Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 11 

மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல… அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர். 


கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப் பார்த்து, “கண்டிப்பா பண்ணிக்கணுமா?” எனக் கேட்க, 

“என்னைக் கேட்கிற உனக்கு இஷ்ட்டம் இல்லையா?” என்றான். 

“இன்னும் ஒன்னு மட்டும் பெத்துக்கலாமே?” 

“அடியே, அடங்க மாட்டியா நீ?” 

“இந்தத் தடவை பிரசவம் ஈஸியா தான இருந்துச்சு.” 

“என்னது ஈஸியா இருந்துச்சா? நீ மாசமானதுல இருந்து பிள்ளை பெத்துகிற வரை… என் மனசு அடிச்சிட்டு இருந்தது எனக்குத்தான் தெரியும். போதும் மா என்னால திரும்ப டென்ஷன் ஆக முடியாது.” 

“வலிச்சு பெத்துகிற நானே பயப்படலை… சும்மா பார்த்திட்டு இருக்க உங்களுக்கு என்ன?” 

“அதுதான் பிரச்சனையே… சும்மா பார்த்திட்டு தானே இருக்க முடியுது. அவ்வளவு பெரிய வயிறை வச்சிகிட்டு நீ நடக்க உட்கார சிரமப்பட… நான் பார்த்திட்டு தான் இருந்தேன். அதோட நீ வலியோட கஷ்ட்டப்படும் போதும் பார்த்திட்டு தான் இருந்தேன்.” 

“நீ கஷ்டப்படுவதைப் பார்த்திட்டும் ஒன்னும் செய்ய முடியாம இருக்கிறது எவ்வளவு வேதனைன்னு எனக்குதான் தெரியும்.” 

“என்னவோ நாட்டில நான் மட்டும் தான் பிள்ளை பெத்துகிற மாதிரி.” 

“அவங்களை எல்லாம் ஏன் இழுக்கிற? எனக்கு நீ மட்டும் தானே பொண்டாட்டி.” 

ஆதிரை கணவனை முறைக்கும் போதே உள்ளே வந்த ஆதிரையின் அம்மா, “பிள்ளையைப் பெத்துகிட்டா போதுமா, அதை நல்லபடியா வளர்க்க தெம்பு வேண்டாமா… உங்க பாட்டியும் தான் அந்தக் காலத்தில ஆறு பெத்தாங்க. என்னால முடிஞ்சுதா? இந்த வயசில உங்க பாட்டி எப்படி இருக்காங்க நான் எப்படி இருக்கேன்.” 

“இந்தக் காலத்திற்கு ரெண்டே அதிகம். ஒழுங்கா மாப்பிள்ளை சொல்றதை கேளு.” எனச் சொல்ல… ஆதிரை உறங்குவது போலக் கண்ணை மூடிக்கொள்ள… வெற்றி சிரிப்புடன் விடைபெற்றான். 

மறுநாள் காலை அறுவை சிகிச்சை முடிந்து வந்த ஆதிரைக்கு வலியும் இருக்க… பேச கூடச் செய்யாமல் கண்ணை மூடி படுத்தே இருந்தாள். 

ஆதிரையின் தந்தை சிவமணி. மகளின் க்ளுகோஸ் போட்ட கையைத் தடவி விட்டபடி இருந்தார். அவர் கண்ணே மணியே என மகளைக் கொஞ்சி வளர்க்கவில்லை என்றாலும், பாசத்திற்கு ஒன்றும் குறை இல்லை.

ஆதிரை இருப்பதைப் பார்த்த வெற்றிக்கே, இந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கலாமோ என இருந்தது. 


அதை உணர்ந்தது போல அவனின் மாமியார், “ஒரு நாள் வலி மாப்பிள்ளை. நாளையில இருந்து சரியாகிடுவா.” என்றார். 

