ரெபேக்காவின் திருமணத்திற்கு வந்த சுஹானா திடீரென கிளம்பிச் சென்றதில் அவளின் மற்ற நண்பர்களுக்கு ஒரே குழப்பம்.
திருமணம் முடிந்து பேசிக் கொண்டிருந்த நண்பர் பட்டாளம் சுஹானாவுக்கு காணொளி அழைப்பு செய்து, எங்கே சென்று விட்டாய் என விசாரித்தனர்.
பார்த்திபனுக்காக அங்கிருந்து கிளம்பும் படி நேர்ந்ததை கூறினாள் அவள். அவளுடன் இளங்கலை படித்த அவர்களுக்கு எல்லாம் பார்த்திபனை யாரென தெரியாது, காலையில் உன்னுடன் வந்தவர்தானே? அன்று ஸ்டேட்டசில் கூட இருந்தாரே எனக் கேட்டனர். அவள் ஆம் எனவும் கோராஸாக ஓ என சத்தமிட்டனர்.
“ஷ் ஷ்… அவர் என் தாத்தாவுக்கு ரொம்ப க்ளோஸ், அப்படியே எனக்கும் ஃபிரெண்ட்” என்றாள் சுஹானா.
அவர்கள் நம்பவில்லை, உங்கள் இருவருக்கும் இடையில் ஏதோ இருக்கிறது, உண்மை ஒரு நாள் வெளிப்படும் என வம்பு செய்தனர். பொருத்தம் கூட சிறப்பாக இருக்கிறது என பாராட்டினார்கள்.
என்ன விளக்கம் கொடுத்தாலும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என அறிந்ததால் சுஹானாவும் அந்தப் பேச்சை பெரிது படுத்தாமல் பேச்சின் திசையையும் திருப்பி விட்டாள்.
ஹெட் செட் வழியாக பாடல் கேட்டுக் கொண்டு காருக்குள் அமர்ந்திருந்தாள் சுஹானா. சலனமில்லாத முகத்தோடு வந்து சேர்ந்தான் பார்த்திபன்.
எப்படி செய்தாய் என அவள் விசாரிக்க, “நாட் பேட்” என்றான்.
“இப்படி சொன்னா… விளக்கமா சொல்லுங்க” என்றாள்.
திருப்திகராமகவே ப்ரெசென்ட் செய்திருந்தான், அதன் பின்னரான கேள்வி பதில் உரையாடல் சுவராஷ்யமாக இருந்ததாகவும் சொன்னான். உழைப்புக்கான மரியாதையை செய்து விட்டேன், இப்போது மனம் அமைதியாக இருக்கிறது என்றும் சொன்னான்.
உண்மையில் மிகவும் பிரமாதமாக ப்ரெசென்ட் செய்திருந்தான், கடினமான கேள்விகள் கேட்கப் பட்ட போதும் அவனிடம் அனைத்துக்கும் விடைகள் இருந்தன. எதிர் பார்க்காத ஆட்களிடம் இருந்து கூட பாராட்டுக்கள் கிடைத்திருந்தன. இருந்தபோதும் சாதாரணம் போலத்தான் அவளிடம் சொல்லியிருந்தான்.
தன்னுடைய மகிழ்ச்சியை தெரியப் படுத்தியவள், “மேரேஜ் அட்டெண்ட் பண்ண முடியலை, ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்க, நானும் போலாம்னு இருக்கேன், உங்க அடுத்த பிளான் என்ன? என் கூட வர்றீங்களா?” எனக் கேட்டாள்.
“ஆச்சி… ஸாரி, இங்க…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நோ பிராப்லம் பார்த்தி, நீங்க பாருங்க, நைட் பார்க்கலாம்” என சொல்லி கிளம்பி விட்டாள்.
அங்கே சுஹானாவை நேரில் கண்டதும் பார்த்திபனை பற்றிக் கேட்டு படுத்தி எடுத்து விட்டார்கள் அவளின் நண்பர்கள். அவர்களுடன் தங்கினால் அவர்களின் திட்டப்படிதான் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதாலேயே அவள் அவர்களுடன் தங்காமல் தவிர்த்திருந்தாள்.
சுஹானா இரவு அறைக்கு திரும்பிய போது லாபியில் காத்திருந்தான் பார்த்திபன்.
“தூங்குங்க” என சொல்லி நகரப் போனவனை தடுத்தவள் நாளைக்கு என்ன செய்ய போகிறீர்கள் என விசாரித்தாள்.
நாளை கான்ஃபரன்ஸ் இறுதி நாள், மதியத்தோடு முடிந்து விடுமாம், இரவில் சென்னை திரும்ப வேண்டுமாம், இனிதான் பேருந்தில் டிக்கெட் பார்க்க வேண்டும் என்றான்.
யாமினி பற்றி சொன்னவள் அவளை சந்திக்கப் போவதாக சொன்னாள். அவள் இருக்கும் இடம் இங்கிருந்து தூரம். தனியாக பார்க்க போகிறாள் என்பதை அறிந்தவன், “நாளைக்கு நீங்களும் மும்பை கிளம்பி போயிடுவீங்கன்னு நெனச்சிருந்தேன், பெங்களூரு இப்பதானே ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்க ஆச்சி, ஃபிரெண்ட்ஸ் யாரையும் கூட கூட்டிட்டு போங்க” என்றான்.
நண்பர்கள் மைசூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக சொன்னவள், “என்ன பயம் பார்த்தி, நான் போயிப்பேன்” என்றாள்.
