Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 16 

வெற்றி அன்றிரவும் தாமதமாக வந்தவன், பேருக்கு உண்டு விட்டு, அறைக்குள் சென்று, விளக்கை போடாமலே… அலமாரியில் இருந்து மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்று மாற்றிவிட்டு வந்து, கட்டிலுக்கு அடியில் இருந்து மெத்தையை இழுத்து போட்டு படுத்துக் கொண்டான். 


அவன் படுத்த அடுத்த நொடி, அறைக்குள் வெளிச்சம் பரவ, அவனைப் பார்த்தபடி ஆதிரை நின்றிருந்தாள். 

“நீ தூங்கலையா?” என்றபடி வெற்றி எழுந்து உட்கார, அவனைப் பார்த்தபடி ஆதிரை எதிரில் அமர்ந்தாள். 

“இப்ப உங்களுக்கு என்னங்க பிரச்சனை?” 

“ஒன்னும் இல்லை ஏன் கேட்கிற?” 

“நீங்க என் முகத்தைப் பார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா? என்கிட்ட கூட வர்றது இல்லை. என் மேல எதாவது கோபமா? நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?” 

“ஏன் டி இப்படிப் பேசுற?” 

“நீங்கதான் சொல்லணும் ஏன் இப்படி இருக்கீங்க?” 

“நான் விரதம் இருக்கேன்.” 

“என்ன விரதம்.” 

“வர்ற பௌர்ணமிக்கு நான் கிரிவலம் போகப் போறேன். அதுக்குத்தான்.” 

“என்ன இப்ப திடிர்ன்னு?” 

“ரெண்டாவது குழந்தை நல்லபடியா பிறந்ததுக்கு.” 

“என்கிட்டே ஏன் முன்னாடியே சொல்லலை?” 

“நானே இப்ப கொஞ்ச நாள் முன்னாடிதான் முடிவு பண்ணேன்.” 

பௌர்ணமிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்க.. சரி பார்ப்போம் என ஆதிரையும் விட்டு விட்டாள். ஆனால் வெற்றி எப்போதும் எதோ யோசனையிலேயே இருந்தான். சரியாக உண்பது இல்லை உறங்குவது இல்லை. 

அவனை இழுத்து வைத்து பேசினாலும், அவன் பேச்சிலோ புன்னகையிலோ உயிர்ப்பே இல்லை. தனக்காக நடிக்கிறான் என நன்றாகவே புரிந்தது. 

பௌர்ணமி இரவு கிரிவலம் கிளம்பி சென்றவன், அதிகாலை சாமி தரிசனம் முடிந்தே வீடு திரும்பினான். கிரிவலம் சென்று வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். 

கணவன் இப்படியிருக்கும் போது ஆதிரையால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? ஏன்? எதனால் என்பதிலேயே உழன்டு மனஉளைச்சலுக்கு ஆளானாள். 

கணவன் எதுவும் சொல்வது போலத் தெரியவில்லை என்றதும், அடுத்து ஆதிரையின் நினைவுக்கு வந்தவன் விக்ரம்தான். அவனுக்குக் கண்டிப்பாகத் தெரியும் என அவளுக்குத் தெரியும். மனைவியிடம் கூடச் சில விஷயங்கள் சொல்ல முடியாது. ஆனால் நண்பனிடம் அப்படிக் கிடையாது. 

ஆதிரை விக்ரமைப் பார்க்க மில்லுக்குச் சென்றாள். மாலையில் மகளுக்கு ராகிக் காஞ்சி கொடுத்து உறங்க வைத்தவள், ஜோதியிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மகனை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு சென்றாள். 

அன்று பார்த்து வனிதா வீட்டிற்கு வந்துவிட, வெற்றியும் மாலை டீ குடிக்க வீட்டுக்கு வந்தவன், ஆதிரை வெளியே சென்றிருக்கிறாள் என்றதும், அவளது கைபேசிக்கு அழைத்தான். 

“நீ எங்க இருக்க?” 

“மில்லுக்கு வந்தேன்.” 

“ஓ…” மனைவி எதற்குச் சென்றிருக்கிறாள் என வெற்றிக்கு தெரியும். அவள் விக்ரமிடம் என்ன கேட்பாள் என்றும் தெரியும். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.” 

“சரி பேசிட்டு வா.” என வைத்து விட்டான். 

