Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 13

“அம்மா…” என அருண் வந்து கதவை தட்ட, அவசரமாக மனைவியின் இதழில் முத்தமிட்ட வெற்றி விலகி கட்டிலில் படுக்க, ஆதிரை சென்று கதவை திறந்தாள். 


“நான் ஆச்சியோட மண்டபத்துக்குப் போறேன். டிரஸ் கொடுங்க.” என்ற மகனுக்கு முகம் கழுவி உடைமாற்ற, வெற்றி எழுந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். கணவனின் கையில் இனிப்பைக் கொடுத்தவள், முதலில் மகளைக் கவனிக்கச் சென்றாள். 

அப்போது வந்த மங்கை பேத்திக்கு கஞ்சியும், மருமகனுக்கும் டீயும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார். 

“ஏன் மா நான் வர மாட்டேனா…” என ஆதிரை சொல்ல, “உன் பிள்ளையைக் கிளப்பி நீயும் கிளம்ப வேண்டாமா? நாங்க அருணை கூடிட்டு முன்னாடி போறோம்.” எனச் சொல்லிவிட்டு சென்றார். 

கணவனிடம் டீயை கொடுத்துவிட்டு, மகளை மடியில் போட்டு அரிசியில் ஆன கஞ்சியை ஆதிரை புகட்ட ஆரம்பித்தாள். 

“என் செல்லம் கஞ்சி குடிக்கிறீங்களா?” வெற்றி கேட்க, பொக்கை வாய் காட்டி மகள் சிரிக்க, அந்த அழகில் வெற்றி மயங்கியே போனான். 

கஞ்சி கொடுத்து முடித்து, மகளைக் கட்டிலில் விட்ட ஆதிரை தானும் கிளம்ப ஆரம்பித்தாள். மனைவி கிளம்பும் அழகை ரசித்தபடி வெற்றி உட்கார்ந்து இருந்தான். 

பச்சை பட்டு அதற்குப் பொருத்தமாகக் காதில் பெரிய குடை ஜிமிக்கி, கழுத்தில் மூன்று அடுக்காக நகைகள், கை நிறைய வளையல்களும் எடுத்து அணிந்தவள், மரகத சிலையாய் ஜொலிக்க, மனைவியை விட்டு பார்வையைத் திருப்புவது வெற்றிக்கு எளிதாக இல்லை. 

கணவனுக்குப் புதிதாக வாங்கிய உடைகளை எடுத்துக் கொடுத்தவள், மகளுக்கும் பட்டுப் பாவாடை சட்டை அணிவித்தாள். முகம் கழுவிவிட்டு வந்து, மனைவி வாங்கி இருந்த பேன்ட் ஷர்ட் எடுத்து  அணிந்து வெற்றி கிளம்ப, அவனை இழுத்து தன் முன் நிறுத்தி, அவனின் படிய வாரி இருந்த சிகையை, மேல்நோக்கி தூக்கி வாரினாள். 
மனைவியின் விருப்பத்திற்கு விட்டவன், அவள் வாரி முடித்ததும், போகலாமா எனக் கேட்க, ஏற்கனவே தயாராக வைத்திருந்த கைபையை எடுத்தவள், மகளைச் சின்ன மெத்தையோடு தூக்கிக் கொண்டாள். 

மனைவியிடம் இருந்த பையை வாங்கியவன், அவள் சொன்னபடி அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டான். கீழே இருந்த வேலை ஆளிடம் வீட்டை பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஆதிரை கணவனின் காரில் மகளோடு ஏறினாள். 

மண்டபம் வீட்டின் அருகேதான். தாமதிக்காமல் வந்து நின்ற மகளைப் பார்த்ததும், சிவமணிக்கும் மங்கைக்கும் பெருமைதான். 

வெற்றி மாமனாரோடு நின்று வந்தவர்களை வரவேற்க, ஆதிரை குழந்தையோடு தனி அறைக்குச் சென்றவள், மகள் இப்போது உறங்கும் நேரம் என்பதால்… பால் கொடுத்து உறங்க வைத்தாள். பிறகு பாட்டியின் பொறுப்பில் குழந்தையை விட்டுவிட்டு அம்மாவுக்கு உதவச் சென்றாள். 

