இதய கிளையில் பூத்தவளே -4

அத்தியாயம் -4

வாக்கர் உதவியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் நிவாஸ். தங்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தவன், “ஆச்சி தாத்தா பேசினாங்களா? அங்க போனதும்தான் அவங்க ஃபிரீயா இருக்க மாதிரி தோணுது” என்றான். 

ஆமோதிப்பாக தலையசைத்தவள், “தேர்ட்டீஸ் வரை ஓகே நிவாஸ், அதுக்கு மேல லைஃப்ல அடுத்த கட்டம் போயிடுறோம், அந்த சமயம் எங்க இருக்கோமோ அந்த இடத்தோட தனி அட்டாச்மெண்ட் வந்திடுது, அவங்களுக்கு சென்னைதான் சொர்க்கம்” என்றாள். 

நிவாஸ் அமர்ந்து விட, சுஹானாவும் அவனது பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் இயல்பாக இல்லை என்பதை கண்டுபிடித்து விட்டவன் என்னவென கேட்டான். 

அவளுக்கும் யாரிடமாவது அனைத்தையும் சொல்ல வேண்டுமாக இருக்க, ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டாள். 

“நம்ம டாடியா இப்படி?” என அவனுக்கும் அதிர்ச்சியே. 

“ஹாஸ்பிடல்ல என்னமோ நடந்திருக்குனு உனக்கு டவுட் இருக்கும் போது, பார்த்தி கூட எடுத்த ஃபோட்டோவை எதுக்கு ஸ்டேட்டஸ்ல வச்சடா?” எனக் கேட்டான். 

அந்த நேரம் அவளுக்கு எந்த யோசனைகளும் இல்லை. அந்தஸ்து காரணமாக பார்த்திபனை தள்ளி நிறுத்துகிறார் எனதானே அப்போது வரை அவளின் எண்ணமாக இருந்தது. இயல்பாக செய்து விட்டாள். அதையே அண்ணனிடமும் சொன்னாள். 

“ஆனா டாடிக்கு வேற மாதிரி டவுட், உன் கிராஜுவேஷனுக்கு பார்த்தி வந்திருக்கிறார்ங்கிறதே அவருக்கு ஷாக் கொடுத்திருக்கும், அதனாலதான் மேரேஜ்க்கு அவசரம் காட்டுறார் போல” என்றான். 

“பார்த்தியும் நானும் அப்படிலாம் பழகலைனு எக்ஸ்பிளைன்  பண்ணிடலாம்னு இருந்தேன், அதுக்குள்ள…” என்றவள் அப்பா பார்த்திருக்கும் வரனின் பெயரை நினைவு படுத்த முயன்று முடியாமல், “மேரேஜ்க்கு என்னை ஃபோர்ஸ் பண்றாங்க” என்றாள். 

உன்னை யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள், அந்தப் பையனுடனான இன்றைய சந்திப்பை உன்னால் தவிர்க்க முடியாது, ஒத்து வராது என தோன்றினால் காரணத்தோடு தெரியப்படுத்து, நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன் என நம்பிக்கை கொடுத்தான் நிவாஸ். 

அப்பா சொன்னதை கேட்காமல் மறுத்து சண்டையிட்டு வீட்டின் அமைதியை குலைக்க விரும்பாதவள் மாலையில் அஜய்யை சந்திப்பது என முடிவெடுத்தாள்.

நிவாஸ் ஏதோ சிந்தனையில் இருக்க, அவன் தோள் பற்றி என்னாவானது என விசாரித்தாள். 

“யாமினி…” என மட்டும் சொன்னான். 

“ரெண்டு பேரும் பேசித்தானே பிரியுற முடிவை எடுத்தீங்க? அக்செப்ட் பண்ணிக்க ண்ணா” என்றாள். 

“எம்மேலதான் தப்பு சுஹா, அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்காம ரொம்ப நெருக்கடி கொடுத்திட்டேன், பிரியுற முடிவை அவளா எடுக்கல, நான்தான் எடுக்க வச்சிட்டேன்” என வருத்தப் பட்டான். 

