நிவாஸ் இன்று காலைதான் மும்பை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சென்னைக்கு போய் தாத்தாவை சந்தித்து விஷயத்தை சொல்லி விட்டான். அவரால் நேரில் வர முடியாது என்பதால் கைப்பேசியில் பேசிக் கொள்வதாக சொன்னவர், நான் உன் அப்பாவிடம் பேசும் நேரம் நீ அங்குதான் இருக்க வேண்டும் என சொல்லி அவனை இங்கு அனுப்பி வைத்திருந்தார்.
சுஹானா தன் அப்பாவிடம் அண்ணனின் காதலுக்கு ஒத்துக் கொள்ளுங்கள் என பேசி ஓரளவு அவரின் மனதை மாற்றி வைத்திருந்தாள்.
‘எதையும் யோசித்து செயல் பட மாட்டாய், உன்னால் எவ்வளவு கஷ்டம் எனக்கு?’ என மகனை சத்தம் போட்ட காயத்ரி, அதிகம் கோவத்தை இழுத்து பிடிக்காமல் விரைவாகவே மகனிடம் சமாதானமாகி விட்டார்.
மகனின் வரவு தெரிந்தும் அவனை பார்க்க வரவில்லை ஆஷுதோஷ். குளித்து வந்த நிவாஸ் முதலில் தங்கையைத்தான் காண வந்தான்.
அவள் முறைக்க, அருகில் வந்து அவளை தோளோடு அணைத்து, “ஸாரி சுஹா, உனக்கும் அப்பாக்கும் என்னால சண்டை வந்திட வேணாம்னுதான் உன் கால்ஸ் அட்டெண்ட் பண்ணல” என்றான்.
பார்த்தி மூலமாக ஏற்கனவே அறிந்த விஷயம்தான். உன் அண்ணனின் அவசரக் குணம் உனக்கு தெரியும்தானே? பெரிய விபத்தை சந்தித்து காதல் தோல்வியடைய கூடாது என போராடி தன்னை சரி செய்து கொண்டவர், நீயும் புரிந்து கொள்ளாமல் சண்டையிடாதே, மன்னித்து விடு எனவும் மனைவிக்கு சொல்லியிருந்தான் பார்த்தி.
ஆகவே அண்ணனுடன் சமாதானமாக போய் விட்டாள் சுஹா. தாத்தாவுக்கு அழைத்து இப்போது அப்பா ஓய்வாகத்தான் இருக்கிறார், பேசுங்கள் என சொன்னாள்.
சொல்லிக் கொள்ளாமல் சென்ற மகன் தானாக இன்று வந்து நிற்பதிலேயே மாமனாரின் அழைப்பை எதிர் பார்த்திருந்தார் ஆஷுதோஷ். யாரும் என் பேச்சை கேட்பதில்லை, என்னை மதிப்பதில்லை என கொஞ்சம் போல புலம்பி, அவன் விருப்பம் போல செய்து கொள்ளட்டும், அப்பாவாக வந்து நிற்கிறேன் என முடித்துக் கொண்டார்.
பேத்திக்கு அழைத்த தாத்தா விவரம் சொல்லி, “உன் அப்பா மேரேஜ் டேட் எல்லாம் பார்த்து எல்லாம் செய்வார்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாமதான் எடுத்து செய்யணும் ஆச்சி. போக போக சரியாகிடுவார்” என்றார்.
இப்படித்தான் நடக்கும் என சுஹானாவுக்கு கணிப்பு இருக்க, அலட்டிக் கொள்ளவில்லை. “அதெல்லாம் நம்மளே பார்த்துக்கலாம் தாத்தா” என சொல்லி விட்டாள்.
அவள்தான் அண்ணனை அழைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றாள். நிவாஸும் மன்னிப்பு கேட்கவில்லை, ஆஷுதோஷும் ஏன் சென்றாய், இப்போது எதற்கு வந்தாய் என கேட்டுக் கொள்ளவில்லை.
அப்பாவின் உடல்நலனை பற்றி விசாரித்தான் மகன். உன் விருப்பம் போலத்தான் எல்லாம் நடக்கிறது, இனியாவது ஒழுங்காக நிறுவனத்தை கவனி என்றார் அப்பா.
அரை மணி நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டான் நிவாஸ். தளர்ந்து போனவராக படுத்து விட்டார் ஆஷுதோஷ். அப்பாவை அப்படி விட்டுச் செல்ல மனமில்லாமல் சுஹானாதான் வெகு நேரம் அவருடன் அமர்ந்திருந்தாள்.
மகளின் இருப்பை உணர்ந்தும் எதுவும் பேசாமலேயே இருந்தவர் திடீரென திரும்பி படுத்துக் கொண்டார். அழுகிறாரோ என்ற சந்தேகத்துடன் அவரை திருப்பினாள் சுஹானா. ஆமாம், அழுகைதான். எழுந்து கொண்டவர் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.
அவரை சமாதானம் செய்து அழுகையை நிறுத்த வைத்த சுஹானா, “காதல் அவ்வளவு பெரிய தப்பா டாடி? ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுறீங்க?” என கடிந்து கொண்டாள்.
அவரின் அழுகை மகனை நினைத்து அல்ல, காயத்ரி விவாகரத்து கேட்கிறாராம். மகனின் திருமணத்தை நல்ல படியாக நடத்திக் கொடுத்து விட்டு என்னை ஆளை விடுங்கள், என் இறுதி காலத்தை என் பெற்றோருடன் கழித்து விடுகிறேன் என சொன்னாராம்.
