Advertisement

இதயக் கூட்டில் அவள் 


அத்தியாயம் 1 


அண்ணாமலையான எம்பெருமான் ஜோதி வடிவாகக் காட்சி தரும் திருவண்ணாமலை. மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில், பசுஞ்சாணத்தில் மஞ்சள் கலந்த நீரில் ஏற்கனவே வாசல் தெளித்து இருக்க, கோலம் போடும் பணியை ஆதிரை கையில் எடுத்துக் கொண்டாள். 

புள்ளி வைத்து அழகாகக் கம்பி கோலம் இழுத்து, அதற்கும் பொருத்தமாக வண்ணமிட்டு நிமிர்ந்தவள், தான் வரைந்த கோலத்தை ஒரு நிமிடம் நின்று ரசித்துவிட்டுதான் உள்ளே சென்றாள். சின்ன வேலையாக இருந்தாலும், அதை ரசித்துச் செய்வதே அவளது குணம். 

சற்று முன் குளித்துவிட்டுத் தலையில் சுற்றி இருந்த துவாலையை அவள் எடுக்க… அதற்குள் அடங்கியிருந்த அவளின் கருங்கூந்தள், அவள் இடையைத் தாண்டியும் வழிந்தது. 

ஈரம் போக நன்றாகத் துடைத்து விட்டு தலைவாரி பின்னலிட்டு, முன்தினம் தொடுத்து வைத்திருந்த மல்லிகையைச் சரமாகச் சூடிக்கொண்டு ஒருமுறை கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்தவள், பாக்கு நிற காஞ்சி பட்டில் அழகாக இருந்தாள்.

வெள்ளி அர்ச்சனைக் கூடையில் முன்தினமே எடுத்து வைத்திருந்த பூஜைக்கு உரிய பொருட்களை ஒருமுறை சரி பார்த்து எடுத்துக் கொண்டவள், “நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்.” எனப் பொதுவாகக் குரல் கொடுத்துவிட்டு,  தன்னிடமிருந்த சாவியால் வீட்டை பூட்டிக் கொண்டு சென்று விட்டாள். 

பூஜை அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டிருந்த ஜோதியின் காதிலும் விழுந்தது. 

“ஏன் இங்க வந்து சொல்லிட்டு போனா இவ தேஞ்சு போயிடுவாளா..” என நினைத்தாலும், எல்லாம் தன் மகன் கொடுக்கும் இடம்.” என நினைத்தவர், கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்தார். 

அதுதான் ஆதிரையின் குணம். தனக்குத் தோன்றியதை செய்வாள். சொல்லிவிட்டுச் செய்வதெல்லாம் அவளுக்கு வராது. அது மாமியாராக இருந்தாலும். 

இவள் சாலையில் இறங்கி நடக்க, இவள் வருவது தெரிந்து பக்கத்து வீட்டில் இருந்து மஞ்சுளாவும், எதிர் வீட்டில் இருந்து தீபாவும் அவளுடன் இணைந்து கொண்டனர். 

“ஆதிரை, நீ பார்க்க அம்பாள் மாதிரிதான் இருக்க.” என்றால் தீபா. மூவரும் அருகில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றனர். இவர்கள் வீடு கிளைசாலையில் இருக்க, அங்கிருந்து நேராக வந்தால் பெரிய சாலையில் கோவில். நடக்கும் தூரம் என்பதால் மூவரும் பேசிக்கொண்டே நடந்தனர். 

அதிகாலை என்றாலும் மார்கழி மாதம் அல்லவா கோவிலில் சற்றுக் கூட்டம் இருந்தது. சந்நிதியில் விளக்கின் ஒளியில் பரமேஸ்வரனை தரிசிப்பதே பெரும் பேரு… இதற்கு மேல் என்ன வேண்டிக்கொள்வது. எப்போதும் போல் மகன் மற்றும் கணவனின் ஆரோக்கியமும் ஆயுலுமே வேண்டி நின்றாள். தனக்கு என என்ன கேட்பாள். 

