அவன் ஒன்றும் சொல்லவில்லை. என்னதான் செய்கிறான் என வேடிக்கை பார்த்தாள்.

பூண்டுகளை நசுக்கி வர மிளகாய் புளி உப்பு எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தான்.

வரமிளகாய் வறுத்து மிளகாய் ஃபிளேக்ஸ் தயார் செய்து கொண்டான்.

கோதுமை மாவு எடுத்துக் கொண்டவன் அதனுடன் சீரகத் தூள், உப்பு, மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் தோசை ஊற்றும் பதத்துக்கு தயார் செய்தான்.

“கோதுமை தோசையா பார்த்தி?”

“ஆமாம் ஆச்சி” என்றவன் கொஞ்சம் போல பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டே, “என் அம்மா அடிக்கடி செய்வாங்க, கறிவேப்பிலை கொத்தமல்லி எல்லாம் சேர்த்தா இன்னும் நல்லாருக்கும், இப்ப கைவசம் இல்லாததால இப்படியே மேனேஜ் பண்ணிப்போம்” என்றான்.

தான் தோசை ஊற்றுகிறேன் என உற்சாகமாக சொன்னவள் அடுப்பில் கல்லை போட்டாள்.

அவள் தோசை ஊற்றும் நேரத்தில் சட்னியை அரைத்து தாளித்து வைத்தான்.

முதல் தோசை குழறி விட்டது.

“மெல்ல ஆச்சி, அரிசி மாவு தோசை மாதிரி ஊத்தக் கூடாது” என்றவன் அடுத்த தோசையை அவனே வார்க்க ஆரம்பித்தான்.

“கல் நடுவுல இருக்க மாவை அழுத்தம் கொடுக்காம இறகு வருடுற மாதிரி இழுத்து விடணும்” என சொல்லிக் கொண்டே செய்தான். அரை ஸ்பூன் நெய் தோசையின் மீது தடவி விட்டான்.

அந்த தோசையை தட்டில் வைத்து சட்னி வைத்து அவள் முன் நீட்டினான். இதழ்க் கடையில் மலர்திருந்த நறுமுகையோடு தட்டை வாங்கிக் கொண்டாள். சமையல் மேடையின் ஒரு பக்கத்திலேயே ஏறி அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவசர சமையல் இத்தனை சுவையாக இருக்கும் என எதிர் பார்த்திருக்கவில்லை அவள்.

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் பார்த்தி” என்றவளை என்னவென பார்த்தான்.

“நீங்க இன்ஜினியரிங் படிச்சீங்களா இல்லை பொய் சொல்லிட்டு கேட்டரிங் படிச்சீங்களா?” எனக் கேட்டாள்.

சற்றே சத்தமாக சிரித்தவன், “எந்த கேட்டரிங் காலேஜ்ல கோதுமை தோசை ஊத்த சொல்லி தரறாங்க ஆச்சி? சமையல்ல பெரியாளுன்னு எல்லாம் நினைச்சிடாதீங்க, சிம்பிலா செய்ய கூடியது மட்டும்தான் தெரியும்” என்றான்.

வயிராற உண்டு முடித்தவள், “இப்போ என் டர்ன், நீங்க சொல்லி கொடுத்த படி தோசை ஊத்துறேன், தள்ளுங்க பார்த்தி” என்றாள். அவனும் நகர்ந்து கொள்ள, அழகாக தோசை ஊற்றி ‘எப்படி?’ என அவனைப் பார்த்தாள்.

“பிரமாதம் ஆச்சி!” என பற்கள் தெரிந்த சிரிப்போடு அவன் சொல்ல, அவளின் நீல நிற விழிகளும் பூத்து விரிந்தன.

அவனும் சாப்பிட்ட பிறகு ‘வளர் அக்காவை வர சொல்கிறேன், நீங்கள் ஓய்வெடுங்கள்’ என சொல்லி அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் அகன்றதும் சட்டென அந்த வீடு வெறுமையாகி விட்டது போன்ற பிரம்மை அவளுள். தலையில் தட்டி சிரித்துக்கொண்டவள் அழுக்குத் துணிகளை மெஷினில் போட ஆயுத்தமானாள்.

