Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 17 

வெற்றிதான் குழப்பத்தில் இருந்தானே தவிர, ஆதிரை தெளிவாக இருந்தாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில், அவள் கணவன் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்று கூடவா அவளுக்குத் தெரியாது. 


உடை மாற்றித் தொட்டிலில் இருந்த மகளை ஒருமுறை பார்த்தவள், விளக்கணைத்து வெற்றியின் அருகே நெருங்கி படுத்து அவனை அணைத்துக்கொள்ள, வெற்றியும் அவளை இதமாக அனைத்துக் கொண்டான். அவன் வேறு எதற்கும் முயலாமல் இருக்க, ஆதிரைக்குக் கடுப்பாக இருந்தது. 

எனக்கு இதெல்லாம் பத்தாது டா என மனதிற்குள் நினைத்தவள்,  “இது தேறாத கேஸ்…. நாமதான் எதாவது பண்ணனும் போல…” என, அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட, வெற்றியிடம் இருந்து முழு ஒத்துழைப்பு என்பது இல்லவேயில்லை. 

“இப்ப என்னங்க உங்களுக்கு?” 

“இல்லை எதுக்கும் அந்த வீடியோவை பார்த்த பிறகு…” 

“அதுல ஒன்னும் இருக்காது எனக்குத் தெரியும். நீங்க எல்லாம் அதுக்குச் சரிப்பட மாட்டீங்க. என் மூடை மாத்தி எரிச்சலை கிளப்பாதீங்க சொல்லிட்டேன். எத்தனை நாள் டா என்னைக் காத்திருக்க வைப்ப.” என ஆதிரை எரிச்சலில் கத்த தொடங்க… அவள் வாயை அடக்குவதைத் தவிர இப்போது வெற்றிக்கு வேறுவழியில்லை. 

தன்னைப் பார்த்து படுத்திருந்தவளை, ஒரே தள்ளில் கட்டிலில் தள்ளியவன், அவள் மேல் சரிந்து அவள் இதழ்களைச் சிறை செய்தான். 

என்ன நடக்கிறது என்று புரியவே ஆதிரைக்குச் சில நொடிகள் ஆக… பிறகு அவள் உணர்ந்தது எல்லாம் சுகம் சுகம் மட்டுமே. 

ஆதிரையின் கால் பட்டு, வெற்றியின் கைபேசி கட்டிலுக்குக் கீழே விழ, அதைப் பார்த்தாலும் கணவனும் மனைவிக்கும் இருந்த முக்கிய வேலையில் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. 

யாஷிகா வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு, ஆதிரை அழைப்பாள் எனக் காத்திருக்க, அவள் அந்த வீடியோவை பார்த்ததாகக் கூடத் தெரியவில்லை. 

கொஞ்சமும் பயமோ பதட்டமோ கூட இல்லையா.. இருந்திருந்தால் இந்நேரம் அடித்துப் பிடித்துப் பார்த்திருப்பாள் தானே… சிறிது நேரம் காத்திருந்து பார்த்து விட்டு யாஷிகா வெற்றியின் கைபேசிக்கு அழைக்க, வெற்றிக்கும் ஆதிரைக்கும் அது கேட்கவே இல்லை. 

நள்ளிரவு வரை நீடித்த கூடல்… ஒருவழியாக முடிவுக்கு வர… அசதியில் இருவருக்கும் அப்படியொரு உறக்கம். அதிலும் வெற்றி சில நாட்களாகச் சரியாக உறங்காமல் இருந்தவன், இன்றுதான் அசந்து உறங்கினான். 

மகள் விழித்து விடுவாள் என்று ஆதிரை அலாரத்தைச் சத்தம் குறைவாகத்தான் வைத்திருப்பாள். அவள் வழக்கமாக எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிடும் என்பதால்… சில நேரம் அலாரம் அடிப்பதற்குள் எழுந்து அவளே அனைத்தும் வைத்து விடுவாள். 

