இதய கிளையில் பூத்தவளே -6

அத்தியாயம் -6

பார்த்திபனின் வீட்டில் குட்டித் தூக்கத்திலிருந்த சுஹானா விழித்துக் கொண்டாள். அவள் எழுந்த அரவத்தில் லேப்டாப்பில் வேலையாக இருந்த பார்த்திபன் அவளின் பக்கமாக திரும்பினான்.

“லஞ்ச் சாப்பிட்டு இப்படி தூங்கி பல நாள் ஆகிடுச்சு பார்த்தி, தேங்க் யூ!” என்றாள். 

“ஏதாவது உங்களை தொந்தரவு பண்ணுதா ஆச்சி?” எனக் கேட்டவன் அவளின் குழம்பிய பார்வையில், “தூக்கத்த பத்தி சொன்னதால கேட்டேன், எதுவா இருந்தாலும் உங்களை பாதிக்க விடாதீங்க, பிரச்சனை இல்லாதவங்க யாருமில்லை, உங்களால ஹேண்டில் பண்ண முடியும்” என்றான். 

தன்னால் முடியும் என்பது போல ஆமோதிப்பாக தலையாட்டியவள், வளர் அக்கா வரும் நேரமாகி விட்டது எனக் கூறி தாத்தாவின் வீட்டுக்கு சென்று விட்டாள்.

வளர் வந்து சேர மாலையாகி விட்டது. அவளின் பாதத்தில் ஏதோ காயம், மருத்துவமனை செல்லாமல் தானே ஏதோ கட்டு போட்டுக் கொண்டு அழுது வீங்கிய முகத்துடன் வந்திருந்தாள். 

அதிர்ந்த சுஹானா என்னவென கேட்க ஒரே அழுகை. பயந்து போனவள் பார்த்தியை அழைத்து விட்டாள். 

வளர்மதியின் கணவன் சரியான குடிகாரன். காலையிலேயே குடித்து விட்டு வந்து ரகளை, கண்ணாடி சீசா ஒன்றில் வளர் வைத்திருந்த பணத்தை எடுக்க பார்த்திருக்கிறான். வளர் தடுக்க சீசா தரையில் விழுந்து உடைந்து விட்டது. சிதறிய பணத்தை எடுத்துக் கொள்ள பார்த்த கணவனை தள்ளி விட்டு இவள் எடுக்க முயல, இவளின் காலில் கண்ணாடித் துண்டு ஏறி விட்டது. 

சுஹானா உடனே அவளின் காலை ஆராய்ந்து பார்த்தாள். கண்ணாடி சில்லு ஒன்று இன்னும் வளரின் பாதத்தை துளைத்துக் கொண்டிருந்தது, சுஹானா அதை எடுக்க முயல, அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது. வளர் முகம் சுளித்து அழுதாள். 

தன்னால் முடியாமல் போகவும் மருத்துவமனை செல்ல வேண்டியதின் அவசியத்தினை சொன்னாள் சுஹானா. உடனே கேப் புக் செய்து விட்டான் பார்த்திபன். 

மூவருமாக மருத்துவமனை சென்றனர். வளருக்கு முதலுதவி செய்யப் பட்டு கட்டு போடப் பட்டது. 

கால் சரியாகும் வரை வேலைக்கு வர வேண்டாம் என்ற பார்த்திபன் செலவுக்கு பணம் கொடுத்தான். “ஏற்கனவே நிறைய செஞ்சிட்டீங்க தம்பி” என சொல்லி வாங்க மறுத்தாள் வளர். 

“பிடிங்க க்கா, உங்களால முடியும் போது கொடுங்க, மறுக்காம வாங்கிக்கிறேன்” என வற்புறுத்தி அவளின் கையில் பணத்தை திணித்தான். 

தன்னிரக்கத்தில் வளர் அழ, அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் சுஹானா. 