பார்த்திபனும் துணிகளை மெஷினில் போட்டு விட்டு வெளியில் சென்று தேவையானது வாங்கி வந்தான்.

மதிய உணவை செய்து முடித்தவன் பேக் செய்து எடுத்து வருகிறேன் என அவளுக்கு அழைத்து சொன்னான்.

“எதிர் வீட்லதானே இருக்கீங்க, சிரம படாதீங்க பார்த்தி, நானே வர்றேன்” என அவள் சொல்லவும் வர வேண்டாம் என அவனால் மறுக்க முடியவில்லை.

குளித்து சல்வாரில் இருந்தவள் கைப்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டு அவனது வீட்டுக்கு வந்தாள்.

ஒற்றைப் படுக்கையறை கொண்ட சின்ன வீடு. அத்தியாவசியப் பொருட்களை தவிர்த்து இரண்டு நாற்காலிகள், ஒரு படிக்கும் மேசை அவ்வளவுதான் அங்கிருந்த ஃபர்னிச்சர்.  சமையலறையிலும் மிகக் குறைவாகவே சாமான்கள் இருந்தன. வீடு பார்க்க சுத்தமாக ஒழுங்காக இருந்தது.

படிக்கும் மேசையிலிருந்த புத்தகங்களை ஓரமாக வைத்தவன் அங்கேயே சாப்பாடு வைக்க போனான்.

“ஏன் அதை கலைக்குறீங்க  பார்த்தி, வழக்கமா நீங்க எப்படி சாப்பிடுவீங்க?” எனக் கேட்டாள்.

பெரும்பாலும் அவனது சாப்பாடு தனசேகரன் வீட்டில்தான், விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். மற்ற நேரமாக இருந்தால் கையில் உணவுத் தட்டுடன் கீழே அமர்ந்தோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ சாப்பிட்டுக் கொள்வான்.

அவன் சொல்லவும் பாத்திரங்களை தரையில் வைக்க ஆரம்பித்தாள்.

“ஹையோ ஆச்சி கீழ உட்கார்ந்தா?” என அதிர்வோடு கேட்டான்.

“நம்ம கல்ச்சர் படி இப்படித்தான் சாப்பிடணும் பார்த்தி, கம கமங்கிற வாசனை எப்படா சாப்பாட்ட வாய்ல வைக்கலாம்னு டெம்ப்ட் பண்ணிட்டு இருக்கும் போது ஏதாவது சொல்லிட்டு இருக்காதீங்க” என்றாள்.

எதிரெதிரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சூடான சாதத்தில் நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி, முட்டை பொடிமாசுடன் சாப்பிட்டவள் அதன் ருசியில் வாயடைத்துப் போய் விட்டாள்.

மெனெக்கெடும் படியான சமையல் முறை என்றில்லாமல் குறு மிளகு தட்டி சின்ன வெங்காயம் போட்டு எளிமையாக செய்த குழம்புதான்.

பெரிய ஆச்சி இருந்திருந்தால் வகை வகையாக சின்ன ஆச்சிக்கு சமைத்து போட்டிருப்பார், அவர் அளவுக்கு இல்லா விட்டாலும் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் எனதான் செய்திருந்தான். அவளின் மீது அவனுக்கு இருக்கும் அன்பின் காரணமாகவோ என்னவோ சமையல் அத்தனை அருமையாக அமைந்து விட்டது.

அவள் சாப்பிடும் அழகை பார்த்தே அவனுக்கு நிறைந்து விட்டது போலானது.

“காரமா இல்லையே ஆச்சி?”

“கொஞ்சம் காரம்தான், பட் செமையா இருக்கு. இதும் உங்க அம்மா ரெஸிபியா?”

“இது பேச்சுலர்ஸ் ரெஸிபி ஆச்சி. ரொம்ப சிம்பில்தான்”

“நான் சமைச்சா ஆச்சிகிட்டு கேட்டுத்தான் செய்வேன், அவங்கள போல செய்ய வரும்னு. இனிமே உங்கள்ட்ட கேட்டுத்தான் சமைக்க கத்துக்கணும் பார்த்தி” என்றாள்.

