இதய கிளையில் பூத்தவளே -8

அத்தியாயம் -8

தாத்தா பாட்டி சென்னைக்கு வந்து விட்டதும் சுஹானாவுக்கு ஆறுதலாக இருந்தது. தன் தந்தை பார்த்திபனிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றியெல்லாம் அவர்களிடம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை. பார்த்தியை பெற்றெடுக்காத மகனை போல கருதி பழகும் அவர்களால் நிச்சயமாக அதை தாங்கிக் கொள்ள முடியாது. 

பார்த்தி கல்லூரி செல்வதும் அவனுடைய ஆராய்ச்சிப் படிப்பு சம்பந்தமான வேலையுமாக இருந்ததால் அந்த வாரம் முழுதுமே சுஹானாவால் அவனுடன் அதிகம் பேசியிருக்க முடியவில்லை. 

வார இறுதியில் தாத்தாவின் வீட்டுக்கு வந்தான் பார்த்திபன். வழக்கம் போல பழைய பாடல்களில் லயித்திருந்தார் தனசேகரன். பாட்டி சமையலறையில் இருக்க, அப்போதுதான் எழுந்து வந்தாள் சுஹானா. 

“ஹலோ பார்த்தி, ஒரு வழியா ஃபிரீ ஆகிட்டீங்க போல?” எனக் கேட்டுக் கொண்டே  வந்த சுஹானாவின் பக்கம் திரும்பி புன்னகை செய்தான். 

நேர்முகத் தேர்வுக்கு வரும்படி பள்ளியிலியிலிருந்து அழைத்து அவளுக்கு சொல்லியிருந்தார்கள். அதை அவள் சொல்லவும் அவர்கள் இருவர் மட்டுமின்றி உள்ளிருந்த பாட்டியும் அதிர்ந்து போனார். 

சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு இங்கேயேதான் இருக்க போகிறேன் என்ற அவளின் முடிவை சொன்னாள். 

பேத்தி தங்களுடன் இருக்க போவது அவர்களுக்கு மகிழ்ச்சியே, ஆனால் மகளும் மருமகனும் சம்மதிக்க வேண்டுமே. அவளின் சிறு வயதிலேயே, உங்களால் பிள்ளைகளுடன் நேரம் செலவு செய்ய முடியவில்லை எங்களுடன் இருக்கட்டுமே என இவர்கள் கேட்ட போதே உறுதியாக மறுப்பு சொன்னவர் ஆஷுதோஷ். 

தன்னை அவளின் அப்பா அவமரியாதை செய்ததற்காக இந்த முடிவோ என சந்தேகித்த பார்த்திபன் அவளை குழப்பமாக பார்த்திருந்தான். 

அவனை ஏறிட்டவள், “டாடிக்கு நான் டீச்சரா ஒர்க் பண்றது பிடிக்காது, அங்க மும்பைல எனக்கு கிடைக்க இருந்த வேலைய அவரோட இன்ஃப்ளூயன்ஸ் வச்சு கிடைக்க விடாம செஞ்சிட்டார். அவர் கம்பெனில வேலை பார்க்க ஃபோர்ஸ் பண்றார், அவர் பார்க்கிற பையனை மேரேஜ் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றார். ஊஃப்ப்…  அங்க இருக்கிறது எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது” என்றாள். 

பேத்தியை கலக்கமாக பார்த்தனர் பெரியவர்கள் இருவரும். 

“இங்க இருக்கேனே ஆச்சி, ஏன் கூடாதா?” எனக் கேட்டவளை அணைத்துக் கொண்டார் பத்மாவதி. 

இந்த முடிவை பற்றி உன் பெற்றோரிடமும் அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார் தனசேகரன். இப்போதைக்கு சில நாட்கள் இங்கு இருக்க போவதாக சொல்லியிருக்கிறேன், வேலை உறுதியான பிறகு என் முடிவை பற்றி பேசுகிறேன் என அவள் சொல்லவும் சரியென சொல்லி விட்டனர் பெரியவர்கள். 

காலை உணவின் போது யோசனையாகவே இருந்தவளை என்னவென கேட்டான் பார்த்திபன். சுஹானாவுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது, வேலை கிடைப்பதில் அது பிரச்சனை ஆகுமோ என்ற தன் பயத்தை வெளிப்படுத்தினாள்.