நிச்சயதார்த்தம் செய்ய வாங்கி வந்த சீர் வரிசைகளைத் தட்டில் அடுக்கிக் கொண்டு இருந்தனர். ஆதிரையும் சென்று அவர்கள் வாங்கி இருந்த நிச்சய புடவை மற்றும் நகைகளைத் தட்டில் வைத்தாள். 

“ஆதி இந்தத் தட்டை மட்டும் நீயே கையில வச்சுக்கோ.” 

“சரிமா…” 

இவர்கள் தட்டு அடுக்கும்போது வந்த மஞ்சுளா, பெரிய மகளுக்கும் மகனுக்கும் ஆதிரையை ஜாடையாகக் காட்டினார். 

ஏற்கனவே தங்களை விட, சக்தியின் குடும்பம் செல்வாக்கானது என்பதில் மனோஜிற்கு வருத்தம் தான். அதிலும் ஆதிரையின் செழுமையான தோற்றம் பார்த்து இன்னும் வயிறு எரிந்தது. 

மஞ்சுளா ஆதிரையை நலம் விசாரிக்க, அவருக்குப் பதில் சொன்னாலும், ஆதிரை அவள் வேலையில் கவனமாக இருந்தாள். 

அங்கே அந்த மண்டபத்தின் வளாகத்திலேயே பிள்ளையார் கோவில் இருக்க, அங்கே இருந்து மாப்பிள்ளை வீட்டினர் சீர் வரிசை தட்டை கொண்டு வந்தனர். 

சக்திக்கு ஒருபுறம் ஆதிரையும், மறுபுறம் வெற்றியும் நடந்து வர, மற்ற உறவினர்கள் வரிசை தட்டுடன் பின்னே நடந்து வந்தனர். ஆதிரையின் கையில் பெண்ணிற்கான புடவையும், நகையும் இருந்தது. அப்போதுதான் கிர்த்திகாவும் ஜோதியும் வந்து சேர்ந்தனர். அவர்களும் இவர்களோடு சேர்ந்து மண்டபத்தின் உள்ளே சென்றனர். 

மேடையில் வரிசை தட்டை வைத்துவிட்டு வந்த ஆதிரை, பாட்டியிடம் இருந்த மகளை வாங்கி ஜோதியிடம் கொடுத்தவள், “அத்தை வேற யார்கிட்டயும் பாப்பாவை கொடுக்காதீங்க.” என எச்சரித்தாள். 

மகளுக்கு நகைகள் போட்டிருந்தாள். ஜோதிக்கு அவ்வளவு விவரம் இருக்காது. யாராவது கேட்டால் குழந்தையைக் கொடுத்து விடுவார். நகைக்காகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய் விட்டால். அதற்குப் பயந்து அங்கேயே நின்று கொண்டிருந்தாள். 

அதை உணர்ந்த கிர்த்திகா “நான் குழந்தையைப் பார்த்துகிறேன் ஆதிரை.” எனச் சொன்ன பிறகே, ஆதிரை அங்கிருந்து சென்றாள். 

நிச்சய தாம்பூலம் மாற்றி ஆதிரை புடவை தட்டுடன் மணமகள் அறைக்குச் செல்ல, மேனகா அவளை வரவேற்றாள். ஆதிரையும் புன்னகையுடன் நலம் விசாரித்தவள், அவளிடம் புடவையைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொன்னாள். 

அங்கிருந்த அழகு கலை நிபுணர். புடவையை வாங்கிப் பிரித்தவர், அதன் அழகில் மயங்கி, “புடவை ரொம்ப நல்லாயிருக்கு.” எனச் சொல்ல, அதன்பிறகே மேனகா பார்த்தாள். 

அவளுக்கும் புடவை மிகவும் பிடித்திருக்க, தான் போயிருந்தால் கூட இப்படி வாங்கி இருக்க மாட்டோம் என நினைத்துக் கொண்டாள். 

