Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 15 

விடியற்காலையில் ஆதிரைக்கு விழிப்பு வர…. பக்கத்தில் மகள் படுத்திருப்பாள் என்ற எண்ணத்தில் அவள் கைகளால் தடவி பார்க்க, மகள் அங்கே இல்லை என்றதும், எழுந்து உட்கார்ந்தவள் நேரத்தைப் பார்க்க விடியற்காலை நாலு மணி. 


இரவு படுத்தது தான் தெரியும். இவ்வளவு நேரமா உறங்கி விட்டோம் என நினைத்தவள், பிறகே கீழே படுத்திருந்த கணவனையும் மகளையும் பார்த்தாள். 

இருவருமே உறங்கவில்லை விழுத்து தான் இருந்தனர். “அவ எப்படி இவ்வளவு நேரம் அழாம இருந்தா…” அதிரை கேட்க, 

“அழலை சிணுங்கிட்டுதான் இருந்தா…” என்றான் வெற்றி. 

“என்னை எழுப்ப வேண்டியது தான… இவ்வளவு நேரம் தூங்காமலா இருந்தீங்க.” 

“நடுவுல நடுவல தூங்கினேன்…” 

ஆதிரை ஓய்வுறைக்குச் சென்றுவிட்டு வந்து மகளைத் தூக்கி சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பால் கொடுக்க, வெற்றி கண்ணை மூடி படுத்திருந்தான். 

இருபது நிமிடம் சென்று ஆதிரை மகளைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவள், மகளைத் தொட்டிலில் போட்டு விட்டு வந்து, அவளும் கீழே கணவனின் அருகில் நெருங்கி படுத்து, அவனை அனைத்தும் கொள்ள, வெற்றியிடம் அசைவே இல்லை. 

அவன் உறங்கிவிட்டான் என நினைத்த ஆதிரையும் தனது தூக்கத்தைத் தொடர… மனைவியின் சீரான மூச்சில் அவள் உறங்கி விட்டாள் எனத் தெரிந்ததும், மெல்ல கண் திறந்த வெற்றி, “சாரி டி…” என்றான். 

அதுவரை அவனை எட்டாமல் இருந்த உறக்கம், மனைவியின் அணைப்பில் மெல்ல எட்டிப்பார்க்க, அவனும் நன்றாக உறங்கிவிட்டான். 

ஆதிரை திரும்ப விழித்த போது மணி ஏழரை. விடியற்காலையில் பால் குடித்து உறங்கியதால் மகளும் விழிக்காமல் இருக்க, பல் தேய்த்து மகம் கழுவி விட்டு வந்தவளுக்குப் பசிக்க ஆரம்பித்தது. சமையல் அறைக்குச் சென்றால்… அங்கே பால் கூடக் காய்ச்சாமல் அப்படியே இருந்தது. 

இரவு சீக்கிரம் உண்டு விட்டு பால் கூடக் குடிக்காமல் உறங்கி இருந்தாள். இப்போது பார்த்தால் பால் கூடக் காய்ச்சியிருக்கவில்லை. பசியில் கோபமாக வந்தது. 

மாமியார் இப்படித்தான் எனத் தெரியும். எந்த வேலை எப்போது செய்ய வேண்டுமோ அப்போது செய்ய மாட்டார். ஒரே எரிச்சலாக வந்தது. 

பாலைக் காய்ச்சி அறைக்குள் எடுத்து வந்தவள், அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த ரஸ்க்கை அதில் தொட்டு சாப்பிட்டாள். வெற்றி அப்போதுதான் விழித்தவன், மனைவி சாப்பிடுவதைப் பார்த்தான். 

கணவன் எழுந்து கொண்டதைப் பார்த்தவள், “இவ அவளா எழுந்துக்கிற வரை எழுப்ப வேண்டாம். அவ எழுந்தா என்னைக் கூப்பிடுங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றாள். 

சமையல் அறைக்கு வந்தவளுக்கு, அங்கே இருந்த பாத்திரங்களைப் பார்த்தும் தலை சுற்றியது. மாமியாருக்குத்தனே வேலைக்காரி வேலை செய்தால் பிடிக்காது. அப்போது அவரே செய்யட்டும் என நினைத்தவள், அவரைத் தேடி சென்றாள். 

அவர் குளித்து விட்டு அப்போது தான் வந்திருந்தார். “பாப்பா தூங்கும்போதே நான் போய்க் குளிச்சிட்டு வரேன். நீங்க பாத்திரம் எல்லாம் கழுவி வைங்க.” எனச் சொல்ல… 

“இன்னைக்குப் பிரதோஷம் நான் கோவிலுக்குப் போயிட்டு வந்து தேய்க்கிறேன்.” என்றார். 