தானே வீட்டுக்கு சென்று விடுவேன் என வளர் சொன்னதற்கு சம்மதிக்காமல் அவர்களே அவளை வீட்டில் விட்டு வர கிளம்பினர். 

வீட்டுத் திண்ணையில் படுத்துக் கிடந்த வளரின் கணவன் மனைவியை கண்டதும் தள்ளாடிக் கொண்டே எழுந்தான். நாக்கை மடித்துக் கொண்டு ஆவேசமாக அவளை நோக்கி வந்தவன்,  சமைத்து வைக்காமல் எங்கேயடி சென்று விட்டாய் எனக் கேட்டு அவளை அடிக்கப் பாய்ந்தான். 

பயத்தில் அடிபட்ட காலோடு பின் வாங்கினாள் வளர்மதி. அவளின் கணவனின் கன்னத்தில் அறைந்து அவனை விலக்கி நிறுத்தினான் பார்த்திபன். 

சுஹானா திடுக்கிட்டுப் போய் பார்க்க, “உங்கம்மா வீடு பக்கம்தானே க்கா, அங்க போய் விடுறேன், நீங்க வாங்க, இவர்கிட்ட நாளைக்கு பேசிக்கிறேன்” என்றான். 

வளரும் மறுத்து பேசாமல் மீண்டும் காரில் ஏறிக் கொண்டாள். 

ஐந்து நிமிட பயணத் தொலைவில்தான் வளரின் அம்மா வீடு.  நான்காவது படிக்கும் அவளின் ஒரே மகனை அங்குதான் விட்டு வைத்திருக்கிறாள். 

சின்ன ஒட்டு வீட்டிலிருந்து ஓடி வந்த வளரின் மகன் அம்மாவின் தோற்றத்தை கண்டு திகைத்துப் போனவனாக அப்படியே நின்றான். 

“ஹேய் கண்ணா! அம்மா கீழ விழுந்திட்டாங்க, சீக்கிரம் சரியாகிடுவாங்க” என சொல்லி குழந்தையின் கன்னத்தை தட்டிக் கொடுத்தான் பார்த்திபன். 

அவன் மருண்ட பார்வையோடு தலையாட்டிக் கொள்ள சுஹானாவுக்கு இரக்கமாக இருந்தது. 

அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, மகனை அங்கே அனுப்பி வைத்த வளர், தேநீர் பருகிச் செல்லலாம் என அவர்களை உள்ளே அழைத்தாள். 

வேண்டாம் என பார்த்தி மறுப்பதற்குள் வளரின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல நடந்தாள் சுஹானா. வேறு வழியின்றி அவனும் அவர்களை பின் தொடர்ந்தான். 

வளரின் அம்மா தன் மருமகனை ஏக வசனத்தில் நன்றாக திட்டினார். என்னை எதிர்த்துக் கொண்டு உன் விருப்பப் படி காதலித்து மணந்து கொண்டாயே, சீரும் சிறப்புமாக உன்னை எப்படி வாழ வைக்கிறான் பார் என மகளையும் திட்டினார். 

“அம்மா!” என அதட்டிய வளர், மிகுந்த சங்கடமாக சுஹானாவை பார்த்தாள். 

“ஆன்ட்டி விடுங்க, நடந்தத மாத்த முடியாது, அவரை எப்படி திருத்தறுதுன்னு பார்க்கலாம்” என்றாள் சுஹானா. 

“அதெல்லாம் திருந்துற செம்மம் இல்லை கண்ணு. இதோ இந்த தம்பிதான் ஏதோ சென்டர்ல சேத்து வுட்டுச்சு, நாலு நாள்ல தப்பிச்சு ஓடியாந்திட்டான். அந்த கஸ்மாலத்த வுட்டுட்டு வாடின்னாலும் கேட்டு தொலைக்க மாட்டேங்குறா, எம்பேரனை ஆளாக்கி வுட்டுட்டா போதும்னு நானும் கம்முன்னு கெடக்கேன். நீ சொல்லு கண்ணு காபியா டீயா என்னா வேணும்?” என்றார் வளரின் அம்மா. 