“வலிக்காம இருக்க மருந்து எதுவும் இருக்கான்னு டக்டரை போய்க் கேட்டுட்டு வரவா?” எனச் சிவமணி கேட்க, 

“நான் ரெண்டுமே ஆபரேஷன் பண்ணி பெத்துப் போட்டேன். அப்ப எல்லாம் இந்த மனுஷனுக்குக் கண்ணு தெரிஞ்சுதா… இன்னைக்கு மகளுக்கு வலிக்குதுன்னு உடனே துடிக்கிறதைப் பாரு.” என நினைத்தவர், “போங்க, போய்க் கேட்டு டாக்டர்கிட்ட திட்டு வாங்கிட்டு வாங்க.” என்றார் கடுப்புடன். 

ஏற்கனவே வெற்றி சென்று கேட்டு திட்டு வாங்கி இருந்தான் என்பது வேறு விஷயம். 

மறுநாள் ஆதிரை தெளிவாக எழுந்ந்து உட்கார்ந்ததும் தான் அவள் தந்தைக்கும் கணவனுக்கும் நிம்மதி. சிவமணி அன்றே சென்னைக்குச் சென்றுவிட… வீடு திரும்பும் வரை, வெற்றி மனைவியோடு மருத்துவமனையில் இருந்தான். மறுநாள் ஆதிரையை வீட்டிற்கும் அனுப்பி விட்டனர். 

ஆதிரையை அவள் அம்மா பிரசவதிற்கே சென்னைக்குதான் வர சொன்னார். பிரசவத்திற்கு முன்பு மாதாந்திர பரிசோதனைக்கும் அலைய வேண்டும். பிள்ளை பெரும் நேரத்திற்குச் செல்ல முடியாது. முன்பே செல்ல வேண்டும், அருணுக்கு அத்தனை நாள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க முடியாது என்றே செல்லவில்லை. 

இப்போது நல்லபடியாகப் பிரசவம் முடிந்து இருக்க, பதினோராம் நாள் புண்ணியாதானம் முடிந்து, அவள் அம்மா வீட்டிற்குச் செல்வதாக இருந்தது. 

சிவமணிக்கு நிறைய உடல் உபாதைகள் உண்டு. அதனால் மங்கை பார்த்து பார்த்து சமைப்பார். மகள் மருத்துவமனையில் இருந்து வந்ததும், மங்கை ஊர் திரும்பிவிட… ஆதிரையின் பாட்டி வந்து உடன் இருந்தார். 

பிரசவமே முடிந்துவிட்டது இனிமேல் அம்மா வீட்டிற்குச் செல்ல வேண்டுமா என ஆதிரைக்கு இருக்க.. மனைவியை அனுப்ப வெற்றிக்குமே மனம் இல்லை. 

ஜோதி வேலை செய்யும் அழகுதான் தெரியுமே. அவள் பாலைக் கூட நேரத்திற்குக் காய்ச்சிக் கொடுக்க மாட்டார். குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மாருக்கு ஆகாரம் நேரத்திற்குக் கொடுக்க வேண்டும் அல்லவா… ஆனால் ஆதிரையின் பாட்டி கேட்டபிறகே ஒவ்வொன்றாக வரும். 

பிறந்த குழந்தையின் வேலைகளைப் பாட்டி பார்த்துக்கொள்வார். அப்போதும் அருணை ஆதிரைதான் பார்த்துக் கொண்டாள். ஒவ்வொன்றுக்கும் ஜோதி ஆதிரையிடம் வந்துதான் நிற்பார். 

“பாலைக் காய்ச்சவா, மதியத்திற்கு என்ன சமைக்க?” என ஆதிரையைக் கேட்டு கேட்டுகேட்டுதான் செய்வார். அவரின் குணமே அப்படித்தான். ஐம்பது வருடங்களுக்கு மேல் சமையல் அறையில் தான் இருந்திருக்கிறார். இருந்தாலும் தானாக எடுத்துச் செய்ய மாட்டார். 

பிறந்த குழந்தை பகலில் நன்றாக உறங்கிவிட்டு, இரவு விழித்திருக்க, ஆதிரைக்கு முழு ஓய்வு என்பது இல்லவேயில்லை. அதைக் கவனித்த வெற்றி, “நீ உங்க அம்மா வீட்டுக்குக் கிளம்பு. மூன்னு மாசம் கழிச்சு வந்தா போதும். அருணையும் உன்னோட அழைச்சிட்டு போ. இல்லைனா அங்க போயும் நீ நிம்மதியா இருக்க மாட்ட.” எனச் சொல்லி பதினோராம் நாள் புண்ணியாதானம் முடிந்ததும், மனைவி பிள்ளைகளைச் சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டான். 

