Advertisement

“என்ன மிரட்டுறீங்களா? சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு தடவை என்னை வந்து நேர்ல பார்த்து பேசிட்டு போங்க. அதோட நான் உங்க பக்கமே வர மாட்டேன்.” 

“என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு கேனையா இருக்கா?” 

“நீங்க வரலைனா நான் வருவேன். அப்புறம் மத்தவங்களுக்கும் தெரிஞ்சிடும்.”

“வந்துப் பாரு  பிறகு நான் யாருன்னு உனக்குத் தெரியும்.” வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனிடம் இருந்து கைபேசியை வாங்கிய ஆதிரை, “யாஷிகா நான் சொல்றதைக் கேளு, இந்த நிமிஷம் வெற்றிகிட்ட இருந்து விலகிடு… இல்லைனா நீ ரொம்ப வருத்தப்படுவா.” என எச்சரிக்க, 
“ஓ… நீயும் அங்கத்தான் இருக்கியா. நீயும் உன் புருஷன் செய்றதுக்கு எல்லாம் கூட்டா?” 

“என் புருஷனோடு நான் கூட்டு வச்சிகிறது தப்பு இல்லை. ஆனா என் புருஷனோட நீ கூட்டு சேரணும்னு நினைக்கிற பார்த்தியா, அது ரொம்பத் தப்பு. உனக்கு எல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்.” 

“நான் அந்த வீடியோவை வெளியே விட்டுடுவேன்.” 

“என் புருஷன் பேரை கெடுக்கச் சதி பண்றன்னு சொல்லி… மான நஷ்ட்ட வழக்கு நான் போடுவேன். எதுக்கும் ஒரு கோடி எடுத்து வச்சிக்கோ.” ஆதிரை கிண்டலாகச் சொல்ல, என்ன பேசுவது எனத் தெரியாமல் யாஷிகா போன்னை வைத்து விட்டாள். 

யாஷிகாவுக்குத் தெரியும் தன்னிடம் இருக்கும் வீடியோவை வைத்து வெற்றியை பணிய வைக்க முடியாது என்று. அன்று தனது திட்டத்தைப் பாழாக்கிய விக்ரம் மீது கோபமாக வந்தது. 

வெற்றியை தனியாகச் சந்தித்துப் பேசு வாய்ப்பு கிடைத்தால்…அதை வைத்து வலுவான ஆதராம் திரட்டலாம் எனப் பார்த்தால்… அவன் ஒத்து வருவதாகத் தெரியவில்லை. 

அவன் வரவில்லை என்றால் என்ன உன்னைத் தேடி நான் வருகிறேன் என நினைத்துக் கொண்டாள். 

வெற்றி வெளியே கிளம்பி சென்றதும், ஆதிரை சக்தியை அழைத்தாள். அவன் அப்போது அலுவலகத்தில் இருந்தான். பொதுவாக ஆதிரை இந்த நேரம் அவனை அழைக்க மாட்டாள். அதனால் அழைப்பை ஏற்றபடி எழுந்து வெளியே சென்றான். 

“என்ன அக்கா இந்த நேரத்தில போன் பண்ணி இருக்க?” 

“ஒன்னும் இல்லைடா சும்மாதான். அப்புறம் எப்படி இருக்க? மேனகா நல்லா இருக்காளா?” 

“ம்ம்… நல்லா இருக்கா… அக்கா என்ன சொல்லணும் சொல்லு, நீ இந்த நேரம் போன் பண்ண மாட்ட எனக்குத் தெரியும்.” 

ஆதிரை சுருக்கமாக யாஷிக்காவை பற்றிச் சொன்னவள், “எனக்கு அவளோட மொபைல்ல இருந்து அவ யாருக்கெல்லாம் பேசினான்னு லிஸ்ட் வேணும்.” 

“அது எடுக்கலாம் என் பிரண்ட் ஒருத்தன் அந்த லைன்ல இருக்கான். அவனை விட்டு வாங்கிறேன்.” 

“சக்தி இந்த விஷயம் நீ யார்கிட்டயும் மேனகாகிட்ட கூடச் சொல்லக் கூடாது.” 

