Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 10 

வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள். 


“நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?” 

“அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்?” 

“அப்ப நான் சரியில்லைனா நீங்களும் வேற ஒன்ன பார்த்துபீங்க, அப்படியா?” 

“வேற ஒன்னு பார்க்கிறாங்க. உனக்கே நாலு அறை விட்டு வழிக்குக் கொண்டு வர மாட்டேன்.” 

“அடிப்பியா என்னை? சரியான காட்டான்.” 

“என்ன டி இப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர… அப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர…” என வெற்றி விழிக்க, ஆதிரை அதைக் கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை. 

“ஒரு மனைவியோட கவுரவம் எது தெரியுமா? கணவன் பெரிய வேலையில இருக்கிறதோ, நகையோ, பணமோ, அந்தஸ்த்தோ இல்லை. கணவன் மனதில் மனைவிக்கு இருக்கும் இடம்தான்.” 

“சில பேர் என் மனசு ரொம்பப் பெரிசுன்னு ரெண்டாவது, மூணாவதுன்னு போனா… போறது மனைவியோட கவுரவம் தான்.” 

“அது எப்படி அந்தப் பெண்ணோட கவுரவம் போகும். அந்த ஆணோட மானம் தான் போகும்.” வெற்றி சொல்ல, 

“ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கிறவனை, இந்தச் சமுதாயம் கேவலமா பார்க்குதோ இலையோ, அவன் மனைவியை இவளுக்குப் புருஷனை ஒழுங்கா வச்சுக்கத் தெரியலை… அதுதான் அவன் வேற ஒருத்தியை பார்த்துகிட்டான்னு அப்பவும் பழியை அந்தப் பெண் மீது தான் போடும்.” 

“ஒரு மனைவியா தன்னுடைய கடமையை ஒழுங்கா செய்யலையா… அவருக்கு என்ன குறை வச்சோம்ன்னு தான் மனைவியும் யோசிப்பா…” 

“மனைவிக்கு மட்டுமான அன்பை வேற ஒருத்தர் கூடப் பகிர்ந்துக்கும் போது, ஒரு மனைவியா அவ  தோற்று போயிடுறா. அப்ப அந்தப் பெண்ணோட மனசு எவ்வளவு அடிவாங்கும் தெரியுமா?” 

“புரியுது டி, விடு ரொம்ப வருத்திக்காத.” 

“விக்ரம் பண்றது சரியே இல்லை. இன்னைக்கு நம்ம முன்னாடியே உனக்காக இல்லை பொண்ணுக்காகச் சொல்றார். அப்ப மனசுல அந்தப் பெண்ணை எந்த இடத்தில வச்சிருக்கார்?” 

“வனிதா பிறந்து வளர்ந்த சுழல் வேற… அவளுக்கு இங்க இருக்கிற நிலையைச் சொல்லி அவர்தானே புரியவைக்கணும். அதை விட்டு நீ எப்படியும் போ, நான் எப்படி வேணா இருப்பேன்னு இருந்தா எப்படி?” 

“அவன் எதோ கோபத்தில பேசுறான். அப்படி எல்லாம் வனிதாவை விட்டுட மாட்டான்.” என்றான் வெற்றி. 

வீட்டிற்கு வந்த விக்ரமும் வனிதாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 
மகனைப் பார்த்ததும் தெய்வா குழம்பு எடுத்துக் கொண்டு வர, “நானும் இந்தக் குழம்புதான் வச்சிருக்கேன். வேண்டாம்.” என்றவள், விக்ரமிற்கு உணவை சூடு செய்து பரிமாறினாள். 

விக்ரமிற்குப் பருப்பு சாம்பார் எல்லாம் அலர்ஜி. அவனுக்கு உணவு காரசாரமாக இருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தது போலக் காரக்குழம்பும் உருளைக் கிழங்கு பொரியல் செய்து இருந்தாள். சுஜிக்குத் தனியாகப் பருப்பு வேறு… 

“என்னடா இது உலக அதிசயமா இருக்கு.” என நினைத்தபடி விக்ரம் உணவருந்தினான். உணவு நன்றாகவே இருந்தது. வனிதா நன்றாகவே சமைப்பாள். ஆனால் என்ன செய்வதற்குச் சோம்பேறித்தனம். 

