Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 18

இத்தனை நாள் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லாமல் இருக்கிற குற்ற உணர்வில், வீட்டில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், இப்போது எல்லாம் சொல்லிவிட்ட நிம்மதியில் மனைவி மகளோடு நேரம் செலவழிக்க எண்ணி, வெற்றி அன்று வீட்டிலேயே இருந்து விட்டான். 


ஆதிரை மகளைக் குளிப்பாட்டி தூக்கி வந்தவள், ஈர உடலை துடைத்து விட்டு உடைமாற்ற, மகள் சிரிப்பதைப் பார்த்தவன், “குட்டிக்குக் குளிக்கிறது பிடிக்குமா டா…” எனக் கேட்க, 

“உங்க பொண்ணுக்கு தண்ணியில இருக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.” என்றாள் ஆதிரை. 

“எவ்வளவு சமத்து எங்க குட்டி.” என மகளை முத்தமிட்டவன், வாசனையா இருக்கீங்களே டா.. குளியல் பொடியா?” எனக் கேட்டு மீண்டும் முத்தமிட குனிய, அவனது கைபேசி அழைத்தது. யாஷிகா தான் அழைத்திருந்தாள். வெற்றிக்கு கடுப்பாக இருந்தது. கைபேசியை அனைத்து வைத்தான். 

மகளுக்குக் கஞ்சி எடுத்து வந்து புகட்டியபடி, “அன்னைக்கு என்ன நடந்தது சொல்லுங்க.” ஆதிரை கேட்க, 

“நான் ஏற்கனவே சொன்னது தான். போனதும் கடலுக்குப் போய் ஆடினோம், அப்புறம் நீச்சல் குளத்தில கொஞ்ச நேரம் இருந்தோம். அப்புறம் நைட் சாப்பிட போன போது தான் குடிச்சது. சொல்லப்போனா எனக்கு அன்னைக்குக் குடிக்க அவ்வளவு விருப்பம் இல்லை. மறுநாள் நீ வரேன்னு அதையே தான் யோசிச்சிட்டு இருந்தேன். என்னை விட்டா அப்பவே கிளம்புறது போலத்தான் இருந்தேன். அதனால நான் ரொம்பக் கூடக் குடிக்கலை. எனக்கு அவ்வளவு தான் நினைவு இருக்கு.” 

“சரி விக்ரமுக்கு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டு அன்னைக்கு அவர்கிட்ட என்ன நடந்துச்சு கேளுங்க.” 

வெற்றி விக்ரமை அழைத்து எங்கே இருக்கிறாய் எனக் கேட்க, “நான் மட்டும் தான் இருக்கேன் சொல்லு.” என்றான். வெற்றி ஆதிரை சொன்னதைச் சொல்ல, விக்ரம் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தான். 

விக்ரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே மது அருந்தியவன், பிறகே வெற்றி அங்கில்லாததை உணர்ந்தான். 

“எங்க டா வெற்றி..” அவன் அருகில் இருந்த நண்பர்களிடம் கேட்க, 

“இப்பத்தான் டா ஒரு மாதிரி இருக்குன்னு எங்கையோ எழுந்து போனான்.” 

“எங்கப் போனான் இவன். இவன் பொண்டாடிக்கு யாரு பதில் சொல்றது.” வெற்றியை தேடி விக்ரம் எழுந்து செல்ல, 

“டேய், அவன் பொண்டாட்டிக்கு அவன் பயந்தா பரவாயில்லை… நீ ஏன் டா பயப்படுற?” 

“உங்களுக்கு ஆதிரைப் பத்தி தெரியாது. அவன் புருஷனுக்கு மட்டும் ஏதாவதுன்னா என்னை மட்டும் இல்லை. உங்களையும் சேர்த்துத் தொலைச்சிடுவா தெரியுமா” 

“இது வேறையா… தாங்காது டா சாமி… நீ போய் அவனைப் பாரு.” என நண்பர்கள் விக்ரமை அனுப்பி வைத்தனர். 

விக்ரம் சொல்லிக் கொண்டே வர, ஆதிரை வெற்றியை முறைக்க, அவன் சாரி என உதடசைத்தான். 

“நான் ஹோட்டலை சுத்தி பார்த்திட்டு, ரூம்க்கு வந்தா… நீ அந்தப் பெண்ணோட நின்னு பேசிட்டு இருந்த… இவளோட நீ ஏன் பேசுறேன்னு நான் யோசிச்சிட்டே வந்தேன்.” 