“சிரம படாதீங்க ம்மா, தண்ணி கொடுங்க போதும்” என்றான் பார்த்திபன். 

“அத்து என்னா கண்ணு அப்டி சொல்லிக்கின, இன்னமாவது துன்னுட்டுத்தான் போவணும்” என்றவர் இரண்டு தட்டுக்களில் மிக்சர், பிஸ்கட் வைத்து சாப்பிட கொடுத்தார். 

பார்த்திபனின் உதவியில்தான் வளரின் மகன் படிக்கிறான், சில முறை இங்கு வரவும் செய்திருக்கிறான். வளரின் அம்மாவெல்லாம் இவனுக்கு பழக்கம்தான். சுஹானா சாப்பிடுவாளா அல்லது சங்கட படுவாளா என அவளை பார்த்தான். அவள் இயல்பாக அந்தப் பெண்மணியின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டாள். 

ஆச்சியின்  அப்பாவான ஆஷுதோஷ் ஏன் அப்படி இருக்கிறார் என அவனுக்கு தோன்றாமல் இல்லை. 

அங்கிருந்து திரும்பும் போது வளர் அக்காவின் மகன் படிக்க நீங்களா உதவி செய்கிறீர்கள் என விசாரித்தாள். பேசும் போது வளரின் அம்மாதான் சொல்லியிருந்தார். 

பெரிய உதவியெல்லாம் இல்லை, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறான், கட்டணம் அதிகமில்லை, என் சக்திக்கு உட்பட்டதை செய்கிறேன் என்றான். 

“க்ரேட் பார்த்தி! ஸோ ப்ரவுட் ஆஃப் யூ!” என்றாள். 

“எனக்கும் தாத்தா உதவினாங்கதானே ஆச்சி? எனக்கு கிடைச்சத நான் இன்னொரு பிள்ளைக்கு திருப்பி தர்றேன், இத என்னோட பொறுப்பாதான் நான் பார்க்கிறேன், பெருமை பட எதுவுமில்லை” என்றான். 

“ம்ம்… அதென்ன சட்டுன்னு வளர் அக்காவோட ஹஸ்பண்ட்டை அடிச்சிட்டீங்க?” 

“பின்ன என்ன ஆச்சி? அவர் நிதானம் ஆகட்டும் நாளைக்கு இன்னும் பூசை போடணும்” என்றான். 

“பார்த்திக்கு கோவமெல்லாம் வரும்னு இன்னிக்குத்தான் தெரியுது, எனக்கு தெரியாத பார்த்தியின் ஸைட்!” என கிண்டலாக சொன்னாள். 

“ஹையோ அவரை முன்னாடிலிருந்து தெரியும், வளர் அக்காவை அடிக்க வரவும் கண்ட்ரோல் மீறிட்டேன், நாளைக்கு கூட அட்வைஸ்தான் பண்ணுவேன், கொஞ்ச நாளைக்கு அடக்கமா இருப்பார்” 

“அக்கா ஏன் அவரை விட்டுட்டு அம்மா வீட்லேயே இருக்க கூடாது?”

“அதை எப்படி நாம சொல்ல முடியும் ஆச்சி? அவங்கதான் முடிவு பண்ணணும்”

“யாராவது சொன்னாதானே பார்த்தி அப்படி யோசிப்பாங்க”

“அதான் தினம் அக்காவோட அம்மா சொல்லிட்டே இருக்காங்களே?”

“ஹ்ம்ம்… அக்காக்கு அப்படி என்னதான் லவ்வோ அவர் மேல?” என அவள் சலிக்க, அவன் ஏதும் சொல்லவில்லை. 

வீடு வரவும் இரவு உணவு தான் தயாரிப்பதாக சொன்னான். அப்படியெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது, நானும் ஏதாவது செய்வேன், ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஆர்டர் செய்து கொள்கிறேன் என அடமாக சொல்லி விட்டாள்.