சிலரைப் போல எனக்கு அது கொடு இது கொடு என்று கேட்காமல், உனக்குத் தெரியும் எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று. இதுவரை எனக்கு நல்லதே கொடுத்திருக்கிறாய். அதற்கு உனக்கு நன்றி. நான் எடுத்த இந்தப் பிறவியில், என்னால் மற்றவர்களுக்குப் பயன் இருக்க வேண்டும். நான் என் கடமையை மனைவியாகத், தாயாக, மகளாக, மருமகளாகச், சகோதரியாக நல்ல முறையில் செய்திட வேண்டும் என எப்போதும் போல வேண்டிக்கொண்ட ஆதிரை, தாயாரின் சந்நிதியில் நான் எப்போதும் தைரியத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என வேண்டி நின்றாள். 

இருக்கிற வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் தான் அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்பார்கள். கிடைத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டவர்கள், கடவுளுக்கு நன்றிதான் சொல்வார்கள். எல்லாம் இருந்தும் சிலருக்கு மனம் திருப்தி அடையாது. ஆனால் ஆதிரை அப்படி இல்லை. இருப்பதைக் கொண்டு அவளுக்கு மகிழ்ச்சியாக வாழ தெரியும். 

கோவிலில் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மூவரும் வீடு திரும்பினர். 

வீட்டிற்கு வந்த போது நேரம் ஏழு மணியைத் தொட்டு இருக்க, அதன் பிறகு ஆதிரைக்கு நிற்க நேரம் இல்லை. மகனை எழுப்பி அவனைப் பள்ளிக்கு கிளப்பி, அவனுக்குக் காலை உணவாகத் தோசையைப் புதினா சட்னியுடன் ஊட்டிக் கொண்டு இருக்க… 

“குழந்தைக்குக் காலையில பால் கொடுக்க வேண்டாமா?” எனத் தன் புலம்பலை ஆரம்பித்த ஜோதி, பேரனுக்குப் பிடிக்காது எனத் தெரிந்தும், பால் குடித்தால்தான் நல்லது எனப் போதனையை ஆரம்பிக்க, தாயும் மகனுமே எரிச்சலாக உணர்ந்தனர். 

பால் குடித்தால் மகன் காலை உணவை உண்ண மாட்டான். பாலையும் முழுதாகக் குடிக்க மாட்டான். பள்ளிக்கு வேன்னில் செல்வதால், பால் குடித்துவிட்டு சென்றாலும், அவனுக்கு ஒருமாதிரி இருக்கும். அதைச் சொன்னால் ஜோதி புரிந்துகொள்ள மாட்டார். ஏற்கனவே விளக்கிய விஷயத்தை எத்தனை தடவை விளக்குவது என ஆதிரை அமைதியாக இருக்க, அதுவும் ஜோதிக்குக் குற்றம்தான். 

“பெரியவங்க சொன்னா கேட்கணும் அருண்.” எனப் பேரனிடம் சொல்லிவிட்டு சென்றார். 

எட்டு மணிக்கு வந்த பள்ளி வாகனத்தில் மகனை ஏற்றிவிட்டு ஆதிரை வந்தபோது, அவள் கணவன் வெற்றிவேல், குளித்துத் தயாராகி ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படுத்துக் கொண்டு இருந்தான். 

அவனின் கோதுமை நிறத்திற்கும் உயரத்திற்கும் அணிந்திருந்த வெள்ளை வேட்டி சட்டையில் பார்க்க ஆள் ஆண் அழகன் தான். எத்தனை வசதி வாய்ப்பு இருந்தாலும், எளிமை விரும்பி. நிறை குடம் தளும்பாது என்ற உதாரணத்திற்குப் பொருத்தமானவன். 

அவன் கையில் காபி இருக்க, மாமியார் கொடுத்திருப்பார் என நினைத்தவள், பட்டுப் புடவையை மாற்றும் எண்ணத்தில் அறைக்குள் சென்றாள். அவர்களின் படுக்கை அறை மாடியில்தான் இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் மேலும் கீழும் ஏறி இறங்க முடியாது எனக் கீழே ஒரு அறையைத் தனது உபயோகத்திற்கு வைத்துக் கொண்டு இருந்தாள். 