வனிதா முன்பு தான் வெற்றி ஆதிரையிடம் பேசினான். அதற்கு முன்பே ஆதிரை மில்லில் இருப்பது வனிதாவிற்குத் தெரியும். விக்ரமின் டிரைவர் அழைத்துச் சொல்லி இருந்தான். 

“அவ வந்திடுவா… நீங்க வனிதாவுக்குக் குடிக்க எதாவது கொடுங்க.” என ஜோதியிடம் சொன்னவன், மகளைப் பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டான். 

வெற்றியைப் பார்த்து வனிதாவுக்கு ஆச்சர்யமே… மனைவியின் மேல் அவனுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையோ அதே அளவு புரிதலும் உண்டு எனப் புரிந்தது. 

கணவனை வேவு பார்க்கும் வேலையை வனிதா விட்டிருந்தாலும், டிரைவர் கணேசன் அவனாகவே அழைத்து ஆதிரை வந்திருப்பதாகச் சொல்ல, “அவங்க வெற்றி அண்ணாவை பார்க்க வந்திருப்பாங்க.” எனச் சமாளித்து வைத்து விட்டாலும், வெற்றியை பார்க்க மில்லுக்குச் செல்ல வேண்டியது இல்லை என வனிதாவிற்குத் தெரியும். விக்ரமை பார்க்கத்தான் சென்றிருக்கிறாள் எனப் புரிந்தது. ஆனால் தப்பாகவும் நினைக்வில்லை. ஏதோ முக்கியமானதாக இருக்கும் என்றுதான் நினைத்தாள். 

அருணை மாணிக்கத்திடம் விட்டுப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஆதிரை விக்ரமை பார்க்க அலுவல் அறைக்குச் சென்றாள். 

“ஹே… ஆதி வா… என்ன திடிர்ன்னு இந்தப் பக்கம்.” 

“உங்களுக்குத் தெரியாது?” 

“என்ன வந்ததும் புதிர் போடுற? நீ எதைப் பத்தி சொல்றன்னு எனக்கு எப்படித் தெரியும்.” என விக்ரம் கவனமாகப் பதில் சொல்ல, 

“உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு என்னை நம்பச் சொல்றீங்களா?” ஆதரை கையைக் கட்டிக் கொண்டு விக்ரமை நேராகப் பார்த்துக் கேட்க, 

“நீ இப்படிப் பேசினா உன் புருஷனுக்கு வேணா புரியும். ஆனா எனக்குப் புரியாது. உனக்கு என்ன கேட்கணுமோ அதை நேரா கேளு.” என்றான். 

“அதுக்குதானே வந்திருக்கேன். என்ன ஆச்சு? உங்க ப்ரண்ட் ஏன் இப்படி இருக்கார்?” 

“அவனையே கேட்க வேண்டியது தான.” 

“ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறார். ஆனா மனசுக்குள்ள எதையோ வச்சு மருகிறார். நாளுக்கு நாள் மெலிஞ்சிட்டே போறார்.” 

“அப்படி என்னதான் பிரச்சனை அவருக்கு. இல்லைனா உடம்பு எதுவும் சரியில்லையா…சொன்னா நான் பயப்படுவேன்னு சொல்லாம இருக்காரா?” பயத்தில் ஆதிரையின் உடல் நடுங்க….அவள் நிற்க முடியாமல் தடுமாற, 
“ஹே…நீ முதல்ல உட்காரு.” என்றவன், “அப்படியெல்லாம் எல்லாம் உன் புருஷனுக்கு எதுவும் இல்லை. அவன் நல்லாத்தான் இருக்கான்.” என்றவன், தண்ணீரை அவள் பக்கம் தள்ளி வைக்க, இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஆதிரை நீரை பருகினாள். 

“நீங்க சொல்றது உண்மை தான. என்னனு தெரியாம நான் தினமும் செத்து செத்து பிழைச்சிட்டு இருக்கேன்.” 

ஆதிரை இப்படிக் கலங்கிப் போய் விக்ரம் இப்போதுதான் பார்கிறான். அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதுவரை தன்னோடு பேசாமல் இருந்தவள், இன்று வந்து பேசுவது அவள் கணவனுக்காக அல்லவா… 

“அவனுக்கு ஒன்னும் இல்லை ஆதிரை.” 

“ஆனா என்ன பிரச்சனைன்னு நீங்களும் சொல்ல மாட்டீங்க.” 

