“வர்றத முன்னாடியே சொல்லி என்னவோ ஏதோன்னு எல்லாரும் டென்ஷன் ஆக வேணாம்னுதான் நான் சொல்லலை” என அம்மாவிடம் சொன்னார் காயத்ரி.
“அடி போடி, இப்படி அவசரம் அவசரமா செய்ய தேவையில்லாம முன்னாடியே மால்புவா செஞ்சு வச்சிருப்பேன், இப்ப ரிலாக்ஸா பேசிட்டு இருந்திருக்கலாம்” என குறை பட்டார் பத்மா.
அங்கேயே நாற்காலி எடுத்துப் போட்டு பாட்டியை அமரச் சொன்ன சுஹானா, என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு அவளே செய்ய ஆரம்பித்தாள்.
எங்களுக்கு வயதாகி விட்டது, மகளை தூரமாக கல்யாணம் செய்து கொடுத்து விட்டு அவளை அடிக்கடி பார்க்க முடியாமல் திண்டாடுகிறோம், அந்தக் குறை போக்க இப்போது பேத்தியாவது எங்களுடன் இருக்கட்டுமே, அதிகம் வேண்டாம், ஓரிரு வருடங்கள் அவளுக்கு திருமணம் முடிவாகும் வரை இருக்கட்டும் என மருமகனிடம் நல்ல முறையில் எடுத்து சொன்னார் தனசேகரன்.
சுஹானாவின் திருமணத்தை தள்ளி போடவெல்லாம் நான் விரும்பவில்லை, மாப்பிள்ளை கூட மும்பையில் உள்ளவராகவே பார்க்க போகிறேன், சொல்ல போனால் அவளுக்கு ஏற்றது போல நான்கைந்து வரன்கள் பார்த்து வைத்திருக்கிறேன், இவள் வந்து யாரை பிடிக்கிறது என சொல்கிறாளோ அவருடன் திருமணம் பேசி விடுவேன், அப்படியிருக்க இவள் இங்கு வேலை பார்ப்பது எப்படி சரியாக வரும் என ஆஷுதோஷும் சாந்தமாகவே மாமனாரிடம் பேசினார்.
பார்த்திபனுக்கு தான் இங்கு அதிகப்படி என தோன்ற, “பேசிட்டு இருங்க தாத்தா, நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என எழுந்து கொண்டான்.
“அப்படியா… இன்னும் உன் ஆச்சி என்ன செய்றான்னு தெரியலை, சரி போ, சீக்கிரம் வந்திடு” என சொல்லியே பார்த்தி செல்ல அனுமதித்தார் தாத்தா.
சுஹானாவை பற்றி அவளது முடிவை பற்றி மாமனாரும் மருமகனும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பார்த்தி சென்றது தெரியாமல் அவனுக்கும் சேர்த்து மசாலா தேநீரும் மல்புவாவும் எடுத்துக் கொண்டு வந்தாள் சுஹானா.
“அடடா! பார்த்தி விரும்பி சாப்பிடுவானே, இதோ வர்றேன்னு போனான், என்னவோ இன்னும் ஆளை காணோம்” என சொல்லிக் கொண்டே வாயிலை பார்த்தார் தாத்தா. ஆஷுதோஷின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.
“அவனை கூப்பிடுறியா ஆச்சி?” என பேத்தியிடம் கேட்டார் தாத்தா.
தன் அப்பாவுடன் இருக்க பிடிக்காமல்தான் பார்த்திபன் சென்றிருக்கிறான் எனப் புரிந்து, “ஏதாவது வேலையா இருப்பார் தாத்தா, அவரே வருவார்” என சொல்லி உள்ளே சென்று விட்டாள் சுஹானா.
ஆஷுதோஷ் தேநீர் மட்டும் எடுத்துக் கொள்ள, “இத சாப்பிடுங்க மாப்ள, நீங்க தொடவே இல்லைனு தெரிஞ்சா உங்க அத்தை ஃபீல் பண்ணுவா” என்றார் தனசேகரன்.
“அதுவும் சரிதான், இப்பல்லாம் ஹார்ட் பிராப்லம் எல்லாருக்கும் வருது. பாலுவுக்கு நாப்பத்தொம்பது வயசுதான், ஸ்டென்ட் வச்சிட்டு இப்பதான் வீடு திரும்பியிருக்கான்” என்றார் தாத்தா.
யார் பாலு என்பது போல பார்த்தார் ஆஷுதோஷ். ‘பாலு என் அண்ணனின் மருமகன், காயத்ரி சொல்லவில்லையா?’ எனக் கேட்ட தனசேகரன், தாங்கள் காரைக்குடி சென்றிருந்த விவரத்தையும் சொல்லி விட்டார்.
