Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 12

மதிய உணவிற்கு வந்துவிட்டு மாலை வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த விக்ரம், வெற்றி வருவதைப் பார்த்ததும், “வா வெற்றி, என்ன அதிசயமா இருக்கு.” என்றவன், “வனிதா, வெற்றி வந்திருக்கான், அவனுக்கும் சேர்த்து டீ கொண்டு வா…” என்றான். 


“வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா, ஆதிரை அக்கா இல்லாம மெலிஞ்சு போயிட்டீங்க.” என வனிதா சொல்ல… 

“அப்படியா?” என்றான் வெற்றி. 

“பசலை நோய் கண்ட தலைவின்னு தான் கேள்விபட்டிருக்கேன். இப்பத்தான் தலைவனைப் பார்க்கிறேன். எப்ப பாரு பொண்டாட்டி புராணம் தான்.” 

“ரெண்டு குழந்தை பெத்தவன்னு எல்லாச் சொல்ல முடியாது. இப்பதான் புதுசா கல்யாணம் ஆகி பொண்டாட்டியை பிரிஞ்சிருக்கிற மாதிரி தான் இருக்கான்.” 

“ஏன் டா?” என்பது போல வெற்றி பார்க்க, 

“பின்ன எல்லோரும் உங்களை மாதிரி இருக்க முடியுமா?” எனக் கேட்டு விட்டு வனிதா உள்ளே சென்று விட, 

“எனக்கு என் வாயே தான் எதிரி.” என விக்ரம் சொல்ல.. அதைப் பார்த்து வெற்றிப் பெரிதாகச் சிரித்தான். 

அப்போதுதான் மதிய உறக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தியும் தெய்வாவும் வெற்றியை பார்த்ததும், அவன் மனைவி குழந்தைகளைப் பற்றி நலம் விசாரித்தார்கள். 

“மாமா போன் பண்ணி இருப்பாங்க. சக்திக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம். அதுதான் நேர்ல சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.” 

“ஆமாம் பா கூப்பிட்டார். ஆனா அன்னைக்கு என் தம்பி வீட்லயும் அவன் பொண்ணுக்கு வளைகாப்பு. அதுதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.” மூர்த்திச் சொல்ல, 

“இது ஒரு பக்கம் அது ஒரு பக்கம் அதனால கல்யாணத்துக்கு வரோம் டா… நீ மாமாகிட்ட சொல்லிடு.” என்றான் விக்ரம். 

“சரி டா சொல்லிடுறேன்.” என்ற வெற்றி, வனிதா கொண்டு வந்த டீயை குடித்துவிட்டு கிளம்ப, விக்ரமும் அவனோடு கிளம்பினான். 

அவர்கள் பின்னே வந்த வனிதா, “நைட் வீட்டுக்கு சாப்பிட வந்திடுங்க. உங்களுக்குத் தோசை ஊத்தவா இல்லை சப்பாத்தியா?” என விக்ரமிடம் கேட்க, 

“தோசையே ஊத்து உனக்கு ஈஸியா இருக்கும்.” என்றதற்கு, 

“உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.” 

“எதோ ஒன்னு பண்ணு டி.” என்றான் விக்ரம். 

“நான் சப்பாத்தி போட்டு குருமா வைக்கிறேன். நேரத்திற்கு வந்திடுங்க.” என வனிதா சொல்ல, விக்ரம் சரி என்பதாகத் தலையசைத்தான். 

விக்ரம் முன்பெல்லாம் இரவு அதிகம் வெளியேதான் சாப்பிடுவான். ஆனால் இப்போதெல்லாம் வீட்டிற்குச் சென்றுதான் உண்கிறான் என்பதை வெற்றியும் அறிவான். பரவாயில்லை மாறி இருக்கிறான் என நினைத்துக் கொண்டான். 