“இல்லை நான் சமைக்கணும். நீங்க தேய்ச்சு வச்சிட்டு போங்க.” எனச் சொல்லிவிட்டு செல்ல, ஜோதி சென்று பாத்திரம் விளக்கினார். எப்போதும் இதைச் செய்யுங்க என ஆதிரையாகச் சொன்னது இல்லை. ஆனால் இன்று அவளுக்கு வேறு வழியில்லை. 

ஆதிரை சென்று குளித்துவிட்டு வந்தவள், காலை உணவை செய்ய ஆரம்பித்தாள். வீட்டில் மாவும் இல்லை. வெண்பொங்கல் செய்து சட்னி மட்டும் வைத்தாள். அதற்கு நடுவில் மகள் வேறு விழித்து விட, மகளுக்கும் பசியாற்றி விட்டு வந்தாள். 

“நீ சாப்பிட்டியா…” எனக் கேட்டபடி வெற்றி உணவருந்த, “எனக்குப் பசிச்சது நான் சாப்பிட்டேன்.” என்றவள், அவனுக்கு உணவு பரிமாறினாள். ஜோதியும் அவனோடு உட்கார்ந்து சாப்பிட்டவர், “சாம்பார் இல்லாம பொங்கல் சாப்பிட நல்லாவே இல்லை.” என்றார். 

காலையில எழுந்து பால் கூடக் காய்ச்சலை. ஆனா குறை சொல்றதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என அதிரைக்குக் கோபமாக வந்தது. வெற்றி காதில் விழுகாதது போலச் சாப்பிட்டு முடித்தான். 

ஆதிரை வந்திருப்பது தெரிந்து பாத்திரம் கழுவும் பெண் அவளாகவே வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் ஜோதி பொங்கினார். 

“ஹே… நீயேன் வந்த… அதுதான் வேலையை விட்டு நின்னுட்ட இல்ல…” என அவர் கத்த. 

“அக்கா, நீங்களே சொல்லுங்க கா… ரெண்டு பேருக்கு அவ்வளவு பாத்திரம் போட்டாங்க. நானும் பேசாம தேய்ச்சா… எப்படித் தேய்ச்சாலும் குறை தான் சொல்றாங்க. கழுவின பாத்திரத்தையே திரும்பத் திரும்பக் கழுவ வைக்கிறாங்க கா…” 

“உன்னைப் பண்ண சொல்றதுக்கு நானே பண்ணலாம்னு திட்டினாங்க. நானும் எவ்வளவுதான் பொறுமையா போறது. அதுதான் நீங்களே பண்ணுங்க சொல்லிட்டு போயிட்டேன்.” 

“எனக்கு ஒன்னும் வேற வீடு கிடைக்காம இல்லை. ஆனா நீங்க கை குழந்தையை வச்சிட்டு ஆள் தேடணும், அதுதான் வந்தேன். உங்களுக்கு வேலைக்கு ஆள் கிடைக்கிற வரை நான் பண்றேன் கா…” என்றாள் அந்தப் பெண் வெளிப்படையாக. 

“வேற ஆள் எல்லாம் வேண்டாம் நீங்களே பண்ணுங்க. காலையில சாயங்காலம் ரெண்டு தடவை வந்து பண்ணிக் கொடுங்க. ஆதிரை வேற வேலை இருந்தாலும் செய்யச் சொல்லிட்டு, நீ சம்பளம் பார்த்துக் கொடுத்திடு.” என வெற்றி சொல்லிவிட்டு கைகழுவ சென்றான். 

“நீ போய் இருக்கிற பாத்திரத்தை தேய் நான் வரேன்.” என ஆதிரை அவளை உள்ளே அனுப்ப, 

“அதெப்படி நான் இருக்கும் போது செய்ய மாட்டான்னு போனவளை, நீ திரும்ப வேலைக்கு வைப்ப? அதெல்லாம் நானும் ஆதிரையுமே பண்ணிப்போம்.” என ஜோதி மகனிடம் சொல்ல… 

“அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க உங்க வேலையைப் பாருங்க. இதுல எல்லாம் தலையிடாதீங்க.” என்றான் வெற்றி பட்டென்று. 

ஜோதியின் முகம் கருக்க, “ஏன் நான் சொல்லக் கூடாதா?” என்றார். 

“நேத்து வந்ததில இருந்து வேலைப் பார்த்திட்டு, நைட் குழந்தை அழறது கூடத் தெரியாம ஆதிரை தூங்கினா?” 

“இன்னும் ரெண்டு நாள் இப்படி வேலைப் பார்த்தா காய்ச்சல்ல படுத்திடுவா… அப்புறம் குழந்தைகளை யார் பார்ப்பா? வீட்டு வேலைக்கு ஆள் வச்சிகிறதுக்கு எல்லாம் பெரிய பஞ்சாயத்தா?” 

