“பொறுமைங்கிறதே கிடையாதா உங்களுக்கு? இவ நாம பெத்தெடுத்த பொண்ணு, நாமதான்…” காயத்ரி பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கிருந்து வெளியேறி விட்டார் ஆஷுதோஷ். 

நெற்றியில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் காயத்ரி. 

ஆஷுதோஷ் பார்த்தியை எப்போது அப்படி பேசினார் என சுஹானாவிடம் விவரமாக கேட்டறிந்து கொண்டார் தனசேகரன். 

“இதனால பார்த்திக்கு எந்த அவமரியாதையும் இல்லை ஆச்சி, சூரியன் போல அவன், யாரோட சொல்லும் அவனை மங்க விடாது. இந்த காலத்துல பார்த்தி போல ஒரு புள்ளையை பார்க்க முடியுமா? அவனைன்னு இல்லை யாரையுமே அப்படி சொல்றது தப்புதானே? சேச்ச… ஏதோ வேலை டென்ஷன், அதை காயத்ரிகிட்ட காட்டி அவளை இம்சை பண்றாருன்னு நினைச்சிருந்தேன், என்ன மனுஷன் அவர்? அப்பவே தெரிஞ்சிருந்தா நானும் பார்த்தி கூடவே புறப்பட்டு வந்திருப்பேன்” என அங்கலாய்த்தார் தனசேகரன். 

“அமைதியா இருங்க நீங்க, ஏதாவது இழுத்து விட்டுக்காதீங்க” என கணவருக்கு ஆறுதல் சொன்னாலும், “இவ்ளோ நாளா புள்ள மனசுக்குள்ளேயே வச்சிருந்திருக்கான், என்ன பாடு பட்டிருப்பான்… அவன் முகத்தை பார்த்து கூட ஒருத்தரால அப்படி பேச முடியுமா?” என அழுதார் பத்மா. 

இவர்கள் வாய் விட்டு புலம்பி விட்டார்கள், காயத்ரி உள்ளுக்குள் புழுங்கினார். 

சுஹானா அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினாள். அவளின் மனமோ பார்த்தியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. 

“தலைவலி மாத்திரை இருந்தா கொடுடி” என மகளிடம் காயத்ரி கேட்க, “ம்ம்…  என்னம்மா?” எனக் கேட்டாள் சுஹானா. 

“என்னடி எங்க இருக்கு உன் சிந்தனை? எவ்ளோ நாளா இந்த லவ் எல்லாம்? என்கிட்டருந்தும் மறைச்சிட்ட இல்லை?” என கோவப்பட்டார் காயத்ரி. 

“அடடா சும்மான்னு இரு காயு, நீ லவ் பண்ண ஆரம்பிச்ச உடனே உன் அம்மாட்ட வந்து சொன்னியா?” என பேத்திக்காக பரிந்து கொண்டு பேசினார் தாத்தா. 

“என் அப்பாவும் உங்க பேத்தியோட அப்பாவும் ஒரே மாதிரி இல்லையேப்பா. இதை எப்படி ஹேண்டில் செய்றதுன்னே தெரியலையே” என்றார் காயத்ரி. 

“டென்ஷன் ஆகாதடி, எல்லாம் அப்பா பார்த்துக்குவார்” என மகளுக்கு ஆறுதல் சொன்னார் பத்மா. 

“அவர் கோவம் குறைஞ்சதும் பேசலாம் காயு, சுஹானாவோட விருப்பத்துக்கு நீயாவது சம்மதிக்கணும்” என்றார் தனசேகரன். 

“ப்பா… எனக்கு ஒன்னும் புரியலை, இன்னிக்கு கொஞ்சம் ஃபிரீயா விடுங்களேன் என்னை” என்றார் காயத்ரி. 

“தாத்தா… பார்த்தியை நான்தான் லவ் பண்றேன்,  அவர் என்னை எப்படி நினைக்கிறாருன்னு எனக்கு தெரியாது” என சுஹானா சொல்லவும்,  மூவரும் குழப்பமானார்கள். 

“அது… இப்படி எல்லார் முன்னாடியும் சொல்ற நிலை வரும்னு நானே நினைக்கல. முதல்ல பார்த்தி மேல எனக்கு இருக்கிற ஃபீலிங்ஸ் என்னன்னு எனக்கு புரியனும் இல்லையா?” எனக் கேட்டாள் சுஹானா. 

“என்னதான் டி சொல்ல வர்ற?” என சிடு சிடுத்தார் காயத்ரி. 