“என்ன பிரச்சனை? அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நான் அவன்கிட்ட பேசுறேன். நீ கிளம்பு.” என்றான் விக்ரம். 

ஆதிரை வீட்டிற்கு வந்ததும், ஏன் போன? எதற்குப் போன? என எந்தக் கேள்வியும் கேட்காமல் வெற்றி கிளம்பி வெளியே சென்றான். 

ஆதிரை வருவதற்கு முன்பு வனிதா கிளம்பி சென்றிருந்தாள். ஜோதியும் வனிதா வந்ததை ஆதிரையிடம் சொல்லவில்லை. அதனால் ஆதிரைக்கு வனிதா வந்ததே தெரியாது. 

மில்லுக்கு வந்த வெற்றியை விக்ரம் நன்றாகப் பிடிபிடியென எனப் பிடித்துக் கொண்டான். 

“நீ ஏன் டா இப்படி இருக்க? ஆதிரைக்குச் சந்தேகம் வந்திடுச்சு. இனி அவ விடமாட்டாள்.” 

“அப்ப அவகிட்ட சொல்ல சொல்றியா?” 

“சொல்லுன்னு சொல்லவும் பயமா இருக்கு. அந்த ஆனந்தி விஷ்யத்துக்கே உன் பொண்டாட்டி என்னை என்ன கிழி கிழிச்சான்னு பார்த்தோமே. இப்ப உன் விஷயம் தெரிஞ்சது. அவ என்ன முடிவு எடுப்பான்னே தெரியலையே?” 

“அது தான் டா எனக்குச் சொல்லவும் பயமா இருக்கு. எனக்கு எவனைப் பத்தியும் கவலை இல்லை. ஆனா ஆதி என்னைத் தப்பா நினைச்சா என்னால தாங்க முடியாது டா…” 

“எதுக்கு டா உனக்கு இந்த டென்ஷன். பணத்தைக் கொடுத்து தலைமுழுகிட்டு பேசாம இருக்கலாம். நீதான் சொன்னா கேட்க மாட்டேங்கிற.” 

“பணம் கொடுத்தா நான் தப்பு செஞ்சேன்னு ஆகிடும். நான் பணம் கொடுக்கக் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். அதோட பணம் வாங்கிட்டு திரும்ப மிரட்டினா….” 

“உனக்குப் புரியலை வெற்றி, நீ ஆதிரையைத் தான் கொன்னுட்டு இருக்க… அவ உனக்கு உடம்புக்கு ஏதோன்னு நினைச்சு எப்படி நடுங்கிப் போனா தெரியுமா… இப்பவும் அந்தப் பெண்ணுக்கு உன் மேல சந்தேகம் இல்லை. உனக்கு உடம்பு சரியில்லையோன்னு தான் பயப்படுகிறாள்.” 

“எனக்குத் தெரியும் டா… ஆனா எனக்கே ஒன்னும் தெரியாத போது, நான் அவகிட்ட என்ன சொல்லி விளக்குவேன்.” 

“இப்ப ரெண்டுல ஒன்னு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துல நீ இருக்க வெற்றி. ஒன்னு ஆதிரை கிட்ட எல்லாத்தையும் சொல்லிடு. இல்லைனா அங்க பணம் கொடுத்துச் செட்டில் பண்ணு.” 

“நான் ஆதிரைகிட்டயே பேசிக்கிறேன். நான் அவகிட்ட மறைக்கனும்னு நினைக்கலை…இனி என்ன முடிவோ அதை ஆதிரையே எடுக்கட்டும்.” 

“முதல்ல அதைச் செய்.” 

வெற்றி அன்று ஆதிரையிடம் எல்லாவற்றையும் சொல்லி விடும் முடிவில் தான் வீட்டிற்கு வந்தான். ஆனால் பிறகு அவள் என்ன முடிவு எடுப்பாளோ என்ற பயமும் இருக்க, யோசனையிலேயே இருந்தான். 

எதுவாக இருந்தாலும் அவன் வாயில் இருந்தே வரட்டும் என நினைத்த ஆதிரை மெளனமாக இருந்தாள். வெற்றி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருக்க, ஆதிரை துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டு இருந்தாள். 

அப்போது வெற்றியின் கைபேசிக்கு அழைப்பு வர, யாரென்று பார்த்தவனின் முகம் மாறுவதை ஆதிரையும் கவனித்தாள். வெற்றி அந்த அழைப்பை ஏற்கவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வர, வெற்றி கைப்பேசியை எடுத்து ஆதிரையிடம் கொடுத்து விட்டான். 