அப்போதும் ஜோதி “இன்னைக்கு என்ன சமைக்க?” என மகனிடம் வந்து நிற்க, 

“அம்மா, நம்ம ரெண்டு பேருக்குத்தானே, நீங்களா பார்த்து பண்ணுங்க. உங்களுக்குச் செய்ய முடிஞ்சது செய்யுங்க போதும். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு, என்ன குழம்பு வைக்கன்னு எல்லாம் என்னைக் கேட்காதீங்க சொல்லிட்டேன்.” என்றான் வெற்றி கடுப்புடன். 

வீட்டு நிர்வாகம் மீண்டும் தன் கைக்கு வந்ததில் ஜோதி திக்குமுக்காடித்தான் போனார். 

எப்போதுமே வேலை ஆட்களை வைத்துக்கொள்வதில் விருப்பம் இல்லாதவர். இப்போது ஆதிரையும் இல்லாததால்… கொடுக்கும் சம்பளத்திற்கு நன்றாக வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், கொடுக்கும் சம்பளத்திற்கு மேலேயே வேலை வாங்கினார். 

தேய்ப்பதற்குப் பாத்திரம் அதிகம் இருப்பது போலத் தோன்றினால்… நான்கு பாத்திரங்களைத் தானே விளக்கி வைத்து விடுவாள் ஆதிரை. ஆனால் ஜோதியோ அதிகமாகப் பாத்திரங்களைப் போட… வேலை செய்பவளும் நடுநடுவே விடுமுறை எடுத்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டாள். 

ஆதிரை இருக்கும் போது உடல்நலமில்லை என்றால் கூட வேறு யாரையாவது அனுப்பும் வேலைகாரி, ஜோதியின் கண்களில் மட்டும் விரலை விட்டு ஆட்டினாள். 

“ஒரு நாள் வரா, ஒரு நாள் வர மாட்டேங்கிறா… இவளுக்காகக் காத்திட்டு இருக்கிறதுக்கு நாமே பண்ணிடலாம். இதுக்குதான் வேலை ஆள் எல்லாம் வச்சுக்கவே கூடாது.” என ஜோதி புலம்ப. 

ஆதிரை இருந்தவரை வீட்டு விஷயங்கள் எதுவும் வெற்றியின் காதுக்கு வராது. அருணின் பள்ளி வேலைகளையும் அவளே பார்த்துக்கொள்வாள். அதோடு தோட்டத்து கணக்கையும் சேர்த்து பார்ப்பாள். 

வெற்றிக்கு ஆதிரை இல்லாமல் இருப்பது சிரமமாக இருக்க… இங்கே வந்தால் அவள் ஓய்வு எடுக்க முடியாது என அவன் பொறுத்துக் கொண்டிருக்க… ஜோதி வேறு அவனை ஒருவழியாக்கினார். 
“வேலை ஆளை நிறுத்திட்டு நீங்களே எல்லா வேலையும் பண்ணிடுவீங்களா… உடம்புக்கு முடியாம போயிடப் போகுது. ஆதிரை வர்றவரை கொஞ்சம் பொருத்து போங்க. அவ வந்து பார்த்துப்பா.” என்றான். 

ஆதிரையை அவள் பிறந்த வீட்டினர் நன்றாகச் சீராட்டினார். ஆதிரையின் தம்பி சிவா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம், குழந்தைகள் இருவரும் அவனிடம் தான் இருப்பார்கள். பிறந்த குழந்தையைப் பாட்டி குளிக்க வைப்பது, மருந்து கொடுப்பது எல்லாம் பார்த்துக்கொள்ள…மங்கை மகளுக்குப் பத்தியமாகச் சமைத்துக் கொடுத்தார். மொத்தத்தில் ஆதிரை முழு ஓய்வில் இருந்தாள். 

