Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 14 

நிச்சயம் அன்று மண்டபத்தில் நடந்த விஷயம் எதையும் வெற்றி அறிந்திருக்கவில்லை. மறுநாள் இரவு அவன் அழைத்த போதுதான், ஆதிரை மனோஜ் பேசியதைப் பற்றிச் சொன்னாள். 


“நீயேன் டி அவனுக்கு எல்லாம் விளக்கம் சொன்ன. அவனோட நினைப்பு எதுவா இருந்தா நமக்கு என்ன?” 

“அவன் உங்களைப் பத்தி பேசுவான், நான் கேட்டுட்டு இருப்பேனா… போடா நீயெல்லாம் என் புருஷன் முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு காட்ட வேண்டாம்.” 

“அதுக்கில்லைடி, அவங்க அளவுக்குக் கீழ இறங்கி நாம பதில் கொடுக்கணும்னு அவசியம் இல்லைன்னு சொல்றேன். இனி ஒவ்வொரு விஷேஷத்திலேயும் நம்மைப் பார்க்கத்தான் செய்வாங்க. அப்ப அவங்களுக்கே புரிஞ்சிருக்கும்.” 

“இவங்களை எல்லாம் ஆரம்பத்திலேயே தட்டி வைக்கணும். இல்லைனா இன்னும் பேசுவாங்க. எவ்வளவு திமிர் இருந்தா, என்னை எங்க கல்யாணம் பண்ணனும்னு அவன் சொல்லுவான். இனி பேசுவான் அவன்.” 

“பாவம் விட்டுடு உன்னைப் பத்தி தெரியாம பேசிட்டான். இனி வாயே திறக்க மாட்டான்.” 

“ம்ம்… அந்தப் பயம் இருக்கணும்.”  

“ஆதி, போதும் இனி அவங்க என்ன பேசினாலும் நீ பேசக் கூடாது சொல்லிட்டேன்.” 

வெற்றி பொதுவாக இதைச் செய்யாதே என்றெல்லாம் அவளைச் சொல்ல மாட்டான். அப்படி அவன் சொன்னால் அதில் எதாவது காரணம் இருக்கும் என்பதால் ஆதிரை கேட்டுக்கொள்வாள். 

நான் செய்வது தான் சரி என வீண் பிடிவாதம் அவளிடம் இருக்காது. நீ செய்வது தவறு எனச் சொன்னாலும் ஏற்றுகொள்ளும் பக்குவம் அவளுக்கு உண்டு. 

“சரிங்க.” என்றாள். 

“இதனால நாம இறங்கிப் போறோம்னு அர்த்தம் இல்லை. நீ மதிக்காதன்னு சொல்றேன்.” 

“எனக்கு புரியுது.” 

“வர்ற சனி ஞாயிறு பாண்டிச்சேரியில் எங்க காலேஜ் பிரண்ட்ஸ் கெட் டு கெதர் இருக்கு சொன்னேன் இல்ல… நான் வரலைன்னு சொன்னாலும் பசங்க விட மாட்டேங்கிறாங்க. இதுக்கு முன்னாடியும் நான் போனது இல்லையா… உன் பொண்டாட்டி விடலையான்னு கேட்டு ஓட்டறாங்க.” 

“அடப்பாவி, நீங்க பண்றதுக்குப் பழி என் மேலையா. உங்களுக்குப் போகணும்னா போயிட்டு வாங்க.” 

“நீ வரும்போது நான் இங்க இல்லைனா நல்லா இருக்குமா?” 

“நீங்க தான் சாயந்திரம் வந்திடுவீங்க தானே…பரவாயில்லை போயிட்டு வாங்க.” 

“போன தடவை கொடைக்காணல்ல வச்சாங்க. அதுதான் நீங்க போக முடியலை. அடுத்தத் தடவை எங்க வைப்பாங்களோ தெரியாது. இந்தத் தடவை பாண்டிச்சேரியில் வச்சிருக்காங்க. நமக்குப் பக்கம்தான் போயிட்டு வாங்க.” 

“சரி அப்ப வரேன்னு சொல்லிடுறேன். நான் வந்தா விக்ரமும் வரேன்னு சொன்னான்.” 

“ம்ம்..” 