அவன் ஆதிரையிடம் எதுவும் சொல்லவில்லை. அவளே தெரிந்துகொள்ளட்டும் என நினைத்தோ என்னவோ கைபேசியை அவளிடம் கொடுத்தான். ஆதிரைக்கும் அது புரிந்தது. 

“ஹலோ…” என ஆதிரை சொல்ல… அந்தப் பக்கம் அழைத்தவர், ஆதிரை பேசுவாள் என எதிர்பார்க்கவில்லை போல, அதனால் உடனே பதில் வரவில்லை. 

“ஹலோ யாரு?” ஆதிரை திரும்பக் கேட்க, 

“வெற்றி இருக்காங்களா அவங்ககிட்ட பேசணும்.” என்றது பெண் குரல். 

“நீங்க யாரு?” 

“இல்லை வெற்றிகிட்ட தான் பேசணும்.” 

“நான் அவர் பொண்டாட்டிதான் என்கிட்டையே சொல்லுங்க.” என்றாள் ஆதிரை அதிகாரமாக. 

“வெற்றி இல்லையா?” 

“அவர் இங்கத்தான் இருக்கார். நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்ல.” 

“யாஷிகான்னு சொல்லுங்க அவருக்குத் தெரியும்.” 

“எந்த யாஷிகா? எங்க சொந்தக்காரங்கள்ள யாரும் யாஷிகா இல்லையே…” 

“நான் உங்க சொந்தக்காரி இல்லை. வெற்றிக்கு என்னைத் தெரியும். அவர்கிட்ட கொடுங்க.” 

“அவர்கிட்ட கொடுக்க முடியாது என்ன பண்ணுவீங்க? முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க.” 

இதுவரை தயக்கமாகப் பேசிக்கொண்டு இருந்த யாஷிகா, “என்னை யாருன்னு தெரியாம இருக்கிறது உனக்குதான் நல்லது ஆதிரை. என்னைப் பத்தி தெரிஞ்சா உன் நிம்மதி போயிடும்.” எனக் காட்டமாகச் சொல்ல, 

“அதை நான் முடிவு பண்ணிக்கிறேன். முதல்ல நீங்க யாரு சொல்லுங்க.” என ஆதிரை அசராமல் திருப்பிக் கொடுக்க, 

இவளை நாம் கலங்கடிக்க நினைத்தால்… இவள் நம்மைக் கலங்கடிக்கிறாளே என யாஷிகாவுக்கு எரிச்சல்தான். 

“உன் புருஷன் ரொம்ப உத்தமன்னு நினைச்சிட்டு இருக்கியா. அவன் பாண்டிச்சேரியில் என்ன பண்ணான் தெரியுமா?” என்ற யாஷிகா, 

“என்ன பண்ணார்?” என ஆதிரை கேட்பாள் என எதிர்பார்க்க, 

“எனக்கு அவரை நல்லாத் தெரியும். அவர் தப்பா எதுவும் பண்ணி இருக்க மாட்டார்.” என்ற ஆதிரை, “அதோட என் புருஷனை பத்தி எனக்குத் தெரியும். நீ ஒன்னும் அவருக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டாம்.” எனவும் சேர்த்து சொல்ல, யாஷிகாவின் முகம் கருக்க, வெற்றியின் முகம் தெளிந்தது. 

“நான் ஒரு வீடியோ அனுப்புறேன் பாரு. உனக்கே நான் யாருன்னு தெரியும்.” எனச் சொல்லிவிட்டு அவள் வைக்க, ஆதிரை வெற்றியிடம் அதைச் சொன்னாள். 

“யாரு வெற்றி இந்தப் பொண்ணு?” 

“எனக்கே தெரியலை ஆதி. அது தான் பிரச்சனை. நான் பாண்டிச்சேரி போயிருந்தேன் உனக்கு நியாபகம் இருக்கா? அன்னைக்கு நான் குடிச்சிருந்தேன் தான். ஆனா நிறையக் குடிச்சேனா தெரியலை… எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை. இந்தப் பெண்ணை நான் பார்த்தேனா கூடத் தெரியலை…” 

“மறுநாள் காலை நான் லேட்டாத்தான் எழுந்தேன். பிரண்ட்ஸ் எல்லாம் ஊர் சுத்தி பார்க்க கிளம்பினாங்க. எனக்கு ஒரே தலைவலி நான் வரலைன்னு சொல்லிட்டேன். விக்ரமும் போகலை… எல்லோரும் போனதுக்கு அப்புறம் நாங்க சாப்பிட போன போது, இந்தப் பெண் வந்து என்கிட்டே பேசனும்னு சொன்னா?” 

