இதய கிளையில் பூத்தவளே -9

அத்தியாயம் -9

ஆஷுதோஷ் பார்த்திபனை மோசமாக பேசி விட்டதில் அனைவருமே அதிர்ந்துதான் போயிருந்தனர். 

பேசிய பிறகு மாமனாரை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்தியிருந்தார் ஆஷுதோஷ். 

அங்கிருந்து செல்ல முனைந்த பார்த்தியின் கையை பிடித்து நிறுத்திய தனசேகரன், “எங்க போற நீ, நில்லு இங்கேயே, இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ உனக்கும் இருக்குடா” என்றார். 

“அப்புறம் வர்றேன் தாத்தா” என்றவனின் குரல் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்தது. 

“அவரை இப்படி நோகடிக்கிறதுல உங்களுக்கு என்னதான் டாடி கிடைக்குது?” வேதனையாக கேட்டாள் சுஹானா. 

“உன்னாலதான், அவன் தகுதி தெரியாம அவன் கூட எதுக்கு பழகுற?” என மகளை கேட்டார் ஆஷுதோஷ். 

“ஏன் இவன் தகுதிக்கு என்ன குறை?” என கோவமாக கேட்டார் தனசேகரன். 

“என்னங்க…” என பத்மா அழைக்க, “சும்மா இருடி, மாப்ளன்னா எதை வேணா பொறுத்து போலாம்னு இல்லை. என்னவாம் இவருக்கு? என் முன்னாடியே இப்படி பேசிட்டாரே” என ஆதங்கமாக சொன்னார் தனசேகரன். 

“இவன் மேல உள்ள கோவத்துல சொல்லிட்டேன் மாமா, ஆனா இவன் நல்லவன் இல்லை. என் பொண்ணு கூட அத்து மீறி பழகுறான்” என்ற ஆஷுதோஷ், மகள் இவனுக்காகத்தான் பெங்களூரு சென்றிருக்கிறாள் என்றும் ஏனைய தன் அனுமானங்களையும் சொன்னார். 

‘அப்படியா?’ என்பது போல பேத்தியை பார்த்தார் தனசேகரன். 

இந்த பேச்சு பிடிக்காதவனாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வாயில் நோக்கி நடந்தான் பார்த்தி. 

நான் பெங்களூரு போனப்போ பார்த்தி அங்க இருக்காருன்னு சத்தியமா எனக்கு தெரியாது தாத்தா” என சுஹானா சொல்லவும், தன் மாப்பிள்ளையை கோவமாக பார்த்தார் தனசேகரன். 

“அவ உண்மை சொல்றான்னு என்ன நிச்சயம்?” எனக் கேட்டார் ஆஷுதோஷ். 

நம் பெண்ணை நாமே நம்ப மறுப்பது சரியில்லை என தாத்தா சொல்லிக் கொண்டிருக்க, “டாடி சந்தேக படுறது சரிதான் தாத்தா, நான் பார்த்தியை லவ் பண்றேன், அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு மனப் பூர்வமா ஆசை படுறேன், அது உண்மைதான்” என தெளிவாக சொன்னாள் சுஹானா. 

வாயிலை சமீபத்து விட்ட பார்த்தி அதிர்ந்து போனான், திரும்பி பார்க்காமல் வாயிலை நோக்கி வெறித்த படி அப்படியே நின்றான். 

என்ன சொல்கிறாள் இவள் என காயத்ரியும் பத்மாவதியும் கலக்கமாக அவளை பார்த்தனர். 

மாமனாரை பார்த்து ஏளனமாக சிரித்த ஆஷுதோஷ், “இப்ப என்ன சொல்றீங்க மாமா? லவ்னு வரும் போது பொய் எல்லாம் சாதாரணமா வரும்னு எனக்கு தெரியாதா? இவ எல்லாமே பிளான் பண்ணி செய்றா, இங்க வேலை தேடிகிட்டது கூட பிளான்தான்” என்றார். 