“நானும் தானே உதவி பண்றேன்னு சொல்றேன். ஆதிரை ஒருவேலை பண்ணா, நானும் ஒரு வேலை பண்ணப் போறேன்.” 

“நீங்க ஒரு வேலையை எவ்வளவு நேரம் பண்ணுவீங்கன்னு எனக்கும் தெரியும் மா… உங்களுக்கு முடியவும் முடியாது. உங்களுக்குப் பொழுது போகலைனா கோவில் குளம்னு போயிட்டு வாங்க. அவ என்ன பண்ணனும்னு எல்லாம் நீங்க சொல்லாதீங்க.” 

அம்மாவும் மகனும் பேசுவதில் ஆதிரை தலையிடவில்லை. அவள் வேலைக்காரிக்குப் பாத்திரம் எடுத்துப் போட்டு விட்டு வந்தாள். 

அவள் வந்த போது வெற்றி இன்னும் கோபமாக இருக்க, அவன் அம்மாவிடம் இவ்வளவு கோபப்பட்டு இன்று தான் பார்க்கிறாள். 

“நீங்க எதுக்கு இந்த விஷயத்தில எல்லாம் தலையிட்டு டென்ஷன் ஆகுறீங்க. எனக்குப் பார்த்துக்கத் தெரியாதா? என்னால முடியலைனா நான் ஆள் வைக்கத்தான் செய்வேன். நான் உங்களை எல்லாம் கேட்டுட்டு இருக்க மாட்டேன். பேசாம போய் உங்க வேலையைப் பாருங்க.” என கணவனுக்குச் சொல்வது போல மாமியாருக்கும் சேர்த்து சொன்னாள்.
ஜோதிக்கும் அது நன்றாகவே புரிந்தது. அவருக்கு அதுதான் ஆத்திரமே. தன்னால் மருமகளை அதிகாரம் செய்ய முடியவில்லை என்பதுதான் பெரிய குறையே.  

“நான் உனக்கும் சொல்றேன் ஆதி. முதல்ல குழந்தைங்க அப்புறம் தான் மத்த வேலைகள். நீ நல்லா இருந்தாதான் குழந்தைகளைக் கவனிக்க முடியும்.” 

“நேத்து ஊர்ல இருந்து வந்தது. மதியம் வேற தூங்க முடியலை… அதனாலதான் நைட் தூங்கிட்டேன்.” 

“நான் உன்னை ரெஸ்ட் எடுன்னு தான் சொல்றேன். ரொம்ப இழுத்து போட்டு செய்யாத. அம்மா தான் வேலை பண்ண ரெடியா இருக்காங்களே… அவங்க சமைக்கட்டும். நீ குழந்தையைப் பாரு.” கணவன் சொன்னவுடன் அதிரை மாமியாரைப் பார்க்க, அவள் எதிர்பார்த்தது போலக் கடுகடுவென்று நின்று கொண்டிருந்தார். 

“அதை நான் பார்த்துகிறேன். நீங்க கிளம்புங்க.” என்றாள் ஆதிரை. 

வெற்றிச் சென்றதும் மகளைக் கவனிக்கச் சென்றாள். ஜோதி கோவிலுக்குச் சென்று விட்டார். 

மகளைக் குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து படுக்க வைத்தாள். கைகள் பரபரவென்று வேலை பார்த்தாலும், மனம் யோசனையிலேயே இருந்தது. இன்னைக்கு ஏன் இவருக்கு இவ்வளவு கோபம் வந்தது. இப்படியெல்லாம் இருக்க மாட்டாரே என யோசித்துக் கொண்டு இருந்தாள். 

அந்த அறையைத் துடைக்க வந்த வேலைக்காரி, “அம்மா எப்படி மா இந்த அம்மாவோட நீ இருக்க. கை குழந்தை இருக்கிற வீட்ல எவ்வளவு வேலை இருக்கும் தெரியாதா? இல்லைனா உங்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாதா… எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கீங்க. வேலைக்கு ஆள் வச்சிகிட்டா என்ன? இந்த அம்மா மட்டும் ஏன் மா இப்படி இருக்கு?” எனத் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள். 

“அவங்க ஒரு காலத்தில காலையில இருந்து நைட் வரை வேலைப் பார்த்தே பழகிட்டாங்க. அதுதான் இப்பவும் சும்மா இருக்க முடியலை.” 

“இந்த அம்மாவுக்கு ஒரு பொண்ணு இருக்கே… அது வேலைக்கு எல்லாம் ஆள் வைக்காமத்தான் இருக்கா?” 

“அவங்க வேலைக்குப் போறாங்களாம்.” 

“இது நல்லா இருக்கே நியாயம்.” 