மனைவி அறைக்குள் செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்த வெற்றி, கையில் இருந்து காபியை வேகமாகக் குடித்துவிட்டு, அவனும் அங்கே சென்றான். அவன் எப்படியும் வருவான் எனத் தெரிந்துதான் மனைவியும் கதவை தாழிடாமல் விட்டு இருந்தாள். 

அலமாரியை திறந்து வைத்துக் கொண்டு எந்தப் புடவை கட்டலாம் என ஆதிரை பார்த்துக் கொண்டு இருக்க, கதவை தாழிட்டு வந்த வெற்றி, மனைவியைப் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டவன், 
“காலையிலலேயே இப்படிப் புடவையில அம்சமா இருந்தா… நான் வெளிய வேலைக்குக் கிளம்பி போறதா இல்லையா?” என்றவன், அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளின் நாணி சிவந்த முகத்தை ரசித்துக் கொண்டு இருந்தான். 

“புடவை கட்டிறது எனக்கு என்ன புதுசா… தினமும் தான் கட்டுறேன்.” 

“ஆனா நைட் நைட்டி தான போட்டுகிற?” 

“என்ன டிரஸ் போட்டிருந்தாலும், நீங்க…” என்றவள், கண்ணில் மையலை தேக்கி கணவனைப் பார்க்க, “நீங்க…” என அவன் எடுத்துக் கொடுக்க… அவனின் வசீகரமான பார்வையிலும் புன்னகையிலும் மயங்கியவள், அவனின் காதில் ரகசியம் பேச…

“ஏன் டி இப்ப அதை நியாபகப்படுத்துற. எனக்கு இப்ப முக்கியமான வேலை இருக்கு, நான் வெளிய போகணும்.” என்றான். 

“நானா ஆரம்பிச்சேன். நீங்க எல்லாம் பேசிட்டு பழி என் மேலையா?” 

மனைவி சொன்னதற்குப் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவன், அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு. “சரி நைட் பார்க்கலாம்.” என்றவன், அறைக்கு வெளியே செல்ல… அவனுக்கு நேரமாவது உணர்ந்து, விரைவாக உடை மாற்றி வெளியே சென்றாள். 

கணவனுக்குத் தோசை ஊற்றிக் கொண்டு வந்து வைக்க, அவன் உண்ணும் போதே ஜோதியும் மகனிடம் பேசியபடி காலை உணவை உண்டார். 

இரண்டு நாளில் தைப்பொங்கல் வருவதால்… அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்க… சாப்பிட்டதும் தன் மனைவி மற்றும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு அவனது காரில் புறப்பட்டுச் சென்றான். 

கணவன் சென்றதும் தனக்கும் இரண்டு தோசைகள் ஊற்றிக் கொண்டு வந்து டிவி பார்த்துக் கொண்டே ஆதிரை சாப்பிட்டு முடித்தாள். 

வெற்றிவேல் நேராகத் தங்கள் தோட்டத்திற்குச் சென்றவன், அங்கே ஆட்கள் வந்து வேலையை ஆரம்பித்து இருக்க, நின்று மேற்பார்வை பார்த்தான். 

நல்ல நீர் வளம் உண்டு என்பதால், நெல்லும் கரும்பும் தான் முக்கிய விவசாயம். சில நேரங்கள் மற்ற பயிர் வகைகளும் போடுவதுண்டு. அது தவிர மல்லிகை பூவும், வாழையும், கடலையும் உண்டு. 

இப்போதுதான் வயலில் அறுவடை முடித்து இருக்க, கரும்பும் நல்ல மகசூல் கண்டிருந்தது. அறுவடை செய்த நெல்லை அவர்களின் மில்லுக்கே எடுத்துத் செல்ல லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். 
பொங்கல் வருவதால் ஒரு பக்கம் வியபாரிகள் நேரடியாக வந்து கரும்பை விலைபேசிக் கொண்டு இருந்தனர். அது தவிரச் சர்க்கரை ஆலைக்கு என அதையும் ஒரு பக்கம் லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அங்கே சுமார் என்பது ஏக்கருக்கு மேல் இருந்தது. 