சனிக்கிழமை மதியத்திற்குள் தோட்டத்து வேலைகள் முடிந்து விட, மாணிக்கத்திடம் மில்லின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, வெற்றியும் விக்ரமும் மாலையில் காரில் பாண்டிச்சேரி கிளம்பி சென்றனர். 

பாண்டிச்சேரி போய்ச் சேர்ந்ததுவிட்டதாக ஆறு மணி போல வெற்றி  ஆதிரைக்குத் தகவல் மட்டும் அனுப்பி இருந்தவன், எட்டு மணி போல ஆதிரையை கைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டு இருந்தான். 

“எப்படி இருக்காங்க உங்க பிரண்ட்ஸ் எல்லாம்.” 

“சூப்பரா இருக்காங்க. நிறையப் பேர் தொந்தியும் தொப்பையுமா இப்பவே பார்க்க நாற்பது வயசு போல இருக்காங்க.” 

“என்னைப் பார்த்திட்டு, ஏன் டா உன் பொண்டாட்டி நல்லா சமைக்க மாட்டாங்களான்னு வேற கேட்டாங்க.” 

“நீங்க வெயிட் போட்டுட கூடாதுன்னு கவனமா இருக்கீங்க. உங்க பிரண்ட்ஸ்க்கு அது தெரியலை… என்னைத்தான் குறை சொல்றாங்க. ஆம்பிளைங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா எல்லாப் பழியையும் பொண்டாட்டி மேல போட்டுடுங்க.” என்றாள். 

“நான் சொல்லிட்டேன் டி, என் பொண்டாட்டி சூப்பரா சமைப்பா… அதனாலையே வெயிட் போட்டுட கூடாதுன்னு கவனமா இருக்கேன்னு சொல்லிட்டேன். உடனே அப்ப பாண்டிச்சேரியில இருந்து, நாளைக்கு உங்க வீட்டுக்கு சாப்பிட போயிடுவோமான்னு கேட்டாங்க. இவனுங்களை என்ன பண்றது சொல்லு?” 

“இப்ப சின்னக் குழந்தை இருக்கு முடியாது. கொஞ்ச நாள் கழிச்சு வாங்க சொல்லி இருக்கேன்.” 

“வேற என்ன பண்ணீங்க?” 

“வந்து பீச்ல ஆட்டம் போட்டோம். அப்புறம் நீச்சல் குளத்தில இறங்கியும் ஆடியாச்சு. இப்ப சாப்பிட போயிட்டு இருக்கோம்.” 

தள்ளி நின்று வெற்றி பேசுவதைக் கவனித்த நண்பன் ஒருவன், நாம எல்லாம் வந்ததும் போன்னை அணைச்சு வச்சிட்டோம். ஆனா இவன் என்னடான்னா இவன் பொண்டாட்டிகிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டு இருக்கான்.” 

“என்ன டா மாப்பிள்ளை இவன் இப்படி இருக்கான்.” என இன்னொரு நண்பன் விக்ரமிடம் கேட்க, 

“அவன் நம்மை மாதிரி இல்லை. அவனுக்குப் பொண்டாட்டி மேல ஓவர் லவ்ஸ்.” என்றான் விக்ரம். 

“நிஜமாவா டா… நம்ம கும்பல்ல பாதிப் பேரு, ஏன் டா கல்யாணம் பன்னோம்னு விரக்தியில தான் டா சுத்திட்டு இருக்கானுங்க. நம்ம தினேஷ், டேய் மாசம் ஒரு தடவை இந்தக் கெட் டு கெதர் வைக்க முடியாதான்னு கேட்கிறான்.” 

“அவன் ஆபீஸ் வாட்மேன் வந்து, சார் ஆபீசை பூட்டப்போறோம்ன்னு சொன்ன பிறகுதான் வீட்டுக்கே போவான். வீட்ல அவ்வளவு டார்ச்சர் டா மச்சான். நம்ம வெற்றியாவது சந்தோஷமா இருக்கட்டும்.” 