“விடு, இனி அவங்களை எதுவும் எதிர்த்து பேசாதே… எதுனாலும் என்கிட்ட சொல்லு.” 

“நீ இல்லாததுனாலதான் பிரச்சனை. நீ இருக்கும் போது, நான் ஏன் பேசப்போறேன். கடைக்கு எதுவும் போகணும்னா சொல்லு போயிட்டு வரேன்.” 

“ஆமாம் நீ வீட்டை துடைச்சு முடி. நான் லிஸ்ட் போடுறேன். மாவு வேற அரைக்கணும். நிறைய வேலை இருக்கு.” என்றவள், மகளைத் தொட்டிலில் போட்டு விட்டு சென்றாள். 

வேலைகாரி சென்றதும், இட்லிக்கு ஊற வைத்துவிட்டு, மதிய சமையலை ஆரம்பித்தாள். அருணுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் தான் இருந்தான். சாதமும் குழம்பும் வைத்தவள், பொரியலுக்குக் காய் எடுத்து சமையல் மேடையில் வைத்து விட்டு, மாமியார் வந்தால் கதவு திறந்து விடும்படி அருணிடம் சொல்லிவிட்டு மகளை கவனிக்க சென்றவள், அவளுக்கு பசியாற்றிவிட்டு அப்படியே உறங்கி விட்டாள்.  

ஜோதி கோவிலில் உட்கார்ந்து நன்றாக அரட்டை அடித்து விட்டுத் தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தார். தண்ணீர் குடிப்பது போலச் சமையல் அறைக்குச் சென்றவர், சமையல் எல்லாம் முடிந்து விட்டதா என நோட்டம் பார்த்தார். அங்கருந்த காய்கறியைப் பார்த்தும் தனக்காகத்தான் வைத்திருக்கிறாள் எனப் புரிந்தது. 

அதைக் கழுவி எடுத்து வந்து ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டே நறுக்கியவர், பின்பு அதைச் சமைத்தும் வைத்தார். அதற்கே ஒரு மணி நேரம் ஆனது. அவரால் இப்படி ஒன்றிரண்டு வேலைகளைத்தான் பார்க்க முடியும், மிச்சம் எல்லா ஆதிரை தான் செய்ய வேண்டும். 

வெற்றி மதியம் வந்த போது உறங்கிக் கொண்டு இருந்தவளை எழுப்பிச் சாப்பிட வைத்தான். சாப்பிட்டதும் வேலை இருக்கிறது என நிற்காமல் சென்றவன், இரவும் தாமதமாக வந்து, சாப்பிட்டதும் படுத்து விட்டான். 

அடுத்த நாள் காலை கோவிலில் சென்று மகளுக்குப் பெயர் வைத்தனர். வீட்டில் என்றால் சொந்தபந்தமெல்லாம் அழைத்துச் செய்ய வேண்டும். நெருங்கிய சொந்தமென்றாலும் அதுவே நிறையப் பேர் வரும். அதனால் கோவிலில் வைத்து பெயர் வைத்தனர். 

தேங்காய் பழம் சக்கரை பொங்கல் எல்லாம் படைத்து, அஷ்வினி எனப் பெயரிட்டு, சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்தனர். 

அதிகாலை குளிப்பாட்டியதோ என்னவோ, அஷ்வினிக்கு  ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. சரியாக மூச்சு விட முடியாததால் சிணுங்கிக்கொண்டே இருந்தாள். ஆதிரையை அப்படி இப்படியென நகர விடவில்லை. கொஞ்சம் நகர்ந்தாலே ஒரே அழுகை. 

இரவும் பகலும் மகளோடு ஆதிரைக்குச் செல்ல, வெற்றியை அவளால் கவனிக்கவும் முடியவில்லை. மகள் நடுநடுவே உறங்கும் போதுதான் குளிப்பது, சமைப்பது எல்லாம்.
அருணைப் பற்றி பிரச்சனை இல்லை. அவன் அவனாகவே குளிப்பது சாப்பிடுவது எல்லாம் செய்து விடுவான். பகலில் அவன் நண்பர்களோடு விளையாட சென்று விடுவான். 
நான்கு நாட்கள் சென்று மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதன் பிறகு தான் கணவனைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்தாள். 
இதற்கு முன்பும் வேலை அதிகமுள்ள நாட்களில், வெற்றி அதிகம் வீடு தங்கியதில்லை தான். ஆனால் அப்போது எல்லாம் இப்போது போல ஒரு இடைவெளியை ஆதிரை உணர்ந்தது இல்லை. 
என்னவோ குறைவதாகவே அவளுக்குத் தோன்றியது. இன்னைக்கு அவர் வரட்டும் என நினைத்து, கணவன் வரவுக்குக்காக ஆதிரை காத்திருந்தாள். 

Advertisement