புதினா இலைகள் ஆய்ந்து தரும் வேலை கொடுத்தான். அவள் முறைத்தாள். 

“முடியலைன்னா கொடுங்க” என அவன் கை நீட்ட, அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு சொன்ன வேலையை செய்தான். 

சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை எல்லாம் முன்னரே கழுவி வைத்து விட்டான் போலும், சமையலறை துப்புரவாக இருந்தது. 

மதியமே மாவு பாக்கெட் வாங்கி வைத்திருந்தான். இட்லி, புதினா சட்னி என இரவு உணவு முடிந்தது. 

சுஹானா வீடு செல்லும் போது அவனும் உடன் வந்தான். காய்ந்த துணிகளை எடுத்து வையுங்கள் என்றவன் பத்து பாத்திரங்களிடம் சென்றான். அவள் அனுமதிக்கவே இல்லை. 

“வளர் அக்காவும் ரெண்டு மூனு நாளைக்கு வர மாட்டங்க ஆச்சி, உங்களுக்கு இதெல்லாம் பழக்கம் இருக்காது” என்றான். 

“அதுக்காக நீங்க செய்வீங்களா  பார்த்தி? என்னை ரொம்ப மோசமா உணர வைக்காதீங்களேன், பழக்கம் இல்லைனாலும் செய்ய முடியாதுன்னு இல்லையே, நான் செய்துக்குவேன்” என அவள் சொல்ல, மறுத்துப் பேச முடியாமல் ஹால் சென்றான். 

வளரின் காலில் இருந்து சொட்டியிருந்த இரத்த துளிகள் காய்ந்து போய் இருக்க, அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். 

“பார்த்தி!” என அதட்டினாள். 

“இதெல்லாம் கண்டிப்பா உங்களால செய்ய முடியாது, நீங்க சொன்னாலும் கேட்க மாட்டேன் ஆச்சி” என்றான். 

அவன் கையிலிருந்த மோப்பை பிடுங்கிக் கொள்ள பார்த்தாள். அதற்கு விடாமல் கையை தள்ளி வைத்துக் கொண்டவன், “என்ன ஆச்சி, ஏன் என்னை செய்யக் கூடாதுன்னு சொல்றீங்க?” எனக் கேட்டான். 

“நான்தான் இருக்கேனே பார்த்தி, என்னால உங்களை செய்ய விட்டுட்டு… ப்ச் அதை கொடுங்க”

“அங்க போய் உட்காருங்க ஆச்சி” என்றவன் விடாப் பிடியாக சுத்தம் செய்து விட்டுத்தான்  ஓய்ந்தான்.

“ஏன் பார்த்தி… நீங்களும் இந்த வீட்ல ஒருத்தர் அப்படிங்கிற உணர்வை உங்களுக்கு தர தவறிட்டோமா?” என வருத்தமாக கேட்டாள். 

“இதுக்கு மேல என்னை நல்லா பார்த்துக்க யாரால முடியும் ஆச்சி? இந்த வீட்ல என்னை கேள்வி கேட்க யாரும் இல்லை, சில சமயம் தாத்தாவையும் ஆச்சியையும் நானே அதட்டி பேசுவேன். நான் இந்த வீட்ல ஒருத்தன்தான், அதனாலதான் கேட்கிறேன், இந்த வேலைலாம் நான் செய்றதுல என்ன தப்பு?”

“இல்லியே அந்த உரிமையோட நீங்க செய்ற மாதிரி தெரியலையே, இதெல்லாம் கடமைங்கிற ஃபீல்லதான் செய்றீங்க”

“அதுவும் தப்பில்ல” என சாதாரணமாக சொன்னவன் வேலையை முடித்து கைகள் கழுவிக் கொண்டான். 

சுஹானாவுக்கு ஏதோ யோசனைகள். 

கதவை பூட்டிக் கொள்ளும் படி சொல்லி விட்டு அவன் நகர, “பார்த்தி…” என அழைத்து அவனை நிறுத்தினாள். 

