அப்பாவிடம் கேள்வி கேட்ட போது ஆம் என ஒத்துக் கொண்டார்.
இந்த சமுதாயத்தில் அவரது மகளுக்கு என ஒரு அந்தஸ்து இருக்கிறதாம், அதை கெட்டுப் போகாமல் பாதுகாத்தாராம். வேலை பற்றிய இவளது விருப்பத்தை அஜய்யிடம் சொன்னதால்தான் அவனும் இவளை மறுத்து விட்டான், இனியும் நல்ல வரன்கள் அமைவது கடினம், நான் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து கொள் என கடுமையாகவே பேசி விட்டார்.
அன்றிலிருந்து அப்பாவுடன் பேசுவதையே விட்டு விட்டாள். தாத்தா பாட்டியிடம் இந்த விஷயங்களை சொல்லி அவர்களை வருந்த செய்ய வேண்டாம் என கருதி, அவர்களிடம் சாதாரணமாகவே பேசி வந்தாள்.
திருமணம் செய்து வைத்தால் மகளின் மனநிலை மாறும் என நினைத்த ஆஷுதோஷ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சற்று பொறுக்கலாம் என காயத்ரி சொன்னதெல்லாம் அவரிடம் எடுபடவில்லை.
நினைத்ததை செய்யவும் விடாமல் அவர் நினைப்பதை செய்ய அழுத்தம் கொடுப்பதை அறவே விரும்பவில்லை சுஹானா.
மகள் விஷயத்தில் கணவர் நடந்து கொள்வதில் காயத்ரிக்கும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. மகள் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்து வருத்தம் கொண்டார்.
அப்போதுதான் சுஹானாவின் தோழி ரெபேக்காவுக்கு பெங்களூருவில் திருமணம் நடக்கவிருந்தது. அங்கு சென்று வந்தால் மனமாற்றமாக இருக்கும் என நினைத்து கணவரிடம் பேசி மகளுக்கு அனுமதி வாங்கித் தந்தார் காயத்ரி.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு அண்ணனை காண சென்றாள் சுஹானா. யாமினியும் பெங்களூருவில்தான் இருக்கிறாள் என்பதை சொன்னவன் விழிகளை மூடிக் கொண்டான். எங்கே என்பதை விசாரித்து அறிந்து கொண்டே வெளியேறினாள்.
பெங்களூரு வந்தடைந்த சுஹானா புக் செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தாள். சத்தியமாக பார்த்திபனை அங்கே அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைப் பார்த்த அவனுமே அதிர்ச்சியை வெளிப் படுத்தினான்.
இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தேசிய அளவிலான கான்ஃபரன்ஸ், அதில் அவனுடைய ப்ரெசென்ட்டேஷனும் இருக்கிறது.
தெரிந்ததும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட சுஹானா, “பெரிய ரிசர்ச்சர் ஆயிட்டீங்க பார்த்தி!” என்றாள்.
“ஹையோ ஆச்சி, என் கைட் ரொம்ப இன்சிஸ்ட் பண்ணினதாலதான் ஆர்டிகள் ரெடி பண்ணி அனுப்பினேன், செலக்ட் ஆகும்னு கூட நெனக்கல, நான் அட்டெண்ட் பண்ற ஃபர்ஸ்ட் நேஷனல் கான்ஃபரன்ஸ்” என்றான்.
அவன் பதற்றமாக இருப்பதை புரிந்து கொண்டாள். அவனை இலகுவாக்க வேண்டும் என நினைத்தவள், “டின்னருக்கு வர்றீங்களா பார்த்தி?” எனக் கேட்டாள்.
“நானா?” எனத் தயங்கினான்.
“நீங்கதான், வெளில போலாம்னு இருக்கேன், தனியா சாப்பிட்டா போர், கம்பெனி கொடுங்க பார்த்தி, ரொம்ப நேரம் எல்லாம் எடுத்துக்க மாட்டேன்” என்றாள்.
அவள் தனியாக வெளியில் செல்வதை விரும்பாதவன் வருவதாக ஒப்புக் கொண்டான்.
“ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன், இன் டென் மினிட்ஸ்” என சொல்லி அவளது அறைக்கு விரைந்து விட்டாள்.