வனிதாவும் இப்போது ஜாக்கிரதையாக இருக்கிறாள். கணவனை விட்டு விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. ஆனந்தி தான் ஒரு பெரிய பாடம் சொல்லிக் கொடுத்தாளே… அதோடு விக்ரமும் தான் வலிக்கக் கொடுத்திருந்தானே. அந்தப் பயம் நிஜமாகவே வேலை செய்தது. 

ஆதிரை இங்கே இருக்கும் போதே நிச்சயத்தை வைத்துவிட்டால், அவள் திரும்ப இதற்காக ஒரு தடவை அலைய வேண்டாம் என ஞாயிறு அன்று வருவது போல, நிச்சயத்திற்கு நாள் குறித்தனர். 

நிச்சயத்திற்குப் புடவை மற்றும் நகை வாங்க சென்றபோது, பெண் வீட்டினரை அழைக்கவில்லை. திருமணத்திற்கு எடுக்கும் போது அழைத்தால் போதும் என நினைத்தனர். 

சக்தி காரை ஓட்ட, அவனின் பெற்றோர் மற்றும் ஆதிரை மட்டுமே கடைக்குச் சென்றனர். ஆதிரை மகளை மட்டும் தூக்கிக் கொண்டு வந்தாள். மகனை பாட்டியுடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தாள். 

முதலில் நிச்சய புடவை வாங்கினர். குழந்தையைத் தான் வைத்துக்கொண்டு ஆதிரையைப் புடவையைப் பார்க்க சொல்லி மங்கை அனுப்பினார். 

வெகு நேரம் ஆராய்ந்து ஆதிரை மிதமான ஆரஞ்சு வர்ணத்தில், அழகான வேலைப்பாடு செய்த புடவையைத் தேர்ந்தெடுக்க, அந்தப் புடவை மற்றவர்களுக்கும் பிடித்து இருந்தது. 

“நீ வேணா மேனகாவை கேட்கிறியா?” என்ற அக்காளிடம், “இல்லை வேண்டாம் இதுவே நல்லா இருக்கு எடுக்கலாம்.” என்றான் சக்தி. 

உனக்குப் பார்க்கிறியா ஆதிரை என்ற தந்தையிடம், “வேண்டாம் பா கல்யாணத்துக்கு எடுக்கலாம்.” என்றாள். 

அவர்கள் பில் போடும் நேரத்தில், அங்கேயே இருந்த தனியறையில் மகளின் பசியாற்றிவிட்டு ஆதிரை வர, அடுத்து நகை கடைக்குச் சென்றனர். 

அங்கே நிச்சயத்திற்கு மோதிரமும், ரூபியும் எமரால்டும் கலந்த ஆரமும் அதற்குப் பொருத்தமான காதணியும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். 

சக்தியும் மேனகாவும் போன்னில் பேசிக் கொள்வார்கள். புடவை நகை எடுத்ததை அவன் சொல்லி இருந்தான். ஆனால் என்ன வாங்கினோம் எனச் சொல்லவில்லை. 

“உங்களுக்கு டிரஸ் வாங்கலை.” 

“அன்னைக்கு அக்காவுக்கு ரொம்ப நேரம் குழந்தையை வச்சிட்டு இருக்க முடியாதுன்னு வாங்கலை. எனக்கு இன்னொரு நாள் வாங்கணும்.” 

“உங்க பிரண்ட்ஸ் கூடப் போவீங்களா?” 

“இல்லை நானும் அக்கா மட்டும் ஒருநாள் போய் எடுக்கலாம்னு இருக்கோம். அக்கா நல்லா எடுப்பா. அவளுக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்.” 