ஒரு மாதம் முடிந்த நிலையில் ஆதிரையும் முடிந்த சில வேலைகளைப் பார்ப்பாள். வீட்டை ஒதுங்க வைப்பது, குழந்தையின் துணிகளை மடித்து வைப்பது என் எதாவது செய்து கொண்டிருப்பாள். 

நினைபெல்லாம் வெற்றியின் மீது தான். கணவன் என்ன செய்கிறானோ? எப்படி இருகிறனோ? என்றே மனதில் ஓடிக்கொண்டிருக்க, அங்கே போகட்டுமா எனத் தன் வீட்டினரிடமும் கேட்டு பார்த்தாள். “அங்க போனா நீ ரெஸ்ட் எடுக்க முடியாது. இந்த மாதிரி நேரத்துலதான் அம்மா வீட்டில இருக்கவும் முடியும். இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்.” என்றார் அவளின் பாட்டி. 

ஆதிரையின் தம்பி சிவாவுக்குப் பெரிய இடத்தில் இருந்து சம்பந்தம் வந்திருந்தது. அவர்கள் தெரிந்த இடம்தான். ஆதிரையும் சொந்தக்காரர் திருமணத்தில் அந்தப் பெண் மேனகாவை பார்த்து இருக்கிறாள். பெண் நன்றாகவே இருப்பாள். 

ஜாதகம் பார்த்து பொருந்தி இருக்க…ஏற்கனவே தெரிந்தவர்களும் என்பதால் ஆதிரையும் குழந்தையும் பார்க்க வருபது போல… மேனாகவின் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தனர். 

ஆதிரையும் குழந்தையும் பார்த்து விட்டு, திருமணம் குறித்து அவர்கள் பேச… ஆதிரைக்கு இப்போதுதான் குழந்தை பிறந்து இருப்பதால்… தாங்கள் இன்னும் எட்டு மாதங்கள் சென்றுதான் மகனின் திருமணத்தை வைப்போம் எனச் சிவமணி சொல்லிவிட்டார். 

“எட்டு மாதங்களா… அவ்வளவு நாள் ஏன் தள்ளி வைக்கணும்?”

“எங்க பெண் வந்து எல்லாம் பண்ணாத்தான் எங்களுக்குத் திருப்தி, திருமணப் புடவை வாங்க, நகை வாங்க இப்ப ஆதிரையாள அலைய முடியுமா? அதனால எட்டு மாசம் கழிச்சே வச்சுக்கலாம்.” எனச் சிவமணி முடிவாகச் சொல்லிவிட… பெண் வீட்டாருக்கு அதில் கொஞ்சம் ஏமாற்றம் தான். பெண்ணின் அம்மா மஞ்சுளா அதையே சொல்லி தங்கள் வீட்டில் புலம்பினார். 
“அவங்க பெண்தான் வந்து எல்லாம் வாங்கனுமா என்ன? நம்ம பெண்ணுக்கு வாங்க அவ ஏன் வரணும். நம்ம பெண் வந்தா போதாதா?” எனக் கொஞ்சம் கொதித்துப் போயே இருந்தார். 

“இதெல்லாம் சின்ன விஷயம் பெரிது படுத்தாதே… நல்ல சம்பந்தம் விட்டு விட வேண்டாம்.” என்றார் அவரின் கணவர் மோகன். 

மேனகா வீட்டினர் எட்டு மாதங்கள் சென்றே திருமணம் வைத்துக்கொள்ளச் சம்மததித்தனர். ஆனால் நிச்சயம் மட்டும் முதலில் வைத்துக்கொள்வோம் எனக் கேட்டதற்கு, சிவமணியும் சரி இரண்டு மாதங்கள் செல்லட்டும் என்றார்.

வெற்றி வேலையெல்லாம் முடித்து வந்து, இரவு உணவையும் உண்டுவிட்டுத்தான் ஆதிரையைக் கைப்பேசியில் அழைப்பான். 


மகளும் அந்நேரம் உறங்காமல் விழித்திருப்பாள் என்பதால்… வீடியோ கால் செய்துதான் பேசுவான். 

