தனசேகரனும் பத்மாவதியும் மும்பையில்தான் தங்கியிருந்தனர். அன்று மருத்துவமனையில் ஆஷுதோஷுடன் தங்கியிருந்த பார்த்திபன் அப்படியே சென்னைக்கு புறப்பட்டிருந்தான். கல்லூரியில் திடீர் ஆய்வு நடப்பதாகவும் உடனடியாக அங்கு நான் செல்ல வேண்டும் எனவும் காரணம் கூறியிருந்தான்.
பார்த்தி சொன்னதை பெரியவர்கள் நம்பியிருக்க, சுஹானாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அப்பா எதுவும் தவறாக நடந்து கொண்டிருப்பாரோ என கவலை பட்டவளுக்கு அதை அறிந்து கொள்ள முடியவில்லை. எதுவும் ஊர்ஜிதமாக தெரியாத போது அப்பாவிடம் கேட்க முடியாது, பார்த்திபனிடமும் கேட்டு அவனை சங்கடம் செய்ய முடியாது.
தாத்தா, பாட்டி உடன் இருப்பதால் சற்றே நிம்மதியாக இருந்தாள். எதற்காகவும் சண்டை சச்சரவு என இருக்காதீர்கள், உட்கார்ந்து பேசினால் தீராத பிரச்சனை இல்லை என பட்டும் படாமலும் மகள் மருமகனுக்கு அறிவுரை சொன்னார்கள்.
காயத்ரி சரி என சொல்ல, ஆஷுதோஷ் அவர்களை நிமிர்ந்து நோக்காமல் தலையாட்டிக் கொண்டார்.
திருமண வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என பெரியவர்களும் அதற்கு மேல் சண்டை பற்றி பேசவில்லை. பேரன் பேத்தியை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.
பார்த்திபனுடன் பெரியவர்கள்தான் கைப்பேசியில் பேசிக் கொண்டனர், சுஹானாவிடம் அவனது எண் இருந்த போதும் அழைக்கவில்லை. நேரில் பார்க்கும் போதுதான் அவனிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தாள்.
நிவாஸ் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டான். தாத்தா, பாட்டி, தங்கை என மூவரின் அக்கறையான கவனிப்பில் அவனது உடல் நலனிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படத் துவங்கியது.
பெரியவர்கள் இருந்ததால் மகனை பற்றிய கவலை இல்லாமல் ஆஷுதோஷும் காயத்ரியும் வழக்கம் போல அவர்களின் தொழிலை கவனித்தனர்.
இந்த நேரத்தில் கூடவா அண்ணாவுக்காக வீட்டில் இருக்க கூடாது என பெற்றோரை எண்ணி சுஹானாவுக்கு வருத்தமாக இருந்தது. காயத்ரிக்கு கூட அதே எண்ணம்தான், கணவரிடம் பேசவும் செய்தார்.
ஏற்கனவே ஒத்துக் கொண்ட விழாக்கள், எல்லாம் பெரிய பெரிய வி ஐ பி வீட்டு விஷேஷங்கள், எதையும் மாற்றி அமைக்க முடியாது என தீர்மானமாக சொல்லி விட்டார் ஆஷுதோஷ்.
இன்னொரு குழந்தை போல பார்த்து பார்த்த வளர்த்த தொழில், இத்தனை வருடங்கள் உழைத்து தூக்கி நிறுத்தி விட்டு இப்போது ஒதுங்கி நின்றால் ஏதேனும் சறுக்கல் நேருமோ என அஞ்சி காயத்ரியும் தன் பெற்றோரின் பொறுப்பில் மகனை விட்டு கணவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்.
சுஹானாவுக்கு அன்று பட்டமளிப்பு விழா, தாத்தா பாட்டிதான் உடன் செல்ல இருந்தார்கள். வேலை இருக்கிறது என அவளின் பெற்றோர் சாக்கு சொன்னாலும் ‘டாக்டர் இன்ஜினியரிங்னு முடிச்சா பட்டம் வாங்குறா?’ என குறைவான எண்ணம் இருந்தது என்னவோ உண்மை.
வாக்கர் உதவியுடன் நிவாஸ் நடக்க ஆரம்பித்திருக்க, பேத்தியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று இரவே சென்னைக்கு திரும்ப இருந்தனர் பெரியவர்கள். அவர்களை அழைத்து செல்லவென முன்தினம் இரவே மும்பை வந்து விட்டான் பார்த்திபன்.
ஆஷுதோஷ் இருக்கும் இடத்துக்கு செல்ல விரும்பாதவன், தன்னுடன் படித்த நண்பன் இங்கு இருப்பதாகவும் அவனை பார்க்க இனி சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ, ஆகவே அவனை பார்க்க செல்கிறேன், இரவு நீங்கள் விமான நிலையம் வந்து விடுங்கள், நானும் நேராக அங்கு வந்து விடுகிறேன் என சொல்லியிருந்தான்.