ஆதிரைக்கு அந்த வீட்டில் இருக்கும் முக்கியத்துவத்தை மேனகாவும் உணர்ந்தாள். பேச்சுவாக்கில் மகளிடம் இருந்து எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட மஞ்சுளா, “இப்ப எல்லாம் நிச்சயத்துக்கும்தான் சேர்ந்து போய் எடுக்கிறாங்க. புடவை மட்டும் நல்லா இல்லாம இருக்கட்டும்.” எனப் புலம்ப…அவள் வீட்டில் மேனகா இஷ்ட்டபடிதான் தாயும் தந்தையும் நடப்பர். ஒருவேளை புடவை நன்றாக இல்லையென்றால் என்ற கவலை அவளையும் தொற்றிக்கொண்டது. 

மகள் உறங்கிய ஒரு மதிய பொழுதில் தம்பியுடன் பைக்கில் சென்று அவனுக்கு நிச்சயத்திற்கு உடையும், வெற்றிக்கு சில உடைகளையும் ஆதிரை வாங்கினாள். 

அன்று இரவு கணவனிடம் நிச்சயத்திற்கு முன்தினமே வர சொல்லி அவள் சொல்ல, அவன் முடியாது எனச் சொல்ல, இருவருக்கும் முட்டிக் கொண்டது. 

“நீங்களும் விருந்தாளி மாதிரி நேரத்துக்கு வருவீன்கன்னா, வரவே வராதீங்க. அங்கயே இருங்க. காலையில தான் வருவாராம். முன்னாடி நாளே வந்தா தேஞ்சு போயிடுவீங்களா?” 

“அம்மாவை வேற கூடிட்டு வரணும். முன்னாடி நாளே வந்தா வீட்டு காவலுக்கு ஆள் வைக்கணும். அதுக்கு நாங்க காலையில எழுந்து சீக்கிரம் கிளம்பி அங்க வந்திடுறோம்.” 

“என்னவோ பண்ணுங்க உங்க இஷ்ட்டம்.” என்றுவிட்டாள் ஆதிரை. 
நிச்சயத்திற்கு அம்மாவையும் அழைத்துச் செல்ல வேண்டும். முன் தினமே சென்றால், கிர்த்திகா வீட்டிற்கும் செல்ல வேண்டும் என இழுத்து அடிப்பார். எப்படியும் ஆதிரையோடு இருக்கப் போவது இல்லை. பிறகு ஏன் செல்ல வேண்டும் என வெற்றி நினைத்தான். 

கீர்த்திகாவின் வீட்டுக்காரர் பெரிய மண்டையாக இருப்பார். அவருக்குத் தான்தான் உசத்தி மற்றவர்கள் எல்லாம் மட்டம் என்னும் எண்ணம். 
ஒழுங்காகப் பேசவும் மாட்டார். ஆனால் மற்றவர்கள் மட்டும் எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்ப்பார். அதனால்தான் கிர்த்திகாவே இங்கே அதிகம் வர மாட்டாள். 

மஞ்சுளா தன் மூத்த மகள் மட்டும் மருமகனிடமும் புலம்பி இருக்க, ஏற்கனவே மனோஜ் தான் பெரிய ஆள் என்று நினைப்பான். ஆதிரை மற்றும் அவள் கணவனைப் பற்றி விசாரித்தவன், விவசாயம் தானே பார்கிறார்கள் என எள்ளலாக நினைத்தான். 

சிலர் அப்படித்தான். ஒன்றுமே தெரியவில்லை என்றாலும், எல்லாம் தெரிந்தது போலப் பேசுவார்கள். தாங்கள் தான் அதிமேதாவி என நினைப்பு. 

யாரிடம் யாரைப் பற்றிப் பேசுகிறோம் எனத் தெரியாமல் உளறி தான் ஆதிரையிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறோம் என அவனுக்கு அப்போது தெரியவில்லை. யார் அந்த ஆதிரை பெரிய ஆளா அவ, நானும் பார்கிறேன் என்ற எண்ணம் மனோஜிற்கு. 