அங்கிருந்த கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிக்க, மதியம் வரை தோட்டத்திலேயே சென்றுவிட, மதிய உணவையும் ஆதிரை அவனுக்கு அங்கேயே கொடுத்து விட்டிருந்தாள். தென்னந்த்தோப்பில் உட்கார்ந்து உணவருந்தியவன், அங்கிருந்த வேப்ப மர நிழலில், கயிற்றுக் கட்டிலில் படுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தான். 

மூன்று மணிப் போல அவன் மில்லுக்குச் செல்ல.. அங்கே அவனைச் சந்திக்க நிறையப் பேர் வந்திருந்தனர். அங்கிருந்த அலுவலகத்தில் உட்கார்ந்து வந்தவர்களைச் சந்தித்துப் பேசினான். 

முதலில் வந்திருந்த முக்கியப் பிரமுகர்கள் பார்த்துவிட்டு, அடுத்து அவன் தொழில் சம்பந்தப்பட்ட ஆட்கள் என நேரம் ஆறு மணியைத் தாண்டி இருக்க.. பிறகே மில்லின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். இவர்கள் தோட்டத்து நெல் மட்டும் அல்ல மற்ற இடங்களில் இருந்தும், ஏன் வேறு மாநிலங்களில் இருந்தும் வரும். அதை அரிசியாக்கி மற்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். 

விவசாயம் தனது தந்தையைப் பின்பற்றி என்றாலும், அரிசி ஆலை ஆரம்பித்தது வெற்றிவேல் தான். அவனுடன் விக்ரமும் பாட்னராகச் சேர்ந்துகொள்ள… அந்த இடத்தில் இருந்து எல்லாமே இருவருக்கும் பொதுவானதே. 

விக்ரமிற்கும் கிரானைட் ஆலை என வேறு தொழில்கள் இருக்க, அவனும் சற்று முன்புதான் மில்லுக்கு வந்திருந்தான். வெற்றி அமைதியானவன் என்றால்… விக்ரம் ஆர்பாட்டமானவன். 

வெற்றியின் திறமைக்கு நிறைய வியாபாரிகள் வந்தார்கள் என்றால்… இருந்த சில அடாவடி ஆட்கள் கூட விக்ரமிற்குப் பயந்தே இவர்களிடம் வாலாட்டுவது இல்லை. சாணக்கியனும் சத்ரியனும் ஒரே இடத்தில் இருந்தனர். 

“வெற்றி அந்தப் பெங்களூர் கணக்கை இன்னைக்குப் பார்ப்போமா.” 

“இன்னைக்குச் சீக்கிரம் வீட்டுக்கு போகணும். நாளைக்குப் பார்ப்போமே.” 

“என்னவோ புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி வீட்டுக்கு ஓடுற.” 

மனைவியின் நினைவில் வெற்றியின் முகம் கனிய, அதைக் கவனித்த விக்ரம், “வேணா ஆதிரையையும் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்திட வேண்டியது தான…” என்றான். 

“அவ இங்க வந்தா, நாம ரெண்டு பேரும் வெளியப் போக வேண்டியது தான்.” 

“என்ன வீட்டைப் போல மில்லையும் அவ கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்திடுவா, அப்படித்தானே…” 

“அவ இருக்கிறதுனாலதான் வீட்டைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லாம, நான் நிம்மதியா இருக்கேன்.” 

“இப்படி ஒரு மனைவி கிடைக்க நீ அதிர்ஷ்ட்டம் பண்ணி இருக்க. ஆதிரைக்கு எங்க பேசணும், எப்ப பேசணும்னு நல்லா தெரியும். ரொம்ப விவரமான பொண்ணு.” 

