சிறு வயது நிகழ்வை நினைவு படுத்தியவன், “படிப்பே நீங்க கொடுத்ததுதான் ஆச்சி” என்றான்.
“ஓ கமான் பார்த்தி, தாத்தாதான் ஹெல்ப் பண்ணினாங்க, நான் எதுவும் செய்யல. அதுக்காக நீங்களும் அவங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க. உண்மையை சொல்லணும்னா அன்னிக்கு நீங்க இல்லைனா இப்போ நான் இப்படி உயிரோட நிப்பேனாங்கிறதே டவுட்தான் இல்லையா?” எனக் கேட்டாள்.
“நான் வரலைனா கூட உங்களுக்கு எதுவும் ஆகிருக்காது ஆச்சி, கடவுள் அவ்ளோ மோசமானவர் இல்லை” என்றான்.
“மே பீ! இப்ப சாப்பிட போலாமா?”
“கண்டிப்பா, ஆனா என் ட்ரீட்தான்” என அவன் சொல்ல அவளும் மறுக்கவில்லை.
உணவுக்கு பின் யாமினியின் அலுவலகம் சென்றனர். அவளுக்கு இரவுப் பணி என்பதால் அப்போது அவள் அங்கு இல்லை. இருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு புறப்பட்டனர்.
யாமினியின் வீடு வரை உடன் வந்தான். அவர்களை கண்டு திகைப்பான யாமினியின் வரவேற்பு, உபசரிப்பு என சில நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தவன், வெளியில் காத்திருக்கிறேன் என சொல்லி வெளியேறி விட்டான்.
சுஹானா திரும்ப வர ஒரு மணி நேரமானது. என்ன பேசிக் கொண்டீர்கள் என ஏதும் விசாரித்துக் கொள்ளவில்லை அவன். அவளும் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.
விடுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், “எப்ப மும்பை கிளம்புறீங்க ஆச்சி?” எனக் கேட்டான்.
“ஏன் நான் கிளம்பினாதான் நீங்க சென்னை போவீங்களா?” என கிண்டலாக கேட்டாள்.
“ஆமாம் ஆச்சி, உங்களை தனியா விட முடியாது”
“நீங்க இங்க வந்ததால ஓகே பார்த்தி, இல்லைனா நான் தனியாதான் சுத்திட்டு இருந்திருப்பேன்”
“இருக்கலாம் ஆச்சி, ஆனா நான் பார்த்திட்டேனே உங்களை”
“அப்ப நைட் நானும் சென்னைக்கு வர்றேன்” என்றாள்.
விளையாடுகிறாளா என அவன் பார்க்க, “திடீர்னு ஆச்சி தாத்தாவை பார்க்கணும்னு தோணுது” என்றாள்.
மும்பையில் வேறு ஏதும் பிரச்சனையோ என சந்தேகித்தவன் அதை வாய் விட்டு கேட்டுக் கொள்ளவில்லை.
இரவே புறப்படலாமா என நன்றாக கேட்டுக் கொண்டவன், “ஃபிளைட் எல்லாம் ஃபுல் ஆச்சி” என்றான்.
“பஸ் ட்ரெயின் எதுன்னாலும் ஓகேதான் பார்த்தி” என சொல்லி விட்டாள்.
இரயிலிலும் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் பேருந்திலேயே டிக்கெட் புக் செய்தான்.
முன்னரே தாத்தா பாட்டியிடம் தெரியப்படுத்த வேண்டாம் என அவள் கேட்டுக் கொண்டதால் அவனும் பெரியவர்களிடம் சொல்லவில்லை.
அதிகாலையில் அவர்கள் இருவரும் அபார்ட்மெண்ட் சென்ற போது தாத்தாவின் வீடு பூட்டப் பட்டிருந்தது.
“வெளியூர் எங்கேயும் போயிட்டாங்களா என்ன?” எனக் கேட்டாள் சுஹானா.
“நேத்திக்கு நைட் பேசவே இல்லை ஆச்சி, நீங்க வர்றத சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க, உளறிடுவேனோன்னு எனக்கு பயம், அதனால மெசேஜ் மட்டும்தான் போட்டேன்” என்றான்.
தனசேகரின் உறவுகள் எல்லாம் காரைக்குடி பக்கம், தவிர்க்க முடியாத விஷேஷங்கள் துக்க நிகழ்வு என எப்போதாவது அங்கு செல்ல நேரிடும்.
இந்த நேரம் அவர்களுக்கு அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம், நன்றாக விடிந்ததும் கேட்கலாம் என்றாள் சுஹானா. அவனுக்கும் அதுவே சரியென பட்டது. அந்த வீட்டின் இன்னொரு சாவி பார்த்தியிடம் இருக்கும், அதை எடுத்து வந்து தந்தவன், “பஸ்ல சரியா தூங்கியிருக்க மாட்டீங்க, இப்ப நல்லா தூங்குங்க” என்றான்.
நன்றி சொல்லி வீட்டுக்குள் சென்று விட்டாள்.
சற்று நேரம் உறங்கிய பார்த்திபனும் அன்று கல்லூரி விடுமுறை என்பதால் சாவகாசமாகத்தான் எழுந்தான். முதல் வேலையாக தாத்தாவுக்கு அழைத்து பேசினான்.
