையாக. 

அங்கே போய்க் குடிச்சா விதவிதமா குடிக்கலாம் என்ற நண்பர்களின் ஆசைக்கு இணங்கி, அந்த ஹோட்டலில் இருந்த பாருக்கு சென்று மது அருந்தினர். 

அங்கிருந்த பேரரை ஏற்கனவே பேசி வைத்திருந்த திலீபன், அவன் மூலம் வெற்றி குடிக்கும் மதுவில் போதை மாத்திரையைப் போட்டு விட்டான். திடீர் திட்டம் என்பதால் கையில் ஒன்றும் இல்லை. அங்கிருந்த லோக்கல் ஆட்கள் மூலம் போதை மாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அது வெற்றிக்கு உற்சாகத்தைத் தருவதற்குப் பதில் உடல் உபாதையைத் தந்தது. அதனால் வெற்றி அங்கிருந்து எழுந்து செல்ல, யாஷிகா அவனைப் பின் தொடர்ந்தாள். 

பேசி வெற்றியை தங்கள் அறைக்கு அழைக்கலாம் என அவள் நினைத்து பின்னே செல்ல… அதே நேரம் ஆதிரை அழைக்க, வெற்றி போன்னில் மனைவியுடன் குழாவுவதைப் பார்த்த யாஷிகாவுக்குக் கடுப்பாக இருந்தது. 

அவன் போன் பேசி வைக்கும் வரை காத்திருந்தவள், “ஹாய்…” என்றாள். 

திடிரென்று கேட்ட குரலில் திரும்பிய வெற்றி, அவளை  அன்னியப் பார்வைப் பார்த்து வைக்க, இவனை எப்படி நெருங்குவது என நினைத்தவள், “உங்க மனைவி நல்லாயிருக்காங்களா.” என்றாள் பேச்சை ஆரம்பிக்கும் விதமாக. 

மனைவி என்றதும் ஆதிரைக்குத் தெரிந்தவர் என்ற எண்ணத்தில், “ஆதிரையைத் தெரியுமா உங்களுக்கு.” என வெற்றி முகம் மலர்ந்தான். 

“ம்ம்… நான் உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தேனே…” என எதோ ஒரு பொய்யை யாஷிகா எடுத்து விட, வெற்றிக்கு அவளைப் பார்த்ததாக நினைவு இல்லை. 

“கல்யாணத்தின் போது பார்த்தது. எத்தனை பசங்க.” போகும் வரை போகட்டும் என யாஷிகா பேச்சை வளர்க்க… 

“ரெண்டு பசங்க. பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு.” என்றான் சந்தோஷமாக. 

“உங்களைப் பார்த்தா ரெண்டு பசங்களுக்கு அப்பா மாதிரியே இல்லை.” 
யாஷிகா மெல்ல பேச்சை மாற்ற… அந்த நேரம் சரியாக விக்ரம் வந்துவிட்டான். மனைவியைப் பற்றிப் பேசியதால் தான் வெற்றி அவளிடம் நின்று பேசினான். 

வெற்றியின் விஷயத்தில் இவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும், யாஷிகா அந்த வீடியோவை கேட்டு வாங்கிக் கொண்டாள். 

“பாரு இது மாதிரி யாரையும் வீடியோ எல்லாம் எடுத்தது இல்லை. உனக்காகத்தான் பண்ணேன்.” எனத் திலீபன் வேறு அவளை நம்ப வைத்திருந்தான். இப்போது அதுவே அவர்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருந்தது. 

இத்தனை நாள் திரை மறைவில் செய்த தகிடுதத்தம் அனைத்தும் வெளி வந்துவிடும் நிலை. விக்ரமும் வெற்றியும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க… அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணியவன், தனது ஆட்களை அழைத்தான். 

“ஹலோ…சொல்லுங்க அண்ணா.” 

“எங்க இருக்கீங்க?” 

“ரூம்லதான்ணா இருக்கோம்.” 

“உடனே கிளம்பி அவனுங்க ரெண்டு பேர் வீடு இருக்கிற ஏரியாக்கும் போங்க. ரெண்டு பேர்ல யார் பசங்க கிடைச்சாலும் தூக்கிட்டு நம்ம இடத்துக்குப் போயிடுங்க. போகும்போது எனக்குத் தகவல் மட்டும் சொல்லிடுங்க.” 

“சரிண்ணா…” 

“யார்கிட்டயும் மாட்டிக்காம பண்ணுங்க.” 

வெற்றியும் விக்ரமும் ஏற்கனவே சுதாரித்து விட்டனர் என்பதைத் திலீபன் அறியவில்லை.

Advertisement