அதை வைத்துத்தானே ஆனந்தி உள்ளே நுழைய முனைந்தாள். அந்தப் பயம் நன்றாகவே வேலை செய்தது. கணவனுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. 

மாலை மில்லுக்கு வந்த வெற்றி, “விக்ரம் இப்படி இருக்காத டா.. கல்யாணம் பண்ணிகிட்டோமேன்னு வனிதாவோட நீ குடும்பம் நடத்துற மாதிரி இருக்கு. நீ விரும்பித்தானே கல்யாணம் பண்ண. ஆதிரை ரொம்பக் கவலைப்படுறா டா…” என்றவன், ஆதிரை சொன்னதையும் ஒன்று விடாமல் சொன்னான். 

“எங்க ரெண்டு பேர்குள்ள இடைவெளி வந்தது என்னவோ உண்மைதான். நான் பார்த்து நடந்துக்கிறேன். நீ ஆதிரையைக் கவலைப்படாம இருக்கச் சொல்லு.” என்றான் விக்ரம். அதன்பிறகே வெற்றிக்கு நிம்மதி ஆனது. 

இரவு வீட்டிற்கு வந்த விக்ரம் வீட்டைப் பார்த்து வியந்து போனான். அவர்கள் பகுதியை எப்போதும் வனிதா நன்றாகவே வைத்துக்கொள்ள மாட்டாள். 

ஒரு பக்கம் அழுக்கு துணி சேர்ந்து போய் இருக்கும். இன்னொரு பக்கம் துவைத்த துணிகள் மடிக்காமல் கிடக்கும். சுஜியின் விளையாட்டுச் சாமான்கள் அங்கங்கே இறைந்து கிடக்கும். அதை அப்படியே போட்டு வைத்திருப்பாள். ஆனால் இன்று எல்லாம் அதன் இடத்தில் சரியாக இருந்தது. 

எதோ கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது. பார்ப்போம் இப்படியே தொடர்கிறதா என நினைத்தவன், முகம் கைகால் கழுவி உடைமாற்றி வர… சூடாக இட்லி தேங்காய் சட்னியோடு கார சட்னியும் இருந்தது. 

விக்ரம் வந்ததும் தான் இட்லி ஊற்றி இருப்பாள் போல… ஆறு இட்லிகளை உள்ளே தள்ளிய விக்ரம், “ரொம்ப நல்லா இருக்கு வனிதா.” என்றான். கணவன் பாராட்டியதும் மனைவியும் குளிர்ந்து போனாள். 

“இன்னும் ரெண்டு இட்லி சாப்பிடுங்க.” 

“ஐயோ இதே அதிகம்.” 

“நீங்க இருக்கிற உயரத்துக்கு இதெல்லாம் எந்த மூலைக்கு. இன்னும் ரெண்டு சாப்பிடுங்க.” 

“அம்மாடி நீ ஒரேடியா என்னைக் குண்டாக்கிடுவ போலிருக்கே… போதும் மா.. நாளைக்கும் வரும் வனிதா. அப்பவும் சாப்பிடத்தான் போறோம். ஒரே நேரத்தில அடைக்கக் கூடாது.” என்றவன், எழுந்து கைகழுவ சென்றான். 

வனிதா சாப்பிட்டு விட்டு வர… விக்ரம் அவளுக்காக ஹாலில் காத்திருந்தான்.
“இங்க வா…” என்றவன், அவளை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டான். 

“என் மேல கோபமா?” 

“இல்லை என் மேலதான் கோபம். நீங்க சொன்னது சரிதான். எனக்கு ஒன்னும் தெரியலைன்னுதான்,  நீங்க மில்லுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்க. நான்தான் தப்பா நினைச்சிட்டேன். ஆதிரையால முடியும் நம்மால முடியாதான்னு நினைச்சிட்டேன்.” 