“உங்களுக்கு அந்தப் பெண்ணை ஏற்கனவே தெரியுமா?” ஆதிரை குறுக்கிட்டு கேட்க, 

“நாங்க நீச்சல் குளத்தில இருந்த போது, அவளும் அங்க இருந்தா… அப்ப பார்த்தேன்.” 

“ஓ…” 

“என்ன டா வந்திட்டேன்னு நான் கேட்டதுக்கு.” 

“எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு, அதுதான் வந்திட்டேன்னு சொன்னான்.” 

போதையில தள்ளாடல.. ஆனா அதிகமா குடிச்சிருந்தா எப்படி இருப்போமோ அப்படித்தான் பேசினான். 

ஒருவேளை அதிகமா குடிச்சிட்டானோன்னு நான் நினைச்சிட்டேன். அந்த யாஷிகா என்னைப் பார்த்து முறைச்சிட்டே நின்னா… இவனும் ரொம்பக் குடிச்சிருந்தது போல இருந்ததுனால… நான் அங்க இருந்து போகலை. நான் ரூம் உள்ளே போக, வெற்றியும் உள்ள வந்திட்டான். 

யாரு டா… அதுன்னு கேட்டதுக்கு, இவன் பதில் சொல்றதுக்குள்ள வேகமா பாத்ரூம் போய் வாந்தி எடுத்தான். அப்புறம் தலைவலின்னு அப்படியே படுத்திட்டேன். அப்பத்தான் நீ போன் பண்ண. 

“நான் பிரண்ட்ஸ்கு போன் பண்ணி சொல்லிட்டு இவனோடவே இருந்திட்டேன். காலையில எழுந்து கேட்டா, இவனுக்கு எதுவுமே நினைவு இல்லை. தலை வலி வேற போகலை…. அப்படி என்னத்தடா குடிச்சேன்னு நான் கூட இவனைத் திட்டினேன்.” 

“திரும்பக் காலையில வந்து அந்தப் பொண்ணு இவன்கிட்ட கலாட்டா பண்ணும் போது, ஓ இந்தப் பொண்ணு பணத்துக்காகப் பண்ணியிருக்கான்னு நினைச்சேன்.” 

“வெற்றி கோபத்தில அவளை அடிச்சிட்டான். அதோட அவளும் போயிட்டா… ஆனா இவனுக்கு மதியம் வரை தலைவலி இருந்தது. அப்புறம் தான் நாங்க அங்க இருந்து கிளம்பினோம்.” 

“நல்லவேளை நான் இவனை விட்டு போகலை. இவன் போதையில இருந்த போது ரூம்குள்ள வந்து, இவன் பக்கத்தில கட்டில்ல படுத்து வீடியோ எடுத்திருந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை.” விக்ரம் சொல்ல, 

“அதுதான் அவளோட திட்டமா இருந்திருக்கும். அதை நீங்க வந்து கெடுத்துடீங்கன்னு கோபத்தில தான் உங்களைப் பார்த்து முறைச்சிருக்கா.” ஆதிரை சொல்ல, நண்பர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். 

இதுவே வெளியே தெரிந்தால் பேர் கெட்டு போகும். இதற்கு மேலும் என்பதை வெற்றியால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. 

“நாம நினைச்ச மாதிரி இந்தப் பொண்ணு சாதாரணமான பொண்ணு இல்லை. எதோ ஒரு பெரிய திட்டம் போட்டிருக்கா… இனியும் இதோட விடுவாளா தெரியாது.” ஆதிரை சொல்ல, 

“அதுக்கு முன்னாடி நான் அவளைக் கொன்னுடுவேன்.” என்றான் வெற்றி ஆத்திரமாக. 

“கொன்னுட்டு ஜெயிலுக்குப் போவீங்களா? தண்டனை அவளுக்கா இல்லை எனக்கா?” ஆதிரை கேட்க, வெற்றி கோபம் குறையாமல் நிற்க, 

“நமக்குத் தெரியாத பெரிய ஆளுங்க இல்லை. இவளை நான் தட்டி வைக்கிறேன்.” என்றான் விக்ரம். 

“நம்மை அவ எப்படித் திட்டம் போட்டு வளைக்க நினைச்சா… அதே போல நாமும் அவளை வளைச்சு பிடிக்கணும். எனக்கு வெற்றியோட பேர் எந்த விதத்திலேயும் கெடக் கூடாது.” 

“அதோட இனியொரு முறை இது மாதிரி பண்ணும் தைரியம் அவளுக்கு வரவே கூடாது.” 

