சுஹானாவுக்கு இங்கு சில ஆண் நண்பர்களும் உண்டு, வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறாள், அவர்களுடன் வெளியில் சென்றிருக்கிறாள், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறாள், ஆஷுதோஷ் எதைக் குறித்தும் அவளிடம் கேள்வி கேட்டதில்லை, மறுப்பு சொன்னதும் இல்லை. 

இப்போது திடீரென பார்த்திபனுடன் பழகவில்லை அவள். விடுமுறைக்கு சென்னை செல்லும் சமயமெல்லாம் இவனுடன் பழகியிருக்கிறாள். அப்பாவுக்கு என்னவானது என்ற கேள்வி மூளையை பிராண்ட ஆரம்பித்தது. 

அங்கிருந்து கிளம்பும் போது ‘விடுதிக்கு செல்கிறேன், அங்குதான் என் உடைமைகள் இருக்கிறது’ என பார்த்திபன் சொல்ல, வீட்டுக்கு வரச் சொல்லியெல்லாம் வற்புறுத்தவில்லை சுஹானா. 

இரவில் தாத்தா பாட்டியை விமான நிலையத்தில் விட அவளும் வந்திருந்தாள். அவர்களுக்கு முன்பே பார்த்திபன் அங்கு வந்து காத்திருந்தான். முன்பு சென்னை பயணத்திற்கு திட்டமிட்டிருந்த சமயத்தில் அவனுக்காக சட்டைகள், ஒரு வாலட் என வாங்கி வைத்திருந்தாள். 

அவை இருந்த பையை அவனிடம் நீட்டியவள், “ஏன் எதுக்கு வேணாமேன்னு சொல்லி என்னை கோவ படுத்தக் கூடாது” என்றாள். 

சின்ன சிரிப்புடன் வாங்கிக் கொண்டவன், “பதிலுக்கு நான் எதுவும் தரலை” என்றான். 

“பால்சம் ஃப்ளவர்ஸ் எனக்காகத்தானே வாங்கி வச்சிருக்கீங்க, இவ்ளோ நாள் தண்ணி விட்டு காப்பாத்திட்டு வர்றீங்களே பார்த்தி, அதை விட பெஸ்ட் கிஃப்ட் என்ன இருக்க போகுது?” எனக் கேட்டாள். 

பாட்டி மூலமாக அறிந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். அவளுக்காக செய்த சிறு செயலுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதில் மகிழ்ச்சியாக உணர்ந்தான். 

அவனது முக பாவனைகளைத்தான் படித்துக் கொண்டிருந்தாள் சுஹானா. அவளால் அவனது மன உணர்வுகளை உணர முடிந்தது. 

“வளரை நாளைக்கு வர சொல்லி ஞாபக படுத்தணும்டா பார்த்தி” என பாட்டி சொல்லவும் வளர்மதி அக்காவுக்கு என தந்த பரிசை அவரிடம் கொடுக்க மறக்க வேண்டாம் என பெரியவர்களுக்கு நினைவு படுத்தினாள். 

அவர்களை வழியனுப்பி விட்டு வீடு வந்த சுஹானா, பார்த்திபன் குறித்து அப்பாவிடம் பேசுவதற்காக காத்திருந்தாள். வீட்டுக்குள் நுழையும் போதே ஏதோ ஒரு வாக்குவாதத்துடன்தான் வந்தனர் அவளின் பெற்றோர். 

அவள் தலையிட்டு அவர்களை அமைதியடையச் செய்தாள். மிகவும் எரிச்சலுற்றவராக காணப் பட்டார் ஆஷுதோஷ், ஆகவே அவரிடம் ஏதும் பேசாமல் அறைக்கு சென்று விட்டாள். ஆனால் சற்று நேரத்தில் அவரே மகளை தேடிக் கொண்டு வந்தார். 

கல்லூரியில் விழா எப்படி நடந்தது என்று விசாரித்தார். 

“அதெல்லாம் ஞாபகம் இருக்கா டாட்?” என கிண்டலாக கேட்டாள். 

“என்ன நினைச்சிட்ட என்னை பத்தி?” எனக் கேட்டார். 

