“நிவாஸ் கூட ஒட்ட மாட்டான், வேற உலகத்துல இருப்பான்”
“அவங்க குணம் அப்படி ஆச்சி”
“உங்க சின்ன வயசு எப்படி பார்த்தி?” எனக் கேட்டாள்.
இரு கைகளையும் விரித்து சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றான்.
“கொஞ்சம் இருக்குதானே, அத சொல்லுங்க” என்றாள்.
ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டான்.
பார்த்திபனின் வீடு திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையில் உள்ள சின்ன கிராமம். வீட்டின் பக்கத்தில் ஆறு இருக்கும், கோடையில் நீரே இல்லாமல் மணல் வெளியாக காட்சி தரும். ஆங்காங்கே ஊற்று நீர் எடுப்பார்கள்.
காலையில் அம்மாவுடன் சின்ன சின்ன குடங்கள் எடுத்துக் கொண்டு செல்வான். யாரோ எடுத்த ஊற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வீடு வருவார்கள், சில நேரம் அம்மாவே ஊற்று பறிக்க, இவனும் அக்காவும் சேர்ந்து கொண்டு மணலை தோண்டுவார்கள்.
தண்ணீரை அள்ளி இரைக்க இரைக்க கலங்கிய தண்ணீர் மறைந்து தெளிவான நீர் ஊறி வரும். அதில் தன் முகத்தை பார்த்துக் கொள்ள அவனது அக்காவுக்கு மிகவும் பிடிக்கும். அதை கிண்டல் செய்வான் பார்த்தி, இரு கைகளிலும் தண்ணீர் அள்ளி தம்பியின் முகத்தில் தெளித்து சிரிப்பாள் அவனது அக்கா.
மாலை நேரங்களில் அக்கம் பக்கம் உள்ள சிறுவர்களுடன் குழுவாக ஆற்றுக்கு விளையாட செல்வார்கள். காட்டாமணி செடிகள் இரு மருங்கிலும் வளர்ந்து நிற்கும். அதன் இலை பறித்து தண்டை ஆங்காங்கே ஒடித்து விட, முழுதும் ஒடிந்து விடாமல் நாரில் ஒட்டிக் கொண்டு தொங்கும். இலையை கொஞ்சமாக விட்டு பிய்த்து விட்டால் தொங்கட்டான் போலவே இருக்கும். அதை ஆசை ஆசையாக செய்து சுற்றியுள்ள பெண் பிள்ளைகளுக்கு காதில் அணிவித்து விடுவான்.
கால் புதைய புதைய மணலில் நடந்து செல்வார்கள். பந்தயம் வைத்துக்கொண்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓடிச் செல்வார்கள். அரை நிக்கார் மட்டும் போட்டுக் கொண்டு சட்டையை கழற்றி தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஓடுவது என்றால் பார்த்திக்கு மிகவும் பிடிக்கும்.
முன்னர் சளி பிடித்திருந்த போது மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தனர், அப்போதுதான் பார்த்திக்கு ரிப் எலும்பு ஒன்று கூடுதலாக இருப்பது தெரிய வந்தது. தொந்தரவு ஏதும் தராத வரை அதனால் பாதகம் இல்லை, பிறவியிலேயே இப்படி இவனுக்கு இருக்கிறது என சொல்லி விட்டார் மருத்துவர். ஊரில் அந்த செய்தி பரவியிருந்தது.
ஓட்டம் முடித்து மூச்சு வாங்க நிற்கும் பார்த்திபனின் நெஞ்செலும்புகளை எண்ணிப் பார்த்து “உனக்கு ஒரு எலும்பு கூட இருக்குடோய், நீ ராட்சஷன்” என சொல்லி பார்த்தியை வெறுப்பேற்றி வைப்பான் வையாபுரி மாமாவின் மகன் மருதய்யன்.
அப்படி சொல்லாதே என அவனை துரத்திக் கொண்டு சென்றான் பார்த்தி. புதர்களில் சென்று மறைந்து பூனைக்காஞ்சொறி செடியில் உடம்பை தீற்றிக் கொண்ட மருதய்யன் கை கால்களை சொறிந்து கொண்டு வருவான். தன்னை கேலி பேசியவனின் தடித்துப் போயிருக்கும் உடம்பை பார்த்து விட்டு மகிழ்ந்து போகாமல் அவன் கைப்பற்றி அழைத்து சென்று வீட்டில் விட்டான் பார்த்தி.
கரையோரம் ஓங்கி வளர்ந்து நிற்கும் நாணப் புற்களில் வெள்ளைப் பூக்கள் பூத்து குலுங்கும். அவற்றை பறித்து வந்து மணலில் கோயில் கட்டி பூக்களால் அலங்காரம் செய்து மகிழ்வான் பார்த்தி. அதை காலால் இடித்து தள்ளும் மருதுவை மண்ணில் தள்ளி, சண்டை போட்டு முடித்து, அழும் பார்த்தியின் கண்களை துடைத்து அணைத்துக் கொள்வாள் அவனது அக்கா.