“ஆனா அவ சொல்றபடிதான் நான் நடக்கிறேன்னு என் அம்மா கூட நினைக்கிறாங்க. ஆனா அது உண்மை இல்லை.” 

“நீ கொஞ்சம் அமைதியா பேசுவ, ஆதிரை கொஞ்சம் அதிகாரமா பேசுவா.. அதனால அப்படித்தான் தோணும்.” 

‘அம்மாவை எப்ப ஹாஸ்பிடல் கூடிட்டு போகணும். அவங்களுக்கு எப்ப என்ன தேவைன்னு என்னை விட அவளுக்குத்தான் தெரியும். முக்கால்வாசி நேரம் அவ சொல்லித்தான் நான் செய்வேன். ஆனா அது எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.” 

“நடிக்கத் தெரியாது டா ஆதிரைக்கு. உங்க அம்மா எல்லாம் ரெண்டு வார்த்தை நல்லா பேசிட்டு, மொத்த வேலையும் தலையில கட்டினா சந்தோஷமா பண்ற ஆளு.” 

“ம்ம்.. ஆமாம். ஆனா பழைய காலத்து ஆளு. அதுதான் ஆதிரைக்கும் அவங்களுக்கும் ஒத்து போக மாட்டேங்குது.” 

“உங்க அம்மா நான் வீட்டுக்கு வந்தாலே…. ஒரே அட்வைஸ் மழை பொழிவாங்க. என் பொண்டாட்டியே உங்க அம்மாவை பார்த்தா ஓடுவா… அப்ப ஆதிரையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுயமா முடிவு எடுக்கிற பொண்ணு.” 

“நானும் அம்மாவுக்குச் சொல்லிட்டேன். ஆனா அவங்க இன்னும் அவங்க காலத்திலேயே இருக்காங்க. ஆனா எங்க அம்மா பொல்லாத மாமியார் இல்லை. புரியாம நடந்துகிறாங்க அவ்வளவுதான்.” என்றான் வெற்றி தன் அம்மாவையும் விட்டுக் கொடுக்காமல். 

“இன்னைக்கு ஆதிரைன்னு பேரை சொன்னாலே உருகிற நீ, முதல்ல அவளைப் பார்த்திட்டு என்ன சொன்ன?” நண்பனின் கேலியில் வெற்றிக்கும் சிரிப்பு வந்தது. அவன் ஆதிரையைப் பெண் பார்க்க சென்றதை நினைத்துப் பார்த்தான். 

ஆதிரை பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், விவசாயத்தைத் தொழிலாகச் செய்யும் தன்னை மணந்து கொண்டு திருவண்ணாமலையில் வந்து இருப்பாளா என்ற சந்தேகத்துடன்தான் வெற்றி ஆதிரையைப் பெண் பார்க்கவே சென்றான். 

சென்னையில் அவர்கள் வீடு, வசதி எல்லாம் பார்த்ததும் இன்னமும் சந்தேகம்தான். அதுவும் ஆதிரை கேட்டதற்கு எல்லாம் யோசிக்காமல் பட்டென்று பேச, அவள் குணத்தைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டு போனது என்னவோ உண்மை. கூடச் சென்ற விக்ரமிடமும் அவன் அதைச் சொன்னான் தான். 

“டேய் பார்க்க சின்னப் பெண்ணா இருக்கா, செல்லமா வேற வளர்ந்திருக்கா, எங்க வீட்ல எப்பவும் வேலை இருக்கும். இவள் அங்கு வந்து சமாளிப்பாளா…” எனக் கேட்க, விக்ரம் அதை அப்படியே பெண் வீட்டினரிடம் சொல்லிவிட்டான். ஏனென்றால் இந்த வரன் ஏற்பாடு செய்தது அவனது அப்பாதான். நாளை எதாவது சிக்கல் வந்தால், அவரைத் தானே கேட்பார்கள். 