உண்மையிலேயே பார்த்திபனுடன் படித்த ஒருவன் மும்பையில்தான் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறான். ஆனால் அவன் இப்போது வெளியூரில் இருக்க, விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தான்.
பார்த்திபன் இன்று வருவான், அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என நினைத்திருந்த சுஹானா, தாத்தா சொன்ன தகவலில் ஏமாற்றமாக உணர்ந்தாள். கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் போதே மனம் ஒரு நிலையில் இல்லை.
கணிதத்தில் இளங்கலை முடித்து விட்டு செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்கு கற்பிக்கும் சிறப்புக் கல்வியில் பி எட் முடித்திருந்தாள்.
சிறு பெண்ணாக இருக்கும் போதே யாரையும் வருத்த படுத்தாமல் பழகுவாள். அதை கவனத்தில் வைத்து பழக வேண்டும் என்றில்லாமல் அவளின் இயல்பாகவே அந்தப் பண்பு இருந்தது.
வளர வளர மனிதர்களுக்குள் பாகுபாடு பார்ப்பது எல்லாம் இழி செயல் என்பதை ஆழமாக நம்பினாள். கல்லூரியில் முதல் வருடம் பயின்ற போது மாற்றுத் திறனாளிகள் பள்ளியை பார்வையிடும் சந்தர்ப்பம் கிட்டியது.
அந்த ஒரு நாள் அங்கே செலவிட்டதில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் முளை விட்டது.
பி எட் கூட பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக படித்ததுதான்.
மகள் அடம் செய்யவும் ஆசைக்கு படிக்கட்டும் எப்படியும் தொழிலைதான் பார்க்க போகிறாள் என ஆஷுதோஷும் அவள் விருப்பத்துக்கு இசைந்திருந்தார்.
சொற்ப சம்பளத்தில் ஆசிரியர் வேலை செய்ய அப்பா சம்மதிக்க மாட்டார் என்பதை நன்கு அறிவாள் சுஹானா. ஆனாலும் எப்படியாவது போராடி அவரை ஒத்துக் கொள்ள செய்து விடலாம் என தீர்மானித்திருந்தாள்.
விழா மன்றத்தில் தாத்தா பாட்டியை அமர வைத்து விட்டு நகர்ந்தவள் பார்த்திபனுக்கு அழைத்து விட்டாள்.
“பார்த்தி உண்மையை சொல்லணும், வேணும்னேதானே வீட்டுக்கு வரலை?” எடுத்த உடன் இப்படி கேட்பவளிடம் என்ன சொல்லவென தடுமாறினான் அவன்.
அவனது அந்த சில நொடி தடுமாற்றத்தில் அவனை புரிந்து கொண்டவள், “என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது, ஒன் ஹவர்ல என் காலேஜ்ல இருக்கீங்க நீங்க, உங்களை எதிர் பார்த்திட்டு இருப்பேன் பார்த்தி” என்றாள்.
“ஹையோ ஆச்சி நான்…”
“மூச்! ஏதும் பேசக்கூடாது பார்த்தி, இன்னிக்கு என்ன நாளுன்னு தாத்தா சொல்லிருப்பாங்கதானே? நீங்க வராம ஸ்டேஜ் ஏற மாட்டேன்” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
விமான நிலையத்தின் அருகில் அறை எடுத்திருந்தான் பார்த்திபன். அவளது கல்லூரி அதிக தூரமில்லை என்றாலும் மும்பையின் போக்குவரத்து நெரிசலில் ஒரு மணி நேரத்தில் அங்கு சென்றடைய முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.
சுஹானா ஒன்று கேட்டு அதை மறுக்கவும் முடியுமா இவனால்?
ஷார்ட்ஸ், டி ஷர்ட் என இருந்தவன் விடுதி மூலமாக டாக்சி ஏற்பாடு செய்து கொண்டே ஆடை மாற்றி தயாராகி வேகமாக வெளியேறினான்.
கல்லூரி வாயிலில் அவன் இறங்கிய போது ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகவே ஆகியிருந்தது. உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் பட்டது. அவன் ஆங்கிலத்தில் சொன்ன எதுவும் செக்யூரிட்டிக்கு புரியவில்லை, சுஹானாவுக்கு அழைக்கலாமா என அவன் கைப்பேசியை எடுக்க அவளே வந்து விட்டாள்.
தோள்கள் தளர, பெரிய மூச்சை விட்டு பாவமாக அவளை பார்த்தான். கண்களை சிமிட்டி சிரித்தவள், “ரிலாக்ஸ் பார்த்தி, இன்னும் டைம் இருக்கு, நீங்க வருவீங்கன்னு தெரியும், அதான் நானே என்ட்ரன்ஸ் வந்திட்டேன்” என்றாள்.
“அட போங்க ஆச்சி! டிலே ஆகிடுச்சுன்னு டென்ஷன் ஆகிட்டேன், நீங்க சாதாரணமா சொல்றீங்க” என சலித்துக் கொண்டான்.