“எனக்கு இதை நீ சொல்லனுமா… என்ன சொல்லணும் சொல்லக்கூடாதுன்னு எனக்குத் தெரியும்.” 

“உனக்குத் தெரியும், நான் உன் அத்தான்கிட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டேன். ஆனா உன்னை மட்டும் மேனகா கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்றது நியாயம் இல்லைதான்.” என்னைப் பத்தின்னா நான் கவலைப்பட மாட்டேன். ஆனா இது அத்தானைப் பற்றி…” 

“நீ இவ்வளவு எல்லாம் சொல்ல வேண்டாம். எனக்குப் புரியுது. அதோட நீ எனக்கு ரொம்ப முக்கியம் அக்கா. எனக்கு அத்தானைப் பற்றித் தெரியும். ஆனா மேனகாவுக்கு என்ன தெரியும். அவ அவரைத் தப்பா நினைக்கிறது எனக்குமே பிடிக்காது.” 

“சரி டா… அந்த விவரம் கிடைச்சதும் எனக்குச் சொல்லு.” 

“அக்கா அப்பாகிட்ட சொன்னா ஒருநாள்ள முடிஞ்சிடும்.” 

“தெரியும் சக்தி. ஆனா அப்பாகிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குச் சில ஆதாரம் வேணும். வெற்றியை யாரும் தப்பா நினைக்கிறதை நான் விரும்பலை.” 

“சரிக்கா நான் பார்க்கிறேன்.” 

மறுநாள் வெற்றியும் விக்ரமும் பாண்டிச்சேரி கிளம்பி சென்றனர். அவர்கள் தங்கி இருந்த பீச் ரெசார்ட் சென்றவர்கள், அதன் உரிமையாளரை சந்தித்துப் பேசினார்கள். 

விக்ரம் வெற்றி இருவருமே பெரிய ஆட்கள். அதனால் அவர்கள் சொல்வதைப் பொறுமையாக அந்த உரிமையாளர் கேட்டார். 

“முதலில் தங்கள் ரெசார்ட்டில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.” என அடித்துப் பேசியவர், “வீடியோவை பார்த்தா தெரிஞ்சிடும்.” என்ற இவர்களின் வாதத்திற்கு ஒத்து வந்தார். 

அந்த வீடியோவை பார்த்த போது தான் யாஷிகா மட்டும் இல்லை. அவளோடு இன்னொருவனும் இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வர, நிறையப் புதிருக்கு விடை கிடைத்தது. 

விக்ரமும் வெற்றியும் தங்களுக்குத் தேவையான ஆதராங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப, “சார் ப்ளீஸ் எங்க ரெசார்ட் பேர் மட்டும் எந்தக் காரணம் கொண்டும் வெளிய வராம பார்த்துக்கோங்க.” என அதன் உரிமையாளர் கேட்டுக்கொள்ள, 

“பாருங்க உங்க ரெசொர்ட்ல வந்து தங்கிதான் எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை. இனிமேயாவது யார் வராங்க போறாங்கன்னு கவனிங்க சார்.” எனச் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர். 

“இதுவரை யாஷிகாவை இருவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆதிரைக்குத் தெரிய வந்தால் என்ன ஆகுமோ என்ற எண்ணமே முன்னிருக்க…. யாஷிகா வேண்டுமானால் வீடியோவை வெளியிடுவாள், வேறு என்ன செய்து விட முடியும் என அலட்சியமாகவே இருந்தனர். ஆனால் இப்போது அவள் பின்னே ஒருவன் இருக்கிறான் என்றதும் அதுவும் அவன் செய்த காரியத்தை வீடியோவில் பார்த்து இருந்தனர். அதைப் பார்த்த பிறகு கொஞ்சம் அச்சம் பிறந்தது என்னவோ உண்மை. அவன் எப்படிப்பட்டவனோ எதற்கும் துணிந்தவனாக இருந்தால்…. இருவரும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர். 

விக்ரம் வனிதாவிற்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவே இல்லை. வெற்றி ஆதிரைக்கு அழைத்து அருண் வந்துவிட்டானா எனக் கேட்க, 

“இப்பதான் உங்க அம்மா அவனைக் கூப்பிட கிளம்புறாங்க.” என்றதும், “அவங்க வேணாம் நீ போ.” என்றான் வெற்றி. 