அறையில் அடைந்து கிடப்பது ஏதோ போல இருக்கத்தான் வெளியில் வந்திருந்தான் பார்த்தி, அவள் தயாராகி வரட்டும் என லாபியிலேயே காத்திருந்தான்.
விரைவாகவே வந்து விட்டாள் சுஹானா. கைப்பேசியை பார்த்துக் கொண்டே வந்தவள், “போலாம் பார்த்தி, நல்ல ரெஸ்ட்டாரண்ட் கூகுள் செஞ்சு கண்டுபிடிச்சிருக்கேன்” என்றாள்.
இங்கேயே சாப்பிட்டால் என்ன எனக் கேட்டவனை அதிக தூரமில்லை என சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள். நடந்து செல்லும் தொலைவிலேயே அந்த உணவகம் இருந்தது. தாத்தா பாட்டி என பேச ஆரம்பித்தவள் அவன் எப்போது வந்தான், உடன் வேறு யாரும் வரவில்லையா என்றெல்லாம் கேட்டறிந்து கொண்டாள்.
மெனு கார்டை அவனிடம் கொடுத்தாள். பார்த்தவனுக்கு சிந்தனையெல்லாம் அவனது ப்ரெசென்ட்டேஷன் மீதுதான்.
“பார்த்தி…”
“ஹ்ஹ்ஹா… ஆச்சி நீங்களே ஆர்டர் பண்ணுங்க”
“என்ன டென்ஷன் பார்த்தி, சொல்லலாம்னா சொல்லுங்க”
“வேறென்ன டென்ஷன் ஆச்சி? நாளைக்கு சரியா செய்வேனான்னு இருக்கு, பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பாங்க, என் ஒர்க் போதுமானதா இருக்குமான்னு டவுட்டா இருக்கு”
“குட், அப்ப உங்க ஒர்க்கை அப்படியே ப்ரெசென்ட் பண்ணுங்க பார்த்தி, எவ்ளோ பேர் சப்மிட் பண்ணிருப்பாங்க, ப்ரெசென்ட் பண்ண செலக்ட் ஆனதே பெரிய விஷயம் இல்லையா? உங்களை முதல்ல நீங்க நம்பனும், கான்ஃபிடெண்ட்டா பண்ணுங்க” என்றாள்.
பார்த்திபனுக்கு இலகுத் தன்மை மீண்டது. அப்போதும் அவனுக்கு என்ன ஆர்டர் செய்யவென தெரியவில்லை, நீங்களே செய்யுங்கள் என அவளை பாவமாக பார்த்தான். எளிமையான உணவு வகைகளாக பார்த்தே ஆர்டர் செய்தாள். இரவில் அவனுக்கு ஏதாவது தொந்தரவாகி விடுமோ என அவளுக்கு பயம்.
பணம் செலுத்த போனவனை தடுத்தவள், “நாளைக்கு நல்லா ப்ரெசென்டேஷன் முடிச்சதுக்காக ட்ரீட் கொடுங்க, இன்னிக்கு நான்தான் உங்களை கூப்பிட்டேன், நான்தான் பே செய்வேன்” என சொல்லி விட்டாள்.
அறை திரும்பிய போது பார்த்திபனுக்கு மனம் நிதானமாக இருந்தது.
அடுத்த நாள் காலையில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், சந்தன நிற மென்பட்டு, விரித்து விடப் பட்ட கூந்தல் என தயாராகியிருந்தாள் சுஹானா. பார்த்திபன் இந்நேரம் புறப்பட்டிருக்க கூடும் என்ற நினைவுடன் அவனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிக் கொண்டே நடந்தாள்.
லாபியில்தான் அமர்ந்திருந்தான் பார்த்தி. லாப்டாப் பையுடன் தயாராகி அமர்ந்திருந்தவன் முகமே சரியில்லை. இவளைக் கண்டதும் புன்னகை செய்தான், உள்ளத்திலிருந்து வராத அந்தப் புன்னகை அவளை கவலை கொள்ள செய்தது.
“என்னாச்சி பார்த்தி, நீங்க இந்நேரம் கான்ஃபரன்ஸ் ஹால்ல இல்ல இருக்கணும்?” என விசாரித்தாள்.
நேரமின்மை காரணமாக அவனது ப்ரெசென்ட்டேஷன் நீக்கப் பட்டு விட்டதாக வந்திருந்த மெயிலை எடுத்து காண்பித்தான். அவளும் சோகமாக, “ஒன் மன்த் உழைப்பு, ப்ச்…” என்றான்.