“நீங்க பேசுறது எல்லாமே சரியா இருக்கும்னு உங்களுக்கு நினைப்பா டாடி? நான் ஏன் பிளான் பண்ணி நடக்கணும், ஆனா என் லைஃப்ல என் விருப்ப படி முடிவுகள் எடுக்க எனக்கு உரிமை இருக்கு” என்றாள் சுஹானா. 

“நீயா பேசல, இப்படிலாம் உன்னை பேச வச்சிருக்கான் அவன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த கஷ்டமும் இல்லாம ஈஸியா உயரத்துக்கு வந்திடலாமே? பைபாஸ் பண்ணி எல்லாத்தையும் நடத்திக்கிறது இவனை போல ஆட்களுக்கு கை வந்த கலை” என்றார் ஆஷுதோஷ். 

பார்த்தியின் பொறுமை அவனை விட்டு விலகியிருக்க கோவமாக அவர் பக்கமாக திரும்பினான்.  

“ஆமாம் அப்படித்தான் சார், திட்டம் போட்டுத்தான் உங்க பொண்ணை என்னை லவ் பண்ண வச்சேன், நீங்க யூஸ் பண்ற டாய்லெட் நான் யூஸ் பண்றதுக்கு எனக்கு அருகதை இல்லைனு சொன்னீங்கதானே? அதான்… அதுதான் சார் உங்க பொண்ணையே எம்மேல விருப்ப படற அளவுக்கு அவங்கள மாத்தி வச்சிட்டேன். என்ன பண்ணுவீங்க சார் இப்போ… என்ன பண்ண முடியும் உங்களால?” ஆவேசமாக கேட்டுக் கொண்டே அவரை நெருங்கி வந்தான். 

“பார்த்தி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என சொல்லி அவனருகில் வந்து நின்றாள் சுஹானா. 

அவளை கண்டவன் தான் என்ன பேசினோம் என்பதை நினைத்துப் பார்த்து அதிர்ந்தவனாக ஓரடி பின்னால் எடுத்து வைத்தான். 

“ஆச்சி… நான்…” அவளிடம் மறுப்பாக தலையசைத்தான்.

மற்றவர்களோ பார்த்திபன் ஆஷுதோஷ் பற்றி சொன்னதை கேட்டு பதறிப் போயிருந்தனர். 

“பார்த்தீங்களா உங்க அருமை பார்த்திபன் லட்சணத்தை?” என மாமனாரிடம் கோவப் பட்டார் ஆஷுதோஷ். 

“என் அருமை மாப்பிள்ளை லட்சணத்தையும் இல்லை பார்த்திட்டு நிக்கிறேன்” என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார் தனசேகரன். 

யாரையும் நோக்காமல் வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டான் பார்த்திபன். 

உங்களுக்கு என்னவானது, இப்படியெல்லாம் பேசி உங்கள் மீதான மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் என கணவனிடம் சொன்னார் காயத்ரி. 

வேறு யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருப்பார் தனசேகரன், மகளின் கணவராகிப் போனவரை அப்படி சொல்ல முடியாமல் நின்றிருந்தார். 

சுஹானா நம் பெண், அவளை எப்படியெல்லாம் வளர்த்தோம், அவள் வாழ்க்கை மீது என்னைப் போல உனக்கும் கனவுகள் இல்லையா? ஒன்றுமில்லாத ஒருவனை விரும்பினால் எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருப்பேன் என மனைவியிடம் கேள்வி கேட்டார் ஆஷுதோஷ். 

“நல்லாருக்கு நீங்க பேசுறது? எம்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டு நீங்க வந்து நின்னப்போ உங்கள்ட்ட என்ன இருந்தது? என் மகளோட விருப்பத்தை மட்டும்தானே அன்னிக்கு நான் பார்த்தேன். நானும் உங்களை போல நினைச்சிருந்தா காயத்ரி உங்க மனைவியாகியிருந்திருக்க மாட்டா” என்றார் தனசேகரன். 

“என்ன சொல்ல வர்றீங்க மாமா? நானும் அவனும் ஒன்னுங்கிறீங்களா?” கோவமாக கேட்டார் ஆஷுதோஷ். 