சில நிமிடங்கள் அமைதியாக  அவன் கையை பற்றிக் கொண்டு இருந்தவள், “ஒரு முறை அவங்க கூட பேசி பார்க்குறியா?” எனக் கேட்டாள். 

மறுப்பாக தலையசைத்தவன், “ஷீ டிசெரவ்ஸ் பெட்டர், இப்படியே இருக்கட்டும்” என தீர்மானமாக சொல்லி விட்டான். 

இவனுக்கு விபத்து நேர்ந்த விபரமெல்லாம் யாமினிக்கு தெரியாது, நண்பர்களிடம் சொல்லி தெரிய விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நிவாஸ். 

அண்ணனை நினைத்து சுஹானாவுக்கு வருத்தமாக இருந்தது, நல்லவன்தான், உறவை எப்படி கையாள எனத் தெரியாமல் சறுக்கி விட்டான், இன்னும் யாமினியை நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிகிறது, என்ன செய்வது எனதான் அவளுக்கு புரியவில்லை. 

பிரத்யேக அலங்காரங்கள் ஏதுமின்றி சாதாரணமாக வெளியில் செல்வது போல தயாராகித்தான் அஜய்யை சந்திக்க சென்றாள் சுஹானா. 

இரவில் முன்னேரமாகவே வீடு வந்து விட்டனர் அவளின் பெற்றோர். அஜய்யேதான் அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டான். உள்ளே எல்லாம் வரவில்லை, வேலை இருக்கிறது இன்னொரு நாள் வருகிறேன் என இன்முகமாக சொல்லி கிளம்பி விட்டான். 

சுஹானாவை ஆவலாக பார்த்தனர் அவளின் பெற்றோர். 

“மேரேஜ் பத்தின யோசனையே இல்லாம மீட் பண்ணிட்டு வந்திருக்கேன்மா, என்ன சொல்லணும்னு எதிர் பார்க்குறீங்க? பழகி பார்த்திட்டு முடிவு செய்யலாம்னு அஜய்யே சொல்லிட்டார்” என்றாள். 

ஒரேயடியாக வேண்டாம் என சொல்லாமல் இந்தளவு மகள் சொல்வதே ஆஷுதோஷுக்கு நேர்மறையாக பட்டது. மறக்காமல் அண்ணனை காண சென்றாள். புருவங்கள் உயர்த்தி எப்படி இருந்தது சந்திப்பு என்பது போல கேட்டான் நிவாஸ். 

தங்கையின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல், “சுஹா சொல்லுடா,  இப்போ உன் அபிப்ராயம் என்ன?” எனக் கேட்டான். 

சுஹானாவின் வெளித் தோற்றத்தை பார்த்து ஆசைப்பட்டு மணக்க விரும்பியிருக்கிறான் அஜய். ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேசிக் கொண்டார்கள். இவள் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க பிரியப் படுவதை சொன்னதுமே கசப்பை தின்றது போல அவனது முகம் மாறி விட்டது. அதுவரை அவனது பேச்சில் இருந்த உற்சாகம் கூட அப்படியே வடிந்து விட்டது. 

“அப்புறம்?” என்றான் நிவாஸ். 

“எனக்கு தெரியலை நிவாஸ், பிஸ்னஸ்ல நிறைய சாதிச்சிருக்கார், அஃப்கோர்ஸ் நல்ல திறமையுள்ளவர், ஆனா எனக்கு அவர் மேல எந்த பிரமிப்பும் ஏற்படல. வைஸ்வெர்ஸா என் ஃப்யூச்சர் பிளான்ஸ் ஏதும் அவருக்கு இம்ப்ரெஸிவ்வா இல்லை” என்றாள். 

“டாடிகிட்ட என்னன்னு சொன்ன?” 

“இப்போதைக்கு எதுவும் சொல்றதா இல்லை, என் கெஸ் கரெக்ட்னா அஜய்யே சொல்வார்” என்றவள், கண்கள் சிமிட்டி, “எனக்கு ஃபேவரா” என்றாள். 