“எனக்கு யாருன்னு தெரியலை… யாருன்னு கேட்டா?” 

“ஓ… நேத்து என்னைத் தேவதைன்னு சொன்னீங்க. இப்ப போதை தெளிஞ்சதும் யாருன்னு கேட்கிறீங்க. நேத்து மட்டும் உங்க ப்ரண்ட் வரலைனா… நமக்குள்ள…” என்றவன், மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்த, அவன் சொல்ல வந்தது ஆதிரைக்குப் புரிந்து விட, அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. 

“ஆதி, இதெல்லாம் கேட்க உனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும்.” 


“உன்னைப் போலத்தான் எனக்கும், நான் கோபத்தில அவளை அடிச்சிட்டேன். விக்ரமும் அந்தப் பெண்ணை நல்லா திட்டி விட்டுட்டான். அன்னைக்கு அதோட அவளும் போயிட்டா…” 

“யாருன்னு தெரியாதவன்கிட்ட எப்படி இப்படிச் சொல்றான்னு நான் சொல்லும் போது, நான் நேத்து நைட் உன்னைத் தேடி வந்த போது, நீ ரூமுக்கு வெளிய இந்தப் பெண்ணோட பேசிட்டு இருந்தன்னு விக்ரம் சொன்னான். ஆனா எனக்கு அது நியாபகமே இல்லை.” 

“நான் எதுக்கு முன்ன பின்ன தெரியாத பெண்ணோட நின்னு பேசினேன்னு எனக்கு ஒன்னும் புரியலை.” 

“பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரெண்டு நாள் எந்தப் பிரச்சனையுமே இல்லை. அப்புறம் போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சா.” 

“நீங்க என்னை ரூமுக்கு கூப்பிட்ட வீடியோ என்கிட்டே இருக்கு. நான் அதை வெளியே விட்ருவேன்னு சொல்லி மிரட்டினா.” 

“நான் அப்படிப் பேசி இருப்பேன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனா அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னும் எனக்கு நியாபகம் இல்லை.” 

“என்ன வேணும்ன்னு விக்ரம் அவளுக்குப் போன் பண்ணி கேட்டதுக்கு, பத்து லட்சம் பணம் வேணும்னு அவன்கிட்ட சொன்னா, ஆனா என்கிட்டே நான் உங்ககிட்ட இருந்து பணத்தை எதிர்பார்க்கலை… நீங்க என்னோட ப்ரண்டா இருந்தாலே போதும்னு சொல்றா.” 

அவள் நட்பு என்ற பெயரில் எதைச் சொல்கிறாள் என ஆதிரைக்குப் புரிந்தது. வெற்றியை வேறொரு பெண்ணோடு அவளால் கற்பனையில் கூட நினைக்க முடியாது. அவள் உடலெல்லாம் தீ பற்றியதைப் போல எரிந்தது. 

“நீ நினைக்கிறது எல்லாம் ஒருநாளும் நடக்காது. நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்கோன்னு நான் சொல்லிட்டேன்.” என்றான் வெற்றி. 

“நீ எத்தனையோ முறை சொல்லி இருக்க, குடியால எத்தனை குடும்பம் கெட்டு போயிருக்குன்னு. எப்பவோ ஒரு தடவை கொஞ்சமா குடிக்கிறோம் அதனால என்ன வந்திட போகுதுன்னு நினைச்சேன். ஆனால் குடியால இன்னைக்கு என் வாழ்க்கையைத் தொலைச்சிட்டேன்.” 

“எங்க அப்பா வெத்தலை பாக்கு கூடப் போட மாட்டார். என்னால அவர் பேருக்குக் கலங்கம். உன் அப்பா எவ்வளவு பெரிய மனுஷன், அவரை இனி நான் எப்படிப் பார்ப்பேன் ஆதி. எனக்காக உன் தம்பியோட சகலைகிட்ட கூட நீ சண்டை போட்ட, இனி அவன் உன்னைக் கேலியாத்தானே பார்ப்பான்.” வெற்றி வேதனையில் புலம்ப, 

“ஏன் அப்படிச் சொல்றீங்க வெற்றி. அதெல்லாம் ஒன்னும் இல்லை.” 

