இதய கிளையில் பூத்தவளே -7

அத்தியாயம் -7

சுஹானாவால் இன்னும்  அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதை விட உன் அப்பா என்பதற்காகவே அவரை மன்னித்து விடுகிறேன் என்ற பார்த்தியின் நிலைப்பாடு அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது.

சுருண்டு படுத்திருந்தவள் அழைப்பு மணியின் ஓசை கேட்டு எழுந்தாள். பார்த்திபன்தான் மதிய உணவுக்காக கூப்பிட வந்திருந்தான்.

 அவளின் சோர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன், “என்ன ஆச்சி, நீங்க இன்னுமா அதையே நினைச்சிட்டு இருக்கீங்க? முத சாப்பிடுங்க, எங்கேயாவது வெளில போறதுன்னா சொல்லுங்க, கேப் புக் பண்றேன்” என்றான்.

“ப்ச் எங்கேயும் போக மூட் இல்லை பார்த்தி” என சொல்லி விட்டவள் அவனுடன் சாப்பிட சென்றாள்.

உணவுக்குப் பின் அவனது வீட்டிலிருந்து காணொளி அழைப்பு வந்தது. பார்த்திபனின் தங்கை அவளது குடும்பத்தோடு வந்திருக்கிறாள் போலும், தங்கையின் மகளுடன் ஆசையாக கொஞ்சி கொஞ்சி பேசினான். சுஹானா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதேச்சையாக அவளின் பக்கம் திரும்பினான் பார்த்திபன். அவளின் பார்வை சாதாரணமானதாக இல்லை, இவன் பார்க்கிறான் என தெரிந்த பிறகும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டவள் மெல்ல மெல்லத்தான் அவனிடமிருந்து பார்வையை அகற்றிக் கொண்டாள். அவனது பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது.

“மாமா மாமா…” என அந்தப் பக்கம்  குழந்தை மழலையில் அழைத்துக் கொண்டே இருக்க, “பேசுங்க பார்த்தி” என்றாள் சுஹானா.

குரலை செருமிக் கொண்டு குழந்தையுடன் மட்டும் பேசியவன் தங்கை பேச வரும் போது வேலையிருப்பதால் பின்னர் நானே அழைக்கிறேன் என சொல்லி வைத்து விட்டான்.

சுஹானாவை ஏறிட முடியாமல் தவித்தவன் எழுந்து போய் தண்ணீர் பருகி விட்டு வந்தான்.

“வீட்டுக்கு போறேன் பார்த்தி” என அவளும் கிளம்பினாள். வழியனுப்ப அவனும் அவளின் பின்னால் சென்றான். கதவை திறக்க போனவள் ஏதோ சொல்ல நினைத்து, “ஹ்ஹ பார்த்தி…” என திரும்ப, அவன் அவளுக்கு மிகவும் அருகில் நின்றிருந்தான்.

அவன் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, ஷேவிங் லோஷன்,  அல்லது சமைத்ததால் உண்டான வியர்வை எதுவோ ஒன்று அவளால் பிரித்தரிய முடியவில்லை, அவனது வாசமாக அதை உணர்ந்தாள்.

லேசாக அவன் பால் வசமிழந்தவள் பேச்சையும் இழந்து நிற்க, அவன் சட்டென பின்னால் நகர்ந்து, “என்ன ஆச்சி?” எனக் கேட்டான்.

அவளது மூளை திடீரென எந்த சிந்தனையும் இல்லாமல் காலியாகி விட்டதை போல சமைந்து நின்றாள்.

அவளை புரிந்தும் புரியாமலும் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், “எதுவும் வேணுமா ஆச்சி?” எனக் கேட்டான்.

இட வலமாக தலையாட்டினாள், அடுத்த நொடி மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

அவன் குழப்பமாக, “அது… வந்து… வெளில போலாம், தனியா போக முடியாது, அழைச்சிட்டு போங்க பார்த்தி” என்றாள்.

“எங்க போகணும் ஆச்சி?”

“தெரியலை பார்த்தி, எங்கேயாவது” என்றாள்.

என்ன சொல்லவென அவன் பார்க்க, “ஜஸ்ட் லைக் தட் எங்கேயாவது போய்ட்டு வரலாம். உங்களுக்கு வெளில ஏதும் ஒர்க் இருந்தா  அங்க கூட போலாம், எனக்கு கொஞ்சம் அவுட்ஸைட் காத்து வேணும்” என்றாள்.

“ரெடியாகிட்டு கூப்பிடுங்க” என அவன் சொல்ல, சரியென சொல்லி போய் விட்டாள்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டவன் ‘ஹப்பா…’ என மூச்சை விட்டான். மீண்டும் மீண்டும் அவளின் பார்வை மனக் கண்ணில் வந்து போனது, உடல் ஒரு வித நடுக்கத்தை உணர, தன்னிரு கைகளை முன்னால் நீட்டி பார்த்துக் கொண்டான். தான் ஸ்திரமாக இருப்பதாகவே  தன்னை நம்ப வைத்துக் கொண்டான்.