தனசேகரின் அண்ணனின் மருமகனுக்கு இதய அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறாராம். நேற்று இரவே காரைக்குடி புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள். தனியாக செல்வதை நினைத்து பார்த்திபன் பதற்றம் கொள்ளக் கூடும் என்பதால்தான் அப்போதே அவர்கள் சொல்லியிருக்கவில்லை. உடனடியாக சென்னை பயணப் பட அவர்களின் உடல்நிலை ஒத்துழைக்காது, இந்த நேரம் பார்த்து பேத்தி வந்திருக்கிறாளே என கவலை அடைந்தனர்.
“ஆச்சியிடம் சொல்றேன் தாத்தா, மும்பை போறதா இல்லை நீங்க வர்ற வரை இங்க தங்குறதான்னு அவங்களே முடிவு எடுப்பாங்க” என சொல்லி வைத்தான் பார்த்திபன்.
சற்று முன் விழித்திருந்த சுஹானாவும் தாத்தாவுக்கு அழைத்து பேசியிருந்தாள். அவர்கள் வரும் வரை இங்கேயே இருப்பதாக சொன்னவள் தனக்காக உடனே ஓடி வர வேண்டாம், பொறுமையாக வாருங்கள் என சொல்லி விட்டாள்.
அடுத்து அம்மாவுக்கு அழைத்து விவரம் சொன்னாள். என்னிடம் சொல்லாமல் சென்னைக்கு ஏன் சென்றாய் என கடிந்து கொண்டார் காயத்ரி. அவரின் பெற்றோர் காரைக்குடி சென்ற விவரம் அவருக்கு நேற்றே தெரியும், எப்படி தனியாக இருப்பாய் என கவலை கொண்டார்.
பார்த்திபன் இருப்பதை நினைவு படுத்தியவள் இவ்வளவு தூரம் வந்து விட்டேன், தாத்தா பாட்டி வரவும் அவர்களுடன் சில நாட்கள் தங்கி விட்டு வருகிறேன் என்றாள். மகள் இப்போது பழைய படி இருப்பதாக உணர்ந்தவரும் சரியென சொல்லி விட்டார்.
ஆஷுதோஷுக்கு தெரிய வரவும் மனைவியை சத்தம் போட்டார், மகளை உடனே வரச் சொல் என கெடுபிடி செய்தார்.
“நீங்க அவளை ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிட்டீங்க, என் அப்பாம்மா கூடதானே இருக்க போயிருக்கா? எதுக்கு கிளம்பி வர சொல்றீங்க? அங்க இருந்திட்டு வர்றதுல என்ன பிராப்லம் உங்களுக்கு? அவளை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு நினைக்குறீங்களா?” என காயத்ரிரியும் பதிலுக்கு சத்தம் போட்டார்.
பார்த்திபனை பற்றிய தன் நினைப்பையெல்லாம் மனைவியிடம் சொல்லாதவருக்கு மகள் இங்கு இருந்த போது எப்படி இருந்தாள் என்ற நினைவு வந்தது. நானும் அவளை படுத்தித்தான் வைத்து விட்டேன் என மருகினார்.
மகள் இருக்கும் இடத்திலேயே பார்த்திபனும் இருப்பது நெருடத்தான் செய்தது. திருமணம் வேண்டாம் என மறுக்கிறாளே தவிர, பார்த்திபனை பற்றி அவளும் ஏதும் பேசவில்லையே, ஒரு வாரம்தானே… இருந்து கொள்ளட்டும், பின் வர சொல்லி விடலாம் என நினைத்து அமைதியடைந்து விட்டார்.
காபி எடுத்துக் கொண்டு வந்தான் பார்த்தி. அவனைக் கண்டதும் முகம் மலர்ந்த சுஹானா, “நல்ல பசி பார்த்தி, நீங்க தூங்கிட்டு இருப்பீங்களோ, கால் பண்ணலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள்.
சுஹானாவுக்கு பெரிதாக சமைக்க வராது என்றாலும் அவசரத்துக்கு ஏதாவது செய்து கொள்ள தெரியும். ஆனால் பத்மாவதி இருந்த காய் கனியெல்லாம் செக்யூரிடியிடம் கொடுத்து விட்டுத்தான் பயணப் பட்டிருந்தார். ஆதலால் அவளால் ஏதும் செய்து கொள்ள முடியாமல் போனது.
பால் வீட்டுக்கு டெலிவரி செய்யப் படும் என்பதால் இரவே செய்தி அனுப்பியிருந்தான் பார்த்தி. அவன் இல்லத்திலும் வேறு பொருட்கள் இல்லை.
முட்டி தொட்ட ஷார்ட்ஸ், கையில்லாத டிஷர்ட் என அணிந்திருந்த இரவு உடையிலேயே இருந்தவள், “ஆர்டர் பண்ணித்தான் சாப்பிட போறோமா பார்த்தி? ஆச்சி கையால சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன்” என சொல்லிக் கொண்டே காபியை பருகினாள்.
காசித்தும்பை செடியில் மலர்கள் பூத்துக் குலுங்கியது. அதைக் காண்பித்து, “தேங்க்ஸ் பார்த்தி” என்றாள்.
புன்னகை மட்டும் செய்தவன் சமையலறை சென்று ஏதேதோ எடுக்க, அவனிடம் வந்தவள், “முன்னாடியே செக் பண்ணிட்டேன், உப்புமா செய்யக் கூட ஆனியன் க்ரீன் சில்லினு வேணும்ல, ஒன்னுமே இல்லை” என்றாள்.