“டாடிக்கு இருக்கிற பெரிய பெரிய டென்ஷன்ல சுஹானா குட்டி புள்ளி ஆகியிருப்பான்னு நெனச்சேன்” 

“ஹ்ம்ம்… அந்த குட்டி குட்டி புள்ளிக்காகத்தான் உன் டாடி ஓடி ஓடி சம்பாதிக்கிறேன்” என்றார். 

“பணம் அத்தியாவசியம்தான் டாட், ஆனா அத மட்டுமே வச்சிட்டு சந்தோஷமா வாழ முடியாது. சின்ன சின்ன விஷயங்கள் கூட சந்தோஷத்தை கொடுக்கும், இன்னிக்கு எனக்காக நீங்களும் அம்மாவும் காலேஜ் வந்திருந்தா ரொம்ப ஹேப்பி ஆகியிருந்திருப்பேன்” என்றாள். 

“பணம் அவசியமில்லைன்னு சொல்றவங்க யார் தெரியுமா சுஹா? அதுக்காக கஷ்ட படாதவங்கதான். உன்னை அந்த இடத்துல வச்சிருக்கேன் நான்” என்றார். 

சற்று இன்முகமாக தன் அறைக்கு வந்தவர் தீவிரமாக மாறுவதை விரும்பாதவள், சிரித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். 

மகளின் பக்கத்தில் அமர்ந்து கொண்டவர், அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை அவளுக்கு நினைவு படுத்தினார். 

இதை ஏன் இப்போது சொல்கிறார் என அவள் பார்க்க, “எங்க கல்யாணத்துக்காக நாங்க போராடவே இல்லை, ரொம்ப ஈஸியா நாங்க வாழ்க்கைல சேர்ந்திட்டோம். ஆனா எதிர்பார்த்த படி நல்லா வாழல. செட்டில் ஆகாத லைஃப்ல ரெண்டு பேரும் சேர்ந்து ஓடி ஓடி இப்ப திரும்ப பார்க்கும் போது வயசாகி நிக்கிறோம். பேரெண்ட்ஸ் சொன்னபடி லைஃப்பை அமைச்சிக்கிட்டிருந்தோம்னா நாங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்ந்திருப்போம்” என்றார். 

“ஒன்னுமே இல்லாம புதுசா வாழ்க்கைய தொடங்குற ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து குடும்பத்தை உருவாக்கி அதை முன்னுக்கு கொண்டு வரும் போது புரிதல்தானே டாட் வரணும்? அந்த பிராசஸ்ல அவங்க லவ் இன்னும் ஸ்ட்ராங் ஆகாதா?” என மகள் கேட்க, அவரின் யோசனைகள் பார்த்திபனை சம்பந்தப் படுத்தியே  சென்றது. 

“உங்களுக்கும் அம்மாக்கும் இடைல இருக்க பிரச்சனை உங்களுக்காக நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கிறது இல்லைங்கிறதுதான் டாட், உங்களுக்குள்ள லவ் இல்லாம இத்தனை வருஷம் ஓட்டியிருக்க முடியாது. ரெண்டு பேரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்களேன், எங்கேயாவது வெகேஷன் போய்ட்டு வாங்க டாட், நிவாஸை நான் பார்த்துக்கிறேன்” என்றாள். 

ஒரு வருடத்திற்கு அவர் மிகவும் பிஸி, மகள் சொன்னதை காற்றில் பறக்க விட்டவர் தன் கைப்பேசியை எடுத்து அஜய் ஷர்மா என்ற ஆடவனின் புகைப்படத்தை காண்பித்தார். 

அவனது பின் புலத்தைப் பற்றி அவர் பிரமிப்போடு சொல்ல, அவள் மிகவும் சாதாரணமாக கேட்டுக் கொண்டாள். அவன்தான் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என அவர் சொல்லவும் அதிர்ச்சி அடைந்தாள். 

நிவாஸுக்கு விபத்து ஏற்படுவதற்கு முன்னரே நண்பரின் வீட்டு விருந்துக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார் ஆஷுதோஷ். அந்த வீட்டு பையனின் நண்பன்தான் இந்த அஜய். சுஹானாவை பார்த்து விட்டு பிடித்திருப்பதாக வீட்டில் சொல்லியிருக்கிறானாம். அவனது தந்தை ஆஷுதோஷுடன் பேசினாராம். 