மஞ்சுளாவால் உருவேற்றி வைக்கபட்டிருந்த விஷயம் பொசுக்கெனப் போய்விட்டது. 

புடவை கட்டி முடித்ததும், மேனகாவை அழைத்துக் கொண்டு ஆதிரை கிளம்ப, கூட மேனகாவின் அக்கா ராதாவும் வந்தாள். 

மேனகாவும் சக்தியும் மோதிரம் மாற்றிக்கொள்ள, மேனகாவிற்கு வாங்கி இருந்த நகைகளை, ஆதிரை தான் போட்டு விட்டாள். மங்கை இருவருக்கும் நலங்கு வைக்க, அடுத்த ஆதிரை வைத்தாள். பிறகு மற்றவர்கள் வைத்தனர். விழா சிறப்பாக நடந்து முடிய, வந்திருந்த உறவினர்கள் உணவு அருந்த சென்றனர். 

“உன் பொண்ணு தூங்கும்போதே நீயும் சாப்பிட்டு வந்திடு.” என மங்கை சொல்ல, பாட்டியிடம் மகளைக் கொடுத்துவிட்டு, ஆதிரை தங்கள் வீட்டினருடன் உணவருந்த சென்றாள். 

அவள் திரும்ப வந்த போது, மகளும் விழித்திருக்க, அறைக்குள் சென்று அவளுக்குப் பசியாற்றி விட்டு வந்தாள். சிறிது நேரத்தில் கிரத்திகாவும் அவள் பிள்ளைகளும் கிளம்ப… வெற்றி அவர்களை வழியனுப்ப சென்றான். கூடவே ஜோதியும் சென்றார். 

மகளை வைத்திருக்க ஆதிரை பாட்டியை தேட, அவர் அங்கே மேனகா வீட்டினருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். ஆதிரை சென்று பிள்ளையை அவரிடம் கொடுத்தாள். 

“நீ களைப்பா இருப்ப… உன் புருஷனை அழைச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான…” என்ற பாட்டியிடம், “அவர் அண்ணியை வழியனுப்ப போயிருக்கார் பாட்டி. வந்ததும் போறேன்.” என்றாள். 

இதுதான் சமயம் என நினைத்த மனோஜ், “உங்க பேரனுக்குப் பெரிய இடத்தில பார்த்திட்டு, உங்க பேத்திக்கு மட்டும் இப்படிச் சின்ன இடத்தில கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கீங்களே…. அவங்களையும் நல்ல வேலையில இருக்கிற மாப்பிள்ளைக்குக் கொடுத்திருக்கலாமே…” என அவன் வாய் விட… 

ஆதிரைக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. யார் டா நீ என்பது போல அவள் மனோஜை பார்க்க, மேனகாவோட அக்கா புருஷன் எனப் பாட்டி சொன்னவர், “அவங்க சின்ன இடம் எல்லாம் இல்லை.” என்றார் மனோஜிடம். 

“இல்லை விவசாயம் தான பார்க்கிறதா சொன்னாங்க. அதுதான் சொன்னேன்.” என மனோஜ் மென்று விழுங்க. 

“நீங்க என்ன வேலையில இருக்கீங்க மிஸ்டர்?” என ஆதிரை கேட்க, 

“நான் சாப்ட்வேர் இன்ஜினியர்.” மனோஜ் பெருமையாகச் சொல்ல, 

“ஓ… நீங்க சோறு எல்லாம் சாப்பிடுவீங்க தானே… இல்லை வேறு எதுவும் சாப்பிடுவீங்களா?” 

“சாப்பிடுவேனே… ஏன் கேட்கறீங்க?” 

“இல்லை விவசாயம் தானேன்னு சொன்னீங்களே…. அதுதான் கேட்டேன். விவசாயத்தைக் கீழா பார்க்கிறவங்க, சாப்பிடவே கூடாது.” 