“ஆதிரை அக்கா இன்னைக்குக் கெத்தா உட்கார்ந்து ஆனந்தியை விளாசின மாதிரி என்னால கண்டிப்பா முடியாது. நான் அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தேன்.” 

“யார்கிட்ட எப்படிப் பேசணும்னு அவங்களுக்குத் தெரியுது. எனக்கு அது தெரியலை. ஆனந்திகிட்ட மட்டும் இல்லை. மாணிக்கத்தை என்ன அதிகாரமா வேலை வாங்கினாங்க. எனக்கு அதெல்லாம் வராது. அதுதான் எனக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இல்லை.” 

“நான் அவங்களை மாதிரி ஆக முடியாது. என்ன ஒரு கம்பீரம். அவங்கதான் அந்த இடத்துக்கு பொருத்தம்.”  

“வனிதா நீ ஏன் ஆதிரை மாதிரி ஆகணுமுன்னு நினைக்கிற. நீ உன்னைப் போல இரு. அதுதான் எனக்கும் பிடிக்கும்.” 

“என்னைப் பிடிக்குமா உங்களுக்கு.” 

“ஆமாம் பிடிக்காமத்தான் லவ் பண்ணி கல்யாணம் பன்னிகிட்டங்க.” 

“அப்ப பிடிச்சது இப்படிப் பிடிக்குதா?” 

“உன் மேல கோபம் இருக்கு, வருத்தமும் இருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக உன்னைப் பிடிக்காம இல்லை.” 

“வெற்றி இன்னைக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான். என் மேலேயும் தப்பு இருக்குன்னு சொல்றான். நான் உன்னை ஒழுங்கா நடத்தலைன்னு ஆதிரைக்கு என் மேல கோபம். தப்பு உன்மேல மட்டும் இல்லை. என்மேலேயும் தான். நான் இப்ப அதை உணர்றேன்.” 

“நீங்க என்ன பண்ணீங்க? என் மேலத்தான் தப்பு.”

“நிஜமாவே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்குப் புரியலை. ஆனா இப்ப புரியுது. விடு பார்த்துக்கலாம்.” 


இரண்டு நாட்கள் பரபரவென்று வேலைப் பார்த்த வனிதாவுக்கு மூன்றாம் நாள் முடியவில்லை. விக்ரம் மதியம் வீட்டிற்கு வந்த போது, உடம்பு முடியாமல் படுத்து இருந்தாள். 

“இன்னைக்கு உடம்பு முடியலை… அதனால் பருப்பும் உருளைக் கிழங்கும் தான் வச்சேன். நான் வேணா அத்தைகிட்ட குழம்பு வாங்கிட்டு வரவா…” 

“இல்லை வேண்டாம். நான் இதே சாப்பிடுறேன்.” என்றவன் உட்கார்ந்து உணவு உண்டபடி, “ஆமாம் என்ன ஆச்சு?” எனக் கேட்டான். 

“ஒரே அலுப்பா இருக்கு. வேலைப் பார்க்கவே முடியலை.” என வனிதா சொல்ல… 

“இத்தனை நாள் வெறும் தயிரா ஊத்தி சாப்பிட்டா உடம்பில எங்க இருந்து ரத்தம் இருக்கும். அதுதான் சோர்ந்து போறா.” என இவர்கள் பேச்சில் ஒரு காதை வைத்திருந்த தெய்வா சொல்ல… அவர் சொன்னதற்காக எதற்கும் ஒரு ரத்த பரிசோதனை செய்து பார்த்தனர். 

வனிதாவுக்கு உடம்பில் எந்தச் சத்தும் இல்லை. பிரஷர் வேறு குறைவாக இருக்க… நல்லா சாப்பிட்டு தூங்கினாலே போதும், இவங்க வயசுக்கு மருந்தெல்லாம் தேவையில்லை எனச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட… 

“வெளிய யாராவது கேட்டா சிரிப்பாங்க. பெரிய வீடுன்னு பேரு… வீட்டு மருமகளுக்குச் சோறு கூடப் போட மாட்டீங்களான்னு நம்மைத்தான் கேவலமா நினைப்பாங்க.” எனத் தெய்வா சொல்ல, 

“ஏன் டி நான் வாங்கித்தான் போட முடியும். உனக்கு அதைச் சாப்பிட கூட வலிச்சா என்ன பண்றது?” 

