பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் ஏதும் அப்போது இருந்தது இல்லை. காசு கொடுத்து எந்த பொம்மைகளும் வாங்கியதில்லை. உச்சி வெயிலில் குச்சி ஐஸ் சாப்பிட கிடைத்தாலே இரண்டு நாட்களுக்கு அந்த சந்தோஷம் ஒட்டிக் கொண்டு நிற்கும்.
மிக மிக மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் திடீரென மாறிப் போய் விட்டது.
வருடந்தோறும் வறண்டு போவதும் மீண்டும் வெள்ளம் பெருகி ஓடுவதுமாக இருக்கும் அந்த ஆற்றில் இப்போதெல்லாம் கால் வைப்பதே இல்லை பார்த்திபன். மணி வாழைப் பூக்களின் பக்கம் திரும்புவது கூட இல்லை. அக்கா இல்லாமல் அந்த ஆறும் மணலும் ஊற்றும் மணி வாழைப் பூக்களும் அவனுக்கு அந்நியமாகி விட்டன.
தன் பால்ய வயதை பற்றி சொல்லி முடித்தவன் மௌனமாக எங்கேயோ பார்த்திருந்தான்.
ஆறு, மணல் வெளி, ஊற்று, நாணல் செடிகள், அரை நிக்கார் போட்டு சட்டையை கழட்டி அதை சுற்றிக் கொண்டு ஓடும் குட்டி பார்த்திபன் எல்லாம் எங்கே என தேடிய சுஹானா, நடப்பு புரிந்து பார்த்தி பார்க்கும் திசையை பார்த்தாள்.
அக்கா ஒருத்தி தம்பியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள். அவளது மனமும் கனத்துப் போனது.
“பார்த்தி…” என அழைத்து அந்தக் கொடூரமான மௌனத்தை கலைத்தாள் சுஹானா.
“என் சின்ன வயசை நான் நெனச்சு பார்க்கிறதே இல்லை ஆச்சி, எது நடந்தாலும் கடந்து வாழ்க்கைய ஓட்டித்தான் ஆகணும் இல்லையா?” எனக் கேட்டான்.
“அக்கா வேற உலகம் போயிருக்காங்க பார்த்தி, அங்கேயும் ஆறும் பூவும் இருக்கும், அங்கேருந்து அக்கா உங்களை பார்ப்பாங்க” என்றாள்.
ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டான்.
பார்த்திபனின் அக்காவுக்கு திடீரென காய்ச்சல் வந்து விட்டது. வறுமை காரணமாக சரியாக கவனித்து பார்க்க முடியவில்லை. மூத்த மகளின் இறப்பு பார்த்தியின் தந்தையை குடிகாரராக மாற்றி விட்டது. மஞ்சள் காமாலையில் விழுந்தவரை கவனிப்பதா, பிள்ளைகளுக்கு உணவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பார்ப்பதா என திண்டாடி விட்டார் பார்த்தியின் அம்மா. விளைவு பார்த்தியின் படிப்பை நிறுத்தி வையாபுரி மாமா வழியாக மளிகை கடையில் வேலை செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இருள் கவியத் துவங்கியது. வீட்டுக்கு போகலாம் என அவள் சொல்ல அவன் எழுந்து கொண்டான்.
வீட்டிலிருந்து ஏதோ மனநிலையில் கிளம்பியவர்கள் வேறு ஏதோ மன நிலையில் வீடு வந்து சேர்ந்தார்கள்.
சுஹானாவின் நினைவுகளை முழுதாக ஆக்ரமிப்பு செய்திருந்தான் பார்த்திபன். அவனும் அவன் கடந்து வந்த பாதையும் அவளுக்கு அகத் தூண்டுதலையும் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்தது.
கனவில் கூட அவன் சிறு வயதில் சொன்ன கதைகள் சம்பந்தமாகவே ஏதேதோ காட்சிகள் விரிவடைந்தன. காலைப் பொழுதில் தெளிந்த மன நிலையோடு எழுந்தாள் சுஹானா. தன் வாழ்க்கை குறித்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என எல்லா முடிவுகளும் அவளுக்கு வசப் பட்டிருந்தது.
அன்று பார்த்திபன் கல்லூரிக்கு செல்ல வேண்டும். காலை உணவு மட்டும் செய்து கொடுத்தவன் மதியத்திற்கு ஆர்டர் செய்து விடுகிறேன் என்றான். தான் பார்த்துக் கொள்வதாக உறுதியாக சொல்லி விட்டாள் சுஹானா.
சுஹானா வந்திருக்கும் நேரத்தில் விடுப்பு எடுக்க மனமில்லாமல் அன்றைய சமையலுக்கு தேவையானதையும் வாங்கிக் கொண்டு வேலைக்கு வந்து விட்டாள் வளர்மதி. காலும் அவளுக்கு பரவாயில்லாமல் இருந்தது.