“நீங்க ஏன் ஆச்சி சமையல் கத்துக்கணும், உங்க வீட்ல ஆள் இருக்காங்க, உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போற வீட்லேயும் ஆள் இருப்பாங்க. சமைக்கிற டென்ஷன்லாம் வேணாம் உங்களுக்கு” என்றான்.

“என்ன பார்த்தி இப்படி சொல்லிட்டீங்க? எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்கு வரப் போற பொண்ணுக்கும் இப்படியே சொல்வீங்களா?” என வம்பாக கேட்டாள்.

“ஹையோ ஆச்சி அதெல்லாம் நான் யோசிச்சது இல்லை” என வேகமாக சொன்னான்.

“சரி இப்ப சொல்லுங்க” என்றாள்.

அவன் ஏதும் பேசவில்லை. அவளுடன் இப்படியெல்லாம் அவன் உரையாடியதே இல்லை. கடந்த சில நாட்களாக தன் உணர்வே இல்லாமல் அவளுடன் சகஜமாக பழகுகிறான்.

“ப்ச் சொல்லுங்க பார்த்தி” என மீண்டும் கேட்டாள்.

“வரப் போறவங்களுக்கு சமையல் தெரியுமா தெரியாதான்னு இப்ப என்ன எனக்கு தெரியும்? நடக்கிறப்ப பார்த்துக்கலாம் ஆச்சி”

“அட! அப்போ சமையல் தெரியாத பொண்ணுன்னா கூட மேனேஜ் பண்ணிப்பீங்களா என்ன?”

“எனக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லை ஆச்சி. என்னை மாதிரியே அந்த பொண்ணுக்கும் கனவுகள் இருக்கும், அதுக்காக ஏதாவது மெனெக்கெட்டிட்டு இருக்கலாம், அதுல சமையல் தெரியாதுன்னா பெருசு பண்ண வேண்டியது இல்லையே, எனக்கும் பெருசா சமைக்க தெரியாது, ரெண்டு பேரும் சேர்ந்தே கத்துக்கிட்டா ஆச்சு” என்றான்.

“ஆஹா யார் பார்த்தி அது?”

“இப்போ வரை யாரும் இல்லை ஆச்சி, நம்புங்க” என பாவமாக சொன்னான். அவளும் அந்தப் பேச்சை கைவிட்டாள்.

சாப்பிட்டு முடியவும் பாத்திரங்களை கழுவி வைக்கிறேன் என நின்றவளை விடவே இல்லை அவன்.

“ஒரு வேலையும் செய்யாம சாப்பிட்டிட்டே இருக்க சொல்றீங்களா பார்த்தி?” என கடிந்து கொண்டாள்.

“என்ன வேலை செய்யணும் ஆச்சி நீங்க? உங்களுக்கு சமைச்சு கொடுக்கிறது எனக்கு சந்தோஷம்தான், நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றான்.

அவனை கண்டனமாக பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் ஹால் வந்து விட்டாள். வளர் அக்கா வந்ததும் இங்கேயும் பாத்திரங்களை கழுவி வைக்க சொல்லி விடலாம் என நினைத்துக்கொண்டாள்.

அவள் சென்று விடுவாள் என  நினைத்தான் அவன். அங்கே தனியாக இருந்து என்ன செய்ய, வளர் அக்கா வரும் வரை இங்கேயே இருக்கலாம் என எண்ணியவள் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள். அவனிடம் ஹெட் செட் கேட்டு வாங்கிக் கொண்டவள் பாடல் கேட்க ஆரம்பித்து விட்டாள்.

அவனுக்கு வேலை இருக்கவும் லேப்டாப்பில் பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரம் சென்று எதேச்சையாக அவள் பக்கம் திரும்பினான்.

வெறும் தரையில் படுத்து அப்படியே உறங்கிப் போயிருந்தாள் சுஹானா.

வானவர் மகள் மனமிறங்கி எளியவன் வீட்டிற்கு வருகை தந்து அருள் செய்தது போல உணர்ந்தான் பார்த்திபன்.