“ம்மா… பார்த்திய லவ் பண்றேன்னு ரீசன்ட்டாதான் தெரிஞ்சுக்கிட்டேன், அவர்கிட்ட கன்ஃபெஸ் பண்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு, நானும் என் பங்குக்கு சேர்த்து பார்த்திய ஹர்ட் பண்ணிட்டேன் போல” என்றாள் சுஹானா. 

“அவனும் லவ் பண்றது போலத்தானே உன் டாடிகிட்ட சொன்னான்?” எனக் கேட்டார் காயத்ரி. 

“அது உணர்ந்து சொன்னது இல்லை ம்மா, டாடி மேல உள்ள கோவத்துல பேசிட்டார்” என்றாள் சுஹானா. 

“அதெப்படி உனக்கு தெரியும்?” எனக் கேட்டார் பத்மா. 

“எனக்கு தெரியும் ஆச்சி” என்றவள், “நான் பார்த்தியை பார்த்திட்டு வரட்டுமா?” எனக் கேட்டு அம்மாவை பார்த்தாள்.

காயத்ரியோ தன் அப்பாவை பார்த்தார். 

“போய்ட்டு வரட்டும் காயு, ரெண்டு பேருமே அடல்ட்ஸ், இப்பவும் நம்மகிட்ட பெர்மிஸன் கேட்கணும்னு ஆச்சிக்கு அவசியம் இல்லை, ஆனா கேட்குறா, அதை ரெஸ்பெக்ட் பண்ணு” என்றார் தனசேகரன். 

“ம்ம்… எம் ஜி ஆர் சரோஜா தேவி டூயட் பாட்டா கேட்டு கேட்டு இப்படி ஆகிட்டீங்களா?” என நொடிப்பாக கேட்டார் பத்மா. 

“நான் இயல்பிலேயே அப்படித்தான், அதனாலதான் அந்த காலத்திலேயே என் பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா. என் மகள் இந்த முடிவை எடுத்ததுக்காக ஒரு நாளும் வருத்த பட்டிடக் கூடாதுங்கிறதை மட்டும் கண்டிஷனா வச்சு கல்யாணத்தை நடத்தி வச்சேன்” என்றார் தனசேகரன். 

“அந்த கண்டிஷனை எல்லாம் அவர் மறந்தே போயிட்டார் ப்பா” என்றார் காயத்ரி. 

“எனக்கு தெரியும் மா. பார்த்தியும் ஆச்சியும் வாழ்க்கைல இணைஞ்சாலும் அவனுக்கும் அதே கண்டிஷன்தான் போடுவேன், ஆச்சிக்கும் சேர்த்து. உங்களை போல இல்லாம ரெண்டு பேருமே அதை கடை பிடிப்பாங்கன்னு முழுசா நம்புறேன்” என்றார் தனசேகரன். 

“தாத்தா ப்ளீஸ், பார்த்திய ஃபோர்ஸ் பண்ண முடியாது. நான் பேசிட்டு வர்றேனே” என சொல்லி விட்டு சென்றாள் சுஹானா. 

சுஹானா வெளியேறியதும் ஆஷுதோஷ் ஏன் இப்படி நடந்து கொண்டார் என அவரின் நடத்தை குறித்து பேசி வருத்தப் பட ஆரம்பித்தனர் காயத்ரியும் அவரது பெற்றோரும். 

பார்த்தியின் வீடு திறந்துதான் இருந்தது. அவன் ஹாலில் அமர்ந்திருப்பது வெளியிலிருந்து பார்க்கும் போதே தெரிந்தது. புருவங்களின் மத்தியில் இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டே கண் மூடி அமர்ந்திருந்தான். 

ஆஷுதோஷ் அவனை பேசியது கூட இரண்டாம் பட்சம் ஆகி விட்டது. அவனது ஆச்சி அவனை விரும்புகிறேன் என அனைவரின் மத்தியிலும் சொன்னதும் ஆஷுதோஷ் மீதான கோவத்தில் இவன் எதிர் வினை ஆற்றியதும் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. 

சுஹானா உள்ளே வந்த அரவத்தில் விழிகள் திறந்தவன், அவளை சங்கடமாக பார்த்தான். 

கதவை மூடி விட்டு அவன் பக்கத்தில் இன்னொரு நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டாள். 

“ஏன் ஆச்சி அப்படி சொன்னீங்க?” என அவனேதான் பேச ஆரம்பித்தான். 

“ஸாரி பார்த்தி, உங்கள்ட்ட சொல்றதுக்கு முன்னாடி அப்படி… ப்ச்… எனக்கு என்ன பேசன்னு தெரியலை, டாடி உங்களை அப்படி பேசி…”

“விடுங்க ஆச்சி, அதை பத்தி பேச பிடிக்கல. அவர் நடத்தைக்கு நீங்க பொறுப்பாக மாட்டீங்க. நானும் ஏதோ கோவத்துல அவர்கிட்ட… நானும் உங்களை லவ் அது இதுன்னு…” என்றவன் மேற்கொண்டு அதை சொல்ல முடியாமல் தவித்தான். 