சுஹானாவும் உங்களுடன் வந்தாளா என மாப்பிள்ளை கேட்க, அவள் சென்னை வந்த போதே நாங்கள் காரைக்குடியில்தான் இருந்தோம், இங்கு பார்த்திபன் இருந்ததால் சுஹானாவுக்கு வேண்டியதை செய்து கொடுத்தான் என்றார் மாமனார்.
தனசேகரன் தம்பதியினர் மகளுடன்தான் அலைபேசியில் பேசுவார்கள், மருமகனுடன் மிகவும் அரிதாக ஏதாவது விஷயம் இருந்தால் மட்டுமே பேச்சுக்கள். வீட்டில் நடப்பதை எல்லாம் தன் பெற்றோருக்கு சொல்வது கிடையாது காயத்ரி, பெற்றோரும் கணவருடன் பேசிக் கொள்ள மாட்டார் என்பதால் முன்னெச்சரிக்கையாக எதையும் இவர்களிடம் அவர் சொல்லி வைத்திருக்கவில்லை.
மனதில் கனற்ற கோவத்தோடு ஆஷுதோஷ் அமைதியாக அமர்ந்திருக்க, சுஹானா பெங்களூரு போயிருந்த போது பார்த்தியும் அங்குதான் இருந்தான், தேசிய அளவிலான கான்ஃபரன்ஸில் கலந்து கொண்டு விருது பெற்றான், அந்த நேரம் நாங்கள் அவனுடன் இல்லாத குறையை சுஹானா போக்கி விட்டாள், அவனுடன் சேர்ந்தே சென்னைக்கு வந்து விட்டாள் என எல்லாம் சொல்லி விட்டார்.
தோழியின் திருமணம் என்பதெல்லாம் சாக்கு, இவனை காணத்தான் மகள் பெங்களூரு சென்றிருக்கிறாள் என உறுதியாக நம்பினார் ஆஷுதோஷ்.
மாப்பிள்ளையின் மனக் கிடங்கு புரியாமல் மீண்டும் சுஹானா இங்கு இருப்பது பற்றிய பேச்சை எடுத்தார் மாமனார்.
பாட்டி மற்றும் அம்மாவுடன் பேச்சு மும்முரத்தில் இருந்த சுஹானாவுக்கு இவர்கள் பேசிக் கொண்டது கவனித்தில் படாமல் போனது.
தேநீரும் ஒரு ஸ்னாக்ஸ் தட்டும் திரும்ப வந்து விட்டதை கவனித்த பாட்டி, பார்த்தி இல்லையா என பேத்தியிடம் கேட்டறிந்து கொண்டார். உடனே அவனுக்கு அழைத்து விட்டவர் “ஏதும் முக்கிய வேலையாடா?” எனக் கேட்டார்.
அவன் ஆமாம் எனவும் “மல்புவா செஞ்சிருக்கேன், ஒரு வாய் சாப்பிடாம போயிட்டியே, சுஹாகிட்ட கொடுத்தனுப்புறேன்” என்றார்.
“அச்சோ ஆச்சி, கொஞ்ச நேரத்துல நானே வர்றேன்” என பாட்டியை சமாளிக்க பார்த்தான்.
“காலேஜ் விட்டு அப்படியே இங்க வந்த புள்ள… இன்னும் ஒன்னும் சாப்பிடிருக்க மாட்ட, பத்து நிமிஷம் வந்து சாப்பிட்டு போ, இல்லைனா சுஹா வருவா” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் பாட்டி.
சுஹானா தனக்காக தன்னை தேடிக் கொண்டு வருவதை ஆஷுதோஷ் விரும்ப மாட்டார் என புரிந்து, வேறு வழியில்லாமல் பார்த்தியே தாத்தாவின் வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்தான்.
“பாருங்க மாப்ள, வயசானவங்கள நம்பி ஆச்சிய இங்க எப்படி விடுறதுன்னு யோசிக்காதீங்க, இங்க நாங்க மட்டுமில்லை, பார்த்தி இருக்கான். இண்டர்வியூக்கு கூட அவன்தான் அழைச்சிட்டு போனான், தேவையானது எல்லாம் அவன் பார்த்துப்பான், சுஹானா இங்க இருக்க சம்மதம் சொல்லுங்க மாப்ள”
“அவன் இங்க இருக்கிறதுதான் மாமா எனக்கு பிரச்சனையே” என்ற ஆஷுதோஷை புரியாமல் பார்த்தார் தனசேகரன்.
“சுஹானா…” என சற்றே சத்தமாக மகளை கூப்பிட்டார் ஆஷுதோஷ்.
“ஏன் என்னாச்சு இப்படி சத்தம் போடுறாங்க மாப்ள!” எனக் கேட்டார் பத்மா.
