“தூரமா இருக்கலாம் டாடி, ஆனா எப்பவும் உங்களுக்காக வந்து நிப்பேன், என் மேல உங்களுக்கு இருக்க அன்பு எனக்கு தெரியும், என் டாடி மேல எனக்கும் அன்பிருக்கு” என்றாள்.
அவர் நெகிழ்ந்து போக, “அதுக்காக டாடி என்ன செய்தாலும் சப்போர்ட் செய்ய முடியாது இல்லையா? அதனாலதான் உங்க தப்பை சொல்லி காட்டினேன்” என்றாள்.
“உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு சுஹா” என்றவர் இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போயேன் என கிட்டத்தட்ட கெஞ்சினார்.
“டாடி ப்ளீஸ், என்னை சங்கட படுத்த கூடாது, நெக்ஸ்ட் சண்டே வில்லேஜ்ல கோயில் திருவிழா, நானும் பார்த்தியும் அங்க போகணும்” என்றாள்.
“வில்லேஜ்லலாம் போய் எப்படி ஸ்டே பண்ற நீ? அங்க இருக்க வீட்ல என்ன வசதி இருக்கு?” என கவலையாக கேட்டார்.
“அம்மா உங்களை மேரேஜ் பண்ணி மும்பை வந்தப்போ எந்த வசதிய எதிர் பார்த்து வந்தாங்க டாடி? உங்க பக்கத்துல இருந்தா போதும்னு நினைச்சுதானே வந்திருப்பாங்க? நான் சொல்றது ட்ரமாடிக்கா இருக்கலாம், ஆனா உணர்ந்து சொல்றேன், பார்த்தி கூட இருந்தா காடு பாலைவனம்னு எந்த இடத்திலேயும் வாழ்க்கை நடத்துவேன்”
“நீ ஏதோ மயக்கத்துல பேசுற, வருஷங்கள் போக போக இந்த பேச்சு இப்படியே இருக்குமான்னு பார்க்கிறேன்”
“கண்டிப்பா பாருங்க டாடி”
“ப்ச்! யூ டீசெர்வ் சம்ஒன் பெட்டர் சுஹா, அவன் உனக்கு தகுதியானவனே இல்லை, அந்த ஆதங்கம் எப்பவும் எனக்குள்ள இருந்திட்டேதான் இருக்கும்” என மனதில் இருப்பதை சொன்னார்.
அப்பாவை விட்டு விலகி நின்றவள் புன்னகையுடன், “ஏன் டாடி? அப்படியென்ன நான் ஸ்பெஷல்?” எனக் கேட்டாள்.
“என் பொண்ணு ஸ்பெஷல்தான், உன் அருமை எனக்குத்தான் தெரியும்” என கர்வமாகவே சொன்னார்.
“ம்ம்… அப்படிப்பட்ட உங்க மகளோட இதயத்தை ஒருத்தர் வெற்றி பெற்றிருக்கார், அவளோட முழு அன்பையும் அடைஞ்சிருக்கார். அப்ப அவர் எவ்வளவு உயர்வானவர்னு யோசிங்க” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.
வீட்டை ஒழுங்கு செய்து கொண்டிருந்த பார்த்தி அப்போதுதான் பார்த்தான், மேசை டிராயரில் நிறைய பிரிண்ட் அவுட் இருந்தது. பார்த்தியின் சிறு வயது நிகழ்வுகள் அனைத்தையும் செயலியின் உதவியுடன் ஓவியங்களாக்கியிருந்தாள்.
வெகு நாட்களாக இந்த வேலையை செய்திருக்கிறாள் என்பது புரிந்தது. அவனது அக்காவின் உருவம் கூட அப்படியே இருந்தது, வீட்டிலிருந்து பழைய புகைப்படம் எடுத்து வந்திருப்பாள் என கணித்தான்.
கடந்த முறை இவர்கள் ஊருக்கு சென்ற போது கணவன் மனைவியாக இவர்கள் சுற்றியதை கூட ஓவியங்களாக்கியிருந்தாள். குளத்தில் குளித்தது, முதலில் முத்தமிட்டது என ஏதாவது இருக்கிறதா என தேடிப் பார்த்து இல்லை எனவும் நிம்மதி மூச்சு விட்டவன் சிரித்துக் கொண்டான்.
மனம் மனைவியை நாடியது. உடனே அவளுக்கு அழைத்து விட்டான். ஆனால் இந்த பிரிண்ட் அவுட் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை, அவள் ஆசையாக தயார் செய்திருப்பாள், நேரில்தான் இது பற்றி பேச வேண்டும் என சாதாரணமாகத்தான் பேசினான்.
நிவாஸின் திருமண தேதியெல்லாம் முடிவு செய்ய வேண்டும் என்பதால் மனைவியை வரச் சொல்லி வற்புறுத்தவில்லை பார்த்தி. அடுத்த வாரம் தான் ஊருக்கு செல்வதை அவளிடம் சொன்னவன், “இப்ப வர முடியலைன்னு ஃபீல் பண்ணாத, அடுத்த வருஷ திருவிழாக்கு நாம சேர்ந்து போலாம் ஆச்சி” என சமாதானம் சொன்னான்.
பின்னணியில் ஏதோ அறிவிப்பு கேட்க, உன்னிப்பாக கேட்கவும்தான் விமான நிலையத்தின் அறிவிப்பு என்பது அவனுக்கு விளங்கியது.