நிச்சயம் அன்று விடியற்காலையில் எழுந்து குளித்துக் கிளம்பிய வெற்றி, பகல் நேரம் என்றாலும் வீட்டு காவலுக்கு ஆள் ஏற்பாடு செய்துவிட்டு, “அம்மா வாங்க கிளம்பலாம்.” என அவன் குரல் கொடுக்க, 
“இதோ வந்துட்டேன்.” என்ற ஜோதி அங்கிருந்த வேலை ஆளை அழைத்து, நான்கு ஐந்து பைகளை காரில் ஏற்றினார். 
ஆதிரையின் வீட்டிற்கு என வெற்றி நினைத்துக் கொண்டான். காலை உணவுக்கு வந்துவிடுவதாக அதிரையிடம் சொல்லி இருந்தான். 

காரில் எரிய பிறகே ஜோதி, “அக்கா வீட்டுக்கு போய் அவளையும் பிள்ளைகளையும் நாம்தான் கூடிட்டு போகணும்.” எனச் சொல்ல, வெற்றிக்கு மிகுந்த கோபம் வந்தது. 

“அங்க வேற போனா.. நான் எப்ப மாமா வீட்டுக்குப் போறது. விசேஷ நேரத்துக்குப் போனா நல்லாவா இருக்கும். அக்கா அத்தானோட தான வருவா… அவளை நேரா அங்க வர சொல்லுங்க.” 

“உங்க அத்தான் வரலையாம். கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டாராம்.” 

“இதையெல்லாம் நீங்க முதல்லையே சொல்ல மாட்டீங்களா மா..” 

“போற வழியில கூடிட்டு போவோம்னு நினைச்சேன்.” 

“போற வழியா… அவங்க வீடு ஒரு பக்கம், இவங்க வீடு ஒரு பக்கம். சென்னை என்ன சின்ன ஊரா.” 

“நீ சென்னை வந்திட்டு அங்க வரலைனா, அத்தான் கோவிச்சுப்பாரு, எப்படியும் அங்க போகணும்.” 

இவரிடம் பேசுவதே வீண் என நினைத்த வெற்றி வாயை மூடிக் கொண்டான். 

எட்டு மணி போலப் போன் செய்த ஆதிரை, “எங்கங்க இருக்கீங்க? கிட்ட வந்துடீங்களா?” எனக் கேட்க, 

“சென்னைகிட்ட வந்தாச்சு, அக்கா வீட்டுக்கு போய் அவளையும் பசங்களையும் கூடிட்டு வந்திடுறேன்.” வெற்றி சொல்ல, 

அங்கே சென்றால் அவன் வர எவ்வளவு நேரம் ஆகும் என ஆதிரைக்குத் தெரியும். சரி என்றவள், வேறு எதுவும் பேசாமல் வைத்து விட்டாள். 

“என்ன டி சொன்னாரு மாப்பிள்ளை.” என்ற மங்கையிடம், “அவர் அவங்க அக்கா வீட்டுக்கு போயிட்டு வராராம். அங்கேயே சாப்பிட்டு வந்திடுவார், நீங்க மத்த வேலையைப் பாருங்க.” என்றுவிட்டு சென்ற மகளையே மங்கை கவலையாகப் பார்த்தார். 

கணவன் வருகிறான் எனக் காலையிலேயே எழுந்து குளித்துத் தயராக இருந்தாள். வீடு நிறைய உறவினர்கள் இருக்க, ஆதிரை எல்லோரையும் கவனித்துக் கொண்டு இருந்தாலும், முகம் மிகவும் வாடிக் கிடந்தது. 

கிர்த்திகா வீட்டுக்கு சென்றால், அவள் இன்னமும் கிளம்பாமல், காலை உணவு செய்வதில் பரபரப்பாக இருந்தாள். 

“என்னக்கா இன்னும் கிளம்பாம இருக்க?” 

“இதோ நீங்க எல்லாம் சாப்பிட்டதும் கிளம்ப வேண்டியது தான்.” என்றவள்,
 “என்னங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.” எனச் சொல்ல, முரளி அசைவதாகவே இல்லை. 