என்னவென பார்த்தவனை அமரச் சொன்னவள், “இதை கேட்டு உங்களை எம்பாரஸ் செய்யக் கூடாதுன்னுதான் இருந்தேன். இப்ப தெரிஞ்சுக்கணும்னு தோணுது” என்றாள். 

அவன் புரியாமல் பார்க்க, “நிவாஸ் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ நீங்களும் டாடி கூட ஸ்டே பண்ணியிருந்தீங்க” என ஆரம்பித்தாள். உடனடியாக பார்த்தியின் உடல் விரைத்து, முகமும் இறுகிப் போனது. 

அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே, “என்ன நடந்துச்சு பார்த்தி அன்னிக்கு?” எனக் கேட்டாள். 

அவள் விழிகளை சந்திக்காமல், “எதுவும் இல்லையே ஆச்சி” என்றான். 

“எம்மேல பிராமிஸ், உண்மையை சொல்லணும்” என அழுத்தமாக சொன்னாள். 

சில நொடி அமைதிக்கு பின், “சொல்ல பிரிய படலை ஆச்சி, ப்ளீஸ் விட்ருங்க” என்றான். 

“இங்க பாருங்க பார்த்தி, எதையும் மனசுக்குள்ளேயே வச்சிக்கிறது டேஞ்சர், ஸ்பீக் அவுட்” 

“நான் வர்றேன் ஆச்சி” என சொல்லி எழுந்து கொண்டான். 

“சொல்ல முடியாத படி அப்படி என்னதான் நடந்துச்சு பார்த்தி?” கலங்கிப் போன குரலில் கேட்டாள். 

“நீங்க ரொம்ப கற்பனை பண்ண வேணாம், குட் நைட்!” என சொல்லி கதவு வரை சென்று விட்டான். 

“உங்களை எதுவும்… அடிக்க செஞ்சிட்டாரா டாடி?” அப்படி ஏதும் இருந்து விடக்கூடாது என்ற வேண்டுதலோடு கேட்டாள். 

நின்றவன் திரும்பிப் பார்க்காமலே, “இல்ல ஆச்சி” என சொல்லி வெளியேறி விட்டான். 

அடுத்த நாள் தன் வீட்டிலேயே சமைத்து கொடுத்தான் பார்த்தி. அவள் விடாமல் மருத்துவமனையில் நடந்தது பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் பதில் சொல்லாமல் சமாளித்தான். 

ஒரு கட்டத்தில் அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டவள், “நைட் சரியாவே தூங்கல பார்த்தி, ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு. சொல்ல போறீங்களா இல்லையா இப்போ?” என தீவிரமாக கேட்டாள். 

தன் கையை விலக்கிக் கொண்டவன், “நான் உங்க அப்பாவுக்கு சமம் இல்லைனு சொன்னார்” என்றான். 

“அப்படியா சொன்னார்?” 

அவள் முகத்தை பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான். 

அன்றைய தினம் இரவு நிவாஸ் ஐ ஸி யூ வில் இருந்ததால் தனியாக அறை எடுத்திருந்தார் ஆஷுதோஷ். என்ன செய்கிறாய், எப்படி செல்கிறது உன் ஆராய்ச்சிப் படிப்பு என்றெல்லாம் அவனை கேள்வி கேட்டார். அவன் பதில் சொல்லும் சமயத்தில் எல்லாம், என் மாமனார் மனது வைக்காமல் போயிருந்தால் இந்நேரம் எங்கு என்ன கூலி வேலை செய்து கொண்டிருப்பாயோ, உனக்கு யோகம்தான் என இளப்பமாக அவனை பேசினார். 

நிறைய எடுபிடி வேலைகள் வாங்கினார். அவரின் குத்தல் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தன் மனதில் சுருக் சுருக் என தைத்த போதும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருந்தான் பார்த்திபன். 