இங்கே தன்னைப் பற்றிய கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது எனத் தெரியாமல் வந்த வெற்றி, “சாப்பிட போகலாமா…” எனக் கேட்க, 

“மாப்பிள்ளை, நாளைக்குக் காலையில சாப்பிட்டதும் கிளம்பிடுவோமா.” என நண்பன் ஒருவன் கேட்க, 

“ஹான் எனக்கு ஓகே…” என வெற்றி வேகமாகச் சொல்ல… 

“மவனோ அடி வெளுத்துடுவோம். நாளைக்குச் சாயங்கலாம் வரை எங்களோடத்தான் நீ இருக்க.” என்றனர் கோரசாக. வெற்றி விழிப்பத்தைப் பார்த்து விக்ரம் சிரித்துக் கொண்டு இருந்தான். 

இரவு ஆதிரை அழைத்த போது, வெற்றி அதிகம் உளறினான். 

“ஆதி நீ ஏன் டி இப்போ இங்க இல்லை. எனக்கு உன்னை உடனே எதாவது பண்ணனும் போல இருக்கே.” 

“பக்கத்தில உங்க பிரண்ட்ஸ் இல்லையா.. நீங்க பேசுறது கேட்டா என்ன நினைப்பாங்க? ரொம்பக் குடிச்சிருக்கீங்களா?” 

“இல்லையே கொஞ்சம்தான் குடிச்சேன்.” 

“நீங்க பேசுறதிலேயே தெரியுது, எவ்வளவு குடிச்சிருக்கீகன்னு. இருங்க அடுத்தத் தடவை இப்படிக் கெட் டு கெதர்ன்னு எதாவது சொல்லுங்க உங்களுக்கு இருக்கு.” என்றவள், போன்னை வைத்து விட்டாள். 

அடுத்து ஆதிரை வனிதாவை அழைத்து, “இவர் ரொம்பக் குடிச்சிருக்கார் போல இருக்கு. நீ விக்ரமுக்கு போன் பண்ணி, இவரைக் கொஞ்சம் பார்த்துக்கச் சொல்றியா?” எனச் சொல்ல, ”அக்கா உங்க வீட்டுக்காரரே இந்த நிலைமையில இருந்தா, என் வீட்டுக்காரரைப் பத்தி கேட்கவே வேண்டாம். இவரும் புல்லா அடிச்சிருப்பார்.” 

“நல்ல நாளிலேயே நான் போன் பண்ணா எடுக்க மாட்டார். இன்னைக்கு எடுக்கவே மாட்டார். நீங்க வேணா பண்ணிப் பாருங்க. நீங்க பண்ணா எடுக்கலாம்.” என்று சொன்ன வனிதா, உடனே அவளே, “நான் தப்பா சொல்லலை அக்கா. நீங்க பன்னா எதோ முக்கியமான விஷயம் சொல்லத்தான் பண்ணுவீங்கன்னு தெரியும். அதுக்காகச் சொன்னேன்.” என்றாள். 

“சரி பார்க்கலாம்.” என ஆதிரை வைத்து விட்டாள். 

விக்ரமை அழைக்கும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால் தன் கணவன் அதிகம் குடித்திருப்பது போல இருக்கிறது. என்ன செய்வது என யோசித்தவள், சிறிது நேரம் சென்று மீண்டும் வெற்றியை அழைக்க, விக்ரம் தான் எடுத்தான். 

“ஆதி அவன் படுத்திட்டான். நாளைக்குப் பேச சொல்றேன்.” என்றான். சரியென ஆதிரை வைத்து விட்டாள். அதன் பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. 

ஞாயிறு அன்று காலை உணவை முடித்துக் கொண்டு ஆதிரையின் அம்மா மகளையும் பேத்தியையும் கொண்டு வந்து மருமகன் வீட்டில் விட்டார். உடன் சக்தி வந்திருந்தான். 

இவர்கள் முன் மதிய நேரத்தில் சென்று சேர, அவரே வேலைப் பார்ப்பதாகச் சொல்லி, ஜோதி வீட்டை ஒரு வழியாக்கி வைத்திருந்தார். இவர் படுத்திய பாட்டில் வேலைக்காரி வேலையை விட்டே சென்றிருந்தாள். 

ஜோதி அவரே வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி அப்போது தான் சமையல் ஆரம்பித்து இருந்தார். வாசல் பெருக்கி துணி துவைக்க வேறே ஒருவர் வருவார். 