இன்றும் அது போல முன்பே எழுந்தவள், மஞ்சத்தில் என்று சொல்வதை விட, கணவனின் நெஞ்சிலிருந்து எழுந்துகொள்ள மனம் இல்லாமல், அவன் மீது படுத்து கிடக்க, ஜோதி வந்து கதவை தட்ட ஆரம்பித்து விட்டார். 

அவர் எப்போதுமே இப்படித்தான். ஆதிரை எழுந்துகொள்ள ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும், உடனே வந்து அவர்கள் அறைக் கதவை தட்டி விடுவார். சில நேரம் ஞாயிற்றுக் கிழமை கூட உறங்க விடாமல் எழுப்பி விடுவார். பிறகே ஓ ஞாயிற்றுக்கிழமையா மறந்திட்டேன் என்பார். 

கணவனும் மகளும் எழுந்துகொள்வார்கள் என்ற பதட்டத்தில், ஆதிரை வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள். ஆனால் அதற்குள் அஷ்வினி எழுந்து கொண்டாள். ஆதிரைக்குக் கோபமாக வந்தது. 

“உங்களை நான் எழுப்பி விடச் சொன்னேனா?” என ஜோதியிடம் கடுப்பாகக் கேட்டாள். 

“அருண் ஸ்கூலுக்குப் போகணுமே லேட் ஆச்சேன்னு எழுப்பினேன்.” 

“நான் அலாரம் வச்சிட்டு தான் படுத்திருக்கேன். இப்ப அஷ்வினியை வேற எழுப்பி விட்டுடீங்க. நான் அருணை கிளப்புவேனா இல்லை இவளை பார்ப்பேனா… சொன்னா புரிஞ்சிகிறதே கிடையாது.” என அவர் காது படவே சொன்னவள், மகள் இன்னும் முழுதாக விழிக்கவில்லை என்பதால், அவள் எழுவதற்குள் குளித்து விட்டு வந்து விடலாம் என நைட்டியை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள். 

அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தவள், சிணுங்கிக்கொண்டிருந்த மகளைத் தூக்கி பசியாற்றிவிட்டு, மகள் ஈரம் செய்த உடைகளை மாற்றி வேறு உடை அணிவித்து, கணவனின் அருகில் கட்டிலில் போட்டுவிட்டு, அருணை பள்ளிக்கு கிளப்ப சென்றாள். வெற்றிக்கு எதுவும் கேட்கவில்லை போல… அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். 

அருணுக்கு முழு நேரம் பள்ளி என்பதால்… மதிய உணவும் வைக்க வேண்டும். நேரமில்லாத காரணத்தால் காலைக்குப் பூரியே செய்து, மதியத்திற்கும் அதே வைத்தாள். அருணுக்கு பூரி என்றால் பிடிக்கும். 

மகனை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வந்தவளுக்குப் பசிக்க, பிறகே தான் பல் கூட விளக்காமல் குளித்தது நினைவுக்கு வந்தது. குளிக்காமல் மகளைத் தூக்க விருப்பம் இல்லை. அதனால் வாய் மட்டும் கொப்பளித்துவிட்டு, அவசரமாகக் குளித்து விட்டு வந்திருந்தாள். 

இன்னும் குளித்து விட்டுத் தலையில் சுற்றிய துண்டு அப்படியே இருக்க, ப்ரஷை வைத்து பல் விளக்கிக் கொண்டு இருந்தாள். குளித்த பிறகு பல் விளக்கும் மருமகளை ஜோதி அதிசயமாகப் பார்த்து விட்டு கோவிலுக்குச் சென்றார். 

எதாவது கேட்டால் திட்டுவாளோ எனப் பயம். பிறகு திட்டாமல் என்ன செய்வாள். இவர் தானே காலையில் கதவை தட்டி அஷ்வினியை எழுப்பி விட்டார். அதுதான் பல் தேய்க்க கூட நேரமில்லாமல் ஓடி வந்தாள். 