தாத்தாவின் வீட்டுக்கு வந்த சுஹானா தன்னைப் போல நடந்து பால்கனி சென்றாள். வெயிலில் வாடிப் போயிருந்தன காசித்தும்பை பூக்கள். கையால் பட்டும் படாமல் செடியை வருடி விட்டாள். அவனது ‘ஆச்சி’ என்ற அழைப்பு காதில் கேட்டுக் கொண்டே இருப்பது போலிருந்தது.

தன்னை வெளியில் அழைத்து செல்லும் படி அவனிடம் சொன்னது நினைவுக்கு வர வேகமாக தயாரானாள். நேரம் எப்போது நான்கை தொடும் என காத்திருந்து அவனுக்கு அழைத்தாள். உடனே அவளிடம் வந்தவனிடம் கேப் வேண்டாம் என்றாள்.

அவன் அதிர்வாக பார்க்க, “என்ன பார்த்தி?” எனக் கேட்டாள்.

ஒன்றுமில்லை என்றவன் பைக் சாவி எடுத்து வருகிறேன் என சொல்லி சென்றான். அவளும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் காத்திருந்தாள்.

யோசனையான முகத்தோடு அவன் கதவை அடைக்க, என்ன முயன்றும் அவளால் தன் பார்வையை அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை. அவன் கண்டு கொள்கிறான் என்பதில் தீயில் நிற்பது போலிருந்தது.

இருவரும் படிகளில் நடந்து சென்றனர். பார்த்தியின் கைப்பேசி ஒலிக்க கவனமே இல்லாமல் தன் பாட்டிற்கும் நடந்து கொண்டிருந்தான்.

முன்னே சென்றவனின் தோள் தொட்டவள், “உங்க ஃபோன் ரிங் ஆகுது” என்றாள்.

தோள் மீதிருந்த அவளின் கையை பார்த்தவன் வேகமாக அடுத்த படியில் இறங்க அவள் கை அந்தரத்தில் நின்றது.

ஏதோ சேவைக்கான அழைப்பு, ஏற்காமல் துண்டித்து விட்டான்.

பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்து சென்றான். அந்த நேரம் பாதுகாவலர் தவிர அங்கே யாருமே இல்லை. இன்னும் வெயில் இருந்தது.

இங்கு வந்து பத்து நிமிடங்களுக்கும் மேலாகி விட்டது. ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் வெறுமனே நடந்து கொண்டிருந்தனர்.

பார்த்திபன் மீது தனக்கிருக்கும் உணர்வு என்ன என்பது போல அவள் அவளுடனே ஆலோசனை செய்து கொண்டிருந்தாள். ஆச்சியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என கொஞ்சம் பயமும் கொஞ்சம் மிரட்சியுமாக இருந்தான் அவன்.

நேரம் செல்ல செல்ல மக்கள் வர ஆரம்பித்தனர். சின்னதும் பெரிதுமாக குழந்தைகள் விளையாடினார்கள். பெரியவர்கள் நடை பயிற்சி செய்தார்கள். கொஞ்சம் மறைவான இடத்தில் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பதற்றத்துடன் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் சில காதலர்கள்.

மரப் பெஞ்சில் அமர்ந்து கொண்ட சுஹானா பார்த்தியையும் கண்களால் அமரச் சொன்னாள். நல்ல இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். அவனை சில நொடிகள் தீர்க்கமாக பார்த்தவள் மிகுந்த கட்டுப்பாட்டோடு அவன் பக்கம் பாராமல்  வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

பார்த்திபனுக்கு நேரம் மெது மெதுவாக நகர்ந்தது. வாலிபர்கள் சிலர் தங்களை கடக்கையில் ஏதோ பேசி சிரிப்பதை கண்டான். அடிக்கடி இந்தப் பக்கம் வந்து செல்வது போல் பட்டது. ஊன்றிக் கவனித்தவன் அப்படித்தான் என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான்.

“ஆச்சி வேற எங்கேயாவது போலாமா?” எனக் கேட்டான்.

“நான் தனியா வந்திருக்கிறதா நினைச்சிட்டாங்க பார்த்தி, கிட்டக்க உட்காருங்க, போயிடுவாங்க” என்றாள்.

சற்றே நெருங்கி அமர்ந்து கொண்டான்.

விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை சுட்டிக் காண்பித்தவள், “இந்த வயசுல அப்பாம்மா என் கூட இருந்ததே இல்லை பார்த்தி” என்றாள்.