நிவாஸ்க்கு இப்படி ஆனதால் மேற்கொண்டு அதை எடுத்து செல்ல முடியாமல் இருந்திருக்கிறார். இப்போது மீண்டும் அவர்கள் வீட்டினர் இந்தப் பேச்சை எடுத்திருக்கிறார்கள். 

“அஜய் ஷர்மாவை நேத்து நான் மீட் பண்ணினேன், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என மகிழ்ச்சியோடு சொன்னார். 

திருமணம் பற்றி இப்போது யோசனையில்லை, வேலையில் சேரலாம் என இருக்கிறேன் என்று தன் திட்டத்தை சொன்னாள். 

மகளின் மனதை கரைக்கவென  பேசிப் பார்த்தவர், அவளின் உறுதியில் சீற்றமடைந்து, “வேறு எதையோ மனதில் வைத்துக்கொண்டு இவனை மறுக்கிறாய்” என குற்றம் சாட்டினார். 

அப்பாவின் மறைமுக பேச்சில் வேதனை கொண்டவள், “நேரடியாவே கேளுங்க டாட், யாரை பத்தி பேசுறீங்க நீங்க? இப்ப வரை என் மனசுல யாரும் இல்லை” என்றாள். 

“பொய் சொல்லாத, இந்த பையனை போய் யாரும் வேணாம்னு சொல்லுவாங்களா?” 

“உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கணும்னு என்ன இருக்கு டாட்?” 

“அட்லீஸ்ட் பழகி பார்த்திட்டு சொல்லலாம் இல்லையா?” 

“கொஞ்ச நாள் வேலைக்கு போறேன், மேரேஜ்க்கு ரெடி ஆனதும் உங்க விருப்ப படி பழகி பார்க்கிறேன், இப்ப முடியாது” என்றாள். 

ஆத்திரமடைந்தவர், “அந்த வேலைக்காரனை மனசுல வச்சிட்டு இப்படி சொல்றியோன்னு சந்தேகமா இருக்கு, அது மட்டும் உறுதியாச்சுன்னா…” என சொல்லாமல் நிறுத்தினார். 

“டாட்!”

“நாளைக்கு ஈவ்னிங் நீயும் அஜய்யும் மீட் பண்ணி பேசுறீங்க” என கட்டளையாக சொல்லி விட்டு சென்றார். 

வீட்டிற்கு வந்து விட்டதாக பார்த்திபனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்ததை இப்போதுதான் கவனித்தாள். வழக்கத்திற்கு மாறாக அவனது முகப்பு படத்தை திறந்து பார்த்தாள். 

அவனது விழிகளில் தெரிந்த தீட்சண்யத்தில் இமைக்காமல் அவனை பார்த்தாள்.. வேறு ஏதோ செய்தி வந்தது. நண்பர்களின் குழுவிலிருந்து வந்த அந்த செய்தியை திறக்க கூட செய்யாமல் கைப்பேசியை தள்ளி வைத்து விட்டு படுத்துக் கொண்டாள். அப்பாவின் நடத்தையை எண்ணி எண்ணி அழுகையாக வந்தது. 

அடுத்த நாள் காலையே அம்மாவிடம் பேசிப் பார்த்தாள். உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது, பேசிப் பார்த்து விட்டு சொல் எனதான் அவரும் சொன்னார். 

இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என சொல்வதை கருத்தில் கொள்ளாமல் ஏன் இப்படி கட்டாயப் படுத்துகிறார்கள் என ஆதங்கம் கொண்டாள். 

தான் நினைத்ததை சுதந்திரமாக செய்ய முடியவில்லையே என நினைத்து மனதளவில் மிகவும் சோர்ந்து போய் விட்டாள் சுஹானா. 

பாட்டி காணொளி அழைப்பு செய்யவும் பேசிக் கொண்டே அறைக்கு வந்தாள். பாட்டி பேத்தியுடன் பேசிக் கொண்டிருக்க, அவளின் கவனமோ கைப்பேசித் திரையின் பின்னணியில் காசித்தும்பை பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பார்த்திபன் மீதே இருந்தது.