காயத்ரியும் என்னவோ என குழம்ப, ஹாலுக்கு சென்றாள் சுஹானா.
“உன் திட்டம் என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன், இந்த வீட்டு வேலைக்காரனை மீட் பண்ணத்தான் பெங்களூரு போயிருந்த? அவன் கூட அங்க ஊர் சுத்திட்டு இங்கேயும் அவனோட இருந்திருக்க, எவ்ளோ தைரியம் உனக்கு?” என மகளிடம் இந்தியில் பட படத்தார் ஆஷுதோஷ்.
தாத்தாவை கலக்கமாக பார்த்து விட்டு தந்தையிடம் திரும்பினாள் சுஹானா. “சத்தம் போடாதீங்க டாடி, தாத்தா ஆச்சி அம்மான்னு யாருக்கும் உங்களோட இன்னொரு முகத்தை காட்டாதீங்க” என அவளும் இந்தியிலேயே சொன்னாள்.
மருமகனும் பேத்தியும் ஏதோ கோவமாக பேசிக் கொள்வதை கண்ட தாத்தா, தன் மகளை பார்த்தார். காயத்ரிக்கு இந்தி தெரியுமே.
மகளிடம் ஏன் கோவம் கொள்கிறீர்கள் என கணவரிடம் கேட்டார் காயத்ரி. ஆஷுதோஷ் அமைதி காக்க, என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என அப்பாவிடம் விசாரித்தார். தனசேகரன் விவரம் சொல்லவும், சுஹானா இங்கு தனியாக இருந்தது எனக்கு தெரியும், அதற்காக கோவப்பட வேண்டாம், பார்த்திதான் உடன் இருந்தானே என்றார் காயத்ரி.
அவள் செய்யும் தவறுக்கெல்லாம் நீயும் உடந்தையா என மனைவியிடம் கோவப் பட்டார் ஆஷுதோஷ்.
எதுவும் சரிவர புரியாமல் தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் கவலையாக பார்த்துக் கொண்டனர்.
ஆஷுதோஷ் ஒரு நிலையிலேயே இல்லை. பெங்களூருவில் நான் பார்த்தியை சந்தித்தது முற்றிலும் எதேச்சையானது என சுஹானா சொல்வதை அவர் நம்பத் தயாராக இல்லை. நீ அவனுக்காகத்தான் இங்கே வேலை தேடிக் கொண்டிருக்கிறாய் என மகள் மீது குற்றம் சுமத்தினார்.
இதென்ன பார்த்திபனை மகளுடன் இணைத்து பேசுகிறாரே என அதிர்ச்சியோடு நின்றார் காயத்ரி.
“என்னடி காயத்ரி, என்ன பேசிக்கிறீங்க?” என பதட்டத்தோடு கேட்டார் பத்மா.
எதுவாக இருந்தாலும் பின்னர் பேசிக் கொள்ளலாம், என் பெற்றோர் பதறுகிறார்கள் என கணவனிடம் சொன்னார் காயத்ரி.
“நீ பேசாதே, உன்னால்தான் எல்லாம், மகன் என்ன செய்கிறான் என சரியாக அவனை கவனிக்கவில்லை, மகளையும் ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை” என மனைவியை குற்றம் சுமத்தி பேசினார் ஆஷுதோஷ்.
“அம்மாவை இப்படி பேசுவதை நிறுத்துங்க” என சுஹானா சற்றே கோவமாக சொன்னாள்.
வீட்டில் க்ரில் கதவு மட்டும் தாழ் போடப் பட்டு மரக் கதவு திறந்துதான் இருந்தது. பார்த்திபன் வெளியேறும் போதும் அப்படியே விட்டு சென்றிருந்தான். இரவு நேரம் மற்றும் பகலில் உறங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரமெல்லாம் வழக்கமாக அப்படித்தான் வைத்திருப்பார்கள்.
தன் வீட்டிலிருந்து தாத்தா வீட்டுக்கு வந்த பார்த்திபன், க்ரில் கேட்டின் உள் தாழ்ப்பாளை கையை உள் நுழைத்து திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
பார்த்திபனை கண்ட ஆஷுதோஷின் கோவம் உச்சத்திற்கு சென்றது. அப்பா ஏதேனும் பார்த்தியை பேசி விடுவாரோ என்ற பயத்தோடு அவனைப் பார்த்தாள் சுஹானா.
“என்ன ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே ஓரடிதான் எடுத்து வைத்திருப்பான் பார்த்திபன்.
“நில்லுடா, உன்னாலதான் எல்லாம், எவ்ளோ தைரியம்டா உனக்கு, நாய் மாதிரி நீ பாட்டுக்கும் உள்ள வர்ற?” என தமிழிலேயே ஆத்திரத்தோடு அவனை கேட்டு விட்டார் ஆஷுதோஷ்.