பேத்தியைப் பார்த்ததும் ஜோதி பேத்தியை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட, ஆதிரை சமையலை முடிக்க, மகளின் அறையைச் சுத்தபடுத்தும் வேலையை மங்கை செய்தார். வந்த அன்றே மகள் வேலை செய்கிறாளே என மங்கைக்கு இருந்தது. 

“வேலைக்கும் ஆள் இல்லாம, குழந்தையும் வச்சிட்டு நீ எப்படிச் சமாளிப்ப?” என அவர் கேட்க, 

“இந்த ஆள் இல்லைனா வேற ஆள் வர சொல்லணும். நான் பார்த்துகிறேன் மா. ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றாள் ஆதிரை. மதியம் சாப்பிட்டதும் மங்கையும் சக்தியும் அப்போதே கிளம்பி விட்டனர். 

அருண் விக்ரம் வீட்டில் இருந்தான். நேற்று வெற்றி பாண்டிச்சேரி செல்லும் முன் அவனை அங்கே விட்டுச் சென்றிருந்தான். 

மாலை நான்கு மணிப்போல, அருணையும் சுஜியையும் அழைத்துக் கொண்டு வனிதா வீட்டுக்கு வந்தாள்.

“எப்படி அக்கா இருக்கீங்க? தம்பி நிச்சயம் நல்லா நடந்ததா.” 

“நல்லா நடந்தது. நீங்களும் வந்திருக்கலாம்.” 

“வரணும்னு தான் இருந்தோம். இவர் சித்தப்பா பொண்ணுக்கு வளைகாப்பு. அதுதான் வர முடியலை.” 

“ம்ம். இவர் சொன்னார்.” 

“நீங்க போன வாரமே வெற்றி அண்ணாவோட வந்திடுவீங்கன்னு நினைச்சேன்.” 

“இதோ பார்த்தியா எவ்வளவு சாமான்னு, இதெல்லாம் மூட்டை கட்டிட்டு வரணுமே.” 

“நிச்சயம் அன்னைக்கு நானும் கிளம்பினா… எங்க அம்மா வந்த விருந்தாளிகளைப் பார்ப்பாங்களா இல்லை என்னைப் பார்ப்பாங்களா…. நானும் விருந்தாளி மாதிரி அன்னைக்கே கிளம்பினா நல்லா இருக்காது இல்ல…அதோட மூன்னு மாசம் முடியாம எங்க வீட்ல அனுப்புறதாவும் இல்லை.” 

“அது சரிதான் அக்கா. இங்க உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கவும் முடியாது.” 

வனிதாவுடன் பேசியபடி ஆதிரை பைகளைப் பிரித்து அடுக்க, வனிதா பைகளைப் பிரித்து அதில் இருந்த பொருட்களை எடுத்து கொடுத்து உதவினாள். 

ஒரு பையில் வெள்ளி சாமான்கள் இருந்தது. தட்டு, டம்ளர், கிண்ணம், சங்கு என வேறு சிலதும் இருக்க, இரண்டு பைகள் நிறையக் குழந்தைகக்கான புது உடைகள், இன்னொன்றில் விளையாட்டுச் சாமான்கள் என இருந்தது. ஆதிரை மகளுக்குப் பெற்றோர் போட்ட நகைகளையும் காட்டி விட்டு உள்ளே வைத்தாள். 

வனிதாவுக்கு மகள் பிறந்திருந்த போது, ஒரு செயின் வாங்கிக் கொடுக்கவே அவள் பெற்றோர் திணறிப்போனார்கள். 

“நீங்க ஒன்னும் போடலைனா, சபையில எனக்கு அசிங்கமாகிடும்.” என வனிதா சொல்ல,  

“உங்க வீட்டுக்கு ஏத்த மாதிரி எங்களால செய்ய முடியமா?” என்றனர். மகள் காதலிக்கும் போது அது தெரியவில்லை போல…. நமக்கு இந்த இடம் ஒத்து வராது என அப்போது சொல்லவில்லை. 

விக்ரம் அவனே எல்லாம் வாங்கி விட்டான். அதனால் சபையில் ஒன்றும் தெரியாமல் போனது. உங்க வீட்ல இருந்து என்ன கொண்டு வந்த என்றெல்லாம் விக்ரம் ஒரு நாளும் சொல்லிக்காட்டியது இல்லை. 