“எனக்கு தெரிஞ்சுது பார்த்தி” என்றாள். 

சில நொடிகளுக்கு பின், “டாடி சொன்னதை மனசுல ஏத்திக்க வேணாம், சரியா?” எனக் கேட்டாள். 

“நானே சரியாகிடுவேன் ஆச்சி, நீங்க கிளம்புங்க” என்றான். 

அப்படியே சில நிமிடங்கள் கடந்தன. 

“இந்த நேரம் இதை சொல்றது சரி கிடையாதுதான் பார்த்தி, ஆனா உங்களுக்கு கிளாரிட்டி கிடைக்கும், எனக்கும் அப்பாடான்னு இருக்கும்” என அவள் சொல்லவும் என்னவென பார்த்தான். 

“உங்க பக்கத்துல பாதுகாப்பா உணர்றேன் பார்த்தி, என்னால சுதந்திரமா செயல்பட முடியுது. இதை தாண்டி உங்களோட ஒன்னா சேர்ந்து வாழ ஆசையா இருக்கு. உங்க சின்ன வயசு லைஃப் பத்தி சொன்னீங்கல்ல பார்த்தி, எல்லாத்தையும் உங்க கை பிடிச்சுகிட்டு பார்க்கிறது போல எனக்குள்ள கற்பனை இருக்கு. அதை நிஜமாக்குவீங்களா பார்த்தி?” எனக் கேட்டாள். 

பார்த்திபனின் இதயம் பட படத்தது. அவள் ஒன்றை கேட்கிறாள், முடியாது என மறுக்கும் நிலையில் நின்றிருக்கிறேனே என அவனுக்கு வருத்தமாக இருந்தது. 

ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும், இது எப்படி சரியாக வரும்? 

அவனது தலை மறுப்பாக அசையவுமே அவளின் கண்கள் கலங்கிப் போயின. 

“ப்ளீஸ் ஆச்சி… இதை உங்கள்ட்ட சொல்றதுக்காக என்னை நானே வெறுக்கிறேன். உங்களுக்கு ஏத்தவன் இல்லை ஆச்சி நான், உங்களை… எப்படி புரிய வைப்பேன் ஆச்சி, உங்களோட நான் எப்படி…” வாழ்நாளில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லவென இப்போதுதான் இந்த தவி தவிக்கிறான் அவன். 

அவன் கஷ்டப் படுவதை பொறுக்க முடியாமல், “ரிலாக்ஸ் பார்த்தி!” என்றாள். அப்போதே அவளது கன்னத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. 

மூச்சை உள் இழுத்து அழுகையை அடக்கிக் கொண்டவள் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு புன்னகை செய்தாள். 

“லவ்ங்கிற அற்புதமான ஃபீலிங்ஸ் என்கிட்ட கொண்டு வந்தது நீங்கதான், தேங்க்ஸ் பார்த்தி! பதிலுக்கு நீங்களும் என்னை போலவே நினைக்கணும்னு கட்டாயம் இல்லை. இது பத்தி நான் இனிமே பேச மாட்டேன். நீங்க எப்பவும் போல இருங்க” என்றாள். 

அவனது முகமும் கலங்கி சிவக்க, தான் இயல்பாகத்தான் உள்ளேன் என அவனிடம் காண்பிக்க கண்களை சிமிட்டி சிரித்தாள். ஒரு வார்த்தை பேசினாலும் அழுகை வருமோ என பயந்து தலையை அசைத்தே விடை பெற்றுக் கொண்டவள் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள். 

தாத்தாவின் வீட்டுக்குள் நுழைந்த சுஹானா, ஹாலில் இருந்த யாரையும் ஏறெடுத்துப் பாராமல் அறைக்குள் ஓடிச் சென்றாள். 

காயத்ரியும் பத்மாவதியும் அவளிடம் செல்லவென எழுந்தனர். 

அவர்களை தடுத்து விட்ட தனசேகரன், “அவளை தனியா விடுங்க, பார்த்தியையும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என சொல்லி விட்டார். 

“அழறா போலங்க” என கவலையாக சொன்னார் பத்மா. 

“ஹ்ம்ம்… என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் தனசேகரன். 

 நானே ஆச்சியின் அழுகைக்கு காரணமாகி விட்டேனே என நினைத்த  பார்த்திபன், தன் உடலும் மூளையும் முடக்கப் பட்டு விட்டதை போலவே உணர்ந்தான்.