நிவாஸ் புன்னகை புரிய, சுஹானாவும் நல்ல மனநிலையிலேயே உறங்க சென்றாள். 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என கருதி தினம் சுஹானாவிடம் கைப்பேசி வாயிலாக பேசினான் அஜய். அந்த வார இறுதியிலும் நேரில் சந்தித்துக் கொண்டனர். 

நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே தொழிலதிபராக சிறந்து விளங்குபவன் அஜய், அவனுடைய வேகத்துக்கு சுஹானா ஈடு கொடுக்க மாட்டாள் என்ற சந்தேகம் அவனுக்கு வந்து விட்டது. அவளுடைய ஆசைகள் வேறு மாதிரி இருக்க, மேல் நோக்கி பறக்க நினைப்பவனுக்கு அவள் கீழே இழுத்து சென்று விடுவாளோ என்ற அச்சமும் ஏற்பட்டது. 

அவளை மாற்றலாம் என நினைத்தும் பேசிப் பார்த்தான். இதனால் நிச்சயம்  நமக்குள் கருத்து வேறுபாடு வரும் என அவள் சொல்லவும் அவனும் மறுக்கவில்லை. 

அவளை விட்டுத் தர அஜய்க்கு மனமே இல்லை, ஆனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டவனாக இந்த கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்றான். 

அவனுக்கு நன்றி சொன்ன சுஹானா, அவனையே அவளது அப்பாவிடம் சொல்லி விடும் படி கேட்டுக் கொண்டாள். 

நெற்றி சுருக்கியவன், “என்ன எண்ணத்தோட என் கூட பழகின சுஹானா?” எனக் கேட்டான். 

எந்த விதமான முன் கருத்தும் இல்லாமலே உங்களை சந்திக்க வந்தேன், முதல் சந்திப்பின் போதே நமக்குள் ஒத்து வராது என தெரிந்து விட்டது, நான் உணர்ந்து கொண்டதை நீங்களும் உணர்ந்து கொண்டால் மனக் கசப்பு ஏற்படாமல் போகும் என்பதாலேயே நானாக ஏதும் சொல்லவில்லை, மற்றபடி நீங்கள் இந்த முடிவைதான் எடுக்க வேண்டும் என்பதற்காக நான் எதுவும் மெனெக்கெடவில்லை. நான் நானாகத்தான் இருந்தேன் என அவள் விளக்கவும் அவனும் தெளிந்தான். 

அவள் சொன்னபடியே எங்களுக்குள் பொருந்திப் போகவில்லை என ஆஷுதோஷிடம் சொல்லி விட்டான். அவருக்கு பெருத்த ஏமாற்றம்தான். அதில் அவரின் சிடு சிடுப்பு அதிகமாகி காயத்ரிதான் அவஸ்தை பட்டார். 

வேலையில் சேர்வதற்காக ஆயுத்தமானாள் சுஹானா, அதற்கு அனுமதிக்காத ஆஷுதோஷ் தன்னுடன் வரும்படி கட்டாயப் படுத்தி அழைத்து சென்றார். ஒரு நாளிலேயே அவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. 

தனக்கு இது ஒத்து வராது, அண்ணனுக்கு சரியானதும் உங்கள் தொழிலை அவன் வந்து பார்ப்பான் என சொல்லி விட்டாள் சுஹானா. கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள் என காயத்ரி சொல்ல, அவருக்கும் திட்டு விழுந்தது. 

சுஹானா வேலைக்கு விண்ணப்பத்திருந்த இடத்திலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிடைக்க விடாமல் செய்து விட்டார்.  இது போன்ற பள்ளிகள் மும்பையில் அதிகமில்லை என்றாலும் அதற்கான ஆசிரியர்களின் தேவை நிறையவே இருந்தது. கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் சென்றவளுக்கு இப்போது காலிப் பணியிடங்கள் இல்லை என்ற செய்தி வியப்பை அளித்தது. 

அவளை சிபாரிசு செய்த அவளின் பேராசியரை நேரில் சந்தித்த போதுதான் அவளது அப்பாவின் தலையீடுதான் வேலை கிடைக்காமல் போனதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டாள்.