“நீங்க அவளுக்குப் போன் பண்ணி பேசி இருக்கீங்களா?” என ஆதிரை வெற்றியிடம் கேட்க, வெற்றி இல்லையென்று சொல்ல, “நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.” என்றன் விக்ரம். 

“இனி நீங்களா அவளுக்குப் பண்ணாதீங்க. அவளே போன் பண்ணாலும் ரெகார்ட் பண்ணுங்க. நமக்கு ஆதாரம் வேணும்.” 

“நாம அந்தப் பெண் மேல போலீஸ் கம்பளைன்ட் கொடுத்தா என்ன?” 

“கொடுக்கலாம், ஆனா நம்மகிட்டயும் எதாவது ஆதாரம் இருந்தா நல்லா இருக்கும். அந்தப் பெண் திடிர்ன்னு எங்க இருந்து முளைச்சா…. அவளைப் பற்றித் தெரியணும். அந்த ஹோட்டல்ல சிசிடிவி காமெரா இருக்கும் தானே….”
ஆதிரை சொன்னபிறகுதான் வெற்றிக்கும் விக்ரமுக்கும் அது நினைவுக்கே வந்தது.

“நானும் வெற்றியும் பாண்டிச்சேரி போயிட்டு வரோம்.” 


“சரி…. ஆனா நீங்க போறது யாஷிகாவுக்குத் தெரிய கூடாது.” 

“அவ அந்த அளவுக்கா வேவு பார்ப்பா…” 

“தெரியலை… அவளுக்குப் பின்னாடி யாராவது இருக்கலாம்.” 

சிறிது நேரம் கனத்த மௌனம் மூன்று பேருக்கும் மண்டை காய்ந்தது. 

விக்ரமுடன் பேசிவிட்டு வைத்த பிறகு, சிறிது நேரத்தில் மீண்டும் யாஷிகா கைப்பேசியில் அழைக்க, 

“நீ பேசுறியா?” 

“இல்லை நீங்களே பேசுங்க. ஆனா அவ பேசுறதை ரெகார்ட் பண்ணுங்க. நாளைக்கு நமக்குத் தேவைப்படும்.”  என்றாள் ஆதிரை.

“சரி…” என்ற வெற்றி, அந்த உரையாடலை பதிவு செய்யும்படி செய்து விட்டு, பிறகே அழைப்பை ஏற்றான். 

“ஹலோ…” 

“என்ன வீடியோ பார்த்தீங்களா?” 

“என்ன இருக்கு அந்த வீடியோல ஒன்னும் இல்லையே….” 

“ஆனா நான் சொல்வேனே வெற்றி என்னைக் கம்பனி கொடுக்கச் சொல்லி கூப்பிட்டாருன்னு.” 

“நானும் சொல்வேன், முன்னாடியே பார்த்திருக்கேன். அதனால தெரிஞ்சவங்கன்னு பேசினேன்னு.” 

“ஆனா உலகம் என்னைத்தான் நம்பும் பாஸ். நான் சொல்றது தான் உண்மையும்.” 

“ஏய் இப்ப உனக்கு என்ன வேணும்?” 

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். ஒழுங்கா நான் சொல்றது கேட்டிருக்கலாம். தேவையில்லாம உங்க பொண்டாட்டிக்கு வேற இப்ப தெரிஞ்சிடுச்சு.” 

“எப்படியும் நான் சொல்லித்தான் இருப்பேன். உனக்கு என் பொண்டாட்டியை பத்தி தெரியாது.” 

“பார்க்கலாம் நானா அவளான்னு. உங்களுக்கு ரெண்டு நாள் தான் வெற்றி டைம். நீங்க என் வழிக்கு வாங்க. நானே உங்க பொண்டாட்டிக்கு போன் பண்ணி, நான் தெரியாம பண்ணிட்டேன். உன் புருஷன் உத்தமன்னு சொல்லி பழியை என் மேலையே போட்டுகிறேன்.” 

“ஏன் உனக்குக் கல்யாணம் ஆகாத ஆம்பிளைங்க யாரும் கிடைக்கலையா?” 

“எனக்கு உங்களைத்தானே பிடிச்சிருக்கு. அதோட உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது.” 

“நான் இத்தனை நாள் அமைதியா போனதுக்குக் காரணம், எனக்கு அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நினைவு இல்லை. ஆனா இப்ப தெரிஞ்சிடுச்சு, நீ ஒன்னும் இல்லாத விஷயத்தை வச்சு வித்தைகாட்டிட்டு இருக்கேன்னு. இதோட விட்டுட்டு ஒதுங்கி போயிடு இல்லைனா தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.” 

Advertisement