அதில் விருப்பமில்லாமல் யோசனையாக நின்றிருந்தான்.
“அவ்ளோ இருந்தா நீங்க வாங்க பார்த்தி, உங்க கான்ஃபரன்ஸ் க்ளோசிங் செரிமனி முடிஞ்சதும் யாமினிய பார்க்க போலாம்” என்றாள்.
“அவங்கள பார்க்க நான் வரவா?” என வியப்பாக கேட்டான்.
“கம்பல்ஷன் இல்லை பார்த்தி, நான் யாமினிய மீட் பண்ணியிருக்கேன்தான், ஆனா இப்ப நிவாஸ் கூட பிரேக் அப் ஆகிடுச்சு இல்லையா? அவங்க ஸ்டாண்ட் என்னன்னு எனக்கு தெரியாது, எனக்கு ஒரு எமோஷனல் சப்போர்ட் இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு, மத்தபடி தனியா போக எல்லாம் பயமில்லை. நீங்க உங்க ஷெட்யூல் மாத்த வேணாம், பை…” என சொல்லி நடந்தாள்.
“வர்றேன் ஆச்சி, புது இடத்துக்கு அப்படி உங்களை தனியா அனுப்பி வச்சிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது” என்றான்.
அவனைப் பார்க்க திரும்பியவள், “நான் யாமினிய பார்க்க போக வேணாம்னு தோணலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“பார்க்க போறது உங்க முடிவு ஆச்சி, நான் என்ன சொல்றது அதை பத்தி?”
புன்னகைத்தவள், “மார்னிங் நான் என்ன பண்றது? ஹ்ம்ம்… உங்க கூட வரலாமா, அலோ பண்ணுவாங்களா?” என விசாரித்தாள்.
நாளை மட்டும் கான்பரன்ஸில் பங்கேற்றவர்களுக்கு ஒரு விசிட்டர்ஸ் பாஸ் வழங்கப்படும், ஒருவரை உடன் அழைத்து வரலாம், அதை சொன்னவன், “உங்களுக்கு போரிங்கா இருக்கலாம் ஆச்சி” என எச்சரித்தான்.
“புது மனுஷங்களை வேடிக்கை பார்த்திட்டே எனக்கு டைம் ஓடிடும்” என அவள் சொல்ல, நாளை காலை பார்க்கலாம் என சொல்லி அவளை அறைக்கு செல்ல சொன்னான்.
காலையில் தயாரானவர்கள் அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டனர்.
அவன் சொன்னது போல அவளுக்கு போர் எல்லாம் இல்லை, சுவாரஷ்யமாகவே இருந்தது. விருது வழங்கும் நிகழ்வு நடக்க ஆரம்பித்தது. சிறந்த இளம் ஆய்வாளர் என பார்த்திபனின் பெயர் அறிவிக்க பட்டதும் அவன் திகைத்து விட்டான்.
“வாவ்!” என விழி விரித்த சுஹானா, அவனது கையை பற்றி குலுக்கி வாழ்த்தி, “போங்க பார்த்தி…” என்றாள்.
பார்த்திபன் எதிர் பார்த்திருக்கவே இல்லை. அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
பனிரெண்டு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி முடிந்து விட்டது. அவர்கள் வெளியில் வந்த பிறகு, “ஹாப்பி ஃபார் யூ பார்த்தி!” என்றாள்.
“நிஜமா எக்ஸ்பெக்ட் பண்ணல ஆச்சி நான்” என்றான்.
அவன் முகத்தை பார்த்திருந்தவளுக்கு அவனைப் பற்றிய பழைய நினைவுகள். பள்ளி கல்லூரியில் எல்லாம் தாத்தாதான் அவனுடைய கார்டியன் என்ற முறையில் அனைத்துக்கும் செல்வார். எப்போதும் அவனைப் பற்றி பெருமையாகவே சொல்வார், குடும்ப சூழல் பற்றி கூட அவளுக்கு ஓரளவு தெரியும்.
முதல் முறை பங்கேற்று விருது வாங்குகிறான் என்றால் முதல் நாள் சிறப்பாக செய்திருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகவே நேற்று பேசியிருந்தான், இப்போதும் மகிழ்ச்சி இருக்கிறதே தவிர துளியும் கர்வம் இல்லை.
அவனிடம் அவள் எல்லைகள் வகுத்துக் கொண்டு நின்றதில்லை, ஆனாலும் அவன் வரையறை வைத்திருந்தான், அதுவும் அவனுக்கு மட்டுமே. துணையாக நிற்பானே தவிர இது செய் அதை செய்யாதே என எதுவும் சொல்ல மாட்டான். அவனது உடல் மொழி, பேச்சு, பார்வை, நடத்தை என அனைத்திலும் கண்ணியம் நிறைந்தே காணப்படும்.
பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களில் அவளின் பார்வையில் பார்த்திபன் தனித்து தெரிந்தான்.
“ஆச்சி… என்ன?” என அவன் கேட்கவும் நிகழ்வுக்கு வந்தவள், அவனது விருதை கையில் வாங்கி ஆசையாக பார்த்தாள்.
“இதெல்லாம் உங்களாலதான் ஆச்சி” என்றான்.
முந்தைய நாள் இரவு வெளியில் அழைத்துச் சென்று அவனது பதட்டத்தை குறைத்ததை சொல்கிறான் என எண்ணி, “அதெல்லாம் ஒரு விஷயமா? முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்” என்றாள்.