அவன் உள்ளே வருவதற்கான நடைமுறைகளை முடித்துக் கொண்டு அவன் கையை பிடித்து, “போலாம்” என்றாள்.
அவளது கவனத்தில் பதியாத படி வெகு நாசூக்காக தன் கையை விலக்கி விட்டுக் கொண்டு அவளுடன் நடந்தான்.
அவனை பார்த்த தாத்தாவும் பாட்டியும் இன்பமாக அதிர்ந்தனர். நண்பன் அவசர வேலையாக வெளியூருக்கு சென்று விட்டதால் இங்கு வந்து விட்டேன் என அவர்களிடம் சொல்லி விட்டான்.
விழா முடிய மதியமாகி விட்டது. தாத்தா பாட்டியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டவள் பார்த்திபனையும் இழுத்து பிடித்து நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டாள். இயல்பாக அனைத்து புகைப்படங்களையும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைத்தாள்.
மதிய உணவுக்கு உயர்தர உணவகம் ஒன்றுக்கு அழைத்து சென்றாள். உணவு முடியவும் மால் ஒன்றுக்கு சென்றனர். தாத்தா பாட்டியை பாடி மசாஜ் செய்யும் இருக்கையில் அமர வைத்து விட்டு பார்த்தியும் சுஹாவும் தள்ளி நின்றிருந்தனர்.
பார்த்தியின் பார்வை தாத்தா பாட்டியிடத்தில் இருக்க, அவள் அவனை பார்த்தாள். பக்கவாட்டு பார்வை வழியே அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவனுக்கு ஏதோ அசௌகர்யமாக இருந்தது. ஏனெனில் அவளது பார்வையில் வருத்தம் இழையோடிக் கொண்டிருந்தது.
“வீட்டுக்கு வராம அவாய்ட் பண்றீங்கதானே பார்த்தி?” என பட்டென கேட்டு விட்டாள்.
மருத்துவமனையில் நடந்ததை எல்லாம் சுஹானா மட்டுமில்லை தாத்தா பாட்டி என யாரும் அறிவதை விரும்பவில்லை அவன். ஆகவே அப்படியெல்லாம் இல்லை என சமாளிப்பாக சொன்னான்.
“என் முகத்தை பார்த்து சொல்லுங்க” என அவள் தீவிர தொனியில் கேட்டாள். அவளை பார்த்தவனுக்கு பொய் உரைக்க வரவில்லை, அதே சமயம் உண்மையை சொல்லும் உத்தேசமும் இல்லை.
“ஸாரி நான் கூப்பிட்டுத்தான் நீங்க இங்க வந்தீங்க, என்னாலதான்…” என்றாள். என்ன நடந்தது என அவளுக்கும் தெரியாது, ஆனால் விரும்பத் தகாத ஏதோ நிகழ்ந்திருப்பதாக கணித்திருந்தாள். என்ன ஏதென கேட்டு அவனை சங்கடம் செய்ய விரும்பாதவள் தன் அப்பாவுக்காக மன்னிப்பை மட்டும் வேண்டினாள்.
“நான் என்ன செஞ்சாலும் அதுக்காக தேங்க்ஸ் சொல்ற இடத்துல நீங்க இல்லை ஆச்சி, அப்படித்தான் ஸாரி சொல்ற இடத்திலேயும் நீங்க இல்லை. உங்களுக்காக ஏதாவது என்னால செய்ய முடிஞ்சா எனக்கு அதை விட திருப்தி தர்ற விஷயம் வேற என்ன இருக்க முடியும்? இப்படிலாம் பேசாதீங்க” என்றான்.
அவனை ஊடுருவி பார்த்தவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. இப்படிப்பட்டவனை குறைவாக மதித்து நடக்க அப்பாவுக்கு எப்படி மனம் வந்ததோ என எண்ணி வருத்தம்தான் மேலோங்கியது.
அவளது அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. சகஜ நிலைக்கு மீண்டு அப்பாவிடம் பேசினாள். பார்த்திபனுடன் புகைப்படம் எடுத்தாயா எனக் கேட்டு திட்டியவர் உடனடியாக அவள் வைத்திருந்த ஸ்டேட்டசை நீக்க உத்தரவிட்டார்.
“டாடி…” என அவள் விளக்கம் சொல்ல முற்பட, சொல்வதை செய்யும் படி கடினத்தொனியில் சொன்னவர், பார்த்திபனை தரக் குறைவாக திட்டினார்.
இத்தனை வருடங்களில் அவளுக்கு அப்பா மீதிருந்த பிம்பம் அப்படியே சரியத் தொடங்கியது. மனம் நொந்து போனாலும் பார்த்திபன் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்களை நீக்கினாள்.
அவள் அழைப்பை ஏற்று பேசும் போதே நாகரீகமாக தள்ளி சென்றிருந்தான் பார்த்திபன். அவளது ஸ்டேட்டஸையும் அவன் பார்த்திருக்காத காரணத்தால் நீக்கப் பட்டதையும் அறியாமலே போனான்.