நண்பன் நேற்று மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு என்ன பாடு படுகிறானோ என நினைத்த விக்ரம் காலையிலேயே எழுந்து கிளம்பி விழுந்தடித்து இங்கே வந்து நின்றான். கதவை திறந்து விட்ட ஆதிரை, அவனை உட்கார சொல்லிவிட்டு புடவை மாற்ற அறைக்குள் சென்று விட… குளித்து ஜம்மென்று வந்தமர்ந்த வெற்றியை விக்ரம் அதிசயமாகப் பார்த்தான். முகத்தில் கூடத் தனிப் பொலிவு. 

“என்ன டா இப்படிப் பார்க்கிற?” 

“இல்லை கோவை சரளாகிட்ட அடிவாங்கின வடிவேலு மாதிரி இருப்பேன்னு பார்த்தா, புது மாப்பிள்ளை மாதிரி இருக்க… என்ன இன்னும் ஆதிரைகிட்ட சொல்லலையா?” 

“அவளுக்கு எல்லாம் தெரியும். நேத்து அந்த யாஷிகா போன் பண்ணா டா… நான் அவளையே பேச சொல்லிட்டேன்.” 

“அப்புறம் எப்படி டா இப்படி இருக்கா?” விக்ரம் நம்பாமல் கேட்க, 

“அவ என்னை நம்பறா டா… நான் எதுவும் தப்புச் செஞ்சிருக்க மாட்டேன்னு சொன்னா.” வெற்றி பெருமையாகச் சொல்ல, 

“டேய் ! இதெல்லாம் நியாயமே இல்லை. அன்னைக்கு நான் மட்டும் அந்த ஆனந்தியோட கூட்டுச் சேர்ந்தது போல… என்னை அந்த வெளு வெளுத்தா… உன்னை மட்டும் ஒன்னும் சொல்லலையா?” 

“ஏன் டா இந்தக் கொலைவெறி உனக்கு. அவளே பாவம் பார்த்து விட்டாலும், நீ விட மாட்ட போலிருக்கே.” 

இவர்கள் பேசுவது அறைக்குள் இருந்த ஆதிரைக்கு நன்றாகக் கேட்க, பிறகே நேற்று நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது. கட்டிலுக்கு அடியில் இருந்த வெற்றியின் கைபேசியை எடுத்து பார்க்க, அந்த வீடியோ வந்திருந்தது. 

அந்த வீடியோவில் பெரிதாக எதுவும் இல்லை. வெற்றியும் யஷிகாவும் அறையின் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு ஏற்கனவே இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்பது போலத்தான் தோன்றும். வெற்றி யாஷிகாவுடன் சிரித்தபடி தான் பேசிக் கொண்டு இருந்தான். அதில் ஆடியோ இல்லை. அதனால் என்ன பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. 

இரவு நேரம் அதுவும் ஹோட்டல் அறையின் முன்பு. அந்தப் பக்கம் வேறு ஆட்களின் நடமாட்டமும் இல்லை. இருவரும் மட்டும் தனியே இருந்தனர். அதைத்தான் யாஷிகா தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவன் என்னைத் தவறாக நோக்கத்துடன் அணுகினான் என்று சொன்னால்… அதை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். 

இன்றைய காலகட்டத்தில் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கிறது. சோசியல் மீடியாவில் வரும் அனைத்தும் உண்மையா பொய்யா எனத் தெரியாமலே அதை மற்றவர்களுக்குக் கர்ம சிரத்தையாக அனுப்பி விடுகின்றனர். அதனால் பாதிக்கபடுபவர்கள் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை. 

ஆதிரை கைபேசியோடு ஹாலுக்கு வர, வெற்றி அவளிடம் இருந்து வாங்கிப் பார்க்க, விக்ரமும் அவனோடு சேர்ந்து பார்த்தான். 