மகள் மெத்தையில் படுத்துக் கை கால் அசைக்கும் அழகை சிறிது நேரம் ரசித்தவன், அடுத்து மனைவியையும் ரசித்தான். தாய்மையே அழகுதான். அதிலும் பிறந்த வீட்டின் கவனிப்பில் இன்னும் மிளிர்ந்தாள். 

கணவனின் பார்வையைக் கண்டுகொண்டவள், “இங்க வரலாம் தானே… திருவண்ணாமலையில இருந்து சென்னை ரொம்பத் தூரமா.” என்றாள். 

“உனக்குத் தெரியும் என்னோட நிலைமை. நீயே இப்படிக் கேட்டா என்ன செய்வேன்.” என்றான். 

அலுவலகத்தில் வேலைப் பார்த்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு வரலாம். மில்லை கூட விக்ரம் பார்த்துக்கொள்வான். ஆனால் அவர்களின் தோட்டம், விவசாயம் செய்பவர்களுக்கு விடுமுறை ஏது? 

“நான் வேணா அங்க வந்திடவா?” 

“ஒன்னும் வேண்டாம். நீ மூன்னு மாசம் முடிஞ்சே வா…” 

“நான் உங்களை விட்டு இருக்கிறது உங்களுக்குக் கஷ்ட்டமாவே இல்லையா… நீங்க ரொம்பச் சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.” ஆதிரை மனதில் இருப்பதைக் கேட்டே விட… 

“உன்னை விட்டு நான் மட்டும் சந்தோஷமா இருப்பேன்னு நீ எப்படி நினைக்கிற? எனக்கும் கஷ்ட்டமாத்தான் இருக்கு.” 

“வாடின்னு சொல்ல, நீ என்ன வேணுமுன்னேவா உங்க அம்மா வீட்ல போய் உட்கார்ந்திருக்க.” 

கணவன் என்ன சமாதானம் சொன்னாலும், ஆதிரையின் முகத்தில் ஏக்கம் தெரிய… 

“நீ வேற ஏன் டி? நானே மூன்னு மாசம் எப்ப முடியும்னு இருக்கேன். இதுல நீ வேற இப்படிப் பார்த்து வச்சா… எனக்கு இன்னும் வருத்தமா இருக்காதா ஆதி.” 

“சரி விடுங்க. ஆன்டி எப்படி இருக்காங்க.” 

“எந்த ஆன்டி?” 

“உங்க அம்மா எனக்கு ஆன்டி தான.” 

“கொழுப்பு டி உனக்கு.” 

“சரி சொல்லுங்க எப்படி இருக்காங்க?” 

“அவங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்காங்க. எனக்கு விதவிதமா எங்க அம்மா சமைச்சு போடுறாங்க தெரியுமா?” 

“அப்படியா ஆனா உங்க உடம்பில ஒன்னும் ஓட்டினா மாதிரி தெரியலையே…” 

“இப்ப என்ன டி வேணும் உனக்கு. நீ இல்லாம நான் நல்லாயில்லை சொல்லணும் அவ்வளவுதானே… நல்லாயில்லை போதுமா.. இப்ப சந்தோஷமா உனக்கு. போய் நிம்மதியா தூங்கு.” என்றவன், மகளும் பசியில் சிணுங்க. குழந்தையைப் பாரு எனச் சொல்லிவிட்டு வைத்தான். 

ஆதிரை புன்னகையுடன் மகளைத் தூக்கி வைத்து பால் கொடுக்க.. அங்கே வெற்றியோ ஆதிரையைச் செல்லமாக் திட்டுக் கொண்டு இருந்தான். 

“தெரிஞ்சிட்டே கேட்கிறது.” என்ற போதிலும், அவளின் இந்தத் தொல்லை கூட அவனுக்குச் சந்தோஷத்தையே தந்தது. தன் மீது வைத்திருக்கும் அதிக அன்பின் காரணமாகவே. மனைவி இப்படிப் பேசுகிறாள் என அவனுக்குப் புரிந்தும் இருந்தது. மனைவியை பற்றிய இனிய நினைவுகளுடனே உறங்கினான்.

Advertisement