நடு இரவுக்கு மேல் எடுத்திருந்த அறைக்கு சென்று விட்டார் ஆஷுதோஷ். ஐ ஸி யூ க்கு வெளியில்தான் அமர்ந்திருந்தான் பார்த்திபன். 

அதி காலையில் அவனை அழைத்தவர் தனக்கு காபி வாங்கி வரும்படி கூறினார். காபி கொடுக்க சென்றவன் அங்கிருந்த ஒய்வறையை உபயோகித்துக் கொள்ள சென்றான். 

உனக்கு உன் எல்லை தெரியவில்லை, நான் உபயோகித்த பிறகு அதை சுத்தம் செய்ய மட்டுமே உனக்கு தகுதி உள்ளது என நக்கலாக சொல்லி விட்டார் ஆஷுதோஷ்.

 சிவந்து போன விழிகளுடன் அவரை கோவமாக பார்த்த பார்த்திபன் உடனே அங்கிருந்து வெளியேறி விட்டான். 

நடந்ததை அவளிடம் சொல்லி விட்டவனின் முகம் அன்று நடந்த அவமானத்தால் இப்போதும் கன்றிப் போனது. 

அதிர்ச்சியின் உச்சம் சென்ற சுஹானா தொப் என நாற்காலியில் அமர்ந்து விட்டாள். தன் அப்பாவின் செயலை நம்ப முடியவில்லை, அந்த நேரம் பார்த்திபனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிக்க முடியவில்லை. 

தான் அழைக்க போயிதான் பார்த்திபன் மும்பை வந்தார், அவருக்கு நேர்ந்த அவமானத்துக்கு தானும் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் முகத்தை மூடிக் கொண்டு, உடல் குலுங்க அழுதாள் சுஹானா. 

மனதை அழுத்திக் கொண்டே இருந்த விஷயத்தை வெளியிட்டதில் அவனுக்கு ஏற்பட்ட ஆசுவாசம்  அதிக நொடி அது நீடிக்கவில்லை. அவளின் அழுகை இதை சொல்லியிருக்க கூடாது என்பதை  அவனது புத்தியில் உரைக்க செய்தது. நடந்து போனதை இனி அவனால் மாற்றியமைக்க முடியாதே. 

அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன், “ப்ளீஸ் ஆச்சி, நீங்க ஏன் அழறீங்க? கஷ்டமா இருக்கு ஆச்சி, அழாதீங்க” என்றான். 

முகத்திலிருந்து கைகளை விலக்கிக் கொண்டாள். கன்னங்கள், மூக்கு நுனி எல்லாம் அப்படி சிவந்து போயிருந்தன. இன்னும் கண்ணீரும் நின்றிருக்கவில்லை. 

அவளும் அவனுக்கு சமமாக தரையில் அமர்ந்து கொண்டாள். அவன் கையை பற்றினாள். கண்ணீரில் நனைந்திருந்த அவளின் கைகள் அவனது கைகளையும் ஈரமாக்கியது. 

“எப்படி ஸாரி கேட்பேன் பார்த்தி? என்ன செஞ்சு இதை சரி செய்வேன்?” என அழுது கொண்டே கேட்டாள். 

“நீங்க எதுவும் செய்ய வேணாம் ஆச்சி, நான் மறந்திடுறேன் அதை, நீங்களும் மறந்து போயிடுங்க” என்றான். 

“முடியுமா உங்களால?”

“முயற்சி பண்றேன் ஆச்சி”

 “ஆனா எனக்கு மறக்காதே பார்த்தி”

“ஆச்சி!”

“என்னால அவரை மன்னிக்கவே முடியாது பார்த்தி”

“நான் அவரை மன்னிச்சுடுறேன் ஆச்சி” 

“அது அவ்ளோ ஈஸியா உங்களுக்கு?”

“ஆச்சியோட அப்பாவாச்சே?” என்றான். 

 அப்படியே ஸ்தம்பித்துப் போய் விட்டாள் சுஹானா.