“இதுல ஒண்ணுமே இல்லையே…” என விக்ரம் சொல்ல, 

“தெரியாத பெண்ணோட ஏன் சிரிச்சு பேசினாருன்னு கேள்வி வரும். அதோட என்னைத் தப்பான எண்ணத்தில அனுகினதா யாஷிகா சொன்னா, அதை மத்தவங்க நம்பவும் வாய்ப்பு இருக்கு.” 

“மீ டூ கேள்வி பட்டது இல்லை. அதனால சில கருப்பு ஆடுகள் வெளிவந்தாலும், இது போலத் தங்கள் பழியைத் தீர்த்துக்கவும், சில பெண்கள் தவறா பயன்படுத்துறாங்க.” ஆதிரை சொல்ல, 

“இதையெல்லாம் யாரும் நம்புவாங்களா என்ன?” விக்ரம் கேட்க, 

“என்னைப் பிடிச்சவன், இதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு சொல்வான். ஆனா என்னைப் பிடிக்காதவன், இந்த ஆளு செஞ்சிருப்பான்னு தான் சொல்வான். அதோட அதை இன்னும் நாலு பேருக்கு அனுப்புவான்.” 

“எப்படியும் பேர் கெட்டுப் போகும்.” என்றான் வெற்றி. 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே ஜோதி வந்துவிட, “எனக்கு அன்னைக்கு என்ன நடந்திச்சுன்னு முழுசா தெரியணும். நாம பிறகு பேசுவோம.” எனச் சொல்லிவிட்டு ஆதிரை அறைக்குள் சென்று விட, விக்ரமும் விடைபெற்றுச் சென்றான். 

விக்ரம் சென்றதும் வெற்றியும் அறைக்குச் செல்ல, இவன் என்ன தோட்டத்துக்குப் போகாம, இவ்வளவு நேரம் வீட்ல இருக்கான் என ஜோதி நினைத்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. 

அறைக்குள் வந்து கதவை தாழிட்டவன், அதன் மீதே சாய்ந்து நின்று, மனைவியைத் தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டே பேசினான். 

“என் மேல கோபமா ஆதி.” 

“எதுக்குக் கோபம்? நீங்க வேணும்னு எதுவும் பண்ணலை வெற்றி.” 

“விக்ரம் சொல்றது போல, நீ என்னைத் திட்டவாவது செஞ்சிடு. என் மனசும் கொஞ்சம் ஆறும்.” 

“உங்க பிரண்ட் பொண்டாட்டியை சரி பண்ண ஆனந்தியை உபயோகிச்சார். அவருக்கு ஆனந்தியோட எண்ணம் தெரியாதா என்ன? நீங்க அப்படி எதுவும் பண்ணலை வெற்றி.” 

“நீ மட்டும் என்னை நம்பலைனா என்னோட நிலைமை என்ன ஆகும்?” 

“எனக்கு உங்க குணம் அத்துப்படி. உங்க மனசு எனக்கு நல்லாவே தெரியும். இருக்கிறதை வச்சுத் திருப்திபடுறது தான் உங்க குணம். எப்பவும் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதைப் பிடிக்க ஆசைப்படமாட்டீங்க. எனக்குதான் அது இதுன்னு வாங்கித் தர நினைப்பீங்களே தவிர, உங்களுக்குன்னு நீங்க எதுவும் வாங்கிகிட்டதே இல்லை.” 

“என் மேலையோ நம்ம உறவிலோ உங்களுக்குக் குறை எதுவும் இல்லை. எனக்கு அது நல்லாவே தெரியும். என் பக்கத்தில எவ்வளவு அழகான பெண் நின்னாலும், நீங்க என்னைத்தான் பார்ப்பீங்க. அப்படியிருக்கும் போது, யாரோ வந்து உன் புருஷன் இப்படின்னு சொன்னா நான் நம்பிடுவேனா.” 

“நான் என்ன சொல்றது ஆதிரை, நீ இவ்வளவு என்னைப் புரிஞ்சு வச்சிருப்பேன்னு நான் நிஜமா எதிர்ப்பர்க்களை. நீ சொல்றது உண்மைதான். நீ என் வாழ்க்கையில இருக்கிறது அப்படியொரு சந்தோஷமும், நிறைவும் எனக்குத் தந்திருக்கு.” 