“நான் போதையில என்னை மறந்து அப்படிப் பேசி இருந்தேனா…” வெற்றிக் கலங்கிப் போய்க் கேட்க, 

“உங்களை எனக்கு நல்லாத்தான் தெரியும் வெற்றி. எத்தனையோ தடவை நாம வெளியப் போயிருக்கும் போது, உங்களைக் கடந்து எவ்வளவோ அழகான பெண்கள் போயிருக்காங்க. ஆனா நீங்க ஆர்வமா அவங்களை ஒரு பார்வைக் கூடப் பார்த்தது இல்லை. ஏன் சாதாரணமா கூடப் பார்க்க மாட்டீங்க.” 

“என்னைத் தவிர நீங்க வேற யாரையும் அப்படியொரு எண்ணத்தில் பார்க்க மாட்டீங்க. அது எனக்குத் தெரியும் வெற்றி.” 

“ஒரு நாள் குடியில உங்க குணம் மாறிடாது. அந்தப் பெண் வேணுமுன்னே உங்களைச் சிக்க வைக்கப் பார்க்கிறா. அவ வீடியோ அனுப்பட்டும் பார்க்கலாம்.” 

“உனக்கு என் மேல கோபம் வரலையா?” 

“கோபம் இருக்கு தான். எதுக்குத் தெரியுமா? இப்படி என்கிட்டே விஷயத்தைச் சொல்லாம, நீங்களே உங்களைப் போட்டு வதைச்சு, என்னையும் பாடா படுத்தி இருக்கீங்க.” 

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை. இதே எனக்கு இப்படியொரு பிரச்சனை வந்தா நான் உங்ககிட்ட தான் முதல்ல சொல்வேன்.” 

“நான் உன்கிட்ட என்ன சொல்றது? எனக்குத்தான் எதுவுமே தெரியலையே… பிரண்ட்ஸ் கூட உட்கார்ந்து குடிச்சேன் தான். ஆனா அதுக்குப் பிறகு எதுவுமே நியாபகம் இல்லை.” எனக் கணவன் சொல்வதில் இருந்த நியாயம் ஆதிரைக்குப் புரிந்தது. 

இதற்கு முன்பும் வெற்றிக் குடித்திருக்கிறான். ஆனால் எதையும் மறந்தது இல்லை. இதில் என்னவோ இருக்கிறது என ஆதிரைக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. 

சமையல் அறைக்குச் சென்று கணவனுக்கும் சேர்த்து பால் எடுத்து வந்தவள், அவனைப் பால் குடிக்க வைத்துக் கட்டிலில் படுக்கச் சொன்னாள். 

“நான் எவ்வளவு ஆசையா இருந்தேன். ஆனால் என்னால உன்கிட்ட கூட வர முடியலை. எதாவது தப்பா நடந்திருந்தா… என்னால என்னையே மன்னிக்க முடியாது ஆதி.” 

“அப்படி நான் எதாவது போதையில உளறி இருந்தாலும், நீ என்னை விட்டு போயிட மாட்ட தான…” வெற்றி கேட்க, 

“நீங்க அப்படி உளறினாலும் என்கிட்ட தான் உளருவீங்க.” என்றவளுக்கு, பிறகே வெற்றி அன்று தன்னிடம் கைபேசியில் உளறியது நியாபகம் வந்தது. 

“அன்னைக்கு நைட் நான் உங்களுக்குப் போன் பண்ணேன், நீங்க என்கிட்டே பேசினீங்க. நியாபகம் இருக்கா?” 

“உன்கிட்ட பேசினேனா… என்ன பேசினேன்.” 

“ம்ம்…இப்பவே நீ வேணும் போல இருக்கு சொன்னீங்க. நான் கூட உளறாம வைங்கன்னு திட்டினேன்.” 

“அப்போ நான் நிஜமாவே அன்னைக்கு அப்படிப் பேசி இருக்கேனா… உன்கிட்ட உளறின மாதிரி அந்தப் பொண்ணுகிட்டயும் உளறி இருப்பேனோ.” என வெற்றி இன்னும் குழம்பிப் போனான்.

 

Advertisement