கிர்த்திகா திரும்பச் சொல்ல, “ஞாயிற்றுக் கிழமை கூட நிதானமா இருக்க விட மாட்டியா?” என்றான். 

“நாங்க விசேஷத்துக்குப் போகணும் இல்ல…” 

“பதினோரு மணிக்கு மேலத்தானே இப்போ என்ன அவசரம்.” எனப் படித்துக் கொண்டிருந்த பேப்பரில் இருந்து பார்வையை விளக்காமல் அவன் சொல்ல, 

“அவரை ஏன்கா தொந்தரவு பண்ற. நீ எனக்கு டிபன் எடுத்து வை பசிக்குது.” என வெற்றி சொல்ல, கிர்திக்கா அவனுக்கு உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அக்கா பிள்ளைகளுடன் உட்கார்ந்து உண்டவன், “அக்கா அம்மாவை இங்க விட்டுட்டு போறேன். நீயும் அம்மாவும் டாக்ஸி பிடிச்சு வந்திடுங்க.” என்றான். 

“சரி டா நீ கிளம்பு.” என்றாள் கிர்த்திகாவும். 

மாப்பிள்ளையின் முக மாறுதலை கவனித்த ஜோதி, “சேர்ந்தே போகலாமே..” என இழுக்க, 

“நானும் விசேஷ நேரத்திற்குப் போனா நல்லா இருக்காது. நான் முன்னாடி போறேன், நீங்க நிதானமா கிளம்பி வாங்க.” என்றான். 

ஜோதி மேலும் எதோ சொல்ல வர, “அம்மா, அவனும் அவன் பிள்ளைகளைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. அவன் போகட்டும் விடுங்க.” என்றால் கிர்த்திகா. 

முரளியின் முகம் கடுகடுவெனத் தான் இருந்தது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் வெற்றி விடைபெற்றுக்கொண்டான். 

“ஏன் இருந்து உங்களையும் கூடிட்டு போனா என்ன? அப்படியென்ன அவசரம் அவனுக்கு.” முரளி தன் கோபத்தைக் காண்பிக்க, 

“அவங்க வீடு விஷேஷத்துல, வீட்டு ஆளா அவங்க மாப்பிள்ளை முன்னாடி நிற்கணும்னு எதிர்பார்ப்பாங்க இல்ல…அதெல்லாம் நாம சொல்லக் கூடாது.” எனச் சொல்லிவிட்டுக் கிர்த்திகா சென்றுவிட்டாள். 

அவள் பக்க விசேஷம் என்றால்… முரளி எப்போதுமே இப்படித்தான். கிளம்பப் படுத்தி வைப்பான். இதே அவன் பக்க சொந்தமாக இருக்கட்டும், முதல் ஆளாக நிற்பான். 

இவன் குணம் தெரிந்துதான் கிர்த்திகா அடிக்கடி பிறந்து வீட்டுக்கும் செல்ல மாட்டாள். இருப்பது ஒரு தம்பி அவனையும் பகைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. 

கணவன் திடிரென்று வந்து நிற்க, ஆதிரைக்கு ஒரே ஆச்சர்யம். அதுவரை இருந்த மன சுணுக்கம் மறைய… முகம் மலர்ந்து கணவனை வரவேற்றாள். 

“எங்க அத்தை அண்ணி எல்லாம்.” 

“அக்கா இன்னும் கிளம்பவே இல்லை. அதுதான் அவங்களை மெதுவா கிளம்பி வர சொல்லிட்டேன்.” 

“உங்க அத்தானைப் பத்திதான் தெரியும் இல்ல.. இருந்து கூடிட்டு வந்திருக்க வேண்டியது தான.. அவர் உங்க அக்காவைத்தான் திட்டிட்டு இருப்பார்.” 

“அவர் இஷ்ட்டத்துக்கு எல்லாம் எப்பவும் ஆட முடியாது. சரி அதை விடு. பசங்க எங்க?” 