“உங்க சாப்ட்வேர் வேலையை விட… எங்க விவசாயம் ஒன்னும் கீழானது இல்லை. உங்க வேலை எப்ப வேணா போகும். ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. என் புருஷன் நூத்துக்கனக்கான பேருக்கு வேலை கொடுத்திட்டு இருக்கார்.” 

“உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலைப் பார்க்கிறது எல்லாம் எங்களுக்குச் சரி வராது.” 

“ஆமாம் உங்க ஊர் எது? அப்பா அம்மா யாரு?” என ஆதிரை கேட்க, 

“அப்படி ஒன்னும் சொன்னதும் தெரியுற இடம் இல்லை.” எனப் பாட்டி சொல்ல, 

“நீங்க திருவண்ணாமலைக்கு வந்தா வெற்றிவேல் வீட்டுக்கு போகணும் சொல்லுங்க. அட்ரஸ் இல்லாமலே கொண்டு வந்து மரியாதையா விட்டுட்டு போவாங்க.” என ஆதிரை நன்றாகக் கொடுத்துவிட்டு கிளம்ப… மனோஜின் முகத்தில் ஈயாடவில்லை. 

“அவங்க என்ன வீட்டுக்கு மட்டும் விவசாயம் பார்க்கிறாங்கன்னு நினைச்சீங்களோ… நூறு ஏக்கருக்கு மேல இருக்கும். சொந்த அரிசி மில்லும் இருக்கு.” 

“என் பேத்திக்கு வேலையில இருக்கிற எத்தனையோ வரன் வந்தது. ஆனா அவ இது போலச் செல்வாக்கான குடும்பத்துத்தான் போவேன்னு சொன்னான்னு சொல்லி… அவ அப்பா இங்க செஞ்சான்.” எனப் பாட்டி வேறு மனோஜின் காதில் இருந்து ரத்தம் வரும்வரை விடவில்லை. 

அப்போது அங்கு வந்த மோகன், ஏன் பாட்டி இதெல்லாம் சொல்றாங்க என்பது போலப் பார்க்க, “உங்க மாப்பிள்ளை தான் எங்க பெண்ணை ஏன் சின்ன இடத்தில செஞ்சீங்கன்னு கேட்டார். அதுதான் சொன்னேன். யாரு எப்படிப்பட்ட இடம்ன்னு கொஞ்சம் சொல்லி வைங்க.” எனச் சொல்லிவிட்டு பாட்டி எழுந்து சென்றுவிட, மோகனுக்குத் தர்மசங்கடம் ஆகிவிட்டது. 

“தேவையில்லாம அவங்க வீட்டுப் பெண்ணை எல்லாம் ஏன் பேசுறீங்க?” எனத் தன் மாப்பிள்ளையைக் கடிந்து கொண்டவர், “நீதான் ஒன்னும் இல்லாததைப் பேசி, இந்த அளவுக்கு இழுத்துவிட்டிருக்க. எல்லாம் உன்னால தான்.” என மஞ்சுளாவுக்கும் திட்டுக் கிடைத்தது. 

“நல்ல சம்பந்தம் பேசியே பிரச்சனையை உண்டாக்கிடாதீங்க. இனிமே யாரும் தேவையில்லாம ஒரு வார்த்தை பேசக் கூடாது.” என எச்சரித்து விட்டு சென்றார். 

ஆதிரையின் பாட்டி நடந்ததை அப்படியே மகன் மற்றும் மருமகளிடம் சொன்னவர், “நம்ம பெண்ணைப் பத்தி பேச அவன் யாரு? கல்யாணம் கூட ஆகலை, அதுக்குள்ள நம்ம பெண்ணைப் பத்தி பேசுறாங்க.” எனச் சொல்ல, 

“விடுங்க மா… அவர் எப்படி இருந்தாலும் நமக்கு ஒன்னும் இல்லை. நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணு நல்ல பொண்ணு. அது போதும் எங்களுக்கு. அவங்க அப்பா ரொம்ப நல்ல மாதிரி. எதுனாலும் அவர் பார்த்துப்பார்.” என்றார் சிவமணி. 