“ஒழுங்கா இனி தினமும் ரெண்டு பொரியல் வைக்கிற… அதோட என்னோடவே உட்கார்ந்து சாப்பிடுற.” என்ற விக்ரம் மனைவிக்காகப் பழங்களும் நிறைய வாங்கிப் போட்டான். 

சுஜியுமே ரொம்பவும் ஒல்லியாக இருந்தாள். அவளையும் பார்த்துத் தேற்றினார். 

இத்தனை நாள் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம். இனியும் அப்படியே இருந்தால் வேலைக்காகாது என விக்ரம் புரிந்து கொண்டான். 
ஆதிரையைப் போலப் புரிந்து செய்யும் மனைவி அல்ல வனிதா… அவளுக்கு ஒவ்வொன்றுமே சொல்ல வேண்டியது இருந்தது. ஆனால் முன்புக்கு இப்போது பரவாயில்லை என்ற நிலை. 

ஆதிரைக்குக் கொடுத்த தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்க…தோட்டத்தில் பூ செடிகளுக்கு மருந்து அடிக்க, அதைப் பார்க்க என வெற்றி காலையிலேயே கிளம்பி சென்றிருந்தான். 

மகனும் பள்ளிக்கு சென்றுவிட… குளித்துவிட்டு வந்த ஆதிரைக்கு லேசாக வலி எடுப்பது போல இருக்க… இன்னும் நாட்கள் இருப்பதால்… பொய் வலியோ எனச் சந்தேகமாகவும் இருந்தது. 

“அத்தை, லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. பொய் வலியா பிரசவ வலியான்னு பார்க்க… எதோ கஷாயம் வச்சுக் கொடுப்பாங்களே.. அதை வேணா குடிச்சு பார்க்கவா…” என ஆதிரை ஜோதியிடம் கேட்க, 

“அது பிரசவ தேதி நெருங்கும்போது தான் கொடுப்பாங்க. உனக்குத்தான் இன்னும் நாள் இருக்கே. இது வேற வலியா இருக்கும். நீ எதுக்கும் டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடு.” என ஜோதி சொல்ல.. ஆதிரை சென்று வெற்றியை அழைத்தாள். 

வெற்றி முதலில் வேலையில் ஆதிரையின் அழைப்பை கவனிக்கவில்லை. ஆதிரைக்கு வலி அதிகமாக… ஜோதிக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ள… கார் டிரைவர் இருக்கிறானா எனப் பார்க்க சென்றால்… அவன் அங்கே இல்லை. 

சாலையின் முனைக்கு வந்தவர், எங்காவது பக்கத்தில் டிரைவர் இருக்கிறானா. எனப் பார்க்க, விக்ரமும் வனிதாவும் தங்கள் வண்டியில் ஜோடியாகக் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்தவர்கள், ஜோதியை பார்த்ததும் நின்று விசாரிக்க.. அவர் விஷயத்தைச் சொல்ல.. இருவரும் பதட்டமாக வீட்டுக்கு வந்தனர். 

“அக்கா, வாங்க நாம டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடலாம்.” என வனிதா அழைக்க… விக்ரம் காரை எடுக்கச் சென்றான். 

“இல்லை… வலி லேசாத்தான் இருக்கு. நான் அவருக்குப் போன் பண்ணேன். அவர் இப்ப வந்திடுவார். அவர் வந்ததும் போறேன்.” என ஆதிரை வாசலில் உட்கார்ந்து கொண்டாள். 