“இந்த டைம் இல்லைனா இன்னொரு டைம் பார்த்தி. இதோட எதுவும் முடிஞ்சி போயிடலையே… நீங்க ப்ரெசென்ட் பண்ணலைனா என்ன, அங்க போலாம்தானே பார்த்தி?”
“இல்லை ஆச்சி, மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்கு, எதையும் என்னால கவனிக்க முடியும்னு தோணல”
உதடுகளையும் கன்னங்களையும் முறுக்கிக் கொண்டு “ஹ்ம்ம்…” என யோசித்தவள், “கமான் பார்த்தி… இன்னிக்கு ரெபேக்கா வெட்டிங்ல நீங்களும் கலந்துக்கணும்னு இருக்கு, வாங்க” என்றாள்.
“ஐயையோ! நீங்க கிளம்புங்க ஆச்சி, நான் ஓகே ஆகிடுவேன்” என்றவனை அவள் விட்டால்தானே. ஏதேதோ பேசி அவனை காரில் ஏற்றிக் கொண்டுதான் புறப்பட்டாள். லேப்டாப் பையை அறைக்கு சென்று வைக்க கூட அவனுக்கு நேரம் தரவில்லை.
இருவரும் ரெபேக்காவின் திருமணம் நடக்கும் சர்ச் வந்து சேர்ந்து அரை மணி நேரம்தான் ஆகியிருக்கும். ப்ரெசென்ட்டேஷன் செய்யவிருந்தவர்களில் யாரோ ஒருவர் கலந்து கொள்ள முடியாத சூழலாம், அவருடைய ஸ்லாட்டில் ப்ரெசென்ட்டேஷன் செய்ய முடியமா என இவனை கேட்டார்கள்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுஹானா என்னவென கேட்டாள். கைப்பேசியை மியூட் செய்து விட்டு விவரம் சொன்னவன், “இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருக்கணும், ப்ச்… எப்படி முடியும்? நீங்க சொன்ன மாதிரி நான் அங்க போயிருந்திருக்கலாம்” என பாவமாக சொன்னான்.
“ஒன் ஹவர் இருக்கு பார்த்தி, ஓகே ன்னு சொல்லுங்க, ம்ம்ம்…” அவன் கையை பிடித்துக்கொண்டு உலுக்கினாள். அவளைப் பார்த்துக் கொண்டே மியூட்டை நீக்கியவன் சரியென ஒத்துக் கொண்டான்.
அவனை இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினாள். டிரைவரிடம் செல்ல வேண்டிய இடத்தை சொல்லி விரைவாக போகும் படி கேட்டுக் கொண்டாள். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத படி மாற்று வழி மூலமாக நாற்பது நிமிடங்களில் கொண்டு வந்து சேர்த்தான் டிரைவர்.
கலைந்திருந்த சிகையை சரி செய்து கொண்ட பார்த்தி பதற்றத்தோடு லேப்டாப் பையை கையில் எடுத்தான். அவனது கையை பிடித்துக் கொண்டவள், “ரிலாக்ஸ் பார்த்தி, ஹால்ல நான்… நான் மட்டுமே இருக்கிறதா நினைச்சுக்கோங்க, உங்க பேப்பர் என்னன்னு எனக்கு எதுவும் புரியாது, நீங்கதான் பாஸ்” என கண்களை சிமிட்டி சொன்னாள்.
அவன் சிரிக்க, “இங்கேயே வெயிட் பண்றேன், குட் லக்!” என சொல்லி அனுப்பி வைத்தாள்.
பத்தடிகள் நடந்து சென்றவன் நின்று திரும்பி பார்க்க, இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக கீழே தளர்த்தினாள். அவனும் நன்றாக மூச்சிழுத்து விட்டு தளர்வானான். கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். தலையசைத்து விடை பெற்றுக் கொண்டு முன்னோக்கி நடந்தான்.
அவன் பார்வையிலிருந்து மறையவும் கைகளை கட்டிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவள் பின் ஓரிடத்தில் கிடந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டாள். தன்னிடம் உள்ள நேர்மறை ஆற்றலை எல்லாம் மனப்பூர்வமாக பார்த்திபனுக்கு அனுப்பி வைத்தாள் சுஹானா.