அவன் நன்றாகத்தான் இருந்தான். நாமே தான் தேவையில்லாமல் ஏதேதோ செய்து, அவனை இந்த அளவுக்குத் தள்ளினோம் எனப் புரிந்தது. 

“நேத்து அவங்களுக்குப் போன் பண்ணிங்களா அக்கா?” 

“இல்லை வனிதா போன் பண்ணலை. ஆனா இவருக்குப் பண்ணேன். விக்ரம் தான் எடுத்தார். எடுத்து இவர் தூங்கிட்டார்னு சொன்னார்.” 

“நானும் இவருக்குப் போன் பண்ணேன்.. படுத்திட்டேன் வைன்னு வச்சிட்டார் அக்கா… வெற்றி அண்ணாவைப் பத்தி கேட்கவே இல்லை… அதுக்குள்ள வச்சிட்டார். போன்னை எடுத்ததே அதிசயம் தான்.” வனிதா பாவமாகச் சொல்ல, ஆதிரைக்குச் சிரிப்பாக வந்தது. இந்த விக்ரமிற்குத் திமிர் தான் என நினைத்துக் கொண்டாள். 

இருட்டும் நேரத்திற்குத்தான் வெற்றியும் விக்ரமும் வந்தனர். இருவருமே களைப்பாக இருப்பது பார்த்ததும் தெரிந்தது. 

வாசலோடு செல்ல முயன்ற விக்ரமை, வெற்றிதான் வற்புறுத்தி உள்ளே அழைத்து வந்தான். ஆதிரை வந்து “வாங்க…” என… “நல்லா இருக்கியா ஆதிரை.” என்றவன், அப்போதுதான் மனைவி அங்கிருப்பதைப் பார்த்தான். 

“ஏய்… நீ இங்க தான் இருக்கியா.” என அவன் சொல்ல, 

“அருணனை விட வந்தேன். ஆதிரை அக்காதான் நீங்க வர்ற வரை இருக்கச் சொன்னாங்க.” என்றாள் வனிதா. 

“டீ போடவா…” வெற்றி விக்ரம் இருவரையும் பார்த்து பொதுவாக ஆதிரை கேட்க, மகளை வைத்திருந்த வெற்றி போடேன் என்றான். 

நேற்று வரை எப்போ வருவ என ஆசையாகக் கேட்டுக் கொண்டு இருந்தவன், இன்று தன்னைப் பார்த்தும் அப்படி ஒன்றும் உற்சாகம் காட்டவில்லையே என நினைத்த ஆதிரை, ஒருவேளை விக்ரமும் வனிதாவும் இருப்பதனால் என நினைத்துக் கொண்டாள்.

அருணும் சுஜியும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக்கு கிளம்பலாம் என்றால் சுஜிக்கு கிளம்ப மனம் இல்லை. “அவங்க விளையாடட்டும், நீங்களும் சாப்பிட்டு போங்க.” என்ற ஆதிரை சமைக்க செல்ல, வனிதாவும் சேர்ந்து செய்தாள். 
இருவரும் சப்பாத்தியும் குருமாவும் செய்தனர். எல்லோரும் சேர்ந்து தான் உண்டனர். அவர்கள் சென்றதும் மகளுக்கு பால் கொடுத்துவிட்டு வெற்றியிடம் கொடுத்த ஆதிரை, “இவளை பார்த்துக்கோங்க. எனக்கு தூங்கணும்.” என்றவள், படுத்ததும் உறங்கி விட… அதுவரை எதோ யோசனையில் இருந்த வெற்றி, அதன் பிறகே மனைவியை கவனித்தான். 
ஆதிரை மிகவும் களைத்துப் போய் இருந்தாள். வந்த அன்றே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இவளை யார் செய்ய சொன்னது என நினைத்தவன், காலையில் பேசிக்கொள்ளலாம் என இருந்தான்.
இடம் மாறியதால் உறக்கத்தில் மகள் சிணுங்கிக் கொண்டே இருக்க, மகளோடு தரையில் மெத்தை விரித்து படுத்திருந்த வெற்றி, அவள் சிணுங்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்தபடி இருந்தான். 
அந்த சிணுங்கள் எல்லாம் ஆதிரையின் காதில் விழவே இல்லை. அவள் அடித்து போட்டது போல உறங்கிக் கொண்டு இருந்தாள்.  

Advertisement