ஆதிரைக்கு விக்ரமோடு மருத்துவமனை செல்ல விருப்பம் இல்லை. அதனால் கிளம்பாமல் இருந்தாள். “ஏன் அக்கா இபப்டி பண்றீங்க? நாம போவோம், அண்ணாவையும் ஹாஸ்பிடல் வர சொல்லிடலாம்.” எனக் கெஞ்சாத குறையாக வனிதா சொல்ல… ஆதிரை இறங்கி வருவதாகவே இல்லை. 
“அவர் வரட்டும்.” என்றுவிட்டால் உறுதியாக.

வார்த்தையைக் கொட்டிவிட்டால் அல்ல முடியாது என்பது இதுதான். வனிதா பொறாமையில் பேசினாள் என ஆதிரைக்கும் தெரியும். இருந்தாலும், சில சொற்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி விடும். வனிதாவின் பேச்சு இப்போது வரை ஆதிரைக்கு மறக்க முடியவில்லை. விக்ரமோடு இயல்பாக இருக்கவும் முடியவில்லை. சில விரிசல்கள் விழுந்தால் விழுந்தது தான். 

ஏன் எங்களோடு வந்தால் என்ன என வனிதாவிற்கு இருக்க.. அவள் விக்ரமை பார்க்க, அவன் முகமும் இறுகி இருந்தது. 

விக்ரமை கம்பீரமாகவே பார்த்து விட்டு இப்படிப் பார்க்க வனிதாவுக்கு வருத்தமாக இருந்தது. தான் பேசியதற்குப் பின்னால் இப்படி அது ஒரு பெரிய விஷயமாகும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. தன்னால் தான் கணவனுக்கு இந்த நிலை என வருத்தமாக இருந்தது. 

ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வெற்றி வந்துவிட…. “அதுதான் விக்ரம் இருக்கான் இல்ல… நீ ஹாஸ்பிடல் போய் இருக்கலாம்.” என வெற்றியும் சொல்ல.. “ரொம்ப ஒன்னும் வலி இல்லை.” என்றாள் அதிரை. ஆனால் அவள் எழுந்து நடக்கவே சிரமபட்டாள். 

வெற்றி அவளைக் கிட்டதட்ட தூக்கிக் கொண்டு சென்றுதான் காரில் ஏற்றினான். விக்ரம் காரை ஓட்ட, அவன் அருகில் வனிதா ஏறிக்கொண்டாள். ஜோதி வீட்டிலேயே இருந்து கொண்டார். 

“இன்னும் நாள் இருக்கே… அதுக்குள்ள எப்படி வலி வந்தது.” வெற்றி கேட்க, 

“எனக்கு ரொம்ப வலிக்குது. முடியலை… இது பிரசவ வலிதான் போல… எங்க அம்மாவை வர சொல்லுங்க.” என்ற ஆதிரை ,வலியை பல்லைகடித்துப் பொறுக்க, வெற்றி ஆதிரையின் அம்மாவுக்கு அழைத்துத் தகவல் சொன்னான். அவர் உடனே கிளம்பி வருவதாகச் சொன்னார். 

ஆதிரைக்கு அருண் பிறந்த போது, ஒரு முழு நாள் வலி இருந்தது. அவள் அதைப் போல நினைத்துக் கொஞ்சம் அலட்சியமாகவே நடந்து கொண்டாள். இப்போதும் அவள் வலி வந்த உடனே குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கவில்லை. எப்படியும் நான்கு ஐந்து மணி நேரங்கள் ஆகும் என நினைத்திருந்தாள். ஆனால் எப்போதுமே நாம் நினைப்பது போலவே நடக்காது.

மருத்துவமனை சென்ற சில நிமிடங்களிலேயே ஆதிரைக்கு அழகான பெண் குழந்தை பிறந்து விட… இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால்… வீட்டிலேயோ அல்லது வழியிலேயோ குழந்தை பிறந்திருக்கலாம் என்பதை நினைத்து பார்க்கவே ஆதிரைக்கு அச்சமாக இருந்தது. 


மருத்துவமனையில் விக்ரம் உடன் இருந்து தேவையானது பார்த்துக்கொண்டதால்… வெற்றியால் ஆதிரையுடன் இருக்க முடிந்தது. 