பயோடேட்டாவில் அதை குறிப்பிடவில்லையா எனக் கேட்டான் பார்த்திபன். அவளுடைய தகுதிகளை சொல்லியிருக்கிறாளே தவிர, இது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை, அன்று நேரில் சென்ற போது கூட அவள் சொல்லியிருக்கவில்லை. 

எப்படியும் நேர்காணல் செல்லும் போது அவர்களுக்கு தெரிந்து விடும், அதற்காக இரண்டு நாட்களை பதட்டத்துடனே கழிக்க வேண்டிய அவசியமில்லை என சமாதானம் சொன்னான் பார்த்திபன். 

திங்கட்கிழமை நடக்கும் நேர்காணலுக்கு என்னுடன் வரமுடியுமா என பார்த்திபனிடம் கேட்டாள் சுஹானா. 

“அவன் லீவ் எடுக்கணும்ல ஆச்சி, நான் வர்றேனே” என்றார் தாத்தா. 

“அரை நாள் லீவ் போட்டா போதும் தாத்தா, நீங்க அலைய வேணாம், நான் போறேன்” என சொல்லி விட்டான் பார்த்திபன். 

சொன்ன படியே சுஹானாவை பார்த்திதான் அழைத்து சென்றான். 

“டென்ஷன் இல்லாம நல்லா பண்ணுங்க ஆச்சி” என்றான். 

“கொஞ்சம் போல நெர்வஸா இருக்கேன் பார்த்தி” என்றவள் அவனது கையை எடுத்து தன்னிரு கைகளுக்குள் வைத்துக்கொண்டு, கண்களை மூடி, ஆழ மூச்செடுத்துக் கொண்டாள். 

அவன் என்ன செய்யவென அப்படியே நிற்க, சில நொடிகள் கழித்து கண்கள் திறந்தவள், அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் மெலிதாக முறுவல் செய்தான். 

சென்று வருவதாக தலையசைத்து விட்டு அலுவலக அறை நோக்கி நடந்தாள். 

நன்றாக இழுத்து மூச்சு விட்டுக் கொண்ட பார்த்திபன் கிரவுண்டில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். சற்றுமுன் அவள் கைகளுக்குள் இருந்த தன் கையையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் அவள் பிடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்ற தலையை உலுக்கிக் கொண்டான். 

சுஹானா எடுத்த வகுப்பு அனைவருக்கும் திருப்தியாக இருந்தது. அவளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாததை பெரிது படுத்தவில்லை. வேலையை உறுதி செய்து விட்டனர். பணியில் சேர ஒரு மாதம் வரை அவர்கள் அவகாசம் கொடுத்த போதும் இந்த வாரத்திலிருந்தே வருகிறேன் என சொல்லி விட்டாள். 

தூரத்திலிருந்து சுஹானா நடந்து வருவதை கவனித்தவன் அவளின் உடல் மொழி, முக பாவனை வைத்தே முடிவு என்னவென கணித்து விட்டான். மலர்ந்த முகமாக அவளை பார்த்தான். 

தன்னிடம் விஷயத்தை சொன்னவளை மனமார வாழ்த்தினான். தாத்தா பாட்டிக்கும் அழைத்து பேசினாள். அவர்களும் மகிழ்ச்சி கொண்டனர். 

என்னை வீட்டில் விட்டு பின் கல்லூரி செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு அலைச்சல், நானே போய் விடுகிறேன் என்றாள். 

நேரத்தைப் பார்த்தவனுக்கும் அதுவே சரியெனப் பட்டது. அருகில் உள்ள கடையில் அவளுக்கு பழச்சாறு வாங்கிக் கொடுத்து, கேப் புக் செய்து அவளை அனுப்பி வைத்துவிட்டான். 

தான் சென்னையிலேயே வேலைக்கு சேரப் போவதை அம்மாவிடமும் அண்ணனிடமும் சொன்னவள் அப்பாவுக்கு இன்னும் பேசியிருக்கவில்லை. இங்கே தங்கை படும் பாட்டை புரிந்திருந்த நிவாஸ் அவளுக்கு ஆதரவளித்து விட்டான். மகளின் முடிவில் காயத்ரிக்குத்தான் விருப்பமில்லை. 

அம்மாவிடம் பேசி பேசித்தான் சரி கட்டியிருந்தாள் சுஹானா. அப்பாவிடமும் நீங்களே சொல்லி விடுங்கள், நான் பின்னர் பேசுகிறேன் என மகள் சொல்லவும் காயத்ரிக்கு கோவம் வந்து விட்டது. 