“அருண் எங்கையாவது விளையாடிட்டு இருப்பான். பாப்பா பாட்டிகிட்ட இருக்கா.” 

வெற்றியை பார்த்ததும் ஆளாளுக்கு அவனை நலம் விசாரிக்க, வெற்றியும் அவர்களை விசாரித்தான். அருண் தந்தையைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். 

வெற்றி மகனை தூக்கி முத்தமிட, “அப்பா, இன்னைக்கு நானும் உங்களோட நம்ம வீட்டுக்கு வரேன்.” என்றான். 

“உங்க அம்மா இல்லாம இருப்பியா டா.” 

“இருப்பேன்.” என்ற மகனை வெற்றி ஆச்சர்யமாகப் பார்க்க, 

“அப்பா அப்பான்னு என் உயிரை எடுத்திட்டான். ஒரு வாரம் தானே இருப்பான் கூடிட்டு போங்க.” என்றால் ஆதிரை. 

“நான் விளையாடப் போறேன்.” என அருண் இறங்கி ஓடிவிட,
பாட்டி சென்று அவனின் மகளை வெற்றியின் கைகளில் கொடுக்க, “பேபி, அழகா இருக்கீங்க டா பட்டு.” என மகளை அவன் வாஞ்சையுடன் கொஞ்ச, “சாப்பிடுங்க மாப்பிள்ளை.” என மங்கை வந்து நின்றார். 

“அக்கா வீட்ல சாப்பிட்டேன். ஸ்வீட் மட்டும் கொடுங்க அத்தை.” என்றான். 

“நீங்க ரூமுக்கு போங்க மாப்பிள்ளை. ஆதிரைகிட்ட கொடுத்து விடுறேன்.” என்று மங்கை சொல்ல, வெற்றி மகளோடு மாடிக்கு ஏறினான். 

“வரவேண்டியவங்க வந்திட்டாங்க. இனி எல்லாம் மண்டபத்துக்குதான் வருவாங்க. நாங்க எல்லாம் முன்னாடி கிளம்பிப் போறோம். நீ நிதானமா கிளம்பி வா…” எனச் சொல்லி மகளிடம் பலகாரம் இருந்து தட்டை கொடுத்தவர், “நீயும் சாப்பிட்டு மாப்பிள்ளைக்கும் கொடு.” என அனுப்பி வைத்தார். 

மெத்தையில் மகளைப் படுக்க வைத்து, வெற்றியும் அவள் அருகே படுத்துக் கொண்டான். ஆதிரை உணவுத் தட்டை கொண்டு வந்து உள்ளே வைத்துவிட்டு சென்று கதவை தாளிட்டு வந்தவள், கட்டிலில் உட்கார, வெற்றி உடனே அவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள, கணவனின் முகத்தை மனைவியும் வருடிக் கொடுத்தாள். 

பேச்சுக்கள் இல்லாத மௌனம் மட்டுமே. இதுவே போதும் என்பது போல இருவரும் அந்த நேரத்தை ரசித்தபடி இருந்தனர். 

சிறிது நேரம் சென்று ஆதிரை “எந்திரீங்க ஸ்வீட் சாப்பிடுங்க.” என்றாள். 

“ம்ஹும்… எனக்கு இப்ப வேண்டாம்.” என்றவன், திரும்பப் படுத்து ஆதிரையின் இடுப்பை அணைத்தபடி கண்ணைக் மூடிக்கொள்ள… ஆதிரை தட்டை எடுத்துக் கையில் வைத்தபடி உண்ண ஆரம்பித்தாள். 

அவள் உண்டு முடிக்கும் வரை வெற்றி அசையவே இல்லை. அவனுக்காகச் சாப்பிட்டு கைகழுவ கூட எழுந்துகொள்ளாமல் ஆதிரை அப்படியே உட்கார்ந்து இருந்தாள். 

Advertisement