“எங்க பெண்ணைச் செல்லமா மட்டும் இல்லை, பொறுப்பாவும் வளர்த்திருக்கோம். எத்தனையோ வரன் வந்தது. சென்னையில பெரிய வேலையில இருக்கிற வரனே வந்தது. ஆனா எங்க பொண்ணு சொல்லிட்டா, நம்ம குடும்பம் எப்படிச் செல்வாக்கான குடும்பமோ, அதைப் போல என்னோட புகுந்த வீடும் இருக்கனும்னு.” 

“உங்க அப்பாவைப் பத்தி கேள்விப்பட்டோம். விவசாயம் பார்க்கிறதோட ஊருக்கும் நிறைய நல்லது பண்ணி இருக்கார். அதோட உங்க குடும்பமே பெரிய குடும்பமாமே… உங்க அப்பாவுக்கும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருக்காங்களாமே…” எனப் பெண்ணின் அப்பா சிவமணி சொல்ல… வெற்றியின் அப்பா அண்ணாமலைக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. 

சிவமணி அந்தப் பகுதியில் மிகவும் செல்வாக்கானவர். அவர் வீட்டிற்குப் பெண் பார்க்க போகிறோம் என்று சொன்ன போதே… “சிவமணியா? அவர் பெரிய ஆள் ஆச்சே… யாருக்கு என்ன உதவினாலும் செஞ்சு கொடுப்பார்.” என்றே ஊரில் சொன்னார்கள். 

அண்ணாமலை ஜோதி தம்பதிகளுக்குத் திருமணமாகி வெகு வருடங்கள் குழந்தை இல்லை. பதிமூன்று வருடத்திற்குப் பிறகு ஒரு மகளும் அதற்கு அடுத்து இரண்டு வருடத்தில் வெற்றியும் பிறந்தனர். அதனால் அவனுக்கு இருபத்தியேழு வயதுதான் என்ற போதிலும், அவனின் பெற்றோர் மூப்பாகவே தெரிந்தனர். வெற்றியின் அக்காவை கோயம்புத்தூரில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். 

பெரியவர்களுக்குப் பிடித்து விட, வெற்றி ஆதிரையின் திருமணம் அன்றே உறுதியானது. அடுத்த மூன்று மாதத்தில், அவள் அவன் மனைவியாகவும் ஆகிவிட்டாள். 

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட வெற்றி நண்பனிடம் சொல்லிக் கொண்டு ஆவலாக வீட்டிற்குக் கிளம்ப… விக்ரமிற்கு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே சலிப்பாக இருந்தது. 

“அம்மா நாம வெளியப் போறோமா?” 

“இல்லையே…” 

“நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” 

“இல்லையே… ஏன் டா இப்படிக் கேள்வியா கேட்கிற?” 

“இல்லை நைட் நீங்க நைட்டி தானே போடுவீங்க. இன்னைக்கு ஏன் சேலை கட்டி இருக்கீங்க?” 

“இதெல்லாம் நல்லா விபாரமா கேளு… எனக்குத் தோனுச்சு கட்டினேன்.
ஹோம்வொர்க் எழுதிட்டியா நீ? முதல்ல அதை முடி.” என மகனை அதிட்டினாலும், இதெல்லாம் கூடக் கவனிக்கிறானே என ஆதிரை மனதிற்குள் வியந்தாள். ஒரு பக்கம் மாமியார் காதில் விழிந்திருக்குமோ என அச்சமாகவும் இருந்தது. 

அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்த தந்தையைப் பார்த்ததும், அருண், “ஹய் அப்பா வந்திட்டாங்க.” என ஓடி வர… மகனை தூக்கிய வெற்றியின் கண்கள் மனைவியை ஆசையுடன் வருடியது. 

‘எனக்குத் தெரியும் நீ வருவேன்னு.’ என ஆதிரை விழியால் பேச, 

‘நீ மட்டும் என்னவாம்.” என அவள் கட்டி இருந்த புடவையைச் சுட்டிக்காட்டும் வகையில், வெற்றியும் அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து வைக்க, அதில் ஆதிரை முகம் சிவந்து போனாள். 


Advertisement