“கல்யாணத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கேன். இந்தப் பெண்ணால நம்ம வீட்ல வந்து இருக்க முடியமா… அதோட சென்னையில பிறந்து வளர்ந்த பெண், நாம விவசாயம் தான் பார்க்கிறோம், நமக்குள்ள ஒத்து வருமான்னு நான் நிறைய யோசிச்சிருக்கேன். ஆனா நம்ம கல்யாணத்திற்குப் பிறகு அப்படி ஒருநாளும் எனக்குத் தோணினதே இல்லை.” 

“எனக்கு நீதான் உனக்கு நான்தான்.”  

“ம்ம்…” 

இருவரும் பேசிக்கொண்டிருந்த போதே மகள் சிணுங்க, “அவளுக்குப் பசிக்கும், குளிபாட்டிட்டு சாப்பாடு கொடுக்கணும்.” ஆதிரை சொல்ல, வெற்றி அவளை அவசரமாக ஒருமுறை இறுக அனைத்துப் பின் விடுவித்தான். 

விக்ரம் காலை உணவு உண்ண வீட்டிற்குச் சென்றான். ஆதிரைக்கு என்ன ஒரு நம்பிக்கை புருஷன் மேல. அந்த வீடியோவை பார்த்தும், உனக்கு என்ன   அந்தப் பெண்ணோட தனியா பேச்சுன்னு கேட்கலையே என இன்னும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அது போலத் தன் மனைவி தன்னைப் பற்றி எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் எனத் தெரிந்துகொள்ள எண்ணி, தோசையை உண்டபடி, “வனி, உனக்கு யாராவது போன் பண்ணி என்னைப் பத்தி தப்பா சொன்னா என்ன டி பண்ணுவ?” எனக் கேட்டான். 

“தப்பாண்ணா?” வனிதாவுக்குப் புரியவில்லை. 

“ம்ம்… உன் புருஷன் சரியில்லை…இது மாதிரி எதாவது சொன்னா?” 

விக்ரம் சொல்லிக் கூட முடிக்கவில்லை. “அடப்பாவி மனுஷா, எதாவது செட்டப் பண்ணிட்டியா என்ன? நீ பண்ணாலும் பண்ணுவ. ஆதிரை அக்கா இதுக்குதான் நேத்து மில்லுக்கு வந்தாங்களா? கண்டிப்பா உன்னைத் திட்டத்தான் வந்திருப்பாங்க.” என வனிதா பொரிய தொடங்க, 

“இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பதா…” எனப் பயந்து போன விக்ரம், 

“எருமை, ஒரு பேச்சுக்கு கேட்டா… உடனே எப்படிப் பேசுறா பாரு.” என்றான். 

“இதெல்லாமா பேச்சுக்கு கேட்பாங்க. இருங்க ஆதிரை அக்காகிட்ட கேட்கிறேனா இல்லையா பாருங்க.” 

“ஐயோ ! என்னைச் சும்மாவே அவ வில்லனைப் போலப் பார்ப்பா…. இதுல நீ வேற எதாவது சொல்லித் தொலையாத.” 

விக்ரம் நீ நல்லவனா இருந்தாலும் இந்த உலகம் நம்பாது போல டா… அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும் போல… என நினைத்துக் கொண்டான். 

நேற்று வேறு ஆதிரை மில்லுக்குச் சென்றிருக்கிறாள். வனிதாவுக்கு என்னவென்று தெரியாமல் தலையே வெடிப்பது போல இருந்தது. நேற்று இரவு எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என நினைத்தவள், “ஆதிரை அக்கா மில்லுக்கு வந்தாங்க போல… நான் இன்னைக்கு அக்கா வீட்டுக்கு போயிருந்தேன்.” என வனிதா சொன்னதற்கு, 

“ஆமாம் வெற்றி இருப்பான்னு வந்தா.. வெற்றி இல்லைனதும் போயிட்டா..” என விக்ரம் சமாளித்து இருந்தான். வெற்றியைப் பார்க்க எதற்கு மில்லுக்குச் செல்ல வேண்டும். பொய் சொல்கிறான் என வனிதா நினைத்தாள். இப்போது விக்ரம் வேறு வாயை விட்டு மாட்டிக் கொண்டான்.