“ஹேய் சுஹா உண்மையை சொல்லு, எங்க இருக்க நீ?” என அவன் கேட்க மும்பையில்தான் இருக்கிறேன் என சாதித்தாள் அவள். காணொளி அழைப்புக்கு வா என அவன் சொல்ல, அப்பா அழைக்கிறார் வந்து கூப்பிடுகிறேன் என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.
“உணவருந்த நேரமாகவில்லையா வாடா” என கைப்பேசியில் அழைத்து சொன்னார் தாத்தா.
தாத்தாவின் வீட்டுக்கு வந்தவன் சுஹானா இன்று வருகிறாளா உங்களுக்கு தெரியமா என விசாரித்தான்.
இல்லை என தாத்தா சமாளித்து கொண்டிருக்க, “சென்னை வந்திட்டாடா, உனக்கு தெரிஞ்சா ஏர்போர்ட் போகாம இருக்க மாட்ட, உனக்கு அலைச்சல் வேணாம்னுதான் உன்கிட்ட சொல்லல, டாக்ஸி வச்சு அவளே வீட்டுக்கு வந்திடுவா” என சொல்லி விட்டார் பாட்டி.
“என்ன ஆச்சி நீங்க, தனியா வருவாளா அவ? கார் சாவி எடுங்க” என அவன் பர பரக்க, “இந்நேரம் கிளம்பியிருப்பா, நீ போயி அவளை அழைச்சிட்டு வர்றதுக்கு அவளே வந்தா சீக்கிரம் வந்திடுவா, பேசாம இரு” என அவனை அடக்கினார் பாட்டி.
அவர் சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்ததால் விமான நிலையம் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டவன், “நான் கீழ போறேன்” என்றான்.
“இந்த டிராஃபிக்ல அவ வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும்டா, சாப்பிடு முத” பாட்டி சொல்லிக் கொண்டிருக்க, கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.
“என்னங்க இவன் இப்படி இருக்கான்? அவ வர்ற வரை கீழ போய் தனியா நிப்பானா?” எனக் கேட்டார் பாட்டி.
“காதலில் காத்திருப்பதுதானே சுகம் பத்து? நமக்கு நிச்சயதாம்பூலம் ஆனதுக்கு அப்புறம் நீ கோயிலுக்கு போற அன்னிக்கெல்லாம் உன்னை பார்க்க நான் காத்து கெடக்காததா? தலைவர் பாட்ட பாடிட்டே நிப்பேன், நேரம் போறது தெரியவே தெரியாது” என்றவர்,
“காவிரி கெண்டை கண்களிலே, தாமரை பொய்கை கன்னத்திலே, நாயகன் வந்தான் பக்கத்திலே, நாயகி விழுந்தாள் வெட்கத்திலே… பத்து… என் நாயகி விழுந்தாள் வெட்கத்திலே…” என மனைவியை மையலாக பார்த்துக் கொண்டே பாடினார்.
வெட்கத்தில் முகம் குழைய, “கெழவன் துள்ளி விளையாட ஆரம்பிச்சாச்சு!” என்றார் பாட்டி.
“ஏன் கெழவன் ஆனா காதல் இருக்க கூடாதா?” எனக் கேட்டு சிரித்தார் தாத்தா.
“தனியா இருக்கும் போது சரி, புள்ளைங்க முன்னாடிலாம் இப்படி பாடி வச்சிடாதீங்க, கிண்டல் பண்ணுவாங்க”
“யாருடி நீ? நாம எல்லாருக்கும் ஒரு உதாரணமா இருக்கணும்”
“வாங்களேன் பார்க்ல போய் டூயட் பாடி ஆடுவோம்” என நொடித்தார் பாட்டி.
சத்தமாக சிரித்த தாத்தா, “ஆடி பாடினா காதல்னு ஆகிடுமா? இதோ நம்ம பேத்தி பம்பாய்லேருந்து வர்றா, புருஷன் வந்து கூட்டிட்டு போகணும்னு எதிர் பார்க்காம, அவனை ஏன் அலைய விடணும்னு தானா வர்றா. அவ வர்ற வரை அவன் பாட்டுக்கும் வீட்டுக்குள்ள இருக்கலாம், அவளை எதிர் பார்த்திட்டு போய் நிக்கிறான் பாரு, அவ இறங்கும் போது அவளை ரிசீவ் பண்றதுல அவனுக்கு ஒரு சந்தோஷம். படவா! கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்ப பொண்டாட்டிக்காக துடியா துடிக்கிறான்” என்றார்.
“புள்ளைங்கள கண்ணு வச்சாச்சு!”
“என் கண்ணு அவங்கள ஒன்னும் செய்யாது பத்து, அவங்கள சேர்த்து வச்சதே நான்தான். நிவாஸும் உண்மையாதான் லவ் பண்றான், அவன் அப்பாம்மாவும் அப்படித்தான். ஆனா அவங்கள்ட்ட இல்லாத ஸ்பெஷல் பார்த்தி ஆச்சிகிட்ட இருக்கு. இவங்க ரெண்டு பேரும் தங்களோட அன்பை வெளிப்படுத்தறதோட சரி, துணையும் தன்னை போல இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு நிவாஸ் மாதிரி அவங்களுக்குள்ள எதிர்பார்ப்புகள் வச்சிக்கிறது இல்லை, என்ன செய்தாலும் முடிவுகள் எடுத்தாலும் மாப்ள போல செல்ஃப் சென்டர்டா இல்லாம துணையை இது பாதிக்குமான்னு யோசிச்சு செய்றாங்க. காயத்ரியும் மாப்பிள்ளையும் இவங்கள பார்த்தாவது வாழ்க்கைய சரியா கொண்டுட்டு போகணும்” என்றார்.