குழந்தை பிறந்து முதலில் அதை வெளியில் கொண்டு வர… வெற்றிதான் மகளை வாங்கினான். ரோஜா குவியலை கையில் கொடுத்தது போல இருந்தாள் வெற்றியின் இளவரசி. 

குழந்தையைப் பார்த்துவிட்டு விக்ரம் கிளம்ப… “டேய் விக்ரம் நீ எதுவும் நினைச்சுக்காத டா…” என்றான் வெற்றி. 

“ஆதிரையைப் பத்தி எனக்குத் தெரியாதா… பரவாயில்லை விடு.” எனச் சொல்லிவிட்டு விக்ரம் சென்றுவிட்டான். வெற்றியின் உறவு கூட்டமே வருகிறது எனத் தகவல் வர.. வனிதாவும் அவனோடு கிளம்பி விட்டாள்.
வெற்றிக்கு மூன்று சித்தப்பாக்கள் இரண்டு அத்தைமார்கள் அவர்கள் எல்லாம் அருகில்தான் இருக்கிறார்கள். 

ஆதிரை அறைக்கு வந்ததும், குழந்தையுடன் உள்ளே சென்ற வெற்றி மகளை அவளுக்குக் காட்டினான். 

“நான் நினைச்சே பார்க்கலை ஆதிரை, இன்னைக்கு இந்நேரம் குழந்தையோட இருப்பேன்னு.” என வெற்றி சொல்ல… 

“நான் மட்டும் நினைச்சேனா என்ன? நல்லவேளை வழியில பிறக்காம என் மானத்தைக் காப்பாத்தினா….” என்றாள் ஆதிரை. 

“விக்ரம் கூட நீ ஹாஸ்பிடல் வந்திருக்கலாம். ஏன்டி அப்படிப் பண்ண? என்னால அவன் முகத்தைப் பார்க்கவே முடியலை.” 

“எனக்கு மட்டும் வருத்தமா இல்லையா… என்னைப் பத்தி கோபக்காரி, திமிர் பிடிச்சவ இப்படியெல்லாம் சொல்லி இருந்தா, நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனா இது அப்படி இல்லை.” 

“வனிதா பேசினதை ஒன்னும் இல்லைங்கிற மாதிரி என்னால நடந்துக்க முடியாது. திரும்ப அந்த மாதிரி ஒரு பேச்சு வந்தா என்னால தாங்கவும் முடியாது. அதுக்கு இப்படி இருக்கிறதே பரவாயில்லை.”
“நான் அவரை மதிக்கலைன்னு உங்க பிரண்ட் நினைச்சா… அவரையும் என்னை மதிக்க வேண்டாம்னு சொல்லுங்க. நான் திமிர் பிடிச்சவளாவே இருந்திட்டு போறேன்.” 
வெற்றிக்கும் ஆதிரையின் நிலை புரிந்தது. ஏற்கனவே பிரசவத்தில் துவண்டு போய் இருந்தவள், இப்போது இதைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்தவன், “விடு நம்ம விக்ரம் தானே புரிஞ்சிப்பான்.” என்றான். 

அந்நேரம் குழந்தையைப் பார்க்கவென்று உறவினர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்க, மேலும் வேறு எதைப்பற்றி யோசிக்கவும் இருவருக்கும் நேரம் இல்லை. 

அருணுக்கு தன் தங்கையைப் பார்த்து ஆச்சர்யம். “இவ மட்டும் எப்படிப் பிங்க் கலர்ல இருக்கா?” என வியந்து போனான். நீயும் பிறந்த போது இப்படித்தான் இருந்தே என்றால் நம்பவில்லை. 

“நான் இவளை பிங்கிதான் கூப்பிடுவேன்.” என்ற அருண் தங்கைக்கு முத்தமிட, வெற்றி மனைவியைப் பார்க்க… அவளும் அப்போது இவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். மகன் மகளைக் கொஞ்சும் அழகை பார்த்து பெற்றோர் பூரித்து நின்றனர்.

Advertisement