“கண்டிப்பா இல்லை டாடி!” என்றாள் சுஹானா. 

“நீ அமைதியா இரு சுஹா” என பாட்டி சொன்னதை கேளாமல், “பார்த்தி போல மனுஷன் எல்லாம் அபூர்வம், அவரை போல இன்னொருவரை நான் இதுவரை சந்திச்சது இல்லை. உங்க கேள்வி அர்த்தம் இல்லாதது” என்றாள் சுஹானா. 

“போதும் சுஹா, உள்ள போ” என அதட்டினார் காயத்ரி. 

“மனிதர்களோட தராதரத்தை பணம் தீர்மானிக்கிறது இல்லைனு இவருக்கு புரியவே இல்லைம்மா. இவ்ளோ வசதியோட பொறந்த நான் வாழாத வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். பார்த்திக்கு அவரோட சின்ன வயசுல கிடைச்ச குவாலிட்டியான லைஃப் எனக்கு கிடைக்கல. திடீர்னு ஒருநாள் எல்லாமே நொறுங்கிப் போன நிலை அவருக்கு. இழப்புகளையும் தடைகளையும் தாண்டி இன்னிக்கு அவர் நிமிர்ந்து நிக்கிறார், என்னை கல்யாணம் பண்ணி உயரத்துக்கு வரணும்னு அவருக்கு எந்த அவசியமும் இல்லை, ஏற்கனவே அவர் உயரத்துலதான் இருக்கார். பார்த்தி குறைவானவர்னு நீங்க என்னதான் சத்தமா சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது டாடி. இனியும் அவரை அவமரியாதை செய்து என் வெறுப்பை மேலும் மேலும் சம்பாதிக்காதீங்க” என மனதில் உள்ளதை பேசி விட்டே அறைக்கு சென்றாள் சுஹானா. 

மகளின் காதலை நிறைவேற்றி தவறு செய்து விட்டேன், பேத்தியின் காதலை நிறைவேற்றி அந்த தவறை சரி செய்து கொள்வேன் என்றார் தனசேகரன். 

அவள் என் மகள், அவள் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை எனக்குத்தான் உள்ளது என்றார் ஆஷுதோஷ். 

சுஹானாவின் வாழ்க்கை அவளுடைய முடிவுகளின் படிதான், அதற்கு நான் துணை நிற்பேன் என உறுதியாக சொன்னார் தனசேகரன். 

வேகமாக மகளின் அறைக்கு சென்ற ஆஷுதோஷ் அவளை கட்டாயப் படுத்தி வெளியில் இழுத்து வந்து நிறுத்தினார். 

“என் கூட வந்து என் சொல் படி கேட்டாதான் என் சொத்துல உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும், இல்லைனா எதுவும் தர மாட்டேன். இப்ப சொல்லு என் கூட வரப் போறியா இல்லையா?” எனக் கேட்டார். 

“என்னடி இப்படிலாம் பேசுறார்?” என மகளிடம் ஆதங்கப் பட்டார் பத்மா. 

“ஹ்ம்ம்… மூளை மழுங்கி போச்சு ம்மா, வேற என்ன?” என எரிச்சலாக சொன்னார் காயத்ரி. 

“ஏன் டாடி இப்படிலாம் பேசுறீங்க? உங்க சொத்தை விரும்புவேன்னு நெனச்சிட்டீங்களா? உங்க தவறுகளை உணர மாட்டீங்களா?” 

“வர்றேன் வரலை இத மட்டும் சொல்லு” என கறாராக கேட்டார் ஆஷுதோஷ். 

“எங்கேயும் வரல டாடி, எனக்கு இங்க சென்னைதான் பிடிச்சிருக்கு, மும்பைல கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் எனக்கு இங்கு கிடைக்கும்னு நம்புறேன், இனி நான் இங்கேதான் இருக்க போறேன்” என தீர்மானமாக சொன்னாள் சுஹானா. 

“ஹ்ம்ம்… இனி என் முகத்துல முழிக்காத!” என இரைந்தவர் மனைவியை பார்த்தார்.