விக்ரம் சென்றதும் ஆதிரையை அழைத்த வனிதா, “அக்கா, நீங்க உண்மையைச் சொல்லுங்க. இவர் திரும்ப எதுவும் கிறுக்குத்தனம் பண்றாரா… நேத்து நீங்க மில்லுக்கு இவரைத் திட்டத்தான் வந்தீங்களா…” எனக் கேட்க, 


ஆதிரைக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. “என்ன நடந்துச்சு சொல்லு.” என்றதும், முன்தினம் அவள் வீட்டுக்கு வந்தது. இன்று விக்ரம் பேசியது எல்லாவற்றையும் சொல்ல, கேட்ட ஆதிரைக்கு விக்ரமை நினைத்து ஐயோ என்றானது. 

தங்கள் வீட்டுப் பிரச்சனை அவனை வேறு பாதிக்கிறதோ என அச்சபட்டவள், “வெற்றி கொஞ்சம் டென்ஷனாவே இருந்தார். உடம்பு எதுவும் சரியில்லையா… இல்லை மில்லுல எதுவும் பிரச்சனையான்னு கேட்கப் போனேன். வேற ஒன்னும் இல்லை. நீ வந்தது எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா, நானே போன் பண்ணி சொல்லி இருப்பேன்.” என்றாள் விளக்கமாகவே. 

“ஓ.. சரிக்கா, நான் இவரு வேற இப்படிக் கேட்டதும் குழம்பிட்டேன்.” 

“அதுக்காக அவர்கிட்ட அப்படியா பேசுவ… தப்பு பண்றவர் தான் உன்கிட்ட இப்படிக் கேட்பாறான்னு யோசிக்க மாட்டியா.” 

“இப்ப என்னக்கா பண்றது?” 

“எல்லாம் என்னையே கேளு. என்கிட்டே பேசின மாதிரி காட்டிக்காத.” எனச் சொல்லிவிட்டு ஆதிரை வைக்க, வனிதா விக்ரமை அழைத்து, “என்னங்க நான் தெரியாம அப்படிச் சொல்லிட்டேன். நீங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்றாள். 

“என்ன ஆதிரைகிட்ட பேசினியா?” விக்ரம் சரியாகக் கேட்க, 

“இல்லையே… நானாத்தான் சொல்றேன்.” வனிதா சமாளிக்க, 

“இவ்வளவு நேரம் ரூம் போட்டு யோசிச்சியா?” என்றவன், “சரி வச்சிடு.” என வைத்து விட்டான். 

அவன் உடனே வைத்ததும் வனிதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தங்கள் இருவருக்குள்ளும் புரிதல் என்பது இல்லவேயில்லை எனப் புரிந்தது. 
கணவனை எப்படிப் புரிந்து கொள்வது என யோசிக்க ஆரம்பித்தாள். 

புரிதல் என்பது பார்த்துத் தெரிந்துகொள்வது அல்ல.. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசினாலே… அவர்களுக்குள் நல்ல புரிதல் வரும். 
விக்ரம் மனைவியோடு அப்படி மனம் விட்டு பேசுபவன் அல்ல… கொஞ்சம் அழுத்தமாகவே இருப்பான். ஆனால் வெற்றி அப்படியில்லை… மனைவியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். அதனால் தான் கணவன் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்பது ஆதிரைக்கு அத்துப்படி. வெற்றியே தன் மீது நம்பிக்கை இழந்த போதும், ஆதிரை அவன் மீது வைத்த நம்பிக்கை இழக்காததற்குக் காரணமும் அதுதான்.

Advertisement