மன்னிப்பு கேட்டு வரும் மருதுவிடம் இவன் முகம் திருப்ப, முகவாய் கொஞ்சி கெஞ்சி அவனிடம் பழம் விட வைப்பாள் அக்கா.
வையாபுரி மாமாவின் வீட்டு பக்கத்தில் இருக்கும் குளக் கரையில் மணி வாழை செடிகளில் ஆரஞ்சு, அடர் சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் பூக்கள் பூத்திருக்கும். பார்த்திபனுக்கு அது ஸ்பீக்கர் பூ, அவற்றை தண்டோடு பறித்து கையில் பிடித்துக்கொண்டு பாட்டுக்கள் பாடுவான், பெண் தோழிகளின் காதோரம் அந்தப் பூவை சூட்டி கை தட்டி மகிழ்வான்.
அக்காவுக்கு அந்த அடர் சிவப்பு மணி வாழை பூ மீது மிகுந்த பிரியம். வீட்டின் கொல்லைப் பக்கத்தில் அவளுக்காக இவன்தான் செடி நட்டு வைத்தான். முதல் பூ பூக்கவும் சாமிக்கு வைக்கிறேன் என பார்த்தி ஒடித்து விட, கையில் தட்டி தடுத்து விட்டாள் அக்கா. அன்று அவன் அவளுடன் பேசாமல் காய் விட்டிருந்தான்.
பலாப் பழ விதைகளை விறகடுப்பில் சுட்டுக் கொடுத்து அவனை தன்னுடன் பேச வைத்தாள்.
இருள் சூழ்ந்த பின்னும் வீடு திரும்பாமல் மருதுவின் வீட்டிலிருக்கும் கோழிக் குஞ்சுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். டார்ச் லைட் எடுத்துக் கொண்டு தேடி வருவாள் அவனது அக்கா.
நேரத்துக்கு வீடு வராமல் எங்கே சென்றாய் என கேட்டு அடிக்க, கையில் கம்போடு காத்திருக்கும் அப்பாவிடமிருந்து காப்பாற்றி பின்பக்க வாயில் வழி அவனை அனுப்பி வைத்து விட்டு அப்பாவை சமாதானம் செய்து வைப்பாள்.
ஈச்ச மரங்களில் பெரிய அண்ணாக்கள் பறித்து தரும் ஈச்சம் பழங்களை பங்கு போட்டு உண்பார்கள். கைப்பிடி அள்ளி டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொள்பவன் அக்காவுக்கு கொண்டு வந்து தருவான். நெற்றியில் முத்தமிட்டு வாங்கிக் கொள்வாள். அவன் பதிலுக்கு கன்னத்தில் முத்தமிட்டால் இன்னொரு கன்னத்தையும் காட்டுவாள்.
குட்டித் தங்கையை இடுப்பில் சுமந்து கொண்டே திரிவாள் அக்கா. அவளுக்கு அக்கா சோறூட்டும் போது இவன்தான் வேடிக்கை காட்டி நிற்பான்.
அப்பாவும் அம்மாவும் தினம் கூலி வேலைக்கு சென்று விடுவதால் அவனுக்கும் அவன் தங்கைக்கும் அக்காதான் எல்லாம்.
ஆடியில் ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடும். அந்த வெள்ளத்தை பார்த்து மிரண்டு அக்காவின் பாவாடையை பிடித்துக்கொண்டு அவளின் பின்னால் ஒளிந்து கொள்வான். அவன் பயம் போக்க, துண்டு ஒன்றால் தன்னோடு இணைத்து கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கி நடப்பாள் அக்கா. அவனுக்கு நீச்சலும் கற்றுக் கொடுத்தாள்.
தண்ணீர் பெருகி ஓடும் சமயங்களில் அக்கரைக்கு செல்ல வேண்டுமென்றால் ஊரை சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். தை மாதத்தில் எல்லாம் நீர் வரத்து குறைந்து விடும். முட்டி தொடும் அளவிலான தண்ணீரில் ஆட்டம் போட்டு ஆட்டம் போட்டு கண்கள் செக்கச் செவேல் என சிவந்து போகும்.
கையில் அகப்படும் செடியின் தண்டை முறித்துக் கொண்டு இத்தனை நேரம் ஆட்டம் போடுவாயா என மிரட்டிக் கொண்டே அடிக்க வருவார் அப்பா. தனக்குள் பொதித்து வைத்துக்கொண்டு காப்பாற்றி விடுவாள் அக்கா.
அக்காவின் கை வளைவில் தங்கை உறங்க, அக்காவின் மறுபக்கம் அவளின் மீது கால்களை போட்டுக் கொண்டு உறங்குவான் பார்த்தி.