“உன் விருப்பத்துக்கு மாறா அவர் நடக்கிறார்தான், அதுக்காக உம்மேல அக்கறை இல்லாதவர் இல்லை, உன் முடிவை எடுத்து சொல்லி அவரை ஒத்துக்க வைக்க நான் ட்ரை பண்றேன், ஆனா விஷயத்தை நீதான் சொல்லணும் சுஹா” என கறாராக சொல்லி விட்டார். 

“சரிம்மா, டாடி ஃப்ரீயா இருக்கிறப்போ மெசேஜ் பண்ணுங்க, நானே பேசுறேன்” என சுஹானாவும் ஒத்துக் கொண்டாள். 

திரைப் பிரபலம் ஒருவர் வீட்டு திருமணத்தை நடத்தித் தருவதில் ஆஷுதோஷ் பிஸியாக இருப்பதால், இரண்டு தினங்கள் கழித்து சொல்லுமாறு கூறினார் காயத்ரி. 

இரு தினங்களுக்கு பின் மகள் தானாக அழைத்த போது மகிழ்ச்சியோடுதான் பேச ஆரம்பித்தார் ஆஷுதோஷ். அவள் விஷயத்தை சொன்னதும் கோவம் கொண்டவர் ‘உடனடியாக மும்பை வந்து சேர்!’ என கட்டளையிட்டார். முடியாது என அவள் தீர்மானமாக சொல்லவும் அழைப்பை துண்டித்து விட்டார். 

அம்மாவுக்கு விஷயத்தை சொல்லி, என்னை முன்னிட்டு அப்பா உங்களுடன் சண்டை போடலாம், உங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, இது முழுக்க முழுக்க எனது முடிவு என சொல்லி விடுங்கள் என சொல்லி வைத்திருந்தாள். 

அடுத்த நாள் மாலையே தன் பெற்றோர் இங்கு வந்து நிற்பார்கள் என சுஹானா நினைத்திருக்கவில்லை. 

தனசேகரன் வீட்டில் ஏதோ பிளம்பிங் வேலைக்காக ஆள் வந்திருக்க, பார்த்தியும் அங்குதான் இருந்தான். வேலை முடிந்து ஆட்களை அவன் அனுப்பி வைக்க, அப்போதுதான் சுஹானாவின் பெற்றோரும் அங்கு வந்தனர். 

பார்த்திபன் அங்கிருந்து சென்று விடலாம் எனதான் நினைத்தான். தாத்தாவோ விடாமல், “காலேஜ் முடிச்ச கையோட வந்திட்ட, இரு ஆச்சி ஏதாவது செய்வா, சாப்பிட்டு போலாம்” என சொல்லி அவனை பிடித்து வைத்துக்கொண்டார். 

முகத்தை உர் என வைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தார் ஆஷுதோஷ். வாங்க என வரவேற்ற மகளை முறைக்க வேறு செய்தார். மகள் இங்கு இருக்க போவதில் கோவம், பேசி சரி செய்யலாம் என நினைத்திருந்தார் தாத்தா. 

மகளை கண்டதும் பத்மாவதிக்கு உற்சாகமாகி விட்டது. மகள் வருவது தெரியாமலேயே அவருக்கு பிடித்த மால்புவா செய்யத்தான் எல்லாம் தயார் செய்திருந்தார். பாட்டி அம்மாவுடன் சுஹானாவும் சமையலறையில்தான் இருந்தாள். 

மகளோடுதான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என முடிவு கட்டிக் கொண்டு தன்னையும் கட்டாயப் படுத்தி அழைத்து வந்திருப்பதாக சொன்னார் காயத்ரி. அதெல்லாம் உன் அப்பா பேசிக் கொள்வார் என சாதாரணமாக சொல்லி விட்டார் பத்மா. காயத்ரியும் அந்த நம்பிக்கையில்தான் இருந்தார். 

மாமனார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஆஷுதோஷ், அவரது பேச்சும் அவரிடம் எடுபடும். அதற்கென எல்லா விஷயங்களிலும் தலையிடாமல் தன் எல்லை தெரிந்து விலகியே நிற்பார் தனசேகரன். அதனாலேயே அவர் ஏதாவது கேட்டு விட்டால் ஆஷுதோஷால் மறுக்க இயலாது.