சுஹானா பெரிதாக எந்த வேலையும் வளரை செய்ய விடவில்லை. அமர்ந்து கொண்டு காய் நறுக்கி கொடுத்தாள், அவளிடம் கேட்டு கேட்டு தானே சமைத்துக் கொண்டாள் சுஹானா.
சாப்பிட்ட பிறகு கேப் புக் செய்து கொண்டு வளருடன் புறப்பட்ட சுஹானா, அவளை அவளின் வீட்டில் இறக்கி விட்டாள். அடுத்து கூகுள் செய்து கண்டறிந்த மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு சென்றாள்.
முன்னறிவிப்பு இல்லாமல் வந்திருந்தாலும் வேலை தேடி வந்திருப்பவளை நன்றாக நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள். பயோடேட்டா கொடுத்து விட்டு கிளம்பினாள். யாரிடமும் ஆலோசிக்காமல் அவளே எடுத்த முடிவு இது. என்னவோ இங்கு வேலை கிடைத்து விடும் என உள்ளுணர்வு சொல்ல, நல்ல மன நிலையிலேயே அங்கிருந்து புறப்பட்டாள்.
வழியில் அடுத்த நாள் சமையலுக்கு தேவையானவற்றையும் இன்னும் அவளுக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கிக் கொண்டாள்.
தாத்தா பாட்டி நாளை காலை வந்து விடுவதாக என தகவல் சொன்னார்கள்.
மாலையில் கல்லூரி முடியவும் வளர்மதியின் கணவனை பார்த்து கண்டித்து, அறிவுரை சொல்லி என வழக்கத்தை விட தாமதமாகத்தான் வீடு வந்தான் பார்த்திபன்.
அவனது வரவை அறிந்தவள் அங்கு செல்ல கிளம்பினாள். கை கால் கழுவி முகம் துடைக்க போன பார்த்திபன் அழைப்பு மணி ஒலிக்கவும் கதவை திறந்தான்.
பெரிய பூந்தொட்டி ஒன்றை கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள் சுஹானா.
பார்த்தியின் அடர்ந்த இரண்டு புருவங்களிலும் ஈரம் வழிய, அதை துடைக்க நீண்ட தன் விரல்களை அடக்கி தொட்டியை இறுகப் பற்றிக் கொண்டாள்.
வேகமாக அந்த பூந்தொட்டியை கையில் வாங்கிக் கொண்டே, “வாங்க ஆச்சி, என்னதிது?” எனக் கேட்டான் பார்த்தி.
“இதுல பூ பூக்கட்டும், நீங்க பாடுங்க, அட என் காதுல கூட வச்சி விடலாம்” என சொல்லி சிரித்தாள்.
அக்கா மறைந்து வருடங்கள் கடந்து விட்டனவே, அந்தப் பூக்களை பார்த்தால் முன்னர் தொண்டையை அடைக்கும் துக்கம் அவனுக்கு இப்போது ஏற்படுவதில்லை.
அவனும் சின்ன சிரிப்புடன் “தேங்க்ஸ் ஆச்சி” என சொல்லி பால்கனியில் வெயில் படும் இடமாக பார்த்து வைத்தான்.
தொட்டியின் பக்கத்தில் முட்டி போட்டு அமர்ந்தாள் சுஹானா.
“உன்னை ரொம்ப பொறுப்பான ஒரு ஆள்கிட்ட சேர்த்திருக்கேன், இழப்புகளையும் தடைகளையும் தாண்டி எவ்ளோ ஸ்டராங்கா அவர் மாறியிருக்காருங்கிறதுக்கான அடையாளம் நீ. அவர் இழப்பை நினைவு படுத்த வரலை நீ, அவர் ஸ்ட்ரென்த் அவருக்கு புரிய வைக்க வந்திருக்க, அவர் அக்கா இப்போ இல்லாம போகலாம், அவங்க அவருக்கு கொடுத்த அன்பு அவர்கிட்டதான் அப்படியே இருக்குன்னு என் சார்புல அவருக்கு தினம் தினம் சொல்லிட்டே இரு” என்றாள்.
கைகளை கட்டிக் கொண்டு அவளையும் செடியையும் பார்த்திருந்த பார்த்திபனின் மனம் நெகிழ்ந்து போனது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னை பிரம்மிக்க வச்ச மனுஷன் நீங்க பார்த்தி, பாசாங்கு இல்லாத உங்களை என் லைஃப்ல நான் மீட் பண்ணினதுக்கு கடவுளுக்கு நன்றி. பார்த்தி…. ஜஸ்ட் ஸ்டே ஹேப்பி… ஆல்வேஸ்…” என்றாள்.
அவள் பார்வையில், பேச்சில், செயலில், கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்திருந்தான் பார்த்திபன்.