“என்னங்க?” 

“வந்து சொல்றேன்.” 

கணவன் சொன்னதும் ஆதிரை நேரம் கடத்தாமல் பள்ளி வாகனம் நிற்கும் இடத்திற்குச் சென்று அருணை அழைத்து வந்தாள். 

அவள் வீடு வந்துவிட்டாள் எனத் தெரிந்ததும் தான் வெற்றிக்கு நிம்மதி ஆனது. 
“எங்கையும் வெளியப் போகாத… அருணையும் விளையாட அனுப்பாத. நான் கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” எனப் போன்னை வைத்தான். 

வெற்றி அவர்கள் தோட்டத்தில் இருக்கும் இருவரை, வீட்டு காவலுக்கு அனுப்பி வைத்தான். விக்ரமின் வீட்டிற்கும் ஆள் போட்டான். 

விக்ரமும் பத்து முறைக்கு மேல் அழைத்து விட்டான் வனிதா எடுக்கவே இல்லை. அவன் அம்மாவுக்கு அழைத்துக் கேட்டால், எங்கப் போனாளோ தெரியலை என்றார். விக்ரமின் பதட்டம் அதிகரிக்க, அப்போது தான் வனிதா சுஜியை அழைத்துக் கொண்டு வீடு வந்தாள். 

இதோ வந்திட்டாடா எனத் தெய்வா சொன்னவர், கைப்பேசியை வனிதாவிடம் கொடுக்க, “எங்க டி போன, எத்தனை தடவை போன் பண்றேன் எடுக்க மாட்டியா…” என இருந்த பதட்டத்தில் அவளிடம் விக்ரம் கத்த, 

“கடைக்குப் போயிட்டு அப்படியே சுஜியை அழைச்சிட்டு வந்தேன். செல்லை வீட்லயே வச்சிட்டு போயிட்டேன்.” 

“செல்லை எடுத்திட்டு போகணும்னு கூட அறிவு இல்லையா?” 

“நீங்க என்னை அதிசயமா தேடுவீங்கன்னு எனக்கு எப்படிங்க தெரியும்.” 

மனைவி சொன்னதும் விக்ரம் உண்மை தானே என நினைத்தான். அவனாக அவளை அழைப்பது என்பது அரிது. திருமணத்திற்கு முன்பு காதலித்தான். ஆனால் திருமணத்திற்குப் பின்பு அந்த அன்பு இருக்கிறதா என அவனுக்கே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று அவள் சில நேரம் காணவில்லை என்றதும், என்ன ஆனதோ என அவன் மனம் பட்டபாடு அவனுக்குத்தான் தெரியும். 

“நான் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். அதுவரை வீட்ல இரு. சுஜியையும் வெளிய அனுப்பாத. சொல்றது புரியுதா?” 

“சரிங்க…” என வைத்தவளுக்கு, இன்னைக்கு என்ன நம்ம மேல இவ்வளவு அக்கறை என வியப்பாகவே இருந்தது. 

ஜோதி எப்போதுமே அலட்சியம் தான். வாசல் கதவை திறந்தே போட்டு விடுவார். அதனால் தான் அவரை மட்டும் வீட்டில் வைத்து விட்டு வெளியூர் செல்ல மாட்டார்கள். ஆதிரையும் கதவை சாத்துங்க எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

இன்றும் அதே போல ஜோதி செய்ய, ஆதிரைக்கு எரிச்சலாக வந்தது. பிறகே வெற்றி அனுப்பிய பண்ணை ஆட்கள் வெளியே நிற்பதை பார்த்து நிம்மதி ஆனாள். ஆனால் இவ்வளவு தூரம் வெற்றிச் செய்கிறான் என்றால், என்னவாக இருக்குமோ எனக் கவலையாகவும் இருந்தது. 
அண்ணாமலையானே எங்களை எந்த சிக்கலும் இல்லாம வெளிக்கொண்டு வந்திடுப்பா என வேண்டியபடி இருந்தாள். 

Advertisement