சக்தியும் மேனகாவும் தள்ளி நின்றிருந்தாலும் இருவர் காதிலுமே விழுந்தது. மேனகாவிற்குத்தான் தர்மசங்கடமாக இருந்தது. உறவினர்கள் எதாவது உளறிவிட்டு சென்று விடுவார்கள். அந்த வீட்டில் சென்று வாழ வேண்டிய பெண்ணைப் பற்றி நினைத்துப் பார்ப்பது இல்லை. 

நல்லவேளை மாமனார் தன்னை ஒன்றும் தவறாக நினைக்கவில்லை என நிம்மதி கொண்டாள். 

வெற்றி வந்ததும் ஆதிரை அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவள்,  மனோஜை மதிக்கக் கூட இல்லை. அதே போலத்தான் ஆதிரையின் வீட்டினரும் இருந்தனர். சக்தி கூட அவனிடம் சொல்லிக் கொள்ளவில்லை. 

வீட்டிற்கு வந்ததும் தன் கணவரை அவமதித்து விட்டதாக ராதா குதிக்க, “அத்தான் பேசினது தப்பு தானே… அதுவும் ஆதிரை அண்ணியைப் பத்தி பேசினது ரொம்பத் தப்புதான்.” என மேனகா சொல்ல, மஞ்சுளா சின்ன மகளை வியந்து போய்ப் பார்த்தார். 

“அவங்க என்னோட நாத்தனார், அவங்களைப் பத்தி பேசும் முன்னே அது என்னைப் பாதிக்கும்னு அத்தான் யோசிச்சாரா… அவர் பாட்டுக்கு பேசிட்டு போயிடுவார். நான்தானே அந்த வீட்ல போய் இருக்கணும். என்னைப் பத்தி நினைச்சு பார்த்தீங்களா?” 

மேனகா கேட்டதற்குப் பதில் சொல்ல முடியாமல் ராதா நிற்க, அப்போது வந்த மோகன், “எல்லாம் உங்க அம்மா ஆரம்பச்சு வைத்தது. பணத்தை மட்டும் பார்த்திருந்தா அவங்க இன்னும் பெரிய இடமே பார்த்து இருக்கலாம். ஆனா அவங்க தெரிஞ்ச இடம், நல்ல குடும்பமான்னு தான் பார்த்தாங்க.” 

“உங்க அம்மா அவங்களைப் பார்க்கும்போது எல்லாம் பவ்வியமா பேசுவா… இன்னைக்குக் கல்யாணம் பேசினதும் அப்படியே மாறிட்டா.” 

“நாம இப்படி நடந்துகிட்டா போற இடத்தில, நம்ம பொண்ணுக்கு எப்படி மரியாதை இருக்கும்னு கூட யோசிக்கலை.” 

“நீங்க பண்ணி வச்ச காரியத்துக்கு, அவங்க அப்படித்தான் நடந்துப்பாங்க. நமக்கு வேற வழியில்லை. இனியாவது ஒழுங்கா இருங்க. அப்பத்தான் அவங்க மனசு மாறி இறங்கி வருவாங்க.” என்றார் மோகன். 

வீட்டிற்கு வரவே மூன்று மணி ஆகி இருக்க, பிள்ளைகளோடு வெற்றியும் படுத்து உறங்கி விட்டான். மாலை அவன் விழித்த போது, மகள் தொட்டிலில் இருக்க, மகன் இருவருக்கும் நடுவே படுத்து இருந்தான். 

மகனை ஓரத்திற்கு நகர்த்திவிட்டு நடுவில் படுத்தவன், மனைவியைப் பின்பக்கம் இருந்து அணைத்துக்கொள்ள, அரைகுறை உறக்கத்தில் இருந்த ஆதிரையும் விழித்துக் கொண்டாள். 

“என் பொண்டாட்டியை கட்டி பிடிச்சே எத்தனை நாள் ஆச்சு.” என்றவன் ஏக்க பெருமூச்சு விட, அவனைப் பார்க்கும்படி திரும்பி படுத்த ஆதிரை, “ஆமாம் நான் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருந்தேன். உங்களுக்கு வர கஷ்ட்டம் தான்.” என்றாள் கேலியாக. 