சுஹானாவுக்கு பெரிய அதிர்ச்சி இது.
“என் பசங்க, மனைவி எல்லாரும் வசதியா நல்லா வாழணும்னுதானே உழைச்சேன், கடைசில நான் கோமாளி ஆகிட்டேன்” என புலம்பினார்.
“நீங்க அம்மாகிட்ட பேசினதுல அவங்களுக்கு வருத்தம், உங்க மேல உள்ள கோவத்துல சொல்லிருப்பாங்க. பேசி சரி பண்ணிடலாம் டாடி. பணம் மட்டுமே எதையும் தக்க வைக்காது, உள்ள பூட்டி வச்சிருக்க அன்பால என்ன பிரயோஜனம்? பணத்தை செலவு பண்றது போல உங்களுக்குள்ள இருக்க அன்பையும் செலவு பண்ணுங்க டாடி” என்றாள்.
“உன் அம்மா கோவத்துலதான் அப்படி சொல்லிருப்பாளா?” என அதிலேயே நின்றார்.
“நீங்க சில நாள் முன்னாடி ‘என்ன நடந்தாலும் பிரியாம சேர்ந்து வாழுறேன்’னு அம்மாட்ட சொல்லி காட்டியிருக்கீங்க, அது அவங்கள ஹர்ட் பண்ணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா? அவங்கள பிரிஞ்சி உங்களால வாழ முடியாதுன்னு அம்மாக்கு புரிய வைங்க, சரி ஆகிடுவாங்க” என உறுதியாக அவள் சொல்லவும் தெளிந்தார்.
அப்பாவுடன்தான் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு வாக்கில், “இத்தனை சொத்துக்களும் உனக்கும் உன் அண்ணனுக்கும்தானே சுஹா? நீ ஏன் அங்க கஷ்ட படணும்? உன் ஹஸ்பண்ட்டை அழைச்சிட்டு இங்கேயே வந்திடு, அந்த பையனுக்கும் ஏதாவது நல்ல பொறுப்பா கொடுக்கலாம், நீயும் நிவாஸும் சேர்ந்து நம்ம கம்பெனிய ரன் பண்ணுங்க” என ஆவலாக சொன்னார்.
“கண்டிப்பா சரியா வராது டாடி. இன்னும் பார்த்திய வேற எப்படியோதான் பார்க்குறீங்க நீங்க? உங்கள்ட்ட அவர் வந்து நிப்பாருன்னு நினைச்சீங்களா? அவருக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்கேனா உங்க பொண்ணா என் கடமையை செய்ய, மத்தபடி எனக்கும் இங்க ஒட்டாது டாடி” என அழுத்தமாக சொன்னாள்.
“என்ன செய்யட்டும் சுஹா? உன் ஹஸ்பண்ட்கிட்ட ஸாரி கேட்கிறேன், அப்ப இங்க இருக்க தடை இருக்காதே?” என்றார்.
மறுப்பாக தலையாட்டியவள், “ஸாரி வாயால கேட்டா ஆச்சா டாடி? உங்க தவறை நீங்க உணரணும். உங்களால பார்த்தியை அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது. அவராலேயும் இங்க பொருந்தி போக முடியாது. அதை விட எங்க ரெண்டு பேரோட உலகம் வேற, எங்களுக்கான இடம் இது இல்லை” என்றாள்.
அவர் ஏமாற்றமாக பார்த்தார்.
“அவரை நீங்க நடத்தின முறையும் பேசினதும் சரியான்னு உங்க மனசாட்சிகிட்ட கேளுங்க டாடி. இப்ப சொல்றது ஹார்ஷா இருக்கும் ஆனாலும் சொல்லித்தான் ஆகணும். பார்த்திக்கு ஏற்பட்ட அவமானத்தை உங்க பொண்ணு வேணா தாங்கிட்டு உங்கள்ட்ட வந்து நிக்கலாம், பார்த்தியோட பசங்க ஒரு நாளும் உங்களை மன்னிக்க மாட்டாங்க” என்றாள்.
“சுஹா!” என பதறினார் ஆஷுதோஷ்.
“எவ்ளோ அழகான நேம் டாடி உங்களோடது! ஆஷுதோஷ் அப்படினா எளிதில் திருப்தி அடையறவர், அடுத்தவங்க விருப்பங்களை நிறைவேத்தி வைக்கிறவர்னு அர்த்தம். உள்ளத்தால தூய்மையான நேர்மையான ஒரு மனுஷனை ரொம்ப மோசமா காய படுத்திருக்கீங்க, இப்ப வரை அது தப்புன்னு உணரல” என குற்றம் சாட்டினாள்.
கடந்த சில நாட்களில் தன் தைரியம் முழுமையும் இழந்து ஒரு வித பயத்தோடு இருக்கும் ஆஷுதோஷுக்கு இப்போதுதான் மகள் சொல்வதில் உள்ள உண்மை உள்ளத்தை சுட்டது. அமைதியாக அவர் கண்ணீர் விட, பெரு மூச்சு விட்டவள் அவரின் கண்களை துடைத்து விட்டாள்.
“நிவாஸ் வந்திட்டான், அம்மா அப்படிலாம் உங்களை விட்டு போயிட மாட்டாங்க. நான் கிளம்பறேன் டாடி” என்றாள்.