“தோட்டத்தில நெல்லு போட்டிருக்கோம். ஒரு நாள் தண்ணி சரியா பாய்சலைனா கூட என்ன ஆகும்ன்னு உனக்குத் தெரியும். நான் இருக்கும் போதே, கொஞ்சம் அப்படி நகர்ந்திட்டா, வேலையைப் போட்டுட்டு வந்து உட்கார்ந்திடுவாங்க. இதுல நான் இல்லைனா என்ன ஆகும்னு நினைச்சுப் பாரு.” 

“இன்னைக்கே முருகேசனை நின்னு பார்க்கனும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.” 

“எனக்கும் அதெல்லாம் தெரியும், நான் உங்களை நேத்து நைட் தான் வர சொன்னேன்.” 

“வந்து மட்டும் என்ன ஆகப்போகுது? உன்னைப் பார்த்திட்டு மட்டும் எல்லாம் என்னால இருக்க முடியாது.” 

“உங்களைப் பார்த்திட்டு மட்டும் யாரு இருக்கச் சொன்னா?” 

“உனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கே…” 

ஆதிரை பதில் சொல்லாமல் கணவனை ஒரு பார்வைப் பார்க்க, “ஓ… இனிமே ஒன்னும் இல்லையா…. நான்தான் நல்ல சந்தர்ப்பத்தை விட்டுட்டேனா….” என ஏக்கமாகச் சொன்ன கணவனை, “பரவாயில்லை இன்னும் ஒரு வாரம்தான், அப்புறம் நான் அங்க வந்திடுவேன்.” என ஆதிரை தேற்றினாள். 

“அருண் தான் என்னோட வரானே… நீ இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வரையா.. அங்க வந்தா உனக்கு நிறைய வேலை இருக்கும்.” 

“போதும், இங்க இருந்திருந்து எனக்குப் போர் அடிச்சிடுச்சு. நான் அங்க வரேன். அப்புறம் சக்தி கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி இங்க வந்தா, அப்பா அம்மாவுக்கு உதவியா இருக்கும்.” 

“சரி உன் இஷ்டம்.” 

“கீழே சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. நாம ரொம்ப நேரம் ரூம்ல இருந்தா நல்லா இருக்காது. நான் முன்னாடி போறேன். நீங்க அருண் எழுந்ததும் கூடிட்டு வாங்க.” என்ற ஆதிரை தலைவாரி விட்டு, முகம் கழுவிகொண்டு வர, வெற்றி அவளை அனைத்துக் கொண்டவன், “என் மேல கோபமா ஆதி.” எனக் கேட்க, ஆதிரை இல்லை எனத் தலையசைக்க, 

“சாரி நிஜமா சாரி.” என்றவன், அவள் இதழில் முத்தமிட்டு விலக, விழித்திருந்த மகளைத் தூக்கிக் கொண்டு ஆதிரை கீழே சென்றாள். 

அதன்பிறகு அன்று இரவே ஊருக்குச் செல்வதாக இருந்த உறவினர்களைக் கவனித்து வழியனுப்பவே நேரம் சரியாக இருக்க, வெற்றியும் எட்டு மணிப்போல இரவு உணவை முடித்துக்கொண்டே, தன் அம்மா மற்றும் மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

தங்கள் அறைக்கு வந்து, அடுத்த வாரம் ஊருக்கு செல்ல, இப்போதே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இந்த வாரத்திற்குத் தேவையானது மட்டும் வெளியே வைத்துவிட்டு, மற்றவற்றைப் பைகளில் எடுத்து அடுக்கி வைத்தாள். 

கணவன் நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்து விட்டான் என்பது தெரியவும் தான் உறங்க சென்றாள். அடுத்த வாரம் இந்த நேரம் தங்கள் ஊரில் கணவனுடன் இருப்போம் என்ற இனிய கற்பனையில் உறங்கிப் போனாள்.

Advertisement